அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா

பனூ நுழைர் கோத்திரத் தலைவரான ஹை இப்னு அக்தப் இவர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி வந்தவர். பனூ குறைழா வம்சத் தலைவரான ஸம்வால் அவர்களின் புதல்வி லரு ஆகியோரின் புதல்வி. ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை முதலில் ஸலாம் இப்னு மஷ்கம் குறைஷீ என்பவர் மணமுடித்து பின்னர் விவாகரத்து செய்தார். தொடர்ந்து அன்னை ஸபிய்யா அவர்களை கினானா இப்னு அபில் ஹக்கீக் என்பவர் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார்.

சரித்திர பிரசித்தி பெற்ற வீரத்தின் விளை நிலமாம் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேராற்றல் வெளிப்பட்ட கைபர் போர்முனையில் ஸபிய்யா அம்மையாரின் கணவரும், தந்தையும் மாண்டு போயினர்.

போரில் கைப்பற்றிய மனிதர்களில் ஸபிய்யாவும் இருந்தார். அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முன்னே, கைது செய்யப்பட்டவர்களும், கிடைத்த பொருட்களும் நிறைக்கப்பட்டன. அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவற்றை தன் வீரத் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொண்டிருக்கின்ற போது,

நாயகத் தோழர் திஹ்யத்துல் கல்பீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “நாயகமே எனக்கொரு அடிமைப் பெண் வேண்டும்.!“ என வேண்டுதல் விடுத்தார்.

“தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்“ என கைது செய்யப்பட்ட பெண்டிர் நோக்கி அண்ணல் சுட்டிக்காட்ட, அவர் ஸபிய்யா அம்மையாரைத் தெரிவு செய்தார்.

அப்போது தோழரொருவர் குறுக்கிட்டு, “யா ரஸுலல்லாஹ்! பனூ நுழைர், பனூ குறைழா கோத்திரத்தின் தலைவரது புதல்வியினை அவருக்கு கொடுப்பது சரியன்று. தாங்களே ஸபிய்யாவை வைத்துக் கொள்வதே சரியானது“ எனக்கூற தோழர்களும் ஆமோதிக்க,

அண்ணலார் வேண்டுகோளை ஏற்றனர். ஸபிய்யா அம்மையார் விடுவிக்கப்பட்டார்கள்.  அண்ணலரின் அருந்துணைவியர் பட்டியலில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.

இவர்கள் குள்ளமானவர்கள். அழகானவர்கள்;. அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பல நபிமொழிகளை அறிவிப்புச் செய்துள்ளனர். அத்தோடு மார்க்கத் துறையில் மேலான ஞானமும் பெற்றிருந்தனர். அவர்களைச் சூழ பெண்கள் அமர்ந்து மார்க்க விஷயங்களில் ஏற்படும் ஐயங்களை அகற்றிச் செல்வது வழக்கம்.

அன்னையவர்கள் நற்குணங்கள் கைவரப்பெற்ற நங்கை நல்லாராக வாழ்ந்தார்கள். “ஆழ்ந்த ஞானமும், அறிவும் பெற்றவர் ஸபிய்யா“ என்று புகழப்படுகிறார்கள்.

அன்னையவர்களின் அடக்கம் தாராள குணம், திடமனம் ஆகியன பலராலும் போற்றப் பெற்றது. கைபர் போரில் தமது முந்தைய கணவர் மாண்டு போனதைக் கண்டு அவர்கள் கொஞ்சமும் கலங்கவில்லை.

அத்தோடு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அளவற்ற எல்லையற்ற பேரன்பு பூண்டிருந்தனர். ஒருமுறை நபியவர்களுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அதைப் பொறுக்காத ஸபிய்யா “இந்நோய் எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடாதா?“ எனக் கவலையோடு கூற அருகிலிருந்த மற்ற துணைவியர்கள், அன்னை ஸபிய்யாவை உற்றுப்பார்த்தனர்.

இவற்றைக் கவனித்த நாயகமவர்கள் சொன்னார்கள். ஸபிய்யா கூறியவை எதார்த்தமான வார்த்தைகள்.

நூல் : ஸர்கானி

ஸபிய்யா அம்மையார் இரக்க சிந்தையும், தயாள குணமும் கொண்டவர்கள். அண்ணலரின் வாழ்க்கைத் துணைவியாகி முதன் முறை மதீனா வந்ததும் பெருமானாரின் பிரிய மகளார் பாத்திமா ரலியல்லாஹுஅன்ஹா அவர்களுக்கும், நபியவர்களின் ஏனைய துணைவியருக்கும் பல பொருட்களை அன்பளிப்புச் செய்தார்கள்.

அத்தோடு சுவைமிகு உணவுகளை நேர்த்தியாக சமைக்கவும் அன்னாருக்குத் தெரியும். அடிக்கடி தம்மரும் துணைவராம் அண்ணல் நபியவர்களுக்கு விருந்துகள் கொடுப்பதோடு, அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தில் அண்ணலர் தங்கி இருக்கின்ற தினங்களில் கூட சிலபோது அறுசுவை உணவுகளை அனுப்பி வைப்பதுண்டு.

பெருமான் நபியவர்களும் அன்னை ஸபிய்யா மீது அளவற்ற நேசம் கொண்டிருந்தனர். ஒரு நாள் பொழுதில் ஸபிய்யா அவர்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்துவதைக் கண்டு காரணம் கேட்க, ஆயிஷாவும், ஜெய்னபும் என்னை குறை கூறுகின்றனர். தாங்களே மற்ற மனைவியரை விட உயர்ந்தவர்கள் என பெருமை கூறுகின்றனர் எனச் சொன்னார்கள்.

நபியவர்கள் சொன்னார்கள், இதற்காகவா அழுகிறாய் “நபி ஹாரூன் எனது தந்தை, நபி மூஸா எனது பெரிய தந்தை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எனது கணவர் எனவே நானே உயர்ந்தவள் என்று அவர்களுக்குச் சொல்!“

இத்துணை சிறப்பு வாய்ந்த அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி 50ஆது ஆண்டில் ரமழான் மாதத்தில் மண்ணக வாழ்வை முடித்துக் கொண்டார்கள். (இன்னாலில்லாஹி………) ஜன்னத்துல் பகீஃஇல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். ஹிஜ்ரி 52இல் அன்னார் மறைந்தனர் என்ற கருத்தும் உண்டு.

