Oduku Fatwa-ஒடுக்கு பத்வா.
By Sufi Manzil
ODUKU FATWA.(Esale Tawab)
By:- Mahlrathul Qadiriya Arabic College, Kayalpatnam.
ஒடுக்கு பத்வா.
எழுதியவர்: மௌலானா மௌலவி எம்.எஸ். அப்துல் காதிர் (பாக்கவி)-சதர்முதர்ரிஸ், மஹ்லறா.
வெளியீடு: மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி, காயல்பட்டணம்.
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆலிம் உலமாக்களும், அவுலியாக்களும், பேணுதல் மிக்க வரஇய்யீன்களும் நிறைந்த நமதூரிலும் மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதியகளிலும் மூதாதையர்களான ஆபாக்கள் காலமுதல் தொன்று தொட்டு பல நூற்றாண்டு காலமாக ஜனாஸாவை அடக்குவதற்கு முன்பாக ஏழை, எளிவர்களுக்கு தானதருமங்கள் செய்வதையும் ஒடுக்கு என்ற பெயரால் ரொட்டி, பழம், உப்பு, பணம் முதலிய தருமங்கள் ஈவதையும், மூன்றாம் கத்தம், நாற்பதாம் கத்தம் முதலியன ஓதி மையித்துகளுக்கு மேற்படி தவாபுகளை சேர்த்து வைப்பதையும், யாஸீன், பாத்திஹா முதலியன ஓதுவதையும் பற்றி நமது காயல்மாநகரிலுள்ள சில ஜனங்கள் ஆகாது, கூடாது என்று விலக்குவதாகக் கேள்விப்படுகிறோம். இவ்வளவு காலமாக நடைபெற்ற இந்தக் காரியங்கள் ஆகுமானவையா? ஆகாதவையா? மார்க்க சம்பந்தமான ஆதாரங்களுடன் இவை பற்றிய விபரத்தை அருள் கூர்ந்து விளக்கித் தர வேண்டுகிறோம்.
இதற்கு பகரமாக அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக. ஆமீன்.
வஸ்ஸலாம்.
காயல்பட்டணம் (ஹாஜி) எம்கே.டி. முஹம்மது யாஸீன்
1-7-67 ஏ.கே. முஹம்மது மீராசாகிபு
விடை
நஹ்மதுஹு நுஸல்லீ அலா றஸூலிஹில் கரீம்.
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் கேட்டிருந்த விஷயங்களைப் பற்றி மற்றும் சில அன்பர்களும் வினவிக் கேட்டுள்ளனர்.
நன்மையான காரியங்களையே நாம் செய்ய வேண்டியதும், நன்மையின் பேரிலேயே உதவியாக இருப்பதும், நன்மையைக் கொண்டே ஏவுதல் செய்து தீமையை விட்டும் விலக்குதல் செய்தலும் நமது கடமையாகும்.
எனவே,தாங்கள் கோரி இருக்கக்கூடிய சன்மார்க்க சம்பந்தமான விஷயங்களைப் பற்றி விரிவான விளக்கம் தருகிறோம். நன்மையின் அடிப்படையிலேயே, சித்த சுத்தியுடன் கூடிய(இக்லாஸ்) அடிப்படையிலேயே, நாமும் நீங்களும் மற்றும் நம் சகோதர முஸ்லிம்களும் ஸாலிஹான நல் அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ் நல்லுதவி செய்வானாக. ஆமீன்.
