கடன் – ஷரீஅத் சொல்வதென்ன?

கடன் – ஷரீஅத் சொல்வதென்ன?

By Sufi Manzil 0 Comment September 26, 2020

Print Friendly, PDF & Email

கடன்

நாம் எல்லோரும் வல்ல நாயனிடம் கடன் இல்லாத வாழ்வைத் தந்திடு, கடனில்லாமல் மறையும் பாக்கியத்தைத் தந்திடு என்று எந்நாளும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த கடன் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது அதன் ஷரீஅத் வரைமுறை என்ன என்பது பற்றி இதில் காணுவோம்.

அழகிய கடனாக அல்லாஹ்விற்கு கடன் கொடுங்கள் என்றும் அழகிய கடனாக அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் யார்? என்றும் அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கூறியுள்ளான்.

‘எவரொருவர் இரண்டு தடவை அல்லாஹ்வுக்காக கடன் கொடுக்கிறாரோ அவருக்கு அந்த இரண்டில் ஒன்றை தர்மம் செய்தால் எவ்வளவு நன்மை கிடைக்குமோ அவ்வளவு நன்மை கிடைக்கும்’ என்றும், முஸ்லிமான தன் சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அந்த அடியானுக்கு உதவி செய்து கொண்டே இருப்பான்’ என்றும் ஹதீதில் கூறப்பட்டுள்ளது.

கடன் கொடுத்து வாங்குவது சதகா செய்வதை விட சிறந்ததுத என்று சிலரால் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் சதகா பெறுபவன் அது தேவையுடயவனாகவும் அல்லது தேவையற்றவனாகவும் இருக்கலாம். ஆனால் கடன் கேட்பவன் தன்னிடம் பொருள் இல்லாத போதுதான் கேட்பான்.

கடன் கொடுத்து வாங்குவது சுன்னத்தாகும். அதற்கு ஈஜாபும் கபூலும் தேவை. உனக்கு நான் இதனைக் கடனாகத் தந்தேன், இந்தப் பொருளைப் போலுள்ளதைத் திருப்பித் தர வேண்டுமென்ற நிபந்தனையில், என்று கடன் கொடுப்பவன் சொல்லியவுடன் தாமதிக்காமல் அவன் சொன்ன சொல்லுக்கு நேர்பாடாக ‘நான் அதனை ஒப்புக் கொண்டேன்’ என்று பெற்றுக் கொண்டவன் சொல்ல வேண்டும்.

கடன் கொடுத்து வாங்குவதில் ஈஜாப் கபூல் தேவையில்லை என்றும் பல இமாம்களால் கூறப்பட்டுள்ளது.

ஒருவன் கடன் கொடு என்று கேட்டான். மற்றவன் கொடுத்தால் அது கடன்தான். ஒருவன் வெறுமனே பணம் கொடு என்று கேட்க, அவன் கொடுத்தால் அது அன்பளிப்பாகும். ஆனால், அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டுமென்றுதான் கொடுத்தேன் என்று கொடுத்தவன் சொல்வதில் கருத்து மாறுபடுவார்களானால் கொடுத்தவனுடைய சொல்தான் உண்மையாக்கப்படும். ஏனெனில் அவனுடைய எண்ணம் அவனுக்குத்தான் தெரியும்.

ரொட்டி, குழைத்த மாவு, புளித்தத் தயிர் ஆகியவற்றைக் கடன் கொடுக்கலாம். பலமான சொல்படி உறைமோர் கடன் கொடுப்பது கூடாது. ஏனெனில், அதனைத் திருப்பிக் கொடுக்கும்போது குறிப்பிட்ட புளிப்பு வித்தியாசப்படும் என்பதால் கூடாது.

ஒருவன் மற்றொருவனிடம், பத்து ரூபாய் கடனாகக் கேட்டான், அவன் இன்ன மனிதரிடம் நீ வாங்கிக் கொள் என்று சொன்னான். பிறகு பார்க்கும்போது அவனிடம் இவனுக்குப் பணம் வர வேண்டியிருக்கிறது. இப்பொழுது இந்த மூன்றாமவனிடம் இவன் வாங்கிக் கொள்வது கூடும். இல்லையெனில், அந்தப் பணத்தைக் கைப்பற்றுவதில் கடன் கேட்டவன், கடன் வாங்கச் சொல்லியவனின் வக்கீலாக இருப்பான். எனவே, அக்கடனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சிறு குழந்தை, பைத்தியக்காரன் ஆகியோருடைய பொருளை நீதிபதியானவர் விசுவாசமுள்ள வசதியுள்ளவனுக்குக் கடன் கொடுத்து வாங்கலாம்.

