இஸ்லாத்தில் இசை

இஸ்லாத்தில் இசை

By Sufi Manzil 0 Comment July 26, 2018

Print Friendly, PDF & Email

இஸ்லாமிய மார்க்கத்தில் இசையானது எந்த வகையில் ஆகுமானது? அதன் விபரம், விளக்கம் என்ன? என்ன? என்பதைப் பற்றி நமது இமாம் ஙொஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது ‘கீமியாயெ ஸஆதத்து’ என்னும் நூலில் விபரித்துள்ளார்கள். அந்த நூல் ருகுனு முஆமலாத்தில் 2வது வால்யூமில் இதுபற்றிய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளதை இலகுத்தமிழில் சுருக்கமாக இங்கு எடுத்து தரப்பட்டுள்ளது. (இந்நூலானது பார்ஸி பாஷையிலிருந்து நெல்லிக்குப்பம் மௌலவி அப்துர் ரஹ்மான் ஸாஹிபு அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை திருவவல்லிக்கேணி, ஹாஜி எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அன்டு சன்ஸ் அவர்களால் பதிப்பக்கப்பட்டது.)

மனிதனுடன் இசை

இரும்பிலும், சக்கிமுக்கி கல்(நெருப்பு உருவாக்கும் கல்)லிலும் எப்படி நெருப்பு மறைந்திருக்கிறதோ அப்படியே மனிதனுடைய கல்பிலும் அல்லாஹுதஆலாவினது இரு இரகசியம் மறைந்திருக்கிறது.
இரும்பைச் சக்கிமுக்கி கல்லில் தட்டுவது கொண்டு எப்படி அதிலிருந்து நெருப்பு பறந்து விழுகிறதோ அப்படியே சரியான மெட்டையுடைய நல்ல இராகமானது இருதயத்தைத் தாக்கி அதிலிருந்து அவனுக்குத் தெரியாதபடி (ஆனந்தப்பரவசமென்னும்) பொருள் உண்டாகின்றது.
ஆலமுல் அர்வாஹ் என்னும் மேலுலகத்திற்கும், மனிதனுடைய கல்புக்கும் ஓர் சம்பந்தமிருப்பதினால் அந்த சம்பந்தம் காரணமாக இருதயம் தாக்குண்டு அதில் பரவசமுண்டாகிறது. எந்த கல்பு அல்லாஹ்வுடைய ஞாபகத்துக்கு தடையாய் இருக்கிற வேறு ஆசையை விட்டு ஒழிந்ததாய் இருக்குமோ அந்த கல்பில் இந்த பரவசமுண்டாகும்.
ஆகவே எவனுடைய கல்பில் அல்லாஹுத்தஆலாவுடைய ஆசையென்னும் நெருப்பு கனிந்து கொண்டிருக்கிறதோ அந்த நெருப்பு சுவாலை விட்டு எரியும்பொருட்டு இராகம் கேட்பது அவனுக்கு முக்கியமாகும்.

இன்னும் எவனுடைய கல்பில் கெட்ட ஆசை இருக்கிறதோ அவன் இராகம் கேட்பது அவனைக் கொல்லும் நஞ்சாகவும் ஹராமாகவும் இருக்கிறது.

இராகம் கேட்பது ஹராமன்று சொன்னவர்கள் லாஹிருடைய உலமாக்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹுத்தஆலாவுடைய ஆசை எதார்த்தமாய் மனிதனுடைய கல்பில் அமைவது அவர்களுக்குத் தெரியவில்லை. மனிதன் தன்னுடைய இனத்தையே நேசிக்கக் கூடியவன் என்றும், தன் இனமல்லாததும், தனக்கு எவ்விதத்திலும் ஒப்பாதாகதுமான ஒரு பொருளை அவன் எப்படி நேசிக்கக் கூடுமென்கிறார்கள். ஆகவே கல்பில் சிருஷ்டிகளாகிய படைப்புகளின் ஆசையே ஒழிய சிருஷ்டிகனான அல்லாஹுவுடைய ஆசையுண்டாகுவது அவர்களுக்கு தெரியவில்லை.

அப்படி அவர்களுக்கு அது தெரியவந்தால் அது ஷரகில் ஆகாத ஓர் சாயலை சிந்திப்பதன் பேரில் ஏற்பட்டதாயிருக்கும். இதன் காரணத்தினாலேயே, இராகம் கேட்பது விளையாட்டாகாவது அல்லது ஒரு படைப்பின் மீதுள்ள ஆசையைப் பற்றி ஏற்படுகிறது என்றும் அதனாலேயே இராகம் கேட்பது தீனில் கூடாதென்கிறார்கள்.
இராகம் கேட்பதின் ஹுக்மை இதயத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இராகம் கேட்பது இதயத்தில் இல்லாத இதர வஸ்துவைக் கொண்டு வராது. மேலும் எது இதயத்தில் இருக்கிறதோ அதையே எழுப்பி விடும்.