தென்னகம் முழுவதிலும் ஏனைய பாகங்களிலும் குறிப்பாக நம் காயல்மாநகரத்திலும் தொன்றுதொட்டு பலநூறு ஆண்டுகாலமாய் திறமை வாய்ந்த மிகமிக நம்பிக்கைக்குரிய உலமாப் பெருமக்களுக்கு மத்தியிலும் அவுலியாக்களான மாமேதைகள் மெஞ்ஞானிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து நடந்து வருகின்ற ஒடுக்கு என்று நம் வழக்கச் கொல்லில் செய்யப்படுகின்ற –மய்யித்தை அடக்குமுன், ஏழை எளியவர்களுக்கு ரொட்டி, பழம், காச போன்றவைகளை தரும்(ஸதகா) செய்து அவ்வான்மா சாந்தியடையச் செய்யும் ஈஸால் தவாபினை சார்ந்த நல்லதேர் அமலையும், இற்த 40 நாட்களுக்குள் ஏதோ சில குறிப்பாக 3-ம் நாள், 40-ம் நாள்களில் குர்ஆன் ஷரீபையோ அல்லது அதற்கு இருதயமாக அமைந்திருக்கும் யாஸீன் ஸூராவையோ ஓதி கத்தம் செய்து உறவினர்களுக்கும் , ஏழை எளியவர்களுக்கும் உணவளித்து அவ்வான்மா சாந்திக்காக துஆ செய்துவரும் ஈஸால் தவாபை சார்ந்த நல்லதேர் அமலையும் சமீப காலமாக நம் காயல்மாநகரவாசிகளில் ஓர் சிலரும் ஒன்றிரண்டு உலமாக்களும்கூட அவ்வமல்களை மக்ரூஹ் (மார்க்கத்தில் விரும்பத்தகாதது) என்றும், பித்அத்தேமதுதுமூமா (இஸ்லாமிய அமலில் புதிதாய் திணிக்கப்பட்ட இகழுக்குரிய தீய அமல்) என்றும், பித்அத் கபீஹா (வெறுக்கத்த தகுந்த புதிதாய் புகுத்தப்பட்ட துற் செயல்) என்றும் கூறியும் அவ்வழகிய நல்அமலை தடுக்கவும் மற்பட்டு வருகின்றார்கள் எனவும், ஒரு சில பகுதிகளில் தடுத்தும் விட்டதாகவும் கேள்விப்படுகிறோம்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஆகுமென்ற உத்திரவின் கீழ் கையாளப்படுகின்ற நற்செயலை, 'மகமூஹ்', 'பித்அத்' என்று கூறுவதும், தடுக்க முற்படுவதும், ஒரு மறைந்த ஸுன்னத்தை ஹயாத்தாக்குவதற்குப் பதிலாக ஹயாத்தாக இருப்பதையும் மௌத்தாக்குவதற்கு ஒப்பாகும். மார்க்க அனுஷ்டானங்களனைத்தையும் வகுத்தளித்த உலக மாமேதை உத்தமர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு மாறு செய்வதாகும் என்ற உண்மையை குறிப்பிட்ட ஆலிம்களுக்கு எடுத்துக் கூறியும் பலனளிக்காது போகவே அவ்வுண்மையை பொதுமக்களுக்கு மத்தியில் பகிரங்கமாய் எடுத்துக் கூறி ஓர் ஸுன்னத்தை அழித்தொழிக்கும் பாவச் செயலுக்குள்ளாகுவதை விட்டும் தடுக்கவேண்டிய கடமையினை உணர்ந்து இந்த உண்மையை தக்க ஆதாரத்துடன் வெளியாக்கப்படுகிறது.
பொதுமக்கள் அனைவரும் மார்க்க சம்பந்தமான சகல நற்கிரியைகளிலும் உண்மைகளை உணர்ந்து செயல்பட்டு தக்க தவாபினை தனியோனிடம் பெற்று பெரும் மகிழ்வடைவீர்களாக.
அபுஸயீத் ஸுலைமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற இமாம் மேதை, தங்களின் 'ஷரஹ் பர்ஸகீ' என்ற கிரந்தத்தில், உபய்யிப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி அவர்கள் கீழ்காணும் ஹதீதை வெளிப்படுத்துவதியதாக கூறுகிறார்கள்.
நாயகத்திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:- 'மௌத்தாகிறது திடக்கிடச் செய்யும் சம்பவமாகும். மய்யித்தை நல்லடக்கம் செய்வதற்குமுன் அவ்வான்மா சாந்தியடைய தரும் செய்து தவாபை சேர்த்து வையுங்கள். குர்ஆன் ஷரீபிலிருந்து இயன்றமட்டில் ஓதியும் அம்மய்யித்திற்கு அதன் தவாபை சேர்த்து வையுங்கள்' என்ற இந்த ஹதீதினை எழுதியபின் அம்மேதை இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் தீர்ப்பை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்கள்.