கடன் கொடுத்தவனுக்கு வாங்கினவனால் உண்டாகும் பிரயோஜனம் கடன் கொடுத்தவனுடைய அனுமதியினால் கடன் வாங்கியவன் கைப்பற்றுவது கொண்டு தனக்கு உடைமையாக்கிக் கொள்வான்.

கடன் வாங்கியவனின் கைவசத்தில் கடன் கொடுத்தவனுடைய உடைமை ஏதேனும் இருந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இவன் கையை விட்டு நீங்கி பிறகு மீண்டு வந்ததாக இருந்தாலும் சரி. ஆனால் அதை ஈடு வைத்திருந்தாலும், அடிமையை உரிமையிடுவதாகச் சீட்டு எழுதிக் கொடுத்திருந்தாலும் திருப்பக் கூடாது.

கடன் வாங்கிய பொருள் போல் உள்ளது கிடைக்கக் கூடியதாக இருந்தால் அதே போன்றதையும், கிடைக்க முடியாத பொருளாக இருந்தால் விலையிலும் தோற்றத்திலும் அது போன்றதையும் கொடுப்பது கடன் வாங்கியவனின் மீது வாஜிபாகும். நல்லதுக்குப் பதிலாக கெட்டதை ஏற்றுக் கொள்வதும் கடன் கொடுத்த இடமல்லாததில் அது போன்றதை ஏற்றுக் கொள்வதும் வாஜிபல்ல.
கடன் வாங்கும் நேரத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி வாங்கியிருந்தால் கடன் கொடுத்தவனுக்கு ஏதேனும் அன்பளிப்புச் செய்யலாம். அது சுன்னத்துமாகும். இச்சமயத்தில் இந்த அன்பளிப்பை ஏற்றுக் கொள்வது கடன் கொடுத்தவனுக்கு மக்ரூஹ் அல்ல. ஏதேனும் நிபந்தனையிட்டுக் கடன் கொடுத்தாலும், வாங்கினாலும் அது வட்டியாகும். அது ஏகோபித்த அபிப்பிராயப்படி ஹராமாகும். ஏதேனும் பலனை இழுத்துக் கொண்டு வரும் கடன் அனைத்தும் வட்டியாகும்;’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

ஒருவன் தன் தோட்டத்தை அல்லது வீட்டை அல்லது தோணி, கப்பல் போன்றவற்றறை பாட்டதுக்கோ, வாடகைக்கோ கொடுக்கும்போது அதனதனுடைய பெறுமதியான கூலிக்கும் மேலாகக் கொடுக்க வேண்டுமென்று கடன் கொடுக்கும் ஆரம்பத்தில் பேசிக் கொடுப்பது ஹராமாகும். அதனைக் கட்டாயப்படுத்தாமல் சாடையாகக் குறிப்பிடுவது மக்ரூஹ் ஆகும். பெரும்பாலான உலமாக்களிடம் இதுவும் ஹராமாகும்.

ஏதேனும் ஒரு பொருளை பிணையாக வாங்கிக் கொண்டு கடன் கொடுப்பது கூடும்.

எவ்வித நிபந்தனையும் பேசாதிருக்கும் நிலைமையில் கடன் கொடுத்தவனுக்குக் கடன் வாங்கியவன் ஏதாவது ஒரு பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பது எல்லா இமாம்களின் ஒருமித்த சொல்படி ஆகுமானதாக இருக்கும்.

‘அவனுக்க நூறு ரூபாய் கொடு. நான் அதற்கு பொறுப்பாளி’ என்று ஒருவன் சொன்னால் அவன் அதற்கு பொறுப்பாளியாகி விடுவான். இவ்வாறே உன் தட்டுமுட்டு சாமான்களை கடலில் போட்டுவிடு. அதற்கு நான் பொறுப்பாளி என்று சொன்னாலும் பொறுப்பாளியாகி விடுவான்.

