நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)-Fasting Laws(Shafi and Hanafi)

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)-Fasting Laws(Shafi and Hanafi)

By Sufi Manzil 0 Comment April 15, 2011

Print Friendly, PDF & Email

 நோன்பின் சட்டதிட்டங்கள் (ஷாபிஈ மத்ஹப்)

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் துப்புரவான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும்.

நோன்பின் பர்ளுகள்:

1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்க வேண்டும்.

நிய்யத்: 'நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ளி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா –  இந்த வருஷத்து ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன்' என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.

2. நோன்புடைய ஞாபகம் இருப்பததுடனே வேணும் என்றே எந்த பொருளும் உள்ளே சேராமல் பகல் முழுவதும் தடுத்துக் கொள்ள வேண்டும்.

நோன்பின் சுன்னத்துகள்:

1. ஸஹர் செய்வது (ஸஹருடைய நேரமாகிறது இரவுக்கு மேல் ஆரம்பமாகி சுப்ஹு வக்து வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் முடிகிறது)

2. பஜ்ரு உதயமாவதை பயப்படாமல் இருக்கும் காலமெல்லாம் ஸஹரை பிற்படுத்துவது.

3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் உடனடியாக நோன்பு திறப்பதின் மீது விரைந்து கொள்வது.

4. மூன்று பேரீத்தம்பழம் அல்லது மூன்று திராட்சை பழம் அல்லது மூன்று மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது.

5. நோன்பு திறந்தவுடன் 'அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வ அலைக்க தவக்கல்து வஅலா ரிஜ்கிக அப்தர்து, பஃதக்ப்பல் மின்னீ'- இறைவா! உனக்காக நோன்பு வைத்தேன். உன்னையே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய ரிஸ்கின் மீதே நோன்பு திறந்தேன். எனது நோன்பை நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று துஆ ஓதுவது.

6. மற்றவர்களுக்கும் நோன்பு திறக்க கொடுப்பது.

7. ஹைலு நிபாஸ், ஜனாபத் போன்றவற்றை விட்டும் சுத்தமாவதற்காக பஜ்ருக்கு முன்னால் குளிப்'பது.

8. பகல் நேரத்தில் ஆகாரத்தின் மீது ஆசை கொள்வதை விட்டும், வாசனைப் பொருட்களை நுகர்வதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது.

9. ரமலான் பிந்திய பத்தில் அதிகமாக ஸதகா கொடுப்பதும், தன் குடும்பத்தின் மீது விசாலமாக செலவு செய்வதும், சொந்தக்காரர்கள் அக்கம்பக்கத்தவர்கள் மீது உபகாரம் செய்வதும் சுன்னத்தாகும்.

10. குர்ஆனை அதிகமாக ஓதுவது.

11. அதிகமாக இபாதத்து செய்வது.

12. ரமலான் மாதம் பிந்திய பத்தில் இஃதிகாப் இருப்பது கண்டிப்பான சுன்னத்தாகும்.

நோன்பின் மக்ரூஹ்கள்:

1. ஹைலு, ஜனாபத் குளிப்பை பஜ்ரு உதயமாகும்வரை பிற்படுத்துவது.

2. ஆகாரப் பொருள்களை ருசி பார்ப்பது.

3. பகல் முழுவதும் வாய் மூடி இருப்பது.

4. பகல் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.

.5.உளு செய்யும்போது வாய், மூக்குக்கு தண்ணீரை அளவு கடந்து செலுத்துவது.

6. லுஹருக்குப் பின்னால் பல் துலக்குவது.

நோன்பை முறிக்கும் காரியங்கள்:

1. தான் நோன்பு என்று தெரிந்து கொண்டு உடல் உறவு கொள்வது.

2. வேண்டுமென்றே விந்தை வெளிப்படுத்துவது.

3. வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.

4. காரல் போன்றவை வாயின் எல்லைக்கு வந்தபின் விழுங்குவது.