'இந்த ஹதீது தௌ;ளத்தெளிவாக காட்டுகிறது, நிச்சயமாக மய்யித்தை நல்லடக்கம் செய்யும்முன் அவ்வான்ம சாந்திக்காக தரும் கொடுப்பது ஸுன்னத்தாகும். குர்ஆன் ஷரீபையும் அவ்வான்மாவிற்காக ஓதி முடிக்கப்பட்டால் அதுவும் ஆகுமான நல்ல அமல் என்பதுடன் அதன் பொருட்டால் அவ்வான்மா ஈடேற்றம் பெறுவதை நல்லாதரவு வைக்கப்படுகிறது. நம் முன்னோர்களும் கூட இந்த நற்கிரிகையை தொடர்ந்து செய்து வந்தே இருக்கின்றார்கள், என்றாலும் ஜனாஸாவைப் பின் துயர்ந்து எஹுதியர்களைப்போல் உண்ணும் உணவைக் கொண்டு செல்வதில்லை என்றும் எழுதி இருக்கிறார்கள்'.
எஹூதியர்கள் செய்யக்கூடியது யாதெனில்:-
அதன் விளக்கத்தை மேற்படி கிதாப் ஷர்பர்ஸஹ் உடைய விரிவுரையாளரான காஜி, முப்தி, செய்யிது முஹம்மது அப்துல் கப்பார் காதிரி என்ற இமாம் தங்களின், 'தஸரீஹுல் அவ்தக்-பி-தாஜுமதி ஷரஹில்பர்ஜக்' என்னும் விரிவுரை கிரந்த்தில் கூறுகிறார்கள். 'ஸஹாபாப் பெருமக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்களளான இறைநேசச் செல்வர்கள் அனைவரும் மய்யித்தை நல்லடக்கம் செய்வதற்கு முன் தர்மம் கொடுத்து அம்மய்யித்தின்பால் தவாபை சேர்த்து வைக்கும் நற்பழக்கத்திலேயே இருந்து வந்திருக்கிறார்கள். எஹூதியர்களின் வழமையாதெனில், ஜனாஸாவுடன் உணவுகளை மய்யவாடிக்குக் கொண்டு சென்று மய்யித்துக்குழியின் மேல் வீணாக தாங்கள் கொண்டு செல்லும் உணவுகளை யாருக்கும் பலனில்லாது போட்டுவிட்டு வரும் துற்பழக்கத்தை கையாண்டு வருவதாகும். இவ்வாறானா வீண் விரய வழக்கத்தை இன்றளவும் எஹுதிகளும் அவர்களைப் பின்பற்றிய வட இந்தியர்களில் சிலரின் வழமையும் இருந்து வருகிறது. வீணான, இஸ்ராபான இத்தகைய துற்செயலைத் தடுக்கும் நோக்கத்தில்தான் முஸன்னிபு இமாம் (ஆசிரியப் பெரியார்) அவர்க் எஹுதியர்களைப் போன்று உணவை வீண் விரயப்படுத்தலாகாது எனக் கூறினார்களே தவிர முஸ்லிம்களாகிய நாம் ஏழை எளியவர்களுக்குப் பங்கிடும் வழக்கத்தை கண்டிக்கவில்லை.
'ஈஸால்தவாப்' என்ற நல்ல எண்ணத்தில் உணவுப் பொருட்களை மய்யவாடியின் பக்கம் கொண்டு சென்று ஹக்குதாரிகளுக்கு, ஏழை எளியவர்களுக்கு, முஸாபிர்களுக்கு கொடுக்கப்படுகிறதென்றால், தற்போது நடைபெற்று வருவது போன்றுள்ள நற்செயலைத் தடுக்க இடமே இல்லை. இதே தீர்ப்பு 'பதாவா முல்த்தகத்' என்னும் கிரந்தத்திலும் காணக்கிடக்கிறது என்றும் அவ்விரிவுரையாளர் தெரிவிக்கிறார்கள்.