ஒருவன் ஒரு பொருளைக் கடனாகக் கொடுத்தேன் என்கிறான். வாங்கியவனோ அமானிதமாகத் தந்தாய் என்கிறான். அப்பொழுது வாங்கியவன் சொல்லே உண்மையாக்கப்படும் என்று பஙவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நிலத்தை அல்லது தோட்டத்தை பணம் கொடுத்து ஒத்திக்கு எடுத்து, அதன் வருமானத்தை அனுபவிப்பது ஹராமாகும். ஆனால், அந்த வருமானத்தை அவன் கொடுத்த தொகையில் கழித்துக் கொண்டாலும், அல்லது அந்த நிலத்துக்குக் கூலியாக ஒரு தொகையைப் பேசி இருவரும் பொருந்திக் கொண்டாலும் அது கூடும்.

ஈடு – அடகு

கொடுக்கும் கடனுக்கு நம்பிக்கைக்காக ஒரு பொருளை ஈடாகப் பெற்றுக் கொள்ளலாம். இதனை வயது வந்தவர் ஈஜாப் கபூல் கொண்டு நிறைவேற்ற வேண்டும். வக்பு செய்யப்பட்ட சொத்தையும் பிள்ளை பெற்ற உம்முவலத் (அல்லது சுர்ரியத்) என்ற அடிமைப் பெண்ணையும் ஈடாக வைப்பது கூடாது.

சிறு குழந்தை, பைத்தியக்காரன் ஆகியோரின் பொருட்களை ஈடு வைக்கக் கூடாது. அதற்கு அதிகாரியாக இருப்பவர் தந்தையாக, பாட்டனாக இருந்தாலும் சரி. எனினும், ஈடுவைத்து வட்டியில்லாமல் பொருளைப் பெற்று, அதில் வியாபாரம், விவசாயம் ஏதேனும் செய்து அவர்களின் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக வைக்கலாம்.

ஈடுவைக்கும் பொருள் பொதுவுடைமையாக இருந்தாலும் இரவலானதாக இருந்தாலும் ஈடுவைப்பது ஆகும். பொருளுக்குரியவனின் அனுமதியின்றி ஈடுபிடிக்கிறவனின் ஆட்சிக்கு அது வராது. ஈட்டு உடைமையில் ஆட்சியாகிறது ஈடு வைக்கப்பட்ட பின் பிடித்தவனுக்காயிருக்கும்.

அமானிதப் பொருளை வைத்திருப்பவன் அவனுடைய கவனக்குறைவால் சேதமானால் தவிர அதற்குப் பொறுப்பாளியாக மாட்டான். ஈடு வைக்கப்பட்டதும் பிணையாகக் கொடுக்கப்பட்ட பொருளும் கூலிக்கு (வாடகைக்கு) எடுத்த பொருளும் அமானிதங்களாகும். இரவல் பொருள் அவ்விதமல்ல.

பொருள் சேதமடைந்து விட்டால் ஈடு பிடித்தவனையும் வாடகைக்கு எடுத்தவனையும் சத்தியம் செய்யச் சொல்லி உண்மையாக்கப்படும். ஆனால், அப்பொருளை உரிமையாளனிடம் கொடுத்து விட்டதாகக் கூறினால் உண்மையாக்கப் பட மாட்டாது.

கிதாபு போன்றதை ஈடு பிடித்தவன் அதனை மறந்துவிட்டால் அல்லது கரையான் இருக்குமிடத்தில் வைத்து சேதமாகி விட்டால் அதற்குப் பொறுப்பாளியாகி விடுகிறான்.

ஈடு வைத்தப் பொருள் வீடு, தோட்டம், குதிரை, மாடு, வண்டி போன்றவையாக இருந்தால் அதைப் பாதுகாக்க வேண்டி ஏற்படும் செலவுகளும், பழுது பார்க்கும் (மராமத்து) செலவுகளும் பொருளுக்குரியவனின் மீதே விதியாகும்.