5. நோன்பு என்ற உணர்வுடன் ஏதேனும் ஒரு வஸ்துவை உள்ளே செலுத்துவது.(வாயில் ஊறும் உமிழ்நீரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதால் நோன்பு முறியாது)

6. நோன்பு வைத்துக் கொண்டு நீரில் முங்கி குளிப்பதால் வாய், மூக்கு போன்ற ஓட்டைகளில் தண்ணீர் செல்லுபடி ஆகுவது.

7. ஹைலு, நிபாஸ், மதமாற்றம், பைத்தியம், பகல் முழுவதும் மயக்கம் போன்றவைகள் ஏற்படுவது.

நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள்:

1. பொய் சொல்வது

2. புறம் பேசுவது.

3. கோள் சொல்வது

4. இட்டுக் கட்டுவது.

5. பொய் சாட்சி சொல்வது.

6. பிறரை ஏசுவது.

நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளவர்கள்:

1. தங்கடமான வியாதியஸ்தர்கள்.

2. நீண்ட பிரயாணம் செய்யக் கூடியவர்கள்

3. தாகத்தால், பசியால் நாசத்தை பயந்தவர்கள்.

இந்த மூன்று நபர்களும் நோன்பை விடுவது கூடும். ஆனால் இவர்கள் ஒவ்வொரு இரவும் நோன்பை நிய்யத்து செய்து கொள்ள வேண்டும். மத்தியில் கஷ்டம் ஏற்பட்டால் நோன்பை திறந்து விடலாம்.

ஆனால் இவர்கள் திரும்ப களா செய்ய இயலாது என்றிருந்தால் ஒரு நோன்புக்கு ஒரு முத்து வீதம் அதாவது முக்கால் லிட்டர் அரிசி வீதம் பிதியா கொடுக்க வேண்டும். இவர்கள் நோன்பை களா செய்ய வேண்டாம்.

கர்ப்பிணியான பெண்கள் நோன்பு வைத்தால் வயிற்றி;ல் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதை பயந்தாலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண் நோன்பு வைத்தால் பால் சுரக்காது என பயந்தாலும் நோன்பை விடலாம். ஆனால் இவர்கள் விட்ட நோன்பை களா செய்வதுடன் ஒரு நோன்புக்கு ஒரு முத்து வீதம் பிதியாவும் கொடுக்க வேண்டும்.

ஜகாதுல் பித்ர் விபரம்:

பித்றா கடமையாவதற்கு நிபந்தனைகள்:

பெருநாளின் பகலிலும் அடுத்து வரும் இரவிலும் தனக்கும், தனது செலவின் கீழ் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டிய உணவு, உடை, குடியிருக்கும் இடம் போன்றவைகளையும், வேலைக்காரர்களுக்குரிய செலவு, கடன் இவைகளையும் கொடுத்து மீதமிருந்தால் பித்றா கொடுப்பது கடமையாகும். தாமதாமாகக் கொடுக்க வேண்டிய கடன் பித்றாவை தடை செய்யாது.

அளவு:

ஊரில் பெரும்பாலும் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருளிலிருந்து ஒவ்வொருவருக்கும் 4 முத்து வீதம் நமது நாட்டு அளவு படி 3 லிட்டர்கள் அல்லது 2 கிலோ 400 கிராம் கொடுப்பது கடமையாகும்.
ஷாபிஈ மத்ஹபில் உணவுப் பொருட்களைத்தான் கொடுக்க வேண்டும். அதன் விலையை கொடுத்தால் பித்றா நிறைவேறாது.தான் வசிக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கு பித்றா கொடுப்பது கடமை. வேற்றூரிலுள்ள ஏழைகளுக்கும் பித்றா கொடுக்கலாம்.

கொடுக்கும் நேரம்:

பெருநாள் தொழுகைக்கு முன்பு பித்றா கொடுப்பது சுன்னத்தாகும். பின் கொடுப்பது மக்ரூஹ் ஆகும். எனினும், சொந்தக்காரர்களையும், பக்கத்து வீட்டாரையும் எதிர்பார்த்து சூரியன் மறைவதற்குள்ளாக கொடுப்பது சுன்னத்தாகும்.