மேற்கூறப்பட்ட ஹதீதும், அதன் முழு விபரமும், ஆதாரமும் 'தஸ்ரஹுல் அவ்தக்-பி-தர்ஜுமதி ஷரஹில் பர்ஸக்' எனும் கிரந்தத்தில் ஒன்றாம் பாகத்தில் (தபனுக்கு) அடக்கத்திற்கு முன் கையாளப்படுவது சம்பந்தமான பாடத்தில் 123-ம் பக்கத்தில் தௌ;ளத்தெளிவாய் வந்திருக்கிறது.
பிக்ஹு கிரந்தங்களில், மௌத்து உடைய –நேரங்களில் நடைபெறும் செயல்களைத் தடை செய்யப்பட வேண்டுமெனக் கூறியிருப்பது, மார்க்கத்தில் அனுஷ்டான முறைகளில் அனுமதிக்க முடியாத வீணான துற்செயலை-ஈஸால் தவாபிற்காககொடுக்கப்படவிருக்கின்ற பொருள்களில், 'மார்க்கம் இன்னதென தெரியா பலதரப்பட்ட மக்களால் பல பல ஊர்களில் எஜூதியர்கள் கையாண்டது போன்று கையாளப்படுகின்ற விரும்பத்தகாத ஒருசில நடைமுறைகளை மட்டுமேயேன்றி அத்தருமத்தை தடுக்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதாக ஒரு வாசகமும் ஆதாரப்பூர்வமாய்க் காணக் கிடைக்கவில்லை.'
கபுரின் மீது ஆடு போன்றதை வைத்து சிலைகளுக்குப் பலியிடுவது போன்று பலியிடும் துற்செயலை 'கல்யூபி', 'ஹாஷியத்து புஜைரமீ' போன்ற கிரந்தங்களில் மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். அதுபோன்று கபுரின் அருகாமையாக வைத்து பலியிடும் துற்செயலை 'பைளுல் இலாஹி' எனும் கிரந்தத்தில் கண்டித்திருக்கிறார்கள். சிலைகளுக்கு முன்னால் ரொட்டி, பழம், கறிகளைப் படைத்து வீணாக்கி வரும் பண்பற்ற ஏனைய மதவாதிகளுக்கு ஒப்பான வீண் பழக்கத்தைத்தான் 'நிஹாயத்துல் அமல்' எனும் கிரந்தத்தில் கண்டித்திருக்கிறார்களே தவிர, நடைமுறையில் உள்ள 'ஒடுக்கு' எனும் ஸதகாவை ஏழை, எளியார்களுக்குப் பங்கீடு செய்யும் தான தர்மத்தைக் கண்டிக்கவில்லை என்பதை நன்கு உணர வேண்டும்.
ஜனாஸாவைத் தூக்கிச் சுமந்து செல்லும்போது உணவுப் பெட்டியையும் அத்துடன் சேர்ந்தாற்போல் இடைவிடாது குப்பார்களின் ஜனாஸாவிற்குமுன் தேங்காய், பழம், வெற்றிலை வகைகளைச் சுமந்து செல்வது போன்று சுமந்து சென்று மையவாடியில் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு ஆடு போன்றவைகளை பிரேதக் குழியருகாமையாகப் பலியிட்டு தாங்கள் தூக்கிச் சுமந்து வந்த சாமான்களோடு இந்த இறைச்சியையும் கலந்து மையத்திற்குப் படைத்து வரும்முறையைத்தான் கண்டிக்கத்தக்கது என 'மக்தல்' எனும் கிரந்த்தில் கூறப்பட்டிருக்கிறது.
மேற்கூறப்பட்டவைகளைப் போன்று அன்னிய மதத்தவரின் கிரிளைகளுக்கு ஒப்பாகும் வகையில் எவ்வித செயல்முறைகளும் நம் இஸ்லாமிய சமுதாயத்தில் இல்லாததை இருப்பதாகக் கருதி, நம் குறிக்கோளுக்கே ஊறு விளைவிக்கும் முறையில் கற்பசைன் செய்ய முனைவது விவேகமான செயலாகாது.
