நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)-Fasting Laws(Shafi and Hanafi)

 நோன்பின் சட்டதிட்டங்கள் (ஷாபிஈ மத்ஹப்)

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் துப்புரவான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும்.

நோன்பின் பர்ளுகள்:

1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்க வேண்டும்.

நிய்யத்: 'நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ளி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா –  இந்த வருஷத்து ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன்' என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.

2. நோன்புடைய ஞாபகம் இருப்பததுடனே வேணும் என்றே எந்த பொருளும் உள்ளே சேராமல் பகல் முழுவதும் தடுத்துக் கொள்ள வேண்டும்.

நோன்பின் சுன்னத்துகள்:

1. ஸஹர் செய்வது (ஸஹருடைய நேரமாகிறது இரவுக்கு மேல் ஆரம்பமாகி சுப்ஹு வக்து வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் முடிகிறது)

2. பஜ்ரு உதயமாவதை பயப்படாமல் இருக்கும் காலமெல்லாம் ஸஹரை பிற்படுத்துவது.

3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் உடனடியாக நோன்பு திறப்பதின் மீது விரைந்து கொள்வது.

4. மூன்று பேரீத்தம்பழம் அல்லது மூன்று திராட்சை பழம் அல்லது மூன்று மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது.

5. நோன்பு திறந்தவுடன் 'அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வ அலைக்க தவக்கல்து வஅலா ரிஜ்கிக அப்தர்து, பஃதக்ப்பல் மின்னீ'- இறைவா! உனக்காக நோன்பு வைத்தேன். உன்னையே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய ரிஸ்கின் மீதே நோன்பு திறந்தேன். எனது நோன்பை நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று துஆ ஓதுவது.

6. மற்றவர்களுக்கும் நோன்பு திறக்க கொடுப்பது.

7. ஹைலு நிபாஸ், ஜனாபத் போன்றவற்றை விட்டும் சுத்தமாவதற்காக பஜ்ருக்கு முன்னால் குளிப்'பது.

8. பகல் நேரத்தில் ஆகாரத்தின் மீது ஆசை கொள்வதை விட்டும், வாசனைப் பொருட்களை நுகர்வதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது.

9. ரமலான் பிந்திய பத்தில் அதிகமாக ஸதகா கொடுப்பதும், தன் குடும்பத்தின் மீது விசாலமாக செலவு செய்வதும், சொந்தக்காரர்கள் அக்கம்பக்கத்தவர்கள் மீது உபகாரம் செய்வதும் சுன்னத்தாகும்.

10. குர்ஆனை அதிகமாக ஓதுவது.

11. அதிகமாக இபாதத்து செய்வது.

12. ரமலான் மாதம் பிந்திய பத்தில் இஃதிகாப் இருப்பது கண்டிப்பான சுன்னத்தாகும்.

நோன்பின் மக்ரூஹ்கள்:

1. ஹைலு, ஜனாபத் குளிப்பை பஜ்ரு உதயமாகும்வரை பிற்படுத்துவது.

2. ஆகாரப் பொருள்களை ருசி பார்ப்பது.

3. பகல் முழுவதும் வாய் மூடி இருப்பது.

4. பகல் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.

.5.உளு செய்யும்போது வாய், மூக்குக்கு தண்ணீரை அளவு கடந்து செலுத்துவது.

6. லுஹருக்குப் பின்னால் பல் துலக்குவது.

நோன்பை முறிக்கும் காரியங்கள்:

1. தான் நோன்பு என்று தெரிந்து கொண்டு உடல் உறவு கொள்வது.

2. வேண்டுமென்றே விந்தை வெளிப்படுத்துவது.

3. வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.

4. காரல் போன்றவை வாயின் எல்லைக்கு வந்தபின் விழுங்குவது.

5. நோன்பு என்ற உணர்வுடன் ஏதேனும் ஒரு வஸ்துவை உள்ளே செலுத்துவது.(வாயில் ஊறும் உமிழ்நீரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதால் நோன்பு முறியாது)

6. நோன்பு வைத்துக் கொண்டு நீரில் முங்கி குளிப்பதால் வாய், மூக்கு போன்ற ஓட்டைகளில் தண்ணீர் செல்லுபடி ஆகுவது.

7. ஹைலு, நிபாஸ், மதமாற்றம், பைத்தியம், பகல் முழுவதும் மயக்கம் போன்றவைகள் ஏற்படுவது.

நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள்:

1. பொய் சொல்வது

2. புறம் பேசுவது.

3. கோள் சொல்வது

4. இட்டுக் கட்டுவது.

5. பொய் சாட்சி சொல்வது.

6. பிறரை ஏசுவது.

நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளவர்கள்:

1. தங்கடமான வியாதியஸ்தர்கள்.

2. நீண்ட பிரயாணம் செய்யக் கூடியவர்கள்

3. தாகத்தால், பசியால் நாசத்தை பயந்தவர்கள்.

இந்த மூன்று நபர்களும் நோன்பை விடுவது கூடும். ஆனால் இவர்கள் ஒவ்வொரு இரவும் நோன்பை நிய்யத்து செய்து கொள்ள வேண்டும். மத்தியில் கஷ்டம் ஏற்பட்டால் நோன்பை திறந்து விடலாம்.

ஆனால் இவர்கள் திரும்ப களா செய்ய இயலாது என்றிருந்தால் ஒரு நோன்புக்கு ஒரு முத்து வீதம் அதாவது முக்கால் லிட்டர் அரிசி வீதம் பிதியா கொடுக்க வேண்டும். இவர்கள் நோன்பை களா செய்ய வேண்டாம்.

கர்ப்பிணியான பெண்கள் நோன்பு வைத்தால் வயிற்றி;ல் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதை பயந்தாலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண் நோன்பு வைத்தால் பால் சுரக்காது என பயந்தாலும் நோன்பை விடலாம். ஆனால் இவர்கள் விட்ட நோன்பை களா செய்வதுடன் ஒரு நோன்புக்கு ஒரு முத்து வீதம் பிதியாவும் கொடுக்க வேண்டும்.

ஜகாதுல் பித்ர் விபரம்:

பித்றா கடமையாவதற்கு நிபந்தனைகள்:

பெருநாளின் பகலிலும் அடுத்து வரும் இரவிலும் தனக்கும், தனது செலவின் கீழ் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டிய உணவு, உடை, குடியிருக்கும் இடம் போன்றவைகளையும், வேலைக்காரர்களுக்குரிய செலவு, கடன் இவைகளையும் கொடுத்து மீதமிருந்தால் பித்றா கொடுப்பது கடமையாகும். தாமதாமாகக் கொடுக்க வேண்டிய கடன் பித்றாவை தடை செய்யாது.

அளவு:

ஊரில் பெரும்பாலும் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருளிலிருந்து ஒவ்வொருவருக்கும் 4 முத்து வீதம் நமது நாட்டு அளவு படி 3 லிட்டர்கள் அல்லது 2 கிலோ 400 கிராம் கொடுப்பது கடமையாகும்.
ஷாபிஈ மத்ஹபில் உணவுப் பொருட்களைத்தான் கொடுக்க வேண்டும். அதன் விலையை கொடுத்தால் பித்றா நிறைவேறாது.தான் வசிக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கு பித்றா கொடுப்பது கடமை. வேற்றூரிலுள்ள ஏழைகளுக்கும் பித்றா கொடுக்கலாம்.

கொடுக்கும் நேரம்:

பெருநாள் தொழுகைக்கு முன்பு பித்றா கொடுப்பது சுன்னத்தாகும். பின் கொடுப்பது மக்ரூஹ் ஆகும். எனினும், சொந்தக்காரர்களையும், பக்கத்து வீட்டாரையும் எதிர்பார்த்து சூரியன் மறைவதற்குள்ளாக கொடுப்பது சுன்னத்தாகும்.

பெருநாள் அன்று சூரியன் மறையும் வரை பிற்படுத்துவது ஹறாமாகும். பித்றாவை ரமலான் முதல் பிறையிலிருந்தும் கொடுக்கலாம்.

 

நோன்பின் சட்டதிட்டங்கள் (ஹனபி மத்ஹப்):

நோன்பு விதியானவர்கள்:

1. முஸ்லிமாக இருத்தல்.

2. பருவமடைந்தவனாக இருத்தல்.

