Importance and Needness of Sheikh-Guru-முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?
By Sufi Manzil
முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?
மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி.
யா -அய்யு-ஹல்லதீன-ஆமனுத்தகுல்லாஹ்-வப்தகு-இலைஹில் வஸீலத…..
ஈமான் பொண்டவர்களே! அல்லாஹ்வை தக்வா-அஞ்சி நடங்கள், அவனளவில் வஸீலாவை-இடைப் பொருளை தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் ஜிஹாத்- போர் புரியுங்கள், நிச்சயம் நீங்கள் வெற்றி-முக்தி பெறுவீர்கள். -அல்குர்ஆன் 5-35.
மனிதன் வெற்றி பெறுவதற்கும், முக்தி அடைவதற்கும் மிக முக்கியமான நான்கு அம்சங்களை இவ்வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.
1. ஈமான் கொள்ளுதல்.
2.தக்வா செய்தல்
3.வஸீலா தேடுதல்.
4.அவன் பாதையில் போர் புரிதல்.
இந் நான்கில் மூன்றாவதான வஸீலாவைப் பற்றி இங்கு ஆராய்வோம்.
வஸீலா என்பதற்கு நல்ல கிரியைகளை முற்படுத்துவதும், நல்ல செயல்களை செம்மைபடுத்துவதும் என்பது பொதுவான கருத்து.
இறைவழி நடப்பவன் தனக்கென்று பூரணத்துவமடைந்த நேர்வழி காட்டுபவர்களில் ஒருவரை (முர்ஷிது-ஷெய்கை) தனது உற்ற நண்பராக எடுத்துக் கொள்ளுதல் என்பது குறிப்பிடத்தக்கதான கருத்து என்று மாமேதை மகான் மஹ்மூது தீபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
உண்மையில் இரண்டாம் கருத்துதான் இவ்விடம் வஸீலா என்பதற்கு தகும். ஏனெனில்,
இரண்டாவது அம்சமான தக்வா செய்வதென்பதில் நல்ல கிரிகைகளை முற்படுத்துவதும், நல்செயல்களை செம்மைபடுத்துவதும் அடங்கும்.
தக்வா என்றால் பாவமான காரியங்களை தவிர்த்து நடப்பதும், நல்ல காரியங்களை செய்வதும்தானே! அதையே மூன்றாவது கூறுவது பொருத்தமன்று.
ஷரீஅத். தரீகத், ஹகீகத், மஃரிபத்- சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகள் மூலம்தான் இறைவன் அளவில் சேர முடியும் என்பது மெய்ஞ்ஞானிகளின் ஏகோபித்த முடிவு.
எனவே இவ் வழி நடப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஷெய்கு-குருவின் கரம் பிடிப்பது இன்றியமையாத கடமை.
இதன் அடிப்படையில்தான் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் சொன்னதை நமக்கு கவி நயமாக மாமேதை அல்லாமா ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
'வ குல்த- மன்லா லஹு- ஷெய்குன்- ஃப இன்னி………………..'
'எவர்களுக்கு ஷெய்கு இல்லையோ அவர்களுக்கு நிச்சயம் நான் ஷெய்காக-முர்ஷிதாக இருக்கிறேன். அவன் கல்வத்தில்-தனிமையிலும் அவனது உற்ற நண்பனாக நான் இருக்கிறேன். என்னில் நின்றும் அவனுக்கு தொடர்பு உண்ட என்று (கௌது நாயகமே!) நீங்கள் கூறியுள்ளீர்கள். இப்படியே முஹ்யித்தீன் ஆண்டகையே எனக்கு ஆகுங்கள்'.
என்று பாடி தந்துள்ளார்கள்.
'யவ்ம –நத்உ-குல்ல உனாஸின்-பி இமாமிஹிம்- அன்று(கியாமத் hளில் நாம் ஒவ்வொரு மக்களையும் அவர்களது தலைவர்(களின் பெயர்)களைக் கொண்டு அழைப்போம்'(17-71) என்ற இறைவன் கூறியுள்ளான்.
கருத்து:- தரீகத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு அதாவது:- காதிரிய்யா தரீகாகாரர்களே! ஜிஷ்திய்யா தரீகாகாரர்களே! ஷாதுலிய்யா தரீகாகாரர்களே! என்று இப்படியே அழைப்பான் என்று சில விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு கருத்துக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இறைவன்பக்கம் போய் சேருவதற்கு இறைதூதர்கள் பக்கம் போகுவதற்கு ஷெய்குமார்கள்-முர்ஷிதுகள் அவசியம். உதாரணம்:- அனுமதி வழங்கப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு அவைகளின் கழுத்தில் அடையாள பட்டிகள் மாட்டியிருப்பது அவசியமாக இருப்பது போல், நமது கழுத்துக்களிலும் எந்த ஷெய்குமார்களின் பட்டியாவது கண்டிப்பாக மாட்டியிருப்பது அவசியம். ஏனெனில்,
நமது நப்ஸு- ஆத்மா நாய் போன்றது. சுதந்திரமாக விட்டு வைக்கலாகாது. அதன் கழுத்தில் பட்டிபோட்டு ஒரு ஷெய்கின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கச் செய்ய வேண்டும். கழுத்துப்பட்டியில் கொழுகப்பட்டிருக்கும் சங்கிலியின் முதல் கொழுக்குபட்டியிலும், மறுபக்கத்து கொழுக்கு எஜமானின் கரத்தில் இருப்பது போல், ஷெய்கின் கரம் நம் கழுத்திலும், ஷெய்கின் ஸில்ஸிலாவான சங்கிலி தொடர்பான மறுபுறம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஜ வ ஸல்லம் அவர்களின் கரத்திலும் இருக்க வேண்டும்.
