இஸ்லாத்தில் இசை

இஸ்லாமிய மார்க்கத்தில் இசையானது எந்த வகையில் ஆகுமானது? அதன் விபரம், விளக்கம் என்ன? என்ன? என்பதைப் பற்றி நமது இமாம் ஙொஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது ‘கீமியாயெ ஸஆதத்து’ என்னும் நூலில் விபரித்துள்ளார்கள். அந்த நூல் ருகுனு முஆமலாத்தில் 2வது வால்யூமில் இதுபற்றிய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளதை இலகுத்தமிழில் சுருக்கமாக இங்கு எடுத்து தரப்பட்டுள்ளது. (இந்நூலானது பார்ஸி பாஷையிலிருந்து நெல்லிக்குப்பம் மௌலவி அப்துர் ரஹ்மான் ஸாஹிபு அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை திருவவல்லிக்கேணி, ஹாஜி எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அன்டு சன்ஸ் அவர்களால் பதிப்பக்கப்பட்டது.)

மனிதனுடன் இசை

இரும்பிலும், சக்கிமுக்கி கல்(நெருப்பு உருவாக்கும் கல்)லிலும் எப்படி நெருப்பு மறைந்திருக்கிறதோ அப்படியே மனிதனுடைய கல்பிலும் அல்லாஹுதஆலாவினது இரு இரகசியம் மறைந்திருக்கிறது.
இரும்பைச் சக்கிமுக்கி கல்லில் தட்டுவது கொண்டு எப்படி அதிலிருந்து நெருப்பு பறந்து விழுகிறதோ அப்படியே சரியான மெட்டையுடைய நல்ல இராகமானது இருதயத்தைத் தாக்கி அதிலிருந்து அவனுக்குத் தெரியாதபடி (ஆனந்தப்பரவசமென்னும்) பொருள் உண்டாகின்றது.
ஆலமுல் அர்வாஹ் என்னும் மேலுலகத்திற்கும், மனிதனுடைய கல்புக்கும் ஓர் சம்பந்தமிருப்பதினால் அந்த சம்பந்தம் காரணமாக இருதயம் தாக்குண்டு அதில் பரவசமுண்டாகிறது. எந்த கல்பு அல்லாஹ்வுடைய ஞாபகத்துக்கு தடையாய் இருக்கிற வேறு ஆசையை விட்டு ஒழிந்ததாய் இருக்குமோ அந்த கல்பில் இந்த பரவசமுண்டாகும்.
ஆகவே எவனுடைய கல்பில் அல்லாஹுத்தஆலாவுடைய ஆசையென்னும் நெருப்பு கனிந்து கொண்டிருக்கிறதோ அந்த நெருப்பு சுவாலை விட்டு எரியும்பொருட்டு இராகம் கேட்பது அவனுக்கு முக்கியமாகும்.

இன்னும் எவனுடைய கல்பில் கெட்ட ஆசை இருக்கிறதோ அவன் இராகம் கேட்பது அவனைக் கொல்லும் நஞ்சாகவும் ஹராமாகவும் இருக்கிறது.

இராகம் கேட்பது ஹராமன்று சொன்னவர்கள் லாஹிருடைய உலமாக்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹுத்தஆலாவுடைய ஆசை எதார்த்தமாய் மனிதனுடைய கல்பில் அமைவது அவர்களுக்குத் தெரியவில்லை. மனிதன் தன்னுடைய இனத்தையே நேசிக்கக் கூடியவன் என்றும், தன் இனமல்லாததும், தனக்கு எவ்விதத்திலும் ஒப்பாதாகதுமான ஒரு பொருளை அவன் எப்படி நேசிக்கக் கூடுமென்கிறார்கள். ஆகவே கல்பில் சிருஷ்டிகளாகிய படைப்புகளின் ஆசையே ஒழிய சிருஷ்டிகனான அல்லாஹுவுடைய ஆசையுண்டாகுவது அவர்களுக்கு தெரியவில்லை.

அப்படி அவர்களுக்கு அது தெரியவந்தால் அது ஷரகில் ஆகாத ஓர் சாயலை சிந்திப்பதன் பேரில் ஏற்பட்டதாயிருக்கும். இதன் காரணத்தினாலேயே, இராகம் கேட்பது விளையாட்டாகாவது அல்லது ஒரு படைப்பின் மீதுள்ள ஆசையைப் பற்றி ஏற்படுகிறது என்றும் அதனாலேயே இராகம் கேட்பது தீனில் கூடாதென்கிறார்கள்.
இராகம் கேட்பதின் ஹுக்மை இதயத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இராகம் கேட்பது இதயத்தில் இல்லாத இதர வஸ்துவைக் கொண்டு வராது. மேலும் எது இதயத்தில் இருக்கிறதோ அதையே எழுப்பி விடும்.

ஆகவே ஒருவனுக்கு ஷரகில் உகப்பாக்கப்பட்ட ஒரு பொருள் மனதில் உண்டாகியிருந்து அதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நாட்டத்தால் இராகத்தைக் கொண்டு அதிகப்படுத்துவானாகில் அவனுக்கு தவாபு கிடைக்கும்.

ஷரகில் தடுக்கப்பட்ட ஒரு பொருள் அவனின் மனதில் உண்டாகியிருந்து அதனால் இராகம் கேட்பானாகில் அவனுக்கு அதாபுண்டாகும்.

ஒருவனுடைய மனதில் இவ்விரண்டும் இல்லாமல் விளையாட்டாக இயற்கையின்படி இன்பத்தை அடையும் பொருட்டு இராகம் கேட்பானாகில் அவனுக்கு அது முபாஹாயிருக்கும்.

இராகம் கேட்பதின் வகைகள்

இராகம் கேட்பது மூன்று வகையின் பேரினாலிருக்கும்.
1. விளையாட்டின் வழியாக மறதியினால் கேட்பதாகும். துன்யா முழுவதும் விளையாட்டாயிருக்கிறது. இது அதனுடன் சேர்ந்ததாகும். இராகம் நல்லாயிருப்பதால் அது ஹராம் என்பது சொல்வது கூடாது. ஏனென்றால் நன்றாகயிருப்பதெல்லாம் ஹறாமல்ல. அவைகளில் சிலவற்றை ஹராமென்றதெல்லாம் அவை நன்றாயிருப்பதினாலல்ல. மேலும் அதில் ஏதோ நஷ்டமும், கெடுதியும் இருப்பது பற்றியே ஹராமாயிருக்கிறது.

பட்சிகள் பாடுவதும், பசுமையான புற்பூண்டுகளும், ஓடும் தண்ணீரும், மலர்ந்த பூக்களும் நன்றாகயிருப்பதினால் அதைக் கேட்பதும், பார்ப்பதும் ஹராமல்ல.

புலன்கள் ஒவ்வொன்றுக்கும் இவ்வாறு இன்பமானதிருக்கிறது. இவ்வாறிருக்கையில் இராகம் மட்டும் எப்படி ஹறாமாகும்?
விகடமும், விளையாட்டும் அதைப் பார்ப்பதும் ஹறாமல்ல என்பதின் பேரில் பின்வரும் ஹதீது அத்தாட்சியாக இருக்கிறது.:

அன்னை ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஈதுடைய நாளில் பள்ளிவாசலில் ஹப்ஸிகள் ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோக்கி, ‘நீ அதைப் பார்க்க விரும்புகிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்றேன். அப்போது அவர்கள் எழுந்து வந்து வாசற்படியினிடம் தங்கள் கைகளை நீட்டிக் கொண்டு நின்றார்கள். நான் அதன்மேல் என் மேவாயை வைத்துக் கொண்டு வெகுநேரம் வரையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நாயகமவர்கள் பலமுறை என்னை நோக்கி, ‘இவ்வளவு பார்த்தது போதாதா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன்.

இதில் ஹப்ஸியிடம் விளையாட்டும் வேடிக்கையும் அதைப் பார்ப்பதும் எப்போதும் ஹராமல்ல என்பதும், இந்நிகழ்வு பள்ளிவாயிலில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது ஓர் ஆதாரம்: அன்னை ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் ‘ஈதுடைய நாளில் இரண்டு அடிமைப் பெண்கள் என்னிடம் தப்பு கொட்டி பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து தங்கள் படுக்கை விரிப்பின் மேல் போய் முகத்தை மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டு படுத்துவிட்டார்கள். பின்பு அபூபக்கர் ஸித்தீகு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அந்த அடிமைப் பெண்களை அதட்டி ‘ரஸூலுல்லாஹ்வுடைய வீட்டில் இதென்ன ஷைத்தானுடைய சத்தம்?’ என்று சொன்னார்கள். அப்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா அபாபக்கர்! இன்று ஈதுடைய நாளாகயிருக்கிறது. நீர் அவர்களை விட்டு விடும்’ என்று சொன்னார்கள். தப்பு கொட்டுவதும், பாட்டுபாடுவதும் முபாஹு என்று இந்த ஹதீதினால் தெரிய வந்துள்ளது.

2. மனதில் யாதொரு கெட்ட ஆசை- அதாவது ஒருவனுக்கு பெண்பிள்ளை அல்லது ஒரு பையனுடைய ஆசையுண்டாயிருந்து அவர்களின் முன் வைத்துக் கொண்டு இராகம் கேட்கிறான். அல்லது அவர்கள் எதிரில் இல்லாத சமயத்தில் அவர்களிடம் சேர்வதை ஆசை வைத்து அந்த ஆசை அதிகரிப்பதற்காக இராகம் கேட்கிறான். அல்லது பெண்ணின் உடல் வர்ணனைகள் பொதிந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே தன் மனதால் தான் ஆசைக் கொண்டவளை நினைக்கிறான். இவ்வனைத்தும் ஹராமாயிருக்கிறது.
இந்த வகையில் தமது சொந்த மனைவி மீதும், அடிமைப் பெண் மீதுமிருந்து அந்த ஆசை அதிகரிப்பதற்காக இராகம் கேட்பானாகில் இது முபாஹாயிருக்கிறது.

3. மனதில் ஒரு நல்ல ஆசையிருந்து இராகமானது அந்த ஆசையைப் பலப்படுத்துவதாயிருப்பதாகும். இது நான்கு வகைப்படும்.
அ. ஹாஜிகளையும், கஃபாவையும், வனாந்திரத்தையும் குறித்து வர்ணித்துப் பாடுகிற இராகமாகும். இது பைத்துல்லாஹ்விற்கு செல்வதற்கு ஆசையை தூண்டிவிடும். அவன் இதைக் கேட்பதினால் தவாபைப் பெறுவான்.

போர் வீரர்களுடைய வர்ணிப்புள்ள பாடல்களைப் பாடுவதும், அவர்கள் அதைக் கேட்பதும் இதற்கு அடுத்ததாகும். ஏனென்றால் இது ஜனங்களை அல்லாஹ்வுடைய பகைவர்களோடு போர் புரியவும், அவனுடைய நேசத்தில் உயிரைக் கொடுக்கவும் ஆசை கொள்ளச் செய்கிறது. ஆதலால் இதற்கும் தவாபு உண்டு. ஆனால் இவையனைத்தும் காபிர்களோடு யுத்தம் செய்வதில்தான்.

ஆ. அழுகையை வருத்துவதும், மனதில் துக்கத்தை அதிகப்படுத்துவதுமான புலம்பலைப் பாடுவதும், அதைக் கேட்பதுமாகும். அந்த அழுகையும், துக்கமும் இஸ்லாத்தில் தன்னாலுண்டான குற்றத்தின் பேரிலும், பாவத்தின் பேரிலும், அல்லாஹ்தஆலாவுடைய பொருத்தங்களில் யாதொன்றும் தப்பிப் போவதாயிருந்தால் இதில் தவாபிருக்கிறது.

இ. மனதில் சந்தோசமிருந்து அந்த சந்தோசத்தை அதிகப்படுத்தும் பொருட்டு இராகம் கேட்பதாகும்.

நிகாஹு, வலிமா, அகீகா குழந்தை பிறந்த நேரம், கத்னாவுடைய நேரம், ஸபரிலிருந்து திரும்பி வந்த நேரம் இன்னும் இதுபோல் எந்த விசயத்தில் சந்தோஷப்படுவது ஆகுமோ அந்த விசயத்தைப் பற்றின சந்தோசமிருந்தால் இதுவும் முபாஹாகும்.

ஈ. இதுதான் எல்லாவற்றையும் பொதிந்தெடுத்த சாரமாயிருக்கிறது. ஒருவனுக்கு அல்லாஹ்வுடைய ஆசை மேலிட்டு அது இஷ்குடைய எல்லையை அடைந்ததாயிருந்தால் அவன் இராகம் கேட்பது முக்கியமாகும். எதனால் அல்லாஹ்வுடைய ஆசை அதிகரிக்குமோ அதன் தவாபு அதிகமாகவேயிருக்கும்.

சூபியாக்கள் ஆரம்பத்தில் இராகம் கேட்டு வந்தது இதற்காகவேயாகும். இராகம் கேட்டுக் கொண்டிருக்கும்போது இவர்களில் சிலருக்கு முகாஷபத்து என்னும் வெளிப்பாடுகள் வெளியாகும். இன்னும் மற்றவைகளால் உண்டாகாத மனத் தெளிவும், பரவசமும் அப்போது இவர்களுக்கு உண்டாகும்.

இராகம் கேட்பதினால் மறைவான ஆலத்தில் நின்றும் இவர்களுக்கு உண்டாகின்ற அந்த நுண்ணிய அஹ்வால்களை வஜ்து என்று இவர்கள் சொல்கிறார்கள். வெள்ளியை நெருப்பில் காய்ச்ச அது எப்படி சுத்தமாகின்றதோ அப்படியே இராகம் கேட்பதினால் இவர்களுடைய மனமானது சுத்தப்பட்டு தெளிவை அடையவும் கூடும். இன்னும் இந்த இராகமானது இஷ்கு என்னும் நெருப்பை மனதில் தாக்கி அதிலிருக்கிற எல்லா அழுக்குகளையும் போக்கிவிடும்.

இன்னும் இராகமானது ஆலமுல் அர்வாஹுடன் மனிதனுடைய ரூஹுக்கு இருக்கிற சம்பந்தத்தை எழுப்பி விடும்.

ஒரு முரீதுடைய மனதில் இராகத்தின் தேட்டமிருப்பதுடன் அவன் முதல் முதல் இராகம் கேட்கத் தொடங்குவது அவனுக்கு ஆகாது.

ஷைகு அபுல் காசிம் ஜுர்ஜானி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய முரீதுகளில் ஒருவராகிய அலி ஹல்லாஜ் என்பவர் இராகம் கேட்பதற்கு ஷெய்குவிடத்தில் அனுமதி கேட்டார், அதற்கு அவர்கள் ‘ நீ மூன்று நாளைக்கு ஒன்றையும் உண்ணாமல் பட்டினியாய் இரு. அதன்பிறகு நல்ல உணவை சமைக்கும்போது அந்த உணவை விரும்பாமல் இராகத்தை எடுத்துக் கொள்வாயாகில் இந்த ராகத்தின் தேட்டம் எதார்த்தமாகவும், அதைக் கேட்பது உனக்கு ஆகுமானதாகவும் இருக்கும்’ என்று சொன்னார்கள்.

அறிந்து கொள்ளுங்கள்: எவனொருவன் இராகத்தையும், வஜ்தையும் ஸூபியாக்களுடைய மற்றும் அஹ்வால்களையும் இன்காறு செய்கிறானோ அவன் தனது அறியாமையாலேயே அப்படி செய்கிறான். அந்த இன்காரில் அவன்மேல் குற்றம் கூறப்படாது. ஏனென்றால் அவனில் இல்லாததை அவன் நம்புவது கஷ்டமேயாகும். இவன் ஆண்மையில்லாத பேடிக்கு சமமாவான்.

இராகம் கேட்பது ஹராமான விசயங்கள்:

1. ஒரு பெண்பிள்ளையைக் கொண்டாவது, அல்லது இச்சை ஏற்படும் பக்குவத்திலிருக்கிற ஒரு பையனைக் கொண்டாவது இராகம் கேட்பது ஹராம். இவர்களிடம் இராகம் கேட்பவன் அல்லாஹ்வுடைய காரியங்களில் மனமூழ்கினவனாயிருந்தாலும் சரியே.
பெண்பிள்ளையை வைத்து இராகம் கேட்பது ஹறாமாகும். ஆனால் திரைமறைவில் அவளைக் கொண்டு இராகம் கேட்கிறபட்சம் இச்சையுண்டாகும் என்ற பயமிருந்தால் அது ஹராமாகும். இல்லையென்றால் முபாஹாகும்.

2. இராகத்துடன் தம்பூர், வீணை, கின்னரம் இன்னும் இவைபோல் நரம்புகள் மாட்டிய எந்தவொரு வாத்தியக் கருவி அல்லது இராகி நாதசுரம் வாசிக்கப்படுவதாகும். (இதுவும் ஹராமாகும்). இது எதனால் ஹராமமென்று சொல்லப்பட்டதென்றால், மதுப்பரியர்களுக்கு வழங்கப்படுகின்ற வாத்தியமாயிருப்பதினால்.
எனினும் பேரிகை, டங்கம், குழல், தப்பு இது கிலுக்குள்ளதாயிருந்தாலும் சரியே, இவை ஹராமல்ல. ஆனால் முகன்னசுகள் என்ற பேடிகளின் பம்பை ஹராமாகும். பம்பை என்பது இடை குறுகியும், இருதலைகள் அகன்றுமிருக்கிற நீண்ட ஒரு வாத்தியக் கருவியாகும். குழல் எவ்வகையாயிருந்தாலும் அது ஹராமல்ல.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழல் சப்தத்தைக் கேட்டபோது, தங்கள் காதில் விரலை வைத்துக் கொண்டு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களை அதைக் கேட்கும்படிக்கும், அந்த சப்தம் நின்றபிறகு தெரிவிக்கும்படிக்கும் உத்திரவு செய்ததானது அது ஹலால் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது என்று இமாமுனா ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள். அன்னார் காதைப் பொத்திக் கொண்டதானது நாயகமவர்களுக்கு அச்சமயத்தில் ஒரு ஹால் உண்டாகி இருந்ததென்றும், அதனால் அந்த ராகத்தைக் கேட்பதினால் அந்த ஹாலை விட்டும் பராக்காக்கி விடும் என்றும் கருதியால்தான் என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் அதைக் கேட்பதை கொண்டு உத்திரவு போட்டார்கள் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

3. இராகம் பாடுவதில் துர்வார்த்தை அல்லது வசை, அல்லது அஸ்ஹாபுகளின் விசயத்தில் ராபிலிகள் கட்டியிருக்கும் கவி போல் தீனுடையவர்கள் மேல் தூஷணம் கலந்திருப்பதாகும். அல்லது அறியப்பட்ட ஒரு பெண்ணின் வர்ணிப்பு இருப்பதாம். இந்த பாடல்களை கேட்பது ஹறாமாகும்.

ஆனால் கன்னகிருதா, கரியமட்சம், கட்டழகு, ரூபலாவண்யம் இவைகளின் வர்ணிப்பும், கூடல், பிரிதல் இவைகளின் வசனமும் இன்னும் ஆஷிகானவர்கள் வழக்கமாய் சொல்லி வருகின்ற வாக்கியங்களும் பொதிந்த பாடல்களைப் பாடுவதும், அதைக் கேட்பதும் ஹறாமல்ல. ஆனால் ஒருவன் இதைக் கேட்கும்போது தான் ஆசை கொண்ட பெண்ணை மனதில் நினைத்துக் கேட்பது ஹறாமாகும்.

இவற்றில் ஸூபியாக்கள் இந்தப் பாடல்களைக் கேட்பதில், அவர்கள் ஒவ்வொன்றுக்கும் வௌ;வேறு பொருள் விளங்கி வைத்திருப்பதினால் அதனால் அவர்கள் நஷ்டமடைய மாட்டார்கள்.

4. இராகம் கேட்பவன் வாலிப வயதுடையவனாகவும், இச்சை மேலிட்டவனாகவும் அல்லாஹத் தஆலாவுடைய ஆசை என்பதே தெரியாதவனாகவும் இருப்பதாகும்.

இவர்கள் இந்த கன்னகிருதா, கரியமட்சம், கட்டழகு, ரூபலாவண்யம் போன்ற வர்ணிப்புகள் கேட்கும்பட்சத்தில் இவர்களுக்கு ஷைத்தான் துணை நிற்கிறான். அவர்களை இச்சை கொண்டு கெட்ட செயல்களைப் புரியத் தூண்டுகிறான். ஆனால் இதுவும் அல்லாஹ் சொன்ன செயல்தான் என்று பிதற்றுகிறார்கள். அகந்தையான பாவச் செயலுக்கும், ஆண்புணர்ச்சிக்கும் பேரின்பப் பைத்தியம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

5. சாமானிய ஜனங்கள் சுகம் பாராட்டாகவும், விளையாட்டாகவும் இராகம் கேட்க பழக்கப்படுத்திக் கொள்வதாம். இது முபாஹாயிருக்கிறது. என்றாலும் இதையே தொழிலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை எப்போதும் வழக்கப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது ஹராம்.

இராகம் கேட்பதில் உண்டாகிற குணம், குறி மற்றும் அதன் அதபுகள்:
இராகம் கேட்பதில் மூன்று மகாம்கள் உண்டு.

முதலில் விளக்கம்,
இரண்டாவது பரவசம்,
மூன்றாவது ஆட்டமாம்.

விளக்கம்: எவனொருவன் இயற்கையான இச்சையினாலாவது, மறதியினாலாவது, ஓர் சிருஷ்டியின் ஆசையினாலாவது இராகம் கேட்பவனுடைய விளக்கத்தையும், ஹாலையும் குறித்து பேசுவதற்கு அவன் அருகதையில்லாத அற்பனாயிருக்கிறான். ஆனாலும், ஒருவனுக்கு தீனுடைய நினைவும், அல்லாஹ்வுடைய முஹப்பத்தும் மேலிட்டிருந்தால் அது இரு வகுப்பாகும்.

1. முரீதுடைய வகுப்பாகும். முரீதானவன் தன்னுடைய வழியைத் தேடுவதிலும், நடப்பதிலும், அவனுக்கு சுருங்கல், விரிதல், இலேசாதல், கஷ்டமாதல், ஏற்கல், மறுத்தல்களின் குறிகள் தோன்றல்போல் ஒன்றுக்கொன்று நேர்மாறான பல ஹால்கள் உண்டாவதால் அந்த முரீதுடைய மனம் மயக்கமுற்றிருக்கும். அப்போது அவன் காதுக்கு எட்டுகிற வார்த்தைகளில் நிந்தித்தல், ஏற்கல், மறுத்தல், சேர்தல், பிரிதல், சமீபமாதல், தூரமாதல், சந்தோஷமாதல், கோபித்தல், ஆதரவு வைத்தல், நிராதரவாதல், அச்சமுறுதல், அச்சந் தீர்தல், வாய்மை நிறைவேற்றல், வாய்மை மாறல், சேர்வதால் சந்தோஷமாதல், பிரிவதால் துக்கப்படல் இன்னும் இவைபோன்ற சங்கதிகள் ஏதேனுமிருந்தால் அதை அவன் தன்னுடைய நிலைமைகளுக்கு நேராகத் திருப்பிக் கொள்ளுகிறான். அதனால் அவனுடைய மனதுக்குள் இருப்பது சுவாலையாய் எழும்புகிறது. அப்போது அவனில் ஹாலுகள் உண்டாகும். அவற்றில் பலபல சிந்தனைகள் பிறக்கும்.
அவனுடைய இல்மு, இஃதிகாதுகளின் சட்டம் உறுதியாய் இல்லாமல் போனால் இராகம் கேட்பதில் அவனுக்குக் குபுரான பல எண்ணங்கள் உண்டாகக் கூடும். அதாவது இராகம் கேட்பதில் அல்லாஹுதஆலாவின் விசயத்தில் ஆகாத ஓர் பொருளை அவன் விளங்கிக் கொள்வான்.

2. முரீதுகளின் வகுப்பையும், மகாமாத்துகளுடைய அஹ்வால்களையும் தாண்டி பனாவுடைய ஹாலின் முடிவுக்கு வந்தவர்களின் வகுப்பாகும். இதை அல்லாஹுத்தஆலா அல்லாத மற்ற வஸ்துக்களுடன் சேர்க்கும்போது பனா என்றும், நாஸ்தி என்றும் சொல்கிறார்கள். அல்லாஹுவுடன் சேர்க்கும்போது தவ்ஹீது என்றும் சொல்கிறார்கள். இவன் இராகம் கேட்பது பொருளை விளக்குகின்ற வழியில் இருக்காது.

