ஏழு நிலைகள் மகாம்கள் – நப்ஸுகள் – எல்லைகள் அல்லது ஞான பூமிகளின் விபரம்

1.    நப்ஸ் அம்மாறா – முன் துவாரம் பின் துவாரத்துக்கும் மத்தி (குதம்)

(மகாமே நாசூத்து  – மூலாதாரச் சக்கரம் -ஜாக்கிரம்  Gonands Glands)

இந்த நிலையில் இருப்பவர்கள் புலனாதிகளின் புசிப்புக்காக தன்னையே அர்ப்பணித்தவர்கள். நன்மை, தீமை இன்னது என்று புரியாமலே பஞ்ச மகாபாதகங்கள் அனைத்திலும் ஈடுபடும் தன்மை உடையவர்கள். இந்நிலையில் இருப்பவர்களுடைய விமோசனம் ஷரீஅத்தின் சட்டதிட்டங்களைக் கண்டிப்பாக கடைபிடிப்பதுதான். கடைபிடித்தால் நப்ஸ் லவ்வாமாவின் நிலையை அடையப் பெறுவர்.

2.    நப்ஸ் லவ்வாமா – லிங்கத்திற்கும் நாபிக்கும் (நடு குய்யம்)

(மகாமே மலக்கூத்து – சுவாதிஸ்தானச் சக்கரம் -சொப்பனம் –Adernals Glands)

இந்த நிலையில் நன்மை எது? தீமை எது? என உணர முடியும். இந்நிலையில் உள்ளவர்கள் தீமையில் ஈடுபடும்போது தன்னை நிந்தித்தாலும் அதிகமாய் தீமையின் பக்கமே சாடும் தன்மையுள்ளவர்கள். கெட்ட பண்புகளை புறக்கணித்து நல்ல பண்புகளை மேற்கொண்டு தெய்வ பக்தியுடன் நன்மையே செய்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைப்படி (தரீகத்தின் படி) நடந்து வந்தால் ஜபரூத்து என்ற பதவியை அடைய முடியும்.

3.    நப்ஸ் முல்ஹிமா – தொப்புள் (நாபி)

(மகாமே ஜபரூத்து – மணிப்பூரகச் சக்கரம் -சுளுத்தி –Pancreas Glands)

இந்நிலைக்கு வந்தவர்கள் முக்கால் பாகம் நன்மையிலும், கால் பாகம் தீமையிலும் ஈடுபடும் தன்மையுள்ளவர்கள். இவர்கள் மிகுதமாக ஜெபதபங்களில் ஈடுபட்டால் மகாமே லாஹுத்து என்ற பதவியை அடையப் பெறுவர்.

4.    நப்ஸ் முத்மஇன்னா – இருதய கமலம் (தாமரைக் காய்)

(மகாமே லாஹுத்து – அனஹதாச் சக்கரம் -துரியம் – Thymus Glands)

இந்நிலையை அடைந்தவர்கள் நன்மையைத் தவிர தீமையைத் தெரியாதவர்கள். இவர்களுடைய மனம் சதாவும் ஆண்டவனையே தியானித்துக் கொண்டு இருக்கும். நான் என்பது அற்றுப் போன இடம். விலாயத்து உதயமாகும் இடம். இவர்கள் சதாவும் மௌனமாய் இருந்து ஆண்டவனை தியானித்து வந்து 'மகாமே ஹாஹுத்து' என்னும் பதவியை அடையப்பெறுவர்.

5.    நப்ஸ் ராளியா – நாவின் கடைசி. கண்டஸ்தானம். – அடிநாவு (கழுத்து)

(மகாமே ஹாஹுத்து – விசுத்தாச் சக்கரம் – துரியாகீதம் – Thyroids Glands)

இந்நிலையை அடைந்தவர்கள் நான்காவது பதவியின் பூரணத்துவத்தை அடையப் பெற்று பேரின்ப நிலையை அடைந்தவர்கள். இன்னல்லா ஹாஹுவல் வலிய்யு என்ற திருவசனத்தின்படி விலாயத்தை சம்பூரணமாகப் பெற்றவர்கள்.

6.    நப்ஸ் மர்ளியா – எல்லை வாசல். நெற்றி –லலாடதானம் -சுழிமுனை –புருவ மத்தி –காப கௌஸைனி

(மகாமே பாஹுத்து –அஜ்னா சக்கரம் -அதீதம் – Pitutiary Glands) கண்ணுக்கும் புருவத்திற்கும் மத்திய தாழ்வான பாகம்.

தெய்வத்துடன் தொடர்பு கொள்ளும் நிலை. இல்ஹாம் என்னும் தெய்வ உதிப்பைப்பெறுவதும், தெய்வ வசனங்கள் கிடைக்கப்பெறுவதும் இந்நிலையில்தான். நுபுவ்வத்தின் எல்லை. இந்நிலைக்கு அதீதம் என்றும், ஆறாவது எல்லை என்றும் இதற்குமேல் ஒன்றுமில்லை என்றும் சில மகான்கள் கூறுகிறார்கள்.

7.    நப்ஸ் காமிலா – மூளை (சிரசின் உச்சி) பிரஹ்ம ரத்திரம்

(மகாமே ஜம்ஹுத்து –சகஸ்ராரச் சக்கரம் – Pineal Glands)

தெய்வம் தானாய் இருக்கும்நிலை. நுபுவ்வத்தின் சம்பூரண நிலை. குதுபிய்யத்தின் உதயம். இந்த நிலையை அடைந்தவர்களிடைமே முழு உலகத்தினுடைய அந்தரங்க ஆட்சி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆளுநர்க்கு –குத்புல் அக்தாப் என்றுபெயர். இந்நிலையில் இருப்பவர்கள் தற்போதம் இழந்து, உஷாரற்ற நிலையில் இருப்பதனால் இவர்களுக்கு ஹாலூன்கள் என்று பெயர். மக்அது ஸித்கு உண்மை குடிகொள்ளும் தானம் என்று பெயர்.

8.    ஸகஸ்ராரம் – பிரங்ம ஸ்தானம் அல்லது பிரஹ்ம ரந்திரம்

ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை வரையில் ஜீவன் தன்னுடைய தன்மையினின்றும் மாறாமல் அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஸகஸ்ராரம் சென்றவுடன் பரமாத்மாவுடன் ஐக்கியமாய் விடுகிறது.

புருவங்களுக்கு மத்தியில் பிராணனை வைத்தல், விஷய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அஞ்ஞானி ஒருவனுக்கு அந்திய காலத்தில் பிராணன் நவத் துவாரங்களில் கூட்டை விட்டுப் போகிறது. துன்பவுலகம் செல்லும் ஞானிக்கோ அது புருவத்தின் மத்தியில் நின்று உச்சந்தலையில் பிரம்மாந்திரத்தின் வாயிலாக வெளியே வருகிறது. மோட்ச உலகம் செல்லும்.

–    ஞானப்பிரகாசம் அல்லது நூருல் இர்பான் என்ற நூலிலிருந்து.

ரூஹு, ஆன்மா, நப்சு, கல்பு என்றால் என்ன?

اَعْدٰى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ

உன்னுடைய விரோதிகளில் மிகப் பெரிய விரோதி உன் இரு விலாக்களுக்கு இடையில் உள்ள நஃப்ஸாகும்' என்று ஒரு ஹதீதில் கூறப்பட்டுள்ளது.

تَوَقَّ نَفْسَكَ لَاتَأَمَنْ غَوَآئِلَهَا     فَالنَّفْسُ اَخْبَثُ مِنْ سَبْعِيْنَ شَيْطَانًا

இமாமுனா கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹு அன்ஹு அவர்கள், உன்னுடைய நஃப்ஸை நீ கவனித்துக் கொண்டே இரு. அதன் மோசடிகளை விட்டும் அச்சமற்று இருந்து விடாதே. ஏனெனில், நஃப்ஸாகிறது எழுபது ஷைத்தான்களை விட மிக கெட்டதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஒரு தடவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போருக்கு போய் விட்டு திரும்பி வந்த போது,

رَجَعْنَا مِنَ الْجِهَادِالْاَصْغرِ اِلَى الْجِهَادِ الْاَكْبَرِ

'நாம் சிறிய போரிலிருந்து பெரிய போருக்கு திரும்பியுள்ளோம்' என்று கூறினார்கள். மனிதன் எப்போதும் தன் நஃப்ஸுடன் போரிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைக் குறித்து இவ்வாறு கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் பால் நெருங்குகின்ற பாதையில் நடப்பதற்கு 'ஸுலூக்' என்று கூறப்படும். அல்லாஹுதஆலா மனிதனை நஃப்ஸெ குல்லு என்பதிலிருந்து படைத்ததால் மனிதனுடைய ஏழு தன்மைகளுடைய அளவுக்கு அவனுக்கு ஏழு நஃப்ஸுகள் உள்ளன.

இந்த நஃப்ஸுகளை அறிவதற்கு முதலில் அல்லாஹ் நம்மை படைத்த விதத்தை அறிவது அவசியமாகிறது.

மனிதன் படைக்கப்பட்ட விதம்:

அல்லாஹ் மனிதனை படைத்து அதன் உடலை சமமாக்கிய போது தாத்தின் தேட்டத்தை அனுசரித்து அதனுள் ரூஹை ஊதினான்.  ரூஹுக்கும,; உடலுக்கும் உஜூதுடன் ஒரே தொடர்புதான் உண்டு. இவை இரண்டும் (ரூஹு, காலபு) உஜூதின் ஐனே ஆகும். உஜூது இவை இரண்டினதும் ஐன் ஆகும். அல்லாஹுத்தஆலா சொல்லுகிறான்

انما امرنا لشيئي اذاردناه ان تقول له كن فيكون(நாங்கள் ஒரு வஸ்த்துவுக்கு எங்களுடைய ஏவல் என்பது  நாம் அதை குன் என்ற சொல்லை நாடுவோமேயானால் அது உண்டாகிவிடும்.)

அதாவது ஏவல் – அம்று என்னும் அல்லாஹ்வின் நாட்டத்தின் குணபாட்டினால் உருவானதுதான் றூஹு மற்றும் காலபு என்னும் உடல். ஹக்கான ஒருவனான வாஹிதான உஜூது உடலை சமப்படுத்தி அதில் வெளியான பின் உடலின் உள்ளிருந்து றூஹு எனும் கோலத்தில் வெளியானது. அந்த றூஹை இன்சானின் மறைவான பகுதி என்று அதை ஆக்கினான். ஆகவே இன்சான் என்பவன் இரண்டு கோலங்களால் சேர்க்கப்பட்டவன் ஆகும்.

1.பாதினான றூஹிய்யான கோலம்.
2.காலபிய்யான வெளிரங்கமான கோலம்.

இவ்விரண்டு கோலங்களைக் கொண்டும் சேர்க்கப்பட்டவனே இன்சான் ஆகும். காலபிய்யா-உடல் எனும் கோலம் ஆகிறது அது பேதகமாகவும் செய்யும், மாறுபடவும் செய்யும், அழியவும் செய்யும், பனாவாகவும் செய்யும். றூஹிய்யா என்னும் கோலமாகிறது அது பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அது பேதகமாவதை விட்டும,; மாறுவதை விட்டும் அழிவதை விட்டும், நீங்குவதை விட்டும் பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அது நீடூடி காலம் நிற்கின்றதுமாகும். ஆனால் அஸல்லியத்து அல்லாத்ததது ஆகும். அது காலபை படைத்ததன் பிறகு படைக்கப்பட்டது ஆகும். சூக்குமம் என்பது இதுதான் என்று ஞானிகள் கூறுகின்றனர்.

முதல் உண்டாகுதல் ஆகிறது அது அழிவது கொண்டு ஹுக்மு செய்தோம் என்றாலும் அதற்கு ஹகீகத்தில் அழிவில்லை என்றாலும் அதனுடைய தாத்தில் மறைந்திருக்கும் மர்த்தபா எனும் அஸ்லுக்கு திரும்பி விடும். திரும்புதலாகிறது இணைப்புகள் உருக்குலைந்ததன்; பின்னர் அதன் பாகங்களிலுள்ள ஒவ்வொரு கோலமும் அதன் உள்ளமைக்கு திரும்பி விடுதல் ஆகும். அந்த உள்ளமையாகிறது ஹக்கான ஒருவனான தாத்தாகும்.

உதாரணமாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தஹிய்யத்தின் கோலத்திலும் அவர் அல்லாத்தவர் கோலத்திலும் கோலமெடுத்து வந்த பொழுது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமவர்களின் றூஹானிய்யத்தான கோலம் அசலுக்கு திரும்பியது போல.

அவனுடைய மற்ற உண்டாகுதல் என்னும் பாகமாகிறது அது பாக்கியானதாகவும், நிரந்தரமானதாகவும் ஆகிவிட்டது. ஒருக்காலமும் அது அழியாது.

இந்த றூஹு எனும் கோலமாகிறது உன்னுடைய காலபுக்கு ஒப்பானதாகும். அதன் பேரில் ஒவ்வொரு அணுஅணுவாக அச்சாக்கப்பட்டதாகும். காலபானது – அதனுடைய எல்லா பகுதிகளைக் கொண்டும,; றூஹானது – அதனுடைய எல்லா ஆதாறுகள், அஹ்காமுகளைக் கொண்டும் ஹக்கான ஒருவனான உஜூதுக்கு வேறானதல்ல. (லாயிலாஹ இல்லல்லாஹு)

இந்த உஜூது றூஹு எனும் கோலத்தின் பேரில் தோற்றமளித்ததன்-தஜல்லியானதன் பிறகு அதனுடைய அஹ்காமுகள், ஆதாறுகள் எனும் கோலத்தில் வெளியாயிற்று.

நீ இந்த றூஹுதான் உடலை இயக்குகிறது என்று எண்ணிவிடாதே. உசும்புதல், உசுப்பப் படுதல் எல்லாம் சுயமான றூஹைக் கொண்டுதான் என்று எண்ணி விடாதே. ஆனால் இவை அனைத்தும் உஜூதின் தஜல்லியாத்துக்கள் – வெளிப்பாடுகள்; ஆகும்.

இவை அனைத்தும் றூஹின் குணபாடு என்று பெயர் சொல்லப்படும். உசும்புதல் எனும் கோலத்தின் பேரில் தஜல்லியான பிறகு ஹக்குடைய உஜூது வெளிப் புலன்கள் எனும் கோலத்தில் வெளியாயிற்று. றூஹாகிறது ஒரு வெளிப்பாட்டிற்கு கண்ணாடியாகும்.

இரண்டு வகையான றூஹுகள்:

றூஹாகிறது இந்த வர்ணிப்புகளைக் கொண்டு வர்ணிப்புப் பெறுவதைக் கொண்டும் அது சரீரத்தில் அதிகாரம் செய்வது கொண்டும் அதற்கு ஹயவானியத்தான றூஹு என்றும் சொல்லப்படும். இதற்கு நப்சு என்றும் பெயர் சொல்லப்படும். இந்த ரூஹு நமது சரீரத்தை அடுத்திருக்கும் வரைக்கும் நப்ஸு என்றும், நப்ஸுன் நாத்திகா என்றும் சொல்லப்படும். அந்த நப்ஸுதான் 'நீ'.