ஆகவே ஒருவனுக்கு ஷரகில் உகப்பாக்கப்பட்ட ஒரு பொருள் மனதில் உண்டாகியிருந்து அதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நாட்டத்தால் இராகத்தைக் கொண்டு அதிகப்படுத்துவானாகில் அவனுக்கு தவாபு கிடைக்கும்.

ஷரகில் தடுக்கப்பட்ட ஒரு பொருள் அவனின் மனதில் உண்டாகியிருந்து அதனால் இராகம் கேட்பானாகில் அவனுக்கு அதாபுண்டாகும்.

ஒருவனுடைய மனதில் இவ்விரண்டும் இல்லாமல் விளையாட்டாக இயற்கையின்படி இன்பத்தை அடையும் பொருட்டு இராகம் கேட்பானாகில் அவனுக்கு அது முபாஹாயிருக்கும்.

இராகம் கேட்பதின் வகைகள்

இராகம் கேட்பது மூன்று வகையின் பேரினாலிருக்கும்.
1. விளையாட்டின் வழியாக மறதியினால் கேட்பதாகும். துன்யா முழுவதும் விளையாட்டாயிருக்கிறது. இது அதனுடன் சேர்ந்ததாகும். இராகம் நல்லாயிருப்பதால் அது ஹராம் என்பது சொல்வது கூடாது. ஏனென்றால் நன்றாகயிருப்பதெல்லாம் ஹறாமல்ல. அவைகளில் சிலவற்றை ஹராமென்றதெல்லாம் அவை நன்றாயிருப்பதினாலல்ல. மேலும் அதில் ஏதோ நஷ்டமும், கெடுதியும் இருப்பது பற்றியே ஹராமாயிருக்கிறது.

பட்சிகள் பாடுவதும், பசுமையான புற்பூண்டுகளும், ஓடும் தண்ணீரும், மலர்ந்த பூக்களும் நன்றாகயிருப்பதினால் அதைக் கேட்பதும், பார்ப்பதும் ஹராமல்ல.

புலன்கள் ஒவ்வொன்றுக்கும் இவ்வாறு இன்பமானதிருக்கிறது. இவ்வாறிருக்கையில் இராகம் மட்டும் எப்படி ஹறாமாகும்?
விகடமும், விளையாட்டும் அதைப் பார்ப்பதும் ஹறாமல்ல என்பதின் பேரில் பின்வரும் ஹதீது அத்தாட்சியாக இருக்கிறது.:

அன்னை ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஈதுடைய நாளில் பள்ளிவாசலில் ஹப்ஸிகள் ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோக்கி, ‘நீ அதைப் பார்க்க விரும்புகிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்றேன். அப்போது அவர்கள் எழுந்து வந்து வாசற்படியினிடம் தங்கள் கைகளை நீட்டிக் கொண்டு நின்றார்கள். நான் அதன்மேல் என் மேவாயை வைத்துக் கொண்டு வெகுநேரம் வரையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நாயகமவர்கள் பலமுறை என்னை நோக்கி, ‘இவ்வளவு பார்த்தது போதாதா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன்.

இதில் ஹப்ஸியிடம் விளையாட்டும் வேடிக்கையும் அதைப் பார்ப்பதும் எப்போதும் ஹராமல்ல என்பதும், இந்நிகழ்வு பள்ளிவாயிலில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது ஓர் ஆதாரம்: அன்னை ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் ‘ஈதுடைய நாளில் இரண்டு அடிமைப் பெண்கள் என்னிடம் தப்பு கொட்டி பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து தங்கள் படுக்கை விரிப்பின் மேல் போய் முகத்தை மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டு படுத்துவிட்டார்கள். பின்பு அபூபக்கர் ஸித்தீகு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அந்த அடிமைப் பெண்களை அதட்டி ‘ரஸூலுல்லாஹ்வுடைய வீட்டில் இதென்ன ஷைத்தானுடைய சத்தம்?’ என்று சொன்னார்கள். அப்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா அபாபக்கர்! இன்று ஈதுடைய நாளாகயிருக்கிறது. நீர் அவர்களை விட்டு விடும்’ என்று சொன்னார்கள். தப்பு கொட்டுவதும், பாட்டுபாடுவதும் முபாஹு என்று இந்த ஹதீதினால் தெரிய வந்துள்ளது.