மேலும் இராகம் இவனுடைய காதில் விழுந்தால் அந்த நாஸ்தியும், ஏகத்துவமும் புதிதாகும். அவன் முற்றும் தன்னை விட்டும் மறைந்து இந்த ஆலத்தின் உணர்ச்சியில்லாதவனாகப் போவான். உவமையில் இவன் நெருப்பில் விழுந்தால் கூட அதுவும் இவனுக்குத் தெரியாமல் போகும். இவ்வாறானவர்களின் இராகப் பரவசம் நிரப்பமானது.
முரீதுகளுடைய இராகப் பரவசத்தில் மனிதப் பண்பு கலந்திருக்கும். இதைவிட்டும் மேலே போனவர்களுடைய பரவசமானது அவனுடைய உணர்வை ஒழித்து அவனை முற்றாக எடுத்துக் கொள்ளும். இப்பேர்பட்டவர்களை நீ இன்காறு செய்யாமலிருக்க வேண்டும்.

2. விளக்கம் தீர்ந்தால் பின்பு உண்டாகும் பரவசமாகும். அதை வஜ்து என்றும் சொல்கிறார்கள். வஜ்து என்றால் அடைவது என்று பொருள். அதாவது இதற்குமுன் இல்லாத ஒரு ஹாலை அடைந்தான் என்பதே அதன் பொருள். அந்த ஹால் அஹ்வாலுடையது என்றும்,
கேள்வி: ஸூபியாக்கள் ஹக்காகவும், ஹக்குத்தஆலாவை நாடியும் இராகம் கேட்பவர்களாயிருந்தால் சங்கீதம் பாடுகிறவர்களைக் கொண்டு இராகம் கேட்காமல் ஓதுகிற காரிகளை நியமித்து குர்ஆனை ஓதச் சொல்லி அதைக் கேட்கலாமே! குர்ஆனது ஹக்குடைய கலாமாயிருப்பதால் அதைக் கேட்பது மிக மேலாயிருக்கிறதே என்று யாராவது சொன்னால்…

பதில்: இதற்கு ஐந்து காரணங்கள் உண்டு.
1. குர்ஆனுடைய ஆயத்துகள் எல்லாமே ஆஷிகுகளுடைய அஹ்வால்களுக்கு நேர்பாடாயிருக்காது. அதாவது குர்ஆனில் காபிர்களுடைய கிஸ்ஸலாவும், துன்யாவுடையவர்களின் முஆமலாத்துடைய ஹுகுமும் இன்னும் இதர விஷயங்களும் அனேகமிருக்கின்றன.

ஏனென்றால் அது எல்லா அசையாவகை மக்களுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்படி அருளப்பட்டிருக்கிறது. இவற்றை ஓதுவானாகில் அவனுக்கு இஷ்கு என்னும் நெருப்பை பற்றி எரியச் செய்யாது. ஆனால் ஒருவன் இஷ்கு முற்றிய ஆஷிகாயிருப்பின் அவன் எதிலும் இராகத்தையே கேட்பான்.

2. குர்ஆனை அனேகம்பேர் மனப்பாடம் செய்திருக்கிறார்கள். அனேகம்பேர் குர்ஆனை ஓதியிருப்பார்கள். எதுவொன்று அனேகமாகக் கேட்கப்பட்டிருக்கிறதோ அது மனதுக்கோர் ஹாலை உண்டாக்காது. எனினும் சங்கீதத்தைப் புதிதுபுதிதாக பாடலாம். ஆனால் குர்ஆனை புதிதுபுதிதாக ஓத முடியாது.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் சிறிய கிராமங்களிலிருந்து அரபுகள் வருவார்கள். புதிதாக குர்ஆனைக் கேட்டு அழுவார்கள். அவர்களுக்கு ஹால் உண்டாகும். அப்போது அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த அரபுகளை நோக்கி நாங்களும் உங்களைப் போலிருந்தோம். பின்பு எங்களுடைய இருதயங்கள் வன்மையடைந்து விட்டன என்று சொன்னார்கள். அதாவது எங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது என்பதாகும்.

3.அசையாமலிருக்கிற அநேக மனங்கள் இராகத்தினாலும், சரியான இசையுள்ள ஓசையினாலும் அசைந்தாடும். இதனாலேதான் சாதாரண பேச்சின்மேல் வஜ்து உண்டாகுவது அருமையாயிருக்கிறது. நல்ல இசையானது சரியான இசையோடும் இராகத்தோடும் இருந்தால் அதன்மேல் வஜ்து உண்டாகின்றது.

4. இராகத்தில் வேறொரு குணப்பாட்டை அதிகப்படுத்தும் பொருட்டு அதற்கு உதவியாகச் குழல், தாரை, தப்பு, டங்கம் முதலிய வேறு சப்தங்களும் வேண்டும். இது விளையாட்டு பொருட்களாயிருக்கிறது. குர்ஆனோ மிகவும் கண்ணியம் பொருந்தியதாக இருக்கிறது. ஆகவே எதுவொன்று சாமானியர் பார்வையில் விளையாட்டு ரூபமாயிருக்கிறதோ அதன் சப்தத்தோடு குர்ஆனை ஓதுவது கூடாது. இப்படியான விளையாட்டு பொருட்களை குர்ஆனுடன் சேர்க்கக் கூடாது. அதைக் காக்க வேண்டும்.

5. ஒவ்வொருத்தனுக்கும் ஒரு ஹால் இருக்கும். அவனவனும் தன்னுடைய ஹாலுக்கு நேர்பாடான ஒரு பாடலைக் கேட்க ஆவலுள்ளவனாயிருப்பான். அப்படி நேர்பாடில்லாமலிருப்பின் அவற்றை வெறுக்கவும் நேரும். இவ்வாறு வெறுக்கும் விதத்தில் குர்ஆனை ஓதுவது சரியல்ல.

3. இராகம் கேட்பதில் ஆடுவதும், ஆடையைக் கிழித்துக் கொள்வதுமாகும். இதில் எதுவொன்று மிகைத்து அவனுடைய புத்திக்குள் அடங்காததாயிருக்கிறதோ அதைப் பற்றி அவன் குற்றவாளியாக மாட்டான்.

தனக்கு ஹால் உண்டாகமலிருக்க தனக்கு ஹால் வந்ததுபோல் காட்டிக் கொண்டு ஆடுவதும், ஆடையைக் கிழித்துக் கொள்வதும் சுத்த முனாபிக்தனமாகும். அது ஹறாமாகும்.
அபூ அம்ரப்னு நஜீது ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்:- ‘இந்த ஜனங்கள் இராகம் கேட்பதில் பொய்யாக ஒரு ஹாலைக் காட்டுவதிலும் முப்பது வருஷம் புறம் பேசுவது மிகவும் நல்லது’ என்கிறார்கள்.

இராகம் கேட்கும்போது தனக்குள் உண்டாகிற ஹாலை வெளியாகாதபடி ஆடாமல் அமர்த்திக் கொள்கிறவன் எவனோ அவனே நிறப்பத்தையுடையவன். அவன் தன்னைக் காத்துக் கொள்ளும்விதமாக அவனுடைய தத்துவமானது அவ்வளவு உறுதிப் பட்டிருக்கிறது. ஆடுவதும், அலறுவதும், அழுவதும் பலஹீனத்தினாலுண்டாவதாகும்.

ஒருவன் தன்னிச்சையாக ஹாலை வெளிப்படுத்தாமல் ஆடுவானாகில் அது அவனுக்கு ஆகும். ஏனென்றால், ஆடுவது முபாஹாயிருக்கிறது. ஹபஷிகள் பள்ளிவாசலில் ஆடிக் கொண்டிருந்ததை ஆயிஷா நாயகி அவர்கள் பார்க்கப் போனார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, ‘நீ என்னில் நின்றுமாயிருக்கிறாய், நான் உன்னில் நின்றுமாயிருக்கிறேன்’ என்று சொன்னார்கள். இந்த சந்தோஷத்தினால் அலி நாயகம் அவர்கள் பூமியின் மேல் பலமுறை குதித்து குதித்து ஆடினார்கள்.

இன்னும் ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, ‘நீ குணத்திலும் கோலத்திலும் எனக்கு ஒப்பாயிருக்கிறாய்’ என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னபோது அந்த சந்தோஷத்தினால் அவர்களும் குதித்து குதித்து ஆடினார்கள்.
எனவே இதை ஹராம் என்று சொல்வது கூடாது. இன்னும் எவனொருவன் தனக்கு உண்டாகிற ஹால் அதிக உறுதியாகும் பொருட்டு ஆடுவானாகில் அது அழகேயாகும். ஆனால் தன்னிச்சையாக ஆடையைக் கிழிப்பது ஆகாது. எனினும் தன்மீது ஹால் மிகைத்து மீறும்போது கிழிப்பானாகில் அது ஆகும்.

இராகம் கேட்பதற்குரிய அதபுகள்:

இராகம் கேட்பதில் நேரம், இடம், மக்கள் இம்மூன்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இது விதியாயிருக்கிறது என்று ஜுனைதுல் பகுதாதி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இராகம் கேட்க அருகதையுடையவர்கள் அதற்காக உட்காருவார்களாயின், எல்லோரும் தலை குனிந்து இருக்க வேண்டும். ஒருவரையொருவர் பார்க்க கூடாது. ஒவ்வொருவரும் முற்றாக தம்மை இராகத்தின்வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும். நடுவில் பேசக் கூடாது. தண்ணீர் குடிக்கக் கூடாது. பக்கங்களில் நோக்கக் கூடாது. கையையும், தலையையும் ஆட்டக்கூடாது. தங்கள் பிரயாசையினால் ஒரு அசைவும் அசைக்க கூடாது.

மேலும் கால் மடித்து தொழுகையினுடைய அத்தஹிய்யாதில் அமர்ந்திருப்பதுபோல் அமர்ந்திருக்க வேண்டும். தங்கள் முழுமனதையும் ஹக்குத்தஆலாவின்பக்கம் ஆக்கிக் கொள்ள வேண்டும். மறைவிலிருந்து என்ன வெளியாகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். தன்னிச்சையாக எழும்பாமலும், ஆடாமலும் இருக்கும்படி தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.
யாராவதொருவர் வஜ்துடைய மிகைப்பினால் எழும்பி விட்டால் அவரோடு இணங்கித் தாங்களும் எழும்ப வேண்டும். யாருக்காவது தலைப்பாகை கழன்று விழுந்து போனால் எல்லோரும் தங்கள் தலைப்பாகையினை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆக மொத்தத்தில் இராகம் கேட்பது மேற்கண்ட முறையில் இருப்பின் அது நன்மையைத் தரக்கூடியதே, அதைக் கேட்பதும் நன்மையே!

முற்றும்.

கடனும் வட்டியும்

கடன் வாங்கியவனின் கைவசத்தில் கடன் கொடுத்தவனுடைய உடைமை ஏதேனும் இருந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.  இவன் கையை விட்டு நீங்கி பிறகு மீண்டு வந்ததாக இருந்தாலும் சரி. ஆனால், அதனை ஈடு  வைத்திருந்தாலும், அடிமையை உரிமையிடுவதாகச் சீட்டு எழுதிக் கொடுத்திருந்தாலும் திருப்பக் கூடாது.

 கடன் வாங்கியவனிடம் வாங்கிய இடமல்லாததில் அந்தப் பொருளைத் திருப்பிக் கேட்டால் அப்படிக் கொடுக்க வேண்டுமென்பது அவசியமில்லை.

 கடன் வாங்கும் நேரத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி வாங்கியிருந்தால் கடன் கொடுத்தவனுக்கு ஏதேனும் அன்பளிப்புச் செய்யலாம். அது சுன்னத்துமாகும். ‘கடனை நிறைவேற்றும் பொழுது மிக அழகான முறையில் நிறைவேற்றுபவரே உங்களில் அழகானவர்’ என்று ஹதீதில் கூறப்பட்டுள்ளது. ஏதேனும் நிபந்தனையிட்டுக் கடன் கொடுத்தாலும், வாங்கினாலும் அது வட்டி ஆகும். அது ஏகோபித்த அபிப்பிராயப்படி ஹராமாகும். ‘ஏதேனும் ஒரு பலனை இழுத்துக் கொண்டுவரும் கடன் அனைத்தும் வட்டியாகும்’ என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

ஒருவன் தன் தோட்டத்தை, அல்லது வீட்டை அல்லது தோணி, கப்பல் போன்றவற்றை பாட்டத்துக்கோ, வாடகைக்கோ, கொடுக்கும்போது அதனதனுடைய பெறுமதியான கூலிக்கும் மேலாக கொடுக்க வேண்டுமென்று கடன் கொடுக்கும் ஆரம்பத்தில் பேசிக் கொள்வது ஹராமாகும். அதனைக் கட்டாயப்பத்தாமல் சாடையாகக் குறிப்பிடுவது மக்ரூஹ் ஆகும். பெரும்பாலான உலமாக்களிடத்தில் இதுவும் ஹராமாகும்.

எவ்வித நிபந்தனையும் பேசாதிருக்கும் நிலைமையில் கடன் கொடுத்தவனுக்குக் கடன் வாங்கியவன் ஏதாவது ஒரு பொருளை ஹத்யாவாக(அன்பளிப்பாக)க் கொடுப்பது எல்லா இமாம்களின் ஒருமித்த சொல்படி ஆகுமானதாக இருக்கும்.

கடன் கொடுப்பதற்கு ஒருவன் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவன் பொறுப்பாளி ஆகிவிடுவான்.(எனினும் இதில் இமாம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது)

 அடகு

 கொடுக்கும் கடனுக்கு நம்பிக்கைக்காக ஒரு பொருளை ஈடாகப் பெற்றுக் கொள்ளலாம். வக்பு செய்யப்பட்ட சொத்தையும், பிள்ளை பெற்ற உம்முவலத்(அல்லது சுர்ரியத்) என்ற அடிமைப் பெண்ணையும் ஈடாக வைப்பது கூடாது. சிறு குழந்தை, பைத்தியக்காரன் ஆகியோரின் பொருட்களை ஈடு வைக்கக் கூடாது. அதற்கு அதிகாரியாக இருப்பவர் தந்தையாக அல்லது பாட்டனாக இருப்பினும் சரி. எனினும், ஈடு வைத்து வட்டியில்லாமல் பொருளைப் பெற்று, அதில் வியாபாரம், விவசாயம் ஏதேனும் செய்து அவர்களின் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக வைக்கலாம்.

அமானிதப் பொருளை வைத்திருப்பவன், அவனுடைய கவனக்குறைவால் அப்பொருள் சேதமானலே தவிர அதற்குப் பொறுப்பாளியாக மாட்டான்.

ஈடு பிடிப்பவன் அதனைக் கைப்பற்றுமுன் உடைமைக்காரன், அதனை மற்றொருவனுக்கு அன்பளிப்புச் செய்வதினாலோ அல்லது மற்றொருவனிடம் ஈடு வைப்பதினாலோ முதல் ஈட்டை விட்டும் மீண்டு கொண்டவனாவான்.

ஈடு வைத்த பொருளை மற்றொருவனுக்கு ஈ:டு வைப்பதும், விற்பதும், வஃபு செய்வதும் ஈடுவைத்தவனுக்குக் கூடாது.

ஈடு வைத்தவனுக்கும்,  ஈடுபெற்றவனுக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டால் ஈடு வைத்தவனுடைய சொல்லே உண்மையாக்கப்படும்.

கடன் வாங்கிய ஒருவனுக்குப் பொருளிருக்கிறது என்று தெரிந்தால் அதனைத் தடை செய்து வைக்க வேண்டும். அது எவ்வளவாக இருப்பினும் சரி.

ஒரு கடனாளி எவ்விதப் பொருளாதார வசதியும் இல்லாதவன் என்று உறுதியானால் அவனுக்கு வசதி ஏற்படும்வரை அவனைத் தடை செய்யக் கூடாது.

அதேபோல் சாட்டுதல் (ஹவாலா) என்பது ஒருவனிடமிருந்து தனக்கு வரவேண்டிய பொருளை தான் கொடுக்க வேண்டிய மற்றொருவனுக்குக் கொடுக்கும்படி சாட்டி விடுதலாகும். அந்த சாட்டுதலால் சாட்டுகிறவன், சாட்டுதல் பெற்றவனுடைய கடனை விட்டும் நீங்கி விடுவான். அவ்வாறே சாட்டப்பட்டவன் சாட்டினவனுடைய கடனை விட்டும் நீங்கி விடுவான். சாட்டுதலைப் பொருந்திக் கொண்டவனுடைய உரிமை சாட்டப்பட்டவனின் மீது திரும்பி வரும். இது எல்லா இமாம்களுடைய ஏகோபித்த முடிவாகும்.

இவ்வாறு சாட்டப்பட்டபின் கொடுக்கல் வாங்கல் முடியவில்லையானால் சாட்டுதலைப் பொருந்திக் கொண்டவன் சாட்டியவனின் பால் திரும்பக் கூடாது.

கடன் பற்றிய எச்சரிக்கை

கஷ்டப்படும் முஸ்லிமான மனிதருக்கு எந்த முஸ்லிம் இரண்டு தடவை கடன் கொடுப்பாரோ அவருக்கு ஒரு தடவை ஸதகா செய்த நன்மை வழங்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا الصدقة بعشر أمثالها والقرض بثمانية عشر، فقلت يا جبريل ما بال القرض أفضل من الصدقة  قال: لأن السائل يسأل وعنده، والمستقرض لا يستقرض إلا من حاجة

سنن ابن ماجة

 ஸதகா செய்தால் பத்து மடங்கு நன்மையும்,கடன் கொடுத்தால் பதினெட்டு மடங்கு நன்மையும் வழங்கப்படும் என்று சுவனத்தின் வாசலில் எழுதப்பட்டிருந்ததை நான் மிஃராஜ் இரவில் பார்த்தேன்.கடன் ஸதகாவை விட சிறந்ததா?என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜிப்ரயீல் அலை அவர்கள்,தர்மம் கேட்பவன் தன்னிடம் இருந்தாலும் கேட்பான்.ஆனால் கடன் கேட்பவன் தனக்கு தேவையான போது மட்டும் தான் கேட்பான் என்று பதில் கூறினார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

தன் அவசியமான தேவைக்காக கடன் வாங்கிய ஒருவர் கடும் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவருக்கு கடனை நிறவேற்ற கால அவகாசம் தரவேண்டும் என அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ

கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள். இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் – (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.

கடன் வழங்கியவர் அவர் கொடுக்கும் அவகாசத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஸதகாவின் நன்மையை பெறுவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இன்னும் ஒரு படிமேலே, அந்த கடனை பெருந்தன்மையுடன் தள்ளுபடி செய்துவிட்டால் அல்லாஹ் அவருக்கு நிழலில்லாத அந்த மறுமை நாளில் நிழல் கொடுப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

கடன் கொடுப்பவர் விஷயத்தில் தாராள தன்மையுடனும்,விசாலமான மனதுடனும் நடந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் இஸ்லாம்,கடன் வாங்குபவர் விஷயத்தில் உச்ச கட்ட எச்சரிக்கை உணர்வை கடைபிடிக்கச்  சொல்கிறது.

கடன் பற்றிய விரிவான ஒழுங்குமுறைகளை கொண்ட வசனமே திருக்குர்ஆனின் மிகவும் பெரிய வசனமாகும்.

அவசியத்திற்காக கடன் வாங்கினாலும் கால தாமதம் செய்யாமல் அதை நிறைவேற்றுவதே சாலச்சிறந்ததாகும்.

மிகவும் சர்வசாதாரணமாகிப்போன கடன் விஷயத்தில் கடும் எச்சரிக்கையை இஸ்லாம் கடைபிடிக்கிறது.

இறந்தவரின் சொத்தை பங்கு வைக்கும் முன் அவரின் கடனை நிறைவேற்றச் சொல்கிறது. தகப்பனின் சொத்துக்கு பங்கு கேட்கும் மகன் அவரின் கடனுக்கு முதலாவதாக பொறுப்பெடுக்கச்சொல்கிறது,காரணம் கடன் அவரை மறுமையில் சிறைபிடிக்கும்

ஹழ்ரத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மத்திப்னு அக்வஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.அப்போது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் தூதரே! இதற்கு தொழவையுங்கள் என்றனர்  உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்றனர். இவர் ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று கேட்டபோது அதற்கும் இல்லை என்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மையித்துக்கு தொழ வைத்தார்கள்.

பின்பு இன்னொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டு தொழவைக்கச்சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர் மீது கடன் உள்ளதா?என்று கேட்டபோது –ஆம்!.என்றனர்.இவரின் கடனை நிறைவேற்ற ஏதும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டபோது,ஆம் மூன்று தீனார்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்று கூறியபோது அவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ வைத்தார்கள்.

பின்பு மூன்றாவது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது.

அவர் மீது கடன் உள்ளதா?என்று கேட்டபோது ஆம்! என்று பதில் கூறினர்.  அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர் தன் கடனை நிறைவேற்ற வேறு ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்று பதில் கூறினார்கள்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்களே தொழவைத்துக்  கொள்ளுங்கள்.என்றார்கள்.அப்போது அந்த சபையில் இருந்த அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாங்கள் தொழவையுங்கள்.இவர் கடனுக்கு நான் பொருப்பேற்றுக்கொள்கிறேன்.என்றதும் -நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழவைத்தார்கள்.                  –  புகாரி.

அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை சந்தித்தபோது- அபூ கதாதாவே! நீ வாக்களித்த அந்த கடனை நிறைவேற்றிவிட்டாயா?என்று கேட்டார்கள்.    அதற்கு நான் ஆம்!நிறைவேற்றிவிட்டேன் என்றதும் இப்போது இப்போது தான் அந்த மையித்தின் தோள் குளிர்ந்தது என்றார்கள்.

وفي جامع الترمذي بسند صحيح عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من فارق الروحُ الجسدَ وهو برئ من ثلاث دخل الجنة من الكبر،والغلول،والدين

உடலை விட்டும் உயிர் பிரிந்து விட்ட ஒருவர் பெருமை,மோசடி,கடன் இந்த மூன்றை விட்டும் நீங்கியிருந்தால் மட்டுமே சுவனம் நுழைவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

وفي رواية الحاكم ( إن صاحبكم حُبس على باب الجنة بدين كان عليه

கடனுக்காக சுவனத்தின் வாசலில் உங்கள் தோழர் ஒருவர் தடுக்கப்பட்டிருக்கிறார் என்று நபியின் சொல் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது பல ஜனாஸாக்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டது.அப்போது தங்களின் பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்தி, பின்பு தாழ்த்திவிட்டு, தங்களின் கையை நெற்றியில் வைத்து- சுப்ஹானல்லாஹ்!என்ன கடுமையான எச்சரிக்கை இறங்கிவிட்டது! என்றார்கள்.

மறுநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து அதற்கான விளக்கம் கேட்டபோது-  அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்ட ஒருவர்,மீண்டும் உயிர் பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு,மீண்டும் உயிர்பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு, இப்படி மூன்று தடவை அல்லாஹ்வின் பாதையில் தன் உயிரை தியாகம் செய்தாலும் அவர் மீது கடன் இருந்தால் அல்லாஹ் அவரை சுவனத்தில் நுழைக்கமாட்டான் என்று வஹி இறங்கியது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு

இதற்காகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடனை விட்டும் அதிகமாக அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். அதைப்பற்றி காரணம் கேட்டபோது இப்படி சொன்னார்கள்

கடன் வாங்கியவன் பொய்பேசுவான்.வாக்குறுதிக்கு மாற்றம் செய்வான் என்றார்கள்.

வட்டி

வட்டிக்கும் கடனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் மெல்லியதே!  கடன் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக பெறுகிற எதுவும் வட்டியே!

வட்டிக்கு இலக்கணம் சொல்லும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிச்சொன்னார்கள்.

பலன் தரும் எந்த கடனும் வட்டியாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

அடமானமாக வைக்கப்பட்ட வீட்டை பயன்படுத்துவது பலனை அடிப்படையாக கொண்ட கடனாகும் என்று மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

இருவர்களும் சம்மதித்துக்கொண்டாலும் இது ஹராமாகும் என்று இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وذكر ابن قدامة أيضا أن أحمد رحمه الله كان يقول عن الدور إذا كانت رهنا في قرض ينتفع بها المرتهن هو الربا المحض

மேலும் அவர்கள் கூறும் போது இது மிகத்தெளிவான வட்டியாகும் என்று இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 3:130)

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)

فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ

‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)’ (அல்குர்ஆன் 2:279)

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)

وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ ۖ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன் 30:39)

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு)    புஹாரி 6857

இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

‘இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!

‘அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!’ எனக் கூறினார்கள்.’