நப்ஸு இன்ஸானிய்யா என்ற கல்புக்கு மிகுந்த மாட்சிமைகளுண்டு. அது துவக்கத்திலான ஒளியாக இருக்கும். அல்லாஹுதஆலாவை காணுவதற்கு இன்ஸான் அளவில் இறக்கி வைத்த சிர்ராகும். அதேபோல் ஷைத்தானுடைய ரூஹாகிறது நெருப்பாகும். ஆடு, மாடு, ஒட்டகம், பறவை முதலானவைகளின் ரூஹு காற்றாயிருக்கும்.

அல்லாஹு ஆதமைப் படைத்து சொன்னான்:
பனபக்து பீஹி மின்ரூஹி

'ஆதமுடைய' உடலில் என்னுடைய பரிசுத்த ஆவியை ஊதி விட்டேன் என்று சொன்ன ரூஹாயிருக்கும் என்றும், இன்னும் அந்த கல்பாகிறது, அல்லாஹுதஆலாவுடைய அர்ஷாகுமென்றும் இன்னும் அல்லாஹு தஆலா அதில் பிரசன்னமாயிருக்கிறான் என்றும், அந்த கல்பாகிறது உஜூதுடைய உள்ளமையைப் பார்க்கின்ற கண்ணாடி போலென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
மேற்கூறப்பட்ட ஆயத்தால் ஊதப்பட்ட ரூஹு ஒன்றும், ஊதப்படாத ரூஹு ஒன்றும் இருக்கிறது என்று தெரிய வருகிறது. ஊதப்படாத ரூஹாகிறது நுட்பமான ஆவி என்னும் ரூஹுல் ஹைவானியாயிருக்கும். இந்த ரூஹாகிறது எல்லா உயிர் பிராணிகளுக்கும் பொதுவாயுள்ளது. ஊதப்பட்ட ரூஹாகிறது நுட்பமான பரிசுத்த ஆவியென்னும் ரூஹுல் இன்ஸானியாயிருக்கும்.

இந்த ரூஹு இன்ஸானுக்கே சொந்தம். இந்த ரூஹு பாகத்தை ஏற்காது. ஆதலால் கண்டிப்பில்லை. அல்லாஹ்வுடைய மஃரிபா இதில் இலங்குகிறது. எந்த ஒன்று பாகத்தை ஏற்காததாய் இருக்கிறதோ அதில்தான் மஃரிபா உண்டா
கும். ஆகவே நீ என்பதற்குப் பொருள் கையுமல்ல, காலுமல்ல, வயிறுமல்ல, மனம், புத்தி, சித்தம், அகங்காரமுமல்ல, உன் ஜீவாத்மாவுமல்ல. நீ என்பது நுட்பமான பரிசுத்த ஆவியென்னும் ரூஹுல் இன்ஸானியாயிருக்கும்.

ரூஹு ஹையவானி:

கீழுலகத்தைச் சேர்ந்த இந்த ரூஹானாது அக்லாத் எனும் (வாதம், பித்தம், சிலேத்துமம், கரும்பித்தம் ஆகியவை) ஒரு நுட்பமான ஆவியால் உண்டானது. இந்த நான்குக்கும் நீர், நெருப்பு, நிலம், காற்று இவைகளே மூலமாகும். ரூஹு ஹையவானியின் சுபாவம் பேதப்படுவதும் சரியாயிருப்பதும் உஷ்ணம், சீதம், கொழுமை, வறளை இவைகளின் கூடுதல் குறைவால் ஏற்படுவதாகும். இதை சரிப்படுத்துவதற்கே வைத்திய முறைகள் தோன்றியது.

ரூஹு இன்சானியாகிறது சரீரத்தில் ஆட்சி செய்வதெல்லாம் ரூஹு ஹையவானியின் உதவி கொண்டுதான். ரூஹு ஹையவானி என்பது கல்பு ஜிஸ்மானியான இருதய கமலத்தின் உஷ்ணத்தினால் பக்குவத்தை அடைவதும் துடி நரம்புகளின் வழியால் எல்லா உறுப்புகளிலும் பரவி சரீரத்திற்கு ஹயாத்தைக் கொடுப்பதுமான நுண்ணிய ஒரு ஆவியாக இருக்கும். ரூஹு ஹயவானி என்பது சரீரத்துக்குள் நடப்பதும், அதற்கு ஹயாத்தைக் கொடுப்பதும் எதைப்போல் என்றால், எரிகிற விளக்கை வீட்டின் பல பக்கங்களிலும், காட்டினால் அப்போது அவ்வீட்டின் பல பக்கங்களிலும் வெளிச்சம் பரவுகின்றதைப் போன்றதாகும். ஆகவே ரூஹு ஹயவானியாகிறது விளக்கின் சுடர் போலவும் ஹயாத்து அச்சுடரின் வெளிச்சம் போலுமாகும்.

இந்த சக்திகள் திரும்பி விடுமேயானால், றூஹுக்கு சிபத்தான, குணபாடான உடம்பிலுள்ள உசும்புதலுக்கு காரணமான ஹயாத்து எனும் சக்தி வெளியிலிருந்து உள்ளபக்கம் திரும்பிவிடுமேயானால் (அதாவது செயலிலிருந்து அதன் தன்மைக்கு திரும்புதல் எனும் தஜல்லியைக் கொண்டு திரும்பி விடுமேயானால்) ஹயாத்து எனும் சக்தி திரும்பிவிடுவது கொண்டு அந்த சரீரம் மைய்யித்தாக ஆகிவிடும்.

இந்த ரூஹுன் நாதிகா என்னும் ரூஹுல் இன்ஸானை ரூஹுல் அஃளமென்றும், இதுபேர் உலகமென்ற ஆலமுல் கபீரில் 'அக்லுல் அவ்வல்' என்றும், கலமுல் அஃலாவென்றும், லவ்ஹுல் மஹ்பூலென்றும், ரூஹுல் முஹம்மதிய்யா என்றும், ஹகீகத்துல் முகம்மதிய்யா என்றும், நூரென்றும், நப்ஸு குல்லியென்றும், கபீ என்றும் சிர்ரென்றும், சிர்ருல் சிர்ரென்றும், ரூஹென்றும், கல்பென்றும், நப்ஸு நாத்திகா என்றும், லத்தீபத்துல் இன்சானிய்யா என்றும் கலீபத்துல் அக்பரென்றும், சிர்ருல் அஃலமென்றும், கலிமாவென்றும், புஆதென்றும், ஸதர் என்றும், அக்லென்றும், நப்ஸென்றும் கூறப்படுகிறது என்று இஹ்யா உலூமுத்தீன் என்ற கிதாபில் கூறப்படுகிறது. நப்ஸு என்பதும் கல்பு என்பதும் ரூஹு என்பதும் ஒன்றுதான்!

கல்பு எனும் பதத்திற்கு இரண்டு பொருள்கள் உண்டு. 1. நெஞ்சுக்குள் இடது பக்கத்தில் இருக்கும் மாங்காய் வடிவிலான மாமிசத் துண்டமாகிய இருதயம். 2. ஜோதி மயமாகிய ஓர் ஆத்மீக தத்துவ நுட்பம். இந்த இரண்டுக்கும் ஒருவித காந்த சம்பந்தமுண்டு. ஆத்மீக கல்பாகிய இரண்டாவது கல்பையே அகம்-உள்ளம் என்றழைக்கிறோம். இந்த அகம்தான் பகுத்தறிவுள்ள மனிதனின் உண்மை ரகசிய நுட்பமாய் இருக்கிறது. திருக்குர்ஆனில் கல்பு என்று சொல்லப்பட்டிருப்பதெல்லாம் இந்த அகம் என்ற ஹகீகதே இன்சானாகிய நுட்பத்தைக் குறிப்பதே. இந்த அகம்தான் மனிதனில் பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும், வஸ்துக்களின் உண்மையை விளக்கி அறிவதுமாகும். இதனை ஆலமே மலகூத் என்றும், மிதால் என்றும், மும்கினுல் உஜூத் என்றும் அழைக்கலாம். இது சூக்குமமாகும். வலம்-இடம்-கீழ்-மேல்-முன்-பின்-அருகாமை-தூரம் என்ற திக்குத் திசையொன்றும் இதற்கு கிடையாது.

நன்மை, தீமை, கேள்வி, கணக்கு, இன்பம், துன்பம், வேதனை யாவும் அதன் மீதிலேயாகும். இந்த சூக்கும சரீரம் உலகமனைத்தையும் அடைய வளைந்ததாக இருக்கிறது. அவ்லியாக்களுக்கு சித்தியாகும் அகவிளக்கமும், அபூர்வ நிகழ்ச்சிகளும் இந்த சூக்குமத்தின் விளக்கத்தினாலேயே உண்டாகின்றன. இதுவே மனித ஆத்மாவின் அசலாகும். தனக்கு வேண்டிய எந்த ரூபத்தையும் எடுத்துக்கொள்ள இச்சரீரத்துக்குச் சக்தியுண்டு. இது சடலத்தை விட்டும் நீங்கி விட்டால் அதற்கு மரணம் என்று சொல்லப்படும். சூக்கும சரீரத்தின் நிலை கிட்டுபவருடைய நிலை 'பகா' எனும் நித்தியானந்த நிலையாக இருக்கும். இரண்டே இலட்சணங்களைக் கொண்டு அகம் வர்ணிக்கப்படுகிறது. அதாவது பார்ப்பது, உணர்வது ஆகியவையே அந்த இலட்சணங்கள்.

'தானென்றது ரூஹு அதிலே நின்றும்
தனியோன் ஸிபாத்துகள் வெளியானதால்
பானியானவ ரதுகளைத்தான்
படைத்தோன் அளவிலே சேர்ப்பார்களே'
                                         -கீழக்கரை தைக்கா சாகிபு வலியுல்லாஹ்.

கல்பென்றதற்கு அர்த்தம் பிரளுகிறதாகும். எந்த கல்பானது ஹல்காயிருந்து ஹக்காக பிரண்டு விட்டதோ அதுவே கல்பாகும். அதுவே அர்ஷாகும். அடிக்கடி பிரளுகிறதனால் அதற்கு கல்பு என்றும், கெடுதியை ஏவுகிறதனால் நப்ஸென்றும், ஜடலம் உயிர் பெற்றிருப்பதனால் ரூஹென்றும், ஆலோசிக்கிற புறத்தினால் அக்லென்றும் சொல்லப்படுகிறது.

இந்த றூஹுல் ஹயவானாகிறது தூக்கத்தினிடத்தில் அது மரணிப்பதில்லை. சரீரத்தை விட்டும் வெளியேறுவதும் இல்லை.

தூங்குமிடத்தில் சரீரத்தை விட்டு வெளியானதும், முழிக்கும் போது சரீரத்தில் உட்புகுவதுமான அந்த றூஹாகிறது அது பிரித்தறியும் றூஹாகும். அதுவும் உஜூதுடைய தஜல்லியிலிருந்து ஒரு தஜல்லிதான்.

இன்னும் பிரித்தறியும் றூஹாகிறது அது மரணிக்காது. ஆனாலும் அது சரீரம் மரணித்ததன் பிறகு, அது தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் உள்ள ஒரு நிலையில் ஆகிவிடும்.

றூஹு பிரிந்த பின் உள்ள நிலை:

ஆத்மா –றூஹு உடலை விட்டுப் பிரிந்த உடன் அதற்கு வேறோர் உருவம் உண்டாகும். இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவாகள் தமது புத்தூஹாத்துல் மக்கிய்யா என்ற நூலில் எழுதுவதாவது: மரணித்ததும் ஆத்மாவுக்கு ஓர் உருவம் உண்டாகும். அது எண்ணத்தால் உண்டாவது. அப்போது அது திரையுலகில் (ஆலம் பர்ஜகில்) இருக்கும். இந்த உருவம் இருப்பதால் அதற்கு உணர்வும், அறிவும் இருக்கும். இந்த உருவம் இந்த உடலை விட்டும் வேறானதாக இருக்கும். இந்தத் திரையுலகில் இருக்கும் போது இது பல பல பிறப்பாகப் பல உருவங்களெடுக்கும்.

மேலும் இப்னு அரபி அவர்கள் மேற்காணும் நூலில், 'அல்லாஹுத்தஆலா மனிதனின் ஆத்மாவை இம்மையிலும், திரையுலகிலும், மறு உலகிலும் எங்கிருப்பினும் உணர்வும், அறிவும் உடைய படிவங்களை எடுத்துக் கொள்ளும் வகையிலேயே படைத்தான். முதலில் மீதாக் என்ற வாக்குறுதி எடுக்கப்பட்ட நாளில் அதற்கு ஒர் உருவமுண்டாயிற்று. பின் தாயின் வயிற்றில் நான்காம் மாதம் புகுந்தது முதல் மரணம் ஏற்படும் வரை சடதத்துவ உடலில் சிறை இருந்தவரை வேறோர் உருவை அடைந்திருந்தது. அதன்பின், மரணமான பின் புதைகுழியில் கேள்வி கணக்குக் கேட்கப்படும் வரை ஓர் உருவைப் பெற்றிருந்தது' என்கிறார்கள்.

அகச் சுத்தியுடைய முஃமீன்களின் கல்பு அழிவதில்லை. அவர்களின் ஞான ஜோதி சிறிதும் குன்றாமல் மரணத்திற்குப் பின்னும் அவர்களுடன் நிலைத்திருக்கும். இதுவே நித்திய வாழ்வு என்று சொல்லப்படுகிறது. இறைவனை முடுகுதல், அவனை அறிதல், அவன் கோட்பாடுகளின்படி செயலாற்றுதல் முதலிய அனுஷ்டானங்கள் யாவும் அகத்தின் செயல்கள்தாம். மற்ற உறுப்புகள் அதற்கு கீழ்படிந்து செயல்படும் தொண்டர்களே. ஏவல், விலக்கல் என்னும் கட்டளைகளைக் கொண்டு ஏவப்பட்டதானது இந்த அகம்- உள்ளம் தான்.  அல்லாஹ் அல்லாத்ததை விட்டும் காக்கப்பட்ட அகமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அல்லாஹ் அல்லாத்ததின் பக்கம் கொழுகுதல் உள்ள அகத்துக்கு இறைவனை விட்டும் திரை போடப்படும். இந்த திரை போடப்பட்ட அகத்துக்கே (மறுமையில்) கேள்வி கணக்குகள் உண்டு.

அகத்தின் உள்ளமை சூக்கும உலகத்தையும், அதன் சாய்கை (நிழல்) பூத உலகத்தையும் சார்ந்தவை. அறிவு, நப்ஸ் இவைகளின் தத்துவங்களின் சேர்க்கையினால் சூக்கும உலகில் உள்ள கோலங்கள் சிருஷ்டிகளின் ரூபத்தில் வெளியாகிப் புலன்களின் வாயிலாக அறியப்படுகின்றன.