நூல் : ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 259

அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா

ஹாரிது இப்து ஹஸன், ஹிந்து பின்த் அவ்ப் ஆகியோரின் புதல்வியரான அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பெற்றோர் இட்ட ‘பர்ரா‘. அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியான பின்னர் நபியவர்களால் மைமூனா – பரக்கத்திற்குரியவர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டார்கள்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட அடுத்த ஆண்டு உம்ரா செய்ய மக்கா வந்த போது அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் மைத்துனியாகிய இவரை மணமுடித்துக் கொள்ளுமாறு கூற அதற்கு அவர்கள் இணங்கினார்கள்.

ஹிஜ்ரி 07ஆம் ஆண்டு உம்ரத்துல் களாவை முடித்துக்கொண்டு திரும்புகிற வழியில் அன்னையவர்களை மணமுடித்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ‘ஸரப்‘என்னுமிடத்தில் இல்லற வாழ்வைத் துவங்கினார்கள். இதுவே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதித் திருமணமாகும்.

கணவன் மனைவிக்கு இடையே பிணக்கு ஏற்படின் அதைத் தீர்த்து வைப்பதில் இவர் பெரும் பங்கெடுத்துக் கொள்வார்கள். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் மனைவியருடன் மாதவிடாய் காரணமாக படுக்கையை பிரித்து வைத்ததையும்> வேறு காரியங்கள் செய்யாமலிருந்ததையும் அறிந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தங்களிடம் நடந்த முறைகளை விவரித்து அதை திருத்தினார்கள்.

எழுபத்து ஆறு நபிமொழிகளை அறிவிப்புச் செய்த அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் எந்த இடத்தில் அண்ணலரால் மணம் முடிக்கப்பட்டார்களோ அதே ஸரப் எனுமிடத்திலேயே இம்மை வாழ்வையும் முடித்துக்கொண்டனர்.

ஹிஜ்ரி 51இல் வபாத்தானார்கள் எனவும், ஹிஜ்ரி 61இல் வபாத்தானார்கள் எனவும் இரு வேறு கருத்துக்கள் காணப்பட்டாலும், இப்னு இஸ்ஹாக் என்பவர் ஹிஜ்ரி 63இல் ஸரப் எனுமிடத்தில் அன்னார் வபாத்தானார்கள் என்று தெரிவிக்கிறார்.

அன்னையவர்களது ஜனாஸா தூக்கப்பட்டபோது அன்னாரின் சகோதரியின் மகனாரான அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் உரத்த குரலில் “மனிதர்களே! இவர்கள் அண்ணலரின் அருமைத் துணைவி எனவே ஜனாஸாவை மெதுவாக எடுத்துச் செல்லுங்கள். இப்புனித உடலை அசைய விடாதீர்கள்“என்றனர். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களே ஜனாஸாத் தொழுகையையும் நடத்தி வைத்தார்கள்.

யஸீத் இப்னு அஸம்மு ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள். “ஸரப் எனுமூரில் எந்த இடத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் புரிந்தனரோ அதே இடத்தில்தான் அன்னாரது புனித உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.“

ஸர்கானி : பாகம் – 03, பக்கம் – 253, திர்மிதி : பாகம் – 01, பக்கம் – 104

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அளவற்ற அன்பும் நேசமும் பூண்டிருந்த அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தாமாகவே முன்வந்து அண்ணலாரை மணப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். “எனது இன்னுயிரை இரஸூல் நபியவர்களுக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். பெருமானாரிடமிருந்து மஹர்தொகை வாங்க வேண்டுமென்ற ஆசை கூட எனக்கு இல்லை“என அன்னையவர்கள் கூறியுள்ளனர்.

அருட் திருமறை அல்குர்ஆனில் அன்னையவர்களைக் குறித்து வசனமொன்று அருளப்பட்டுள்ளது.

அன்னை ஜெய்னப் பிந்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா

அண்ணல் நபிகளாரின் மாமியான உமையா பினத் அப்துல் முத்தலிபின் மகளாரான ஜெய்னப் நாயகியாரை, அடிமையாக இருந்து விடுதலை பெற்ற பின் அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் மகனாராக வரித்துக் கொண்ட ஜெய்து இப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களுக்கு முதலில் மணம் செய்து வைத்தார்கள்.

தம்பதிகளுக்கு மத்தியில் உறவுகள் சீராக இருக்கவில்லை. எனவே ஜெய்து ரலியல்லாஹு அன்ஹு , அம்மையாரை மணவிடுதலை தலாக் செய்ய, இத்தா முடிந்ததும்,

“ஜெய்து அவர்களை விட்டு தனது தேவையைப் பூர்த்தி செய்துக் கொண்ட(தலாக் சொன்ன)போது நாம் அவர்களை (ஜெய்னப்பை) உங்களுக்கு (நபியவர்களுக்கு) நிகாஹ் செய்து வைத்துள்ளோம்“ (அல்குர்ஆன் 33 :37) என்ற திருவசனம் அருளப்பட,

அல்லாஹ் தனக்கு ஜெய்னப்பை மணம் முடித்து வைத்துள்ளான் என்ற நற்செய்தியை ஜெய்னப்பிடம் கூறுபவர் யார்? எனக் கேட்க, பணிப்பெண் ஒருவர் விரைந்து சென்று ஜெய்னப் அம்மையாரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்.

மகிழ்வு மீக்குற்ற ஜெய்னப் நாயகியார் மங்களச் செய்தி சொன்ன அப்பெண்ணுக்கு தன்கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி அணிவித்து மகிழ்ந்தார்கள். பின்னர் கருணை நாயனுக்கு தன் நன்றிகளைச் சமர்ப்பிக்க சஜ்தா செய்தனர். தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பும் வைத்தனர்.

அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னை ஜெய்னப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் புரிந்து கொண்ட பின் எப்பொழுதும் செய்யாத அளவில் பிரமாண்டமான வலீமா விருந்து அளித்தனர். எல்லா தோழர்களுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் வயிறு புடைக்க ரொட்டியும், கறியும் உண்டனர்.

நூல் :புகாரி, மிஷ்காத் : 278

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அன்புத் துணைவியருள் இத்தனிச்சிறப்பினை அன்னை ஜெய்னப் அவர்களே பெற்றுள்ளனர். அத்தோடு இத்திருமணத்தை இறைவனே நடத்திவைத்தான்.

இவர்களின் வலீமா விருந்தில் நபித்தோழர்கள் கலந்து கொண்டு நீண்ட நேரம் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்ததால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கூற மனமில்லாது தாங்களே வெளியே சென்று தங்கள் மனைவிகளைச் சந்தித்து சலாம் உரைத்து வந்தார்கள்.