அறிவிப்பாளர் : ஸமுரா(ரலியல்லாஹு அன்ஹு)

புஹாரி 2085

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலியல்லாஹு அன்ஹு)            புஹாரி 5347

‘வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்லிம்)

‘ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்’ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: தாரகுத்னீ)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு). திர்மிதி, நஸயீ)

வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு). இப்னு அபீஹாத்திம் )

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு- புகாரி)

வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்

மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

‘ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்ன போது, ‘சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!’ என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, ‘1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

வட்டி ஹராம் என்பதில் பல வகைகள் உள்ளன. முதலாவது இரண்டிலொரு பகரத்தை அதிகமாக்குவது. இது தானியங்களிலும், தங்கம் வெள்ளியிலும் உண்டாகும். இரண்டாவது கடன் வட்டி. அதாவது கடன் கொடுத்தவனுக்கு கடன் வாங்கியவன் அதிகமாகக் கொடுக்க வேண்டுமென நிபந்தனையிடுவது. மூன்றாவது விற்ற சரக்கைக் கைப்பற்றாமல் விற்ற இடத்தை விட்டும் இரண்டிலொருவர் பிரிந்து செல்வது. நான்காவது தவணை வட்டி. இரண்டிலொரு பகரத்தில் தவணையை நிபந்தனையிடுவது. இந்த நான்கு வகையும் ஹராமாகும்.

வட்டி கொடுக்காவிட்டால் கடன் கிடையாது என்று ஒருவன் சொல்கிறான். இவனுக்கு அதைத் தவிர வேறு எவ்வித வழியும் இல்லையானால் நிர்பந்தத்திற்காக அவனிடம் கடன் வாங்கி வட்டியுடன் கொடுக்கலாம். அதனால் வட்டியின் பாவம் ஏற்படாது என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ‘அதிகம் கொடுப்பதை வட்டி என்று கொடுக்காமல் அவனுக்கு நேர்ச்சை என்று பெயர் வைத்துக் கொடுக்கலாம். அப்பொழுதுதான் பாவம் ஏற்படாது என்று இப்னு ஜியாத் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியுள்ளார்கள்.

வட்டியின் தற்போதைய உருவங்கள்:

ஒத்தி

ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். இது வட்டியாகும்.

ஏலச்சீட்டு:

ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.

ஆனால் குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.

அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.

தவணை முறையில் பொருள் வாங்குவது:

இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.

இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.

வங்கி வட்டி ஆகுமானதா? (Is Bank Interest permissible?)

இன்றைய சூழலில் பேங்கில் வேலை பார்ப்பது கூடுமா? பேங்கிலிருந்து வரும் வட்டி ஆகுமானதா? பேங்கிற்கு கடன்வாங்கியதில் வட்டி செலுத்தலாமா? என்பது பற்றி இரு கருத்துக்கள் இந்திய திருநாட்டில் உள்ளது. ஷாபிஈ மத்ஹப்பின் அறிஞர்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக் கொண்டுத்தான் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் இந்தியா தாருல் ஹர்ப் இல்லை. எனவே வட்டி வாங்குவது கூடாது என்கின்றனர். ஆனால் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் கூறும் கூற்றை பிரசுரம் மூலம் அறியலாம்.

ருவர் பேங்கு மூலம் கிடைக்கும் வட்டி கூடுமா? என்று எழுதி கேட்டிருந்தார். அதற்கு மௌலானா முப்தி முகமது ஷரீபுல்ஹக் அம்ஜதீ என்பவர் வட்டி கூடும் என்று பதில் அளித்தார். அதாவது தற்போது நம் நாட்டில் நடக்கும் அரசாங்கத்தின் வங்கியாகவும் அல்லது அதில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத சகோதரர்களின் வங்கிகளாக இருக்கும்பட்சத்தில் அதில் பணம் சேமித்தபின், அந்தப் பணத்தின் மீது அதிக தொகை கிடைப்பது அது முஸ்லீம்களுக்கு ஜாயிஸ் ஆகும். அதாவது கூடும். அந்த பணம் வட்டியல்ல என்று பதில் அளித்தார். அந்த பதில் முபாரக்பூர் அல்ஜாமியத்துல் அஷ்ரபியா என்னும் அரபிக்கலாசாலையின் மாதாந்திர பத்திரிகையில் 1989-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்தது. அதைப் படித்து பார்த்த முகமது அமீர்ஜான் என்பவர் மேலும் தெளிவுபடுத்த கேட்டிருந்தார். அதற்குப் பதிலும் அதே அஷ்ரபிய்யா பத்திரிகையில் மே, ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது. அப்பதிலில் அவர் கீழ்கண்ட நபிநாயகத்தின் மேலும் ஒரு வாக்கியத்தை தமக்கு ஆதாரமாக எழுதியுள்ளார்.

‘முஸ்லீம்களுக்கும், சுதந்திர அந்தஸ்துள்ள முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் நடுவில் வட்டி இல்லை’ (அதாவது அவர்களுக்குள் நடைமுறையில் இருக்கும் வட்டி லேவாதாவி வட்டி எனக் கருதப்படாது)

ஆதாரம்:ADDDIRAYA FITAKRIJIL HIDAYA ALA-HAMISHIL HIDAYA பக்கம் 70 பாகம் 3

இஸ்லாமிய சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத முஸ்லீம் அல்லாத நபா, அவர் சுதந்திரமனாவர் என்று இஸ்லாமிய சட்டம் கருதுகிறது. முஸ்லீம் அல்லாத அவர் கிறிஸ்துவரோ யூதரோ அந்நிலையுள்ளவர், வேறு யாராகவும் இருக்கலாம். அவர்களுக்கு இடையில் பணம் கடனாக கொடுக்கப்பட்டு, கொடுக்கல் வாங்கலில் அதிக தொகை பெறுவது, அத்தொகை பெறுவதோ, செலுத்துவதோ வட்டியெனக் கருதப்படாது. அந்த தொகைக்கு வட்டி என்றப் பெயர் வழங்குகிறது. ஆனால் அது சட்டப்பூர்வமாக வட்டியே ஆகாது என்று அவர் ஆதாரம் கொடுத்துள்ளார். இன்னும் அவர் கூறியதாவது, முன் நாம் வெளியிட்ட பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு சரியானதும், உண்மையானதும் என்றும் உறுதியாக எழுதியுள்ளார்.

அது அவ்வாறிருக்க இதற்கு முன் நம் இந்தியா நாட்டில் வட்டி கூடுமா என்பது பற்றி பத்வா இருக்கிறதா என்று ஆராயும்போது முற்காலத்திலேயே பத்வாக்கள் இருப்பது தெரிய வருகிறது. அவற்றை கீழ்காண்க:-

ஆங்கிலேயர் வந்து நம் நாட்டை கைப்பற்றிய பின் நம்நாடு சுதந்திரம் இழந்து விட்டது. மக்களோ அவர்களுக்கு அடிமையாகிவிட்டனர். அச்சமயம் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்களுக்கு பணம் கொடுத்து அதற்கு கிடைக்கும் வட்டி பெறலாமா? அல்லது பணம் வாங்கி வட்டி கொடுப்பது ஆகுமா? என்று கேட்டதற்கு தற்போது முஸ்லீம் ஆட்சி இல்லாததால் அவர்களிடமிருந்து கிடைக்கும் வட்டி பெறலாம். கொடுக்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் வட்டி கொடுப்பதில் தயக்கம் வேண்டும் என்று எச்சரித்துள்ளார். அந்த தீர்ப்பு அளித்தவர் அக்காலத்திலும்> நம் நாடு முழுவதிலும் எல்லா ஆலீம்களுக்கும் தலை சிறந்தவரான நாளது வரையிலும் மதிக்கப்பட்டு வருபவரான ஹஜ்ரத் மௌலானா ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி என்பவர் ஆவார். அதன் பின் பல வருடங்களுக்குப் பிறகு லக்னோ பரங்கி மகால் என்னும் இடத்தில் பெயர் பெற்ற ஆலீம்கள் குடும்பத்தில் பிறந்த கண்ணியமும், தலைசிறந்தவருமான மௌலான அப்துல் ஹய் என்பவரும்> ராம்பூர் நகரத்தில் உள்ள மௌலானா இர்ஷாத் உசேன் என்ற பெரியவரும் இந்த அரசாங்கத்pல் வட்டி கூடும் என்ற பத்வா கொடுத்துள்ளனர். அதை தவிர ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கலைக்கு தலைவரான மௌலானா மனாஜிர் ஹசன் கீலானி தேவ்பந்தி என்பவரும் பலகோணங்களில் ஆராய்ந்து வட்டி கூடும் என்று அளித்த பத்வா, ஹைதராபாத்திலிருந்து இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் ரஹ்பரேதக்கன் தினசரி பத்திரிகையின் 1338வது ஆண்டு இதழில் வெளிவந்துள்ளது. அதை அவர் அப்போதே விரிவாகவும் உற்சாகத்தோடும் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் பம்பாயிலிருந்து’உருது டைம்ஸ்‘ என்னும் ஒரு தினசரி வெளிவருகிறது. அந்த தினசரிக்கும் நிறைய மதிப்பும் அது நிறைய விற்பனையுமாகிறது. ஜனவரி மாதத்தில் முபாரக்பூர் அஷ்ரபியா மாத பத்திரிகையில் வெளிவந்த மேற்கண்ட மார்க்க தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அதனால் பற்பல நன்மைகள் ஏற்படக்கூடும் என்றும் பல உதாரணங்கள் கொடுத்தும் அதன் பல வெளியீடுகளில் கட்டுரைகள் வெளிவந்தன. அதை தவிர மௌலானா முகமது புரோகுல் காதிரி ASC என்பவர், பம்பாயிலுள்ள ‘அஷ்ரபிய்யாகரீப் நவாஸ்’ என்னும் மதரஸாவின் அரபிக்லிட்டரசர் புரோப்பசர் ஆவார். அவர் ‘மௌலானா அம்ஜதீ’ அவர்களுடைய மார்க்கத் தீர்ப்பை புகழ்வதோடு இந்திய அரசாங்க பேங்கு வகையறா மூலமும், நாட்டு சகோதரர்கள் மூலமும் கிடைக்கும் லாபத்தொகை, வட்டியே அல்ல. அதாவது வட்டிவகையில் சேர்ந்ததன்று. அது சுத்தமான இலாபமே என மிக ஆணித்தரமான ஆதாரத்தோடும் நுணுக்கமான தெளிவோடும் தீர்ப்பு அளித்ததோடு தெஹ்லவீ மௌலானா ஷா அப்துல் அஜீஸுடைய இன்னொரு தெளிவான தீர்ப்பையும் தனக்கு ஆதாரமாக நகல் செய்துள்ளார். இது கல்கத்தாவிலிருந்து 1989ம் ஆண்டு 1, ஜுலை ‘நவாயே-ஹபீப்‘ வராந்திர பத்திரிகையில் ‘பேங்கு மூலம் பெறும் – செலுத்தும் இலாபம் வட்டியே அல்ல’ என்ற தலைப்பில் வெளிவந்து உள்ளது. இது அனைத்தும் நம் இந்திய நாட்டுக்கு சம்பந்தமானதாகும். நம்நாட்டு பேங்கு, போஸ்டாபீஸ், இன்சூரன்ஸ் முதலிய இடங்களிலிருந்து கிடைக்கும் இலாபம் வட்டி> முஸ்லிம்களுக்கு தடையின்றி சுத்தமானது என்பது பொருளாகும். கடன்பெற்று வட்டி செலுத்துவதற்கும் தடையில்லை. அந்தப் பணத்தை எல்லா நற்காரியத்திற்கும் செலவு செய்ய தடை இல்லை என்றும், மேலும் அநேக பத்வாக்கள் உள்ளன. ஆனால் வட்டி வாங்குதல்,கொடுத்தல் விசயத்தில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். வட்டி பற்றிய, ஹியா ஆலிம்களின் கருத்தும் அதுவே. எந்தவேலை செய்தாலும் மனம் திருப்திபட்டு செய்வதுதான் சாலச்சிறந்தது. அதை அனுசரித்து இந்த பத்வாக்கள் வெளியிடப்படுகிறது. ஹைதராபாத்தில் தாருஸ்ஸலாம் கோ-ஆபரேட்டிவ் அர்பன் பேங்க் என்று 1987ம் ஆண்டில் ஹஜரத் மஷாஹிக் ஷாஆகா மொஹம்மத் தாவுத் அபுல் உலாஹி என்ற பெரியவரால் துவக்கப்பட்டு நல்ல சேவைகள் செய்து கொண்டு வருகிறது. சுல்தான் சலாவுத்தீன் உவைசி எம்.பி. என்பவரின் தூண்டுதலால் நவாப் மீர் நூருத்தின்கான் என்பவரின் முயற்சியிலும் அவர்களுடைய தலைமையில் துவக்கப்பட்டது. இது தவிர கர்நாடக மாநிலத்திலும் அமானத் பேங்க் என்ற பெயரால் ஒரு வங்கி சேவை செய்து வருகிறது. எல்லாம் வல்ல நாயகம் நம்மை தப்பான வழியிலிருந்து செல்வதை விட்டு காப்பாற்றி நேர்வழி செல்ல துணைபுரிவானாக! ஆமீன்.

 1. புகழும் பெயரும் பெற்று விளங்கும் அரபிக் அல்ஜாமி அதுல் அஷ்ரபியா என்னும் ‘அஷ்ரபியா’ மாத சஞ்சிகையின் முகவரி
 2. ‘Ashrafia, Mubarakpur Azamgarh District(U.P.) – 276404

குர்ஆன், ஹதீஸ், பிக்ஹு, ஆதாரங்கள் உருதுவில் கீழ்கண்ட புத்தகங்களில் நிறைய உள்ளன.

A.’Bank aur Dak Khana Ke Muafe Ka Sarih Hukum’ Rs.2.00

முகவரி: Manager,

Razvi Kitab Ghar,

No. 15, Gaibi Nagar,

Bhivandi -421 302

 1. THaqeequr Ribq Rs.5-00

By Maulana Iqbal Ahmed Suhail M.A., L.L.B. (Aligarh)

முகவரி: Manager,

Nizami Book Agency,

Budaun -243601

வங்கியின் வட்டி கூடும் என்பது பற்றி இரண்டாம் கட்டுரை தமிழாக்கம் கிடைக்குமிடம்

சையத் இஸ்மத் பாஷா சக்காப், கிள்ளை.

1-8-1989 – Hijri 1409. 12-Zulhaj

Saqaf Sahib,

Peria Taikal

Killai – 608 102.

வெளியீடு:

மனித உரிமை முன்னேற்ற சங்கம்,

24 கோரி குளசந்து,

ஜாபர்ஷா தெரு, திருச்சி 620008

கிளை: தம்மம்பட்டி.”

தல்கீன் ஓதுவது ஆகுமானதா?

தல்கீன் ஓதுவது ஆகுமானதா?

ஆக்கம்: மௌலவி S.L. அப்துர் ரஹ்மான் கௌஸி

நபியே! நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். ஏனென்றால் நல்லுபதேசம் நிச்சயமாக முஃமின்களுக்கு பயனளிக்கும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவன் கூறியுள்ளான்.

 1. ஒரு மனிதன் இறந்ததும் மண்ணறைக்குள் அடக்கம் செய்துவிட்டு திரும்புகின்ற மக்களின் பாதணியின் சப்தத்தை அந்த மைய்யித்துக் கேட்கின்றது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
 2. இறந்தவரின் உடலை கப்ரில் வைத்து நல்லடக்கம் செய்தபின் ஒருவர் அடக்கப்பட்டவரின் தலைமாட்டில் அமர்ந்து, இன்னார் மகனே! அல்லது இன்னார் மகளே! இறைவன் ஒருவன் என்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஈமான் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மறுஉலகாகிய மறுமைக்கு சென்றுள்ளாய். இப்போது உன்னிடம் இரு மலக்குகள் வந்து நாயன் யார்? உனது நபி யார்? உனது சகோதரர்கள் யார்? உனது கிப்லா எது? உனது இமாம் யார்? என்று கேட்பர். அதற்கு நீர் கொஞ்சமும் தயங்காது தைரியமாக எனது றப்பு அல்லாஹ், எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், எனது சகோதரர்கள் முஸ்லிம்கள், எனது கிப்லா கஃபா, எனது இமாம் குர்ஆன் என்று சொல்வீராக! என்று சொல்லியபின் அவரை விட்டும் விடை பெறுவது என்பதாகும். அதனை அவர் கேட்பார். (நூல்: தப்றானி)
 3. நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுள் ஒருவரான அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு வஸியத்து செய்துள்ளார்கள். அதாவது ஒரு ஒட்டகத்தை அறுத்து அதன் மாமிசத்தை பங்கு வைக்க எந்தளவு நேரம் தேவைப்படுமோ அந்த அளவு எனது கப்ருக்குப் பக்கத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், எனது இரட்சகனின் தூதர்கள் அதாவது மலக்குளிடம் நான் எதனை உரையாட வேண்டும் என்பதை உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் உங்களின் மூலம் நான் மருகுதல் பெறவும்’ என்றார்கள். நூல்: முஸ்லிம், மிஷ்காத் 149)
 4. ஸஹதிப்னு முஆத்ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்யப்பட்டபின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஸ்பீஹும், தக்பீரும் ஓதினார்கள். உடனே ஸஹாபாக்கள் அவைகளை அதிகமாக ஓதினார்கள். பின்பு ஸஹாபாக்கள் காரணத்தை வினவியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: ‘ஸாலிஹான இந்த நல்லடியாரை கப்ரு நெருக்கிக் கொண்டிருந்தது. அல்லாஹ்தஆலா கப்ருடைய நெருக்கத்தை அகற்றும் வரைக்கும் நான் தஸ்பீஹும், தக்பீரும் ஓதிக் கொண்டே இருந்தேன்’ என்றார்கள். (நூல்: அஹ்மது மிஷ்காத்)

 தல்கீன் பற்றி இமாம்களின் கருத்துக்கள்.

தல்கீன் ஓதுகின்றவன் மரணித்தவரின் தலைப்பக்கமாக நிற்பதும், மூன்று முறை ஓதுவதும் சுன்னத் ஆகும். வயது வராத சிறுவனுக்கு தல்கீன் ஓதுவதில் மாத்திரரம் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. சிறுவர்களுக்கு கப்று – மண்ணறையில் கேள்வி உண்டு என்று கூறுவோர் அவர்களுக்காக தல்கீன் ஓதுவது சுன்னத் என்றும், அவர்களுக்கு கேள்வி இல்லை என்போர் அது சுன்னத்தில்லை என்றும் கூறுகின்றனர்.

 1. தல்கீன் ஓதுவது சுன்னத் என்று உம்தத்துஸ் ஸாலிக், பத்ஹுல் முஈன், மஹல்லி பேன்ற நூற்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 2. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தல்கீன் ஓதுவது பற்றி கேட்டதற்கு, ‘ஆம்! அது சுன்னத்தான காரியம்’ என்று சொன்னார்கள்.

எல்லாக் காலங்களிலும் அனைத்து நகரங்களிலும் எவ்வித மறுப்பும் இன்றி தல்கீன் ஓதிவரும் நடைமுறை ஒன்றே தல்கீன் ஓதுவதற்கு போதுமான சான்றாகும். (ஆதாரம்: றூஹ் பக்கம் 20)

 1. இமாம் இப்னு ஹஜர் மக்கி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: புத்தியுள்ள பருவமடைந்த மைய்யித்திற்கு தல்கீன் ஓதுவது சுன்னத்தாகும்.

(ஆதாரம்: துஹ்பா பாகம்3, பக்கம் 207)

 1. இமாம் ஷிஹாபுத்தீன் ரமலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தல்கீன் ஓதுவது சுன்னத்தா அல்லது மக்ரூஹா? தல்கீன் சொல்லிக் கொடுப்பது அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பா? அல்லது அடக்கம் செய்யப்பட்ட பின்பா? என்று கேட்டதற்கு சிறு குழந்தை தவிர்ந்தவர்களுக்கு மைய்யித் அடக்கம் செய்யப்பட்டபின் தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத் ஆகும்.

             (ஆதாரம்: பதாவா றமலி பாகம்2, பக்கம் 38)

 1. ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நபிமார்களுக்கும் சிறுவர்களுக்கும் கப்று விசாரணையோ கப்றின் வேதனையோ முன்கர் நகீரின் கேள்விகணக்கோ கிடையாது. அதனால், ஷாபி மத்ஹபின் அஸ்ஹாபுகள் சிறுவர்கள் (பருவம் எய்த முன்) அடக்கம் செய்ய்ப்பட்ட பின் அவர்களுக்கு தல்கீன் கூறப்படமாட்டாது என்றும் தல்கீன் சொல்லிக் கொடுப்பது பருவம் அடைந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும். இமாம் நவவி அவர்கள் ரௌலா என்ற நூலிலும் ஏனைய அவர்களின் நூற்களிலும் இவ்வாறுதான் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 152)
 2. வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தினரே மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதக் கூடாது என்று முதன்முதலில் வாதித்தனர். மரணித்தவர் கப்ரில் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவதையும், கப்ரில் விசாரணை செய்யப்படுவதையும் நிராகரித்தனர். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் மரணித்தவர்களுக்கு தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத்தாகும். (ஆதாரம்: ரத்துல் முக்தார் பாகம்1, பக்கம் 571)
 3. தல்கீன் ஓதாதவரும், ஓத மறுப்பவரும் முஃதஸிலா இயக்கத்தை சார்ந்தவராகும். இவர்கள் மய்யித்தை உணர்வற்ற சடமாகவும், மரணத்தின் பின் கப்ரில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதையும் நிராகரிக்கின்ற வழிகெட்ட அமைப்பை சார்ந்தவர்கள்.

எனவே தல்கீன் ஓதுதல் நல்ல காரியம் என்பதற்கு அது தொடர்பான நபி மொழிகளும், இமாம்களின் கூற்றுக்களும் அதிகம் உள்ளன. இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் மனக்கண் தெளிவான ஒருவனுக்கு போதுமானவையாகும். எனவே தல்கீன் ஓதுதல் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளிடமும் திட்டமான அறிவு ஞானமுள்ளவர்களிடமும் ஸுன்னத் ஆன விசயமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் கூட அது கூடாத விசயமென்று சொன்னது கிடையாது.

حيض – மாதவிடாய் பற்றிய சட்டங்கள்

மாதவிடாய் என்பது ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கும் வேளையில் அப்பெண்ணின் கருவறையின் கடைசிப் பகுதியிலிருந்து வெளிப்படும் இரத்தமாகும். ஹைழ் ஏற்படுவதற்கு மிகவும் குறைந்த வயது ஒன்பது வயதாகும்.  ஓன்பது வயது நிரம்ப 16 நாட்களுக்குக் குறைவான நாட்களில் இவ்விதம் இரத்தம் வெளிப்பட்டால் அது ஹைழேயாகும். (ஹைழ்) மாதவிடாயின் குறைந்த கால அளவு ஓர் இரவு பகலாகும் (ஒரு நாளாகும்) கூடிய அளவு 15 நாட்களாகும். இரண்டு ஹைழுக்கு இடையில் ஏற்படும் சுத்தத்தின் குறைந்த கால அளவு 15 நாட்களாகும். அதிகத்திற்களவில்லை. பல வருடங்களாகவும் ஆகலாம். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட ஹைழின் மொத்த நேரம் ஒரு நாளை விடக் குறைவாக இருப்பின் அது ஹைழல்ல. எனவே அக்காலத்தில் விட்ட தொழுகைகளை கழாச் செய்வது அவசியமாகும். ஹைழின் குறைந்த நேரமான ஒரு நாளோ அல்லது அதிகக்காலமான 15 நாட்களோ அல்லது அதற்கு இடைப்பட்ட நாட்களோ ஹைழ் நின்று விடுமாயின் அது ஹைழேயாகும். ஹைழின் அதிகபட்சக்காலமான 15 நாட்களையும் கடந்து ஒரு பெண்ணுக்கு இரத்தம் ஓட்டம் இருந்தால் استحاضة (பெரும்பாடு) ஆகும். அப்பெண்ணை (مستحاضة) பெரும்பாட்டுக்காரி எனப்படும். ஒரு பெண்ணுக்கு ஒரு சமயம் இரத்தம் ஒரு சமயம் சுத்தமாகியும் இப்படியாக ஏற்பட்ட நிலை 15 நாட்களை தாண்டாமலும் அந்நிலையில் ஏற்பட்ட இரத்தத்தின் கூட்டுத்தொகை ஒரு நாளை விடவும் குறைவாக இருப்பின் இரத்தம் ஏற்பட்ட அக்காலமும் சுத்தமாயிருந்த அக்காலமும் ஹைழாகவே கணிக்கப்படும்.

நிஃபாஸ் எனும் பிள்ளைப்பேறு தொடக்கின் குறைந்த காலம் ஒரு நொடியாகும். அதிகம் 40 நாட்களும் மிக அதிகம் 60 நாட்களுமாகும். அதற்கும் அதிகமாக ஏற்பட்டால் அது استحاضة ஆகும்.