பெருநாள் அன்று சூரியன் மறையும் வரை பிற்படுத்துவது ஹறாமாகும். பித்றாவை ரமலான் முதல் பிறையிலிருந்தும் கொடுக்கலாம்.

 

நோன்பின் சட்டதிட்டங்கள் (ஹனபி மத்ஹப்):

நோன்பு விதியானவர்கள்:

1. முஸ்லிமாக இருத்தல்.

2. பருவமடைந்தவனாக இருத்தல்.

3. புத்தியுடையவனாக இருத்தல்.

4. இஸ்லாமிய நோன்பு கடமை என்பதை அறிந்தவனாக இருத்தல்.

நோன்பை நிறைவேற்றுவதற்கு விதியானவர்கள்:

1. ஊரில் தங்கியிருப்பவன்

2.உடல் நலம் பெற்றவன்.

3. மாதவிலக்கு, பேறுகால தொடக்கு ஆகியவைகளை விட்டும் சுத்தமான பெண்.

நோன்பு எப்போது நிறைவேறும்?

1. நிய்யத்து நிறiவேறும் நேரம் நிய்யத்து வைப்பது.(ரமலான் நோன்பு சுன்னத்தான நோன்பிற்குரிய நேரம் சூரியன் மறைந்தது முதல் நண்பகலுக்கு சற்று முன்னால் வரையாகும். ரமலான் நோன்பை களா செய்யும் போதும், கஃப்பாரா நேர்ச்சை நோன்பு பிடிக்கும்போதும் இரவில் நிய்யத்து செய்ய வேண்'டும்.)

2. பெண் மாதவிடாய், பேறுகாலத் தொடக்கு ஆகியவைகளை விட்டும் சுத்தமாக இருக்கும் நேரம்.

3. சாப்பாடு, குடிப்பு, உடலுறுவு போன்ற நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் நீங்கியிருக்கும் நேரம்.

நோன்பின் வகைகள்:

1.பர்ளு: ரமலான் மாத நோன்பாகும்.

2.வாஜிபு: வீணாக்கிய சுன்னத்தான நோன்பை களா செய்வது, நேர்ச்சை நோன்பு, கஃப்பாரா உடைய நோன்பு.( காரணமின்றி ரமலான் மாதத்தில் நாடியவனாக நோன்பு திறத்தல், நாடியவனாக ரமலான் மாத பகலில் உடலுறவு கொள்வது, மனைவியை மஹ்றமானவர்களுக்கு ஒப்பிட்டு காட்டுதல், சத்தியத்தை முறித்தல், இஹ்றாம் உடை உடுத்திய பின் தடுக்கப்பட்ட செயல்களை செய்தல், தவறாக கொலை செய்தல் போன்ற காரணங்களால் கஃபஃபாரா நோன்பு விதியாகும்.)

3.பிரதான சுன்னத்து(மஸ்னூன்): முஹர்ரம் 9,10 அல்லது 10,11 வது நாட்களின் நோன்புகள்.

4. பிரதானமில்லாத சுன்னத்து(மன்தூப்): ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் நோன்புகள், ஒவ்வொரு மாதமும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்களின் (அய்யாமுல் பீல்) நோன்புகள், ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன் இரண்டு நாட்களின் நோன்புகள், ஷவ்வால் மாதம் ஆறு நாட்களின் நோன்புகள், ஹாஜி அல்லாதவர்களுக்கு அரபா நோன்பு, தாவூது நபியின் நோன்பு (அதாவது ஒருநாள் நோன்பு நோற்று ஒருநாள் விட்டு நோன்பு நோற்றல். இந்த நோன்பு மிகச் சிறப்பானதாகும்.)

5. மக்ரூஹ்: முஹர்ரம் 10ம் நாள் மட்டும் நோன்பு நோற்றல், சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்றல், நோன்பு திறக்காமலேயே தொடர்ந்து நோன்பு நோற்றல்.