2. மனதில் யாதொரு கெட்ட ஆசை- அதாவது ஒருவனுக்கு பெண்பிள்ளை அல்லது ஒரு பையனுடைய ஆசையுண்டாயிருந்து அவர்களின் முன் வைத்துக் கொண்டு இராகம் கேட்கிறான். அல்லது அவர்கள் எதிரில் இல்லாத சமயத்தில் அவர்களிடம் சேர்வதை ஆசை வைத்து அந்த ஆசை அதிகரிப்பதற்காக இராகம் கேட்கிறான். அல்லது பெண்ணின் உடல் வர்ணனைகள் பொதிந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே தன் மனதால் தான் ஆசைக் கொண்டவளை நினைக்கிறான். இவ்வனைத்தும் ஹராமாயிருக்கிறது.
இந்த வகையில் தமது சொந்த மனைவி மீதும், அடிமைப் பெண் மீதுமிருந்து அந்த ஆசை அதிகரிப்பதற்காக இராகம் கேட்பானாகில் இது முபாஹாயிருக்கிறது.

3. மனதில் ஒரு நல்ல ஆசையிருந்து இராகமானது அந்த ஆசையைப் பலப்படுத்துவதாயிருப்பதாகும். இது நான்கு வகைப்படும்.
அ. ஹாஜிகளையும், கஃபாவையும், வனாந்திரத்தையும் குறித்து வர்ணித்துப் பாடுகிற இராகமாகும். இது பைத்துல்லாஹ்விற்கு செல்வதற்கு ஆசையை தூண்டிவிடும். அவன் இதைக் கேட்பதினால் தவாபைப் பெறுவான்.

போர் வீரர்களுடைய வர்ணிப்புள்ள பாடல்களைப் பாடுவதும், அவர்கள் அதைக் கேட்பதும் இதற்கு அடுத்ததாகும். ஏனென்றால் இது ஜனங்களை அல்லாஹ்வுடைய பகைவர்களோடு போர் புரியவும், அவனுடைய நேசத்தில் உயிரைக் கொடுக்கவும் ஆசை கொள்ளச் செய்கிறது. ஆதலால் இதற்கும் தவாபு உண்டு. ஆனால் இவையனைத்தும் காபிர்களோடு யுத்தம் செய்வதில்தான்.

ஆ. அழுகையை வருத்துவதும், மனதில் துக்கத்தை அதிகப்படுத்துவதுமான புலம்பலைப் பாடுவதும், அதைக் கேட்பதுமாகும். அந்த அழுகையும், துக்கமும் இஸ்லாத்தில் தன்னாலுண்டான குற்றத்தின் பேரிலும், பாவத்தின் பேரிலும், அல்லாஹ்தஆலாவுடைய பொருத்தங்களில் யாதொன்றும் தப்பிப் போவதாயிருந்தால் இதில் தவாபிருக்கிறது.

இ. மனதில் சந்தோசமிருந்து அந்த சந்தோசத்தை அதிகப்படுத்தும் பொருட்டு இராகம் கேட்பதாகும்.

நிகாஹு, வலிமா, அகீகா குழந்தை பிறந்த நேரம், கத்னாவுடைய நேரம், ஸபரிலிருந்து திரும்பி வந்த நேரம் இன்னும் இதுபோல் எந்த விசயத்தில் சந்தோஷப்படுவது ஆகுமோ அந்த விசயத்தைப் பற்றின சந்தோசமிருந்தால் இதுவும் முபாஹாகும்.

ஈ. இதுதான் எல்லாவற்றையும் பொதிந்தெடுத்த சாரமாயிருக்கிறது. ஒருவனுக்கு அல்லாஹ்வுடைய ஆசை மேலிட்டு அது இஷ்குடைய எல்லையை அடைந்ததாயிருந்தால் அவன் இராகம் கேட்பது முக்கியமாகும். எதனால் அல்லாஹ்வுடைய ஆசை அதிகரிக்குமோ அதன் தவாபு அதிகமாகவேயிருக்கும்.

சூபியாக்கள் ஆரம்பத்தில் இராகம் கேட்டு வந்தது இதற்காகவேயாகும். இராகம் கேட்டுக் கொண்டிருக்கும்போது இவர்களில் சிலருக்கு முகாஷபத்து என்னும் வெளிப்பாடுகள் வெளியாகும். இன்னும் மற்றவைகளால் உண்டாகாத மனத் தெளிவும், பரவசமும் அப்போது இவர்களுக்கு உண்டாகும்.