முன் கூறப்பட்ட ஹதீதில் கண்ட உத்திரவு ஸதகா தர்மம் கொடுக்கச் செய்யும் உத்திரவாகும்-ஏவலாகும். தடுக்கப்பட வேண்டியவை என்று புகஹாக்கள் கூறியிருப்பது அதன் மீது நடைபெறும் பயனற்ற துர் செயல்களைத்தான் குறிப்பதாகும். அவர்கள் இத்தருமத்தையே தடுக்கப்பட வேண்டுமென கூறினார்கள் என்று கருத்து வைத்தால் மேற்கூறப்பட்ட ஹதீதைப் போன்று எத்தனையோ பல ஹதீதுகளுக்கு முரணாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்வதாகிவிடும்.
மார்க்க சட்ட வரம்புகளான பிக்ஹ் ஞானமனைத்திற்கும் ஆதார மூலங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் ஹதீதிற்கு எதிராக ஒரு தீர்ப்பை வெளியாக்குவது பெரும் பாவத்தை, குற்றத்தைச் சார்ந்தது என (உஸூல்) மூல கிரந்தங்களில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வுலகத்தையே விட்டு மாறி மறு உலகத்திற்குள் புகுந்து தனித்துத் திணறி, திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் வேளையில், முன்கர்நகீர் அலைஹிஸ்ஸலாம் எனும் மலக்குகள் கேள்விக்கணைகளைத் தொடுத்த மாத்திரத்தில், பதறிப் பரிதவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், மனிதகோடிகளின்பால் இரக்கமுள்ள ரஹ்மானின் அன்பும், பரிவும் எங்கும் வியாபித்திருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டிஅடக்கத்திற்குமுன் தரும் செய்து அவ்வான்மாவின் அலங்கோல நிலையை, பதஷ்ட நிலையை அமைதியுறச் செய்யுங்கள் என்று உம்மத்துக்ளின்பால் மிக அக்கறையும், இரக்கமும் கொண்ட உண்மை நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியிருப்பது எவ்வளவு பொருத்தமாகவும், அவசியமும், அவசரமுமான நற் கருமமாகும் என்பதனை நாம சிந்தனை செய்ய கடமைப் பட்டிருக்கிறோம்.
இந்த குறிப்பிட்ட தருமத்திற்கு நம் காதயல்மாநகரத்தின் வழக்கச் சொல் 'ஒடுக்கு' என்பதும் எவ்வளவு பொருத்தமாய் அமைந்திருக்கிறது. கபுரின் அமளிகளை ஓரளவேனும் ஒடுக்கிஅ டக்கி அமைதியை ஏற்படுத்துகிறது, பதட்டமில்லாது ஒடுக்கத்தை உண்டாக்குவதாயிருக்கிறது என்பதால் அவ்வொடுக்கு என்ற வார்த்தையும் நல்லறிகுறியாய் அமைந்திருக்கிறது என்றுரைக்கலாம்.
இரக்கமுள்ள ஏகநாயன் எவ்வித இக்கட்டான வேளையில் தனது அருளால் ஒரு சின்னஞ்சிறு தருமத்தின் மூலம் மனித இனத்தவரி;ன் இப்பேரிடிக்கு அதனை ஈடு கொடுப்பதாக அமைத்திருக்கிறான் என்ற உண்மை தத்துவத்தைப் புரிந்து மிக மிக நன்றி செய்ய கடமைபட்டிருக்கிறோம் என்பதை மனதில் இருத்திக் கொள்வோமாக. அல்லாஹ்வும் ரஸூலும் நமக்கு அளித்திருக்கும் இத்தகைய நல்வாய்ப்பை நாம் உதாசீனம் செய்வதும், அதை உதறித்தள்ளிவிடுவதும் புத்திசாலித்தனமாகாது.
மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் குர்ஆன் ஷரீபு ஓதி கத்தம் செய்து உணவளித்து வரும் நல் அமலுக்கு ஆதாரம் வருமாறு:-
நிச்சயமாக, நயவஞ்சகர்கள் என நிந்திக்கப்படும் முனாபிக்குகளை 40 நாட்களுக்கு அவர்களின் கப்ரில் கடும் சோதனைகளுக்குள்ளாக்கப்படுகுpறது என்ற உறுதியான ஹதீது இருக்கின்ற காரணத்தால், நிச்சயமாக, மய்யித்தின் நன்மைக்காக, சாந்திக்காக அந்நாட்களில் உணவளிப்பதை 'முஸ்தஹப்பு, தவாபு கொடுக்கப்படும் நல் அமல் என்ற முடிவில் ஸஹாபா பெருமக்கள் நடத்திவந்தார்கள் எனற தௌ;ளத்தெளிவான ஆதாரத்தை 'பதாவாகுப்றா' எனும் கிரந்தத்தில் 2-ம் பாகத்தில், ஜனாஸாவின் பாடத்தில், 31-ம் பக்கத்தில் இமாம் இப்னுஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறிவிட்டு, இந்த ஹதீதிற்கு (மௌத்தான நேரத்திலிருந்து மய்யித்திற்காக ஸஹாபாக்கள் உணவளித்து வந்தார்கள் என்ற ஹதீதிற்கு) எவ்வித மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அதே பக்கத்தில் மேதை இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் விளக்குகிறார்கள்.
நம் ஷாபீயீ மதுஹபில் மிகப் பிரதான அங்கம் வகிக்கின்ற மேன்மையான ஷெய்கு என்று அழைக்கப்படுகின்ற, இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மய்யித்திற்காக ஸஹாபாக்கள் உணவளித்து வந்தர்கள் என்ற ஹதீதை, தங்களின் சிரந்தமான 'ஷரஹ் முஸ்லிமில்' ஊர்ஜிதம் செய்திருக்கின்றார்கள். மற்றொரு ஷெய்கு என்று அழைக்கப்படுகின்ற ராபிஃ இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மய்யித்திற்காக உணவளிக்கும் ஹதீது எவ்வித எதிர்ப்புமின்றி பிரபல்யமான மஷ்ஹூர் ஆன ஹதீது ஆகும் என்று கூறியிருக்கிற செய்தி மேற்கூறப்பட்ட பக்கத்தில் பகிரங்கமாய் காணக்கிடக்கிறது.
மேலும், மேதை இப்னுஹஜர் இமாம் ரஹிமஹுல்லாஹு அவர்கள் அதே மேற்கூறப்பட்ட தொடரில் 32-ம் பக்கத்தில் கூறியிருக்கிறார்கள்;- 'உணவளிக்கும் நற்கருமம் மய்யித்தை அடைவதாயிருக்கிறது. அதன் பலன் மய்யித்திற்கு மிகவும் உதவியளிப்பதாய் இருக்கிறது. மய்யித்திற்காக உணவளிப்பது ஸதகா எனும் தர்மத்தைச் சார்ந்த ஸுன்னத்தான கருமமாகும். இதில் உவ்வித எதிர்ப்புமின்றி இமாம்களின் (இஜ்மாஃ) ஏகோபித்த முடிவாயிருக்கிறது' என்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
நம் ஷாபி மத்ஹபில் மூலத்தூண்களாக இருக்கின்ற இமாம் நவவி, இமாம் ராபிஃ, இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹு இவர்களின் தீர்ப்பிற்கும், கருமத்திற்கும் எதிராக யாருடைய சொல்லுக்கும் மதிப்பில்லை என நம் மத்ஹபின் முடிவிருப்பதால், மய்யித்திற்கு குறித்த நாட்களில் இறந்ததிலிருந்தே உணவளிப்பது முஸ்தஹப்பு என்பது உறுதியாய்விட்டது.
மய்யித்திற்காக உணவளிப்பது ஸஹாபாப் பெருமக்களால் நடத்திக் காட்டப்பட்டிருப்பதுடன், ஷாரிஃ, ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களே மய்யித்து வீட்டில் சாப்பிட அனுமதித்து வழி காட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கப்படுகறிது.