இப்பொழுதுதான் அநாவசியமாக நபியின் வீட்டில் தங்கி உரையாடிக் கொண்டிருக்க வேண்;டாம் என்ற திருவசனமும்>. பர்தா பற்றிய அறிவிப்பும் இறைவனிடமிருந்து வந்தது.ஏழை எளியோருக்கு அதிக தானதர்மங்களை செய்து வந்தனர். அன்னை ஜெய்னப் அவர்கள்! கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் அன்னையாருக்கு!

ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என் மறைவிற்குப் பின்னர் என்னை முதலில் சந்திப்பவர் கைநீளமானவர் என்றனர். இது கேட்ட துணைவியர்கள் தத்தம் கைகளை அளந்து பார்த்து ஸவ்தா ரலியல்லாஹு  அன்ஹா அவர்களின் கரமே நீளமாக இருந்ததால் அவர்களே முதலில் வபாத்தாவார்கள் என எண்ணினர்.

ஆனால் அன்னை ஜெய்னப் ரலியல்லாஹு  அன்ஹா அவர்களே முதலில் மௌத்தானார்கள். இப்போதுதான் “கை நீளமானவர்“என்றால் வெறும் நீளக் கை அல்ல! கருணையால், கொடையால் கை நீளமானவர் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

உயர் தனிச் சிறப்புக்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்த அன்னையவர்கள் ஹிஜ்ரி 20 அல்லது 21இல் மதீனா முனவ்வராவில் வைத்து வபாத்தானார்கள். கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் ஜனாஸாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென ஆணை பிறப்பிக்க, பெரும் ஜன சமுத்திரமே திரண்டு விட்டது.

கலீபா அவர்களே ஜனாஸாத் தொழுகை நடத்தி வைக்க ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

நூல் : மதாரிஜுன் நுபுவ்வத் பாகம் – 02, பக்கம் – 276

ஜெய்னப் நாயகியார் அண்ணலார் மீது அளப்பிரிய அன்பு பூண்டிருந்தனர். தம்மை பெருமானார் மணமுடிக்கப் போகிற செய்தி அறிவித்த பெண்ணுக்கு தம் மாலையை அன்பளிப்பாக வழங்கியதோடு இறைவனுக்கு நன்றி செலுத்த சஜ்தா செய்து இரு மாத கால நோன்பும் வைத்தனர் என்றால் அன்னாரின் இறைபக்திக்கு வேறென்ன சான்று வேண்டும்?

முன்னரும் சரி, அண்ணலாரை மணம் புரிந்த பின்னரும் சரி தம் கைகளில் உள்ளதை அப்படியே ஏழை எளியோருக்கு தானமாக வழங்கி விடுவர். இதனாலேயே “கைநீளமானவர்“என்ற சிறப்பினையும் பெற்றனர்.

பெருமான் நபிகளார் மீது பேரன்பு பூண்டிருந்த காரணத்தால் மறைவுக்குப் பின்னரும் கூட அன்னாரை முதலில் சந்திக்கின்ற பெரும் பேற்றைப் பெற்றனர்.

தேவையுள்ளோரைத் தேடிப்பிடித்து தேவையை நிறைவு செய்து கொடுக்கும் அருங்குணமும், அண்ணலார் மீது அம்மையார் கொண்ட அன்பும் ஒவ்வொரு முஸ்லிம் சகோதரிக்கும் நல்ல முன்னுதாரணங்களாகும். அல்லாஹ் அவ்வழி செல்ல அருள் புரிவானாக!

அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா

பனூ முஸ்தலக் குடும்பத்தில் புகழ் பெற்றிருந்த ஹாரித் இப்னு அபீளர்ரார் என்பவரது மகளார் அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.

இஸ்லாத்தைத் தழுவ முன்னர் அதே கோத்திரத்தைச் சார்ந்த மஸாபிஃ இப்னு ஸப்வான் என்பவர் அன்னையரை மணம் முடித்திருந்தார்.

ஜுவைரியா அம்மையாரின் தந்தையும், கணவனும் இஸ்லாத்தை முழு மூச்சுடன் எதிர்த்து வந்தனர். ஒருமுறை ஹாரித் முஸ்லிம்கள் மீது போர்தொடுக்கவிருக்கிறார் என்ற செய்தி அண்ணலாருக்கு தெரிவிக்கப்படுகிறது.

எனவே ஹிஜ்ரி 05ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் இஸ்லாமியப் படையினர் மதீனாவிலிருந்து புறப்பட்டு “முறைசிஃ“எனுமிடத்தில் தங்கினர். இஸ்லாமியப் படை வந்திருக்கிறது என்பதறிந்த ஹாரிதின் கூலிப்பட்டாளம் திசைக்கொன்றாக சிதறி ஓடியது. எனினும் முறைசிஃ நகரத்தார் முஸ்லிம்களோடு போரிட்டு தோற்றோடினர். இப்போரில் முஸ்லிம்கள் 600க்கு மேற்பட்ட எதிரிகளை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு மதீனாவிற்கு கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவர்தாம் அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும்!

இவர்களின் முந்தைய கணவர் முஸாஃபிஹ்> இவரும் இந்தப் போரில் கொல்லப்பட்டார். அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா, தாபித் இப்னு கைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னை அவர்களுக்குப் பகரமாக ஒரு தொகையை வழங்கி அன்னாரை விடுவித்து, அம்மையாரின் முழுச்சம்மதத்துடன் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.அப்போது அன்னையாருக்கு வயது 20.அத்தோடு அப்போரில் கைது செய்யப்பட்டோர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அன்னையவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயரான “பர்ரா“என்பதை மாற்றி ஜுவைரியா எனும் பெயரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சூட்டினார்கள்.

அன்னை ஜுவைரியா அவர்களைக் குறித்து அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் “ஜுவைரியா பேரழகியாகவும், இனிமையான குரலுமுடையோராகவும் இருந்தார்“என்று கூறியுள்ளார்கள்.

தமது 65வது வயதில் ஹிஜ்ரி 50ல் ரபீயுல் அவ்வல் மாதத்தில் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அப்போது மதீனாவின் ஆளுனராக இருந்த மரவான் ஜனாஸா தொழுகை நடத்தி வைக்க, ஜன்னத்துல் பகீஃல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (மதாரிஜுன் நுபுவ்வத்)

அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உயர் குலத்துப் பிறந்த மங்கை நல்லவராக இருந்து மிக்க எளிய வாழ்வை மேற்கொண்டிருந்தார்கள். ஒரு துறவிபோன்றே அவர்களது வாழ்வு அமைந்திருந்தது.