பூத உலகச் சிருஷ்டிகள் தரிபட்டிருப்பதற்காக நப்ஸ் தாயின் ஸ்தானத்திலும், அறிவு தகப்பன் ஸ்தானத்திலும் இருக்கின்றன. வஸ்துக்களின் பேரில் ஆசைக் கொள்வதே நப்ஸின் குணம். ஆகவே உலக ஆசாபாசங்களை விருத்தி செய்யவே நப்ஸ் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. இதில் வெற்றியடைந்தால் அகத்தையும் தன் வசப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையே துக்கத்திற்கும், துன்பங்களுக்கும் காரணமாகும். அறிவு வஸ்துக்களை மட்டும் கொண்டு திருப்தி அடைவதில்லை. உணர்தல், விளக்கம், தீர்க்க திருஷ்டி இவைகள் அறிவின் குணங்களாகும். ஆதலால் அது ஆராய்ச்சியையே தன் இலட்சியமாகக் கொண்டு அகத்துக்கும் இன்பமளிக்கிறது. இது சுகத்திற்குக் காரணமாகஉள்ள நிலையாகும். ஆனால் சுகம், துக்கம் இவ்விரண்டு நிலைமைகளும் அகத்தின் இலட்சியத்திற்குப் புறம்பானவை.

றூஹின் பெயர்கள்:

இதற்குப் பின், றூஹுக்கு உஜூதுடைய வெளிப்பாட்டிலிருந்து கிடைத்திருக்கும் வசபுகளை(الاوصاف) (தன்மைகளை) அனுசரித்து பல பெயர்கள் உண்டு.

றூஹு எனும் கண்ணாடியிலிருந்து உஜூது பொதுவான அறிவு எனும் கோலத்தில் வெளியானால் அதற்கு றூஹு என்று பெயர் வைக்கப்படும். தனித்த சமட்டிகளின் அறிவைக் கொண்டு கொழுகுமானால் அதற்கு அக்லு என்று சொல்லப்படும்.

சமட்டி, வியட்டிகளைக் கொண்டு அந்த இல்மின் கொழுகுதல் இருக்குமானால் அதற்கு கல்பு என்று சொல்லப்படும். அது தனித்த வியட்டியைக் கொண்டு கொழுகுமானால் அதற்கு நப்சு என்று சொல்லப்படும். இந்த சொல்லப்பட்ட கொழுகுதல்கள் எல்லாம் உஜூதுடைய வெளிப்பாடுகளிலிருந்து உள்ள கோலங்களாகும்.

றூஹானது காலபை விட ரொம்ப மிருதுவானதாகும். காலபு ஆகிறது றூஹுடைய மிருதுவைக் கவனிப்பது கொண்டு அது ரொம்ப தடிப்பமானது ஆகும். றூஹின் மிருதுவுக்கும் காலபின் தடிப்பத்துக்குமிடையில் ஒரு தொடர்பும் இருந்தது இல்லை. ஆனால் றூஹு என்னும் கண்ணாடியில் கல்பு எனும் கோலத்தில் ஹக்கு தஜல்லியானான்.

அந்த கல்பை இரண்டு முகம் உள்ளதாக ஆக்கினான்.

1.மிருதுவான பாகம் அது றூஹுடன் இணைகிறது.
2.திண்ணமான பாகம் அது காலபோடு இணைகிறது.

எனவே கல்பை காலபுக்கும் றூஹுக்கும் இடையே சேகரித்த பர்ஸக் ஆக ஆக்கினான்.

றூஹு கல்பின் மிருதுவான பாகத்துடனும் காலபு கல்பின் திண்ணமான பாகத்துடனும் இணைந்தது. ஆகையால் றூஹுக்கும் காலபுக்கும் இடையே கல்பின் மத்தியஸ்தத்தைக் கொண்டு சேருதல் உண்டாகிவிட்டது.

காலபாகிறது றூஹின் ஒளியிலிருந்து கல்பின் தொடர்பைக் கொண்டு ஒளி பெற்றதாக ஆகிவிட்டது. அதாவது இலங்கிவிட்டதுواشرقت الا رض بنور ربها(றப்புடைய ஒளியைக் கொண்டு பூமி ஒளி பெற்றதாக ஆகிவிட்டது) எப்படிப்பட்டி றூஹு எனில் அது காலபை வளர்க்கிறது. அதை நிலைக்கச் செய்கிறது. றூஹுடைய ஒளி சங்கிலித் தொடராக பிரகாசிப்பதிலிருந்து அந்த காலபுடைய இருள் நீங்குமானால் காலபின் திண்ணம் எனும் இருள் நீங்கியதன் பின் அது கல்பாக ஆகிவிடும்.

அதுபோலதான் அந்த கல்பாகிறது றூஹுடைய ஒளியைக் கொண்டு பிரகாசித்தால் அது றூஹாக ஆகிவிடும். இன்னும் றூஹாகிறது காலபில் அது ஆட்சி பண்ணுவதிலிருந்து பராக்கானதன் பின் அதாவது காலபை கல்பாக ஆக்கினதன் பின் அது றூஹுக்கு றூஹாக ஆகிறது. அல்லாஹ்வின் ரகசியத்தில் நின்றும் ஒரு ரகசியமாகவும் ஒளிகளிலிருந்து ஒரு ஒளியாகவும் ஆகிவிடுகின்றது.

நப்ஸின் வகைகள்:

றூஹாகிறது காலபின் பண்புகளை எடுக்குமானால் அது நப்சு என்று கூறப்படும். அந்த நப்சு( இந்த காலபை உண்டாக்கிற மண், தண்ணீர், காற்று, நெருப்பு என்பவற்றிலிருந்து) நெருப்பின் குணத்தை எடுக்குமானால் நப்சுல் அம்மாரா (انفس الامارة)என்று சொல்லப்படும். அந்த அம்மாறாவின் குணங்களாகிறது, பெருமையடித்தல், அகப் பெருமை, முகஸ்துதி, கெட்ட குணங்களில் மூழ்குதல், அனானியத்து போன்ற கெட்ட குணங்களும், இவை அல்லாத்தவைகளும் ஆகும். இந்த குணங்களை உடைய நப்சு ஷைத்தானுடைய ஊசாட்டங்களுக்கு இடமாக ஆகி விடும்.

இனி அந்த நப்சு காற்றின் குணத்தை எடுக்குமானால் அதற்கு நப்சுல் லவ்வாமா (انفس اللوامة) என்று கூறப்படும். இந்த நப்சாகிறது அதிலிருந்து கெட்டவைகள் உண்டானதன் பின் அதன் நப்ஸை பழிக்கவும் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடவும் செய்யும். இந்த நப்சுல் லவ்வாமா ஆகிறது நப்சானியத்தான ஊசாட்டங்களுக்கு இடமாகும்.

இனி அந்த நப்சு தண்ணீரின் குணத்தை எடுக்குமானால் அதற்கு நப்சுல் முல்ஹிமா (انفس الملهمة) என்று சொல்லப்படும். அப்போது அந்த நப்சு நன்மைகள் அடங்கலும் உண்டாகும் இடமாக ஆகிவிடும். அவனுக்கு அல்லாஹ்வின் திக்று (الذكر), பிக்று, (الفكر) தஸ்பிஹ் (التسبيح) , உலகை வெறுத்தல் (الزهد), பேணுதல்(الورع) , பொறுமை, (الصبر)பரஞ்சாட்டுதல் (التسليم) , பொருத்தம் (الرضي)இவை போன்ற நல்ல விசயங்களில் ஆசை அதிகமாகும். அப்போது இந்த நப்சு மலக்குகளின் ஊசாட்டங்களுக்கு இடமாக ஆகிவிடும்.

இனி அந்த நப்சு இம் மண்ணின் குணங்களை ஏற்றுக் கொள்ளுமானால் அந்த நப்சு கீழ் குறிப்பிடும் குணங்களை கொண்டதாக ஆகிவிடும். பணிதல், மனம் உடைதல், இரங்குதல், கண்ணியம், வணக்கம் எனும் பாரங்களை சுமத்துதல், எக்காலமும் தான் அழிந்தவன் றப்பு பாக்கியானவன் எனும் பார்வையுடையவனாகவும் ஆகுதல் ஆகும். அப்போது இந்த நப்சு றஹ்மானிய்யத்தான ஊசாட்டங்களுக்கு இடமாகிவிடும். இந்த நப்சுக்கு நப்சுல் முத்மயின்னா (انفس المطمئنة)  என்று கூறப்படும்.

சில கிதாபுகளில் இன்னும் மூன்று வகை நப்சுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
கல்பின் ஏழு சுற்றுகள்:

நிச்சயமாக கல்பாகிறது அதற்கு 7 சுற்றுகள் உண்டு. உண்மையில் அந்த சுற்றுகளாகிறது கல்பு எனும் கோலத்திலும் அதன் ஆதாறுகள், அஹ்காமுகள், பண்புகள் என்னும் கோலத்திலும் வெளியான வெளிப்பாட்டைத் தொடர்ந்த 7 வெளிப்பாடுகள் ஆகும்.

1.கல்பின் சுற்றுகளில் இருந்து முதலாவதாகிறது:

நெஞ்சைக் கொண்டு கொழுகினதாகும். அதாவது கல்பின் தோலாகும். அது எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் வஸ்வாசுக்கு இடமாகும். கெட்டவைகள் இதை அடக்கி ஆளுமானால் அவனுக்கு காபிர் என்று ஹுக்மு செய்யப்படும். இனி அவன் அவனுடைய கெட்டவைகளெல்லாம் நன்மைகளைக் கொண்டு மாற்றுவானானால் கடுமையான தெண்டிப்பு கொண்டு தீமைகளை நன்மைகளாக மாற்றுவானானால் அப்போது அவன் இஸ்லாத்தின்பேரில் நெஞ்சு விசாலமாக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் ஆகிவிடுவான். அவன் றப்புடைய அத்தாட்சியின் பேரில் இருக்கிறான். இந்த சுற்று சட உலகோடு கொழுகினதாகும். இந்த சட உலகமாகிறது வெளிப்புலன்களைக் கொண்டு அறியப்படக் கூடியதாகும்.

2.கல்பின் சுற்றுகளில் இருந்தும் இரண்டாவதாகிறது:

கல்பின் உள்பார்வை ஆகும். இந்த உள்பார்வை  அல்லாஹ் அல்லாத்ததைக் கொண்டு கொழுகுமானால் அவன் ஒரு கூட்டத்தில் ஆகிவிடுவான். அவனது ஹக்கில் குர்ஆனில் வந்திருக்கிறது ولكن تعمي القلوب التي في الصدور(என்றாலும் அவர்களின் நெஞ்சுகளில் உள்ள கல்பு குருடானவர்கள்) அந்தக் கூட்டத்தில் ஆகி விடுவான். இனி அவனது உட்பார்வை அல்லாஹ்வைக் கொண்டு கொழுகுமானால் அது ஈமானுடைய இடமாகும்.اولئك كتب في قلوبهم الايمان அவர்களுடைய இருதயத்தில், அல்லாஹ் ஈமானை எழுதினானே! அந்தக் கூட்டத்தினர்) இந்த சுற்றாகிறது நப்சானிய்யா என்னும் ஊசாட்டம் என்பது கொண்டு சொல்லப்படக் கூடிய நப்சானிய்யத்தான உலகைக் கொண்டு கொழுகினதாகும்.

3.கல்பின் சுற்றுகளில் மூன்றாவதாகிறது:

மஹப்பத்தின் சுற்றாகும். அதற்கு வெளிரங்கமும் உள்ரங்கமும் உண்டு. அதன் வெளிரங்கமானது சுவர்க்கத்தின் மஹப்பத்தைக் கொண்டு கொழுகினதாகும். அதன் உள்ரங்கமாகிறது சுவர்க்கத்தின் றப்பின் மஹப்பத்தைக் கொண்டு கொழுகினதாகும். இந்தச் சுற்றின் கொழுகுதல் ஆகிறது கல்பின் உலகமாகும். (عالم القلب)கல்புடைய ஊசாட்டம் என்பது கல்புடைய ஆலத்தைக் கொண்டு கொழுகினதாகும். ஏனெனில் மஹப்பத்தை உண்டாக்குவது கல்பு என்றதினாலாகும்.

4.கல்பின் சுற்றுகளில் இருந்து நாலாவதாகிறது:

தாத்தையும் ஜமாலிய்யத்து ஜலாலிய்யத்து எனும் சிபத்துக்களையும் அதன் குணபாடுகளையும் காட்சியாக காணும் இடமாகும். அதன் கொழுகுதல் ஆகிறது ஆலமுர் றூஹானிய்யா ஆகும். ஆலமுல் றூஹானிய்யா ஆகிறது அது தெண்டிப்பு, சிந்தனை, கஷ்டம் போன்றவைகள் இல்லாமல் மஃரிபாவை பெற்றுக் கொண்டதற்காக ஆலமுல் றூஹானிய்யா என்று சொல்லப்படும். எதுவரையில் பெற்றுக் கொண்டான் என்றால் மஃரிபா எனும் ஒளி அவனது உள்ளும் வெளியும் சூழ்ந்து கொள்ளும் வரை. ஆகவே அவன் ஹக்கின் தாத்தையும் சிபாத்தையும் அல்லாது காணமாட்டான்.

5.கல்பின் சுற்றுகளில் இருந்தும் ஐந்தாவதாகிறது:

இரகசிய உலகோடு கொழுவினதாகும். இரகசிய உலகம் என்பது வெளியாகிறவனையும், வெளியாகிறதையும் மேலான ஒருவனான தாத்தை அன்றி வேறொன்றையும் காண மாட்டானே அந்த உலகமாகும். அவன் எல்லாவற்றையும் விட்டும் மறைந்து விடுகிறான். அவனுடைய நப்ஸை விட்டும் முற்றிலும் மறைந்து விடுகிறான். அவன் கூறப்பட்ட ஒரு வஸ்த்துவாக ஆகவில்லை என்று ஆகும் வரையில் முற்றிலும் மறைந்து விடுகிறான். இதுதான் ஹல்லாஜின் (ரஹிமஹுல்லாஹ்) மகாமாகும். இவர் அவரின் மஸ்த்தில் 'அனல் ஹக்கு' என்று சொன்னார். இந்த பனாவை அல்லாஹ்வின் சிர்ரை கொண்டே ஒழிய முற்றிலும் அனுபவிக்க மாட்டார்கள்.

6.கல்பின் சுற்றுகளில் நின்றும் ஆறாவதாகிறது:

இலாஹிய்யத்தான நாமங்களை அறிவதாகும். இதுவாகிறது அல்லாஹ்வுடைய குணங்களைக் கொண்டு குணம் பெறுதல் எனும் மர்த்தபாவாகும். அதாவது என்னைக் கொண்டே பார்ப்பான், என்னைக் கொண்டே கேட்பான் என்ற மர்த்தபாவாகும். அதனுடைய கொழுகுதல் ஆலமுன்னூர் ஆகும். புதுமை நீங்கி பழமை என்னும் சிபாத்து அழியும் ஆலமாகும். இந்த மர்த்தபாவில் இருந்துதான் சொல்லுகிறவர் சொல்லுவார்‚ (قم بادني)என் உத்தரவைக் கொண்டு எழும்பு' என்று சொல்லுவார். எவனந் ஒருவன் அல்லாஹ்வுடைய சிபத்துக்களைக் கொண்டு பரிசு பெறுவானேயானால் அவன் தனித்த ஒளியைத் தவிர வேறில்லை.