ஹைழ், நிஃபாஸால் ஹராமாகுபவை:

பெருந்தொடக்கால் ஹராமாகுபவையும், நோன்பும், பள்ளியை அசுத்தமாக்கிவிடும் என பயந்தால் பள்ளியினுள் கடந்து செல்வதும் உடலுறவு கொள்வதும், விவாகரத்தும், சிறு தொடக்கை நீக்குவதாக நிய்யத் வைத்து வுளு செய்வதும் ஹராமாகும். இரத்தம் வெளியேற்றம் (ஹைழ் ,  நிஃபாஸ்) நின்று விட்டால் நோன்பு, தலாக், பள்ளியினுள் கடந்து செல்வது, நிய்யத்துடன் வுளு செய்வது ஆகியவை கூடும். எனினும் மற்றவைகளில் ஹராம் எனும் சட்டம் குளித்த பின்னே தான் நீங்கும்.

مستحاضة பெண்மணி வுளுச் செய்யுமுன் தன் அபத்தைக் கழுவி இரத்தம் வடியாத அளவிற்கு கட்டுப்போட்டு அதன் பின்னே தான் வுளு செய்ய வேண்டும். செய்த பின் அவ்ரத்தை மறைப்பது, பாங்கு, ஜமாஅத்தை எதிர்பார்ப்பது போன்ற

தொழுகை சம்பந்தப்பட்ட காரியங்களைத் தவிர மற்ற எதற்காகவும் தொழுகையை பிற்படுத்துதல் கூடாது. அவ்வாறு பிற்படுத்தினால் மீண்டும் மேற்சொன்ன காரியங்களை செய்ய வேண்டும். இது போன்று மேற்சொன்ன ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தொழுகைக்கும் செய்ய வேண்டும். மேலும் سلس البول (தொங்கு நீர்) உள்ளவனுக்கும் மேற்சொன்ன சட்டமேயாகும்.

உளு இன்றி குர்ஆனைத் தொடலாமா?

குர்ஆனைத் தொடுதல்:

குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும். அதாவது உளு இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர், மாதவிடாய் பெண்கள் மற்றும் பிள்ளைப் பேறு உதிரப் போக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம் குர்ஆனைத் தொடக்கூடாது.

பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டுமென்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் மூன்று:

 1. இறைமறை வேதம் அல்குர்ஆன்
 2. இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளான ஹதீது.
 3. நபித் தோழர்களின் ஏகோபித்த முடிவான இஜ்மாஃ

குர்ஆன்: இறைவன் கூறினான்:

لَا يَمَسُّهُ اِلَّا الْمُطَّهَّرُوْنَ (الواقعة 79

‘தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 56:79)

இச்செய்தியின் மூலம் இறைவன் குர்ஆனின் மாண்பை வெளிப்படுத்துகிறான். தூய்மையானவர்கள்தான் என்று கூறி ஒரு வரைமுறையை இறைவன் விதித்துவிட்டதால் மற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற அழுத்தமான அர்த்தம் இவ்வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.

(நூல்: ஃதகீரா 1-238 ஆசிரியர் -கர்ராஃபீ)

மனிதர்களில் தூய்மையானவர்கள் என்பதன் பொருள்:

 • ஷிர்க் எனும் இணைவைப்பு, குஃப்ர் எனும் இறைமறுப்பு இவ்விரண்டை விட்டும் நீங்கி உளத்தூய்மையுடன் இருப்போர்.
 • புலன்களுக்குத் தெரிகின்ற நஜீஸ் எனும் அசுத்தத்தை விட்டும் உடல் தூய்மையாக இருப்போர்.
 • ஹதஃத் எனும் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கை விட்டும் நீங்கியிருப்போர்.

மேற்கண்ட வசனத்திலுள்ள வாசகம் வெளித்தோற்றத்தில் அமைந்திருந்தாலும் கட்டளை வாக்கியமாகவே இங்கே கருதப்படும்.

(நூற்கள்: தஃப்ஸீர் பஙவி 5-301, தஃப்ஸீர் இப்னு கதீர் 4-299)

ஹதீது:

عَنْ حَكِيْمِ ابْنِ حِزَامِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: لَمَا بَعَثَنِيْ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم اِلٰى اليمن قال :لَاتَمْس القُرْآنَ اِلَّا وَاَنْتَ طَاهِرٌ

ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையானவர்களாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொட வேண்டும். (இல்லையென்றால் தொடக்கூடாது)’

நூற்கள்: ஹாகிம் எண்: 6066, தப்ரானி (கபீர்) எண்: 306, தார குத்னீ எண்: 366)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِي الله عنه قَالَ: قَالَ النَبِيُّ صلى الله عليه وسلم لَايَمَسَّ الْقُرْآنَ اِلَّاطَاهِرٌ

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்: ‘பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

நூற்கள்: தாரகுத்னீ 383, தப்ரானி (ஸஙீர்) 1160

عَنْ عُثْمَانِ بِنِ اَبِي العَاصِ قَالَ: وَفَدْنَا عَلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فوجدُوْنِيْ اَفْظَلَهُمْ اَخَذًا لِلْقُرْآنِ وَقَدْ فَظَلْتَهُمْ بِسُوْرَةَ البَقَرة قَالَ النَّبِيُ صلى الله عليه وسلم قَدْ اَمَّرْتُكَ عَلٰى اَصْحَابِكَ وَاَنْتَ اَصْغَرُهُمْ وَلَا يَمَسَّ الْقُرْآنَ اِلا وانت طاهر (رواه التبراني فى الكبير

உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘நாங்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்தோம். எங்களில் குர்ஆனை நன்கு ஓதக் கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்னிடம் சொன்னார்கள். ‘நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும்போது தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

(நூல்: தப்ரானி (கபீர்) 8255)

عن عبد الله بن ابي بكر ابن محمدبن عمرو بن حزم عن ابيه عن جدّه قال: كان فى كتاب النبي صلى الله عليه وسلم لعمروبن حزم: لا يمس القرآن الّا علٰى طهر(رواه مالك وابن حبان والدار مي والبيهقى والدار قطني

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது. ‘து|ய்மையானவரான நிலையில்;தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

நூற்கள்: முஅத்தா 466, தாரமி 2195, பைஹகி 376, தாரகுத்னி 385, இப்னு ஹிப்பான் 6703.

குர்ஆன் ஓதக்கூடாத நிலைகள்:

 • குளிப்பு கடமையானவர்கள் – ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குர்ஆனை ஓதக் கூடாது.
 • மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது.
 • பேறுகால உதிரப் போக்குள்ள பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது. உளு இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடாமல் ஓதுவது கூடும்.

சான்றுகள்:

عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقرأ الحائض ولا الجنب شيئا من القرآن (رواه الترمذي والبيهقي فى السنن الكبري والبن عساكر والدار قطني وابن ماجة

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஆனால் குளிப்பதற்கு கடமையான நிலையில் ஓதிக் காண்பிக்க மாட்டார்கள்’.

அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதீ எண்: 136

عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يقرونا القرآن علٰى كل حال مالم يكن جنبا (رواه الترمذي

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிவறை சென்று வந்த பின்னால் குர்ஆன் ஓதுவார்கள். மாமிசம் உண்பார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவதிலிருந்து தடுப்பது குளிப்பு கடமை என்ற நிலை மட்டுமே.

அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு நூல்: தப்ரானி 6873.

عن علي انه اتي بوضوء فتوضأ وضوءه للصّلاة قال: هٰكذا رايت رسول الله  توضأ ثمّ شيئا من القرآن ثم قال: هٰذا لمن ليس بجنب قاما الجنب فلا ولآيه     (رواه احمد

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உளு செய்யும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தொழுகைக்கு உளு செய்வது போல் உளு செய்து விட்டு கூறினார்கள், ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளு செய்யும்போது இவ்வாறே நான் பார்த்தேன். பிறகு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனில் சில வசனங்கள் ஓதிய பிறகு கூறினார்கள். குளிப்பு கடமையில்லாத நபருக்கு குர்ஆன் ஓதுவது கூடும். ஆனால் குளிப்பு கடமையானவரோ ஒரு வசனம் கூட ஓதக் கூடாது.

இஜ்மாஃ

இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது சகோதரியின் இல்லத்திற்கு வருகை தந்தபோது குர்ஆன் ஓதப்படும் ஓசையைக் கேட்டார்கள். பிறகு தனது சகோதரியிடம் கேட்டார்கள்.

فقال عمر: اعطوني الكتاب الذي عندكم اقراه

‘உங்களிடம் உள்ள குர்ஆனை என்னிடம் கொடுங்கள்.’

فقالت له اخته: انك رجس ولا يمسه الا المطهرون فقم واغتسل و توضَّأ

‘நீங்கள் அசுத்தத்தில் உள்ளீர்கள். இக்குர்ஆனை சுத்தமானவர்கள் தான் தொட வேண்டும். ஆகவே எழுந்து குளித்து விட்டு அல்லது உளு செய்து விட்டு வாருங்கள்.’

فقام عمر فتوضأ ثم اخذ الكتاب فقراطه (رواه الدارمي والبيهقي فى دلائل النبوة

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து சென்று உளு செய்து விட்டு குர்ஆனை எடுத்தார்கள். தாஹா எனும் அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: பைஹகி (தலாயிலுன்னுபுவ்வா) 546

ثم رجع فقلنا له : توضأ يا ابا عبدالله لعلنا ان نسألك عن آي من القرآن قال: فاسألوا فاني لا امسه انه لا يمسّه الا المطهرون قال فسالناه فقرأ علينا قبل ان يتوضّا (رواه ابن ابي شيبة والبيهقي فى السنن الكبرى)

அப்துர் ரஹ்மான் இப்னு யஜீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அவர்கள் கழிவறை சென்று வந்தார்கள். அவர்களிடம் நாங்கள் கூறினோம். நீங்கள் ஒளு செய்து கொள்ளுங்கள். நாங்கள் குர்ஆனில் சில வசனங்கள் பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறோம்.

ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களைப் பார்த்து சொன்னார்கள்: ‘என்னிடம் கேளுங்கள். நான் குர்ஆனை தொடப் போவதில்லையே. குர்ஆனைத் தொடுவதற்குத்தான் தூய்மை அவசியம். பிறகு அவர்களிடம் (சில கேள்விகள் கேட்டோம்) அவர்கள் உளு செய்வதற்கு முன்பாக சில வசனங்களை எங்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.

நூற்கள்: இப்னு அபீஷைபா எண் 1100, பைஹகீ 416

விவாதம்: 1

56-79 வசனத்தில் இறைவன் கூறிய வேதம் தற்போது மக்கள் கைகளில் தவழும் குர்ஆனல்ல. வானுலகிலுள்ள லவ்ஹுல் மஹ்ஃபூல் பலகையில் எழுதப்பட்ட வேதத்தையே குறிக்கிறது.

மேலும் இவ்வசனத்திலுள்ள தூய்மையானவர்கள் என்பது மலக்குகளையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஏனென்றால் அவர்கள் தான் பாவம் மற்றும் இணைவைப்பிலிருந்து தூய்மையானவர்கள்.

விளக்கம்:

لا يمسه الّا الطهرون

தூய்மையானவர்களைத் தவிர (வேறு எவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்(56-79)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள வேதம் குர்ஆனை குறிப்பதுபோல மக்கள் கைகளிலுள்ள குர்ஆனையும் குறிக்கும். காரணம் இவ்வசனத்திற்குப் பிறகு,

تنزيل من رب العالمين

அகிலங்களின் அதிபதியி(இறைவனி)டமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டது.’ (6-80)

என்று கூறப்பட்டுள்ளது. இறைவனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்ட குர்ஆன் என்பது மனிதர்களின் கரங்களிலுள்ள குர்ஆனைத்தான் குறிக்குமே தவிர லவ்ஹுல் மஹ்பூலிலுள்ள குர்ஆனை அல்ல. எனவே தூய்மையானவர்களே தொட வேண்டும் என்ற வசனத்திலுள்ள வேதம் விண்ணுலகிலுள்ள குர்ஆனையும், மண்ணுலகிலுள்ள குர்ஆனையும் அறிவிக்கும். ஏனெனில் எதார்த்தத்தில் இரண்டும் ஒன்றே.

இவ்வசனத்திலுள்ள தூய்மையானவர்கள் என்பது மலக்குகளை மற்றும் மனிதர்களை குறிக்கும். மலக்குகள் மட்டும் தான் குறிக்கும் என்ற சிலரது கருத்தை ஒருவாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட அதுவும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்குத்தான் வலு சேர்க்கிறது.

அதாவது விண்ணிலுள்ள குர்ஆனை அங்கிருக்கும் தூய்மையானவர்கள் தொடுகிறார்கள் என்றால், அதுபோன்று மண்ணுலகிலிருக்கும் குர்ஆனையும் இங்குள்ள தூய்மையானவர் தான் தொட வேண்டும் என்ற கருத்தை இவ்வசனம் நமக்கு பாடமாக போதிக்கிறது.

மேலும் மண்ணுலகிலுள்ள குர்ஆன் பரிசுத்தம் வாய்ந்ததென்று இறைவன் குர்அனில் தெளிவுபடுத்துகிறான்.

رَسُوْلٌ مِّنَ اللهِ يتْلُوا صُحَفًا مُّطَهَّرةَ(البينة :2

இறைவனிடமிருந்து வந்த தூதர் தூய்மையான ஏடுகளை ஓதுவார் (98:2)

فِيْ صُحْفٍ مُكَرَّمَةٍ مَّرْقُوْعَةٍ مُّطَهَّرَةِ ( عبس : 13-14

‘இது கண்ணியமிக்க உயர்வுள்ள தூய்மையான ஏடுகளில் உள்ளது. வேதங்கள் தூய்மையானவை என இறைவன் அடையாளம் காட்டி விட்டான். ஆகவே சுத்தமில்லாதவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது.

நூல்: ஷரஹுல் உம்தா (1:384)

விவாதம் 2:

இறைவன் கூறினான் هُدًا لِنَّاسِ(البقرة : 185இந்த வேதம் மக்களனைவருக்கும் நேர்வழி காட்டக் கூடியது.’

இறைநம்பிக்கையுள்ள தூய்மையானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டும் என சட்டமிருந்தால் இறைமறுப்பாளர்கள் எவ்வாறு குர்ஆனைத் தொட முடியும்? ஓத முடியும்? எவ்வாறு நேர்வழி பெற முடியும்? குர்ஆன் எல்லோருக்கும் நேர்வழி காட்டும் என இறைவன் கூறியது நடைமுறையில் சாத்தியமற்றதாகி விடுகிறது. இது குர்ஆன் மக்களை சென்றடைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சியாகும்.

விளக்கம்:

குர்ஆன் மொழி பெயர்ப்புகளை தமிழ்- ஆங்கிலம் மற்றும் பிற மொழி பெயர்ப்புகளை இறைமறுப்பாளர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் அதைப் படித்து புரிவதற்கும் இறைவனை அறிவதற்கும் மற்றும் இஸ்லாம் மார்க்கத்தை தெரிவதற்கும் வாய்ப்புண்டாகும்.

தர்ஜமாவில் குர்ஆன் வசனங்களிலிருந்தாலும் இறை மறுப்பாளர்கள் அதைத் தொடுவதற்கும் தடையில்லை. ஏனென்றால் தர்ஜமாவிற்கு குர்ஆன் என்று கூறப்படாது. குர்ஆனின் சட்டம் குர்ஆனுக்குத்தானே தவிர தர்ஜமாவிற்கு அல்ல.

அதேபோல குர்ஆனுக்கு அரபி மொழியில் விளக்கம் எழுதப்பட்ட தப்ஸீருக்கும் குர்ஆன் என்று சொல்லப்பட மாட்டாது. தப்ஸீர் என்பது குர்ஆனின் விரிவுரை நூலாகும். எனவே குர்ஆனுக்குரிய சட்டம் இதற்குக் கிடையாது.

இறை மறுப்பாளர்களால் படிக்கவும், புரியவும் முடியாத அரபி மொழியில் அமைந்த மூல குர்ஆன் பிரதியைக் கொடுக்காமல் படித்துப் புரியும் வகையிலுள்ள மொழி பெயர்ப்பு தர்ஜமாக்களை கொடுக்க வேண்டுமென்றுதான் சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் கூறுகின்றனர்.

وانزلنا اليك الذكر لتبين لناس مانزل اليهم (النحل : 44

நபியே! மக்களுக்கு தெளிவுபடுத்த  வேண்டுமென்பதற்காக உங்களுக்கு குர்ஆனை இறக்கி வைத்தோம்.’

لقد من الله على المؤمنين اط بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته يزكيهم ويعلمهم الكتاب والحكمة ( آل عمران : 164

‘இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்து இறைவன் உறுதியாக பேரருள் புரிந்துள்ளான். அவனுடைய வசனங்களை அவர்களுக்கு அவர் ஓதிக்காட்டுவார். அவர்களை தூய்மைப்படுத்துவார். வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்று கொடுப்பார்.’ (3-164)

குர்ஆன் அரபி மொழியிலிருப்பதால் அரபி பேசுபவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ள இயலுமென்றிருந்தால் இறைவன்  திருத்தூதரை அனுப்பி வைத்திருக்க மாட்டான். மக்களுக்கு விளக்கமளிக்க மற்றும் கற்று கொடுக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்க மாட்டான்.

அதிய்யி இப்னு ஹாதிம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘நோன்பு காலத்தில் கருப்பு கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள். (2-187) என்ற இறைவசனம் இறங்கிய போது கறுப்புக் கயிறொன்றையும், வெள்ளைக் கயிறொன்றையும் எடுத்து என் தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டேன். இரவு முழுவதும் கவனித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தெளிவாகவில்லை. காலையில் இறைத்தூதர் நபிகளாரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினேன். அவர்கள் கூறினார்கள்: ‘கருப்புக் கயிறு என்பது இரவின் இருளையும், வெள்ளைக் கயிறு என்பது வைகறை வெளிச்சத்தையும் குறிக்கும்.’

நூற்கள்: புகாரி எண்: 1783,  முஸ்லிம் எண் 1824

ولقد يسرنا القرآن للذكر فهل من مذّكر (القمر:17

 ‘ஓதி அறிவுரை பெற குர்ஆனை திண்ணமாக நாம் எளிதாக்கியுள்ளோம். அறிவுரை பெறுவோர் உண்டா?  (54-17)

ஓதுவதற்கும் விளக்கமளிக்கப்பட்டால் விளங்குவதற்கும் மேலும் அறிவுரை பெறுவதற்கும் குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது என்றே இவ்வசனத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் என்னதான் தெளிவுபடுத்தினாலும் எல்லோராலும் விளங்க முடியாத எத்தனையோ நூல்கள் இவ்வையகத்தில் உண்டு. இறைமறை வேதம் குர்ஆன் அவ்வாறல்ல என்பதுதான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

விவாதம் 3

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திஹ்யத்துல் கல்பி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தனது தூதராக ரோமபுரி மன்னர் ஹெர்கலிஸிடம் அனுப்பி வைத்தார்கள். இஸ்லாத்தில் இணைய அழைப்பு விடுத்து அவருக்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தனுப்பினார்கள். அக்கடிதத்தில் கீழ்காணும் இவ்வசனம் எழுதப்பட்டிருந்தது.

ياَ اَهْلَ الكِتَابِ تَعَالَوْ اِلٰى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ اَلَا نَعْبُدَ اِلَّا الله وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَخَذَ بَعَضُنَا بعضا اَرْبَابًا مِن دُوْنِ اللهِ فَاِنْ تَوَلَّوْا فَقولوا اشهدوا بِاَنَّا مسلمون (ال عمران: 64

‘வேதமுடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியிலுள்ள பொதுவான விசயத்தின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம். அல்லாஹ்வைத் தவிர நம்மில் யாரும் எவரையும் தெய்வங்களாக ஆக்கக் கூடாது. அவர்கள் புறக்கணித்தால் உறுதியாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறிவிடுங்கள்’ (3:64)

நூற்கள்: புகாரி எண் 6,  முஸ்லிம் எண் 3322

இறைவசனம் எழுதப்பட்ட அக்கடிதத்தை இறைமறுப்பாளரான ஹெர்குலிஸ் தொடுவார் என்று தெரிந்தேதான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்தனுப்பியுள்ளார்கள். தொடுவது கூடாது என்றிருந்தால் இறைவசனத்தை அக்கடிதத்தில் எழுதியிருக்க மாட்டார்கள்.

இறைமறுப்பாளர்களுக்கே தொடுவது கூடும் எனும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஏன் கூடாது?

விளக்கம்:

குர்ஆனுடைய வசனம் எழுதப்பட்ட கடிதத்தை சுத்தமில்லாமல் தொடலாம் என்பதற்குத் தான் இந்த ஹதீஃத் ஆதாரமே தவிர குர்ஆனையே தொடலாம் என்பதற்கல்ல. அது போன்ற கடிதத்திற்கு குர்ஆன் என்று கூறப்படாது. எனவே குர்ஆனுடைய சட்டம் இதற்கு பொருந்தாது.

அல்ஹாஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹெர்கலிஸ் மன்னனுக்கு எழுதிய கடிதத்தில் இறைவசனம் அல்லாமல் வேறு செய்திகளும் எழுதப்பட்டிருந்தன. இக்கடிதம் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தஃப்ஸீர் மற்றும் ஃபிக்ஹ் நூற்களைப் போன்றுள்ளதால் அவற்றிற்குரிய சட்டமே இக்கடிதத்திற்கும் பொருந்தும்.

விவாதம் 4

ஈமான் இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் தூய்மையானவனே! ஏனெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பினார்கள்.

اِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ (رواه البحاري و مسلم

‘உறுதியாக இறைநம்பிக்கையாளன் அசுத்தமாக மாட்டான்.’

நூல்: புகாரி 276,   முஸ்லிம் 556

எனவே உளு இல்லாமல் குர்ஆனைத் தொட எத்தடையுமில்லை.

விளக்கம்:

இஸ்லாமிய மார்க்கத்தில் சுத்தம் இருவகைப் படும்.

 1. உள்ள சுத்தம். 2. உடல் சுத்தம்.

ஈமான் – இறைநம்பிக்கை கொள்ளாமல் இணை வைப்போர் அனைவரும் உள்ளம் அசுத்தமானவர்கள். இவர்களைப் பற்றி இறைவன் அருள்மறையில் கூறினான்:

اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجِسُ (التوبة :28

‘இணை வைப்போரெல்லாம் உறுதியாக அசுத்தமானவர்களே’

இறை மறுப்பாளர்களின் உடலும், உடையும் தூய்மையாக இருந்தாலும் அவர்கள் அசுத்தமானவர்களே என்று இவ்வசனம் கூறுவதற்குரிய காரணி அவர்களின் உள்ளங்களை கருத்தில் கொண்டே தவிர அவர்களின் உடல்களை கவனித்தல்ல என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இணைவைப்பை விட்டுவிட்டு ஈமான் – இறைநம்பிக்கை கொள்கின்றபோது உள்ளம் தூய்மை பெறுகிறது. இதையே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பினார்கள்.

‘உறுதியாக இறை நம்பிக்கையாளன் அசுத்தமாக மாட்டான்’. நூல்: புகாரி 276.

இத்தகைய இறைநம்பிக்கையாளர்களுக்கு உடல் சுத்தம் அவசியமென இஸ்லாம் மார்க்கம் போதிக்கிறது. அதனால்தான் உளு, குளிப்பு மற்றும் நஜீஸ் அகற்றுதல் போன்ற சட்டங்கள் அவர்களுக்கு உண்டு என்பதையும் இஸ்லாம் சொல்லிக் காட்டுகிறது.

இறைநம்பிக்கையாளன் தூய்மையானவன். எனவே குர்ஆனைத் தொட உளு அவசியமில்லை என்ற வாதத்தை வஹ்ஹாபிகள் முன்வைத்தால் தொழுகைக்கும் ஒளு அவசியமில்லை என்ற அபாயகரமான அர்த்தமல்லவா வந்து விடும். தொழுகைக்கு உளு கட்டாயம் என்பதற்கு சான்றுகள் உள்ளன என்று வஹ்ஹாபிகள் கூறினால் அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ளலாம். குர்ஆனைத் தொடுவதற்கு உளு தேவை என்பதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

விவாதம் 5:

குர்ஆன் ஓதுவது திக்ரில் உள்ளடங்கிய வணக்கம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நேரங்களிலும் திக்ர் செய்துள்ளார்கள் என்று ஹதீதில் வந்துள்ளது.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:

عن عائشة قالت كان انبي صلى الله عليه وسلم على كل احيانه (رواه مسلم والترمذي واحمد

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  அல்லாஹ்வை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்யும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.’