3. புத்தியுடையவனாக இருத்தல்.

4. இஸ்லாமிய நோன்பு கடமை என்பதை அறிந்தவனாக இருத்தல்.

நோன்பை நிறைவேற்றுவதற்கு விதியானவர்கள்:

1. ஊரில் தங்கியிருப்பவன்

2.உடல் நலம் பெற்றவன்.

3. மாதவிலக்கு, பேறுகால தொடக்கு ஆகியவைகளை விட்டும் சுத்தமான பெண்.

நோன்பு எப்போது நிறைவேறும்?

1. நிய்யத்து நிறiவேறும் நேரம் நிய்யத்து வைப்பது.(ரமலான் நோன்பு சுன்னத்தான நோன்பிற்குரிய நேரம் சூரியன் மறைந்தது முதல் நண்பகலுக்கு சற்று முன்னால் வரையாகும். ரமலான் நோன்பை களா செய்யும் போதும், கஃப்பாரா நேர்ச்சை நோன்பு பிடிக்கும்போதும் இரவில் நிய்யத்து செய்ய வேண்'டும்.)

2. பெண் மாதவிடாய், பேறுகாலத் தொடக்கு ஆகியவைகளை விட்டும் சுத்தமாக இருக்கும் நேரம்.

3. சாப்பாடு, குடிப்பு, உடலுறுவு போன்ற நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் நீங்கியிருக்கும் நேரம்.

நோன்பின் வகைகள்:

1.பர்ளு: ரமலான் மாத நோன்பாகும்.

2.வாஜிபு: வீணாக்கிய சுன்னத்தான நோன்பை களா செய்வது, நேர்ச்சை நோன்பு, கஃப்பாரா உடைய நோன்பு.( காரணமின்றி ரமலான் மாதத்தில் நாடியவனாக நோன்பு திறத்தல், நாடியவனாக ரமலான் மாத பகலில் உடலுறவு கொள்வது, மனைவியை மஹ்றமானவர்களுக்கு ஒப்பிட்டு காட்டுதல், சத்தியத்தை முறித்தல், இஹ்றாம் உடை உடுத்திய பின் தடுக்கப்பட்ட செயல்களை செய்தல், தவறாக கொலை செய்தல் போன்ற காரணங்களால் கஃபஃபாரா நோன்பு விதியாகும்.)

3.பிரதான சுன்னத்து(மஸ்னூன்): முஹர்ரம் 9,10 அல்லது 10,11 வது நாட்களின் நோன்புகள்.

4. பிரதானமில்லாத சுன்னத்து(மன்தூப்): ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் நோன்புகள், ஒவ்வொரு மாதமும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்களின் (அய்யாமுல் பீல்) நோன்புகள், ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன் இரண்டு நாட்களின் நோன்புகள், ஷவ்வால் மாதம் ஆறு நாட்களின் நோன்புகள், ஹாஜி அல்லாதவர்களுக்கு அரபா நோன்பு, தாவூது நபியின் நோன்பு (அதாவது ஒருநாள் நோன்பு நோற்று ஒருநாள் விட்டு நோன்பு நோற்றல். இந்த நோன்பு மிகச் சிறப்பானதாகும்.)

5. மக்ரூஹ்: முஹர்ரம் 10ம் நாள் மட்டும் நோன்பு நோற்றல், சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்றல், நோன்பு திறக்காமலேயே தொடர்ந்து நோன்பு நோற்றல்.

6. ஹராம்: நோன்பு பெருநாள்களின் நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள் நோன்பு, அய்யாமுத் தஷ்ரீக் 3 நாட்களின் நோன்பு (அதாவது துல்ஹஜ்ஜு பிறi 11,12,13 நாட்கள்)

நிய்யத்து வைத்தல்:

நோன்பு வைப்பதற்கு இதயத்திலிருந்து வரக்கூடிய உறுதியான நாட்டம் என்ற நி;ய்யத்து கடமையாகும். நிய்யத்து என்பது முறையாக பஜ்ருடைய நேரம் வருவதற்கு முன்னால் ஏற்பட வேண்டும். ஆனால் மூன்று வகையான நோன்புகளில் சூரியனின் உச்ச நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னால் வரை நிய்யத்து வைத்துக் கொள்ள அனுமதியுண்டு.

1. ரமலான் மாத்திலேயே ரமலான் நோன்பை நிறைவேற்றுவது.

2. நாள் குறிப்பிட்ட நேர்ச்சை நோன்பு

3. நஃபில் நோன்பு.

ரமலான் நோன்பை களா இல்லாமல் அதாவாக நிறைவேற்றும் போது நோன்பு வைக்கிறேன் என்று பொதுவான நிய்யத்தைக் கொண்டு நிறைவேறுவதும், நபில் நோன்பை நோற்கிறேன் என்ற நிய்யத்தும் கூடும். இதுபோலவே நாள்குறிப்பிட்ட நேர்ச்சை நோன்பிலும், நபில் நோன்பிலும் இவ்விரண்டு விதமாக நிய்யத்து செய்வதும் கூடும்.

ஆனால் நான்கு வகையான நோன்புகளிலே இன்ன நோன்பை நோற்கிறேன் என்று நோன்பை குறிப்பிடுவதும் அந்த நிய்யத்து பஜ்ரு நேரம் வருவதற்கு முன் செய்வதும் கட்டாயமாகும்.

அவை:

1. களாவான ரமலான் நோன்பு.

2. இடையிலே முறித்து விட்ட நபில் நோன்பு

3. குற்றப்பரிகாரமான (கஃபஃபாரா) நோன்பு.

4. நாள் குறிப்பிடாத நேர்ச்சை நோன்பு.

நோன்பை முறிக்காத விசயங்கள்:

1. மறதியாக சாப்பிட்டால், குடித்தால்.

2.மறதியாக உடலுறவு கொண்டால்.

3. தலையில் எண்ணெய் தேய்த்தால்.

4. கண்களுக்கு சுறுமா போட்டால்.

5.இரத்தம் எடுக்கப்பட்டால்.

6.ஒருவரைப் பற்றி புறம் பேசினால்.

7.நோன்பை விடாத நிலையில் நோன்'பை விடுவதை நாடினால்.

8.தானாகவே புழுதி, புகை, ஈ போன்றவை தொண்டைக்குள் புகுந்தால்.

9. முழுக்குள்ளவனாக இருந்தால் (நோன்பு நிறைNவுறும். ஆனால் பர்ளு தொழுகை விட்டதற்காக மக்ரூஹ் தஹ்ரீமாவாகும்)

10. ஆற்றில் மூழ்கி காதில் நீர் புகுந்தால்.

11. மூக்கில் சளி நுழைந்து நாடியவனாக அதை விழுங்கினால்.

12. வாந்தி மிகைத்து தானாகவே உட்சென்று விட்டால்(அது குறைவாகவோ அதிகமாகவோ இருந்தாலும் சரி)

13. வாந்தி எடுத்து அது வாய் நிரம்பாத நிலையில் தானாகவே உட்சென்றால்.

14. பற்களுக்கு மத்தியிலுள்ள உணவுப் பொருட்கள் மொச்சைக் கொட்டையை விட சிறியதாக இருந்து அதை விழுங்கினால்.

15. கடுகு போன்றதை வாயின் வெளிப்பாகத்தில் மென்று அதன் சுவை தொண்டையில் நுழையவில்லை என்றால்.

16. தோலிலோ அல்லது நரம்பிலோ ஊசி போடுவதால்.

17. தனது காதை ஒரு குச்சியால் குடைந்து அதில்  குச்சியை பலமுறை காதில் செலுத்தினால்.

களா செய்வதுடன் கஃபஃபாரா கடமையாகும் எப்போது?:

1. நோன்பாளி உணவை உண்டு அதனால் வயிற்றுப் பசி தீர்வதால்.

2. மார்க்க ரீதியான காரணமின்றி மருந்தை சாப்பிட்டால்.

3. நோன்பாளி தண்ணீரை அல்லது வேறு பானத்தை குடித்தால்

4. உடலுறவு கொள்வதால்.

5. வாயினுள் மழைநீர் நுழைந்து அதை விழுங்கினால்.

6. கோதுமை போன்றதை சாப்பிட்டால்.

7. சிறிது உப்பை சாப்பிட்டால்.

8. களிமண் திண்பது வழக்கமாக இல்லாமல் அதை சாப்பிட்டால்.