6. ஹராம்: நோன்பு பெருநாள்களின் நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள் நோன்பு, அய்யாமுத் தஷ்ரீக் 3 நாட்களின் நோன்பு (அதாவது துல்ஹஜ்ஜு பிறi 11,12,13 நாட்கள்)

நிய்யத்து வைத்தல்:

நோன்பு வைப்பதற்கு இதயத்திலிருந்து வரக்கூடிய உறுதியான நாட்டம் என்ற நி;ய்யத்து கடமையாகும். நிய்யத்து என்பது முறையாக பஜ்ருடைய நேரம் வருவதற்கு முன்னால் ஏற்பட வேண்டும். ஆனால் மூன்று வகையான நோன்புகளில் சூரியனின் உச்ச நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னால் வரை நிய்யத்து வைத்துக் கொள்ள அனுமதியுண்டு.

1. ரமலான் மாத்திலேயே ரமலான் நோன்பை நிறைவேற்றுவது.

2. நாள் குறிப்பிட்ட நேர்ச்சை நோன்பு

3. நஃபில் நோன்பு.

ரமலான் நோன்பை களா இல்லாமல் அதாவாக நிறைவேற்றும் போது நோன்பு வைக்கிறேன் என்று பொதுவான நிய்யத்தைக் கொண்டு நிறைவேறுவதும், நபில் நோன்பை நோற்கிறேன் என்ற நிய்யத்தும் கூடும். இதுபோலவே நாள்குறிப்பிட்ட நேர்ச்சை நோன்பிலும், நபில் நோன்பிலும் இவ்விரண்டு விதமாக நிய்யத்து செய்வதும் கூடும்.

ஆனால் நான்கு வகையான நோன்புகளிலே இன்ன நோன்பை நோற்கிறேன் என்று நோன்பை குறிப்பிடுவதும் அந்த நிய்யத்து பஜ்ரு நேரம் வருவதற்கு முன் செய்வதும் கட்டாயமாகும்.

அவை:

1. களாவான ரமலான் நோன்பு.

2. இடையிலே முறித்து விட்ட நபில் நோன்பு

3. குற்றப்பரிகாரமான (கஃபஃபாரா) நோன்பு.

4. நாள் குறிப்பிடாத நேர்ச்சை நோன்பு.

நோன்பை முறிக்காத விசயங்கள்:

1. மறதியாக சாப்பிட்டால், குடித்தால்.

2.மறதியாக உடலுறவு கொண்டால்.

3. தலையில் எண்ணெய் தேய்த்தால்.

4. கண்களுக்கு சுறுமா போட்டால்.

5.இரத்தம் எடுக்கப்பட்டால்.

6.ஒருவரைப் பற்றி புறம் பேசினால்.

7.நோன்பை விடாத நிலையில் நோன்'பை விடுவதை நாடினால்.

8.தானாகவே புழுதி, புகை, ஈ போன்றவை தொண்டைக்குள் புகுந்தால்.

9. முழுக்குள்ளவனாக இருந்தால் (நோன்பு நிறைNவுறும். ஆனால் பர்ளு தொழுகை விட்டதற்காக மக்ரூஹ் தஹ்ரீமாவாகும்)

10. ஆற்றில் மூழ்கி காதில் நீர் புகுந்தால்.

11. மூக்கில் சளி நுழைந்து நாடியவனாக அதை விழுங்கினால்.

12. வாந்தி மிகைத்து தானாகவே உட்சென்று விட்டால்(அது குறைவாகவோ அதிகமாகவோ இருந்தாலும் சரி)

13. வாந்தி எடுத்து அது வாய் நிரம்பாத நிலையில் தானாகவே உட்சென்றால்.

14. பற்களுக்கு மத்தியிலுள்ள உணவுப் பொருட்கள் மொச்சைக் கொட்டையை விட சிறியதாக இருந்து அதை விழுங்கினால்.

15. கடுகு போன்றதை வாயின் வெளிப்பாகத்தில் மென்று அதன் சுவை தொண்டையில் நுழையவில்லை என்றால்.

16. தோலிலோ அல்லது நரம்பிலோ ஊசி போடுவதால்.

17. தனது காதை ஒரு குச்சியால் குடைந்து அதில்  குச்சியை பலமுறை காதில் செலுத்தினால்.