ஒருநாள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைக் காண அதிகாலைப் பொழுதில் வந்தபோது அன்னையவர்கள் துஆச் செய்துகொண்டிருப்பதைக் கண்டார்கள். திரும்பிச் சென்ற நபியவர்கள் உச்சிப் பொழுதில் மீண்டும் வந்தபோது அப்போதும் அன்னை அவர்களை காலையில் கண்ட நிலையிலேயே நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டு, மனமகிழ்ந்து அன்னையாருக்காக துஆச் செய்தனர்.

செல்வச் செழிப்பும், அந்தஸ்த்தும் மிகுந்த குடும்பத்தில் பிறந்த அன்னையவர்கள் விரும்பி இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் அழிந்துபோகும் இம்மை வாழ்வை விரும்பாது மறுஉலகின் அழியாப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து காட்டியதோடு, அருமைக் கணவர் அவனியின் தூதர் அண்ணல் பெருமானாரின் மனங்கவர்ந்த மனைவியாகவும் வாழ்ந்து சென்றனர்.

எனவே உம்முல் முஃமீனீன் நன் நம்பிக்கையாளர்களின் அன்னை என்ற சிறப்புத்தகுதியோடு இன்றும் அன்னாரது திருநாமம் உச்சரிக்கப்படுகிறது.

அன்னை ஜெய்னப் பின்த் குசைமா ரலியல்லாஹு அன்ஹா

அன்னையவர்கள் இளம் வயதிலேயே வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். ஏழைகளைத் தேடிச்சென்று உணவளிக்கும் உயர் குணத்தைக் கொண்டிருந்ததால் உம்முல் மஸாகீன் – ஏழைகளின் தாய் என்று அழைக்கப்படலானார்கள்.

முதலில் பிரபல்யமான நபி மணித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மையாரை மணந்திருந்தனர். ஹிஜ்ரி 3ஆம் ஆண்டு நடைபெற்ற உஹத் யுத்தத்தில் கலந்து கொண்ட அப்துல்லாஹ் வீர மரணம் எய்தப்பெற, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை மறுமணம் புரிந்தனர்.

எனினும் திருமணம் முடித்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே அன்னையவர்கள் அண்ணலாரோடு தம் வாழ்வினை பகிர்ந்து கொண்டார்கள்.

மதீனப் பெருநகரில் வைத்து ஹிஜ்ரி 04ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில் அன்னையவர்கள் வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) ஜன்னத்துல் பகீஃ இல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இந்நேரத்தில் அன்னையவர்களுக்கு வயது முப்பதுதான்.

நபியவர்கள் காலத்திலேயே இம்மை வாழ்வைத் துறந்த மணவாட்டிகளில் கதீஜா அம்மையாருக்குப் பிறகு அன்னை ஜெய்னப் அவர்கள் மட்டுமே! எனவே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் பொற்கரங்களால் இறுதிச் சடங்குகளை செய்கின்ற பாக்கியத்தினையும் அன்னை ஜெய்னப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பெற்றார்கள்.

அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா

ஹலரத் அபூசுப்யான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் அருமைப் புதல்வியும், முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்புச் சோதரியுமான அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தாயாரின் பெயர் ஸபிய்யா பின்த் ஆஸ். இவர் அமீருல் முஃமினீன் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாமியார் ஆவார்.

உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அவர்களை வாழ்க்கைத் துணைவராக வரித்துக்கொண்ட உம்மு ஹபீபா, ஏந்தல் நபி நாயகத்தின் ஏகத்துவ அழைப்பினை ஏற்று கணவரோடு இஸ்லாத்தைத் தழுவி அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றனர். அபிசீனியா சென்ற பின்னர், உபைதுல்லாஹ் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். புதிய இடத்தில் கிடைத்த புது நண்பர்களோடு சேர்ந்து மது உண்டு மயங்கியே அவர் மரணமுற்றார்.

ஆனாலும் அன்னை உம்மு ஹபிபா தமது ஈமானில் உறுதி குலையாது நின்றார். இடுக்கண்களை இன்முகத்தோடு ஏற்று சாதனை படைத்தார். இவர்களின் சோக வரலாறு சோதி நபி நாயகத்தின் காதுகளுக்கு எட்டியபோது அன்னார் நெஞ்சம் நெகிழ்ந்தார்கள்.

அருள் சுரக்கும் நெஞ்சம் கொண்ட அண்ணல் நபியவர்கள் அபிசீனியாவிற்கு அம்ரு இப்னு உமைய்யா ரலியல்லாஹு அன்ஹு என்ற தோழரிடம் அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு கடிதம் ஒன்று கொடுத்தனுப்பினார்கள்.  அவ்வேளையில் தமது பிரதிநிதியாக இருந்து உம்மு ஹபிபாவை தமக்கு மணம் செய்து வைக்க நஜ்ஜாஷிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.

ஓலை பெற்ற மன்னர் தனது அடிமை அப்ரஹா மூலம் பெருவிருப்பத்தை உம்மு ஹபிபாவிற்கு தெரியப்படுத்தினார். சேதியறிந்து ஆனந்தம் மீக்குற்ற அன்னையவர்கள் தம் காதணியைக் கழற்றி அப்ரஹாவுக்கு வழங்கி விட்டு, தனது உறவினர் காலிது இப்னு ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தமது பிரதிநிதியாக மன்னரிடம் அனுப்பி வைத்தார்.

கணிசமாக முஹாஜிர்களைக் திரட்டி, அவர்கள் அவையில் உம்மு ஹபிபா அவர்களை அண்ணல் நபியவர்களுக்கு மணம் புரிந்து வைத்தார் மன்னர் நஜ்ஜாஷி. மஹர்தொகை கூட மன்னரே வழங்கினார். பின்னர் மிக்க மரியாதையோடும், ஷர்ஜீல் பின்ஹஸனா ரலியல்லாஹு அன்ஹு  அவர்களின் துணையோடும் மதீனா வாழும் மன்னர் மஹ்மூதா தம் சமூகத்திற்கு அன்னாரை மன்னர் வழியனுப்பி வைத்தார்.

அன்னை உம்மு ஹபீபா அவர்கள் மார்க்கப்பற்று பத்தினித் தனம், ஈகை, வீரம் ஆகிய அனைத்து குணநலன்களும் பெற்றிருந்ததோடு ஈமானில் குன்றாத உறுதி கொண்ட கோமகளாகத் திகழ்ந்தார்கள்.