நூல்: முஸ்லிம் 558, அஹ்மத் 23274, திர்மிதி 330

எல்லா நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திக்ர் செய்துள்ளார்கள் என்றால் குர்ஆன் ஓதுவது திக்ரில் கட்டுப்பட்டதுத என்ற அடிப்படையில் குளிப்பு கடமையான சமயத்திலும் குர்ஆன் ஓதியிருப்பார்கள் என யூகிக்க முடிகிறது.

விளக்கம்:

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றில் வஹ்ஹாபிகள் சுற்றி வளைத்து தங்களது யூகத்தை திணிக்கிறார்கள். குளிப்பு கடமையானவர்கள் குர்ஆன் ஓதலாம் என்பதற்கு எந்த சான்றும் அதிலில்லை.

ஏனென்றால் எல்லா நேரங்களிலும் குர்ஆன் ஓதுவார்கள் என்ற வாக்கியம் இடம் பெறவில்லை. திக்ர் செய்வார்கள் என்றுதான் உள்ளது. திக்ர் என்பது பல பொருளுள்ள ஒரு பொதுச் சொல். குர்ஆன், இறைப்புகழ் மற்றும் பிரார்த்தனை சம்பந்தப்பட்டவைகளை குறிக்கும் வார்த்தைதான் திக்ர்.

ஆகவே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாக குர்ஆன் அல்லாத மற்ற திக்ருகளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியுள்ளார்கள் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்:

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் குர்ஆனை எங்களுக்கு ஓதிக் காண்பிப்பார்கள். ஆனால் குளிப்பு கடமையான நிலையில் மட்டும் ஓத மாட்டார்கள்.’

நூல்: அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, இப்னு மாஜா, நஸாயீ.

மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியது நாவால் மொழியும் திக்ரைப் பற்றியதல்ல. உள்ளத்தால் நினைக்கும் திக்ரைப் பற்றியதுதான் என்பதையும் நம்மால் வெள்ளிடை மழையென அறிந்து கொள்ள முடியும்.

காரணம் எல்லா நேரமும் என்பது கழிவறையில் இருக்கும் காலத்தையும் உள்ளடக்கும். ஆனால் கழிவறையில் இருக்கும் போது நாவால் திக்ர் செய்தல் இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

‘ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عَنِ ابْنِ عُمَرَ اَنْ رَجُلٌا مَرَّ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يبُول فسلَّمَ قَلَمْ يردُّ عَلَيْهِ (رواه مسلم وابو داؤد والترمذي والنسائي وابن ماجة

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக சென்ற நபித் தோழர் ஒருவர் ஸலாம் சொன்னார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் ஸலாம் கூறவில்லை.’

நூல்: முஸ்லிம் 555, திர்மிதி 37

எனவே எல்லா நேரமும் திக்ர் செய்தல் என்பது கழிவறையில் இருந்தாலும் கூட உள்ளத்தால் செய்யும் திக்ரில் மட்டுமே சாத்தியமாகும். இதிலிருந்து ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் எல்லா நேரமும் திக்ர் என்ற கூற்று குர்ஆன் ஓதுவதற்கு அறவே பொருந்தாது என்று உறுதிபடக் கூற முடியும்.

விவாதம் 6

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் குர்ஆன் ஒன்று திரட்டப்படவில்லை. எனவே தூய்மையானவர்கள் குர்ஆனைத் தொடவேண்டும் என இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கட்டளையிட்டிருக்க வாய்ப்பில்லை.

விளக்கம்:

எல்லா வசனங்களும் ஒன்று திரட்டப்பட்ட தொகுப்புக்கு குர்ஆன் என்று சொல்லப்படுவது போன்றே குர்ஆனின் சில வசனங்கள் மட்டும் எழுதப்பட்டவைகளுக்கும் குர்ஆன் எனக் கூறலாம்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் மரப்பலகைகளிலும் எலும்புத் துண்டுகளிலும் மற்றும் கற்களிலும் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டன. இவைகளுக்கெல்லாம் குர்ஆன் எனும் வார்த்தையை இறைவனும் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பிரயோகித்துள்ளனர்.

குர்ஆனை தெளிவாக நிறுத்தி ஓதுவீராக! (முஜம்மில் 4) ورتل القرآن ترتيلا

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

عن ابي سعيدٍ الخُذْري قَال قَال رسول صلى الله عليه وسلم لا تكتبوا عني شيئًا الاَّ القرأن فمن كتب عني شيئًا غير القرأن فليمحه (رواه احمد وم

‘நான் கூறுபவற்றில் குர்ஆனைத் தவிர வேறெதையம் எழுதாதீர்கள். குர்ஆன் அல்லாததை யாராவது எழுதியிருந்தால் அவர் அதை அழித்து விடட்டும்.’

நூல்: அஹ்மத் எண்: 10731, முஸ்லிம் எண்: 5326

குர்ஆன் வசனங்கள் மட்டும் எழுதப்பட்டவைகளுக்கு அவை சில வசனங்களாக இருப்பினும் குர்ஆன் எனும்சொல் பொருந்துமென்பதை மேற்கண்ட இறைவசனமும் நபிமொழியும் அறிவிக்கின்றன.

குர்ஆனைத் தவிர வேறெதையும் எழுதக்கூடாது என்ற தடையை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னர் தளர்த்தி விட்டார்கள். அம்ர் இப்னு ஹஜ்ம் அவர்களுக்கு கூறினார்கள்:

عن عبد الله ابن عمرو قال قال  رسول الله صلى الله عليه وسلم اكتب فوالذي نفسى بيده ما خرج منِّي الا الحقُّ (رواه احمد وابو داود والدارمي

(அம்ரே  நான் கூறுவதை) எழுதுக! எனது ஆத்மா யார் கைவசமுள்ளதோ அ(ந்த இறை)வனின் மீது ஆணை(யிட்டுக் கூறுகிறேன்) என்னிடமிருந்து வெளிப்படுகின்ற (சொல்-செயல்) அனைத்தும் சத்தியமே. – நூல்: அஹ்மத் எண் 6221.

குர்ஆனோடு மற்றவை கலந்து விட வாய்ப்புள்ளது என்று அஞ்சிய சமயத்தில் குர்ஆனை மட்டும்தான் எழுத வேண்டுமென இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்த அச்சம் இனியில்லை என்ற நிலைவந்தபோது தனது மணிமொழிகளான ஹதீதுகளை எழுதுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.

விவாதம் 7:

தூய்மையில்லாமல் குர்ஆனைத் தொடக்கூடாதென்பதற்கு இஜ்மாஃ -ஒருமித்த கருத்து என்ற ஆதாரத்தை ஒப்புக் கொள்ள இயலாது. ஏனெனில் தாபியீன்களிலும் அதன்பின் வந்தவர்களிலும் ஒருசிலர் சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடலாம் என்ற மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளனர். அதனால் இஜ்மாஃ – ஒருமித்த கருத்து என்ற ஆதாரம் அடிபட்டுப் போய்விடுகிறது.

விளக்கம்:

இந்த வாதம் ஏற்புடையதல்ல. ஏனென்றால் சுத்தமானவர்கள் தான் குர்ஆனைத் தொடவேண்டும் என்பதில் சஹாபா பெருமக்கள் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் காலத்தில் இதற்கு மாற்று கருத்துத தெரிவித்த ஒரு நபித்தோழர் கூட கிடையாது.

இதன்மூலம் தூய்மையின்றி குர்ஆனைத் தொடுவது மார்க்கத்தில் விலக்கப்பட்ட செயல் -ஹராம் என்பதே நபித்தோழர்களின் இஜ்மாஃ ஆக இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

விவாதம் 9:

தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொட மாட்டார்கள். (56:79)

இந்த வசனத்தில் தூய்மையானவர்கள் தான் குர்ஆனைத் தொடுவார்கள் என்ற செய்தி கூறப்பட்டுள்ளதே தவிர தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. எனவே செய்தியாக கூறப்பட்டதை கட்டளை அர்த்தமாக மாற்றக்கூடாது.

விளக்கம்:

அரபி இலக்கணப்படி செய்தி வாசகம் சூழ்நிலைக்கேற்ப சிலகட்டங்களில் கட்டளை வாசகமாக பொருள் கொள்ளப்படும். உதாரணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்.

لا يعضد شجرها (رواه الخاري والمسلم

மக்காவிலுள்ள மரம் வெட்டப்படமாட்டாது. நூல் புகாரி 109, முஸ்லிம் 2415

மக்காவின் மரம் வெட்டப்படாது என்ற செய்தி வாசகமா கஉள்ள இந்த நபிமொழி மக்காவின் மரம் வெட்டப்படக் கூடாது என்ற கட்டளை வாசகத்தின் பொருளைத் தருகிறது.

இமாம் ஜஸ்ஸாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ‘பரிசுத்தமானவர்கள் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்ற வசனம் வெளித்தோற்றத்தில் செய்தி வாக்கியமாக இருப்பினும் அதன் அர்த்தம் கட்டளை வாக்கியத்திற்குரியதே. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பரிசுத்தமானவரே குர்ஆனைத் தொட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே இதற்கு காரணியாகும்.

விவாதம் 11

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவத்தில்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டது.

எழுத்து வடிவில் அருளப்படாததைத் தொடுகின்ற பேச்சுக்கே இடமில்லை. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் மட்டுமே தொடுதல் சம்பந்தப்பட்ட சட்டம் வரும்.

விளக்கம்:

பலகையில் பதியப்பட்டடோ அல்லது காகிதத்தில் எழுதப்பட்டோ குர்ஆன் அருளப்படவில்லை என்பதைத பாமர இஸ்லாமியனும் தெரிந்து வைத்துள்ளான்.

குர்ஆனுக்கு எழுத்துக்கள் உண்டு. குர்ஆன் ஓதுகின்றபோது எழுகின்ற ஒலிக்கும் எழுத்துக்கள் உண்டு. நபித்தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட குர்ஆனுக்கும் எழுத்துக்கள் உள்ளன. குர்ஆனில் எழுத்துக்கள் எழுதப்பட்டு கண்களுக்குத் தென்படும் வகையில் ஏதோ ஒரு பொருளாக குர்ஆன் அருளப்படவில்லை என்பது உண்மை. அதற்காக குர்ஆனுக்கு எழுத்து அமைப்பு இல்லை என்று கூறினால் அதைவிட வடிக்கட்டிய மதியீனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இறைவன் தனது அருள் மறையில் பல்வேறு இடங்களில் பிரயோகிக்கம் குர்ஆன் என்னும் சொல் நம்மிடம் உள்ள வேதத்தைக் குறிக்கிறது.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் குர்ஆனுடைய வசனங்கள் பலகைகளிலும், கற்களிலும், எலும்புகளிலும் எழுதி வைக்கப்பட்டன. இவைதான் குர்ஆன் என்றும் அன்று கருதப்பட்டது.

عن عبج الله ابن عمر قال نهي رسول الله صلى الله عليه وسلم يسافر بالقرآن الى ارض العدز (رواه البخاري والمسلم

‘அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘பகைவர் நாட்டிற்கு பயணம் செய்யும் போது குர்ஆன் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.’

நூல்: புகாரி 2768 முஸ்லிம் 3474

மேற்கண்ட ஹதீதில் கூறப்பட்ட குர்ஆன் என்னும் சொல் எழுத்து வடிவில் நம் கைகளில் உள்ள வேதத்தையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஒலி வடிவில் அமைந்த குர்ஆனை அல்ல.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நால்வர் குர்ஆனைத் தொகுத்தார்கள். அவர்கள் அனைவரும் அன்ஸாரி தோழர்கள்;.

உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு

முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு

அபூ ஜைத் ரலியல்லாஹு அன்ஹு

ஜைத் இப்னு ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு

-நூல்: புகாரி 3526

ஒலி வடிவில் அமைந்த குர்ஆனையா தொகுத்தார்கள். இந்த நான்கு தோழர்களும் இல்லையே!  எழுத்து அமைப்பிலுள்ள குர்ஆனைத் தானே!

انا انزلناه قرآنا عربيا  (سورة اليوسف : 2

‘உறுதியாக நாம் இதை அரபி மொழியில் அமைந்த குர்ஆனாக இறக்கி வைத்தோம்.’ (12:2)

மேலும் இறைவன் சொன்னான்:

بلسان عربي مبين (سورة الشعرآء : 195

தெளிவான அரபி மொழியில் குர்ஆனை ஜிப்ரயீல் இறக்கினார். (26:195)

மேற்கண்ட வசனங்கள் மூலமாக குர்ஆன் அரபி சொற்களால் அமைந்த வேதம் என்பதை இறைவன் அறிமுகம் செய்கிறான்.

உத்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (குர்ஆனை தொகுப்பதற்காக) ஜைத் இப்னு ஃதாபித் , அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், சயீத் இப்னு ஆஸ் மற்றும் அப்துர் ரஹ்மானிப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரை அழைத்து (அந்நால்வரில் குறைஷிக் குடும்பத்தைச் சார்ந்த மூவருக்கு சொன்னார்கள்.)

‘குர்ஆனை தொகுத்து எழுதும்போது உங்களுக்கும் ஜைத் இப்னு ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையில் ஏதாவதொன்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குறைஷி மொழியைக் கொண்டு குர்ஆனை எழுதுங்கள். ஏனென்றால் அவர்கள் மொழியில் தான் குர்ஆன் இறங்கியது.

யார் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒன்றுக்குப் பத்து என்ற அடிப்படையில் நன்மை கிடைக்கும். ‘அலிஃப் லாம் மீம்’ என்பது ஓர் எழுத்தென்று நான் சொல்லமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து லாம் ஓர் எழுத்து மீம் ஓர் எழுத்து.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி

மேற்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து குர்ஆன் எழுத்தமைப்பைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

குர்ஆனும், ஹதீது குத்ஸியும் இறைவனுடைய பேச்சுக்கள் என்றாலும் இரண்டுக்கும் மத்தியில் வேறுபாடு உண்டு.

குர்ஆன் – பொருளும் வார்த்தையும் இறைதரப்பிலிருந்து வந்தது.

ஹதீது குத்ஸி – பொருள் இறைவனுடையது வார்த்தைகள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குரியது.

எனவேதான் குர்ஆனுடைய வசனத்திற்கு பதிலாக தொழுகையில் ஹதீது குத்ஸியை ஓதினால் தொழுகை கூடாது. அதேபோன்று ஹதீது குத்ஸியை படிக்கும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மை என்பதும் கிடைக்காது.

இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘சுத்தமில்லாதவன் குர்ஆனை சுமந்து செல்லக் கூடாது. குர்ஆனுள்ள பை மற்றும் உறைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும். தூய்மையில்லாதவன் குர்ஆனைத் தொட்டால் அது அழுக்காகி விடும் என்பதற்காக இச்சட்டமென்று யாரும் கருதிவிடக் கூடாது. சுத்தம் தேவை என்பதற்குண்டான காரணி குர்ஆனுக்குரிய கண்ணியத்தையும் மாண்பையும் அளிப்பதுவே.

நூல்: அல்ஜாமிஉ லி அஹ்காமில் குர்ஆன்.

ஆசிரியர்: இமாம் குர்துபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதில் அதிக அக்கறை செலுத்தியுள்ளார்கள். அதற்கு ஆதாரம்

‘பகைவர் உள்ள பகுதிக்கு பயணம் செ;யயும்போது குர்ஆனை எடுத்துச் செல்ல வேண்டாமென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம்.

குறிப்பு: 1

குளிப்பு கடமை நிலையில் உள்ளோரும் மாதவிடாய் பெண்களும் பிள்ளைப்பேறு உதிரப்போக்குள்ள பெண்களும் குர்ஆன் ஓதுதல் என்ற எண்ணமில்லாமல் திக்ர் அல்லது பிரார்த்தனை என்ற அடிப்படையில் குர்ஆனுடைய வசனத்தை ஓதுவது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள்:

عن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم الا عال بالنيات (رواه البخاري

‘உறுதியாக செயல்களனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததாகும்.’

அறிவிப்பாளர்: உமர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி.

இந்த நபிமொழியின் கருத்துப்படி திக்ருடைய நிய்யத்தில் குர்ஆன் வசனத்தைக் கூறுவது கூடும். ஏனென்றால் குர்ஆன் ஓதுவதற்கும் திக்ர் செய்வதற்கும் மத்தியில் நிறைய வேறுபாடுகளுண்டு. குர்ஆன் ஓதினால் ஒவ்வோர் எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்குமென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். – நூல்: திர்மிதி

குர்ஆன் ஓதுவதால் ஒவ்வோர் எழுத்திற்கும் கிடைக்கிற பத்து நன்மைகள்  திக்ர் – பிரார்த்தனை செய்யும்போது கிடைப்பதில்லை. திக்ர் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுகின்ற போது அதற்குரிய நன்மைகள் நமக்கு உறுதியாக கிடைக்கும். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் ஒரு எழுத்திற்குப் பத்து என்ற அடிப்படையில் ஓதுவதற்குரிய நன்மைகள் இவற்றிற்கில்லை.

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் புறப்படுவதற்காக ஒட்டகை மீது அமர்ந்து விட்டால் மும்முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுவார்கள். பிறகு (இதை எங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்த இறைவன் தூய்மை மிக்கவன். நாங்கள் இதை அடக்கிப் பயன்பெற இயலாதவர்களாக உள்ளோம். மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமேம திரும்பக் கூடியவர்களாக இருக்கிறோம்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர்  ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம், திர்மிதி, அபீதாவூத், அஹ்மத், தாரமீ.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஸுப்ஹான எனத் தொடங்கும் வாசகங்கள் அத்தியாயத்தின் 13 ஆம் வசனத்தின் ஒரு பகுதியாகவும் 14ஆம் வசனமாகவம் இடம் பெற்றுள்ளன. எனினும் பயணி குளிப்பு கடமையான நிலையிலிருந்தாலும் அப்பயணி  பெண்ணாக இருப்பின் மாதவிடாய் நிலையிலிருந்தாலும் இவற்றைக் கூறலாம். அதற்கு எத்தடையுமில்லை. காரணம் பயணப் பிரார்த்தனை என்பதுதான் இங்கு நோக்கமே தவிர குர்ஆன் ஓதுதல் என்பதல்ல.

அதே போன்று ஒரு செயலைத் தொடங்கும்போது  بسم الله الرحمٰن الرحيم என்று கூறுகிறோம். இது குர்ஆனிலுள்ள ஒரு வாசகம். ஒருசெயலைத் தொடக்கம் செய்பவர் குளிப்பு கடமை நிலையிலிருந்தாலும் பெண்களாக இருந்தால் மாதவிடாய் அல்லது பேறுகால உதிரப் போக்கு நிலையிலிருந்தாலும் இதைக் கூறுவது கூடும். ஏனென்றால் செயல் தொடக்கப் பிரார்த்தனை என்ற நோக்கில் தான் இதைக் கூறப்படுகிறது. குர்ஆன் ஓதுதல் என்ற எண்ணத்தில் இல்லை. ஆகவே இதைக் கூற எத்தடையம் மார்க்கத்தில் இல்லை.

குறிப்பு – 2:

சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சட்டம் குர்ஆன் எழுத்து வடிவில் உள்ளபோது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லையானால் அச்சட்டமும் இல்லை.

குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் குர்ஆன் பதிவு செய்யப்பட்ட ஒலி-ஒளிப் பேழைகள் மற்றும் குறுந்தகடுகளை உளு இல்லாமல் தொடுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. காரணம் அவற்றில் குர்ஆன் எழுத்து வடிவில் தென்படவில்லை.

குர்ஆன் ஓதினால் ஓர் எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்குமென்பது கூட எழுத்து வடிவில் மொழிந்தால் தான். குர்ஆன் வசனங்களை மனதால் நினைப்பவருக்கு அந்த நன்மையில்லை என்பது நாமறிந்ததே. வெளியில் தெரிகின்ற எழுத்தின் சட்டம் மனதில் அல்லது ஒளி நாடாவில் அல்லது குறுந்;தகடில் மறைந்துள்ள எழுத்திற்குக் கிடையாது. அறத்குச் சான்றாக ஒன்றைக் குறிப்பிடுவது இங்கே பொருத்தமாகும். கழிவறைக்குச் செல்பவன் இறை நாமம் பொறித்த மோதிரம் அணிந்திருந்தால் அதைக் கழற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

عن انس قال كان النبي اذادخل الخلاء وضع خاتمه (رواه ابو داؤد والترمذي والنسائي وابن ماجة

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; கழிவறை செல்லும்போது மோதிரத்தை கழற்றி வைத்து விடுவார்கள்.’

நூல்: அபூதாவூத் 18, திர்மிதி 1668

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரோம் நாட்டிற்கு கடிதம் எழுத நாடியபோது ரோம் மக்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தை தான் படிப்பார்கள் என நபித்தோழர்கள் கூறினார்கள். ஆகவே வெள்ளியால் ஆன ஒரு மோதிரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தயார் செய்தார்கள். அதன் வெண்மையை நான் பார்த்தேன். அம்மோதிரத்தில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: புகாரி 6629, முஸ்லிம் 3902.

இறைவனுடைய திருநாமம் எழுத்து வடிவில் மோதிரத்தில் பதியப்பட்டிருந்தததால் கழிவறை செல்கின்ற போது கழற்றி வைத்துவிட வேண்டுமென மார்க்கம் பணிக்கிறது. கண்களுக்குத் தெரியும் வகையில் உள்ளதால் இச்சட்டம்.

குறுந்தகடுகளை கணிணியில் போட்டுப் பார்க்கின்றபோது குர்ஆன் எழுத்துக்கள் மட்டும் தெரிந்தால் குர்ஆனின் சட்டம் அந்தக் கணிணிக்குப் பொருந்தும். உளுவுடனேயே அக்கணிணியைத் தொட வேண்டும். ஆனால் குர்ஆன் எழுத்துக்களோடு மொழி பெயர்ப்பு அல்லது விரிவுரை ஆகியவை சேர்த்துத் தெரிந்தால் குர்ஆனுக்குரிய சட்டம் இதற்கில்லை. உளு இல்லாமலேயே இதைத் தொடலாம்.

குறிப்பு – 3

பரிசுத்தமானவர்களே தொட வேண்டுமென்பது குர்ஆனுக்கு மட்டுமே உரிய சட்டமாகும். எனவே

ஹதீது நூற்கள்

பிரார்த்தனைப் புத்தகங்கள்

ஃபிக்ஹ் கிரந்தங்கள்

குர்ஆன் மொழிபெயர்ப்பு தர்ஜமாக்கள்

குர்ஆன் விரிவுரை தஃப்ஸீர்கள்

அவ்ராத் தொகுப்புகள்

மற்றும் மௌலித் கிதாபுகள்

ஆகியவற்றைத் தொடுவதற்கு உளு கட்டாயம் அல்ல. அவற்றில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் உளு இன்றி தொடுவது கூடும். ஏனெனில் இவற்றிற்கு குர்ஆன் என்று கூறப்படாது.

ஆனாலும் மேற்கண்ட நூல்களைத் தொடுவதற்கு உளு செய்து கொள்வது மார்க்கத்தில் வரவேற்கத்தக்க மற்றும் புகழுக்குரிய செயலாகும்.

குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் பெண்கள் மற்றும் பேறுகால உதிரப் போக்குள்ள பெண்கள் ஓதக் கூடாதென்ற சட்டம் குர்ஆனுக்கு மட்டுமே. இச்சட்டம் மற்ற நூல்களுக்கு இல்லை. எனவே இத்தகையவர்கள் மேற்கண்ட கிதாபுகள் – கிரந்தங்கள் – தர்ஜமாக்கள்-தஃப்ஸீர்கள்-தொகுப்புகள் மற்றும் புத்தகங்களைத் தொடுவது ஆகும் என்பது போலவே ஓதுவது கூடும்.

குறிப்பு 4

உளு இன்றிக் குர்ஆனைத் தொடக் கூடாது. அதுபோன்று குர்ஆன் வைக்க மட்டும் பயன்படுத்துகின்ற பெட்டி ரேஹாலி பலகை போன்றவைகளையும் அவற்றில் குர்ஆன் இருக்கும் போது உளு இல்லாமல் தொடக் கூடாதென்பது ஷாஃபி, மத்ஹபின் சட்டம். அவற்றை குர்ஆன் இல்லாத நிலையில் தொடுவதற்குத் தடையில்லை.

இறைவேதம் குர்ஆன் புனிதமானது. அதுபோல குர்ஆன் உள்ள இடமும் புனிதமானது என்பது இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்து. ஏனென்றால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘தூர்ஸீனா’ மலைக்கு வேதத்தைப் பெறுவதற்காக வருகை தந்தபோது இறைவன் கூறினான்.