7.கல்பின் சுற்றுகளில் நின்றும் ஏழாவதாகிறது:

பக்று ஆகும். அவன் தாத்தின் தஜல்லியை சுமந்தவனாவான். பக்ரு பரிபூரணமானால் அல்லாஹ் அல்லாத்தது ஒன்றும் பாக்கியில்லை என்றாகும். இந்த சுற்றின் கொழுகாகிறது தாத்தாகும். அவனுடைய எல்லா இறக்கங்கள் எனும் மர்த்தபாக்களுடனான தாத்தாகும். இந்த வண்ணமான மர்த்தபாவின் பேரில் ஸாலிக் ஜெயம் பெற்றால் ஹகீகத்துல் இன்ஸானிய்யாவுடன் இணைந்து விடுகிறான். இந்த ஹகீகத்துல் இன்ஸானிய்யாவுடன் சேர்ப்பது கொண்டு உஜூபு இம்கான் என்பவை இரண்டும் சரிசமமாக ஆகியிருந்தது. இது போன்று இந்த மர்த்தபாவுடையவனிடத்தில் ஹக்கும் ஹல்கும் சரிசமமானதாகும். அதாவது ஹக்கை காட்சி காண்பவனுக்கு கல்கை காட்சி காண்பது திரையாக ஆகாது. கல்கை காட்சி காண்பது ஹக்கை காட்சி காண்பதற்கு திரையாக மாட்டாது. ஹகீகத்துல் இன்சானிய்யாவாகிறது, அது ஹகீகத்துல் முஹம்மதிய்யா வெளியாகும் இடமாகும்.

அப்போது கல்புக்கு ஐந்து ஹளராத்துக்களின் எதிர் முகத்தில் ஐந்து முகங்கள் உள்ளன.

அந்த முகங்களில் நின்றும் ஒருமுகம் ஆகிறது ஆலமுல் மிதாலுக்கு எதிர் முகமாகும். மிதாலுடைய உலகத்தின் உதவியைக் கொண்டு அந்த கல்புடைய முகம் ‚பைளுகள்' எடுக்கிறது. சில இஸ்முகளில் இருந்து அதாவது சடத்துக்கு தொடர்புபட்ட தரிபாடான அஸ்மாக்களில் இருந்து பைளுகள் எடுக்கிறது.

அதிலிருந்து ஒரு முகமாகிறது ஆலமுஷ் ஷஹாதத்தை எதிர் நோக்குகிறது. ஏனெனில் காலபில் அதிகாரம் நடத்துவதற்கும் பைளுகளைச் சேர்ப்பதற்கும் அதனுடைய ஏற்புத் தன்மையின் நிலையை அனுசரித்து இவ்வாறான பைளுகளை சேர்க்கிறது.

அதில் நின்றும் ஒரு முகமாகிறது அர்வாஹுடைய ஆலத்தை எதிர்நோக்குகிறது. ஏனெனில் ரூஹுடைய உதவியைக் கொண்டு அது இலாஹிய்யான அஸ்மாக்களில் இருந்து பைளுகளை எடுக்கிறது.

அதில் நின்றும் ஒரு முகமாகிறது தெய்வீகத் தன்மை எனும் ஹழறத்தை எதிர் நோக்குகிறது. ஏனெனில் ரூஹுடைய உதவியைக் கொண்டு தெய்வீகத் தன்மையின் பைளை எடுப்பதற்காக.

அதில் நின்றும் ஒரு முகமாகிறது தாத்தின் வஹ்தத்தை முன்நோக்குகிறது. ஏனெனில் அதில் வெளியாவதும், உள்ளாவதும் சரிசமமான வஹ்தத்து தாத்தை முன்னோக்குகிறது.

கவனிக்க: நிச்சயமாக அல்லாஹ் ஆகிறவன் உன்னுடைய இரண்டு உண்டாக்குதலையும் உண்டாக்கின பிறகு (அதாவது காலபையும், ரூஹையும்) அவை இரண்டுக்கும் இடையில் உதவி கொண்டு சேர்த்து வைத்த போது அவை இரண்டுக்குமிடையில் கல்யாணம் உண்டாகி விட்டது. அப்போது அவை இரண்டில் நின்றும்‚'நீ' பிறந்துண்டானாய். அப்போது ‚ 'நீ' என்பது அந்த அன்னியத்தில் இருந்து, 'நான்' என்று உணரக் கூடிய எட்டுதலேயன்றி வேறில்லை.

உன் நப்ஸைத் தொட்டும் நீ 'அன' (நான்) என்று சொல்வதெல்லாம் அது இவை இரண்டும் இணைந்த தன்மையில் இருந்து உண்டானதினாலாகும். அப்போ 'நீ' என்பது  வெறும் அறிந்துக் கொள்ளுதலேயன்றி வேறில்லை. துன்யாவில் நிலைத்திருக்கும் போதெல்லாம் அந்த இரண்டு உண்டாகுதலின் இணைப்பின் கைபிய்யத்தே‚ 'நீ' என்பதாகும். உன்னுடைய இரண்டு உண்டாகுதலும் பிரிந்து விட்டால் –  குறிக்கப்பட்ட உன்னுடைய தவணை முடிந்த பின் பிரிந்து விட்டால் – உன்னுடைய முதல் உண்டாகுதல் (காலபு) அதை ஒருங்கிணைந்த இணைப்பு உருக்குலைந்ததன் பிறகு அந்த காலபாகிறது அதன் அசலுக்குத் திரும்பி விடும்.

அதன் மற்ற உண்டாகுதல் (ரூஹு) ஆகிறது அது எக்காலமும் அழியாது. அது எப்போதும் நிலைத்திருக்கும். அப்போது நீ உன்னை அறிந்து கொள்வது முதல் உண்டாகுதல் (உடல்)அழிந்ததன் பிறகு, தனித்ததாக மற்ற ரூஹிய்யான உண்டாகுதலைக் கொண்டு கொழுகினதாகும். உன்னுடைய நான் என்பது அல்லாஹ்வின் அன்னியத்தில் அழியாமல் இருந்தால்தான் இந்த ரூஹோடு மட்டும் தொடர்புபட்டதாக இருக்கும்.

நீ பனாவை எட்டியவனாக இருந்தால் இந்த இரண்டு உண்டாகுதலும் உண்டாவதற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே இருப்பாய்.

இன்சான் என்பவன் உலூஹிய்யத்தின் கோலத்தில் கடைசியாக வெளியானான். கெனுளடைய பகுதிகளில் இருந்து ஒவ்வொரு பகுதிகளின் பேரிலும் வெளியானதன் பிறகு, தெய்வீகத்தின் கமாலாத்துகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்ட ஒரு ஷஃனைக் கொண்டு இந்த இன்ஸான் வெளியானான். அது தெய்வீகத் தன்மை என்னும் கோலமாகும்.

ஆதார நூல்கள்:

1.    நூருல் இர்பான்-ஞானப்பிரகாசம்
2.    அஸ்ராருல் ஆலம்-மெய்ஞானப் பேரமுதம்
3.    கீமியாயே ஸஆதத்து
4.    அல் ஹகீகா
5.    பைஜுல் ஹபீப்.
6.    மஙானீ.

ஷெய்குனா ஷாஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்-Shah Wali’s Last Cermon

சகோதரனே! உமக்கு நான் வஸிய்யத் செய்கிறேன். தினமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக் கோலத்தை மனக் கண்ணில் உருவகப்படுத்திக்கொண்டே இரு.

இவ்வாறு உருவகப்படுத்துவதால் சில சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தாலும் சரி உமது ஆன்மா றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் மிக விரைவில் உமது றூஹுடன் இணைந்து விடும். பின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் உன்முன்னால் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் பார்ப்பீர்கள். அவர்களுடன் உரையாடவும் செய்வீர்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உமக்கு விடை கொடுப்பார்கள்.

ஆதாரம்: அல்மதாரிஜுந்நுபுவ்வத் பாகம் 2 பக்ம் 789.

நன்றி: வஸீலா 15-11-87  –  1-12-87

Zikhir Adab- திக்ரு செய்யும்போது பேண வேண்டியவைகள்.

Zikir Adab 

By: Moulana Assheikh Assah Sheikh Abdul Qadir Sufi Hazrath Kahiri Kadasallahu Sirrahul Azeez.

திக்ரு செய்வதற்குரிய அதபுகள் (ஒழுக்கங்கள்).

 

அறிந்து கொள்! திக்ருடைய மஜ்லிஸாகிறது, அல்லாஹு தஆலாவுடைய மஜ்லிஸும் மலாயிக்கத்துகள், நபிமார்கள், அவ்லியாக்களுடைய மஜ்லிஸுமாகயிருக்கும்.

ஆகையினால் அவர்களுக்கு முன்னால் எப்படி இருக்க வேண்டுமென்பதை மனதில் கவனித்து அச்சத்தோடு ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒழுக்கங்கெட்டவனை சமூகத்தைவிட்டும் மிருகங்கட்டுமிடத்திற்கு துரத்தப்படும்.

ஹதீது ஷரீபில் வந்திருக்கிறது:- மூன்று விஷயம் அல்லாஹுத்தஆலாவினுடைய சமூகத்தில் ஒரு கொசுவின் இறகுக்கும் சரியாகாது.

ஒன்றாவது:- உள்ளச்சம் இல்லாத தொழுகை.

இரண்டாவது:- மறதியோடு செய்கிற திக்ரு. ஏனென்றால் அல்லாஹுத்தஆலா மறந்த இருதயத்தில் நின்றும் துஆவையும், திக்றையும் ஒப்புக் கொள்ளமாட்டான்.

மூன்றாவது:- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரியாதையில்லாது அவர்கள் பேரில் ஸலவாத்து சொல்வதுமாக இருக்கும்.

ஆகையினால் கல்பு ஹுழுறுடனும் உள்ளச்சத்துடனும் ஒழுக்கமாகவும் திக்ரு செய்ய வேண்டும். திக்ரு செய்ய முன்னால் தவ்பா செய்ய வேண்டும்.

தவ்பாவுக்கு மூன்று ஷர்த்துகள் உண்டு.

ஒன்றாவது:- சென்ற பாவத்தின்பேரில் கவலைப்படுகிறது.

இரண்டாவது:- தற்போது பாவம் செய்யாதிருப்பது.

மூன்றாவது:- இனி ஒரு போதும் இது போன்று பாவத்தை செய்ய மாட்டேன் என்று நல்லெண்ணம் வைக்கிறது.

ஒருவர் சொல்கிறார்:-

தவ்பாவாகிறது, சென்ற பாவத்தின் பேரில் கவலைபடுவது ஒன்றேதான். ஆகிலும் கவலை உண்மையானதாக இருக்குமேயானால் மற்ற இரண்டு ஷர்த்துகளும் தன்னாலே உண்டாகிவிடும்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவுளமாயிருக்கிறார்கள்,

أندم ثوبة "அன்னதமு தவ்பதுன்- செய்த பாவத்தைப் பற்றி கவலைப்படுவதாகிறது- தவ்பாவாகயிருக்கும்."

ஆகையினால் திக்ரு செய்கிறவர்கள் செய்த பாவத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

ராத்திபு செய்கிற இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அத்தர், சந்தனம், பூக்களை முன்னாடியே மஜ்லிஸிலுள்ளவர்களுக்கு பூசியும், சாம்புராணி ஊதுபத்தி போன்ற வாசனை புகைகளை கொண்டு இடத்தை வாசமாக்கி கொண்டு பின் சாம்புராணி சட்டி மற்றதுகளை 'ஹல்கா'வை விட்டும் அப்புறப்படுத்திவிட வேண்டும்.

ராத்திபு செய்கிறவர்கள் ஹலாலான துப்புரவான உடை கொண்டும் உளு செய்வது கொண்டும் உடலை அழகாக்கியும் ஹலாலான உணவை அதிலும் குறைந்த அளவை அருந்துவது கொண்டு வயிற்றை துப்புரவாக்கியும் (கல்பு ஹுழுராகிறதை போக்கக் கூடிய பசியில்லாது போனால் ஆகாரம் புசிக்காதிருப்பதுவே நல்லது.)

அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்வது கொண்டு அவனுடைய மஹப்பத்தையும், பொருத்தத்தையுமே அல்லாது எப்பொருளையும் அவனிடம் ஆதரவு வைப்பதையும் அவை மனதில் ஊசாடுவதையும் விட்டு மனதை தூய்மையாக்கியும் அதபாக உட்கார்ந்து தொடையில் கையை வைத்து கண்ணைப் பொத்திக் கொண்டு, தனக்கு முன்னால் ஷெய்கு அவர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்கள் கிட்டவே இருக்கிறோம் என்று நினைத்து அவர்கள் சூரத்தை மஹப்பத்தோடு ஞாபகப்படுத்திக் கொண்டு, நமக்கு எல்லா உதவியும் நமது ஷெய்கு அவர்களைக் கொண்டுதான் கிடைக்கிறது. அவர்களுக்கு அவர்கள் ஷெய்கைக் கொண்டும் கடைசியாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை கொண்டும்தான் எல்லா உதவியும் கிடைப்பதாக முழு மனதோடு நம்பிக்கை வெத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஷெய்குபேரில் மஹப்பத்தை அதிகப்படுத்துவதும், அவர் முன்னாலேயே இருக்கிறோமென்று அவர் சூரத்தை ஞாபகப்படுத்தி அதபாக இருப்பதுவும் மிக முக்கியமானதாகும்.

நகீப்(திக்ரை நடத்துபவர்) அவர்கள் 'நக்ரவுல் பாத்திஹா' என்று ஒதம் போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மற்றும் எல்லா ஷெய்குமார்களும் மஜ்லிஸிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய பேர்களையும் சொல்லி அவர்களுக்கெல்லாம் காத்திஹா ஓதுகிறோம் என்று சொல்கிறார் என்றும் மனதில் நினைக்க வேண்டும். .

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஷெய்குமர்களும் நமக்கு முன்னாலேயே இருப்பதினால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் வொல்லும் போது '(ஸலவாத்து) அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்' என்பதையும், ஷெய்குமார்கள் பெயர் சொல்லும் போது'(தறழ்ழி)' ரலியல்லாஹு அன்ஹு என்பதையும் சப்தமிட்டு சொல்லாமல் வாய்க்குள்ளேயே சொல்லிக் கொள்ள வேண்டும்.