இராகம் கேட்பதினால் மறைவான ஆலத்தில் நின்றும் இவர்களுக்கு உண்டாகின்ற அந்த நுண்ணிய அஹ்வால்களை வஜ்து என்று இவர்கள் சொல்கிறார்கள். வெள்ளியை நெருப்பில் காய்ச்ச அது எப்படி சுத்தமாகின்றதோ அப்படியே இராகம் கேட்பதினால் இவர்களுடைய மனமானது சுத்தப்பட்டு தெளிவை அடையவும் கூடும். இன்னும் இந்த இராகமானது இஷ்கு என்னும் நெருப்பை மனதில் தாக்கி அதிலிருக்கிற எல்லா அழுக்குகளையும் போக்கிவிடும்.

இன்னும் இராகமானது ஆலமுல் அர்வாஹுடன் மனிதனுடைய ரூஹுக்கு இருக்கிற சம்பந்தத்தை எழுப்பி விடும்.

ஒரு முரீதுடைய மனதில் இராகத்தின் தேட்டமிருப்பதுடன் அவன் முதல் முதல் இராகம் கேட்கத் தொடங்குவது அவனுக்கு ஆகாது.

ஷைகு அபுல் காசிம் ஜுர்ஜானி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய முரீதுகளில் ஒருவராகிய அலி ஹல்லாஜ் என்பவர் இராகம் கேட்பதற்கு ஷெய்குவிடத்தில் அனுமதி கேட்டார், அதற்கு அவர்கள் ‘ நீ மூன்று நாளைக்கு ஒன்றையும் உண்ணாமல் பட்டினியாய் இரு. அதன்பிறகு நல்ல உணவை சமைக்கும்போது அந்த உணவை விரும்பாமல் இராகத்தை எடுத்துக் கொள்வாயாகில் இந்த ராகத்தின் தேட்டம் எதார்த்தமாகவும், அதைக் கேட்பது உனக்கு ஆகுமானதாகவும் இருக்கும்’ என்று சொன்னார்கள்.

அறிந்து கொள்ளுங்கள்: எவனொருவன் இராகத்தையும், வஜ்தையும் ஸூபியாக்களுடைய மற்றும் அஹ்வால்களையும் இன்காறு செய்கிறானோ அவன் தனது அறியாமையாலேயே அப்படி செய்கிறான். அந்த இன்காரில் அவன்மேல் குற்றம் கூறப்படாது. ஏனென்றால் அவனில் இல்லாததை அவன் நம்புவது கஷ்டமேயாகும். இவன் ஆண்மையில்லாத பேடிக்கு சமமாவான்.

இராகம் கேட்பது ஹராமான விசயங்கள்:

1. ஒரு பெண்பிள்ளையைக் கொண்டாவது, அல்லது இச்சை ஏற்படும் பக்குவத்திலிருக்கிற ஒரு பையனைக் கொண்டாவது இராகம் கேட்பது ஹராம். இவர்களிடம் இராகம் கேட்பவன் அல்லாஹ்வுடைய காரியங்களில் மனமூழ்கினவனாயிருந்தாலும் சரியே.
பெண்பிள்ளையை வைத்து இராகம் கேட்பது ஹறாமாகும். ஆனால் திரைமறைவில் அவளைக் கொண்டு இராகம் கேட்கிறபட்சம் இச்சையுண்டாகும் என்ற பயமிருந்தால் அது ஹராமாகும். இல்லையென்றால் முபாஹாகும்.

2. இராகத்துடன் தம்பூர், வீணை, கின்னரம் இன்னும் இவைபோல் நரம்புகள் மாட்டிய எந்தவொரு வாத்தியக் கருவி அல்லது இராகி நாதசுரம் வாசிக்கப்படுவதாகும். (இதுவும் ஹராமாகும்). இது எதனால் ஹராமமென்று சொல்லப்பட்டதென்றால், மதுப்பரியர்களுக்கு வழங்கப்படுகின்ற வாத்தியமாயிருப்பதினால்.
எனினும் பேரிகை, டங்கம், குழல், தப்பு இது கிலுக்குள்ளதாயிருந்தாலும் சரியே, இவை ஹராமல்ல. ஆனால் முகன்னசுகள் என்ற பேடிகளின் பம்பை ஹராமாகும். பம்பை என்பது இடை குறுகியும், இருதலைகள் அகன்றுமிருக்கிற நீண்ட ஒரு வாத்தியக் கருவியாகும். குழல் எவ்வகையாயிருந்தாலும் அது ஹராமல்ல.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழல் சப்தத்தைக் கேட்டபோது, தங்கள் காதில் விரலை வைத்துக் கொண்டு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களை அதைக் கேட்கும்படிக்கும், அந்த சப்தம் நின்றபிறகு தெரிவிக்கும்படிக்கும் உத்திரவு செய்ததானது அது ஹலால் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது என்று இமாமுனா ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள். அன்னார் காதைப் பொத்திக் கொண்டதானது நாயகமவர்களுக்கு அச்சமயத்தில் ஒரு ஹால் உண்டாகி இருந்ததென்றும், அதனால் அந்த ராகத்தைக் கேட்பதினால் அந்த ஹாலை விட்டும் பராக்காக்கி விடும் என்றும் கருதியால்தான் என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் அதைக் கேட்பதை கொண்டு உத்திரவு போட்டார்கள் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