ஹதீது கிரந்தங்களில் உலன முஸ்லிம்களுள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் 'ஸிஹாஹு ஸித்தா' என்ற ஆறு ஹதீது மூலகிரந்தங்களில் அபூதாவூது எனும் கிரந்த்தில் ஆஸிமிப்னு குலைப் ரலியல்லாஹு அன்ஹீ என்ற ஸஹாபி ரிவாயத் செய்கிறார்கள்:-
'ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும், நாங்களும் ஓர் மய்யித்தை நல்லடக்கம் செய்துவிட்டுத் திரும்பும்போது அந்த மய்யித்து வீட்டார் எங்களை அழைத்து விருந்தளிக்கவே நாங்கள் எல்லோரும் சாப்பிடலானோம். எங்கள் நாயகம், சுத்த சத்திய உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வாயில் உணவை வைத்தவாறு எங்களை நோக்கி கூறினார்கள், ' இந்த ஆடு உரியவரின் அனுமதியின்றி அறுக்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன் என கூறினார்கள். உண்மையில் விசாரணை செய்யும் போது, உரியவர் சம்மதம் தருவார் என்ற நம்பிக்கையில் சம்மதம் பெறாமலேயே அறுத்துச் சமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின் அவ்விறைச்சியை கைதிகளுக்குக் கொடுக்க உத்திரவு செய்தார்கள். நியதிப்படி அனுமதிபெற்று அவ்வாடு அறுக்கப்பட்டிருக்குமானால் முறைப்படி சாப்பிட்டிருப்பார்கள். அனுமதி பெறாத காரணத்தால்hதான் அவ்வுணவை காப்பிடவில்லை; என்ப துநன்கு தெளிவாகிறது. இந்த ஹதீதிலிருந்து மார்க்க பிக்ஹுச் சட்டம் வகுக்கப்படுகிறது, மய்யித்திற்காக உணவளிப்பது ஷாரிஃரஸூல் கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் முன்பு நடத்தப்பட்ட 'ஸுன்னத்' நல்வழி முறையாகும். இந்த ஹதீதை அறிய கிடைக்காமல் இப்னு ஹுமாம் போன்ற இமாம்கள், மய்யித் வீட்டில் உணவு தயாரிப்பது மக்ரூஹ் என்று கூறிவிட்டார்கள். இவர்களின் தீர்ப்பை, மேற்காணும் ஹதீது உடைத்துவிட்டது என பகிரங்கமாய், முல்லா அலிகாரி இமாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் கிரந்தமான 'மிர்காத்தில்' கூறியிருக்கிறார்கள்.
ஷாரிஃ ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மய்யித்து வீட்டில் சாப்பிட்டிருக்கும் சம்பந்தமான மேற்கூறப்பட்ட முழு விளக்கமும் 'மிஷ்காத்துல் மஸாபீஹ்' கிரந்தத்தில் 'முஃஜிஸாத்' எனும் பாடத்தில் 544ம் பக்கத்தில் காணக்கிடக்கிறது.
மய்யித்து வீட்டில் நடப்பவற்றை தடுக்கப்படவேண்டுமென ஹதீதில் கூறப்பட்டிருப்பது, இஸ்லாத்திற்கு முன் (ஜாஹிலிய்யா) அறியாமையின் காலத்தில் நடந்துவந்த மூடப்பழக்கமான, மய்யித்து வீட்டில் ஒப்பாரி வைத்து அழுது ஓலமிட்டு, அதன் மூலம் வயிறு வளர்த்து வந்த கூட்டத்தை முஸ்லீம் மய்யித்து வீட்டிலும் அக்கூட்டத்தாரை அழைத்து ஒப்பாரி போடச் செய்து, அதற்கென அவர்களுக்கு உணவுகள் தயாரித்து உண்ணச் செய்துவந்த துர்பழக்கத்தைத்தான் மிகமிக வன்மையாகக் கண்டித்து ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேற்கூறப்பட்ட ஹதீதுகள், அந்த ஹதீதுகுளை ஆதாரமாய் அமைத்து பகீஹுகளான-நம் ஷாபி மத்ஹபில் மூலத்தூண்களாயிருக்கின்ற இமாம் நவவி, இமாம் ராபிஃ, இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் போன்றவர்களின் தீர்ப்பையும் இந்த ஹதீதிற்கும் இம்மேதைகளுக்கும் எதிராக மேற்சொன்ன இப்னுல் ஹுமாம் போன்றவர்கள் 'மக்ரூஹ்' என கூறிய தீர்ப்பையும், இவருடைய மக்ரூஹ் என்ற தீர்ப்பை ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் முன்பு சாப்பிட்ட ஹதீது ரத்து செய்துவிட்டது என முல்லா அலிகாரி இமாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதையும் ஆராயும்போது, திறமைமிக்கவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்று ஏற்றி போற்றிப் புகழப்படும் நம் மூதாதைய ஆபாக்களான உலமாக்களெல்லாம் அநேக கிரந்தங்களைப் பார்த்து உண்மைகளை உய்த்துணர்ந்து தெளிந்து அமல் செய்தும் பிறரைச் செய்யச் செய்தும் வந்திருக்கிறார்கள். இப்னு ஹுமாம் போன்றவர்களின் மகரூஹ் என்ற கருத்துக்கு சற்றும் மதிப்பளிக்காது மாமேதைகளான இப்னுஹஜர், இமாம் றாபிஃ, இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் போன்றவர்களின் (ஹதீதுகளின் ஆதார அடிப்படையில் அமைந்த) தீர்ப்புக்கு மதிப்பளித்து இதுகாறும் நடைமுறையிலிருக்கச் செய்திருக்கிறார்கள் என்ற முடிவிற்கு நாம் வந்து சேரவேண்டும்.