கஃப்பாராவுக்குரிய நிபந்தனைகள்:

1. ரமலான் நோன்பை அதாவாக நிறைNவுற்றும் போது குடித்தால், சாப்பிட்டால்.

2. நாடியவனாக சாப்பிட்டால், குடித்தால்

3. இரவு இன்னும் முடியவில்லையென்றோ மக்ரிபு நேரம் நுழைந்து விட்டது என்றோ எண்ணி சாப்பிட்டு அவன் பகலில்தான் சாப்பிட்டான், குடித்தான் என்பது தெளிவானால்.

4.சாப்பிட, குடிக்க நிர்பந்தமாக்கப்படவில்லையானால் கஃப்பாரா கடமையாகும்.

கஃப்பாராவின் விளக்கம்:

1. ஒரு அடிமையை உரிமைவிடுதல் (இதற்கு இயலவில்லையெனில்)

2. தொடர்ந்து 2 மாதங்கள் நோன்பு பிடித்தல், அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் இடையில் வந்தால் தொடர்ச்சி விட்டுவிடும். (இதுவும் முடியவில்லையெனில்)

3. ஊரின் உணவுப் பொருளில் நடுத்தரமான பொருளை 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

கஃப்பாராவின்றி களா கடமையாவது எப்போது?

1. பயணம், நோய், குழந்தை உண்டாகுதல், பால் கொடுத்தல், மாதவிடாய், பேறுகாலத் தொடக்கு, மயக்கம், பைத்தியம் இதுபோன்ற மார்க்கரீதியான காரணங்களில் ஒரு காரணத்தினால் பிடித்த நோன்பை விட்டால்.

2.வழமையாக சாப்பிடாத, வயிற்றுப் பசி அதனால் தீராத மருந்து, ரொட்டித் துண்டு, குழைத்த மாவு காகிதம் போன்ற பொருளை நோன்பாளி சாப்பிட்டால்.

3. கல், இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு போன்ற பொருளை நோன்பாளி விழுங்கினால்.

4. நோன்பாளியை சாப்பாடு, குடிப்பின் மீது நிர்ப்பந்தப்பட்டு சாப்பிட்டால், குடித்தால்.

5. நோன்பாளி சாப்பாடு, குடிப்பிற்கு அவசியமாக்கப்பட்டு சாப்பிட்டால், குடித்தால்.

6. இரவு இருக்கின்றது ,அல்லது சூரியன் அடைந்து விட்டது என நினைத்'து சாப்பிட்டபின் அது பகல் என்பது தெளிவானால்

7. வாய் அலம்புவதிலும், மூக்குக்குத் தண்ணீர் செலுத்துவதிலும் அளவுக்கதிகமாக செய்து தண்ணீர் அவன் வயிற்றுக்குள் சென்று விட்டால்.

8.வாந்தியை வரவழைத்து அது வாய் நிரம்ப இருந்தால்.

9. தொண்டையில் மழைநீர் அல்லது பனிக்கட்டி நுழைந்து அவன் நாடி அதை விழுங்கவில்லையானால்.

10 ரமலானுடைய அதாவாக இல்லாத நோன்பில் நோன்பை வீணாக்கினால்.

11. தான் நாடி புகையை தனது தொண்டையினுள் நுழைய வைத்தால்.

12. மொச்சை கொட்டையளவு பற்களுக்கு மத்தியிலுள்ள உணவு பொருளின் ஒரு பகுதியை விழுங்கினால்.

13. மறதியாக சாப்பிட்டபின் தெரிந்து சாப்பிட்;டால்.

14.இரவில் நிய்யத்து வைக்காமல் பகலில் நிய்யத்து வைத்தபின் சாப்பிட்டால்.

15. பயணியாக இருந்து தங்குவதை நாடி பின் சாப்பிட்டால்.

16. ஊரில் தங்குபவனாக இருந்து பின் பயணம் செய்து சாப்பிட்டால்.

17. நோன்பு பிடிக்கின்ற அல்லது விடுகின்ற எந்த நிய்யத்தும் இல்லாமல் பகல் முழுவதும் ஊண், குடிப்பை விட்டும் தன்னை தடுத்துக் கொண்டால்.

18. எண்ணெய் அல்லது தண்ணீர் இவற்றை காதில் ஊற்றினால்.

19. மூக்கினுள் மருந்தை ஊற்றினால்.

20.வயிற்றிலுள்ள காயத்திற்கு அல்லது மூளையிலுள்ள காயத்திற்கு மருந்து போட்டு அம்மருந்து உட்பகுதிக்குள் சென்றால் நோன்பை களா செய்வதும், நோன்பு வீணான நாளில் ரமலான் மாதத்தை சங்கை செய்வதற்காக மீதமுள்ள நேரத்தில் ஊண், குடிப்பை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வதும் கடமையாகும்.

நோன்பாளிக்கு மக்ரூஹான காரியங்கள்:

1. ஒரு பொருளை தேவையின்றி மெல்வதும், சுவைப்பதும்.

2. வாயில் எச்சிலை ஒன்றுகூட்டி பின் அதை விழுங்குவதும்.

3. இரத்தம் எடுத்தல் போன்ற பலஹீனத்திற்கு காரணமாக இருக்கின்ற ஒவ்வொரு காரியத்தினாலும் மக்ரூஹ் ஏற்படும்.

நோன்பாளிக்கு மக்ரூஹ் இல்லாத காரியங்கள்:

1. தாடி, மீசைக்கு எண்ணெய் இடுவது.

2. சுறுமா இடுவது.

3. குளிர்ச்சியாக குளிப்பது.

4.குளிர்ச்சிக்காக ஈரமான ஆடையால் சுற்றுவது.

5. ஒளுவின்றி வாய் அலம்புவது, நாசிக்குத் தண்ணீர் செலுத்துவது.

6.. பகலின் கடைசியில் பல்துலக்குவது.

நோன்பின் சுன்னத்துக்கள்:

1. ஸஹர் செய்வது.

2. பஜ்ரு உதயத்திற்கு சற்று முன்வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது.

3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் நோன்பு திறப்பதை தீவிரப்படுத்துவது.

4. பெருந்தொடக்கை விட்டும் நீங்க பஜ்ருக்கு முன் குளிப்பது.

5. பொய், புறம்பேசுதல், கோள் சொல்லுதல், ஏசுதல் ஆகிய தீயகுணங்களை விட்டும் தனது நாவை பாதுகாத்தல்.

6.குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது போன்ற நற்காரியங்களை கொண்டு ஈடுபடுவது.

7. கோபம் கொள்ளாமலும், வீணான காரியத்தில் ஈடுபடாமலும் இருப்பது.

8. ஆகுமானதாக இருப்பினும் மனோ இச்சைகளை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது.

நோன்பை விடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள்:

1. நோய் அதிகரிப்பதையோ, நோய் நிவாரணம் பெறும்  காலம் நீடிப்பதையோ பயப்படுகின்ற அல்லது நோன்பு நோயாளிக்கு இடையூறை சேர்க்கின்ற நோயாளி.

2. தொழுகை கஸ்ருடைய தூரத்திற்கு பயணம் செய்கின்ற பயணி.

3.ஆபத்தில் சேர்க்கும் கடுமையான தாகம் உள்ளவன், கடுமையான பசி உள்ளவன்.

4. நோன்பு தனக்கோ அல்லது தனது குழந்தைக்கோ இடையூறு ஏற்படும் கர்ப்பிணி.

5. தனக்கோ அல்லது பால் குடிக்கின்ற குழந்தைக்கோ இடையூறு ஏற்படும் பெண்மணி.

6. மாதவிலக்குடைய, பேறுகாலத் தொடக்குடைய பெண்கள்.

7. நோன்பு பிடிக்க இயலாத வயது முதியவர். (நோன்பு பிடிக்காததிற்கு பிதியா கொடுப்பது கடமை)

8. சுன்னத்தான நோன்பு நோற்பவனுக்கு காரணமின்றி நோன்பை விடுவது ஆகும். ஆனால் மற்றொரு நாள் அதை களா செய்வது கடமையாகும்.

9. பகைவருடன் போர் புரிபவன்.

கழா செய்வதை தீவரப்படுத்துவது சுன்னத்தாகும். பிற்படுத்தினாலும் ஆகும். தொடர்ந்தோ விட்டுவிட்டோ களா செய்யலாம்.