3. இராகம் பாடுவதில் துர்வார்த்தை அல்லது வசை, அல்லது அஸ்ஹாபுகளின் விசயத்தில் ராபிலிகள் கட்டியிருக்கும் கவி போல் தீனுடையவர்கள் மேல் தூஷணம் கலந்திருப்பதாகும். அல்லது அறியப்பட்ட ஒரு பெண்ணின் வர்ணிப்பு இருப்பதாம். இந்த பாடல்களை கேட்பது ஹறாமாகும்.

ஆனால் கன்னகிருதா, கரியமட்சம், கட்டழகு, ரூபலாவண்யம் இவைகளின் வர்ணிப்பும், கூடல், பிரிதல் இவைகளின் வசனமும் இன்னும் ஆஷிகானவர்கள் வழக்கமாய் சொல்லி வருகின்ற வாக்கியங்களும் பொதிந்த பாடல்களைப் பாடுவதும், அதைக் கேட்பதும் ஹறாமல்ல. ஆனால் ஒருவன் இதைக் கேட்கும்போது தான் ஆசை கொண்ட பெண்ணை மனதில் நினைத்துக் கேட்பது ஹறாமாகும்.

இவற்றில் ஸூபியாக்கள் இந்தப் பாடல்களைக் கேட்பதில், அவர்கள் ஒவ்வொன்றுக்கும் வௌ;வேறு பொருள் விளங்கி வைத்திருப்பதினால் அதனால் அவர்கள் நஷ்டமடைய மாட்டார்கள்.

4. இராகம் கேட்பவன் வாலிப வயதுடையவனாகவும், இச்சை மேலிட்டவனாகவும் அல்லாஹத் தஆலாவுடைய ஆசை என்பதே தெரியாதவனாகவும் இருப்பதாகும்.

இவர்கள் இந்த கன்னகிருதா, கரியமட்சம், கட்டழகு, ரூபலாவண்யம் போன்ற வர்ணிப்புகள் கேட்கும்பட்சத்தில் இவர்களுக்கு ஷைத்தான் துணை நிற்கிறான். அவர்களை இச்சை கொண்டு கெட்ட செயல்களைப் புரியத் தூண்டுகிறான். ஆனால் இதுவும் அல்லாஹ் சொன்ன செயல்தான் என்று பிதற்றுகிறார்கள். அகந்தையான பாவச் செயலுக்கும், ஆண்புணர்ச்சிக்கும் பேரின்பப் பைத்தியம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

5. சாமானிய ஜனங்கள் சுகம் பாராட்டாகவும், விளையாட்டாகவும் இராகம் கேட்க பழக்கப்படுத்திக் கொள்வதாம். இது முபாஹாயிருக்கிறது. என்றாலும் இதையே தொழிலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை எப்போதும் வழக்கப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது ஹராம்.

இராகம் கேட்பதில் உண்டாகிற குணம், குறி மற்றும் அதன் அதபுகள்:
இராகம் கேட்பதில் மூன்று மகாம்கள் உண்டு.

முதலில் விளக்கம்,
இரண்டாவது பரவசம்,
மூன்றாவது ஆட்டமாம்.

விளக்கம்: எவனொருவன் இயற்கையான இச்சையினாலாவது, மறதியினாலாவது, ஓர் சிருஷ்டியின் ஆசையினாலாவது இராகம் கேட்பவனுடைய விளக்கத்தையும், ஹாலையும் குறித்து பேசுவதற்கு அவன் அருகதையில்லாத அற்பனாயிருக்கிறான். ஆனாலும், ஒருவனுக்கு தீனுடைய நினைவும், அல்லாஹ்வுடைய முஹப்பத்தும் மேலிட்டிருந்தால் அது இரு வகுப்பாகும்.