மேற்கண்ட ஒடுக்கு என்ற தருமமும் இறந்த மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் உணவளிக்கும் தருமமும் ஸுன்னத்தான நற்கருமம் என்பதை நரூபிக்க மேறகண்ட ஐந்து கிரந்தங்களைப் போன்று இன்னும் எத்தனையோ ஹதீது பிக்ஹு கரந்தங்களின் அதாரங்களையும் கூறுவதென்றால் விரிவடையும் என்பதை அஞ்கி அவ்வாதாரங்கள் காணக்கிடைக்கின்ற ஓர் சில கிரந்தங்களின் பெயர் நாமங்களை மட்டும் ஈண்டு எடுத்து கூறப்பட்டிருக்கிறது. அவைகள்: 'ஸுஹ்து, வஹ்ஹாபீன், மஜ்மயிஸ்யவாயித், ஸுலைமானுல் ஜமல், ஷரஹ் ஸுதூர், உம்ததுல்காரி, முஸ்லீம், புகாரி போன்ற உயர் கிரந்தங்களில் இவ்வாதாரங்கள் நிறைந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
ஆகவே, மவுத்தின் போது அடக்கத்திற்கு முன், தொன்று தொட்டும், தற்போதும் நடைபெற்று வருவது போன்ற ஒடுக்கு என்ற பெயரில் நடத்திவரும் தருமத்தை மய்யித்தின் நன்மைக்காக கொடுத்தும், அவ்வான்மா சாந்தியடைச் செய்வது ஸுன்னத்தான, ரஸூல்கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்லியும் செய்தும் காட்டிய, அப்படியே அருமை ஸஹாபாக்கள் நடத்திக் காட்டிய, அவ்வண்ணமே இமாம்களால் ஏற்றுச் சம்மதித்துத் தீர்ப்பளித்தும் விட்ட, இதுகாறும் மார்க்க வரம்பில் அணுவளவும் வழுவாது ஒழுகி வந்துள்ள நம் நாட்டு உலமாக்களான மூதாதையர்களால் நடைமுறையில் கொண்டு வரப்படுகின்ற, ஸுன்னத்தான நல்லதோர் அமலாகும். மக்ரூஹ் அல்ல-பித்அத் அல்ல என்பது ஸுன்னத்து வல் ஜமாஅத் இமாம்களின் உலமாக்களின் முடிவாகும், தீர்ப்பாகும் என்பதை பகிரங்கமாய் பொதுமக்களுக்கு மத்தியில் ஆதாரப்பூர்வமாய் அறிவித்துக் கொள்கின்றோம்.
சிறப்புமிக்க ரப்புல் இஸ்ஸத், அஹ்கமுல் ஹாக்கிமீன் நம்மனைவரையும் ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் அடிச்சுவட்டை விட்டும் அணுவளவும் நழுவாது பின்பற்றியொழுகி வர அருள்புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
இங்ஙனம்,
M.S. அப்துல்காதிர் (பாக்கவி)
(ஸத்ருல் முதர்ரிஸ் மஹ்லரத்துல் காதிரிய்யா)
மஹ்லறா, காயல்பட்டணம்