அடுத்த ரமலான் மாதம் வரும் வரை களாவை பிற்படுத்தினால் அதாவை முற்படுத்துவான். களாவை பிற்படுத்தியதால் பித்யா கொடுப்பது கடமையில்லை.

இஃதிகாஃப்:

ஜமாஅத்தாக தொழுகை நிறைவேற்றப்படுகின்ற பள்ளியில் அதற்குரிய நிய்யத்துடன் தங்குவதுதான் இஃதிகாஃப் எனப்படும்.

வகைகள்:

வாஜிபு: நேர்ச்சை செய்யப்பட்ட இஃதிகாப்.

கண்டிப்பான சுன்னத்து: ரமலான் மாத கடைசி பத்து நாட்களிலும் இஃதிகாப் இருப்பது.

சுன்னத்து: மேற்கூறப்பட்ட இரண்டு வகைகளையும் தவிர உள்ள இஃதிகாஃப். சிறிது நேரம் பள்ளியில் அதற்குரிய நிய்யத்துடன் தங்கினாலும் இஃதிகாஃப் ஏற்படும்.

பெண்கள் தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட அறையில் இஃதிகாப் இருப்பார்கள். நேர்ச்சை இஃதிகாப்பிற்கு மட்டும் நோன்பு நோற்பது கடமையாகும்.

இஃதிகாப்பை வீணாக்கும் காரியங்கள்:

1. காரணமின்றி பள்ளியை விட்டு வெளியாகுவது.

2. மாதவிடாய், பேறுகாலத் தொடக்கு ஏற்படுவது.

3. உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, இச்சையுடன் தொடுவது.

பள்ளியை விட்டும் வெளியேறுவதற்குரிய காரணங்கள்:

1. மலம், ஜலம், குளிப்பு போன்ற இயற்கையான காரணங்கள்(தேவையான நேரத்திற்கு மட்டும் தான் வெளியில் தங்க வேண்டும்.)

2.ஜும்ஆ போன்ற மார்க்க ரீதியான காரணங்கள்.

3. அந்த பள்ளியில் தங்கினால் தன்மீது அல்லது தன் பொருளின் மீது பயம் ஏற்படுவது.
பள்ளி இடிந்தாலும் உடனடியாக வேறு பள்ளிக்கு போகின்ற நிபந்தனையின் பேரில் வெளியாகலாம்.

இஃதிகாபின் மக்ரூஹ்கள்:

1. வியாபாரத்திற்காக பள்ளியில் வியாபார உடன்படிக்கை செய்வது.

2. வியாபாரப் பொருட்களை பள்ளியில் கொண்டு வருவது.

3. வாய்மூடி இருப்பது.

இஃதிகாபின் சுன்னத்துக்கள்:

1. நல்ல விசயத்தை பேசுவது.

2. இஃதிகாபிற்கு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது(மக்காவில் தங்குபவர்களுக்கு மஸ்ஜிதில் ஹராம், மதினாவில் தங்குபவர்களுக்கு மஸ்ஜிதுந் நபவி, பைத்துல் முகத்தஸில் அக்ஸா பள்ளி மற்றவர்களுக்கு ஜும்ஆ பள்ளி)

3. குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது, பெருமானார் மீது ஸலவாத்து ஓதுவது. மார்க்கப் புத்தகங்களை படிப்பது.

ஸதகத்துல் பித்ர்:

ஒரு மஸ்லிம் பெருநாளில் தனது பொருளிலிருந்து தேவையானவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட சில குறைகளை நீக்குவதற்காக கொடுப்பதுதான் பித்ர் ஸதகா எனப்படும்.

பின்வரும் நிபந்தனையுள்ளவர்கள் மீது ஸதகத்துல் பித்ர் கடமையாகும்.

1. முஸ்லிமாக இருப்பது.

2.சுதந்திர புருஷனாக இருப்பது.

3. தனது கடன் தனது தேவைகள், தனது தேவைகளை விட்டும் எஞ்சிய பொருளுக்கு சொந்தக்காரனாக இருப்பது.

தேவைகள்:

1. வீடு 2. வீட்டுப் பொருள்கள் 3. உடைகள் 3. வாகனங்கள் 4. உழைப்பதற்குரிய சாதனங்கள்.

பெருநாள் காலையில் பஜ்ரு உதயமாகும்போது சொந்தக்காரனாக இருப்பதை நிபந்தனையிடப்படும். பருவமெய்திய அறிவுள்ளவனாக இருப்பது நிபந்தனையல்ல. பைத்தியக்காரன், சிறுவன் ஆகியோரின் பொருட்களிலிருந்து ஸதக்கத்துல் பித்ரு கொடுக்கப்படும்.

கடமையாகும் நேரம்:

பஜ்ரு உதயமாகும் போது ஸதக்கத்துல் பித்ர் கடமையாகும். அதற்கு முன் மரணித்தவர் மீதும், ஏழையானவர் மீதும் கடமையாகாது.

பஜ்ருக்குப் பின் பிறந்தவன், இஸ்லாம் ஆனவன், செல்வந்தராக ஆனவன் மீதும் ஸதக்கத்துல் பித்ர் கடமையாகாது.

ஸதக்கத்துல் பித்ரை முந்தியோ பிந்தியோ நிறைவேற்றுவது கடமையாகும். ஆனால் பள்ளிக்குப் போகும் முன் ஸதக்கத்துல் பித்ர் கொடுப்பது சுன்னத்தாகும். ரமலானில் மற்ற நாட்களில் கொடுப்பது ஆகும். ஆனால் பெருநாளைக்கு ஏழைகள் தங்களுக்கு உணவு, உடை போன்ற தேவையான பொருட்களை தயாரிப்பதற்காக முன்னமே கொடுப்பது சிறப்பாகும்.

பெருநாள் தொழுகையை விட்டும் ஸதக்கத்துல் பித்றை காரணமின்றி பிற்படுத்துவது மக்ரூஹ் ஆகும்.

ஸதக்கத்துல் பித்ரு யாருக்காக கொடுக்க வேண்டும்?:

1. தனக்காகவும்

2. தனது ஏழ்மையான பருவமடையாத தனது பிள்ளைகளுக்கும் கொடுப்பது கடமையாகும்.

பெரிய பிள்ளைகள் ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்காக கொடுப்பது கடமையில்லை.

சிறிய பிள்ளைகள் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் கடமையில்லை.

கொடுக்கும் அளவு:

ஒருவருக்கு 1 கிலோ 600 கிராம் அரிசி அல்லது கோதுமை அல்லது கிரயம் கொடுப்பது கடமை. கிரயம் கொடுப்பது ஏழைகளுக்கு பயனளிப்பதால் அதுவே சிறப்பாகும்.

ஒருவருக்குரிய ஸதகாவை பல ஏழைகளுக்கு கொடுக்கலாம். பலபேருக்குரிய ஸதகாவை ஒரு ஏழைக்கும் கொடுக்கலாம்.

இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாமா?

இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாம்

கேள்வி: இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாம் என அறிவிக்கக் கூடிய ஹதீஸ்களைக் கூறுக:

பதில்: 'அல்லாஹ்வின் அருமைத் தூதரே! எனது தாயார் திடீரென இறந்து விட்டார். அவருக்குப் பேச வாய்ப்பிருந்தால் அவர் தர்மங்கள் செய்திருக்க கூடுமென எண்ணுகிறேன். அவருக்காக நான் தான தருமங்கள் செய்யலாமா?' என ஒருவர் கேட்க, 'ஆம்! உம் தாயாருக்காக நீர் தர்மம் செய்வீராக! என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுறுத்தார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.   நூல்: புஹாரி.

ஸஃது இப்னு உபாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம். 'நாயகமே! என் தாய் இறந்து விட்டார். அவர் மீது நேர்ச்சை இருக்கிறது. (அதனை நான் நிறைவேற்றலாமா? என வினா தொடுத்தபோது அதனை அவருக்காக நீர் நிறைவேற்றும்' என பதிலுரைத்தனர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.   நூல்: புஹாரி.