1. முரீதுடைய வகுப்பாகும். முரீதானவன் தன்னுடைய வழியைத் தேடுவதிலும், நடப்பதிலும், அவனுக்கு சுருங்கல், விரிதல், இலேசாதல், கஷ்டமாதல், ஏற்கல், மறுத்தல்களின் குறிகள் தோன்றல்போல் ஒன்றுக்கொன்று நேர்மாறான பல ஹால்கள் உண்டாவதால் அந்த முரீதுடைய மனம் மயக்கமுற்றிருக்கும். அப்போது அவன் காதுக்கு எட்டுகிற வார்த்தைகளில் நிந்தித்தல், ஏற்கல், மறுத்தல், சேர்தல், பிரிதல், சமீபமாதல், தூரமாதல், சந்தோஷமாதல், கோபித்தல், ஆதரவு வைத்தல், நிராதரவாதல், அச்சமுறுதல், அச்சந் தீர்தல், வாய்மை நிறைவேற்றல், வாய்மை மாறல், சேர்வதால் சந்தோஷமாதல், பிரிவதால் துக்கப்படல் இன்னும் இவைபோன்ற சங்கதிகள் ஏதேனுமிருந்தால் அதை அவன் தன்னுடைய நிலைமைகளுக்கு நேராகத் திருப்பிக் கொள்ளுகிறான். அதனால் அவனுடைய மனதுக்குள் இருப்பது சுவாலையாய் எழும்புகிறது. அப்போது அவனில் ஹாலுகள் உண்டாகும். அவற்றில் பலபல சிந்தனைகள் பிறக்கும்.
அவனுடைய இல்மு, இஃதிகாதுகளின் சட்டம் உறுதியாய் இல்லாமல் போனால் இராகம் கேட்பதில் அவனுக்குக் குபுரான பல எண்ணங்கள் உண்டாகக் கூடும். அதாவது இராகம் கேட்பதில் அல்லாஹுதஆலாவின் விசயத்தில் ஆகாத ஓர் பொருளை அவன் விளங்கிக் கொள்வான்.

2. முரீதுகளின் வகுப்பையும், மகாமாத்துகளுடைய அஹ்வால்களையும் தாண்டி பனாவுடைய ஹாலின் முடிவுக்கு வந்தவர்களின் வகுப்பாகும். இதை அல்லாஹுத்தஆலா அல்லாத மற்ற வஸ்துக்களுடன் சேர்க்கும்போது பனா என்றும், நாஸ்தி என்றும் சொல்கிறார்கள். அல்லாஹுவுடன் சேர்க்கும்போது தவ்ஹீது என்றும் சொல்கிறார்கள். இவன் இராகம் கேட்பது பொருளை விளக்குகின்ற வழியில் இருக்காது.

மேலும் இராகம் இவனுடைய காதில் விழுந்தால் அந்த நாஸ்தியும், ஏகத்துவமும் புதிதாகும். அவன் முற்றும் தன்னை விட்டும் மறைந்து இந்த ஆலத்தின் உணர்ச்சியில்லாதவனாகப் போவான். உவமையில் இவன் நெருப்பில் விழுந்தால் கூட அதுவும் இவனுக்குத் தெரியாமல் போகும். இவ்வாறானவர்களின் இராகப் பரவசம் நிரப்பமானது.
முரீதுகளுடைய இராகப் பரவசத்தில் மனிதப் பண்பு கலந்திருக்கும். இதைவிட்டும் மேலே போனவர்களுடைய பரவசமானது அவனுடைய உணர்வை ஒழித்து அவனை முற்றாக எடுத்துக் கொள்ளும். இப்பேர்பட்டவர்களை நீ இன்காறு செய்யாமலிருக்க வேண்டும்.

2. விளக்கம் தீர்ந்தால் பின்பு உண்டாகும் பரவசமாகும். அதை வஜ்து என்றும் சொல்கிறார்கள். வஜ்து என்றால் அடைவது என்று பொருள். அதாவது இதற்குமுன் இல்லாத ஒரு ஹாலை அடைந்தான் என்பதே அதன் பொருள். அந்த ஹால் அஹ்வாலுடையது என்றும்,
கேள்வி: ஸூபியாக்கள் ஹக்காகவும், ஹக்குத்தஆலாவை நாடியும் இராகம் கேட்பவர்களாயிருந்தால் சங்கீதம் பாடுகிறவர்களைக் கொண்டு இராகம் கேட்காமல் ஓதுகிற காரிகளை நியமித்து குர்ஆனை ஓதச் சொல்லி அதைக் கேட்கலாமே! குர்ஆனது ஹக்குடைய கலாமாயிருப்பதால் அதைக் கேட்பது மிக மேலாயிருக்கிறதே என்று யாராவது சொன்னால்…