انى انا ربك فاخلع  نعليك انك بالوادي المقدس طوي (طه: 12

‘(மூஸாவே) உறுதியாக நானே உங்கள் இறைவன். ஆகவே, உங்கள் இரு காலணிகளையும் கழற்றுங்கள். திண்ணமாக நீங்கள் துஆ என்ற தூய்மையான பள்ளத்தாக்கில் உள்ளீர்கள். (20-12)

வேதம் மட்டும் அல்ல. வேதம் இறங்குகிற இடமும் தூய்மையானதுதான் என்பதை இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

குறிப்பு 5

குர்ஆனை மட்டும் ஓரு பெட்டியில் வைத்து தூக்கிச் செல்வதென்றால் உளுவுடனேயே அப்பெட்டியைத் தொட வேண்டும். அதேசமயம் மற்ற பொருட்களுடன் குர்ஆனுமுள்ள பெட்டியை உளு இன்றி சுமந்து செல்ல மார்க்கத்தில் அனுமதி உண்டு.

ஏனெனில் இவ்விரு நிலைகளுக்கும் வேறுபாடுள்ளது. ஒருவன் மற்ற பொருட்களுடன் குர்ஆனையும் எடுத்துச் செல்கின்றபோது அவனது எண்ணம் ஒட்டுமொத்த பொருட்கள் என்பதுதானே தவிர குர்ஆன் மட்டும் என்பதல்ல.

குர்ஆனை தனித்து எடுத்துச் சென்றால் அவனது நோக்கமே குர்ஆன்தான். எண்ணங்களைப் பொருத்தே நமது மார்க்கத்தில் சட்டங்கள் அமையும்.

முற்றும்.

திருமணம் பற்றி ஷரீஅத் சட்டங்கள்

وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ 
وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ۞وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغْنِيَهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கு (அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே வாழ்க்கைத் துணைவரில்லாத) உங்கள் அடிமைகளிலுள்ள நல்லோர்களுக்கும் (திருமணம் செய்து வையுங்கள்). அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு அவர்களைச் சீமானாக்கி வைப்பான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும்,(மனிதர்களின் நிலைமையை) நன்கு அறிந்தவனுமாக இருக்கிறான்.

வறுமையினால்)திருமணம் செய்து கொள்ளும் ஆற்றல் பெறாதோர், அல்லாஹ் தனது அருளைக் கொண்டு (அவர்களின் வறுமையை நீக்கி) பொருளைக் கொடுக்கும் வரையில் அவர்கள் (நோன்பு நோற்பது கொண்டு) உறுதியாக தங்களுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவும்.'
-அல-;குர்ஆன் 24: 32, 33.

எனவே ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் இறுதி நாள்வரை இன்னும் சுவனபதியிலும் திருமணம் இஸ்லாத்தின் நெறிமுறையாக ஆக்கப்பட்டுள்ளது.

திருமணம் பற்றி நபிகளார்:

يَامَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَآءَةَ فَلْيَتَزَوَّجْ فَاِنَّهُ اَغَضُّ لِلْبَصَرِ وَاَحْصَنُ لِلْفَرْجِ . وَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَاِنَّهُ لَهُ وِجَآءٌ.

'வாலிபர்களே! உங்களில் வசதி வாய்ப்பினைப் பெற்றவர், திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் திருமணமாகிறது (பிற பெண்களை சிற்றின்ப நோக்கோடு பார்ப்பதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும், மர்மஸ்தானத்தை (விபச்சாரத்தை விட்டும்) பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. வசதி வாய்ப்பினைப் பெறாதவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும். ஏனெனில் நோன்பு சிற்றின்ப வேட்கையைத் தணிக்கக் கூடியதாக இருக்கிறது.'

وَمَنْ نَكَحَ فَقَدْ اَدّٰى ثُلُثَيْ دِيْنِهٖ . فَلْيَتَّقِ اللهَ فِيْ بَاقِيْهِ

'திருமணம் செய்தவன் மார்க்கத்தில் மூன்றிலிரண்டு பங்குகளை நிறைவேற்றி விட்டவனாவான். மீதியில் அவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளவும்'; என்றும்,

تَنَاكَحُوْا وَتَوَالَدُوْا وَتَكَاثَرُوْا فَاِنِّيْ اُبَاهِيْ بِكُمُ الْاُمَمَ يَوْمَ الْقِيَامَةِ وَلَوْ بِالسِّقْطِ.

'திருமணம ;செய்து குழந்தைகளை அதிகம் பெற்று எண்ணிக்கையில் பல்கிப் பெருகிக் கொள்ளுங்கள். ஒரு விழுகட்டியாக இருந்தாலும் சரி, நிச்சயமாக நான் உங்களைக் கொண்டு கியாமத் நாளில் மற்ற உம்மத்தினரிடம் பெருமை பாராட்டுவேன்'என்றும், 'அதிகமாக நிகாஹ் செய்தவர்கள் நபிமார்கள்' என்றும்,

حُبِّبَ اِلَيَّ مِنْ دُنْيَاكُمْ ثَلٰثٌ اَلنِّسَآءُ وَالطِّيْبُ وَقُرَّةُ عَيْنِيْ فِي الصَّلٰوةِ.

'உங்களுடைய இவ்வுலகில் எனக்கு ஹலாலான மனைவியர், நறுமணம். தொழுகையில் என் கண் குளிர்ச்சியடைவது ஆகிய மூன்றும் பிரியமாக்கப்பட்டுள்ளன' என்றும்,

اَلنِّكَاحُ مِنْ سُنَّتِيْ وَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِيْ فَلَيْسَ مِنِّيْ .

'திருமணம் என் சுன்னத்தான வழிமுறை, அதனை புறக்கணிப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல' என்றும்,

مَنْ تَرَكَ التَّزَوُّجَ مَخَافَةَ الْعَيْلَةِ فَلَيْسِ مَنَّا .

'வறுமையைப் பயந்து திருமணத்தை விட்டவர் எம்மைச் சார்ந்தவர் அல்ல' என்றும்,

مَنْ كَانَ ذَاطَوْلٍ فَلْيَتَزَوَّجْ .

'வசதி பெற்றவர் திருமணம் செய்து கொள்ளட்டும்' என்றும்,

تَزَوَّجُوْا فَلَيْسَ فِي الْجَنَّةِ اَعْزَبُ .

'திருமணம் செய்து கொள்ளுங்கள். சொர்க்கத்தில் திருமணமில்லாதவர் கிடையாது' என்றும்,

وَلَا تَكُوْنُوْا كَرُهْبَانِ النَّصَارٰى

'கிறித்துவ பாதிரிகளைப் போன்று (பிரமச்சாரிகளாக) இருந்து விடாதீர்கள்' என்றும் பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணத்தின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்கள்.

உடலுறவு கொள்வதற்கு தேவை ஏற்பட்டு மஹரும், உணவு, உடை ஆகியவையும் கொடுக்க வசதி பெற்றவன் திருமணம் செய்வது சுன்னத்தாகும். சுன்னத் என்பது அவனது உணர்ச்சியை அடக்கிக் கொள்ள சக்தி பெற்றவனுக்காகும்.

அவ்வாறு அடக்க முடியாதவனுக்கு திருமணம் செய்வது வாஜிபாகும். உடலுறவு கொள்ள இயலாதவனுக்கு மக்ரூஹ் ஆகும்.

ஷாபியீ மத்ஹபில் சில இமாம்களிடத்திலும் மற்ற மூன்று மத்ஹபுகளிலும் வாழ்க்கைச் செலவினங்களுக்குக் கொடுக்கச் சக்தி பெற்றவன் உடலுறவு கொள்வதில் ஆசை கொண்டவனாக இருந்தால் திருமணம் செய்வது வாஜிபாகும். ஆனால் அவன் ஜினாவை பயந்தால் எல்லோரிடத்திலுமே வாஜிபாகும்.

திருணம நாளில் வாழ்த்துக் கூறும் முறையில் நகரா அடிப்பதும், தம்பூரா வாசிப்பதும், மத்தளம், தஃப் அடிப்பதும் கூடும்.

பெண்ணை பார்ப்பது:

திருமணம் செய்ய நல்லெண்ணங்கொண்டு முடிவு செய்த பிறகு மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது தொழுகையில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளைத் தவிர மற்றதைப் பார்த்துக் கொள்வது சுன்னத். எனினும் பெண்ணுக்கு மஹ்ரமான ஒருவரை உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

இது தவிர திருமணம் முடியும் முன் பெண் ஆணிடம் நேரடியாக பேசுவதோ, செல்போன் மூலமோ அல்லது மற்ற நவீன கருவிகள் மூலமோ செய்திகளை அனுப்புவதோ, பேசுவதோ, தனியாக சந்திப்பதோ மார்க்கத்திற்கு முரணானது ஆகும்.

குத்பா ஓதும் இடங்கள்:

பெண் பேசப் போனால் அப் பேச்சைத் தொடங்கு முன் மாப்பிள்ளையோ அல்லது அவனுடைய வக்கீலோ ஒரு குத்பா ஓதுவதும், பிறகு வலீயானவர் சம்மதித்து வாக்கு கொடுக்கும் முன் வலீ அல்லது அவருடைய வக்கீல் ஒரு குத்பா ஓதுவதும், பின்னர் நிகாஹ் நடைபெறும்போது பெண்ணின் வலீகாரர்  ஈஜாபுக்கு முன் ஒரு குத்பா ஓதுவதும் சுன்னத்தாகும்.

ஒருவன் ஒரு பெண்ணை பேசி அதில் சம்மதம் ஏற்பட்டிருக்கும் போது அதை அறிந்த வேறொருவன் அப்பெண்ணை தனக்குப் பேசுவது ஹறாமாகும். மாப்பிள்ளை விஷயத்திலும் இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும்.

மாப்பிள்ளை அல்லது பெண் கேட்டு பேசும் பொழுது ஒருவரைப் பற்றி விசாரித்தால் அறிந்தவர்கள் அவரைப் பற்றியுள்ள விசயத்தை உள்ளபடி விபரமாய்க் கூறுவது வாஜிபாகும். இதனால் புறம்பேசுவது  ஆகாது.  அப்படி உண்மையைக் கூறாது மறைத்தால் கேட்பவருக்கு மோசம் செய்தவராவார்.

நிகாஹு செய்ய தகுதியுடைய பெண்கள்:

'பொருள் வசதி, கண்ணியமான குடும்பப் பிண்ணனி, அழகு, இஸ்லாமிய மார்க்க நெறி கடைபிடித்தல் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனினும் மார்க்க நெறிக்கு முதலிடம் கொடுத்து அந்தப் பெண்ணைக் கைபிடித்து நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்' என்று நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரு சகோதரிகளில் மிக அழகானவளை தேர்ந்தெடுக்காது ஒன்றரை கண்ணுடைய அழகு குறைந்த ஆனால் மார்க்க பக்தி மிகுந்த புத்திசாலிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்தார்கள்.

நல்ல குணமும், சிறந்த புத்தியும், பத்தினித் தனமும் இனப் பெருக்கமும் உடையவளாக இருப்பதும், கன்னி கழியாதவளாக இருப்பதும் சுன்னத்தாகும். மாப்பிள்ளையும் அப்படிப்பட்டவராக பார்ப்பது சுன்னத்தாகும்.

சிறிதும் உறவு முறையேற்படாத அன்னியர்களுடன் சம்பந்தம் செய்வதை விட சற்று தூரமான உறவில் சம்பந்தம் செய்வது நல்லதாகும்.

திருமணத்தின் ஷரீஅத் சட்டங்கள்:

திருமணத்தின்  பர்ளுகள் ஐந்து: மனைவி, கணவன், வலீ, இரண்டு சாட்சிகள், ஈஜாப்-கபூல் வாசகம் ஆகிய ஐந்தாகும்.

1.    வலிகாரன் இல்லாமல் நிகாஹு செய்வது கூடாது. ஹனபி மத்ஹபில் பெண் தன் ஒலி கொண்டு திருமணம் முடித்துக் கொள்ளலாம். ஆனால் பாலிகில்லாத சிறுமியின் நிகாஹுக்கு வலிகாரர் வேண்டும்.

வலீ என்பவர் தந்தை, தந்தை  இல்லாத நேரத்தில் (அதாவது: தந்தை மரணிப்பதாலோ, அல்லது வலீயாவதற்கு தடையாக இருக்கக் கூடிய பைத்தியம் பிடித்தல், மதம் மாறுதல் போன்ற செயல்களினாலோ தந்தை இழக்கப்பட்ட நேரத்தில்) தந்தையுடைய தந்தை ஆகியோர் ஆவார்கள். இவர்களிருவரும் வயது வராத கன்னி அழியாத பெண்ணை அவளுடைய அனுமதியின்றி ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம்.

உடலுறவினால் கன்னியழிந்தவளை அவள் பருவமடைந்தவளாக இருப்பின் அவளுடைய அனுமதியின்றி நிகாஹ் செய்து கொடுப்பது யாருக்கும் கூடாது. ஷாபியீ மத்ஹபின்படி பருவமடையாத பெண்ணை தந்தையோ, தந்தையை இழக்கப்பட்ட நேரத்தில் தந்தையின் பாட்டனாரோ தவிர வேறு எவரும் திருமணம் செய்து கொடுக்க கூடாது. ஹனபி மத்ஹபில் வேறு எவரும் திருமணம் செய்து கொடுக்கலாம்.

ஹனபி மத்ஹபில் வலீயாகிறது அஸபாவின் ஒழுங்கு முறைக்குப் பின் தாய்க்கும் மகனுக்கும், தாய் மாமனுக்கும் உண்டு. வலீயாகிறவன் முன்னால் பாகப்பிரிவினையில் கூறப்பட்டுள்ள அஸபாவுடைய தர்தீபின் முறையிலாயிருக்கும். எனினும் தாயைத் திருமணம் செய்து கொடுக்க மகன் வலீயாக மாட்டான். (அஸபாக்காரர்: என்பது பாகப்பிரிவினையில் நியமிக்கப்பட்ட பங்கிற்குரியவர்களின் பங்குகளைக் கொடுத்தது போக மீதியை, அல்லது பங்கிற்குரியவர்கள் எவரும் இல்லையானால் சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு அஸபாகாரர் என்று சொல்லப்படும். அவர்கள் பின்வருமாறு: மகன், மகனுடைய மகன், தந்தை, தந்தையின் தந்தை, தகப்பனும் தாயும் ஒன்றான சகோதரன், தந்தை மட்டும் ஒன்றான சகோதரன், அவர்களுடைய ஆண் குழந்தைகள், தாயும் தந்தையும் ஒன்றான அல்லது தந்தை மட்டும் ஒன்றான சிறிய பெரிய தந்தைகள், அவர்களின் ஆண் மக்கள் ஆகியோராவார்கள். வமிசத்தாலுள்ள மேற்கூறப்பட்ட அஸபாவுக்குப் பின் உரிமை விட்டவன். இவனுடைய அஸபாத்தில் ஆண்கள் மட்டுமே வருவார்கள்.)

அஸபாக்காரர்களில் உள்ள வலீ இல்லையானால் காளீயாகிறவர் தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள பருவமடைந்த பெண்ணை ஏழு நிலைகளில் திருமணம் செய்து கொடுக்கலாம். 1. வலீகாரன் தானே அவளை திருமணம் செய்து கொள்வதாயிருந்தாலும். 2. வலீ எவரும் இல்லாத நிலையிலும்(வலீ இருந்தும் அவனிருக்கும் இடம் தெரியாத நிலையிலும்) 3. வலீகாரன் இரண்டு நாட்களின் தூரத்திற்கு அப்பால் மறைமுகமாக இருக்கும் நிலையிலும், 4. வேறு இடத்திலிருக்கும் வலீகாரன் வரமுடியாத சூழ்நிலையிலும் 5. அவன் பெரும் அந்தஸ்துடையவனாக இருந்து வராமலிருந்து விட்ட நிலையிலும் 6. பொருத்தமுள்ள மாப்பிள்ளைக்கு முடித்துக் கொடுக்காததால் அவன் கோபித்துக் கொண்ட நிலையிலும் 7. வலீகாரன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டியிருந்த நிலையிலும். இந்த ஏழு நிலையிலும் காளீ திருமணம் செய்து கொடுப்பார்.

உரிய நிபந்தனைகளின்படி உள்ள காளியானவர் இல்லாவிட்டால் நீதியான ஒரு மனிதரை நடுவராக (முஹக்கமாக) மாப்பிள்ளை பெண் இருவரும் நியமித்து அவர் மூலம் திருமணத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

வலீகாரருக்கு ஈஜாப் கபூலுடைய வாசகம் தெரிந்திருந்தாலும் அவர் தனக்கொரு வக்கீலை நியமித்து நிகாஹை நடத்துவது கூடும்.

நெருங்கிய வலீகாரர் இருக்கும் போது, தூரமாக உள்ள ஒரு வலீகாரர் ஏழு சந்தர்ப்பங்களில் திருமணத்தை முடித்துக் கொடுக்கலாம். நெருங்கியவர் காபிராகவோ, பாவம் செய்பவராகவோ, சிறு பிள்ளையாகவோ, அடிமையாகவோ, பைத்தியக்காரனாகவோ, நோட்டம் குறைந்தவனாகவோ, மடமைத்தனம் உள்ளவனாகவோ இருப்பின் தூரத்திலுள்ளவர் வலியாகலாம்.

கன்னியழிந்த பருவமடைந்த பெண்ணை அவள் குறிப்பிடுகின்ற மாப்பிள்ளைக்கே அன்றி வேறு ஒருவனுக்கு தந்தையோ, பாட்டனோ மணம் முடித்துக் கொடுக்கக் கூடாது.

பருவமடையாத தன்னுடைய சிறிய மகனுக்கு சரியான மஹ்ரைக் கொண்டு பொருத்தமான பெண்ணைப் பார்த்து தந்தையோ, தந்தையை இழந்த நேரத்தில் பாட்டனோ மணம் முடித்து வைக்கலாம்.

2.    பெண்ணின் சம்மதமாகும். பெண் சிறுமியாயிருந்து வலிகாரர் அவளை நிகாஹ் செய்து கொடுக்கும் பட்சத்தில்  அவள் சம்மதம் தேவையில்லை. ஆனால் அவளுக்குத் தெரியப்படுத்துவது ஏற்றமாயிருக்கும்.

3.    நீதமுள்ள இரண்டு சாட்சிகள் ஆஜராயிருப்பது. திருமணத்திற்கு வருகை தந்திருக்கும் ஜமாஅத்தை சாட்சியாக்கி வைப்பது ஏற்றமாயிருக்கும். சாட்சிகள் ஈஜாப் கபூல் வாசகத்தை விளங்குகிறவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பது ஷர்த்தாகும்.

4.    ஒலிகாரனும், மாப்பிள்ளையுமாவது அல்லது அவர்களுடைய வகீலாவது ஈஜாப் கபூல் சொல்வதாகும். ஈஜாப் என்பது   زَوَّجْتُكَ                   உனக்கு நான் மணம் முடித்து தந்தேன் என்று பெண்ணின் வலீகாரன் (அல்லது அவனின் வக்கீல்) சொல்வதாகும். கபூல் என்பது மாப்பிள்ளை (அல்லது அவனால் குறிக்கப்பட்ட அவனது வகீல் قَبِلْتُ நான் ஒப்புக் கொண்டேன் என்று சொல்வதாகும்.

நிகாஹ் எழுதும் போது 'என் மகள் இந்தப் பெயருடைய பெண்ணை இத்தனை ரூபாய் மஹருக்கு உனக்கு நான் நிகாஹ் செய்து தந்தேன்' என்று வலிகாரர் கூற வேண்டும். 'அவளுடைய நிகாஹை நான் ஒப்புக் கொண்டேன்' என்று மாப்பிள்ளை கூற வேண்டும்.

மாப்பிள்ளையாகிறவன் முஸ்லிமாகவும், குறிப்பானவனாகவும், மஹ்ரம் இல்லாதவனாகவும், இந்த நிகாஹுக்கு முன் நான்கு மனைவிகள் இல்லாதவனாகவும், இப்பொழுது நிகாஹ் செய்ய நாடும் பெண்ணுக்கு வமிசம் மூலமாகவோ, பால்குடி மூலமோ மஹ்ரமான அக்கா, தங்கை, மாமி, சாச்சி இவர்களில் எவரேனும் ஒருத்தி இவனுடைய நிகாஹில் இல்லாமல் இருப்பது ஷர்த்தாகும்.

இரண்டு சகோதரிகளை ஒன்று சேர்த்து திருமணம் செய்வது ஹராம் என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.

நிகாஹில் மாப்பிள்ளையை குறிப்பிடுவது ஷர்த்தாகும். குறிப்பிடாமல் இந்த இருவரில் ஒருவருக்கு நிகாஹ் செய்து தந்தேன் என்று சொன்னால் கூடாது.

இரு சகோதரிகளின் இரு மகள்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.

5.    நிகாஹ் செய்துகொள்ள ஹலாலாகும்படியான நிலைமையில் அந்தப் பெண் இருப்பதாகும். பெண்ணாகிறவள் முஸ்லிமானவளாகவும், வேறொருவருடைய மனைவியாக இல்லாமலிருப்பவளாகவும், இத்தாவை விட்டு நீங்கியவளாகவும், அவள் யார் என்று குறிக்கப்பட்டவளாகவும், வமிசம், பால்குடி சம்பந்தம் ஆகிய மூன்றிலும் மஹ்ரமியத்தை –திருமணம்  செய்ய ஹராமாயிருப்பதை விட்டும் நீங்கியவளாகவும் இருப்பது ஷர்த்தாகும்.

பெண்ணிடம் கவனிக்க வேண்டிய சுன்னத்துக்கள்:

1.    தன் கற்பையும், கணவனுடைய சொத்தையும் காப்பவளாயிருப்பதாம்.
2.    நற்குணமாயிருக்கும்.
3.    அழகாயிருக்கும்.
4.    மஹர் குறைவாயிருப்பதாகும். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'எந்தப் பெண்ணின் மஹர் குறைவாகவும், அழகு அதிகமாயும் இருக்கிறதோ அவர்களே பெண்களில் மிக நன்மையானவர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
5.    மலடியல்லாதவளாயிருப்பதாகும்.
6.    கன்னியாயிருப்பதாகும்.
7.    மார்க்க நெறி தவறாமல் நடப்பவளாய் இருப்பதாகும்.
8.    நெருங்கிய பந்துவாயில்லாமலிருப்பதாகும்.

நிகாஹில் மஹ்ரை குறிப்பது சுன்னத்தாகும். குறிக்கப்பட்ட மஹ்ரை கொடுப்பது வாஜிபாகும். குறித்த மஹர் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத மஹராக இருந்தாலும் அல்லது மஹர் குறிக்கப்படாவிட்டாலும் அவள் குடும்பத்தில் வழமையான மஹர் விதியாகும்.

மஹ்ர் வெள்ளியாயிருப்பது மற்றொரு சுன்னத்தாகும். விலையாக கொடுக்கல் வாங்கல் செய்ய எதுவெல்லாம் இணக்கமாகுமோ அதையெல்லாம் மஹராகக் கொடுக்கலாம். மஹரைக் குறிக்காமல் நிகாஹ் முடிப்பது மக்ரூஹ்.

மஹராகிறது விலை மதிப்புள்ளதாக  மதிப்பு பெற்ற பிரயோஜனம் உள்ளதாக இருப்பது ஷர்த்தாகும்.

தவணை வைக்கப்படாத மஹரை கைப்பற்றுவதற்கு ஒரு மனைவி தன்னைக் கணவனை விட்டும் தடுக்கலாம். மஹருக்கு தவணை வைத்திருந்தால் கணவனைத் தடுக்கும் உரிமையை இழந்திடுவாள்.

உடலுறவுக்கு முன்னோ அல்லது பின்னோ இருவரில் ஒருவர் இறந்து விடுவதாலும், மேலும் கத்னா அளவு வரை மறைவது கொண்டு உடலுறவு கொள்வதாலும் (இதனால் கன்னி அழியாவிட்டாலும் சரியே)இந்த இரு நிலைகளிலும் மஹ்ர் விதியாகும்.

உடலுறவுக்கு முன் ஒருவன் தலாக் சொன்னால் அரை மஹர் கொடுக்க வேண்டும். ஆனால் உடலுறவுக்கு பின் தலாக் சொன்னால் முழு மஹரும் விதியாகும்.

உடலுறவு ஏற்படும் முன் ஃபஸ்கு ஏற்பட்டாலோ, அல்லது அவள் முர்தத்தாகி விட்டாலோ அல்லது அவன் மஹர் கொடுக்க இயலாதவனாகி விடுவதாலோ அல்லது அவளைக் கொண்டு ஏற்படுகிற காரணங்களைக் கொண்டு அவள் ஃபஸ்கு செய்தாலோ  மஹர் முழுவதும் விழுந்து விடும்.