களா செய்வதுடன் கஃபஃபாரா கடமையாகும் எப்போது?:

1. நோன்பாளி உணவை உண்டு அதனால் வயிற்றுப் பசி தீர்வதால்.

2. மார்க்க ரீதியான காரணமின்றி மருந்தை சாப்பிட்டால்.

3. நோன்பாளி தண்ணீரை அல்லது வேறு பானத்தை குடித்தால்

4. உடலுறவு கொள்வதால்.

5. வாயினுள் மழைநீர் நுழைந்து அதை விழுங்கினால்.

6. கோதுமை போன்றதை சாப்பிட்டால்.

7. சிறிது உப்பை சாப்பிட்டால்.

8. களிமண் திண்பது வழக்கமாக இல்லாமல் அதை சாப்பிட்டால்.

கஃப்பாராவுக்குரிய நிபந்தனைகள்:

1. ரமலான் நோன்பை அதாவாக நிறைNவுற்றும் போது குடித்தால், சாப்பிட்டால்.

2. நாடியவனாக சாப்பிட்டால், குடித்தால்

3. இரவு இன்னும் முடியவில்லையென்றோ மக்ரிபு நேரம் நுழைந்து விட்டது என்றோ எண்ணி சாப்பிட்டு அவன் பகலில்தான் சாப்பிட்டான், குடித்தான் என்பது தெளிவானால்.

4.சாப்பிட, குடிக்க நிர்பந்தமாக்கப்படவில்லையானால் கஃப்பாரா கடமையாகும்.

கஃப்பாராவின் விளக்கம்:

1. ஒரு அடிமையை உரிமைவிடுதல் (இதற்கு இயலவில்லையெனில்)

2. தொடர்ந்து 2 மாதங்கள் நோன்பு பிடித்தல், அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் இடையில் வந்தால் தொடர்ச்சி விட்டுவிடும். (இதுவும் முடியவில்லையெனில்)

3. ஊரின் உணவுப் பொருளில் நடுத்தரமான பொருளை 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

கஃப்பாராவின்றி களா கடமையாவது எப்போது?

1. பயணம், நோய், குழந்தை உண்டாகுதல், பால் கொடுத்தல், மாதவிடாய், பேறுகாலத் தொடக்கு, மயக்கம், பைத்தியம் இதுபோன்ற மார்க்கரீதியான காரணங்களில் ஒரு காரணத்தினால் பிடித்த நோன்பை விட்டால்.

2.வழமையாக சாப்பிடாத, வயிற்றுப் பசி அதனால் தீராத மருந்து, ரொட்டித் துண்டு, குழைத்த மாவு காகிதம் போன்ற பொருளை நோன்பாளி சாப்பிட்டால்.

3. கல், இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு போன்ற பொருளை நோன்பாளி விழுங்கினால்.

4. நோன்பாளியை சாப்பாடு, குடிப்பின் மீது நிர்ப்பந்தப்பட்டு சாப்பிட்டால், குடித்தால்.

5. நோன்பாளி சாப்பாடு, குடிப்பிற்கு அவசியமாக்கப்பட்டு சாப்பிட்டால், குடித்தால்.

6. இரவு இருக்கின்றது ,அல்லது சூரியன் அடைந்து விட்டது என நினைத்'து சாப்பிட்டபின் அது பகல் என்பது தெளிவானால்

7. வாய் அலம்புவதிலும், மூக்குக்குத் தண்ணீர் செலுத்துவதிலும் அளவுக்கதிகமாக செய்து தண்ணீர் அவன் வயிற்றுக்குள் சென்று விட்டால்.

8.வாந்தியை வரவழைத்து அது வாய் நிரம்ப இருந்தால்.

9. தொண்டையில் மழைநீர் அல்லது பனிக்கட்டி நுழைந்து அவன் நாடி அதை விழுங்கவில்லையானால்.

10 ரமலானுடைய அதாவாக இல்லாத நோன்பில் நோன்பை வீணாக்கினால்.

11. தான் நாடி புகையை தனது தொண்டையினுள் நுழைய வைத்தால்.