பதில்: இதற்கு ஐந்து காரணங்கள் உண்டு.
1. குர்ஆனுடைய ஆயத்துகள் எல்லாமே ஆஷிகுகளுடைய அஹ்வால்களுக்கு நேர்பாடாயிருக்காது. அதாவது குர்ஆனில் காபிர்களுடைய கிஸ்ஸலாவும், துன்யாவுடையவர்களின் முஆமலாத்துடைய ஹுகுமும் இன்னும் இதர விஷயங்களும் அனேகமிருக்கின்றன.

ஏனென்றால் அது எல்லா அசையாவகை மக்களுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்படி அருளப்பட்டிருக்கிறது. இவற்றை ஓதுவானாகில் அவனுக்கு இஷ்கு என்னும் நெருப்பை பற்றி எரியச் செய்யாது. ஆனால் ஒருவன் இஷ்கு முற்றிய ஆஷிகாயிருப்பின் அவன் எதிலும் இராகத்தையே கேட்பான்.

2. குர்ஆனை அனேகம்பேர் மனப்பாடம் செய்திருக்கிறார்கள். அனேகம்பேர் குர்ஆனை ஓதியிருப்பார்கள். எதுவொன்று அனேகமாகக் கேட்கப்பட்டிருக்கிறதோ அது மனதுக்கோர் ஹாலை உண்டாக்காது. எனினும் சங்கீதத்தைப் புதிதுபுதிதாக பாடலாம். ஆனால் குர்ஆனை புதிதுபுதிதாக ஓத முடியாது.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் சிறிய கிராமங்களிலிருந்து அரபுகள் வருவார்கள். புதிதாக குர்ஆனைக் கேட்டு அழுவார்கள். அவர்களுக்கு ஹால் உண்டாகும். அப்போது அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த அரபுகளை நோக்கி நாங்களும் உங்களைப் போலிருந்தோம். பின்பு எங்களுடைய இருதயங்கள் வன்மையடைந்து விட்டன என்று சொன்னார்கள். அதாவது எங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது என்பதாகும்.

3.அசையாமலிருக்கிற அநேக மனங்கள் இராகத்தினாலும், சரியான இசையுள்ள ஓசையினாலும் அசைந்தாடும். இதனாலேதான் சாதாரண பேச்சின்மேல் வஜ்து உண்டாகுவது அருமையாயிருக்கிறது. நல்ல இசையானது சரியான இசையோடும் இராகத்தோடும் இருந்தால் அதன்மேல் வஜ்து உண்டாகின்றது.

4. இராகத்தில் வேறொரு குணப்பாட்டை அதிகப்படுத்தும் பொருட்டு அதற்கு உதவியாகச் குழல், தாரை, தப்பு, டங்கம் முதலிய வேறு சப்தங்களும் வேண்டும். இது விளையாட்டு பொருட்களாயிருக்கிறது. குர்ஆனோ மிகவும் கண்ணியம் பொருந்தியதாக இருக்கிறது. ஆகவே எதுவொன்று சாமானியர் பார்வையில் விளையாட்டு ரூபமாயிருக்கிறதோ அதன் சப்தத்தோடு குர்ஆனை ஓதுவது கூடாது. இப்படியான விளையாட்டு பொருட்களை குர்ஆனுடன் சேர்க்கக் கூடாது. அதைக் காக்க வேண்டும்.

5. ஒவ்வொருத்தனுக்கும் ஒரு ஹால் இருக்கும். அவனவனும் தன்னுடைய ஹாலுக்கு நேர்பாடான ஒரு பாடலைக் கேட்க ஆவலுள்ளவனாயிருப்பான். அப்படி நேர்பாடில்லாமலிருப்பின் அவற்றை வெறுக்கவும் நேரும். இவ்வாறு வெறுக்கும் விதத்தில் குர்ஆனை ஓதுவது சரியல்ல.

3. இராகம் கேட்பதில் ஆடுவதும், ஆடையைக் கிழித்துக் கொள்வதுமாகும். இதில் எதுவொன்று மிகைத்து அவனுடைய புத்திக்குள் அடங்காததாயிருக்கிறதோ அதைப் பற்றி அவன் குற்றவாளியாக மாட்டான்.