ஈடு வைத்தவன் அவன் வாங்கிய கடனை நிறைவேற்ற முடியாவிட்டால், அந்தப் பொருளை விற்றாவது கடனை நிறைவேற்றத் தேடலாம். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் நீதிபதியிடம் அறிவித்து அவர் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். நீதிபதியுடைய சொல்லையும் அவன் ஏற்காவிட்டால், அவன் கொடுக்க வேண்டியது உறுதியாகி, ஈடுவைத்த பொருளும் அவனுடையதுதான் என்று தெரிந்தால் அதனை விற்று கடனை நிறைவேற்றுவது நீதிபதியின் பொறுப்பாகும். இவ்வாறு செய்வது நீதிபதி வேலை செய்யும் இடத்திற்குள்ளிருக்க வேண்டும்.

ஈடு வைத்த பின் அந்தப் பொருளை மற்றொருவனுக்கு ஈடு வைப்பதும், வக்ஃபு செய்வதும் ஈடு வைத்தவனுக்கு கூடாது.

பெண்களின் ஆடை ஆபரணங்களை ஈடு பெற்று அவற்றை அணிந்து கொள்வதற்கு அனுமதி பெற்று அணிந்து கொள்ளலாமா என்பது பற்றி இமாம் நாஷிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுவதாவது: நகைகளை அணிந்து கொள்வதற்காகவே அவற்றை ஈடுபிடித்துப் பணம் கொடுத்திருப்பதால் ஈடு பிடித்தவளின் மீது நகைகளுக்குரிய பொறுப்பு ஏற்படாது. ஆனால் அந்த அடகு வீணானதாயிருக்கும்.

ஈடு வைத்தவனும், ஈடு பெற்றவனும் அதில் தர்க்கம் செய்து கொண்டால் இதில் ஈடு வைத்தவனின் சொல்லே உண்மையாக்கப்படும்.

நிறைவேற்ற முடியாத கடனாளியாகிப் போதல் இன்சால்வெண்ட் அல்லது பேங்க்ரப்ட் அல்லது திவாலாகுதல்:

ஒருவனுக்கு கடனிருந்து அது அவனிடம் இருக்கும் பொருளைவிடக் அதிகமாக இருந்தால் அவனிடம் இருக்கும் பொருளை அவன் தன்பேரில் தடை செய்ய வேணுமாய்த் தானே கேட்க வேண்டும். அல்லது அவனுக்கு கடன் கொடுத்தவர்கள் அப்படிக் கேட்க வேண்டும். அந்தத் தடையினால் அவனுடைய அப்பொருளில் கடன்காரர்களின் பாத்தியதை தொடர்புடையதாகி விட்டது. அதற்குப் பின் அப்பொருளை தன் விருப்பப்படி கடன் கொடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படும்படி லேவதாவி செய்வதோ, அன்பளிப்பு செய்வதோ கூடாது. அவன் அதனை நீதிபதி உத்திரவின்றி விற்கக் கூடாது. நீதிபதியானவர் அவனையும் கடன் கொடுத்தவர்களையும் ஒன்றாக வைத்து அவனுடைய எல்லாச் சொத்துக்களையும் சுணக்கமின்றி விற்று கடன்காரர்களுக்கு அவரவர்களுக்குரிய விகிதாச்சாரப்படி பங்கிட்டுக் கொடுப்பார்.

ஆனால், ஒரு கடனாளி எவ்விதப் பொருளாதார வசதியும் இல்லாதவன் என்று உறுதியானால் அவனுக்கு வசதி ஏற்படும் வரை அவனைத் தடை செய்யக் கூடாது. கடனாளி தானே சிறையிலடைக்கப்படுவதை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அவனுக்கு அனுமதி கொடுக்கப்படும். சிறையின் வாடகையும் அவனுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடியவனுடைய கூலியும் கடன் வாங்கியவன் பொறுப்பில் உள்ளதாகும். அவனிடத்தில் வசதி இல்லாவிடில் அச்செலவுகளை பைத்துல்மாலும் அது இல்லையெனில் வசதி உள்ள முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடன் வாங்கிய ஒருவனுக்கு பொருள் இருக்கிறது என்று தெரிந்தால் அதனைத் தடை செய்து வைக்க வேண்டும். அது எவ்வளவாக இருந்தாலும் சரி. தந்தை மகனுக்கு கடன் கொடுக்க வேண்டியிருந்தால் தடை செய்யக் கூடாது. தந்தையும் தந்தையின் தந்தையும், தாயின் தந்தையும் தாயின் தாயும் இவ்வாறுதான்.