நகீப் அவர்கள் 'இலாஹீ பிஹுர்மாத்தி ஸிர்ரில் மஹப்பத்தி' என்று ஓதும்போது ஷெய்குமார்கள் ஒவ்வொருவர்கள் பெயரையும் குறிப்பிட்டு அல்லாஹுத்தஆலா இடத்தில் வஸீலா தேடி பாவங்களை பொருத்து கல்புக்கரளை நீங்கி ஷெய்குமார்களின் கல்புகளில் உதிக்கும் கடாட்சத்தைக் கொண்டு நம் கல்பை பரிணமிக்கச் செய்து நம்மை அவனின் சொந்த அடியார்களான நாதாக்களின் கூட்டத்தில் சேர்க்கும்படி கெஞ்சுவதாக நினைத்து, பாவம் செய்த அடிமை எஜமான் முன்னிலையில் பாவமன்னிப்புக்காக மன்றாடுவது போல் மன உருக்கத்தோடும் கவலையோடும் இருக்க வேண்டும்.

நகீப் அவர்கள் 'அல்மதத்,அல்மதத் என்று ஓதும்போது ஷெய்குமார்களிடத்தில் எங்களுக்கு உதவியாக இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும். எங்களை கைவிட்டு விடாதீர்கள் என்று கெஞ்சுவதாகவும் நினைக்க வேண்டும்.

பின்பு கொஞ்சநேரம் மனதையே நோட்டமிட்டுக் கொண்டிருந்து நகீப் அவர்கள் திக்ரை ஆரம்பிக்கிற போது அவர் சொல்வது போல், அவர் நீட்டி சொன்னால் நீட்டியும், துரிதமாக சொன்னால் துரிதமாகவும், எல்லாவர்களும் ஒற்றுமையாகவும் சப்தமிட்டு (முழு ஹிம்மத்தோடு) இனியும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லமுடியாதென்ற விதமாக முழு சக்தியோடும் எல்லாவர்களும் ஒரே தொனிவோடும் திக்ரின் கருத்தை மனதில் கவனித்துக் கொண்டும் சொல்ல வேண்டும்.

திக்ரு செய்யும்போது கல்பே திக்ரு செய்வது போலும் தான் அதைக் கேட்டு நாவால் மொழிவது போலும் கருதி கல்பின் பக்கம் காது தாழ்த்தி கேட்டுக் கொண்டும் திக்ரின் பொருளைக் கவனித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.

மேலும், அல்லாஹுத்தஆலாவின் பேரில் மஹப்பத்தும், ஆசையும் உண்டாகி அதிலேயே மூழ்கி தன் உணர்வுஅற்று மயக்கம் உண்டாகும் வரையிலும் திக்ரை நிறுத்தக் கூடாது.

பின்பு திக்ரை முடித்துவிட்டால் வாய்பொத்தி ஒடுங்கி திக்ரை கல்பில் நடத்தாட்டிக் கொண்டு திக்ரின் ஞாபகத்திலேயே(முறாக்கபா) வாரிதாத்து தஜல்லியாத்துகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். ஏனென்றால் முப்பது வருஷத் தெண்டிப்பினாலும் உண்டாகாத (மஹப்பத்து)-ஆசை, (ஸுஹ்து)-உலக வெறுப்பு, (வரஃ)பேணுதல், (தஹ்ம்முல்)சகிப்பு, (ரிழா) அல்லாஹ்வின் கற்பனையில் திருப்தி இது போன்ற வாரிதுகளில் ஒன்று, அல்லது மறைவான உலகத்தின் ஒளி தோற்றமென்ற தஜல்லியாத்துகளில் ஒன்று ஒரு கணத்தில் இவனை வந்து கவர்ந்துக் கொள்ளவும் கூடும்.

ஆகையினால் வாய்பொத்தி ஒடுங்கி மூச்சை பல முறையும் அடக்கி விட்டுக் கொண்டே திக்ரின் கருத்திலேயே இருப்பானேயானால் (வாரிது) அல்லாஹ்வின் அருள் இவனை எல்லா ஆலம்களிலும் கொண்டு சுற்றும். ஆகையினால் கொஞ்சம் தாமதிப்பது அவசியமாகும்.

திக்ரு செய்யும்போதும், திக்ரு முடித்த பின்பும் தண்ணீர் குடிக்காதிருப்பது திக்ரின் அதபுகளில் முக்கியமானதாயிருக்கும்.

ஏனென்றால் திக்ரானது, கல்பில் உஷ்ணத்தை உண்டாக்கும்.

அதனால் கல்பில் பிரகாசமும், தஜல்லியாத்தும், வாரிதாத்தும் வரும். தண்ணீர் கடிப்பதினால் கல்பின் உஷ்ணம் தூர்ந்து போகும். ஆகையினால் குறைந்தது அரைமணி நேரமாகிலும் சென்றபின் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு நேரம் அதிகம் சென்றாலும் நல்லதுதான். தண்ணீர் தேவைப்பட்டவர்கள் திக்ரு ஆரம்பிக்க முன்னாடி குடித்துக் கொள்ளலாம்.

'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று திக்ரு செய்யும்போது எல்லாவர்களும் ஒன்றுபோல் 'லா' என்று ஆரம்பித்து ஒன்றுபோல் 'இலாஹ' என்று சொல்லி ஒன்றுபோல் இல்லல்லாஹ் என்றும் அதலுள்ள 'ஹ்' க்கு ஸுகூன் கொண்டும் சொல்லி மூச்சை விடவேண்டும்.

'லாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று இரண்டு விடுத்தம் சொல்லும்போது முந்திய 'இல்லல்லாஹு'வில் 'ஹு'க்கு பேஷ் கொண்டும் இரண்டாவது'இல்லல்லாஹு'வில் 'ஹ்' க்கு ஸுகூன் கொண்டும் சொல்லவேண்டும்.

முதலாவது (லாயிலாஹ)விலோ அல்லது இரண்டாவது (லாயிலாஹ)விலே நிறுத்தியும் (இல்லல்லாஹ்)வை ரெம்ப அழுத்தமாக்கி இரண்டு கலிமாவையும் பிரித்தும், அல்லது ஒருவர் 'லாயிலாஹ' என்றும் மற்றொருவர் 'இல்லல்லாஹ' என்றும் சொல்லக் கூடாது.

மேலும் 'லாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று துரிதமாக சொல்லிக் கொண்டே போகி கடைசி 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று ஒரே விடுத்தமாக சொல்வதுபோல் ஆகவேண்டும்.

'இல்லல்லாஹ்' என்றும், 'அல்லாஹ்' என்றும் திக்ரு செய்யும் போது (ஹ்)க்கு ஸுக்குன் கொண்டும் (ஹ்) விளங்கும்படியாகவும் சொல்ல வேண்டும்.

இ-ல்-ல-ல்-லா-ஹு என்றும், அ-ல்-லா-ஹு என்றும் எழுத்துக்களை பிரித்து சொல்லாமல் இல்லல்லாஹ்,அல்லாஹ் என்று சேர்ந்தாற் போல் சொல்லவேண்டும்.

லாயிலாஹ இல்லல்லாஹு என்று திக்ரு செய்யும்போது (லா) என்று கல்பிலிருந்து ஆரம்பித்து கீழே இடலு மட்டுக்கால் வரையிலும் வந்து வலது முட்டுக்காலுக்கு திரும்பி அதிலிருந்து மேலே தலை உச்சிவரை வந்து (இலாஹ) என்று சொல்லி அதிலிருந்து (இல்லல்லாஹ்) என்று முழு சக்தியோடு கல்பில் தாக்க வேண்டும்.

(லா) என்பதை ஒரு கூறான முனையான கத்தி என்றும் அதை கல்பில் குத்தி அதிலிருந்து கீழே இடது முட்டுக்கால் வரையும், பின் வலது முட்டுக்காலிலிருந்து மேலே தலை உச்சி வரையும் கிழித்தெறிவதாக நினைக்க வேண்டும்.

அறிந்துகொள்! கிழிப்பதாகிறது நம்முடைய திரேகத்தை அல்ல. எங்கிலும் நம்முடைய (அன்னியத்) அதாவது நாம் ஒரு தனிபொருள் என்று உணரும் எண்ணத்தையேயாகும்.

மேலும் மனிதன் முழு உலகத்திலிருந்தும் அதி நுட்பமான ஒவ்வொரு பாகத்தைக் கொண்டு சேர்க்கப்பட்டவனாக இருப்பதினால் நம்முடைய(அன்னியத்)திலிருந்து ஒவ்வொரு பாகம் அறுபடும்போதும் முழு உலகத்திலிருந்தும் ஒவ்வொரு பாகமும் அறுபட்டுக்கொண்டே போகுதென்றும், நம்முடைய(அன்னியத்)அறுபட்டு கீழே வீழ்ந்து மடியும்போது முழு உலகமும் அவைகள் தான்தானாகவே நிற்கக் கூடியதும், ஹக்குத் தஆலாவிற்கு வேறான தனிப்பொருள் என்று உணரும் (ஙைரியத்) பூராவும் அறுபட்டு வீழ்ந்து மடிவதாகவும் உறுதியாக நினைக்க வேண்டும்.

(இல்லல்லாஹ்) என்று கல்பில் தாக்கும்போது ஹக்குதஆலாவின் உஜூது ஒன்றுதான் ஜோதியாக நிலைத்திருக்கிறது என்றும் உறுதிக் கொள்ள வேண்டும். எழும்பி நின்று (தாயிம் அல்லாஹ்) என்று திக்ரு செய்யும்போது தாயீம் என்று யேயை நீட்டாமல் (தாயிம்) என்றும் தலையை குனிந்தும் அல்லாஹ் என்று தலையை உயர்த்தியும் அல்லாஹ்விலுள்ள (ஹ்)வுக்கு ஸுகூன் வைத்தும் சொல்லி மூச்சை விடவேண்டும்.

(தாயிம் அல்லாஹ் ஹைய்) என்று திக்ரு செய்யும்போது (ஹைய்) எனும்போது திரும்பவும்தலை குனிந்தும் சொல்லி அதில் மூச்சை விடவேண்டும்.

தாயிம் அல்லாஹ் என்றும் தாயிம் அல்லாஹ் ஹைய் என்றும் சொல்லும்போது சதோகயமாக எப்பொழுதுமிருக்கிறவன் அல்லாஹ் ஒருவனே. அவனே உயிருள்ளவன், மற்றவை அனைத்தும் செத்து மடிந்து அழிந்து விட்டது.

 

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ – كُلُّ شَيْئٍ هَالِكٌ اِلَّا وَجْهَهُ

உலகிலுள்ளவை அனைத்தும் அன்றும் இன்றும் என்றும் இறந்தவைகள் எல்லாப்பொருளும் முக்காலமும் இல்லாமலானது,அழிந்தது. எங்கிலும் அல்லாஹுத்தஆலா ஒருவனின் பரிசுத்த தாத்து ஒன்றுதான் நிலையானது என்றும் உறுதிகொள்ள வேண்டும்.

இதுபோலவே மற்றயெல்லா திக்ருகளிலும் அவர் சொல்வது போலவே சொல்ல வேண்டும். ஜத்பானவர்கள் தன் நினைப்பில்லாது சொல்வதை அனுசரித்து அவர்களைப்போல் மற்றவர்களும் சொல்லக் கூடாது.

இப்போது சொல்லப்பட்ட அதபுகள் எல்லாம் சுயத்தோடு இருக்கிறவர்களுக்குத்தான். ஆனால் சுயமிழந்த ஜத்புடையவர்களோ அவர்களுக்கு உண்டாகும் (லம் ஆத்) வெளிச்சம், (தஜல்லி) பிரகாசம்(தவ்க்) அனுபோகத்துக்கு தக்கவாறு அவர்கள் நாவிலிருந்து (அல்லாஹ்-அல்லாஹ்)- ஹூ – ஹூ அல்லது (ஆ ஆ) அல்லது (ஆஹ் ஆஹ்) அல்லது (பீ பீ) அல்லது அச்சரமில்லாத சப்தம் அல்லது அழுகை அல்லது கைகாலை அடிப்பது, உருளுவது இது போன்றதுகள் உண்டாகும்.

அப்போது அவர்களுக்கு அதபாகிறது: அது என்னது? என்று சிந்திக்காமலும், வேண்டுமென்றும் செய்யாமலும் வாரிதாத்து செய்வது போல் செய்யவிட்டு கொடுத்துவிட வேண்டும்.

வாரிதாத்து செய்யும் வேலையை செய்து முடிந்து தனக்கு ஞாபகம் வந்தபின் மேலும் வாரிதாத்து வருவதை எதிர்பர்த்துக் கொண்டும் ஒடுங்கியிருக்க வேண்டும்.

வாரிதாத்தினால் பரவசமுண்டாகும் போது அது நம்மை என்னென்ன செய்யுமோ, நம் வாயிலிருந்தும,; உறுப்புகளிலிருந்தும் என்னென்ன சொற்செயல்கள் உண்டாகுமோவென்றும் அஞ்சி ஆரம்பத்தில் கொஞ்சம் ஞாபகமிருக்கும்போது அதை நிறுத்தக் கூடாது.

வாரிதாத்தின் போக்குபோல் விட்டுவிட வேண்டும். ஏனென்றால் ஒரு வீடுத்தம் கொஞ்சம்(ஜத்பு) ஹக்கின் ரஹ்மத் அடியானின் கல்பை பிடித்து அவன் பக்கம் இழுப்பதானது கல்பை விட்டும் எவ்வளவோ கறல்களை நீக்கி விடுகிறது.

நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருவுளமாயிருக்கிறார்கள்:-

ரஹ்மானுடைய கிருபையின் இழுப்புகளில் ஒரு லேசான இழுப்பாகிறது (மனு ஜின்னு ஆகிய) இரு கூட்டத்தார்களின் இபாதத்தைப் பார்க்கிலும் விஷேசமாக இருக்கும்.

ஆனால் ஜத்பானவர்கள் தங்களுக்கு ஜத்பு நீங்கி நல்ல சுயம் வந்தபின் அவர்கள் சுயமாகவும் ஞாபகத்தோடும் ஏற்கன சுயமில்லாத போது ஏற்பட்ட சொற்செயலை சொல்லாதும் செய்யாதும் மற்றவர்கள் சொல்வது போல் திக்ரு செய்தும் திக்ரின் கருத்திலேயே கவனத்தை செலுத்திக் கொண்டும், திரும்பவும் ஜத்பு வருவதை எதிர்ப்பார்த்து கொண்டுமிருக்க வேண்டும்.

மேலும் குறிப்பிட்டபடி திக்ருகள் முழுவதையும் செய்ய வசதியில்லாத போது லாயிலாஹ இல்லல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ், இல்லல்லாஹ், அல்லாஹ் என்ற நான்கு திக்ருகளையும், அதற்கும் வசதியில்லாதபோது அல்லாஹ் எனும் திக்ரு ஒன்றையாவது செய்துக் கொள்ளலாம்.

 

Meditation-திக்ரின் சிறப்புகள்

அல்லா ஹ்வை நினைவு கூறுதல்- திக்ரு செய்தல். 