தனக்கு ஹால் உண்டாகமலிருக்க தனக்கு ஹால் வந்ததுபோல் காட்டிக் கொண்டு ஆடுவதும், ஆடையைக் கிழித்துக் கொள்வதும் சுத்த முனாபிக்தனமாகும். அது ஹறாமாகும்.
அபூ அம்ரப்னு நஜீது ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்:- ‘இந்த ஜனங்கள் இராகம் கேட்பதில் பொய்யாக ஒரு ஹாலைக் காட்டுவதிலும் முப்பது வருஷம் புறம் பேசுவது மிகவும் நல்லது’ என்கிறார்கள்.

இராகம் கேட்கும்போது தனக்குள் உண்டாகிற ஹாலை வெளியாகாதபடி ஆடாமல் அமர்த்திக் கொள்கிறவன் எவனோ அவனே நிறப்பத்தையுடையவன். அவன் தன்னைக் காத்துக் கொள்ளும்விதமாக அவனுடைய தத்துவமானது அவ்வளவு உறுதிப் பட்டிருக்கிறது. ஆடுவதும், அலறுவதும், அழுவதும் பலஹீனத்தினாலுண்டாவதாகும்.

ஒருவன் தன்னிச்சையாக ஹாலை வெளிப்படுத்தாமல் ஆடுவானாகில் அது அவனுக்கு ஆகும். ஏனென்றால், ஆடுவது முபாஹாயிருக்கிறது. ஹபஷிகள் பள்ளிவாசலில் ஆடிக் கொண்டிருந்ததை ஆயிஷா நாயகி அவர்கள் பார்க்கப் போனார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, ‘நீ என்னில் நின்றுமாயிருக்கிறாய், நான் உன்னில் நின்றுமாயிருக்கிறேன்’ என்று சொன்னார்கள். இந்த சந்தோஷத்தினால் அலி நாயகம் அவர்கள் பூமியின் மேல் பலமுறை குதித்து குதித்து ஆடினார்கள்.

இன்னும் ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, ‘நீ குணத்திலும் கோலத்திலும் எனக்கு ஒப்பாயிருக்கிறாய்’ என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னபோது அந்த சந்தோஷத்தினால் அவர்களும் குதித்து குதித்து ஆடினார்கள்.
எனவே இதை ஹராம் என்று சொல்வது கூடாது. இன்னும் எவனொருவன் தனக்கு உண்டாகிற ஹால் அதிக உறுதியாகும் பொருட்டு ஆடுவானாகில் அது அழகேயாகும். ஆனால் தன்னிச்சையாக ஆடையைக் கிழிப்பது ஆகாது. எனினும் தன்மீது ஹால் மிகைத்து மீறும்போது கிழிப்பானாகில் அது ஆகும்.

இராகம் கேட்பதற்குரிய அதபுகள்:

இராகம் கேட்பதில் நேரம், இடம், மக்கள் இம்மூன்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இது விதியாயிருக்கிறது என்று ஜுனைதுல் பகுதாதி நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இராகம் கேட்க அருகதையுடையவர்கள் அதற்காக உட்காருவார்களாயின், எல்லோரும் தலை குனிந்து இருக்க வேண்டும். ஒருவரையொருவர் பார்க்க கூடாது. ஒவ்வொருவரும் முற்றாக தம்மை இராகத்தின்வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும். நடுவில் பேசக் கூடாது. தண்ணீர் குடிக்கக் கூடாது. பக்கங்களில் நோக்கக் கூடாது. கையையும், தலையையும் ஆட்டக்கூடாது. தங்கள் பிரயாசையினால் ஒரு அசைவும் அசைக்க கூடாது.

மேலும் கால் மடித்து தொழுகையினுடைய அத்தஹிய்யாதில் அமர்ந்திருப்பதுபோல் அமர்ந்திருக்க வேண்டும். தங்கள் முழுமனதையும் ஹக்குத்தஆலாவின்பக்கம் ஆக்கிக் கொள்ள வேண்டும். மறைவிலிருந்து என்ன வெளியாகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். தன்னிச்சையாக எழும்பாமலும், ஆடாமலும் இருக்கும்படி தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.
யாராவதொருவர் வஜ்துடைய மிகைப்பினால் எழும்பி விட்டால் அவரோடு இணங்கித் தாங்களும் எழும்ப வேண்டும். யாருக்காவது தலைப்பாகை கழன்று விழுந்து போனால் எல்லோரும் தங்கள் தலைப்பாகையினை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆக மொத்தத்தில் இராகம் கேட்பது மேற்கண்ட முறையில் இருப்பின் அது நன்மையைத் தரக்கூடியதே, அதைக் கேட்பதும் நன்மையே!

முற்றும்.

Add Comment

Your email address will not be published.