நாம் இயங்குவது அந்நாயகம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான். நமது ஷெய்கு அதற்கு வஸீலாவாக இடைப் பொருளாக தொடர்பை உண்டாக்கி தருபவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையான எதார்த்தமான வஸீலாவாகும். இந்த வஸீலாவை தேடும்படியாகத்தான் மேற்கண்ட 5:35 வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.
மழை பொழியும் போது அதை நாம் பெறாவிட்டால் அதை வாங்கி வைத்திருக்கும் குளம் குட்டையை நாம் நாடுவது போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஜீவிய காலத்தில் அருள் மழை பொழியும் போது நாம் இல்லை என்றால் வாழையடி வாழையாக அந்த அருள் வெள்ளத்தை வாங்கி வந்திருக்கும் குளம் குட்டைகள் போன் ஷெய்குமார்களின் திருக்கரத்தை பிடித்தால்தானே வயல் போன்ற ஈமானுக்கு அவ்வருள் வெள்ளம் பாய்ந்து ஈமான் உருப்படும். இல்லையென்றால், ஈமான் கருகி சருகாகி விடும் அல்லவா? அல்லாஹ் அந்நிலையை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக!
இதை எங்களது குருநாதர் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் கிழுரிய்யா பைத்தில்,
'ழல்லமன்-ளன்ன-லஅல்லஹு-யபூஸு-பிநப்ஸிஹி
ழாஅ-உம்ரஹு-அகிஸ்-யாரப்பி-பில்-கிழ்றின்னபி'
(ஷெய்குமார்களின் துணையின்றி) தானாக ஜெயம் பெறலாம் என்று எவன் எண்ணினானோ அவன் தனது வயதை பாழ்படுத்திவிட்டான். கிழ்று நபியின் பொருட்டால் எனது இரட்சகனே! என்ழன இரட்சிப்பாயாக!
என்று அழகாக வலியுறுத்தி பாடியுள்ளார்கள். இன்னும் அவர்கள் அதே பைத்தில், ஸுஹ்பத்துஷ் ஷெய்கி-ஸஆததுன்-ஷெய்குவின் சகவாசம் சீதேவித்தனமாகும்., கூனூ-மஅஸ்ஸாதிகீன்-மெய் அன்பர்களுடன் நீங்கள் இருந்து வாருங்கள்(9-119) என்ற திருவசனத்தில் இறைவனின் கட்டளையும் இருக்கின்றது என்றும் பாடியுள்ளார்கள்.
உலுல் அஜ்மிகளில் ஒருவரான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் கூட மெஞ்ஞான கடலான கிழ்று நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று மெஞ்ஞான அருளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவன் இட்ட கட்டளையும், அவர்களுக்கு மத்தியில் நடந்த நீண்ட வரலாற்றையும் ஷெய்கு முர்ஷிதுகளின் முக்கியத்ததுவத்தையும், ஒழுக்கத்தையும் நமக்கு ஸுரத்துல் கஃபு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதையே அடிப்படையாக வைத்துதான் எங்கள் ஷெய்குநாயகம் கிழ்றியா பைத்தை இயற்றியுள்ளார்கள்.
'ஸுஹ்பத்தே-ஸாலிஹ் குதுனா-ஸாலிஹ் குனத்
ஸுஹ்பத்தே-தாலிஹ் குதுனா-தாலிஹ் குனத்'
நல்லவர்களின் சகவாசம் நல்லவர்களாக மாற்றி விடுகின்றது. கெட்டவர்களின் சகவாசம் கெட்டவர்களாக மாற்றி விடுகின்றது' என்றும்,
'யக்ஸமானா-ஸுஹ்பத்தே-பா அவ்லியா
பெஹ்தர்-அஸ்-சத்-ஸாலெயே-தாஅத்-பேரியா'
சற்று நேரம் அவ்லியாக்களுடன் சகவாசத்தில் இருப்பது நூறு ஆண்டுகள் முகஸ்துதியின்றி வழிப்படுவதைக் காண மிகச் சிறந்தது' என்றும் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடியுள்ளார்கள்.
'அஸ்ஸுஹ்கத்து-துஅத்திரு- சகவாசம் குணபாடு அளிக்கும்' என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியுள்ளார்கள்.
'பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்' என்ற தமிழ் முதுமொழியும் ஒன்று உண்டு.