 In Tamil:-  Moulana Assheikh   As sah Sheikh Abdul Qadir Sufi Hazrath Kahiri   Kadasallahu Sirrahul Azeez.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ.

اَلْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ ، وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ ، وَاصَّلاَةُ وَاسَّلاَمُ عَلٰى اَشْرَفِ الْمُرْسَلِيْنَ، سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهِ وَصَحْبِه اَجْمَعِيْنَ ،

அறிந்து கொள்! திக்ராகிறது ரஹ்மானை பொருத்தமாக்கும். ஷைத்தானை வருத்தமாக்கும். மேலும் ஷைத்தானுடைய கோட்டைகளை உடைத்து, அவனுடைய பட்டாளங்களை முறியடித்து விரட்டி விடும்.

  மனக் கவலையை போக்கி சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். உடலையும் மனதையும் உறுதியாக்கும். அகத்தையும் முகத்தையும் பிரகாசமாக்கும்.

  திக்ரு செய்கிறவனை கண்டவர்கள் அஞ்சக்கூடிய வித்தில் அவன் முகத்தில் கம்பீரத் தோற்றத்தை கொடுக்கும். இரணத்தை அதிகப்படுத்தும்.

  திக்ரு செய்கிறவனோடு மறுகுதலாக இருப்பவன் சீதேவியாவான். அவன்கூட இருப்பவன் மூதேவியாகான்.

   அழுகையோடும், சஞ்சலத்தோடும் திக்ரு செய்வதாகிறது, கியாமத்து நாளில் அர்ஷுடைய நிழலில் உட்காரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள காரணமாகும்.

திக்ராகிறது அதில் ஈடுபட்டவனுக்கு விலாயத் கிடைக்கும் என்பதற்கு அடையாளமாகும்.
 

ஆகவே எவனுக்கு திக்ரை கொடுக்கப்பட்டதோ அவன் விலாயத்தின் பதவிக்கு தகுதியானவனென்று அவனுக்கு அருகதை சீட்டை கொடுக்கப்பட்டு விட்டது.

எவனைவிட்டும திக்ரை உரியப்பட்டதோ அவனை விலாயத்தின் பதவியை விட்டும் நீக்கப்பட்டு விட்டது.

திக்ருடைய மஜ்லிஸாகிறது அவர்களில் சாந்தம் நிலவும்.அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹுத் தஆலாவின் கிருபை அவர்களை பொதியும். அல்லாஹீதஆலா அவர்களை அர்ஷிலே திக்ரு செய்வான்.

திக்ரின் வரிசையை பற்றி குர்ஆன், ஹதீதுகளில் மட்டிலடங்கா அனேக ஆதாரங்கள் வந்திருக்கின்றன. சிலதை எழுதுகிறேன்:-

 

يَآ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اذْكُرُوا اللهَ ذِكْرًا كَثِرًا وَسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹுத்தஆலாவை மீகுதமாக திக்ரு செய்யுங்கள். காலையும், மாலையும் அவனை துதி செய்யுங்கள்.

 

وَالذّٰاكِرِيْنَ اللهَ كَثِيْرًا وَالذَّاكِرَاتِ اَعَدَّاللهُ لَهُمْ مَغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا

அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்யும் ஆண்களும், மிகுதமாக திக்ரு செய்யும் பெண்களும் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு வலுப்பமான கூலியையும், பாவமன்னிப்பையும் தங்கரியம் செய்து வைத்திருக்கிறான்.

 

فَاذْكُرُوْنِيْ اَذْكُرُكُمْ

 என்னை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நான் உங்களை திக்ரு செய்கிறேன்.

 

وَاذْكُرِاسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا

காலையும் மாலையும் உம்முடைய இரட்சகனுடைய நாமத்தை ஸ்தோத்திரம் செய்வீராக!

 

 

اِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلٰى حَلْقَةٍ مِنْ اَصْحَابِه فَقَالَ مَا اَجْلَسَكُمْ قَالُوْا جَلَسْنَا نَذْكُرُاللهَ وَنَحْمَدُهُ عَلٰى مَاهَدَانَا لِلْاِسْلَامِ وَمَنَّ عَلَيْنَا قَالَ اَللهِ مَااَجْلَسَكُمْ اِلَّا ذٰلِكَ قَالُوْا اللهِ مَااَجْلَسَنَا اِلّاَ ذٰلِكَ قَالَ اَمَا اَنِّيْ لَمْ اَسْتَحْلِفْكُمْ تَهْمَةً لَكُمْ وَلٰكِنَّهُ اَتَانِيْ جِبْرِيْلُ فَاَخْبَرَنِيْ اَنَّ اللهَ تَعَالٰى يُبَاهِيْ بِكُمُ الْمَلٰئِكَةَ اَخْرَجَهُ مُسْلِمٌ وَالتّرْمَذيْ .               

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒரு நாள் தங்கள் தோழர்களின் கூட்டத்திற்கு சென்று, 'நீங்கள் ஏன் கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். சஹாபாக்கள், அல்லாஹுத்தஆலா எங்களுக்கு பெரும் உபகாரம் செய்து எங்களை சுத்த சத்திய இஸ்லாம் மார்க்கத்தில் நேர்வழி காட்டியதற்காக அவனை நாங்கள் புகழ்ந்து திக்ரு செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (சஹாபாக்களை பார்த்து) அல்லாஹ்வின் ஆணை! நீங்கள் இதற்காகத்தானா கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். சஹாபாக்கள் அல்லாஹ்வின் ஆணை! நாங்கள் இதற்காகவேதான் கூடிக் கொண்டிருக்கிறோம். நபி அவர்கள் நான் உங்கள் பேரில் சந்தேகப்பட்டதற்காக சத்தியம் செய்து கேட்டதல்ல, எங்கிலும் அல்லாஹுதஆலா உங்களைக் கொண்டு மலக்குகளிடத்தில் பெருமை பேசுவதாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சொன்னார்கள்' என்றார்கள்.

 

عَنْ اَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعٰالٰى  عَنْهُ قَالَ قَالَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ لِلهِ مَلَائِكَةً يَطُزْفُوْنَ فِي الطُّرُقِ يَلْتَمِسُوْنَ اَهْلَ الذِّكْرِ فَاِذَا وَجَدُوْا قَوْمًا يَذْكُرُوْنَ اللهَ تُنَادُوْا هَلُمُّوْا اِلٰى حَاجَتِكُمْ فَيَحُفُّوْنَهُمْ بِاَجْنِحَتِهِمْ اِلٰى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ اَعْلَمُ بِهِمْ مَايَقُوْلُ عِبَادِيْ قَالَ يَقُوْلُوْنَ يُسَبِّحُوْنَكَ وَيُكَبِّرُوْنَكَ وَيُحَمِّدُوْنَكَ وَيُمَجِّدُوْنَكَ قَالَ فَيَقُوْلُ هَلْ رَأَوْنِيْ قَالَ فَيَقُوْلُوْنَ لاَوَاللهِ مَارَأَوْكَ قَالَ فَيَقُوْلُ كَيْفَ لَوْرَأَوْنِيْ قَالَ يَقُوْلُوْنَ لَوْرَأَوْكَ كَانُوْا اَشَدَّ لَكَ عِبَادَةً وَاَشَدَّلَكَ تَمْجِيْدًا وَاَكْرلَكَ تَسْبِيْحًا قَالَ فَيَقُوْلُ فَمَايَسْأَلُوْنَ قَالَ يَقُوْلُوْنَ يَسْاءلُوْنَكَ الْجَنَّةَ قَالَ فَيَقُوْلُ وَهَلْ رَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ وَاللهِ مَارَأَوْهَا يَارَبِّ قَالَ يَقُوْلُ فَكَيْفَ لَوْرَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ لَوْ اَنَّهُمْ رَأَوْهَا كَانُوْا اَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَاَشَدَّ لَهَا طَلَبًا وَاَعْظَمَ فِيْهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَذُوْنَ قَالَ يَقُوْلُوْنَ يَتَعَوَّذُوْنَ مِنَ النَّارِ قَالَ فَيَقُوْلُ وَهَلْ رَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ وَاللهِ مَارَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ فَكَيْفَ لَوْرَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ لَوْ لَوْرَأَوْهَا كَانُوْا اَشَدَّ مِنْهَا فِرَارً وَاَشَدَّلَهَا مَخَافَةً قَالَ فَيَقُوْلُ اُشْهِدُكُمْ اَنِّيْ قَدْغَفَرْتُ لَهُمْ قَالَ يَقُوْلُ مَلَكٌ مِنَ الْمَلَائِكَةِ فِيْهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ اِنَّمَا جَاءَلِحَاجَةٍ قَالَ هُمُ

அபுஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு ரிவாயத்து செய்கிறார்கள்:- நபி பெருமானார் அவர்கள் சொன்னார்கள், 'அல்லாஹுத் தஆலாவிற்கு சில மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வீதிகளில் சுற்றிக்கொண்டு திக்ரு செய்பவர்களை தேடிக் கொண்டிருப்பார்கள். திக்ரு செய்பவர்களை கண்டுவிட்டார்களானால், நீங்கள் தேடியது இதோ! இருக்கிறது விரைந்து வாருங்கள் என்று தங்களுக்கிடையில் கூப்பிடுவார்கள். எல்லாவர்களும் வந்து அவர்கள் இறகுகளை கொண்டு முதல் வானம் வரையிலும் திக்ரு செய்பவர்களை சூழ்ந்து கொள்வார்கள்.

அந்த மலக்குகளைப் பார்த்து அல்லாஹு தஆலா அவன் அறிந்தவனாக இருந்து அடியார்களை கொண்டு பெருமை பாராட்டி என் அடியார்கள் என்ன சொல்கிறார்கள்? என்று கேட்பான். மலக்குகள்(உன் அடியார்கள்) உன்னை துதி செய்கிறார்கள். பெருமைபடுத்துகிறார்கள், மகிமை படுத்துகிறார்கள், புகழ்கிறார்கள் என்று சொல்வார்கள்.

அல்லாஹு தஆலா:- அவர்கள் என்னைப் பார்த்தர்களா?

மலக்குகள்:- சத்தியமாக அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை.

அல்லாஹு தஆலா:- அவர்கள் என்னைப் பார்த்திருந்தாலோ?

மலக்குகள்:- அவர்கள் உன்னைப் பார்த்திருந்தார்களேயானால் உன்னை ரெம்பவும் வணங்குவார்கள், மிகுதமாக மகிமை படுத்துவார்கள், துதி செய்வார்கள்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் என்னிடம் எதைக் கேட்கிறார்கள்.?

மலக்குகள்:- அவர்கள் உன்னிடத்தில் சுவர்க்கத்தை கேட்கிறார்கள்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் அந்த சொர்க்கத்தை பார்த்திருக்கிறார்களா?

மலக்குகள்:- சத்தியமாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை இரட்சகா!

அல்லாஹு தஆலா:- அவர்கள் அதைப் பார்த்திருப்பார்களேயானால் எப்படி?

மலக்குகள்:-அவர்கள் அந்த சொர்க்கத்தைப் பார்த்திருந்தால் அன்னமும் ஆசையுடையவர்களாகவும், அதில் அதிக தேட்டமுடையவர்களாகவும் அதன் பேரில் வேட்கையுடையவர்களாகவும் இருப்பார்கள்.

அல்லாஹு தஆலா:- பின்பு அவர்கள் எதை விட்டும் காவல் தேடுகிறார்கள்?

மலக்குகள்:- அவர்கள் நரகத்தை விட்டும் காவல் தேடுகிறார்கள்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?

மலக்குகள்:-சத்தியமாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை.

அல்லாஹு தஆலா:-அவர்கள் அதைப் பார்த்திருந்தாலோ?

மலக்குகள்:-அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அதைவிட்டும் ரெம்ப பயப்படுவார்கள். ரெம்ப ஓடுவார்கள்.

அல்லாஹு தஆலா:-மலக்குகளே நான் உஙகளை சாட்சியாக்குகிறேன். நான் அவர்களுடைய பாவங்களையெல்லாம் பொருத்துவிட்டேன்.

மலக்கிலொருவர்:- பலானவன்(இன்னவன்)அந்த கூட்டத்தை சேர்ந்தவனல்ல. அவன் ஒரு தேவைக்காக வந்தவன்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் அவர்களோடு உட்கார்ந்தவனும் மூதேவியாகானே அப்படிப்பட்டவர்கள்.(ஆகையினால் அவனுக்கும் தான் பாவம் பொறுக்கப்பட்டது) என்று சொல்வான்.

 

عَنْ اَبِيْ سَعِيْدِاخُدْرِيْ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلّىَ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ اَيُّ الْعِبَادِ اَفْضَلُ وَاَرْفَعُ دَرَجَةً عِنْدَ اللهِ يَوْمَ الْقِيٰمَةِ قَالَ اَلذَّاكِرُوْنَ اللهَ كَثِيْرًا قِيْلَ يَارَسُوْلَ اللهِ وَمِنَ الْغَارِيْ فِيْ سَبِيْلِ اللهِ قَالَ لَوْضَرَبَ بِسَيْفِه حَتّٰى يَنْكَسِرَ وَيَتَخَضَّبَ دَمًا فَاِنَّ ذَاكِرَاللهِ اَفْضَلُ مِنْهُ دَرَجَةً اَخْرَجَهُ التِّرْمَذِيْ .

அபூஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து செய்யப்படுகிறது:

அடியர்களில் யார் ரெம்ப வருசையானவரும், கியாமத் நாளில் அல்லாஹுதஆலா இடத்தில் பதவியால் உயர்ந்தவர்? என்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.

அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்கிறவர்களென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

அல்லாஹுத்தஆலாவின் பாதையில் யுத்தம் செய்தவரை பார்க்கிலுமா? என்று கேட்கப்பட்டது.

வாள் முறிந்து ரத்தத்தால் தோய்மளவும்(அல்லாஹ்வின் பாதையில்) வெட்டினாலும் அவனை விடவும் அல்லாஹுவை திக்ரு செய்தவன் பதவியால் வருசையானவனென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

 

عَنْ اَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ قَالَ يَقُوْلُ اللهُ تَعَالٰى اَنَاعِنْدَظَنِّ عَبْدِيْ بِيْ وَاَنَامَعَهُ فَاِنْ ذَكَرَنِيْ فِيْ نَفْسِه ذَكَرْتُهُ فِيْ نَفْسِيْ وَاِنْ ذَكَرَنِيْ فِيْ مَلَأٍ ذَكَرْتُهُ فِيْ مَلَأٍ خَيْرٍ مِّنْهُمْ وَاِنْ تَقَرَّبَ اِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ اِلَيْهِ ذِرَاعًا وَاِنْ تَقَرَّبَ ذِرَاعًا تَقَرَّبْتُ اِلَيْهِ بَاعًا وَاِنْ اَتَانِيْ يَمْشِيْ اَتَيْنُهُ هَرْوَلَةً اَخْرَجَهُ الْبُخَارِيْ وَمُسْلٍمٌ وَالتِّرْمَذِيْ

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து    செய்யப்படுகிறது, அல்லாஹுத்தஅலா சொல்வதாக, ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருவுளமானார்கள்:-

'நான் என்னுடைய அடியானுடைய எண்ணத்திடத்திலிருக்கிறேன். நான் அவனோடவே இருக்கின். ஆக அவன் என்னை அவன் மனதில் திக்ரு செய்வானேயானால் நான் என் மனதில் அவனை திக்ரு செய்யவும்.என்னை ஒரு கூட்டத்தில் திக்ரு செய்வானேயானால் அவர்களைக்காண விசேஷமான கூடடத்தில் நான் அவனை திக்ரு செய்யவும். என்னிடத்தில் ஒரு ஜான் முடுகுவானேயானால் அவனிடத்தில் ஒரு முழம் முடுகுவான். அவன் ஒரு முழம் முடுகினால் நான் ஒரு கெஜம் முடுகுவேன். என்னிடத்தில் நடந்து வந்தால் நான் அவனிடத்தில் ஓடி வருவேன்.'

