அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா?

அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா?

By Sufi Manzil 0 Comment May 5, 2010

Print Friendly, PDF & Email

 

அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா?

ஹதீஸ்:1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அத்தஹிய்யாத் இருப்பில் இருக்கும்போது இரு கைகளையும் இரு தொடைகளில் வைத்து பெரு விரலை அடுத்து இருக்கும் வலது கை விரலை துஆ ஓதிய நிலையில் உயர்த்தினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் அறிவிப்பாளர்-இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு.

ஹதீஸ்:2 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள், தஷஹ்ஹுது இருப்பில் அமரும்போது இடது கையை இடது முழங்காலிலும், வலது கையை வலது முழங்காலிலும் வைத்து 53 ஆக முடிச்சிட்டு வைத்தபடி ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் அறிவிப்பாளர்-இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு.

ஹதீஸ்:3 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள், தொழுகையில் கடைசியில் அமரும் பொழுது இடது கையை இடது முழங்காலிலும், வலது கையை வலது முழங்காலிலும் வைத்து ஆட்காட்டி விரலை உயர்த்தி நிறுத்தி வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஆதாரம்: தாரமி. அறிவிப்பாளர்-இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு.

ஹதீஸ்:4 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது நான் அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் இடது கையை இடது தொடையில் வைத்து இருந்தார்கள். வலது கையை வலது கையை வலது தொடையில் வைத்து இருந்தார்கள். அப்போது விரல்களை மடக்கி ஆட்காட்டி விரலை நீட்டி வைத்துக் கொண்டு 'இதயங்களை புரட்டிக் கொண்டிருப்பவனே! எனது இதயத்தை உன் மார்க்கத்தின் மீது நிலைப்படுத்தி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம்: திர்மிதி, பாகம்2 பக்கம் 119.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் குலைப் தனது தந்தை மற்றும் பாட்டன் ஷிஹாப் பின் மஜ்னூன் மூலம்.

ஹதீஸ்:5 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள், தஷஹ்ஹுது ஓதும் பொழுது தங்களின் இடது கையை இடது தொடை மீதும், வலது கையை வலது தொடை மீதும் வைத்து துஆ ஓதும் பொழுது ஆட்காட்டி விரலைக் கொண்டு சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பார்கள். அதனை அசைக்க மாட்டார்கள்.

ஆதாரம்: நஸாயீ 187/1, அபூதாவூது 142/1

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு.

ஹதீஸ்: 6 பின்பு தனது விரல்களை மடக்கி வளையமிட்டு, ஒரு விரலை உயர்த்தினார்கள். அப்போது பிரார்த்தித்தவர்களாக அதை அசைக்க கண்டேன்.

ஆதாரம்: முஸனத் அஹ்மது பாகம் 4 பக்கம் 318

அறிவிப்பவர்: வாயில் இப்னு ஹுஜ்ரு

ஹதீஸ்: 7 அதே ஹதீஸ் தொடரில்……. பின்பு குளிர் காலத்தில் நான் வந்தபோது, பல மனிதர்கள் குளிரின் காரணமாக போர்த்திக் கொண்டிருந்த நிலையில், அவர்களுடைய கைகள் அவர்களின் ஆடைகளுக்குள் ஆடிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்.

ஆதாரம்: முஸ்னத் அஹ்மது பாகம் 4, பக்கம் 318

அறிவிப்பவர்: வாயில் இப்னு ஹுஜ்ரு.

குறிப்பு:- விரலை அசைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆதாரமாகக் கூறும் 6ம், 7ம் ஹதீஸ்களுக்கு தவறாக பொருள் செய்திருப்பது பற்றியும் அதன் தரம் பற்றியும் பின்னர் காண்க.