ஸஃது இப்னு எபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் அவர் ஊரிலில்லாதபோது மௌத்தாகி விட்டார். பின்னர் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'யாரஸூலல்லாஹ் நான் ஊரில் இல்லாத போது எனது தாயார் இறந்து விட்டார்கள். அவருக்காக நான் தான தர்மங்கள் செய்யலாமா? அது அவருக்கு பலனளிக்குமா?' எனக் கேட்க, 'ஆம்!' என்றனர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். மிஃராப் என்ற எனது தோப்பை என் தாயாருக்காக நாயகமே! தங்களை சாட்சியாக வைத்து தானம் செய்கின்றேன்' என்றார்கள் ஸஃது இப்னு உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.   நூல்: புஹாரி.

நன்றி: வஸீலா 1-3-1987.

Oduku Fatwa-ஒடுக்கு பத்வா.

ODUKU  FATWA.(Esale Tawab)

By:- Mahlrathul Qadiriya Arabic College, Kayalpatnam.

ஒடுக்கு பத்வா.

எழுதியவர்: மௌலானா மௌலவி எம்.எஸ். அப்துல் காதிர் (பாக்கவி)-சதர்முதர்ரிஸ், மஹ்லறா.

வெளியீடு: மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி, காயல்பட்டணம்.

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆலிம் உலமாக்களும், அவுலியாக்களும், பேணுதல் மிக்க வரஇய்யீன்களும் நிறைந்த நமதூரிலும் மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதியகளிலும் மூதாதையர்களான ஆபாக்கள் காலமுதல் தொன்று தொட்டு பல நூற்றாண்டு காலமாக ஜனாஸாவை அடக்குவதற்கு முன்பாக ஏழை, எளிவர்களுக்கு தானதருமங்கள் செய்வதையும் ஒடுக்கு என்ற பெயரால் ரொட்டி, பழம், உப்பு, பணம் முதலிய தருமங்கள் ஈவதையும், மூன்றாம் கத்தம், நாற்பதாம் கத்தம் முதலியன ஓதி மையித்துகளுக்கு மேற்படி தவாபுகளை சேர்த்து வைப்பதையும், யாஸீன், பாத்திஹா முதலியன ஓதுவதையும் பற்றி நமது காயல்மாநகரிலுள்ள சில ஜனங்கள் ஆகாது, கூடாது என்று விலக்குவதாகக் கேள்விப்படுகிறோம். இவ்வளவு காலமாக நடைபெற்ற இந்தக் காரியங்கள் ஆகுமானவையா? ஆகாதவையா? மார்க்க சம்பந்தமான ஆதாரங்களுடன் இவை பற்றிய விபரத்தை அருள் கூர்ந்து விளக்கித் தர வேண்டுகிறோம்.

இதற்கு பகரமாக அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

 காயல்பட்டணம்                                        (ஹாஜி) எம்கே.டி. முஹம்மது யாஸீன்
        1-7-67                                                                    ஏ.கே. முஹம்மது மீராசாகிபு

விடை

நஹ்மதுஹு நுஸல்லீ அலா றஸூலிஹில் கரீம்.

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் கேட்டிருந்த விஷயங்களைப் பற்றி மற்றும் சில அன்பர்களும் வினவிக் கேட்டுள்ளனர்.

நன்மையான காரியங்களையே நாம் செய்ய வேண்டியதும், நன்மையின் பேரிலேயே உதவியாக இருப்பதும், நன்மையைக் கொண்டே ஏவுதல் செய்து தீமையை விட்டும் விலக்குதல் செய்தலும் நமது கடமையாகும்.

எனவே,தாங்கள் கோரி இருக்கக்கூடிய சன்மார்க்க சம்பந்தமான விஷயங்களைப் பற்றி விரிவான விளக்கம் தருகிறோம். நன்மையின் அடிப்படையிலேயே, சித்த சுத்தியுடன் கூடிய(இக்லாஸ்) அடிப்படையிலேயே, நாமும் நீங்களும் மற்றும் நம் சகோதர முஸ்லிம்களும் ஸாலிஹான நல் அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ் நல்லுதவி செய்வானாக. ஆமீன்.

தென்னகம் முழுவதிலும் ஏனைய பாகங்களிலும் குறிப்பாக நம் காயல்மாநகரத்திலும் தொன்றுதொட்டு பலநூறு ஆண்டுகாலமாய் திறமை வாய்ந்த மிகமிக நம்பிக்கைக்குரிய உலமாப் பெருமக்களுக்கு மத்தியிலும் அவுலியாக்களான மாமேதைகள் மெஞ்ஞானிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து நடந்து வருகின்ற ஒடுக்கு என்று நம் வழக்கச் கொல்லில் செய்யப்படுகின்ற –மய்யித்தை அடக்குமுன், ஏழை எளியவர்களுக்கு ரொட்டி, பழம், காச போன்றவைகளை தரும்(ஸதகா) செய்து அவ்வான்மா சாந்தியடையச் செய்யும் ஈஸால் தவாபினை சார்ந்த நல்லதேர் அமலையும், இற்த 40 நாட்களுக்குள் ஏதோ சில குறிப்பாக 3-ம் நாள், 40-ம் நாள்களில் குர்ஆன் ஷரீபையோ அல்லது அதற்கு இருதயமாக அமைந்திருக்கும் யாஸீன் ஸூராவையோ ஓதி கத்தம் செய்து உறவினர்களுக்கும் , ஏழை எளியவர்களுக்கும் உணவளித்து அவ்வான்மா சாந்திக்காக துஆ செய்துவரும் ஈஸால் தவாபை சார்ந்த நல்லதேர் அமலையும் சமீப காலமாக நம் காயல்மாநகரவாசிகளில் ஓர் சிலரும் ஒன்றிரண்டு உலமாக்களும்கூட அவ்வமல்களை மக்ரூஹ் (மார்க்கத்தில் விரும்பத்தகாதது) என்றும், பித்அத்தேமதுதுமூமா (இஸ்லாமிய அமலில் புதிதாய் திணிக்கப்பட்ட இகழுக்குரிய தீய அமல்) என்றும், பித்அத் கபீஹா (வெறுக்கத்த தகுந்த புதிதாய் புகுத்தப்பட்ட துற் செயல்) என்றும் கூறியும் அவ்வழகிய நல்அமலை தடுக்கவும் மற்பட்டு வருகின்றார்கள் எனவும், ஒரு சில பகுதிகளில் தடுத்தும் விட்டதாகவும் கேள்விப்படுகிறோம்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஆகுமென்ற உத்திரவின் கீழ் கையாளப்படுகின்ற நற்செயலை, 'மகமூஹ்', 'பித்அத்' என்று கூறுவதும், தடுக்க முற்படுவதும், ஒரு மறைந்த ஸுன்னத்தை ஹயாத்தாக்குவதற்குப் பதிலாக ஹயாத்தாக இருப்பதையும் மௌத்தாக்குவதற்கு ஒப்பாகும். மார்க்க அனுஷ்டானங்களனைத்தையும் வகுத்தளித்த உலக மாமேதை உத்தமர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு மாறு செய்வதாகும் என்ற உண்மையை குறிப்பிட்ட ஆலிம்களுக்கு எடுத்துக் கூறியும் பலனளிக்காது போகவே அவ்வுண்மையை பொதுமக்களுக்கு மத்தியில் பகிரங்கமாய் எடுத்துக் கூறி ஓர் ஸுன்னத்தை அழித்தொழிக்கும் பாவச் செயலுக்குள்ளாகுவதை விட்டும் தடுக்கவேண்டிய கடமையினை உணர்ந்து இந்த உண்மையை தக்க ஆதாரத்துடன் வெளியாக்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் மார்க்க சம்பந்தமான சகல நற்கிரியைகளிலும் உண்மைகளை உணர்ந்து செயல்பட்டு தக்க தவாபினை தனியோனிடம் பெற்று பெரும் மகிழ்வடைவீர்களாக.

அபுஸயீத் ஸுலைமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற இமாம் மேதை, தங்களின் 'ஷரஹ் பர்ஸகீ' என்ற கிரந்தத்தில், உபய்யிப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி அவர்கள் கீழ்காணும் ஹதீதை வெளிப்படுத்துவதியதாக கூறுகிறார்கள்.

நாயகத்திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:- 'மௌத்தாகிறது திடக்கிடச் செய்யும் சம்பவமாகும். மய்யித்தை நல்லடக்கம் செய்வதற்குமுன் அவ்வான்மா சாந்தியடைய தரும் செய்து தவாபை சேர்த்து வையுங்கள். குர்ஆன் ஷரீபிலிருந்து இயன்றமட்டில் ஓதியும் அம்மய்யித்திற்கு அதன் தவாபை சேர்த்து வையுங்கள்' என்ற இந்த ஹதீதினை எழுதியபின் அம்மேதை இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் தீர்ப்பை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்கள்.