ஆகவே இப்படிப்பட்ட ஷெய்குமார்களின் சகவாசம் மிகத் தேவை. முக்தி பெறுவதற்கு அவர்களின் திருக்கரம் பற்றிப் பிடித்து அவர்களின் தரீகத்தில் செல்லுவது மிக முக்கியமாகும். இவ்வழிதான் நபிமார்கள், சித்தீக்கீன்கள்,ஷுஹதாக்கள், சாலிஹுன்கள் சென்ற வழி. இதுதான் ஸிரத்தே முஸ்தகீம்-நேரான வழி. இவ் வழியைத்தான் தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும்'இஹ்தினஸ்ஸி ராதல்-முஸ்தகீம்-ஸிராதல்லதீன-அன்அம்த-அலைஹிம்-(இறiவா!) நீ நேரான வழியை எங்களுக்கு காட்டுவாயாக! (அவ்வழி) நீ உபகாரம் புரிந்தவர்களின் வழி' என்று ஓதி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டுமென்ற நியதியும் உண்டு.
'வத்தபிஃ-ஸபீல-மன்-அனாப-இலய்ய- என்னளவில் மீண்டவர்களின் பாதையை பின்பற்றுவீராக! என்ற(31-15) திருவசனமும், அல்லாஹ் அளவில் போய் சேர்ந்து அவனது திருக்காட்சியை கண்டு களித்து மீண்டவர்களான முர்ஷிது-ஷெய்குமார்களை நாம் கரம்பிடித்து பைஅத் தீட்சை பெற்று பின்பற்றியாக வேண்டுமென்று வலியுறுத்துகின்றது.
இதுமட்டுமன்று, நமது இக்கட்டான வேலையிலும் நம்மை காப்பாற்றுபவர்களும் அவர்கள்தான். எடுத்துக்காட்டாக,
நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிஸ்ரு நாட்ல் ஜுலைஹா அம்மையாரின் அறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வேளையில், 'கன்ஆன்' என்னும் சிற்றூரில் இருந்துக் கொண்டிருக்கும் யஃகூபு அலைஹிஸ்ஸலாம் அவர்களை(உதவிக்கு)அழைத்தார்கள். உடனே அவ்வறையில் காட்சிக் கொடுத்து ஜுலைஹா அம்மையாரின் மாய லீலையை விட்டும் காப்பாற்றினார்கள் என்பது திருமறை கற்பிக்கும் வரலாறு.
அல்லாமா இமாம் ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு மரண தருவாயில் அவர்களது ஷெய்கு குரு நஜ்முத்தீன் வலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆஜராகி ஈமானை காப்பாற்றினார்கள் என்பது உலகம் அறிந்த வரலாறு.
நம் உடம்பின் நரம்புகள் நம் ஹிருதயத்துடன் தொடர்பு கொண்டு இயங்குவது போல், உலகத்திற்கு ஹிருதயமாக-முக்கிய அங்கமாக மூலக்குருவாக இருந்து வரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு இக்குருமார்கள்தான் தொடர்பை ஏற்படுத்தி தருகிறார்கள். அதுபோழ்துதான் நாம் சரியாக இயங்க முடியும். நமது இலட்சியமும் நிறைவேறும்.
நகரங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்குகளுக்கு பவர் ஹவுஸில் இருந்து வயர் கம்பிகள் மூலம் மின்சக்தி வருவது போல் உலகத்திற்கு பவர்ஹவுஸாக இருந்து வரும் அவ்வுத்தம நபியின் அருள் இயக்க சக்தி வர வேண்டுமானால் வயர் கம்பிகள் போன்று அமைந்திருக்கும் ஷெய்குமார்களின் ஸில்ஸிலா-தொடர்பு இருக்க வேண்டும்.
சூரியக் கதிர்கள் துணியில் மேனியில் படுகின்றன. கரித்துவிடுவதில்லை. ஆனால் பூதக்கண்ணாடியை சூரியக் கதிர்களுக்கும் துணிக்கும் இடைப் பொருளாக வைத்தால் பூதக் கண்ணாடி கதிர்களை ஒன்று கூட்டி துணியை-மேனியை கரித்து விடும் இயக்கத்தை நாம் அறிவோம். இதைப்போல்,
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஸ வஸல்லம் அவர்களின் அருள் ஜோதி உலகத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜோதி நம் உள்ளத்தில் பட்டு குணப்பாடு அளிக்க வேண்டுமானால் அந்த அருள் ஜோதியை ஒன்று கூட்டிதரும் பூதக் கண்ணாடி போன்ற குருநாதர்களை நம் உள்ளத்திற்கும் பெருமானாரின் அருள் ஜோதிக்கும் இடைப்படுத்தினால் தான் உள்ளத்தில் 'இஷ்க்' எனும் குணப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதையும் இவண் உணர்க! பெருமானாரின் பேரொளியின்றி எவரும் இறைசன்னிதானம் பிரவேசிக்க முடியாது என்பது வெள்ளிடைமலை.
ஆகவே முக்தி அடைவதற்கும் இறையருள் வெறுவதற்கும் வஸீலாவான ஷெய்கு-முர்ஷிது ஒருவரை எடுத்துக் கொண்டு இறைவழி நடக்க வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் இவ்வழி நடந்து முக்தி பெற்றவர்களாக ஆகுவதற்கு நல்லுதவி புரிவானாக!