மேற்கண்ட ஹதீஸக்களிலிருந்தும், வேறு ஹதீஸ்களிலிருந்தும் நபிகளார் அவர்கள் அத்தஹயாத் ஓதும்போது ஆட்காட்டி விரலை1. உயர்த்தினார்கள் 2. சுட்டிக் காட்டினார்கள் 3. உயர்த்தி நிறுத்தினார்கள் 4. நீட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள் 5. அசைக்க மாட்டார்கள் 6. அசைப்பார்கள் என்பன போன்ற பல அறிவிப்புகள் கிடைக்கின்றன. இவற்றில் அசைக்க மாட்டார்கள் என்ற ஹதீஸ் பற்றியும் அசைப்பார்கள் என்ற ஹதீஸ் பற்றியும் ஆய்வோம். முதலில் ஹதீஸ் 5ல் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பார்கள், அசைக்க மாட்டார்கள் என்ற ஹதீஸ் பற்றி ஆராய்வோம்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹஜ்ரத் அப்துல் மலிக் இப்னு அப்துல் அஜீஸ் இப்னு ஜுரைஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் பலர் 'இவர் சிறந்த உண்மையாளர்' என்று குறிப்பிட்டிருப்பதுடன், இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகளை பொறுத்து அதன் தகுதி நிர்ணயிக்கப்படும்' என்று ஹஜ்ரத் யஹ்யா இப்னு ஸயீத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். உதாரணமாக

1. 'எனக்கு அறிவித்தார்' என்று கூறினால், அவர் நேரடியாகக் கேட்டதைக் குறிப்பதால், அது ஏற்றுக் கொள்ளப்படும்.

2. 'எனக்கு செய்தியாகத் தந்தார்' என்று கூறினால், தான் கேட்ட அறிவிப்பாளரின் கிதாபில் இருந்து படித்துச் சொன்னதை குறிப்பதால் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.

3. 'சொன்னார்' என்று கூறினால் அவர் அதை நேரடியாகக் கேட்டதைக் குறிக்காது. ஆகவே அந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படாது.

மேற்கூறிய விதிகளின் அடிப்படையிலேயே இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இப்னு ஜுரைஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றி கூறியுள்ளார்கள்.

'விரலை அசைக்க மாட்டார்கள்' என்று வரும் ஹதீஸில் 'எனக்கு செய்தியாகத் தந்தார்'(அக்ஃபரனீ) என்ற வார்த்தையைப் பயன் படுத்தி அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பாகம்-1, பக்கம் 187) ஆகவே இந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பது உறுதியாகி விட்டது.

மேலும் இதே ஹதீஸில் வரும் ஜியாத் இப்னு இஸ்மாயில் ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றியும் பார்ப்போம்.

1. இமாம் நஸயீ ; ரஹிமஹுல்லாஹ், அவர்களிடத்தில் எந்த குறையும் இல்லை.

2. இப்னு ஹிப்பான் ; ரஹிமஹுல்லாஹ், நம்பகமான வரிசையில் இடம் பெற்றவர்.

3. அபூஹாதம் ரஹிமஹுல்லாஹ், இவரின் ஹதீஸ் அங்கீகாரம் பெற்றது. எழுதப்பட வேண்டியது.

4. அலி இப்னு மதனீ  ரஹிமஹுல்லாஹ், ஹதீஸ் கலையில் எல்லோருக்கும் அறிமுகமானவர்.

ஆதாரம்:- தஹ்தீபுத்தஹ்தீப், பக்கம் – 305,306. மீஜான், பக்கம் – 413.

மேலும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் முஹம்மது பின் அஜ்லான் என்பவர் பற்றி மிகப்பெரும் ஹதீஸ் கலை வல்லுனர்கள் மிகவும் பலமானவர்' என்று குறிப்பிடுகிறார்கள்.

இமாம் நஸயீ, சாலிக் இப்னு  கைஸான், அபூஹாதம், ஷுஃபா இப்னு உயைனா, வலீத் இப்னு முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் போன்ற பெரும் அறிஞர்கள் முஹம்மது பின் அஜ்லான் அவர்களிடமிருந்து ஹதீஸ்களை ரிவாயத்து செய்து இருக்கிறார்கள். ஆனால் இப்னு யூனுஸ் என்பவர் மட்டும் 'முஹம்மது இப்னு அஜ்லான் அவர்கள் தன் மனைவியிடம் ஷரீஅத் அனுமதி;க்காத முறையில் உடலுறவு கொண்டதாக செய்தி மக்களிடையே பரவியது' என்று கூறுகிறார். இந்த இப்னு யூனூஸ் யாரென்றே அறியப்படாதவர். எனவே இவருடைய கூற்றை நாம் எப்படி நம்புவது?

இனி, ஹதீஸ் 6,7 பற்றி ஆராய்வோம்:

சுருக்கம்: 'அசைக்கக் கண்டேன்'.