அன்னையவர்களின் தந்தை அபூசுப்யான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க முன்னர் ஒரு நாள் மதீனா வந்தார். தனது மகளின் இல்லத்திற்குச் சென்றார்கள். அங்கே காணப்பட்ட அண்ணலாரின் புனிதமிகு விரிப்பில் சென்று அமர்ந்தார். இதனைக் கண்ணுற்ற அன்னையவர்கள் அவ்விரிப்பிலிருந்து தந்தையென்றும் பாராது எழுப்பி விட்டு கூறினார்கள். “புனிதமற்ற ஒரு முஷ்ரிக் புனிதத்துவம் கொண்ட அண்ணலாரின் விரிப்பில் அமர்வதா? இதனை ஒருபோதும் யான் சகியேன்!“

உணர்ச்சிமிக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் அன்னையவர்களின் வாழ்வில் ஏராளமுண்டு. அதிகமான நபிமொழிகளை மனனம் செய்திருந்த அன்னார் அதிக வணக்க வழிபாடுகளிலும் பெருவிருப்பம் பூண்டிருந்தார். அண்ணலாருக்கு அரும்பணிகள் புரிவதில் ஆனந்தம் கண்ட அன்னை உம்மு ஹபீபா ரலியல்லாஹு  அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி 44இல் மதீனா முனவ்வராவில் தம் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்……..) ஜன்னத்துல் பகீகில் இதர துணைவிகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

ஸர்கானி : பாகம் – 03, பக்கம் – 242, மதாரிஜுன் நுபுவ்வத் :   பாகம் – 02, பக்கம் – 48

உதுமான் ரலியல்லாஹு ஆட்சி காலத்தில் கலககக்காரர்கள் கலீபாவின் இல்லத்தை முற்றுகையிட்ட பொது அவ்வில்லத்தினர்களுக்கு ஒரு தோல் பையில் இவர் தண்ணீர் கொண்டு சென்றார் என்றும், எனினும் கலகக்காரர்கள் இவரைத் தடுத்து நிறுத்தி அத்தோல் பையை கிழித்து விட்டனர்.

ஹிஜ்ரி 42 இல் 73 ஆவது வயதில் தம் சகோதரர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கிலாஃபத்தின் போது மதீனாலில் மறைந்து ஜன்னத்துல் பகீயில் அடக்கப்பெற்றார்கள்.

அன்னை உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா

இவர்களின் இயற்பெயர் ஹிந்து. புனைப்பெயர் உம்முஸல்மா. இப்பெயர் புனைப்பெயராயினும், இப்பெயரிலேயே அவர்கள் அறியப்பட்டார்கள், அழைக்கப்பட்டார்கள். இவர்களது அன்னையரது பெயர் ஹுதைபா அல்லது ஸுஹைல்.பிரபல குறைஷித் தலைவரான அபூஸல்த் ஸகீயின் மகளாவார்கள்.

அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர்அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி ரழியல்லாஹு அன்ஹு என்பவராவார். இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். இன்னும் இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆவார்.

உம்முஸல்மா இஸ்லாத்தில் இணைந்து அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றனர். அங்கு ஜைனப் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். இதனை அடுத்து உமர் என்ற மகவையும் பெற்றெடுத்தார்கள். இறுதியாக இன்னொரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்கள், அதன் பெயர் துர்ரா.

பின்னர் அபிசீனியாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பிவந்து கணவரும், மனைவியும், பச்சிளம் குழந்தையுமாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய எண்ணியஒட்டு மொத்த குடும்பமும் இப்பொழுது,தனித்தனியாக மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த பொழுது, அபூ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது மனைவியை விட்டு விட்டு தன்னந்தனியாக மதீனாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அவர்களது உறவுக்காரர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள், உம்மு ஸலமாவின் பிள்ளைகளை அபூ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தவர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள்.

உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னந்தனியாக மதீனா சென்று தனது கணவருடன் சேர்ந்து கொண்டார்கள்.அளவில்லா சந்தோஷமடைந்தார்கள். இப்பொழுது உடைந்து சிதறிப் போன அபூ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தார்கள்.குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் கண்காணிப்பில் சந்தோஷமடைந்தார்கள்.

கணவரை சென்றடைந்த அன்னையார் மதீனாவில் தங்கி இருந்தார்கள். சில குழந்தைகளும் பிறந்தன. இந்நிலையில் ஹிஜ்ரி 04இல் அப்துல்லாஹ் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்)

அன்புத்துணைவரின் பிரிவாற்றாமையால் சோர்ந்து போன உம்மு ஸல்மா, தன் சின்னக் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பரிதவித்தார்கள். உம்மு ஸல்மாபடும் அவஸ்தைகளை அறிந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் தமது வாழ்க்கைத் துணைவியாக வரித்துக்கொண்டார்கள். குழந்தைகளை தனது பராமரிப்புக்கு உட்படுத்தினார்கள்.

அன்னையவர்கள் புத்திக்கூர்மை, விவேகம், நல்லமல், பத்தினித்தனம், தெளிந்த ஞானம் ஆகியவற்றில் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள். ஹதீஸிலும், சட்டத்துறையிலும் ஆழ்ந்தஞானம் பெற்றிருந்தார்கள். தாபிஈன்களளுக்கு பெரிய ஆசானாக திகழ்ந்திருக்கிறார்கள். அகழ் யுத்தத்தின் போதும் கைபர் யுத்தத்தின போதும் இவர்கள் பிரசன்னமாயிருந்தார்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது தோழர்களின் மனநிலையை அறிந்து சில சற்புத்திகளும் கூறி நிலைமையை ஒழுங்கு பண்ணினார்கள். 388 நபி மொழிகளை அறிவிப்பும் செய்துள்ளனர்.

அன்னை உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இருந்த காலங்களில் பல முறை திருமறையின் வசனங்கள் அருள் செய்யப்பட்டிருக்கின்றன. சூரா அஹ்ஸாப்ன் இந்த வசனங்கள் அன்னை உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;. முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.’ (33:33)

கஅப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, ஹிலால் பின் உமைய்யா ரழியல்லாஹு அன்ஹு, மராரா பின் அர்ராபிஆ ரழியல்லாஹு அன்ஹு ஆகியோர்கள் எந்தவித நியாயமான காரணமுமின்றி தபூக் யுத்தத்திற்குச் செல்லாமல் மதினாவிலேயே தங்கி விட்டார்கள். எனவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவுப்படி, இந்த மூன்று நபர்களுடன் யாரும் எந்தவித உறவும், கொடுக்கல் வாங்கல், பேச்சு வார்த்தை எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மதீனத்து முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும், இறைவனிடம் மன்றாடி முறையிட்டு பாவ மன்னிப்புத் தேடியதன் பின்பு, அன்னை உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது,

وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّىٰ إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّوا أَن لَّا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوا ۚ إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

இந்த மூன்று பேர்களையும் மன்னித்து அல்-குர்ஆனின் 9:118 அல்லாஹ் வசனத்தை இறக்கியருளினான்.