பொறுப்புணர்ந்த பருவமடைந்த பெண், தன் கணவன் தர வேண்டிய மஹரை வாங்காமல் நீங்கி விட வேண்டுமென்றால் மஹரை நீக்கி விட்டேன், ஹலாலாக்கினேன், விழுத்தாட்டி விட்டேன், நன்கொடையாக ஆக்கி விட்டேன், ஆகுமாக்கினேன் என்ற வார்த்தைகளைச் சொல்வதால் அவன் மஹர் கொடுப்பதை விட்டும் நீங்கி விடுவான்.

மஹர் கொடுக்க முடிந்தவன் அதனைக் கொடுக்காமல் இறந்து விட்டால், ஜினா செய்தவனைப் போன்று கியாமத்து நாளில் வருவான் என்று கூறப்பட்டுள்ளது.

நிகாஹை ஹராமாக்கும் செயல்கள்:

பெண்ணாகிறவள் முடிக்கப் போகிற மாப்பிள்ளைக்கு வமிசத்தில் திருமணம் செய்வதற்கு ஹராமானவளாக இல்லாதிருக்க வேண்டும்.

பால்குடி:
உனக்கு பால் கொடுத்தவளும். அவளைப் பெற்றவளும், அவளுக்கு பால் கொடுத்தவளும், உன் தாய், தந்தைக்குப் பால்  கொடுத்தவளும் உனக்குத் தாயாகும். அவளுடைய பாலுக்குரியவன் உனக்குத் தந்தையாகும்.

வமிசத்தால் அல்லது பால் குடியால் உனக்குத் தாய், தந்தையாக இருப்பவர்களின் பாலைக் குடித்தவள் உன் சகோதரியாவாள்.

உன் மனைவியிடம் பாலைக் குடித்தவன், அல்லது உன் மகனுடைய மனைவியிடம் அல்லது குடி மகனுடைய மனைவியிடம் பால் குடித்தவன் உனக்கு மகனாகும். இவர்கள் அனைவரும் ஹராமாகும்.

பால் குடி என்பது, ஒன்பது வயது அடைந்த உயிருடனுள்ள ஒரு பெண்ணின் பாலை இரண்டு வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை உறுதியாக ஐந்து தடவை குடிப்பதாயிருக்கும்.

பிள்ளை என்பது தன் விந்தின் மூலம் உண்டாவதால் அது தன்னுடைய உடலில் ஒரு பகுதியாக இருப்பது போல், பாலாகிறது உடலிலிருந்து ஓர் இறைச்சித்துண்டுக்கு ஒப்பாகிறது. ஆகையினால்தான் பால்குடி மூலம் நிகாஹ் ஹராமாக்கப்பட்டுள்ளது.

தந்தையுடைய அல்லது பாட்டனுடைய மனைவிகளும் மகனுடைய மனைவியும் சம்பந்தத்தினால் ஹராமாகும். மகன் வமிசத்தினால் உள்ளவனாக இருப்பினும், பால் குடியினால் உள்ளவனாக இருப்பினும் சரி.

மனைவியின் தாய் வமிசத்தால் தாயானாலும் சரி, பால் குடியினால் தாயானாலும் சரி ஹராமாகும். அந்த மனைவியை உடலுறவு கொண்டிருந்தால் அவளின் மகளும் ஹராமாகும். எனவே அந்த மனைவியை உடலுறவு கொள்ளும் முன் தலாக் சொல்லி விட்டால் அவளுடைய மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஹராமல்ல.

தந்தையுடைய மனைவியும், மகனுடைய மனைவியும் ஹராமாகும். அதுபோல் மனைவியின் தாயும் ஹராமாகும். உடலுறவு நடைபெறாமலிருந்தாலும் இவர்கள் எல்லோரும் ஹராமாவார்கள். ஆனால் நிகாஹ் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். ஆனால் உடலுறவு நடந்து விட்டால் செல்லுபடியாகாத நிகாஹாக இருந்தாலும் ஹராமாவார்கள்.

உடலுறவு கொண்ட மனைவியின் முந்திய கணவனுடைய மகளை (அவள் அவனுடைய பராமரிப்பில் இருப்பினும், இல்லாவிட்டாலும்) திருமணம் செய்யக் கூடாது.மனைவியை உடலுறவு கொள்ளாவிட்டால் அந்த மனைவியை தலாக் சொல்லி விட்டு (வேறு கணவனுக்குப் பிறந்த) அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதில் எவ்விதக் குற்றமும் இல்லை.

காபிரான கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து இஸ்லாத்திற்கு வந்தால் ( அல்லது அவளைத் தலாக் சொல்லி இத்தா முடியும் முன் இஸ்லாத்தில் வந்திருந்தாலும் சரி) குப்ருடைய நேரத்தில் அவளுடைய நிகாஹ் செல்லுபடியாகும்.

விபச்சாரத்தினால் கற்பமுற்றிருப்பவளை நிகாஹ் செய்வது எல்லோரிடத்திலும் கூடும். உடனே அவளை உடலுறவு கொள்ளலாம். ஆனால் இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை உடலுறவு கொள்வது கூடாது என்றும், திருமணம் செய்ய நினைப்பவன் அவனே அவளுடன் விபச்சாரம் செய்தவனாக இருந்தால் கூடுமென்றும் கூறியுள்ளார்கள்.

அடிமைகள்:

ஹயாத்தாயிருக்கும் சுதந்திரமான ஒரு பெண்ணால் உரிமையிடப்பட்ட அடிமைப் பெண்ணை அவளுடைய வலீகாரன் நிகாஹ்செய்து கொடுப்பான். அவளுக்கு வமிசத்தால் வலீகாரன் இல்லாவிட்டால் அவளுடைய அனுமதி பெற்ற ஒரு வக்கீல் நிகாஹ் செய்து கொடுப்பான்.

பருவமடைந்த, புத்தி சுவாதீனமுள்ள ஒரு பெண்ணுடைய அடிமைப் பெண்ணை அந்தப் பெண்ணின் வலீகாரன் அவளுடைய அனுமதி கொண்டு மணம் முடித்துக் கொடுப்பான்.

கன்னியாக உள்ள சிறிய பெண், சிறிய ஆண் ஆகியோருடைய அடிமைப் பெண்ணை அவர்களின் தந்தையோ, தந்தையுடைய தந்தையோ மணம் முடித்துக் கொடுப்பான்.

பொருத்தம் பார்ப்பது:

திருமணத்தில் மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்ப்பது, பெண்ணாகிறவள் கேவலமடையாமலிருப்பதற்காகத் தேவையானதாகும். இதற்கு அரபியில் குஃப்வு كُفْوُ என்று சொல்லப்படும். இந்த குஃப்வு நிகாஹுக்கு அவசியமான ஷர்த்தல்ல.

சுதந்திரமான பெண் அல்லது அடிமைத் தனத்திலிருந்து உரிமை பெற்ற பெண்ணுக்கு அடிமை ஒருவன் குஃப்வு ஆக மாட்டான். பத்தினித்தனமுள்ள பெண்ணுக்கும். மார்க்கப் பற்றுள்ள பெண்ணுக்கும் பாவம்  செய்கிறவன் பொருத்தமாக மாட்டான்.

பொருத்தம் பார்ப்பதில் ஏழை, பணக்காரன் என்பதைப் பார்க்க கூடாது. குறைஷீ, ஹாஷிமி, முத்தலிபி கிளையார்களில் உள்ள பெண்ணுக்கு மற்ற அரபிகளோ, மற்றவர்களோ பொருத்தமாக மாட்டார்கள்.

நிகாஹுக்குப் பின் நடக்க வேண்டிய காரியங்கள்:

1.    வலிமா விருந்து-கல்யாண விருந்து செய்வதாம். இது சுன்னத்து முஅக்கதாவாகும்.  இதற்கு அழைக்கப்பட்டால் வருகை தருவது வாஜிபாகும்.
நிகாஹுக்கு முன் நடைபெறும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல்வது வாஜிபல்ல. அது வெறும் விருந்து என்ற முறையில் செல்வது சுன்னத்தாகும்.

வலீமா விருந்தை மணமக்களின் உடலுறவு நடைபெற்ற பின் கொடுப்பது சிறப்பாகும். நிகாஹ் முடிந்த மூன்று நாட்களுக்குள்  தவறினால் ஒரு வாரத்துக்குள் செய்து விட வேண்டும்.

தப்பு கொட்டி  நிகாஹை பிரஸ்தாபப் படுத்துவதும் அதனால் சந்தோஷம் கொண்டாடுவதும் சுன்னத்தாகும்.

வலீகாரன் கைப்பிடித்துக் கொடுக்கப்பட்டு முதன் முதலாக மணமக்கள் சந்திக்கும் பொழுது மாப்பிள்ளை தன் வலக்கரத்தால் பெண்ணுடைய முன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு இருவரும்:

بَارَكَ اللهُ لِكُلٍّ مِّنَّا فِيْ صَاحِبِهٖ

'நம்மிலிருந்து ஒவ்வொருவருக்கும் மற்றவருடைய விஷயத்தில் அல்லாஹ் பரக்கத்துச் செய்வானாக!' என்று சொல்வதும், மற்ற பேச்சுகள் பேசும்முன் நன்றிக்காகவும், நன்மையைத் தேடியும் இஸ்திகாரா நிய்யத்துச் செய்து கொண்டு இரண்டு ரக்அத் உள்ள தொழுகையை தொழுது கொள்வதும் சுன்னத்தாகும்.

2.    மனைவிமார்களுடன் சந்தோஷயமாயிருப்பதாகும்.

மனைவி தன்னிடம் பிணங்கிக் கொண்டால் முதலில் அவளுக்கு உபதேசம் செய்வான். அதில் அவன் திருந்தாவிட்டால் உபதேசத்துடன் அவளைப் படுக்கையில் வெறுப்பான். ஆனால் பேசாமல் இருக்கக் கூடாது. உபதேசமோ, படுக்கையில் வெறுத்தலோ பலன் தரவில்லையானால் காயப்படாமல் அடிப்பான். இவ்வாறே அல்லாஹுதஆலா குர்ஆனில் (4:34) மூன்று நிலைகளைக் கூறியுள்ளான்.

وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

எவளும் (கணவனுக்கு) மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால், அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்பறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவள் மீது (வேறு குற்றங்கள் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெயரியவனுமாயிருக்கிறான் என இறைவன் அருளியுள்ளான்.

3.    பெண்ஜாதிக்கு நப்கா எனும் அன்னவஸ்திரம் கொடுப்பதாகும். உடலுறவுக்கு தகுதியில்லாத சிறுபிள்ளைக்கு நஃப்கா கொடுக்க தேவையில்லை.

 நஃபகா என்பது அவளிருக்கும் ஊரில் மிகுதம் புழக்கத்தில்  இருக்கும் தானியத்தில் ஏழையாக இருப்பவன் ஒரு சிறங்கையும், (இரு கை நிறையவுள்ள அளவு) நடுத்தரமானவன் ஒன்றரைச் சிறங்கையும், வசதி படைத்தவன் இரண்டு சிறங்கைகளும் ஒவ்வொரு நாளும் சுப்ஹுடைய நேரத்தில் கொடுத்திட வேண்டும். அதற்குரிய விறகு, தண்ணீர், வழக்கப்படியுள்ள கறி,மசாலா, ஊறுகாய், ஆகியவையும் கொடுத்திட வேண்டும். பால், தயிர், மோர் புழங்குகின்ற ஊரில் அதனையும் கொடுப்பது வாஜிப்.,

வீட்டுப் பொருட்கள், சமைப்பதற்குரிய பொருட்கள், உடைகள் தங்குவதற்கு பாதுகாப்பான வீடு கொடுப்பது வாஜிப்.
4.    மார்க்க விஷயங்களை பெண்களுக்கு கற்றுக் கொடுப்பதாகும். அவ்வாறு அவன் கற்றுக் கொடுக்கவில்லையானால் அதைக் கற்றுக் கொள்ள அவள் செல்வதாயிருப்பின் அதைத் தடுக்கக் கூடாது.
5.    ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருப்பின் அவர்களுக்கு கொடுக்கும் கொடையிலும் தங்கும் நாளிலும் நீதமாய் நடப்பதாகும்.

முறை வைப்பதில் அதிகம் மூன்று இரவுகளாகும். மேலும் கன்னி கழியாத புதுப் பெண்ணாக இருந்தால் விடுபடாமல் ஏழு இரவுகள் தங்கலாம். கன்னியிழந்த புதுப் பெண்ணாக இருந்தால் மூன்று இரவுகள் தங்கலாம்.

மணம் முடித்து வீடு கூடும் முதலிரவில் ஜமாஅத்துக்கும், ஜனாஸாவுக்கும் வராமலிருக்கலாம். அப்படி வராமலிருப்பது வாஜிபென்று கூட சில இமாம்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதில் இமாம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

மனைவியுடன் இன்பம் பாராட்டுதல்:

மனைவிமார்களுடன் சரச வார்த்தைகள் பேசியும் விளையாடியும். அவர்களுடைய புத்தியின் பக்குவப்படி நடப்பது கணவனின் கடமை.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தங்களின் மர்மஸ்தானங்களைத் தொட்டு சுகம் பாராட்டிக் கொள்வார்களானால், அல்லாஹ்விடத்தில் அவர்களுடைய கூலி மிக மகத்தானதாக இருக்கும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று இமாம் அபூ ஹனீபா ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

மாதவிடாய் நேரத்திலும், பின் துவாரத்திலும் உறவு கொள்வது ஹராம். பின் துவாரத்தைப் பார்ப்பதும் ஹராமாகும். அதேபோல் நோயுற்றிருப்பவளை வேதனைப் படுத்தி உடலுறவு கொள்வதும், விரலினால் கன்னியழியும்படி செய்வதும் ஹராமாகும்.

கர்ப்பமாவதைப் பயந்து விந்தை வெளியில் போகச் செய்வதும், உடல் உறவு கொள்ளும்போது பேசுவதும் மக்ரூஹ். உடலுறவு கொள்ளும் போது நடந்த விசயங்களை வெளியில் சொல்வது இருவருக்கும் ஹராம். மறைவான இடத்தில் உடலுறவு கொள்வது முஸ்தஹப்பாகும்.

ஆண்,பெண்கள் மர்மஸ்தானங்களை பார்ப்பது அது தன்னுடையதாயினும் மக்ரூஹ் ஆகும். அதனால் கண்பார்வை கெட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
தன் கையினால் விந்தை வெளியாக்குவது ஹராம். அவன் ஜினாவைப் பயந்தாலும் சரி.

இரவின் துவக்கத்தில் உடலுறவு கொள்வது மக்ரூஹ். மாதத்தின் துவக்கத்திலும், நடுவிலும் கடைசியிலும் உடலுறவு கொள்வது மக்ரூஹ் என்பதாகவும் அந்த தினங்களில் உடலுறவு கொள்வதால் அதில் ஷைத்தானும் கலந்து கொள்கிறான் என்பதாகவும் அலீ, முஆவியா, அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஙஸ்ஸாலி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதியுள்ளார்கள்.

இருவதும் ஒரு போர்வையில் மூடிக் கொள்வதும், ஒரே விரிப்பில் உறங்குவதும், உடல் உறவை நாடும் போது மணம் பூசிக் கொள்வதும், கழுத்துடன் கழுத்தை கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொள்வதும், இன்பம் கொடுக்கும் பேச்சுக்களை பேசிக் கொஞ்சிக் குலாவி விளையாடுவதும், உறவு கொள்ளும் நேரத்தில் பின்வரும் துஆவை ஓதிக் கொள்வதும் சுன்னத்தாகும்.

بِسْمِ اللهِ اللهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ  الشَّيْطَانَ مَارَزَقْتَنَا .

பொருள்: 'அல்லாஹ்வின் திருநாமத்தால் யா அல்லாஹ் ஷைத்தானை எங்களை விட்டும் தூரமாக்கி வைப்பதுடன் அவனை எங்களுக்கு நீ கொடுத்திருப்பதை விட்டும் தூரமாக்கி வைப்பாயாக!'

விந்து வெளிப்படும் போது பின்வரும் ஆயத்ததை மனதினால் சொல்லிக் கொள்ள வேண்டும்.

الْحَمْدُ لِلّهِ الَّذِيْ خَلَقَ مِن َ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَّصِهْرًا.

பொருள்: 'தண்ணீரிலிருந்து (விந்திலிருந்து) மனிதவர்க்கத்தைப் படைத்து அதைப் (பிறப்பைக் கொண்டு) பந்துக்களாகவும், (திருமணத்தினால்) சம்பந்திகளாவும் ஆக்யிய அல்லாஹுத் தஆலாவுக்கே புகழனைத்தும்'

அவனுக்கு விந்து முதலில் வெளிப்படுவதாக இருந்தால் சற்று தாமதித்து அவளுக்கு வந்து வெளியாகும் வரை முடிந்த மட்டும் விளையாட்டில் ஈடுபட்டு அவளுடைய ஆசையை நிறைவேற்றுவது சுன்னத்தாகும்.

மறுமுறை உடலுறவு கொள்ள நாடினாலும், அல்லது எதையேனும் சாப்பிட, குடிக்க விரும்பினாலும் இருவரும் தங்களுடைய மர்மஸ்தானங்களைக் கழுவி சுத்தப்படுத்தி ஒளு செய்து கொள்வதும் சுன்னத்தாகும்.

கணவன் மனைவி இருவரும் உடலுறவின் விளையாடுவது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்.

பிரயாணம் போய் விட்டுத் திரும்பி வந்த நேரத்திலும், ஸஹருடைய நேரத்திலும் உடலுறவு கொள்வது சுன்னத்தாகும். பகலில் உடலுறவு கொள்வது மக்ரூஹ். ஆனால் வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு முன் மக்ரூஹ் அல்ல. மாறாக அது சுன்னத்தாகும்.

கழுதைபோல நிர்வாணமாக உடலுறவு கொள்ளக் கூடாது. தமர்காளை போல மொச்சை போடக் கூடாது என்று ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடலுறவில் ஆணுக்கு மேல் பெண்ணை ஆக்கிக் கொள்வது மக்ரூஹ். அதிலும் விந்து வெளியாகும்போது அவ்வாறு செய்வது கொடிய மக்ரூஹ். ஏனெனில் அது நீர்த்தாரையில் நோவை உண்டாக்கும் என்று மஙானியில் கூறப்பட்டுள்ளது.

சக்தி பெற்றவன் நான்கு தினங்களுக்கு ஒரு தடவை உறவு கொள்வதும், அதிகமான ஆசையுள்ளவனுக்குத் தேவையான அளவு கொள்வதும் சுன்னத்தாகும்.

உடலுறவில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் படுத்துக் கொண்டு செய்வது நிலையில் நின்று கொண்டு செய்வதை விடச் சிறந்தது. எந்த வகையிலும் ஆண் பெண்ணை இன்பம் அனுபவிக்கலாம்; பின்துவராத்திலும் மாதவிடாய் உள்ள நேரத்திலும் தவிர.

ஆகவே கணவன் மனைவி ஆகிய இருவரும் மார்க்க சட்டப்படி நடந்து நல்வாழ்க்கை வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக!

பொய் – ஒரு நரகப் பேய்!

பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு போய்விட்டது. வியாபாரத்தில், அமானிதத்தைப் பேணுவதில், வாக்குறுதியை காப்பாற்றுவதில், தன்னை மிகைப்படுத்திக் கொள்வதில், ஆற்ற வேண்டிய காரியத்தில் பொய்கள் தாராளமாக பேசப்பட்டு வருகின்றன.

இதுபற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கும்போது, அல்குர்னிலும், ஹதீதுகளிலும் ஏராளமான ஆதாரங்கள் பொய் பேசுவது பற்றி வந்துள்ளன. அவற்றிலிருந்து:

பொய் பற்றி அல்குர்ஆன்:

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقً

1.    சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81)

2.    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
3.    நீங்கள் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.(2:42)

4.    قُلْ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ

'அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்' என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)

فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

5.    அன்றைய தினம் (மறுமையில்) பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)

பொய் பற்றி ஹதீதுகள்:

1.    நெருப்பு விறகைத் திண்பது போல பொய் ஈமானை தின்று விடும் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

2.    'ஒரு முஃமினிடம் எல்லாத்தீமைகளும் இருக்கலாம். ஆனால் அவனிடம் பொய்யும், நேர்மையின்மையையும் இருக்கக் கூடாது. (நூல்: அஹ்மத்)

3.    ஒருவர் உணவுப் பொருள் விற்றுக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரிடம் சென்று நீர் எப்படி விற்கிறீர் என்று கேட்க அதற்கு அவர்(சரியாக) விற்கிறேன் என்று பதில் கூறினார்.அப்போது அவர் உணவுப் பொருளுக்குள் கையை ஓட்டிப் பார்க்கும்படி நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது. உடனே தமது கையை அதில் ஓட்டிப்பார்த்தபோது , உள்ளே ஈரமாக இருந்தது. அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) அவர்கள் பிறருக்கு மோசடி செய்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என்றார்கள். (அபூஹுரைரா ரழி ரழியல்லாஹு அன்ஹு) அபூதாவூத்)

4.    இறைத் தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்' 'விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!' (நூல் : புஹாரி).

5.    ஒரு நாள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார் வெளியில் உள்ள தனது குழந்தையை வா உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்பொழுது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரிடம் உமது குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகின்றீர் என்று வினவ, அவர் பேரித்தம் பழம் கொடுக்கப் போகிறேன் என்றார். அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்படி செய்யாவிட்டால் உம்மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஆமிர ரழியல்லாஹு அன்ஹு அபூதாவூத், பைஹகீ)

6.    அப்துல்லாஹ் இப்னு ஆமிர்( ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- ஒருநாள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா' நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.

7.    அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிடப் படும், என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு

சம்பிரதாயத்திற்காக பொய் சொல்வதும், சம்பிரதாயத்திற்காக ஒருவரை விருந்துக்கு அழைப்பதும் , சம்பிரதாயத்திற்காக அழைக்கப்பட்டவர் மறுப்பதும் பொய் தான்.

8.    ஒரு முறை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் எங்களிடம் சாப்பிடும்படி கூறினார்கள்.அதற்கு நாங்கள் எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.அதற்கு அவர்கள் நீங்கள் பசியையும், பொய்யையும் சேர்த்துக் கூறாதீர்கள் என்றார்கள். (அஸ்மா பின்து யஜீத்(ரழியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா)

9.    நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: – 'நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)

10.    அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே' (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்' என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி;.

11.    நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -'மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா ரழியல்லாஹு அன்ஹு , ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)

12.    அடுத்தவனை மகிழ்விப்பற்காக பொய் சொல்பவன் அழிந்து போகட்டும்     என்றார்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள். -( திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்)

13.    உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது. ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா.

பொய் பேசுவதினால் அடையும் கேடுகள்:

1.    'யாரசூலல்லாஹ்  ஒரு முஃமின் விபச்சாரம் செய்வானா? என்று சஹாபாக்களில் ஒருவர் கேட்ட போது, 'செய்ய மாட்டான்' என்று சொல்லிய நபிகளார், 'ஒருவேளை ஷைத்தானுடைய கலைப்பினால் செய்து விடுவான்' என்று கூறினார்கள். பின்பு ஒரு முஃமின் மது அருந்துவானா? என்று கேட்ட போது, 'அருந்த மாட்டான்' என்று சொல்லி விட்டு, ஷைத்தானுடைய ஊசாட்டத்தினால் அருந்திடுவான் என்றார்கள். பின்பு ஒரு முஃமின் திருடுவானா? என்று கேட்டதற்கும் அவ்விதமே பதில் சொன்னார்கள். அதன் பிறகு ஒரு முஃமின் பொய் சொல்வானா? என்று கேட்டபோது, சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான் என்று கூறி,

إِنَّمَا يَفْتَرِي الْكَذِبَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْكَاذِبُونَ

'நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் (உண்மையில்)அவர்கள் தாம் பொய்யர்கள்(நபியே! நீர் பொய்யரல்ல).' (அல்-குர்ஆன் 16:105) என்ற ஆயத்தை ஓதிக் காட்டினார்கள்.

2.    நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -முனாபிஃக்கின் அடையாளம் மூன்று:

பேசினால் பொய் பேசுவான்,

வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்

நம்பினால் மோசம் செய்வான்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.

3.    நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: -'என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்' அறிவிப்பவர் : அலி (ரழியல்லாஹு அன்ஹு), ஆதாரம்:புகாரி.

4.    'என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருப்பிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்' அறிவிப்பவர்: அபு{ஹரைரா (ரழியல்லாஹு அன்ஹு), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.

5.    'மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்;. அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : 'அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்' யார் அவர்கள்? நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். -ஆதாரம்: முஸ்லிம்.

6.    நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் 'தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…' என்று வந்துள்ளது.

7.    நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள் 'கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்'. அறிவிப்பவர்: ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்( ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம்:முஸ்லிம்.