இந்த ஹதீஸில் ஜாயிதா ரஹிமஹுல்லாஹ் என்பவர் இடம் பெறுகிறார். ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ரு அவர்கள் மூலம் அறிவிக்கும் இந்த ஹதீஸை பதிவு செய்த ஹதீஸ் கலை வல்லுனரான முஹத்திஸ் இப்னு ஹுஸைமா ரஹிமஹுல்லாஹ் அவர்களே கூறுவதைப் பாருங்கள்: இந்த அறிவிப்பில் தவிர வேறு எந்த ஹதீஸிலும் 'விரலை அசைத்தார்கள்' என்று கூறப்படவில்லை. ஜாயிதாவே இதை சுயமாகக் கூறியிருக்கிறார்.

ஆதாரம்: இப்னு ஹுஸைமா ஹதீது தொகுப்பு பக்கம் 354. மேலும் நஸாயீ, தாரமீ, இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத் ஆகிய நூல்களில் விரல் அசைப்பதாக வரும் அனைத்து ஹதீஸ்களிலும் ஜாயிதா ரஹிமஹுல்லாஹ் அவர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் குலைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களிடமிருந்து மாணவர்கள் அறிவிக்கும் ஹதீஸைப் பார்ப்போம். 

வாயில் இப்னு ஹுஜ்ரு, குலைப், ஆஸிம் பின் குலைப் ரஹிமஹுமுல்லாஹ்
 

                                                                  1

1. அப்துல் வாஹித் 2. ஷுஃபா 3. சுப்யான் ரஹிமஹுல்லாஹ் ஆகிய மூவரும் 'சுட்டிக் காட்டினார்கள்' என்று அறிவிக்கிறார்கள்.4. ஜாயிதா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மட்டும் 'அசைக்கக் கண்டேன்' என்று அறிவிக்கின்றனர்.

நூல்: முஸ்னத் அஹ்மது பாகம் 4, பக்கம் 316,317,318,319.

நஸாயீ பக்கம் 126, தாரமீ பக்கம் 314, இப்னு ஹிப்பான் பக்கம் 167, இப்னு ஹுஸைமா பக்கம் 354.

ஒரே ஆசிரியரிடமிருந்து கற்ற 4 மாணவர்களில் ஜாயிதா அவர்கள் மட்டுமே அசைக்கக் கண்டேன் என்று அறிவிப்பதாலும், ஸஹீஹான மற்ற ஹதீஸ்களுக்கு மாற்றமாகக் கூறுவதாலும் அசைப்பதாக வரும் ஹதீஸ் 'ஷாஃத்' என்ற பலகீனமான அந்தஸ்த்தைப் பெறுகிறது.

சட்டக்கலை வல்லுனர்களான மத்ஹபுக்குரிய இமாம்கள், அசைக்கக் கண்டேன் என்ற வார்த்தைக்கு ஆட்காட்டி விரலை உயர்த்தும் பொழுது ஏற்படுகிற அசைவைத்தான் குறிப்பிடுவதாக விளக்கம் கூறியுள்ளார்கள்.

இவ்வாறு பல கோணங்களில் அலசி ஆராய்ந்து முரண்படுவது போல் தோன்றும் ஹதீஸ்களை இணைத்து மக்கள் அமல் செய்ய வசதியாக விளக்கங்களைக் கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையில் அத்தஹிய்யாத்தில் விரலை நீட்டி வைத்துக் கொண்டு துஆ செய்ய வேண்டும் என்ற விளக்கங்களை ஏற்று ஹதீஸ்களின் அடிப்படையிலேயே மக்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இனி விரலை அசைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆதாரமாக் கூறும் ஹதீஸ் எண் 6,7 பற்றி ஆராய்வோம்.

குறைகள் பற்றி அலசுவதற்கு முன், ஹதீஸில் வரும் 'துஆ' என்ற வார்த்தைக்கு பிரார்த்தனை, அழைத்தல் என்ற பொருள்கள் இருந்தாலும், அத்தஹிய்யாத் சம்பந்தமான ஹதீஸ்களில் 'துஆ' என்று வரும் இடங்களில் பிரார்த்தனை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதை ஹதீஸ் 4ல் வரும் 'இதயங்களை புரட்டிக் கொண்டிருப்பவனே!' என்ற தொடர் நபிகளார் அவர்கள் பிரார்த்தனை செய்ததை தெளிவாக் குறிப்பிடுகிறது.