12. மொச்சை கொட்டையளவு பற்களுக்கு மத்தியிலுள்ள உணவு பொருளின் ஒரு பகுதியை விழுங்கினால்.

13. மறதியாக சாப்பிட்டபின் தெரிந்து சாப்பிட்;டால்.

14.இரவில் நிய்யத்து வைக்காமல் பகலில் நிய்யத்து வைத்தபின் சாப்பிட்டால்.

15. பயணியாக இருந்து தங்குவதை நாடி பின் சாப்பிட்டால்.

16. ஊரில் தங்குபவனாக இருந்து பின் பயணம் செய்து சாப்பிட்டால்.

17. நோன்பு பிடிக்கின்ற அல்லது விடுகின்ற எந்த நிய்யத்தும் இல்லாமல் பகல் முழுவதும் ஊண், குடிப்பை விட்டும் தன்னை தடுத்துக் கொண்டால்.

18. எண்ணெய் அல்லது தண்ணீர் இவற்றை காதில் ஊற்றினால்.

19. மூக்கினுள் மருந்தை ஊற்றினால்.

20.வயிற்றிலுள்ள காயத்திற்கு அல்லது மூளையிலுள்ள காயத்திற்கு மருந்து போட்டு அம்மருந்து உட்பகுதிக்குள் சென்றால் நோன்பை களா செய்வதும், நோன்பு வீணான நாளில் ரமலான் மாதத்தை சங்கை செய்வதற்காக மீதமுள்ள நேரத்தில் ஊண், குடிப்பை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வதும் கடமையாகும்.

நோன்பாளிக்கு மக்ரூஹான காரியங்கள்:

1. ஒரு பொருளை தேவையின்றி மெல்வதும், சுவைப்பதும்.

2. வாயில் எச்சிலை ஒன்றுகூட்டி பின் அதை விழுங்குவதும்.

3. இரத்தம் எடுத்தல் போன்ற பலஹீனத்திற்கு காரணமாக இருக்கின்ற ஒவ்வொரு காரியத்தினாலும் மக்ரூஹ் ஏற்படும்.

நோன்பாளிக்கு மக்ரூஹ் இல்லாத காரியங்கள்:

1. தாடி, மீசைக்கு எண்ணெய் இடுவது.

2. சுறுமா இடுவது.

3. குளிர்ச்சியாக குளிப்பது.

4.குளிர்ச்சிக்காக ஈரமான ஆடையால் சுற்றுவது.

5. ஒளுவின்றி வாய் அலம்புவது, நாசிக்குத் தண்ணீர் செலுத்துவது.

6.. பகலின் கடைசியில் பல்துலக்குவது.

நோன்பின் சுன்னத்துக்கள்:

1. ஸஹர் செய்வது.

2. பஜ்ரு உதயத்திற்கு சற்று முன்வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது.

3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் நோன்பு திறப்பதை தீவிரப்படுத்துவது.

4. பெருந்தொடக்கை விட்டும் நீங்க பஜ்ருக்கு முன் குளிப்பது.

5. பொய், புறம்பேசுதல், கோள் சொல்லுதல், ஏசுதல் ஆகிய தீயகுணங்களை விட்டும் தனது நாவை பாதுகாத்தல்.

6.குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது போன்ற நற்காரியங்களை கொண்டு ஈடுபடுவது.

7. கோபம் கொள்ளாமலும், வீணான காரியத்தில் ஈடுபடாமலும் இருப்பது.

8. ஆகுமானதாக இருப்பினும் மனோ இச்சைகளை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது.

நோன்பை விடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள்:

1. நோய் அதிகரிப்பதையோ, நோய் நிவாரணம் பெறும்  காலம் நீடிப்பதையோ பயப்படுகின்ற அல்லது நோன்பு நோயாளிக்கு இடையூறை சேர்க்கின்ற நோயாளி.

2. தொழுகை கஸ்ருடைய தூரத்திற்கு பயணம் செய்கின்ற பயணி.

3.ஆபத்தில் சேர்க்கும் கடுமையான தாகம் உள்ளவன், கடுமையான பசி உள்ளவன்.