அன்னையார் வாரத்திற்கு மூன்று நோன்புகள் நோற்று வந்தனர். தவறாது தஹஜ்ஜுத் தொழுது வந்தார்கள். அழகுடன் இனிய குரல் வாய்க்கப்பெற்றிருந்த இவரை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை ஓதுமாறு கூறிச் சில பொழுது கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அண்ணலார் இறுதியாக நோயுற்றபோது ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நானும் என் குடும்பத்தினர் அனைவரும் இறந்து விடுகிறோம். தாங்கள் உயிர் வாழ்ந்தாலே போதும்’ என்று இவர்கள் கூறினர். அவ்விதம் மீண்டும் கூற வேண்டாம் என்றும்,  கூச்சலிட்டு அழ வேண்டாம் என்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்து விட்டனர்.

அண்ணல் நபி அவர்களின் திருமுடி ஒன்றைப் பத்திரமாகப் பாதுகாத்து அதனை மக்களுக்குக் காட்டி வந்தனர்.

அன்னையர்களிலேயே இறுதியாக ஹிஜ்ரி 61இல் ;84 ஆவது வயதில் யஸீத் பின் முஆவியா அவர்களது ஆட்சியின் பொழுது மறைந்தனர். அன்னாருக்கு ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜனாஸா தொழ வைத்தனர். அன்னையாரது புனித அடக்கவிடம் ஜன்னத்துல் பகீஃகில் உள்ளது.

அன்னை ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹா

திரு கஃபா திரும்ப நிர்மாணிக்கப்பட்ட ஆண்டில் இவர்கள் பிறந்தார்கள். இவர்களின் தந்தை உமர் ரலியல்லாஹு அன்ஹு. இவர்களது தாயார் பிரபலமான ஸஹாபியத்தான ஜெய்னப் பின்த் மழ்நூன் அவர்களாவார்.

இவர் ஆரம்பத்தில் குனைஸ் இப்னு குதாபா ரழியல்லாஹு அன்ஹு என்பவருக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார்கள். குறைஷிகளின் கொடுமை தாங்காது அவர்களுடன் அபினீஷியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.

பத்ரு போரில் படுகாயமடைந்த குனைஸ் அவர்கள் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் காலமானார்கள். அதன்பின்ஹிஜ்ரி 03 இல் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அன்புத் துணைவியராக ஏற்றுக் கொண்டனர்.

அன்னையவர்களும் ஏனைய துணைவியரைப் போன்றே அதி உன்னதமான – உயர்நோக்கு கொண்ட தயாள சிந்தை படைத்த பெண்மணியாகத் திகழ்ந்தார்கள்.

அண்ணலாரின் மனைவியருள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இவர்தாம். புத்திக் கூர்மை, முகக்குறியறிதல், சத்தியத்தை அஞ்சாது உரைத்தல், சுடச்சுட பதில் கொடுத்தல் போன்றவற்றில் தம் தந்தையாரை ஒத்திருந்தார்கள் அன்னையவர்கள்!

அதிகமாக நோன்பு வைத்தல் திருமறை ஓதுதலுடன் இதர வணக்க வழிபாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அத்தோடு மார்க்கச் சட்டம், ஹதீஸ் கலைகளில் மிகுந்த ஞானம் பெற்றிருந்தார்கள்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இவர்கள் அடிக்கடி இடைமறித்துப் பேசி வந்ததனால் அவர்கள் இவருடன் சிலபொழுது பேசாதிருந்ததும் உண்டு;.

ஒரு தடவை அண்ணல் நபலி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்களை ஏதோ ஒரு காரணத்திற்காக மணவிடுதலை எச்சரிக்கை கொடுத்தபோது, ‘அவர் பகலெல்லாம் நோன்பு நோற்கிறார். இரவெல்லாம் வணங்குகிறார். அவர் சுவனத்திலும் தங்கள் மனைவியாக இருப்பார்’ என்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதன் பேரில் அவர்கள் இவர் மீதிருந்த வருத்தம் நீங்கப் பெற்றனர்.

இவர்கள் மூலம் 60 நபிமொழிகள் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அன்னையவர்கள் ஹிஜ்ரி 45இல் ஷஃபான் மாதம் தம்முடைய 65வது வயதில் நோன்பு நோற்ற நிலையிலேயே தம் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). ஹாகிம் மர்வான் இப்னு ஹகம் அவர்கள் ஜனாஸாத் தொழ வைத்தார்கள். ஜன்னத்துல் பகீஃகில் அன்னாரது புனித உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நூல் : ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 236, 238

அன்னை ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா

அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவிற்குப் பின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஸவ்தா நாயகியை மணம் முடித்தார்கள்.இவர்கள் ஆமிர் இப்னு லுவை என்னும் வர்க்கத்தைச் சார்ந்த ஜம்ஆ என்பாரின் புதல்வியாவார்கள். அவர்களின் தாயார் பெயர் ஷுமூஸ் என்பதாகும். முதலில் அவரின் சிறிய தந்தையின் மகனாகிய ஸக்ரான் பின் அம்ரு இவ்வம்மையாரை திருமணம் முடித்திருந்தார்கள். அவருக்கு அப்துர் ரஹ்மான் என்ற ஒரு மகனும் பிறந்தார்கள்.

இஸ்லாத்தி்ன் ஆரம்ப கட்டத்திலேயே புனித இஸ்லாத்தைக் கணவரோடு தழுவி, மக்கத்துக் காபிர்களின் தொல்லைகளைத் தாங்காது அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றனர்.திரும்ப மக்கா வந்து சில நாட்களில் அவரது கணவரும் வபாத்தானார்கள். இச்சமயத்தில்அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அன்னையர் திலகம் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை இழந்து கவலை கொண்டிருந்தார்கள்.

அண்ணலாரின் மனப்பாரம் கண்டு வருந்திய கூபாவின் ஹகீம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அண்மி, “யா ரஸுலல்லாஹ் தாங்கள் ஸவ்தாவை மணம் முடித்துக் கொள்ளுங்களேன்! அதனால் தங்கள் மனப்பாரம் குறைந்து குடும்ப பொறுப்புகள் இலேசாக அமையும்! ஸவ்தா, அதிசிறந்த அம்மணி; மார்க்கப்பற்று மிக்க மாதரசி; உயர் குலத்துப் பத்தினி; தங்களுக்குப் பணிவிடை புரிய தகுதிபெற்ற பெண்ணரசி“என்று வேண்டினர்.