குறைகள்: (ஹதீஸ்-6)

1. ஹதீஸில் வராத 'யாரையோ' என்ற வார்த்தையை அடைப்புக் குறிக்குள் புகுத்தி இருக்கிறார்கள்.

2. 'அழைப்பது போல்' என்ற வார்த்தையையும் சோர்த்திருக்கிறார்கள்.

3. 'துஆ' என்ற வார்த்தைக்கு 'அழைத்'தார்கள்' என்று தவறாக பொருள் செய்திருக்கிறார்கள்.

குறைகள்: (ஹதீஸ்-7)

இந்த ஹதீஸில் 'குளிரின் காரணமாக கைகள் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டேன்' என்று தெளிவாகவே வருகிறது.

1. கைகள் என்று தெளிவாக இருப்பதை ஆட்காட்டி விரல் என்று கூறி தவறு இழைத்திருக்கிறார்கள்.

2. குளிரின் காரணமாக கைகள் ஆடிக் கொண்டிருந்தன என்பதை அத்தஹிய்யாத்துடன் தொடர்பு படுத்தியிருக்கிறார்கள்.

ஆகவே விரலை அசைத்துக் கொண்டிருப்பவர்களின் முதல் ஆதாரம் பலவீனமானது. இரண்டாவது ஆதாரம் குளிரின் காரணமாக கைகள் அசைந்தது சம்பந்தமானது. ஆகவே ஆட்காட்டி விரலை அசைப்பதற்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

முடிவுரை:

1. விரலை அசைத்ததாக வரும் ஹதீஸ் 'ஷாஃத்' என்ற பலகீனமான அந்தஸ்த்தை உடையது.

2. 'துஆ' எனற் சொல்லுக்கு பிரார்த்தனை என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸின் மூலம் தெளிவாகிறது.

3. ஹதீஸில் 'யாரையோ' என்ற வார்த்தையோ, 'அசைப்பது போல்' என்ற வார்த்தையோ இல்லை.

4. குளிர் காலத்ததில் அதுவும் குளிரின் காரணமாகவே போர்வைக்குள் கைகள் ஆடிக் கொண்டிருந்தன என்றுதான் ஹதீஸில் வருகிறது. விரலைப் பற்றிக் கூறப்படவில்லை.

5. சுட்டிக் காட்டுதல், உயர்த்துதல், நிறுத்துதல் என்ற வார்த்தைகளுக்கு விளக்கமாக திர்மிதி ஷரீபில் 'பஸத்' நீட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள் எனறு தெளிவான சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

6. 53 ஆக முடிச்சிட்டு என்ற சொல், அரபிகள் கைவிரலைக் கொண்டு எண்ணும் முறைப்படி ஆட்காட்டி விரலை நீட்டி வைத்துக் கொண்டு அதன் அடிப்பகுதியில் கட்டை விரலை வைக்கும் நிலையைக் குறிப்பதாகும்.

7. ஹதீதுகளில் விரலை அசைக்கும் முறை பற்றி கூறப்படவில்லை. உதாரணமாக:

1. மேலும் கீழுமாக அசைக்க வேண்டுமா?
2. விரலை நீட்டி வைத்துக் கொண்டா? குறுக்கி வைத்துக் கொண்டா?
3. தொடர்ந்தா? அல்லது விட்டு விட்டா?
4. வேகமாகவா? அல்லது மெதுவாகவா?
5. வலது பக்கமா? அல்லது இடது பக்கமா?

எனபது போன்ற பல சந்தேகங்கள் எழுவதால் விரலை அசைப்பதற்கு தெளிவான ஹதீஸில் ஆதாரம் கிடையாது. மேலும் அசைக்கத்தான் வேண்டுமென்று விடிவாதம் செய்பவர்கள் கூட இன்று பல விதமாக  ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தொகுத்தவர்: மௌலானா மௌலவி முஹம்மது ஸாஹிப் இம்தாதி,
ஷாபி ஹயாத்துல் இஸ்லாம் ஸுன்னி பள்ளி வாசல், கோவை.

வெளியீடு: அஹ்லெ சுன்னத் மாத இதழ்: நவம்பர் 1996.