Importance and Needness of Sheikh-Guru-முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?

முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?

மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி.

யா -அய்யு-ஹல்லதீன-ஆமனுத்தகுல்லாஹ்-வப்தகு-இலைஹில் வஸீலத…..

ஈமான் பொண்டவர்களே! அல்லாஹ்வை தக்வா-அஞ்சி நடங்கள், அவனளவில் வஸீலாவை-இடைப் பொருளை தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் ஜிஹாத்- போர் புரியுங்கள், நிச்சயம் நீங்கள் வெற்றி-முக்தி பெறுவீர்கள். -அல்குர்ஆன் 5-35.

மனிதன் வெற்றி பெறுவதற்கும், முக்தி அடைவதற்கும் மிக முக்கியமான நான்கு அம்சங்களை இவ்வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

1. ஈமான் கொள்ளுதல்.
2.தக்வா செய்தல்
3.வஸீலா தேடுதல்.
4.அவன் பாதையில் போர் புரிதல்.

இந் நான்கில் மூன்றாவதான வஸீலாவைப் பற்றி இங்கு ஆராய்வோம்.

வஸீலா என்பதற்கு நல்ல கிரியைகளை முற்படுத்துவதும், நல்ல செயல்களை செம்மைபடுத்துவதும் என்பது பொதுவான கருத்து.

இறைவழி நடப்பவன் தனக்கென்று பூரணத்துவமடைந்த நேர்வழி காட்டுபவர்களில் ஒருவரை (முர்ஷிது-ஷெய்கை) தனது உற்ற நண்பராக எடுத்துக் கொள்ளுதல் என்பது குறிப்பிடத்தக்கதான கருத்து என்று மாமேதை மகான் மஹ்மூது தீபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

உண்மையில் இரண்டாம் கருத்துதான் இவ்விடம் வஸீலா என்பதற்கு தகும். ஏனெனில்,

இரண்டாவது அம்சமான தக்வா செய்வதென்பதில் நல்ல கிரிகைகளை முற்படுத்துவதும், நல்செயல்களை செம்மைபடுத்துவதும் அடங்கும்.

தக்வா என்றால் பாவமான காரியங்களை தவிர்த்து நடப்பதும், நல்ல காரியங்களை செய்வதும்தானே! அதையே மூன்றாவது கூறுவது பொருத்தமன்று.

ஷரீஅத். தரீகத், ஹகீகத், மஃரிபத்- சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகள் மூலம்தான் இறைவன் அளவில் சேர முடியும் என்பது மெய்ஞ்ஞானிகளின் ஏகோபித்த முடிவு.

எனவே இவ் வழி நடப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஷெய்கு-குருவின் கரம் பிடிப்பது இன்றியமையாத கடமை.

இதன் அடிப்படையில்தான் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் சொன்னதை நமக்கு கவி நயமாக மாமேதை அல்லாமா ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

'வ குல்த- மன்லா லஹு- ஷெய்குன்- ஃப இன்னி………………..'

'எவர்களுக்கு ஷெய்கு இல்லையோ அவர்களுக்கு நிச்சயம் நான் ஷெய்காக-முர்ஷிதாக இருக்கிறேன். அவன் கல்வத்தில்-தனிமையிலும் அவனது உற்ற நண்பனாக நான் இருக்கிறேன். என்னில் நின்றும் அவனுக்கு தொடர்பு உண்ட என்று (கௌது நாயகமே!) நீங்கள் கூறியுள்ளீர்கள். இப்படியே முஹ்யித்தீன் ஆண்டகையே எனக்கு ஆகுங்கள்'.

என்று பாடி தந்துள்ளார்கள்.

'யவ்ம –நத்உ-குல்ல உனாஸின்-பி இமாமிஹிம்- அன்று(கியாமத் hளில் நாம் ஒவ்வொரு மக்களையும் அவர்களது தலைவர்(களின் பெயர்)களைக் கொண்டு அழைப்போம்'(17-71) என்ற இறைவன் கூறியுள்ளான்.

கருத்து:- தரீகத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு அதாவது:- காதிரிய்யா தரீகாகாரர்களே! ஜிஷ்திய்யா தரீகாகாரர்களே! ஷாதுலிய்யா தரீகாகாரர்களே! என்று இப்படியே அழைப்பான் என்று சில விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு கருத்துக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இறைவன்பக்கம் போய் சேருவதற்கு இறைதூதர்கள் பக்கம் போகுவதற்கு ஷெய்குமார்கள்-முர்ஷிதுகள் அவசியம். உதாரணம்:- அனுமதி வழங்கப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு அவைகளின் கழுத்தில் அடையாள பட்டிகள் மாட்டியிருப்பது அவசியமாக இருப்பது போல், நமது கழுத்துக்களிலும் எந்த ஷெய்குமார்களின் பட்டியாவது கண்டிப்பாக மாட்டியிருப்பது அவசியம். ஏனெனில்,

நமது நப்ஸு- ஆத்மா நாய் போன்றது. சுதந்திரமாக விட்டு வைக்கலாகாது. அதன் கழுத்தில் பட்டிபோட்டு ஒரு ஷெய்கின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கச் செய்ய வேண்டும். கழுத்துப்பட்டியில் கொழுகப்பட்டிருக்கும் சங்கிலியின் முதல் கொழுக்குபட்டியிலும், மறுபக்கத்து கொழுக்கு எஜமானின் கரத்தில் இருப்பது போல், ஷெய்கின் கரம் நம் கழுத்திலும்,  ஷெய்கின் ஸில்ஸிலாவான சங்கிலி தொடர்பான மறுபுறம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஜ வ ஸல்லம் அவர்களின் கரத்திலும் இருக்க வேண்டும்.

நாம் இயங்குவது அந்நாயகம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான். நமது ஷெய்கு அதற்கு வஸீலாவாக இடைப் பொருளாக தொடர்பை உண்டாக்கி தருபவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையான எதார்த்தமான வஸீலாவாகும். இந்த வஸீலாவை தேடும்படியாகத்தான் மேற்கண்ட 5:35 வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

மழை பொழியும் போது அதை நாம் பெறாவிட்டால் அதை வாங்கி வைத்திருக்கும் குளம் குட்டையை நாம் நாடுவது போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஜீவிய காலத்தில் அருள் மழை பொழியும் போது நாம் இல்லை என்றால் வாழையடி வாழையாக அந்த அருள் வெள்ளத்தை வாங்கி வந்திருக்கும் குளம் குட்டைகள் போன் ஷெய்குமார்களின் திருக்கரத்தை பிடித்தால்தானே வயல் போன்ற ஈமானுக்கு அவ்வருள் வெள்ளம் பாய்ந்து ஈமான் உருப்படும். இல்லையென்றால், ஈமான் கருகி சருகாகி விடும் அல்லவா? அல்லாஹ் அந்நிலையை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக!

இதை எங்களது குருநாதர் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் கிழுரிய்யா பைத்தில்,

'ழல்லமன்-ளன்ன-லஅல்லஹு-யபூஸு-பிநப்ஸிஹி
ழாஅ-உம்ரஹு-அகிஸ்-யாரப்பி-பில்-கிழ்றின்னபி'

(ஷெய்குமார்களின் துணையின்றி) தானாக ஜெயம் பெறலாம் என்று எவன் எண்ணினானோ அவன் தனது வயதை பாழ்படுத்திவிட்டான். கிழ்று நபியின் பொருட்டால் எனது இரட்சகனே! என்ழன இரட்சிப்பாயாக!

என்று அழகாக வலியுறுத்தி பாடியுள்ளார்கள். இன்னும் அவர்கள் அதே பைத்தில், ஸுஹ்பத்துஷ் ஷெய்கி-ஸஆததுன்-ஷெய்குவின் சகவாசம் சீதேவித்தனமாகும்., கூனூ-மஅஸ்ஸாதிகீன்-மெய் அன்பர்களுடன் நீங்கள் இருந்து வாருங்கள்(9-119) என்ற திருவசனத்தில் இறைவனின் கட்டளையும் இருக்கின்றது என்றும் பாடியுள்ளார்கள்.

உலுல் அஜ்மிகளில் ஒருவரான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் கூட மெஞ்ஞான கடலான கிழ்று நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று மெஞ்ஞான அருளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவன் இட்ட கட்டளையும், அவர்களுக்கு மத்தியில் நடந்த நீண்ட வரலாற்றையும் ஷெய்கு முர்ஷிதுகளின் முக்கியத்ததுவத்தையும், ஒழுக்கத்தையும் நமக்கு ஸுரத்துல் கஃபு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதையே அடிப்படையாக வைத்துதான் எங்கள் ஷெய்குநாயகம் கிழ்றியா பைத்தை இயற்றியுள்ளார்கள்.

'ஸுஹ்பத்தே-ஸாலிஹ் குதுனா-ஸாலிஹ் குனத்
ஸுஹ்பத்தே-தாலிஹ் குதுனா-தாலிஹ் குனத்'

நல்லவர்களின் சகவாசம் நல்லவர்களாக மாற்றி விடுகின்றது. கெட்டவர்களின் சகவாசம் கெட்டவர்களாக மாற்றி விடுகின்றது' என்றும்,

'யக்ஸமானா-ஸுஹ்பத்தே-பா அவ்லியா
பெஹ்தர்-அஸ்-சத்-ஸாலெயே-தாஅத்-பேரியா'

சற்று நேரம் அவ்லியாக்களுடன் சகவாசத்தில் இருப்பது நூறு ஆண்டுகள் முகஸ்துதியின்றி வழிப்படுவதைக் காண மிகச் சிறந்தது' என்றும் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடியுள்ளார்கள்.

'அஸ்ஸுஹ்கத்து-துஅத்திரு- சகவாசம் குணபாடு அளிக்கும்' என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியுள்ளார்கள்.

'பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்' என்ற தமிழ் முதுமொழியும் ஒன்று உண்டு.

ஆகவே இப்படிப்பட்ட ஷெய்குமார்களின் சகவாசம் மிகத் தேவை. முக்தி பெறுவதற்கு அவர்களின் திருக்கரம் பற்றிப் பிடித்து அவர்களின் தரீகத்தில் செல்லுவது மிக முக்கியமாகும். இவ்வழிதான் நபிமார்கள், சித்தீக்கீன்கள்,ஷுஹதாக்கள், சாலிஹுன்கள் சென்ற வழி. இதுதான் ஸிரத்தே முஸ்தகீம்-நேரான வழி. இவ் வழியைத்தான் தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும்'இஹ்தினஸ்ஸி ராதல்-முஸ்தகீம்-ஸிராதல்லதீன-அன்அம்த-அலைஹிம்-(இறiவா!) நீ நேரான வழியை எங்களுக்கு காட்டுவாயாக! (அவ்வழி) நீ உபகாரம் புரிந்தவர்களின் வழி' என்று ஓதி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டுமென்ற நியதியும் உண்டு.

'வத்தபிஃ-ஸபீல-மன்-அனாப-இலய்ய- என்னளவில் மீண்டவர்களின் பாதையை பின்பற்றுவீராக! என்ற(31-15) திருவசனமும், அல்லாஹ் அளவில் போய் சேர்ந்து அவனது திருக்காட்சியை கண்டு களித்து மீண்டவர்களான முர்ஷிது-ஷெய்குமார்களை நாம் கரம்பிடித்து பைஅத் தீட்சை பெற்று பின்பற்றியாக வேண்டுமென்று வலியுறுத்துகின்றது.

இதுமட்டுமன்று, நமது இக்கட்டான வேலையிலும் நம்மை காப்பாற்றுபவர்களும் அவர்கள்தான். எடுத்துக்காட்டாக,

நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிஸ்ரு நாட்ல் ஜுலைஹா அம்மையாரின் அறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வேளையில், 'கன்ஆன்' என்னும் சிற்றூரில் இருந்துக் கொண்டிருக்கும்  யஃகூபு அலைஹிஸ்ஸலாம் அவர்களை(உதவிக்கு)அழைத்தார்கள். உடனே அவ்வறையில் காட்சிக் கொடுத்து ஜுலைஹா அம்மையாரின் மாய லீலையை விட்டும் காப்பாற்றினார்கள் என்பது திருமறை கற்பிக்கும் வரலாறு.

அல்லாமா இமாம் ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு மரண தருவாயில் அவர்களது ஷெய்கு குரு நஜ்முத்தீன் வலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆஜராகி ஈமானை காப்பாற்றினார்கள் என்பது உலகம் அறிந்த வரலாறு.

நம் உடம்பின் நரம்புகள் நம் ஹிருதயத்துடன் தொடர்பு கொண்டு இயங்குவது போல், உலகத்திற்கு ஹிருதயமாக-முக்கிய அங்கமாக மூலக்குருவாக இருந்து வரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு இக்குருமார்கள்தான் தொடர்பை ஏற்படுத்தி தருகிறார்கள். அதுபோழ்துதான் நாம் சரியாக இயங்க முடியும். நமது இலட்சியமும் நிறைவேறும்.

நகரங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்குகளுக்கு பவர் ஹவுஸில் இருந்து வயர் கம்பிகள் மூலம் மின்சக்தி வருவது போல் உலகத்திற்கு பவர்ஹவுஸாக இருந்து வரும் அவ்வுத்தம நபியின் அருள் இயக்க சக்தி வர வேண்டுமானால் வயர் கம்பிகள் போன்று அமைந்திருக்கும் ஷெய்குமார்களின் ஸில்ஸிலா-தொடர்பு இருக்க வேண்டும்.