கூபாவின் வேண்டுகோளை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எற்றதும், ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தையாரைக் கண்டு பேசி முடித்து திருமணமும் நிறைவேறிற்று.400 திர்ஹம் மஹர் நிர்ணயிக்கப்பட்டு நுவுவ்வத்தின் 10 ஆம் ஆண்டு ரமலான் மாதம் இது நடைபெற்றது.

அன்றிலிருந்து, அண்ணலாரின் வாழ்க்கை முழுவதும் ஒன்றாயிருந்து உற்ற துணைவியாக பெருமானாருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தொண்டு செய்து நபியவர்களைத் திருப்திப்படுத்துவதில் அதிக கவனமும், விருப்பமும் கொண்டு செயல்பட்டனர் அன்னையவர்கள்.

இவர்கள் சாதாரண எளிய குழந்தைபோன்ற குணம் படைத்தவர்கள். அழகுமிக்கவராகவும், பிரராட்டியர்களில் எல்லாம் மிக்க உயரமாகவும் அதற்கேற்ற பருமனாகவும் இருந்தார்கள். தர்மசிந்தனையிலும், தாராள குணத்திலும் மேம்பட்டவர்கள். தாயிப் நகரைச் சார்ந்த மக்களுக்கு பல சாமான்களை செய்து அனுப்பி அதிலிருந்து கிடைக்கும் வருமானங்களைதத் தாராளமாக நல்ல காரியங்களில் செலவு செய்து கொண்டிருந்தார்கள்.

நபிபிரான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது அதிக அன்பு இருந்ததைக்கண்ட ஸவ்தா அம்மையார் தனது முறை நாளை அன்னை ஆயிஷாவுக்கு விட்டுக் கொடுத்தார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ஒருமுறை சொன்னார்கள் “எப்பெண்ணைப் பார்த்தாலும் அவளைப்போன்று நானுமிருக்க வேண்டும் என்ற பேராசை ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பேரழகையும், நடத்தையையும், நற்குணத்தையும் பார்த்த பின்னர் யானும் ஸவ்தாவைப் போன்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்!“

அடுத்தவருக்கு உதவுவதிலும், தான தர்மங்கள் வழங்குவதிலும் அன்னை ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

ஒருமுறை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது ஆட்சியின் போது, ஒரு ஈத்தம்பழக் கூடை நிறைய திர்ஹம்களை அன்னையவர்களுக்கு அனுப்பி வைக்க, “ஓ! ஈத்தம் பழக் கூடையில் திர்ஹம்கள் எங்காவது கொடுப்பதுண்டோ“எனக்கேட்டுக் கொண்டே, மதீனா முனவ்வராவில் வாழும் ஏழைகளுக்கு அனைத்தையும் தர்மம் செய்தனர்.

எனக்குப் பின் நீங்களெல்லாம் வீட்டிலேயே இருங்கள்’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள தம் மனைவியரை நோக்கி கூறிச் சென்றதை அணுவத்தனையும் பிசகாது பேணி நடந்ததன் காரணமாக>இவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பின் வெளியே செல்லவில்லை. ஹஜ்ஜு கூ;ட செய்ய செல்லவில்லை. மறைவிற்குப் பின் உடல்தான் வெளியே சென்றது.

இமாம் புகாரி, தஹபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் ஆகியோரது கூற்றுப்படி ஹிஜ்ரி 23இல் அன்னையவர்கள் வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). ஆனால், வாகிதி, ஸாஹிபுல் இக்மால் ஆகியோர் கணிப்புப்படி அன்னையாரின் வபாத்து ஹிஜ்ரி 54, அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹிஜ்ரி 55, ஷவ்வால் மாதம் அன்னையவர்கள் வபாத்தானதாகக் குறிப்பிடுகிறார்கள். அவர்களது புனித கப்ர் ஜன்னத்துல் பகீஃ இல் உள்ளது.

ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 599

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருமைத்தோழர் ஸித்தீகுல் அக்பர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைப் புதல்வியாகும் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். இவர்களது தாயார் உம்மு ருமான் (ரழி), தந்தையோ மிகப் பிரபலமான நபித்தோழரும், முதல் கலீபாவுமான அபுபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களாவார்கள்.

உம்மு ருமான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது முதல் கணவரது பெயர் அப்துல்லா அஸ்தி, இவருக்குப் பிறந்த மகனின் பெயர் அப்துர் ரஹ்மான். உம்மு ருமானின் முதல் கணவர் இறந்ததன் பின்னர் அபுபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவரை மணந்து கொண்டார்கள். இவருக்கும் அபுபக்கர் (ரழி) அவர்களுக்கும் பிறந்த செல்வம் தான் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) ஆவார்கள். கி.பி. 614 ஆம் ஆண்டு ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் பிறந்தார்கள்.

திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் சுவனச் சோலைகளில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியாக இருப்பதற்கும் அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்.

இன்னும் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டுத் துணியில் வைத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களால் காட்டப்பட்ட நற்பெயருக்கும் சொந்தக்காரவார்கள். இன்னும் இவரை நீங்கள் மணக்கவிருக்கின்றீர்கள், இன்னும் இவரே மறுமைநாளிலும் உங்களுக்கு மனைவியாக இருக்கப் போகின்றவர் என்றும் அப்பொழுது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நன்மாரயம் கூறினார்கள்.

நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னையவர்களை ஹிஜ்ரத்துக்கு முன்னர் மக்கா முகர்ரமாவில் வைத்து 500 திர்ஹம் மஹர் கொடுத்து ஷவ்வால் மாதம்மணம் புரிந்தனர். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாக அவர்கள் வாழ்க்கைப் பட்ட பொழுது, அவர்களுக்கு ஒன்பது வயது தான் நிரம்பி இருந்தது.

ஆயினும், நபிகள் கோமானுடன் இல்லற வாழ்க்கையில் ஹிஜ்ரி 02ஆம் ஆண்டு ஷவ்வால் திங்களில்தான் காலடி எடுத்து வைத்தார்கள். அன்னையவர்கள் பெருமான் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரன்பிற்கு உரித்தான துணைவியாக அமைந்திருந்தனர்.

“ஆயிஷாவின் மடியைத் தவிர வேறு எந்தத் துணைவியின் மடியிலும் எனக்கு ‘வஹீ‘இறங்கவில்லை“. இது அன்னை ஆயிஷா குறித்து அருமைக் கணவராம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழங்கிய நற்சான்று!