சாட்டுதல் – ஹவாலா

சாட்டுதல் என்பது ஒருவனிடமிருந்துத தனக்கு வரவேண்டிய பொருளை தான் கொடுக்க வேண்டிய மற்றொருவனுக்குக் கொடுக்கும்படி சாட்டி விடுதலாகும். அந்த சாட்டுதலால் சாட்டுகிறவன் சாட்டுதல் பெற்றவனுடைய கடனை விட்டும் நீங்கி விடுவான். அவ்வாறே சாட்டப்பட்டவன் சாட்டினவனுடைய கடனை விட்டும் நீங்கி விடுவான்.

இவ்வாறு சாட்டப்பட்ட பின் கொடுக்கல் வாங்கல் முடியவில்லையானால் அதாவது சாட்டப்பட்டவன் வறுமையினாலோ அல்லது மறுப்பதினாலோ கொடுக்காவிட்டால் சாட்டுதலைப் பொருந்திக் கொண்டவன் சாட்டியவனின் பால் திரும்பக் கூடாது.

சாட்டுதலுக்கு ஏழு ஃபர்ளுகள் 1. சாட்டுகிறவன் 2. சாட்டுதலை ஏற்றுக் கொள்கிறவன் 3. சாட்டப்படுகிறவன் 4. சாட்டுகிறவனுடைய கடன் சாட்டப்பட்டவனின் மீது தரிபட்டிருத்தல் 5. சாட்டுதலை ஏற்றுக் கொள்கிறவனுடைய கடன் சாட்டுகிறவன் மீது தரிபடுதல் 6. ஈஜாப் 7. கபூல்.

பிணை

பொருளுக்கு அல்லது கடனுக்கு பிணையேற்பது மற்றும் ஆளுக்கு அல்லது குறிப்பான வஸ்துவுக்குப் பிணையேற்பது என்று இரு வகைப்படும். உனக்கு இன்னான் கொடுக்க வேண்டிய பணத்திற்கு நான் பிணை அல்லது நான் அதனை சுமந்து கொண்டேன் என்று கூறுவதும், அல்லது குறிப்பான ஒரு பொருளைக் கொண்டு நான் பிணை என்று கூறுவதும் ஷர்த்தாகும்.

இவ்வாறு பிணை என்று கூறாமல் நான் அந்தப் பணத்தை தருவேன் என்றோ நான் அந்த மனிதனைக் கொண்டு வருவேன் என்றோ கூறினால் அது பிணையாக ஆகாது. மாறாக அது வாக்காக ஆகிவிடும்.

இவ்வாறு பிணையேற்பதை இத்தனை நாட்களுக்கு என்று சொல்வதும், இவ்விதமிருந்தால் என்று ஒன்றைத் தொடர்புபடுத்திச் சொல்வதும் கூடாது. இன்னும் இந்தப் பிணையினால் பழைய கடன்காரன் நிறைவேற்றாமல் நீங்கிவிட்டான் என்று ஷர்த்திடுவதும் கூடாது.

கடனாளி நீங்குவதால் பிணையாளி நீங்கி விடுவான். பிணையாளி நீங்குவதால் கடனாளி கடனை நிறைவேற்றாமல் நீங்க மாட்டான்.

ஒருவனுடைய கடனை அவனுடைய அனுமதி கொண்டு நிறைவேற்றினால் பிறகு அவனைத் துயர்ந்து பணத்தை வாங்கலாம். கொடுக்கும்போது அதனை நிபந்தனையிடாவிட்டாலும் சரி.

ஒருவனுக்கு இரண்டு பேர் பிணையாக ஆவார்களானால் ஒவ்வொருவனிடமும் பொருள் முழுவதையும் கேட்கலாம் என்று சில இமாம்களும், பாதி பாதியாகக் கேட்கலாம் என்று சில இமாம்களும் கூறியுள்ளனர்.

Add Comment

Your email address will not be published.