'இந்த ஹதீது  தௌ;ளத்தெளிவாக காட்டுகிறது, நிச்சயமாக மய்யித்தை நல்லடக்கம் செய்யும்முன் அவ்வான்ம சாந்திக்காக தரும் கொடுப்பது ஸுன்னத்தாகும். குர்ஆன் ஷரீபையும் அவ்வான்மாவிற்காக ஓதி முடிக்கப்பட்டால் அதுவும் ஆகுமான நல்ல அமல் என்பதுடன் அதன் பொருட்டால் அவ்வான்மா ஈடேற்றம் பெறுவதை நல்லாதரவு வைக்கப்படுகிறது. நம் முன்னோர்களும் கூட இந்த நற்கிரிகையை தொடர்ந்து செய்து வந்தே இருக்கின்றார்கள், என்றாலும் ஜனாஸாவைப் பின் துயர்ந்து எஹுதியர்களைப்போல் உண்ணும் உணவைக் கொண்டு செல்வதில்லை என்றும் எழுதி இருக்கிறார்கள்'.

எஹூதியர்கள் செய்யக்கூடியது யாதெனில்:-

அதன் விளக்கத்தை மேற்படி கிதாப் ஷர்பர்ஸஹ் உடைய விரிவுரையாளரான காஜி, முப்தி, செய்யிது முஹம்மது அப்துல் கப்பார் காதிரி என்ற இமாம் தங்களின், 'தஸரீஹுல் அவ்தக்-பி-தாஜுமதி ஷரஹில்பர்ஜக்' என்னும் விரிவுரை கிரந்த்தில் கூறுகிறார்கள். 'ஸஹாபாப் பெருமக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்களளான இறைநேசச் செல்வர்கள் அனைவரும் மய்யித்தை நல்லடக்கம் செய்வதற்கு முன் தர்மம் கொடுத்து அம்மய்யித்தின்பால் தவாபை சேர்த்து வைக்கும் நற்பழக்கத்திலேயே இருந்து வந்திருக்கிறார்கள். எஹூதியர்களின் வழமையாதெனில், ஜனாஸாவுடன் உணவுகளை மய்யவாடிக்குக் கொண்டு சென்று மய்யித்துக்குழியின் மேல் வீணாக தாங்கள் கொண்டு செல்லும் உணவுகளை யாருக்கும் பலனில்லாது போட்டுவிட்டு வரும் துற்பழக்கத்தை கையாண்டு வருவதாகும். இவ்வாறானா வீண் விரய வழக்கத்தை இன்றளவும் எஹுதிகளும் அவர்களைப் பின்பற்றிய வட இந்தியர்களில் சிலரின் வழமையும் இருந்து வருகிறது. வீணான, இஸ்ராபான இத்தகைய துற்செயலைத் தடுக்கும் நோக்கத்தில்தான் முஸன்னிபு இமாம் (ஆசிரியப் பெரியார்) அவர்க் எஹுதியர்களைப் போன்று உணவை வீண் விரயப்படுத்தலாகாது எனக் கூறினார்களே தவிர முஸ்லிம்களாகிய நாம் ஏழை எளியவர்களுக்குப் பங்கிடும் வழக்கத்தை கண்டிக்கவில்லை.

'ஈஸால்தவாப்' என்ற நல்ல எண்ணத்தில் உணவுப் பொருட்களை மய்யவாடியின் பக்கம் கொண்டு சென்று ஹக்குதாரிகளுக்கு, ஏழை எளியவர்களுக்கு, முஸாபிர்களுக்கு கொடுக்கப்படுகிறதென்றால், தற்போது நடைபெற்று வருவது போன்றுள்ள நற்செயலைத் தடுக்க இடமே இல்லை. இதே தீர்ப்பு 'பதாவா முல்த்தகத்' என்னும் கிரந்தத்திலும் காணக்கிடக்கிறது என்றும் அவ்விரிவுரையாளர் தெரிவிக்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட ஹதீதும், அதன் முழு விபரமும், ஆதாரமும் 'தஸ்ரஹுல் அவ்தக்-பி-தர்ஜுமதி ஷரஹில் பர்ஸக்' எனும் கிரந்தத்தில் ஒன்றாம் பாகத்தில் (தபனுக்கு) அடக்கத்திற்கு முன் கையாளப்படுவது சம்பந்தமான பாடத்தில் 123-ம் பக்கத்தில் தௌ;ளத்தெளிவாய் வந்திருக்கிறது.

பிக்ஹு கிரந்தங்களில், மௌத்து உடைய –நேரங்களில் நடைபெறும் செயல்களைத் தடை செய்யப்பட வேண்டுமெனக் கூறியிருப்பது, மார்க்கத்தில் அனுஷ்டான முறைகளில் அனுமதிக்க முடியாத வீணான துற்செயலை-ஈஸால் தவாபிற்காககொடுக்கப்படவிருக்கின்ற பொருள்களில், 'மார்க்கம் இன்னதென தெரியா பலதரப்பட்ட மக்களால் பல பல ஊர்களில் எஜூதியர்கள் கையாண்டது போன்று கையாளப்படுகின்ற விரும்பத்தகாத ஒருசில நடைமுறைகளை மட்டுமேயேன்றி அத்தருமத்தை தடுக்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதாக ஒரு வாசகமும் ஆதாரப்பூர்வமாய்க் காணக் கிடைக்கவில்லை.'

கபுரின் மீது ஆடு போன்றதை வைத்து சிலைகளுக்குப் பலியிடுவது போன்று பலியிடும் துற்செயலை 'கல்யூபி', 'ஹாஷியத்து புஜைரமீ' போன்ற கிரந்தங்களில் மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். அதுபோன்று கபுரின் அருகாமையாக வைத்து பலியிடும் துற்செயலை 'பைளுல் இலாஹி' எனும் கிரந்தத்தில் கண்டித்திருக்கிறார்கள். சிலைகளுக்கு முன்னால் ரொட்டி, பழம், கறிகளைப் படைத்து வீணாக்கி வரும் பண்பற்ற ஏனைய மதவாதிகளுக்கு ஒப்பான வீண் பழக்கத்தைத்தான் 'நிஹாயத்துல் அமல்' எனும் கிரந்தத்தில் கண்டித்திருக்கிறார்களே தவிர, நடைமுறையில் உள்ள 'ஒடுக்கு' எனும் ஸதகாவை ஏழை, எளியார்களுக்குப் பங்கீடு செய்யும் தான தர்மத்தைக் கண்டிக்கவில்லை என்பதை நன்கு உணர வேண்டும்.

ஜனாஸாவைத் தூக்கிச் சுமந்து செல்லும்போது உணவுப் பெட்டியையும் அத்துடன் சேர்ந்தாற்போல் இடைவிடாது குப்பார்களின் ஜனாஸாவிற்குமுன் தேங்காய், பழம், வெற்றிலை வகைகளைச் சுமந்து செல்வது போன்று சுமந்து சென்று மையவாடியில் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு ஆடு போன்றவைகளை பிரேதக் குழியருகாமையாகப் பலியிட்டு தாங்கள் தூக்கிச் சுமந்து வந்த சாமான்களோடு இந்த இறைச்சியையும் கலந்து மையத்திற்குப் படைத்து வரும்முறையைத்தான் கண்டிக்கத்தக்கது என 'மக்தல்' எனும் கிரந்த்தில் கூறப்பட்டிருக்கிறது.

மேற்கூறப்பட்டவைகளைப் போன்று அன்னிய மதத்தவரின் கிரிளைகளுக்கு ஒப்பாகும் வகையில் எவ்வித செயல்முறைகளும் நம் இஸ்லாமிய சமுதாயத்தில் இல்லாததை இருப்பதாகக் கருதி, நம் குறிக்கோளுக்கே ஊறு விளைவிக்கும் முறையில் கற்பசைன் செய்ய முனைவது விவேகமான செயலாகாது.