நூல் : புகாரி, பாகம் – 01, பக்கம் – 532

பிக்ஹ் சட்டக்கலை, ஹதீஸ்கலைகளில் அன்னையவர்கள் தன்னிகரற்று விளங்கினார்கள். பெரும்பெரும் நபிமணித்தோழர்கள் எல்லாம் அரிய விஷயங்கள் பலவற்றை அன்னையவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறறனர். வணக்க வழிபாடுகளில் அன்னையவர்கள் மிகுந்த பேணுதலும், அக்கறையும் கொண்டிருந்தனர். தஹஜ்ஜுதுத் தொழுகையினை மிகுந்த பேணுதலுடன் நிறைவேற்றி வந்ததோடு, அதிகமாக நபில் தொழுகைகளும் சுன்னத்தான நோன்புகளும் நோற்று வந்தனர்.

சுமார் 2210 ஹதீதுகளை அறிவித்திருக்கிறார்கள். அவை அனைததும் சட்டம் சார்ந்தவை. இவர்களுக்கு அரபி மொழியில் சிறந்தபுலமை இருந்தது. இவர்கள் சிறந்த கவிஞராகவும் இருந்தனர். இவர்கள் மருத்துவத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஏழைகளுக்கு இலவசமாக மருந்து வழங்கி வந்தனர்.

ஈகை, நற்செயல் போன்றவற்றில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருமை துணைவியருள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்குத் தனித்தோர் இடமுண்டு. அவர்களது வீட்டிற்குள் நுழைந்த எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை.

உம்மு துர்ரா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அன்னையாரின் அறத் தன்மை குறித்து அறிவிக்கின்றார்கள் :

ஒரு சமயம், தன்னிடம் இருந்த 70 ஆயிரம் திர்ஹம்களை ஒரே நேரத்தில் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள் அன்னையவர்கள். அப்பொழுது அவர்களது கைத்துண்டு தான் அவர்களிடத்தில் மிச்சமிருந்தது. இன்னும் ஒரு மாலைப் பொழுதில் அவர்களுக்கு ஒரு லட்சம் தினார்களை முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சிரியாவிலிருந்து அனுப்பி வைத்தார்கள். அதனை அப்பொழுதே தானமாக மக்களுக்கு வழங்கி விட்டார்கள்.

அப்பொழுது, அவர்களுக்கு பணிப்பெண்ணாக இருந்த பெண்ணொருத்தி, அன்னையவர்களே..! நீங்கள் இன்றைக்கு நோன்பு வைத்துள்ளீர்கள், உங்களுக்காக எதையாவது ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய பொழுது, நீங்கள் எனக்கு ஏன் இதனை முன்பே தெரியப்படுத்தவில்லை என்று தான் கேட்டார்கள். இன்னும் ஒரு முறை அப்துல்லா பின் ஜுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு லட்சம் திர்ஹம்களை அனுப்பி வைத்தார்கள். அது வந்த வேகத்தில் தானமாக வழங்கப்பட்டு விட்டது அன்னையவர்களால்..!

ஒரு நாள் அன்னையவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். அப்பொழுது ஒரு ஏழைப் பெண் தானமாக எதனையாவது பெற்றுக் கொள்ளும் நோக்கில் அன்னையவர்களின் வீட்டுக்கு வந்திருந்தாள். அப்பொழுது அன்னையவர்கள் தனது பணிப் பெண்ணை நோக்கி, நம்மிடம் இருக்கின்ற அந்த துண்டு ரொட்டியை எடுத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்குமாறு கூறினார்கள். அந்தப் பணிப் பெண்ணோ, அன்னையே..! நீங்கள் நோன்பு திறப்பதற்கு இந்த ரொட்டித் துண்டை விட்டால் நம்மிடம் எதுவும் கிடையாது என்று கூறினார்கள். அதற்கு அன்னையவர்கள், அவளோ பசியென்று நம் வீடு தேடி வந்து நிற்கின்றாள். முதலில் அவளது பசியைப் போக்குவோம். மாலையில் நம் பசியைப் போக்க இறைவன் வேறு எதாவதொரு ஏற்பாட்டைச் செய்வான் என்று கூறினார்கள்.

அன்றைய மாலைப் பொழுதில், நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு வீட்டிலிருந்து அன்னைக்காக சமைத்த இறைச்சித் துண்டு வந்திருந்தது. அப்பொழுது, பார்த்தாயா பெண்ணே..! நாம் காலையில் தானம் கொடுத்ததை விடச் சிறந்த உணவை அல்லாஹ் நமக்காக ஏற்பாடு செய்து தந்திக்கின்றான் என்று கூறினார்கள்.

நபிபெருமானாரின் எல்லா துணைவியரிலும் மிகக்குறைந்த வயதினை அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பெற்றிருந்தாலும் ஞானம், இறையச்சம், வழிபாடு, ஈகை, வீரம், உலகப்பற்றற்ற தன்மை, ஆத்மீகப் பயிற்சி ஆகிய எல்லாத் துறைகளிலும் மற்றெல்லோரை விடவும் முன்னணியில் இருந்தனர்.

கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில் அன்னையவர்களின் மார்க்க தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) ஏற்றுக் கொள்ளப்பட்டன. சொத்துப் பங்கீடு விசயத்தில் அன்னையவர்கள் மிகச் சிறந்த கல்வி ஞானத்தைப் பெற்றிருந்த காரணத்தினால், மக்கள் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அன்னையை அணுகக் கூடியவர்களாக இருந்தார்கள். சொத்துப் பங்கீடு விசயத்தில் மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு அன்னையவர்கள் மிக எளிதாக, அதனை தீர்த்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வு இஸ்லாமியத் தாய்க்குலத்திற்கு அழகிய முன்மாதிரியான வாழ்வாகும். நற்கருமங்களை விரைந்து செய்வதிலும், அறிவு ஞான வேட்கையிலும்,

தமது இனிய கணவரது இதயத்தை இன்புறச் செய்வதிலும் அன்னையவர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை நம்மினத்துத் தாய்க்குலம் கைக்கொள்ளுமாயின் இம்மையிலும், மறுமையிலும் அவர்களது வாழ்வு சிறப்புற்றோங்கும்.

அன்னையவர்கள் ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு, சொர்க்கச் சோலைகளை நாடிச் சென்று விட்டார்கள். தனது 66 ம் வயதில்ரமளான் மாதம் 17 ஆம் நாள் மரணமடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸாத் தொழுகையினை நபிமணித் தோழராம் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நிறைவேற்றி வைத்தனர்.

இதர உம்முஹாத்துல் முஃமின்களான – அண்ணலாரின் அருந்துணைவிகளுடன், அன்னையாரும் இரவு நேரத்தில் ஜன்னத் பகீஃ இல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

அப்துல்லா பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகிய இருவரும் அன்னையின் உடலை மண்ணறைக்குள் வைத்தனர்.

ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 234