4. நோன்பு தனக்கோ அல்லது தனது குழந்தைக்கோ இடையூறு ஏற்படும் கர்ப்பிணி.

5. தனக்கோ அல்லது பால் குடிக்கின்ற குழந்தைக்கோ இடையூறு ஏற்படும் பெண்மணி.

6. மாதவிலக்குடைய, பேறுகாலத் தொடக்குடைய பெண்கள்.

7. நோன்பு பிடிக்க இயலாத வயது முதியவர். (நோன்பு பிடிக்காததிற்கு பிதியா கொடுப்பது கடமை)

8. சுன்னத்தான நோன்பு நோற்பவனுக்கு காரணமின்றி நோன்பை விடுவது ஆகும். ஆனால் மற்றொரு நாள் அதை களா செய்வது கடமையாகும்.

9. பகைவருடன் போர் புரிபவன்.

கழா செய்வதை தீவரப்படுத்துவது சுன்னத்தாகும். பிற்படுத்தினாலும் ஆகும். தொடர்ந்தோ விட்டுவிட்டோ களா செய்யலாம்.

அடுத்த ரமலான் மாதம் வரும் வரை களாவை பிற்படுத்தினால் அதாவை முற்படுத்துவான். களாவை பிற்படுத்தியதால் பித்யா கொடுப்பது கடமையில்லை.

இஃதிகாஃப்:

ஜமாஅத்தாக தொழுகை நிறைவேற்றப்படுகின்ற பள்ளியில் அதற்குரிய நிய்யத்துடன் தங்குவதுதான் இஃதிகாஃப் எனப்படும்.

வகைகள்:

வாஜிபு: நேர்ச்சை செய்யப்பட்ட இஃதிகாப்.

கண்டிப்பான சுன்னத்து: ரமலான் மாத கடைசி பத்து நாட்களிலும் இஃதிகாப் இருப்பது.

சுன்னத்து: மேற்கூறப்பட்ட இரண்டு வகைகளையும் தவிர உள்ள இஃதிகாஃப். சிறிது நேரம் பள்ளியில் அதற்குரிய நிய்யத்துடன் தங்கினாலும் இஃதிகாஃப் ஏற்படும்.

பெண்கள் தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட அறையில் இஃதிகாப் இருப்பார்கள். நேர்ச்சை இஃதிகாப்பிற்கு மட்டும் நோன்பு நோற்பது கடமையாகும்.

இஃதிகாப்பை வீணாக்கும் காரியங்கள்:

1. காரணமின்றி பள்ளியை விட்டு வெளியாகுவது.

2. மாதவிடாய், பேறுகாலத் தொடக்கு ஏற்படுவது.

3. உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, இச்சையுடன் தொடுவது.

பள்ளியை விட்டும் வெளியேறுவதற்குரிய காரணங்கள்:

1. மலம், ஜலம், குளிப்பு போன்ற இயற்கையான காரணங்கள்(தேவையான நேரத்திற்கு மட்டும் தான் வெளியில் தங்க வேண்டும்.)

2.ஜும்ஆ போன்ற மார்க்க ரீதியான காரணங்கள்.

3. அந்த பள்ளியில் தங்கினால் தன்மீது அல்லது தன் பொருளின் மீது பயம் ஏற்படுவது.
பள்ளி இடிந்தாலும் உடனடியாக வேறு பள்ளிக்கு போகின்ற நிபந்தனையின் பேரில் வெளியாகலாம்.

இஃதிகாபின் மக்ரூஹ்கள்:

1. வியாபாரத்திற்காக பள்ளியில் வியாபார உடன்படிக்கை செய்வது.

2. வியாபாரப் பொருட்களை பள்ளியில் கொண்டு வருவது.

3. வாய்மூடி இருப்பது.

இஃதிகாபின் சுன்னத்துக்கள்:

1. நல்ல விசயத்தை பேசுவது.