முன் கூறப்பட்ட ஹதீதில் கண்ட உத்திரவு ஸதகா தர்மம் கொடுக்கச் செய்யும் உத்திரவாகும்-ஏவலாகும். தடுக்கப்பட வேண்டியவை என்று புகஹாக்கள் கூறியிருப்பது அதன் மீது நடைபெறும் பயனற்ற துர் செயல்களைத்தான் குறிப்பதாகும். அவர்கள் இத்தருமத்தையே தடுக்கப்பட வேண்டுமென கூறினார்கள் என்று கருத்து வைத்தால் மேற்கூறப்பட்ட ஹதீதைப் போன்று எத்தனையோ பல ஹதீதுகளுக்கு முரணாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்வதாகிவிடும்.

மார்க்க சட்ட வரம்புகளான பிக்ஹ் ஞானமனைத்திற்கும் ஆதார மூலங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் ஹதீதிற்கு எதிராக ஒரு தீர்ப்பை வெளியாக்குவது பெரும் பாவத்தை, குற்றத்தைச் சார்ந்தது என (உஸூல்) மூல கிரந்தங்களில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வுலகத்தையே விட்டு மாறி மறு உலகத்திற்குள் புகுந்து தனித்துத் திணறி, திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் வேளையில், முன்கர்நகீர் அலைஹிஸ்ஸலாம் எனும் மலக்குகள் கேள்விக்கணைகளைத் தொடுத்த மாத்திரத்தில், பதறிப் பரிதவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், மனிதகோடிகளின்பால் இரக்கமுள்ள ரஹ்மானின் அன்பும், பரிவும் எங்கும் வியாபித்திருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டிஅடக்கத்திற்குமுன் தரும் செய்து அவ்வான்மாவின் அலங்கோல நிலையை, பதஷ்ட நிலையை அமைதியுறச் செய்யுங்கள் என்று உம்மத்துக்ளின்பால் மிக அக்கறையும், இரக்கமும் கொண்ட உண்மை நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியிருப்பது எவ்வளவு பொருத்தமாகவும், அவசியமும், அவசரமுமான நற் கருமமாகும் என்பதனை நாம சிந்தனை செய்ய கடமைப் பட்டிருக்கிறோம்.

இந்த குறிப்பிட்ட தருமத்திற்கு நம் காதயல்மாநகரத்தின் வழக்கச் சொல் 'ஒடுக்கு' என்பதும் எவ்வளவு பொருத்தமாய் அமைந்திருக்கிறது. கபுரின் அமளிகளை ஓரளவேனும் ஒடுக்கிஅ டக்கி அமைதியை ஏற்படுத்துகிறது, பதட்டமில்லாது ஒடுக்கத்தை உண்டாக்குவதாயிருக்கிறது என்பதால் அவ்வொடுக்கு என்ற வார்த்தையும் நல்லறிகுறியாய் அமைந்திருக்கிறது என்றுரைக்கலாம்.

இரக்கமுள்ள ஏகநாயன் எவ்வித இக்கட்டான வேளையில் தனது அருளால் ஒரு சின்னஞ்சிறு தருமத்தின் மூலம் மனித இனத்தவரி;ன் இப்பேரிடிக்கு அதனை ஈடு கொடுப்பதாக அமைத்திருக்கிறான் என்ற உண்மை தத்துவத்தைப் புரிந்து மிக மிக நன்றி செய்ய கடமைபட்டிருக்கிறோம் என்பதை மனதில் இருத்திக் கொள்வோமாக. அல்லாஹ்வும் ரஸூலும் நமக்கு அளித்திருக்கும் இத்தகைய நல்வாய்ப்பை நாம் உதாசீனம் செய்வதும், அதை உதறித்தள்ளிவிடுவதும் புத்திசாலித்தனமாகாது.

மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் குர்ஆன் ஷரீபு ஓதி கத்தம் செய்து உணவளித்து வரும் நல் அமலுக்கு ஆதாரம் வருமாறு:-

நிச்சயமாக, நயவஞ்சகர்கள் என நிந்திக்கப்படும் முனாபிக்குகளை 40 நாட்களுக்கு அவர்களின் கப்ரில் கடும் சோதனைகளுக்குள்ளாக்கப்படுகுpறது என்ற உறுதியான ஹதீது இருக்கின்ற காரணத்தால், நிச்சயமாக, மய்யித்தின் நன்மைக்காக, சாந்திக்காக அந்நாட்களில் உணவளிப்பதை 'முஸ்தஹப்பு, தவாபு கொடுக்கப்படும் நல் அமல் என்ற முடிவில் ஸஹாபா பெருமக்கள் நடத்திவந்தார்கள் எனற தௌ;ளத்தெளிவான ஆதாரத்தை 'பதாவாகுப்றா' எனும் கிரந்தத்தில் 2-ம் பாகத்தில், ஜனாஸாவின் பாடத்தில், 31-ம் பக்கத்தில் இமாம் இப்னுஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறிவிட்டு, இந்த ஹதீதிற்கு (மௌத்தான நேரத்திலிருந்து மய்யித்திற்காக ஸஹாபாக்கள் உணவளித்து வந்தார்கள் என்ற ஹதீதிற்கு) எவ்வித மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அதே பக்கத்தில் மேதை இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் விளக்குகிறார்கள்.

நம் ஷாபீயீ மதுஹபில் மிகப் பிரதான அங்கம் வகிக்கின்ற மேன்மையான ஷெய்கு என்று அழைக்கப்படுகின்ற, இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மய்யித்திற்காக ஸஹாபாக்கள் உணவளித்து வந்தர்கள் என்ற ஹதீதை, தங்களின் சிரந்தமான 'ஷரஹ் முஸ்லிமில்' ஊர்ஜிதம் செய்திருக்கின்றார்கள். மற்றொரு ஷெய்கு என்று அழைக்கப்படுகின்ற ராபிஃ இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மய்யித்திற்காக உணவளிக்கும் ஹதீது எவ்வித எதிர்ப்புமின்றி பிரபல்யமான மஷ்ஹூர் ஆன ஹதீது ஆகும் என்று கூறியிருக்கிற செய்தி மேற்கூறப்பட்ட பக்கத்தில் பகிரங்கமாய் காணக்கிடக்கிறது.

மேலும், மேதை இப்னுஹஜர் இமாம் ரஹிமஹுல்லாஹு அவர்கள் அதே மேற்கூறப்பட்ட தொடரில் 32-ம் பக்கத்தில் கூறியிருக்கிறார்கள்;- 'உணவளிக்கும் நற்கருமம் மய்யித்தை அடைவதாயிருக்கிறது. அதன் பலன் மய்யித்திற்கு மிகவும் உதவியளிப்பதாய் இருக்கிறது. மய்யித்திற்காக உணவளிப்பது ஸதகா எனும் தர்மத்தைச் சார்ந்த ஸுன்னத்தான கருமமாகும். இதில் உவ்வித எதிர்ப்புமின்றி இமாம்களின் (இஜ்மாஃ) ஏகோபித்த முடிவாயிருக்கிறது' என்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

நம் ஷாபி மத்ஹபில் மூலத்தூண்களாக இருக்கின்ற இமாம் நவவி, இமாம் ராபிஃ, இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹு இவர்களின் தீர்ப்பிற்கும், கருமத்திற்கும் எதிராக யாருடைய சொல்லுக்கும் மதிப்பில்லை என நம் மத்ஹபின் முடிவிருப்பதால், மய்யித்திற்கு குறித்த நாட்களில் இறந்ததிலிருந்தே உணவளிப்பது முஸ்தஹப்பு என்பது உறுதியாய்விட்டது.
மய்யித்திற்காக உணவளிப்பது ஸஹாபாப் பெருமக்களால் நடத்திக் காட்டப்பட்டிருப்பதுடன், ஷாரிஃ, ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்களே மய்யித்து வீட்டில் சாப்பிட அனுமதித்து வழி காட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கப்படுகறிது.