சூரியக் கதிர்கள் துணியில் மேனியில் படுகின்றன. கரித்துவிடுவதில்லை. ஆனால் பூதக்கண்ணாடியை சூரியக் கதிர்களுக்கும் துணிக்கும் இடைப் பொருளாக வைத்தால் பூதக் கண்ணாடி கதிர்களை ஒன்று கூட்டி துணியை-மேனியை கரித்து விடும் இயக்கத்தை நாம் அறிவோம். இதைப்போல்,

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஸ வஸல்லம் அவர்களின் அருள் ஜோதி உலகத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜோதி நம் உள்ளத்தில் பட்டு குணப்பாடு அளிக்க வேண்டுமானால் அந்த அருள் ஜோதியை ஒன்று கூட்டிதரும் பூதக் கண்ணாடி போன்ற குருநாதர்களை நம் உள்ளத்திற்கும் பெருமானாரின் அருள் ஜோதிக்கும் இடைப்படுத்தினால் தான் உள்ளத்தில் 'இஷ்க்' எனும் குணப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதையும் இவண் உணர்க! பெருமானாரின் பேரொளியின்றி எவரும் இறைசன்னிதானம் பிரவேசிக்க முடியாது என்பது வெள்ளிடைமலை.

ஆகவே முக்தி அடைவதற்கும் இறையருள் வெறுவதற்கும் வஸீலாவான ஷெய்கு-முர்ஷிது ஒருவரை எடுத்துக் கொண்டு இறைவழி நடக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் இவ்வழி நடந்து முக்தி பெற்றவர்களாக ஆகுவதற்கு நல்லுதவி புரிவானாக!

What is Tasawuf?(Tamil)-தஸவ்வுப் என்றால் என்ன?

தஸவ்வுப் என்றால் என்ன?

மௌலானா மௌலவி கே.என்.நூஹ் முஹ்யித்தீன் ஆலிம் மஹ்லரி,உலவி

(அந்தரங்க அகமியக் கல்வி) அல்லது தஸவ்வுப் என்றால் என்ன? என்ற கேள்வி சிந்தனையை கிளரும் மிக முக்கியமான அறிவுள்ள கேள்வியாகும்.

அதை விங்கி கொள்வதற்கு பின்வரும் சில கேள்விகளின் விடைகளையும் விளக்கிக் கொள்வது மிக அவசியமாகும். இஸ்லாத்தில் உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு சிறந்த வகுப்பினர் இருக்கிறார்கள். இவ்விரு வகுப்பினர்களும் எப்போது தோன்றினார்கள்? எப்படி உண்டானார்கள்? எதற்காகத் தோன்றினார்கள்? என்பதே கேள்வியாகும். (மௌலவியும் சூபியும்) கண்ணியமிக்க ஸஹாபாக்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் (ரிஸாலத்) என்னும் சூரியனில் இருந்து வெளியாகும் எல்லா ஞானக் கதிர்களையும், எந்த இடைத் தொடர்புமின்றி ஒவ்வொரு முஸ்லீமும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் போதனையின் மூலம் ஒவ்வொரு மனிதனும் அங்கு வெளிரங்கமான கல்வியிலும் ஷரீஅத்தின் (அமல்கள்) கோட்பாடுகளாலும் சிறந்து விளங்கினர். அங்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் (சுஹ்பத்) என்ற் உறவு கூட்டு இவைகளின் மூலம் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி சுத்தகரித்து(இல்மே பாதின்) அந்தரங்க அகமிய கல்விகளாலும் நிரம்பி இருந்தனர்.

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இக் கடமைகளைச் செய்வதோடு திக்ரு(தபக்குர்) இறைச் சிந்தனை (முராகபா) என்னும் நிஷ்டையிலும் சிறந்து காணப்பட்டனர். வெளிரங்க, அந்தரங்க இரு கல்விகளிலும் சேர்ந்திருந்ததின் காரணத்தால் அவர்களுக்கு மத்தியில் அமல் அடிப்படையில் மௌலவி என்றும், சூபி என்றும் எந்தப் பிரிவினர்களும் இருந்ததில்லை. மாறாக, அஸ்ஹாப் அல்லது ஸஹாபா என்ற பெயரைத் தவிர்த்து வேறு எந்த பெயரும் நிலவவில்லை.

சில சஹாபாக்கள் சில குறிப்பான அமல்களின் காரணத்தினால் மற்ற ஸஹாபாக்களைவிட சிறந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். உதாரணமாக அஸ்ஹாபே ஸுப்பா என்ற திண்ணை சஹாபாக்கள் தங்கள் வீடு,வாசல்கள் உலக அலுவல்களையெல்லாம் ஒதுக்கி துறவறத்தில் சிறந்து விளங்குவது இதற்கு தெளிவான ஆதாரமாகும். அவ்வாறு இருப்பினும் கூட ஸஹாபாக்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடோ, வித்தியாசமோ இருக்கவில்லை.

அதன்பின் சங்கைக்குரிய தாபியீன்கள் காலம் வந்தபோது இந்த ஆலிம்-சூபி வெளிரங்க, அந்தரங்க கல்விகளின் தனித்தன்மைகள் வெளியாக ஆரம்பித்தன. அதற்கு பி;ன்பு தபவுத்தாபியீன்களின் காலத்தில் இவ்விரு கல்விகளின் வேறுபாடுகள் இந்த அளவு உண்டாயின. உண்மையில் இதுவே வெளிக்கல்வி என்ற பெயர் உருவான் காலம். இது நபித்துவத்தின் இரண்டாம் நூற்றாண்டாகும்.

அதற்குப்பின் ஷரீஅத் சட்டங்களை தொகுத்து நூல் வடிவில் எழுதும் காலம் வந்தது. மேலம் புனிதமான ஷரீஅத்தைப் பரப்பும் பணி அதிகமானபோது, அமலின் அடிப்படையில் இரு வகுப்பினர்களில் வேறுபாடுகள் கொஞ்சம் அதிகமாயின. ஆகவே எந்த வகுப்பினர்; பிக்ஹு மற்றும் ஷரீஅத் சட்டங்களை தொகுக்கவும், பரப்பவும் பாடுபட்டார்களோ அவர்கள் உலமாக்கள்(இமாம்கள்) என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். பின்பு அவர்களாலும் சில தனித்தனி கலைகளைக் கவனித்து(முஹத்திதீன்கள்) நபிமொழி விற்பன்னர்கள் என்றும் (புகஹா) சட்டமேதைகள் என்றும், திருமறை விரிவுரையாளர்கள் என்றும், இதுபோன்ற பெயர்களால் புகழப்பட்டார்கள். எனினும் அப்புனிதர்கள் வெளிரங்க கல்விக்குப்பின் தங்களது முழு மூச்சுடன்- அந்தரங்க சுத்தி- உளத்தூய்மைக்குரிய காரியங்களில் ஈடுபட்டார்கள். அவர்களே மஷாயிக் -ஞான வழிகாட்டி என்றும் சூபிய்யா அகத்தொளி பெற்றவர்கள் என்றும் போற்றப்பட்டனர். ஆக தன் அகத்தை சுத்திகரித்து தெளிவுபடுத்தும் வழிக்குத்தான் -தஸவ்வுப்- என்று பெயர் வந்துள்ளது.

அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களத நூலில் மிகத் தெளிவுபட பல விஷயங்களை கூறிவிட்டு, எவர் தன் உள்ளத்தை அல்லாஹ்வின் ஞாபகத்திலேNயு வைத்து இறைவனை மறக்கச் செய்யும் எந்தப் பொருளும் உள்ளத்தில் நுழைந்து விடாமல் பாதுகாத்து கொண்டிருப்பவர்கள்தான் அஹ்லெ சுன்னத்தில் உள்ள ஞானவான்கள். இவர்கள் தங்களுக்கு தஸவ்வுபை உடையவர்கள் என்று நாமம் சூட்டினர். மேலும் இந்த தஸவ்வுப் என்னும் பெயர் அப்புனிதர்களுக்கு ஹிஜ்ரி 200-ல் இருந்தே பிரபலமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மௌலவி, முல்லா என்னும் பெயர்கள் ஸஹாபாக்கள் காலத்தில் இல்லாதது போன்று சூபி, தஸவ்வுப் என்னும் பெயர்களும் ஸஹாபாக்கள் காலத்தில் இருக்கவில்லை. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே பிரபலமாயின!

சூபி என்ற பெயரை காமிலீன்களான மஷாயிகுமார்களுக்கு அதிகமாகச் சொல்லப்பட்டது. ஞானப்பாட்டையில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு சூபி என்றும பலருக்கு சூபிய்யா என்றும் அம்மேதைகள் சென்றடைந்த வழியில் நடைபோட ஆரம்பித்த ஒருவருக்கு முதஸவ்விப் என்றும் பலருக்கு முதஸவ்விபா என்றும் சொல்லப்பட்டுள்ளது என் அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

சூபி எனும் வார்த்தை சூப்(கம்பளி) என்னும் வார்த்தையில் இருந்து பிரிந்தது. காரணம் அம்மேதைகளில் அதிகமானோர் வெளி அலங்காரமான அழகிய உடைகளை அணியாமல் திக்கான ஆடைகளையும், கம்பளி ஆடைகளையும் அணிந்திருக்கிறார்கள் என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர்கள் சூபி என்னும் வார்த்தை சவ்ப் என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. காரணம் அம்மகான்கள் உலக ஆசாபாசங்கள் சுருங்கக் கூறின் அல்லாஹ் அல்லாத அனைத்தையும் விட்டு அல்லாஹ் அளவிலே தன்னை திருப்பி அவனியிலேயே அர்ப்பணித்து கொண்டார்கள் என்று கூறுகின்றார்கள்.

முடிவாக் இவர்கள் அனைவர்களும் இறைவன் கட்டளைக்கு முற்றிலும் வழிபட்டு அல்லாஹ்விற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். மௌலவி, முல்லா, ஆலிம் இவர்கள்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் போதனைகளைச் செய்கிறார்கள். சூபியாக்கள் இஸ்லாத்திற்கும், குர்ஆன் ஹதீதுக்கும் மாறுபட்டவர்கள் என்று கூறித்திரியும் சில குதர்க்கவாதிகள் அம்மஹான்களின் வரலாறே தெரியாதவர்கள் எனக் சுறலாம். உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு குழுவினர்களும் நுபுவ்வத் என்னும் மரத்தில் பிரிந்து வந்த இரு கிளையாகும் என்பதே உண்மையாகும்.

உலமாக்கள்(இல்மே லாஹிர்) வெளிரங்க கல்வியையும், ஷரீஅத் சட்டத்தையும் போதிப்பவர்களாக இருக்கின்றனர். அதைப் போன்று சூபியாக்கள் (இல்மே பாதின்) அந்தரங்க அகமியக் கல்விகளையும், தரீகத்தின் சீரிய முறைகளையும் போதிக்கின்றனர். ஷரீஅத்தின் உலமாக்கள் குர்ஆன் ஹதீதுகளிலிருந்து மார்க்க சட்டங்களை போதிக்கின்றனர்.

சூபியாக்கள் அந்தரங்க(பைஜ்) அருளின் மூலமாக உள தெளிவு பெற்று ஷரீஅத்தின் பிம்பங்களாக காட்சி அளிக்கின்றனர். இரு வகுப்பினர்கள் போதனைகளும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஞான ஊற்றிலிருந்து பொங்கி வரும் அமுதங்களாகும்.

சூபியும், யோகியும்:-

தற்காலத்தில் அறிஞர்கள் என்ற பேர்வையில் திரியும்ஒரு சில புல்லுருவிகள் இறைவனின் அருள் பெற்ற நாதாக்களின் நடைமுறைகள் எல்லாம் இஸ்லாமிய வீரர்கள் இந்தியாவை வெற்றி கொண்ட பின்னர் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தபின் இங்குள்ள இந்து யோகிகளுடன் பழகியபின் அவர்களின் நடைமுறைகளை எடுத்துக் கொண்டார்கள். இந்த சூபியாக்களின் நடைமுறைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மிக தைரியமாக கூறுகின்றனர்.

அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:- இந்த தஸவ்வுப் என்னும் மெய்ஞ்ஞான கல்வியுடைய நாதாக்கள் இல்லாத ஒரு காலம் கூட இஸ்லாத்தில் இருந்திருக்கவில்லை என குறிப்பிடுகின்றனர்.

அல்லாமா அபூ தாலிபுல் மக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது கூதுல்குலூப் என்னும் பெரும் நூலில் வரைந்துள்ளார்கள். அதாவது ஷரீஅத்தின் சட்டமேதைகளான புகஹாக்களுக்கு ஏதாவதொரு மஸஅலாவில் சந்தேகங்களோ, சிக்கல்களோ ஏற்பட்டு திகைப்பு உண்டானால் உடனே அக்காலத்தில் உள்ள ஞான மேதைகளான சூபியாக்களிடம் சென்று அச்சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவேதான் சட்டமேதை ஷாபிஈ வலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏதாவதொரு சட்டங்களில்,மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் ஞானமேதைகள் இருக்கும் இல்லங்களுக்குச் சென்று கேட்டு, அம் மஸ்அலாக்களின் தெளிவைப் பெற்றுக் கொள்வார்கள். குறிப்பாக இறைஞானத்தை எவர் உதவியுமின்றி இறைவனின் மூலம் பெற்ற உம்மீயான மாமேதை ஷைபானுர் ராபீ லரியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அதிகம்,அதிகம் சென்று படினமான சட்டங்களின் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள்; என குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆக, இத்தகைய மேதைகள் ஒவ்வொரு காலத்திலும், இரக்கவே செய்கின்றனர். எனவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் என் உம்மத்தினர் ஒரு சிறிய கூட்டத்தினர் சத்தியத்தின் மீது நிலைத்து இருப்பார்கள். அவர்களின் விரோதிகள் எவரும் எந்த தீங்கும் செய்ய முடியாது என சிலாகித்துக் கூறியுள்ளார்கள். இத்தகைய மேதைகளின் வரிசையில்தான் மாபெரும் மெய்ஞானி சுல்தானுல் ஆரிபீன் கௌதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், சுல்தானுல் ஆரிபீன் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் , அபுல்ஹசன் ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்வலியுல் காமில் அப்துல் கரீம் ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் ஞானகுரு குத்புஸ்ஸமான் பதருத்தீன் படேஷா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களால் இக்காலத்தில் நேர்வழி காட்டும் குத்பும், முஹ்யித்தீன் இப்னு அரபியுமாக இருக்கிறார்கள் என்று புகழப்பட்ட மாமேதையுமான குத்புஸ்ஸமான், இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாயிழீன், ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் சூபி ஹஜ்ரத் ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் பிரதான கலீபாவும், காயல்பட்டணத்தில் பிறந்து சிலோனில் துயில் கொண்டிருக்கும் எனது ஆன்ம குருவும், இன்னும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் குரு பிரானும் ஞானக் கருவூலங்களை மக்களுக்கு அள்ளித்தந்த மகானுமாகிய வலிய்யுல் காமில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் C.A.K. ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி சித்தீகி பாஜிலே நூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இன்னும் இது போல நாதாக்களுகம் இடம் பெறுகின்றனர்.

அல்லாஹ் நம் யாவர்களின் இதயங்களையும், இம் மான்களின் பரக்கத்தாலும், பைஜின் மூலமாகவும் ஒளி பெறச் செய்து அம்மான்களின் அடிச்சுவடுககளை பின்பற்றி நடந்து முக்தி பெற்ற நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!