8.    சமுரா இப்னு ஜுன்தப்( ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:-
இறைத்தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.

நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்( ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

9.    அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்( ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –

'முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.

وَمِنْهُم مَّنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِن فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ

அவர்களில் சிலர், 'அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)

فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَىٰ يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
    ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா.

10.    மூவரிடம் கியாமத் நாளையில் அல்லாஹ் பேசமாட்டான் அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்(ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு,அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யாவர்? என்று கேட்டார்கள்.1. இடுப்பில் அணியும் வேஷ்டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர். 2. தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர், 3. பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள். (அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)

11.    இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!

12.    மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
13.   
وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ ۚ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ

அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)

அனுமதிக்கப்பட்ட பொய்கள்: –

எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்,

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியதாக அஸ்மா பின்த் யஜித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறர்கள்: –

மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)

ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது,

யுத்தத்தின் போது,

மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக. (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)

இஹ்யாவில் கூறப்பட்டுள்ளது ஒரு நல்ல காரியம் நிறைவேறுவது பொய்யைக் கொண்டும் ஆகலாம்ளூ உண்மையைக் கொண்டும் ஆகலாம் என்றிருந்தால், அந்த இடத்தில் பொய் சொல்வது ஹராமாகும். பொய் சொல்வது கொண்டு மட்டுமே அதனை நல்லதாக்க முடியும் என்றிருந்து அந்தக் கருமமும் நன்மையானதாக இருந்தால் அப்பொழுது பொய் சொல்வது ஆகும்.

பொய் சொல்வது ஹராம்தான். ஆனால் சிலசமயங்களில் பொய் சொல்வது வாஜிபாகவும் ஆகிவிடும். நம்மிடமுள்ள அமானிதப் பொருளை அநியாயக்காரன் ஒருவன் அபகரிப்பதற்காகக் கேட்கிறான். அப்பொழுது அதை வைத்துக் கொண்டு இல்லையென்று பொய் சொல்வது வாஜிபாகும். அதற்காக சத்தியம் செய்வதும் வாஜிப்.

அல்லாஹ்வும் அவனது ரசூலும் தடுத்துள்ள மறுமையில் வெற்றியைத் தராத பொய்யை விட்டும் நாம் தவிர்த்திருப்போம். அல்லாஹ் தௌபீக் செய்வானாக! ஆமீன்.
 

ஆடை அணிவது பற்றிய சட்டங்கள்.

ஆண்கள் முழங்காலுக்கும் தொப்புளுக்கும் இடையேயுள்ள மேனியை மறைப்பதும், பெண்கள் முகத்தையும் இரு மணிக் கட்டுகளையும் தவிர உள்ள முடியும், நகமும் உட்பட மேனி முழுவதையும் மறைப்பது வாஜிபாகும். மேனி தெரியாத கெட்டியான துணியால் மறைத்திட வேண்டும்.

1.     '(பெண்களாகிய அவர்கள் தங்கள் உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவை தவிர (ஆடை ஆபரணம் போன்ற) தங்கள் அலங்காரத்தையும்  அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.' – அல்குர்ஆன் 24:31

இங்கு 'வெளியே தெரிவன' என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்

'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.

2.    'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)

3.    பெருமை கொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முழங்காலிலிருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் ; இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 1653)

4.    'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.' (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)

ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமாக ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது, பெண்கள் அதிகமாக அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அதை ஆண்கள் அணியக் கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.

5.    ஒரு பெண் வெளியில் செல்லும் போது நறுமணம் பூசி செல்வது கூடாது. வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை.

6.    'அவர்கள் தங்களின் அலங்காரத்தில் மறைந்திருப்பதை பிறருக்குக் காட்ட (பூமியில்) கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம்' எனக் கூறுகிறது அல்குர்ஆன்.

அவள் அணிந்திருக்கும் கொலுசு, தண்டை போன்ற ஆபரணங்களையும் வெளியே காட்டக் கூடாது, அவள் அணியும் காலணிகள் விலையுயர்ந்த ஷூக்கள் போன்ற வற்றால் நடந்து ஒலியெழுப்பி ஆண்களின் கவனத்தை ஈர்த்து நிற்பது கூடாது என்று உத்தரவிடுகிறது திருமறை.

பர்தா -ஹிஜாப்

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

அல்லாஹ் கூறுகிறான்: '(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.'' (அல்குர்ஆன்:24:31)

''அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.'' (அல்குர்ஆன்:33:53)

இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல்வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்றவற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.

மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,

'அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.'(அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: 'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!' (அல்குர்ஆன்: 33:59)

'நாங்கள் நபி(ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்)அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்' என ஆயிஷா(ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)

மறைந்தவர்களை ஜியாரத் செய்யும் விதத்திலும் ஸஹாபிப் பெண்கள் பேணிய ஹிஜாப்பிற்கு ஆதாரமாக உள்ள ஹதீதை பாருங்கள்:

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொல்கிறார்கள்: 'ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.' (இப்னு அஸாகிர்)

'அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.' (அபூதாவூத்)

இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.

பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்:

'உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்.'

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு போருக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த போது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரிடத்தில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒட்டகச் சிவிகையில் இருந்து இறங்கினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் திரும்பி வருவதற்குள் படை சென்றுவிட்டது. ஸஃப்வான் பின் முஅத்தல் என்ற நபித்தோழர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் முகத்தை மறைத்துக்கொண்டார்கள்.

ஸப்வான் பின் முஅத்தல் என்னை அறிந்து கொண்டு இன்னாஆல்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 4750)

'ஹிஜாப்' என்பது பெண்கள் தமது 'அவ்ரத்'தையும், அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள உடை அமைப்பாகும். இதற்கெதிரானது 'தபர்ருஜ்' என்பதில் அடங்கும்.

மேற்கண்ட குர்ஆன் ஆயத்துக்கள், ஹதீதுகளில் அடிப்படையில் அமையப் பெற்றதே பர்தாவாகும். இதில் தற்போது கறுப்பு கலரில் பெண்கள் நடைமுறையில் பர்தா உடுத்தி வருகின்றனர். இது வஹ்ஹாபியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நாம் வஹ்ஹாபிகளுக்கு மாற்றமாக கறுப்பு கலரைத் தவிர ஏனைய கலரில் பர்தா அணிவது ஏற்றமானது. மேலும் விஞ்ஞான ரீதியாகவும் கறுப்பு கலர் வெயிலுக்கு ஏற்றதல்ல. அதே போல் துக்கத்தின் அடையாளமாகவும் கறுப்பு இருக்கிறது கவனிக்கத்தக்கது.

பயன்கள்:

பெண்கள் மேற்குறிப்பிட்ட குர்ஆன், ஹதீது சொன்னபடி உள்ள சரீயத் சட்டங்களை  பேணி உடையணிவதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளும் பயன்களும் அளப்பரியன. உண்மையில் பெண்களுக்கு இஸ்லாம் வரையறை செய்துள்ள 'ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள்;. கௌரவிக்கிறார்கள்;;;.

ஆண்களின் ஆடை – சட்டதிட்டங்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடை முழங்காலுக்கும் பரண்டை (கணு)க் காலுக்கும் நடுவிலும், அவர்களுடைய சட்டைக் கை மணிக்கட்டுக்கு மேலுமாக இருந்தது.

சரீரத்தை எடுத்துக் காட்டும் (மஸ்லின் அல்லது ரவைசல்லா எனப்படும்) கவனியாலும், பளிங்கு போன்ற பொருட்களினாலும் ஆடை அணிவது கூடாது. துப்புரவான தோலாக இருப்பினும், காகிதம்  போன்றவையாக இருப்பினும் அதில் ஆடை அணிவது கூடும்.

பருத்தியும் பட்டும் சமமாக இருக்கின்ற துணியை அணிவது மக்ரூஹ் ஆகும். கொஞ்சமேனும் பருத்தி அதிகம் இருப்பின் மக்ரூஹ் அல்ல.

ஆண்கள் அழகிய ஆடை அணிந்து, தலைப்பாகை கட்டி, அதில் தொங்கல் விட்டு மேலே போர்வை அணிந்து, தலைவழியப் பச்சைப் போர்வையிட்டுத் தொழுவது சுன்னத்தாகும்.பெருமையை நாடி காலிலும், கையிலும் தொங்கும்படி உடையணிவது ஹராம் ஆகும். பெருமையை நாடவில்லையானாலும் அவ்வாறு அணிவது மக்ரூஹ் ஆகும்.

வேறு உடையில்லாத போது நஜீஸான உடையைக் கொண்டேனும், பட்டாடையைக் கொண்டேனும் (தனிமையிலிருந்தாலும்) மானத்தை மறைப்பது வாஜிபாகும். ஆண்கள் முன்,பின் துவாரத்தை மறைத்துக் கொள்வதும், பெண்கள் முழங்கால் முதல் தொப்புள் வரை மறைப்பதும் வாஜிபாகும்.

குளிக்கும்போதோ, வீடு போலுள்ளவற்றைப் பெருக்கும்போது புழுதியை விட்டு காத்துக் கொள்வதற்கோ, அல்லது புழுக்கமான நேரத்தில் குளிர்ச்சியை உண்டாக்கிக் கொள்வதற்காகவோ, தனித்திருக்கும் போது அவ்ரத்தைத் திறந்து கொள்ளலாம். எவ்வித் தேவையுமின்றி ஆண்கள் தொடையையும், பெண்கள் முதுகுப் பகுதியையும் திறந்திப்பது மக்ரூஹ் ஆகும்.

அழுக்குத் துணியும் கறுப்பு நிறமுள்ள காலணியும் வறுமையை உண்டாக்குமென கமாலுத்தீன் திம்யரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

தொழுகையல்லாத நேரத்தில் ஈரமில்லா பொழுது நஜீஸ் பட்டிருக்கும் உடையை அணியலாம். பருவமடைந்த ஆண்கள் பட்டாடையை அணிவது, உபயோகிப்பது, போர்த்திக் கொள்வது, விரிப்பாக்குவது, மானத்தை மறைப்பதற்கு உபயோகிப்பது ஆகியவை ஹறாமாகும். ஆனால் பட்டுத்துணியின் மீது பருத்தித் துணியை அது மெல்லியதாக இருப்பினும் விரித்து அதில் உட்காரலாம்.

பெண்களும் பட்டுத் துணியால் திரை போடுவதும், அதனால் சுவர்களை அலங்கரிப்பதும் ஹராம் ஆகும். ஆண்கள் தங்களின் துணிகளின் ஓரங்களில் பட்டினால் ஆன துணியை நெய்து அணிந்துகொள்ளலாம்.

குங்கும நிறம் கொண்ட சந்திர காவி நிறமும், குசும்பாவெனும் வெண்மை கலந்த சிவப்பு நிறமும் ஆண்கள் அணிவது ஹராம்.

உடைகளில் மிக ஏற்றமானது பெருநாளல்லாத நாளில் வெள்ளை நிறமாகும்.வெள்ளைக்கு அடுத்தது பச்சை நிறமாகும். சொர்க்கத்தின் உடை பச்சை நிறமுள்ளதாகும். பெருநாளில் மிகவும் ஏற்றமானது விலை உயர்ந்த ஆடையாகும்.

மார்க்கத்தில் கூறப்பட்ட பலன் இல்லாமல் சொரசொரப்பான துணியை அணிவது மக்ரூஹ்.

மோதிரம் அணிவது:

ஆண்கள் வெள்ளியினால் ஒரு மோதிரம் அணிவது சுன்னத், அதை வலக்கரத்தில் அணிவது ஏற்றம். அதை சுண்டுவிரலில் அணிவது மற்றொரு சுன்னத். வலக்கரத்தின் சுண்டுவிரலில் அணிவது ஏற்றமானது. ஃபைரோஜ் கல் வைத்த மோதிரம் அணிவது நல்லது. அந்தக் கை பரக்கத்தை விட்டும் நீங்காது எ ன்றும், அகீக் கல்லினால் அதிகமான பலன்களுண்டு என்றும்  கூறப்பட்டுள்ளது. ஒரு கையில் ஒரு மோதிரத்தை விட அதிகப் படுத்தக் கூடாது. மோதிரத்தின் அளவு உலக வழக்கில் அது கடப்பானது என்று சொல்லாத அளவிற்கு இருக்க வேண்டும். இரும்பு, செம்பு, ஈயம் போன்ற உலோகங்களாலும் மோதிரம் அணியலாம்.ஆனால் இரும்பு மோதிரம் அணியக் கூடாது என்று ஒரு பலவீனமான ஹதீது உள்ளது.

காற்சட்டையோ, கைலியோ அணிவதில் சுன்னத்தாவது: காலின் குதிரை முகத்தில் பாதி வரை தாழ்த்திக் கட்டுவதாயிருக்கும். பரண்டை முளி வரை (கணுக்கால் வரை) கட்டுவதில் சுன்னத் விடுபட்டு விடும். சட்டைக் கையை மணிக்கட்டு வரை தாழ்த்திக் கொள்ளலாம். தலைப்பாகையின் பின்புறத் தொங்கலை முதுகின் நடுவில் தொங்க விடுவது, வலப்புறத்தில் தொங்க விடுவதை விட சிறந்ததாகும்.

ஜும்ஆ நாளில் தலைப்பாகை அணிபர்கள் மீது அல்லாஹ்வும், அவன் மலக்குகளும் சலவாத்துச் சொல்வார்கள் என்றும், தலைப்பாகை அணிந்து கொண்டு இரண்டு ரக்அத் தொழுவது தலைப்பாகை அணியாமல் எழுபது ரக்அத் தொழுவதை விடச் சிறந்தது என்றும் ஹதீதில் வந்துள்ளது.

தஸ்பீஹ் மணிக்கு பட்டினால் குஞ்சம் போடுவது கூடாது. பணம் வைப்பதற்காக பட்டினால் வட்டுவம் செய்வது ஆகும். குர்ஆனுக்கு பட்டினால் உறை போடுவது ஆகும். பட்டுத்துணியால் மேற்கட்டி கட்டுவது ஆண், பெண் அனைவருக்கும் ஹராமாகும்.

ஆடைகளை அணியும் போது வலப்புறத்தையும், கழட்டும் போது இடப்புறத்தையும் முற்படுத்துவது சுன்னத்.

முற்றும்.

திருடுவற்குரிய தண்டனைகள் பற்றிய சட்டங்கள்

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيم
 

திருடிய ஆணையும்,பெண்ணையும் அவ்விருவரும் செய்த (தீய) செயலுக்குக் கூலியாக அல்லாஹ்விலிருந்து உள்ள தண்டனையாக அவ்விருவருடைய கைகளையும் துண்டியுங்கள்' (5:38) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

பாதுகாக்கப்பட்ட ஓரிடத்திலிருநு;து ஒரு பொருளை ஒருவன் திருடினால் அவன் பருவ வயதை அடைந்தவனாகவும், சுயபுத்தியுள்ளவனாகவுமிருந்தால், திருடியது ஆணாக அல்லது பெண்ணாக இருந்தாலும் வலது கையில் மணிக்கட்டு வரை நீதிபதி, அல்லது அவருடைய பிரதிநிதி துண்டிப்பது வாஜிபாகும். ஆனால், அந்தப் பொருளுக்குரியவன் அதனைத் தேடி, திருடியது சாட்சியினால் அல்லது திருடியவனின் விண்ணப்பத்தினால் நிரூபிக்கப்பட்டால் தான் கை துண்டிக்கப்படும்.

அவன் மறுபடியும் திருடினால் இடது காலை பரண்டை (கணை)க்கால் முளிவரை துண்டிக்க வேண்டும். மூன்றாவது தடவையாகத் திருடினால் இடது கையை மணிக்கட்டுவரை துண்டிக்க வேண்டும். நான்காவது தடவை திருடினால் வலது காலை முளிவரைத் துண்டிக்க வேண்டும். பிறகும் திருடினால், அவனைக் கண்டிக்க வேண்டுமே தவிர கொல்லக் கூடாது.

வக்ஃபுடைய சொத்துக்கள், பள்ளிவாசலுடைய உத்திரம், நிலை, கதவு போன்றவற்றையும், அலங்காரத்திற்காக தொங்க விடப்பட்டிருக்கும் பொருட்கள் ஆகியவற்றையும் திருடினாலும் கை துண்டிக்கப்படும்.

பள்ளிவாசலிலுள்ள பாயை, நிரந்தரமாக எரிக்கப்படும் விளக்கைத் திருடினாலும், அவன் ஜகாத்து வாங்கத் தகுதியானவனாக இருக்கின்ற நிலையில் ஒருவனுடைய ஜகாத்து பொருளிலிருந்தோ, அல்லது பைத்துல் மால் என்னும் பொது நிதியிலிருந்தோ திருடினாலும், சூதானமில்லாத (பாதுகாப்பில்லாத) இடத்திலிருந்து திருடினாலும், திருடிய பொருளிலிருந்து திருடியவனுக்குச் சேர வேண்டிய  பங்கிருந்தாலும், திருடிய பொருள் பிறரிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக இருந்தாலும், அபகரிக்கப்பட்ட இடத்திலேயே திருடினாலும், தன்னுடைய பெற்றோர், பாட்டன், பாட்டி, தன்னுடைய பிள்ளைகள், பிள்ளையுடைய பிள்ளைகள் ஆகியோரின் பொருளைத்திருடினாலும் கையைத் துண்டிப்பது கூடாது.

கணவன் மனைவி இருவரிலொருவர் மற்றவருடைய பொருளைத் திருடுவதால் பலமான சொற்படி கை துண்டிக்கப்படும்.

இரண்டு நபர்கள் சேர்ந்து கால் தங்க நாணயத்தை களவெடுத்தால் இருவரில் யாருடைய கையையும் துண்டிக்கக் கூடாது.

திருட்டுத்தனம் என்பது மேற்சொன்ன முறையில் மறைவாக எவருக்கும் தெரியாமல் எடுப்பதாகும். எனவே ஒருவனிடமிருந்து பொருளைப் பறித்துச் சென்றாலும், கொள்ளையடித்தாலும் கையைத் துண்டிக்கக் கூடாது. ஆனால் அதனை விடக் கடினமான தண்டனையை அரசாங்கத்தின் மூலம் அவனுக்கு கொடுக்க வேண்டும்  என்பது மார்க்கத்தின் சட்டமாகும்.

விபச்சாரம் (ஜினா) – தண்டனைகள்

وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ

விபச்சாரத்திற்கு நீங்கள் நெருங்க வேண்டாம். (அல்குர்ஆன் 17:32)

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ

'விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல் குர்ஆன் 24:2)

'ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)

'விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:

1.முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2.வருமானத்தை அறுத்துவிடும்
3.ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4.நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

மனிதனை நாசமாக்கும் செயல்கள் ஏழு என்பதாக ஹதீதில் கூறப்பட்டுள்ளது. 1. பாவங்களில் மிகப் பெரியது அல்லாஹ்விற்கு இணை வைப்பதாகும். 2. கொலை செய்தல் 3. விபச்சாரம் புரிதல். 4. பெற்றோரை நோவினை செய்தல். 5. பொய்ச் சத்தியம் செய்தல். 6. அநாதைகளின் பொருட்களை அநியாயமாகச் சாப்பிடுதல். 7. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல் ஆகியவையாகும். மற்றோர் அறிவிப்பில் விபச்சாரம் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

الزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى الْمُؤْمِنِينَ

விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)

விபச்சாரத்திற்குரிய சட்டங்கள்:

பருவமடைந்த ஒரு  சுதந்திரமான ஒருவன் தன் ஆண் குறியை கத்னாவுடைய அளவுவரை எவரேனும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் துவாரத்திலோ அல்லது பின் துவாரத்திலோ – அது ஹராமென்று அறிந்து –நுழைய வைத்தால் நாட்டின் தலைவர் அல்லது அவரின் பிரதிநிதியான நீதிபதியானவர் அவனுடைய மேனியில் படும்படியாக நூறு கசையடி கொடுத்து, ஓராண்டு வரை இரண்டு நாள் தூரத்திலுள்ள வேறோர் ஊருக்கு நாடு கடத்தி விடுவார். இச்சட்டம் திருமணம் ஆகி உடலுறவே கொள்ளாத விபச்சாரம் புரிந்த ஆணுக்கும், அது போன்ற ஒரு பெண்ணுக்கும்உரியதாகும்.

மிருகங்களின் மர்மஸ்தனத்திலும், மய்யித்துடைய மர்மஸ்தானத்திலும் தன் மர்மஸ்தானத்தை நுழைய வைப்பதால் ஹத்து இல்லை. புதிதாக இஸ்லாத்தில் சேர்ந்த ஒருவன் அல்லது ஹராமென்பதை அறிவதற்குரிய வாய்ப்பு ஏற்படாதவன் அதனை ஹலாலென்று விளங்கியதாக வாதாடினால், அதுவும் சாத்தியமாக இருப்பின் அவனுக்கும் ஹத்து இல்லை. இவ்வாறே சந்தேகமான நிகாஹினால் உடலுறவு நடந்திருந்தால் – அதனை ஹலாலெனச் சொன்ன இமாமைத் தொடராவிட்டாலும் ஹத்து இல்லை.

ஸஹீஹான நிகாஹின் மூலம் உடலுறவு கொண்ட சுதந்திரவான் அல்லது உடலுறவு கொள்ளப்பட்ட சுதந்திரமான பெண் விபச்சாரம் செய்தால் இமாமானவர் அல்லது அவருடைய பிரதிநிதி அவ்விருவரையும் நிற்க வைத்து கல்லால் எறிந்து கொல்லும்படி ஜனங்களை ஏவுவார்.  கற்பமாயிருப்பவளையும், குழந்தைக்குப் பால் கொடுப்பவளையும் அந்த செயல்களைவ pட்டும் அவள் நீங்கும் நாள்வரை பிற்படுத்தி வைக்கப்படும். நோய் இருப்பதற்காகப் பிற்படுத்தக் கூடாது. நோய், கடும் குளிர், உஷ்ணம் ஆகிய காரணத்தினால் பிற்படுத்தக் கூடாது. ஆனால் ஹத்திற்கு பிற்படுத்தலாம்.

ஹத்து என்பது பச்சை மட்டை, செருப்பு ஆகியவற்றினால் அடிக்கலாம். ஐம்பது சிறு குச்சிகளுள்ள ஒரு கட்டினால் இரண்டு தடவை அடித்தாலும் நூறு அடிகள் நிறைவேறி விடும். ஆனால் அதிலுள்ள ஒவ்வொரு குச்சியும் அவனுடைய மேனியில் பட வேண்டும்.

விபச்சாரம் செய்தது உறுதியாவது, அவனே ஒப்புக் கொள்வது கொண்டோ அல்லது நான்கு ஆண்களின் சாட்சிகளைக்கொண்டோ தரிபடும். அதாவது நான்கு ஆண்கள், அவ்விருவரும் விபச்சாரம் செய்து கொண்டிருந்ததையும், அவன் அவளுடைய மர்மஸ்தானத்தில் எவ்வாறு நுழைய வைத்தான் என்ற விபரத்தையும், அந்த இடத்தையும், நேரத்தையும் தாங்கள் நான்கு பேர்களும் கண்ணால் கண்டதாய் சாட்சி கூற வேண்டும். அப்பொழுதுதான் அது உறுதியாகும்.

மாயிஜ் என்ற சஹாபியும், ஙாமிதிய்யா என்ற ஸஹாபி பெண்மணியும் தாங்களிருவரும் விபச்சாரம் செய்து விட்டதாக விண்ணப்பித் போது அந்தச் சொல்லிலிருந்து மீண்டு கொள்ளும்படியாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சைக்கினை செய்ததால் அப்படி மீண்டு கொள்வது சுன்னத்தாகும்.

ஆனால் தான் விபச்சாரம் செய்ததாக சொன்ன ஒருவன், தான் அப்படிச் சொல்லவில்லையென்று மறுத்தால் அவன் ஏற்கனவே விபச்சாரம் செய்ததாகச் சொல்லும் போது இரண்டு சாட்சிகள் இருந்திருப்பார்களாயின் அந்த மறுப்பை ஒப்புக் கொள்ளக் கூடாது. இரண்டு சாட்சிகள் இல்லாதிருப்பின் அவனின் மறுப்பை ஒப்புக் கொள்ளலாம். இந்த நிலையில் அவன் மீது ஹத்து விதியாகாது.

ஒருவனின் தொடையை மற்றொருவனின் தொடையுடன் சேர்ப்பதின் மூலமாகவோ ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் சேருவதின் மூலமாகவோ, தன் கரத்தினால், அல்லது தன் மனைவி அல்லாதவரின் கரத்தினால் விந்தை வெளியாக்குவதின் மூலமாகவோ இன்பம் அனுபவித்தால் ஹத்து இல்லை. எனினும் அவர்களை  கண்டிக்க வேண்டும்.