ஹதீது கிரந்தங்களில் உலன முஸ்லிம்களுள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் 'ஸிஹாஹு ஸித்தா' என்ற ஆறு ஹதீது மூலகிரந்தங்களில் அபூதாவூது எனும் கிரந்த்தில் ஆஸிமிப்னு குலைப் ரலியல்லாஹு அன்ஹீ என்ற ஸஹாபி ரிவாயத் செய்கிறார்கள்:-

'ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்களும், நாங்களும் ஓர் மய்யித்தை நல்லடக்கம் செய்துவிட்டுத் திரும்பும்போது அந்த மய்யித்து வீட்டார் எங்களை அழைத்து விருந்தளிக்கவே நாங்கள் எல்லோரும் சாப்பிடலானோம். எங்கள் நாயகம், சுத்த சத்திய உத்தம நபி ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் வாயில் உணவை வைத்தவாறு எங்களை நோக்கி கூறினார்கள், ' இந்த ஆடு உரியவரின் அனுமதியின்றி அறுக்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன் என கூறினார்கள். உண்மையில் விசாரணை செய்யும் போது, உரியவர் சம்மதம் தருவார் என்ற நம்பிக்கையில் சம்மதம் பெறாமலேயே அறுத்துச் சமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின் அவ்விறைச்சியை கைதிகளுக்குக் கொடுக்க உத்திரவு செய்தார்கள். நியதிப்படி அனுமதிபெற்று அவ்வாடு அறுக்கப்பட்டிருக்குமானால் முறைப்படி சாப்பிட்டிருப்பார்கள். அனுமதி பெறாத காரணத்தால்hதான் அவ்வுணவை காப்பிடவில்லை; என்ப துநன்கு தெளிவாகிறது. இந்த ஹதீதிலிருந்து மார்க்க பிக்ஹுச் சட்டம் வகுக்கப்படுகிறது, மய்யித்திற்காக உணவளிப்பது ஷாரிஃரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் முன்பு நடத்தப்பட்ட 'ஸுன்னத்' நல்வழி முறையாகும். இந்த ஹதீதை அறிய கிடைக்காமல் இப்னு ஹுமாம் போன்ற இமாம்கள், மய்யித் வீட்டில் உணவு தயாரிப்பது மக்ரூஹ் என்று கூறிவிட்டார்கள். இவர்களின் தீர்ப்பை, மேற்காணும் ஹதீது உடைத்துவிட்டது என பகிரங்கமாய், முல்லா அலிகாரி இமாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் கிரந்தமான 'மிர்காத்தில்' கூறியிருக்கிறார்கள்.

ஷாரிஃ ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் மய்யித்து வீட்டில் சாப்பிட்டிருக்கும் சம்பந்தமான மேற்கூறப்பட்ட முழு விளக்கமும் 'மிஷ்காத்துல் மஸாபீஹ்' கிரந்தத்தில் 'முஃஜிஸாத்' எனும் பாடத்தில் 544ம் பக்கத்தில் காணக்கிடக்கிறது.

மய்யித்து வீட்டில் நடப்பவற்றை தடுக்கப்படவேண்டுமென ஹதீதில் கூறப்பட்டிருப்பது, இஸ்லாத்திற்கு முன் (ஜாஹிலிய்யா) அறியாமையின் காலத்தில் நடந்துவந்த மூடப்பழக்கமான, மய்யித்து வீட்டில் ஒப்பாரி வைத்து அழுது ஓலமிட்டு, அதன் மூலம் வயிறு வளர்த்து வந்த கூட்டத்தை முஸ்லீம் மய்யித்து வீட்டிலும் அக்கூட்டத்தாரை அழைத்து ஒப்பாரி போடச் செய்து, அதற்கென அவர்களுக்கு உணவுகள் தயாரித்து உண்ணச் செய்துவந்த துர்பழக்கத்தைத்தான் மிகமிக வன்மையாகக் கண்டித்து ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

மேற்கூறப்பட்ட ஹதீதுகள், அந்த ஹதீதுகுளை ஆதாரமாய் அமைத்து பகீஹுகளான-நம் ஷாபி மத்ஹபில் மூலத்தூண்களாயிருக்கின்ற இமாம் நவவி, இமாம் ராபிஃ, இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் போன்றவர்களின் தீர்ப்பையும் இந்த ஹதீதிற்கும் இம்மேதைகளுக்கும் எதிராக மேற்சொன்ன இப்னுல் ஹுமாம் போன்றவர்கள் 'மக்ரூஹ்' என கூறிய தீர்ப்பையும், இவருடைய மக்ரூஹ் என்ற தீர்ப்பை ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் முன்பு சாப்பிட்ட ஹதீது ரத்து செய்துவிட்டது என முல்லா அலிகாரி இமாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதையும் ஆராயும்போது, திறமைமிக்கவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்று ஏற்றி போற்றிப் புகழப்படும் நம் மூதாதைய ஆபாக்களான உலமாக்களெல்லாம் அநேக கிரந்தங்களைப் பார்த்து உண்மைகளை உய்த்துணர்ந்து தெளிந்து அமல் செய்தும் பிறரைச் செய்யச் செய்தும் வந்திருக்கிறார்கள். இப்னு ஹுமாம் போன்றவர்களின் மகரூஹ் என்ற கருத்துக்கு சற்றும் மதிப்பளிக்காது மாமேதைகளான இப்னுஹஜர், இமாம் றாபிஃ, இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் போன்றவர்களின் (ஹதீதுகளின் ஆதார அடிப்படையில் அமைந்த) தீர்ப்புக்கு மதிப்பளித்து இதுகாறும் நடைமுறையிலிருக்கச் செய்திருக்கிறார்கள் என்ற முடிவிற்கு நாம் வந்து சேரவேண்டும்.

மேற்கண்ட ஒடுக்கு என்ற தருமமும் இறந்த மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் உணவளிக்கும் தருமமும் ஸுன்னத்தான நற்கருமம் என்பதை நரூபிக்க மேறகண்ட ஐந்து கிரந்தங்களைப் போன்று இன்னும் எத்தனையோ ஹதீது பிக்ஹு கரந்தங்களின் அதாரங்களையும் கூறுவதென்றால் விரிவடையும் என்பதை அஞ்கி அவ்வாதாரங்கள் காணக்கிடைக்கின்ற ஓர் சில கிரந்தங்களின் பெயர் நாமங்களை மட்டும் ஈண்டு எடுத்து கூறப்பட்டிருக்கிறது. அவைகள்: 'ஸுஹ்து, வஹ்ஹாபீன், மஜ்மயிஸ்யவாயித், ஸுலைமானுல் ஜமல், ஷரஹ் ஸுதூர், உம்ததுல்காரி, முஸ்லீம், புகாரி போன்ற உயர் கிரந்தங்களில் இவ்வாதாரங்கள் நிறைந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, மவுத்தின் போது அடக்கத்திற்கு முன், தொன்று தொட்டும், தற்போதும் நடைபெற்று வருவது போன்ற ஒடுக்கு என்ற பெயரில் நடத்திவரும் தருமத்தை மய்யித்தின் நன்மைக்காக கொடுத்தும், அவ்வான்மா சாந்தியடைச் செய்வது ஸுன்னத்தான, ரஸூல்கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்லியும் செய்தும் காட்டிய, அப்படியே அருமை ஸஹாபாக்கள் நடத்திக் காட்டிய, அவ்வண்ணமே இமாம்களால் ஏற்றுச் சம்மதித்துத் தீர்ப்பளித்தும் விட்ட, இதுகாறும் மார்க்க வரம்பில் அணுவளவும் வழுவாது ஒழுகி வந்துள்ள நம் நாட்டு உலமாக்களான மூதாதையர்களால் நடைமுறையில் கொண்டு வரப்படுகின்ற, ஸுன்னத்தான நல்லதோர் அமலாகும். மக்ரூஹ் அல்ல-பித்அத் அல்ல என்பது ஸுன்னத்து வல் ஜமாஅத் இமாம்களின் உலமாக்களின் முடிவாகும், தீர்ப்பாகும் என்பதை பகிரங்கமாய் பொதுமக்களுக்கு மத்தியில் ஆதாரப்பூர்வமாய் அறிவித்துக் கொள்கின்றோம்.

சிறப்புமிக்க ரப்புல் இஸ்ஸத், அஹ்கமுல் ஹாக்கிமீன் நம்மனைவரையும் ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்களின் அடிச்சுவட்டை விட்டும் அணுவளவும் நழுவாது பின்பற்றியொழுகி வர அருள்புரிவானாக. ஆமீன்.               வஸ்ஸலாம்.
 

இங்ஙனம்,

M.S. அப்துல்காதிர் (பாக்கவி)
(ஸத்ருல் முதர்ரிஸ் மஹ்லரத்துல் காதிரிய்யா)

மஹ்லறா, காயல்பட்டணம்