2. இஃதிகாபிற்கு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது(மக்காவில் தங்குபவர்களுக்கு மஸ்ஜிதில் ஹராம், மதினாவில் தங்குபவர்களுக்கு மஸ்ஜிதுந் நபவி, பைத்துல் முகத்தஸில் அக்ஸா பள்ளி மற்றவர்களுக்கு ஜும்ஆ பள்ளி)

3. குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது, பெருமானார் மீது ஸலவாத்து ஓதுவது. மார்க்கப் புத்தகங்களை படிப்பது.

ஸதகத்துல் பித்ர்:

ஒரு மஸ்லிம் பெருநாளில் தனது பொருளிலிருந்து தேவையானவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட சில குறைகளை நீக்குவதற்காக கொடுப்பதுதான் பித்ர் ஸதகா எனப்படும்.

பின்வரும் நிபந்தனையுள்ளவர்கள் மீது ஸதகத்துல் பித்ர் கடமையாகும்.

1. முஸ்லிமாக இருப்பது.

2.சுதந்திர புருஷனாக இருப்பது.

3. தனது கடன் தனது தேவைகள், தனது தேவைகளை விட்டும் எஞ்சிய பொருளுக்கு சொந்தக்காரனாக இருப்பது.

தேவைகள்:

1. வீடு 2. வீட்டுப் பொருள்கள் 3. உடைகள் 3. வாகனங்கள் 4. உழைப்பதற்குரிய சாதனங்கள்.

பெருநாள் காலையில் பஜ்ரு உதயமாகும்போது சொந்தக்காரனாக இருப்பதை நிபந்தனையிடப்படும். பருவமெய்திய அறிவுள்ளவனாக இருப்பது நிபந்தனையல்ல. பைத்தியக்காரன், சிறுவன் ஆகியோரின் பொருட்களிலிருந்து ஸதக்கத்துல் பித்ரு கொடுக்கப்படும்.

கடமையாகும் நேரம்:

பஜ்ரு உதயமாகும் போது ஸதக்கத்துல் பித்ர் கடமையாகும். அதற்கு முன் மரணித்தவர் மீதும், ஏழையானவர் மீதும் கடமையாகாது.

பஜ்ருக்குப் பின் பிறந்தவன், இஸ்லாம் ஆனவன், செல்வந்தராக ஆனவன் மீதும் ஸதக்கத்துல் பித்ர் கடமையாகாது.

ஸதக்கத்துல் பித்ரை முந்தியோ பிந்தியோ நிறைவேற்றுவது கடமையாகும். ஆனால் பள்ளிக்குப் போகும் முன் ஸதக்கத்துல் பித்ர் கொடுப்பது சுன்னத்தாகும். ரமலானில் மற்ற நாட்களில் கொடுப்பது ஆகும். ஆனால் பெருநாளைக்கு ஏழைகள் தங்களுக்கு உணவு, உடை போன்ற தேவையான பொருட்களை தயாரிப்பதற்காக முன்னமே கொடுப்பது சிறப்பாகும்.

பெருநாள் தொழுகையை விட்டும் ஸதக்கத்துல் பித்றை காரணமின்றி பிற்படுத்துவது மக்ரூஹ் ஆகும்.

ஸதக்கத்துல் பித்ரு யாருக்காக கொடுக்க வேண்டும்?:

1. தனக்காகவும்

2. தனது ஏழ்மையான பருவமடையாத தனது பிள்ளைகளுக்கும் கொடுப்பது கடமையாகும்.

பெரிய பிள்ளைகள் ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்காக கொடுப்பது கடமையில்லை.

சிறிய பிள்ளைகள் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் கடமையில்லை.

கொடுக்கும் அளவு:

ஒருவருக்கு 1 கிலோ 600 கிராம் அரிசி அல்லது கோதுமை அல்லது கிரயம் கொடுப்பது கடமை. கிரயம் கொடுப்பது ஏழைகளுக்கு பயனளிப்பதால் அதுவே சிறப்பாகும்.

ஒருவருக்குரிய ஸதகாவை பல ஏழைகளுக்கு கொடுக்கலாம். பலபேருக்குரிய ஸதகாவை ஒரு ஏழைக்கும் கொடுக்கலாம்.