பர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு துஆ ஓதலாமா?

பர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு துஆ ஓதலாமா?

By Sufi Manzil 0 Comment May 5, 2010

Print Friendly, PDF & Email

பர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு ஓதும் துஆவிற்கான விளக்கம்.

கேள்வி: பர்ளு தொழுகைக்குப்பின்னர் பெருமானாரோ, சஹாபாக்களோ, தாபிஈன்களோ, நான்கு இமாம்களோ சப்தமிட்டு துஆ ஓதியுள்ளார்களா? ஹனபீ மத்ஹபின் கிதாபுகளில் சப்தமிட்டு இமாம் துஆ ஓதவேண்டுமென்று வரவில்லையே! ஆனால் நாடு முழுவதும் சப்தமிட்டு இமாம்கள் துஆ ஓதுகின்றனரே! தேவ்பந்த் உலமாக்கள் சப்தமிட்டு துஆ ஓதுவதில்லை என்று கூறுகின்றனர். ஆதாரத்துடன் விளக்கம் தருக.

மௌலவி பி.ஐ. முஹம்மது அலி சிராஜி, கோயம்புத்தூர்.

பதில்:

பர்ளுத் தொழுகைகளுக்குப் பின்னர் துஆ ஓதுவது குறித்து ஹதீஸ்களில் ஆதாரமுள்ளன.

எந்த துஆ மிகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டகப்பட்ட பொழுது, 'இரவின் நடுநிசியிலும், பர்ளான தொழுகைகளுக்குப்பின்னரும் கேட்கப்படும் துஆவாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுறுத்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஉமாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நூல்: திர்மிதி.

பின்வரும் துஆவை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுபவர்களாக இருந்தார்கள். 'நாயனே! உன்னிடம் கோழைத்தனத்தை விட்டும், முதுமையின்பால் தள்ளப்படுவதை விட்டும், உலக சோதனைகளை விட்டும், கப்றின் வேதனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்'.

அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீ வக்காஸ், நூல்: புகாரி.

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு முஆதே! இறை மீதாணை! உம்மை நான் நேசிக்கிறேன். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் (பின்வரும்) துஆவை ஓதும்படி உமக்கு வஸியத் செயகிறேன்.'நாயனே! உன்னை திக்று செய்வதற்கும் உனக்கு ஹுக்று-நன்றி பாராட்டுவதற்கும் நன்முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக!'

அறிவிப்பவர்: முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நூல்: அபூதாவூத், நஸபி.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹுத் தொழுதால், 'நாயனே! உன்னிடம் பயன்தரும் ஞானத்தையும், ஒப்புக்கொள்ளப்பட்ட அமலையும், ஹலாலான, மணமான இரணத்தையும் வேண்டுகிறேன்' என்று கேட்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்

நூல்: முஸ்னத் அஹ்மத், இப்னு மாஜா.

மேலே குறிப்பிட்ட நபிமொழிகள் தனித்து துஆ ஓதுவதற்கான ஆதாரங்கள். அடுத்து கூட்டுப் பிரார்த்தனைக்கும் ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறுவதற்குமான ஆதாரங்களை பாருங்கள்.

'சுப்ஹுத் தொழுகைக்குப் பின் நாயனே! உன்னைக் கொண்டே காலையில் விழித்தெழுந்தோம். உன்னைக் கொண்டே மாலையில் ஆனோம். உன்னைக் கொண்டே உயிர் வாழ்கிறோம். உன்னைக் கொண்டே மரணிக்கச் செய்கிறோம். மீளுவதும் உன் பக்கமே! என்று பிரார்த்திப்பவர்களாக அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நூல்: அபூதாவூது, திர்மிதி.

ஹபீப் இப்னு ஸல்மதுல் பிஹ்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்படுகிறது (பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுபவராக (முஜாபுத்துஆ) இவர்கள் இருந்தார்கள்) 'ஒரு கூட்டத்தில் சிலர் பிரார்த்தித்து, மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களது துஆவிற்கு அல்லாஹ் பதில் கூறியே அல்லாது என்கூட்டமும் ஒன்று சேருவதில்லை' (பத்ஹுல் பாரி பகாம் 13, பக்கம் 456)

ஒருவர் துஆ ஓத மற்றவரை ஆமீன் கூறும்படி அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்திருப்பதைக் குறித்து மேலும் தெளிவு வேண்டுமானால் ஸுனன் அபீதாவூது பாகம் 1 பக்கம் 215, பத்ஹுல் பாரி பாகம் 2 பக்கம் 209, பாகம் 13 பக்கம் 456 லும் பார்த்துக் கொள்ளுங்கள்.

தொழுகைக்குப் பின்னர் துஆ ஓதுவது குறித்து பிக்ஹ் நூற்களான ஷhமி பாகம் 1 பக்கம் 356, பத்ஹுல் கதீர் பாகம் 1 பக்கம்191, ஷரஹுன் நிஹாயா பாகம் 1 பக்கம்106, அல்முஃனில் முஹ்தாஜ் பாகம் 1 பக்கம் 182,183, பக்ஹுல் முயீன் பாகம் 1 பக்கம் 184,185, இஆனா பாகம் 1 பக்கம் 184,185, ஹம்பலி மத்ஹபின் முஃனி பாகம் 1 பக்கம் 596 மற்றும் நூற்களிலும் வந்திருக்கிறது.

அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவருக்கு கேட்காத அளவு சப்தமின்றி துஆ ஓதியிருந்தால் அதனை சஹாபாக்கள் எப்படி மனனம் செய்திருக்க முடியும்? அறிப்புகள் செய்திருக்க முடியும்?

அதோடு ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறும்படி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்திருக்கிறார்கள். ஒருவர் ஓதுவதை கேட்டால்தானே மற்றவர்கள் ஆமீன் சொல்ல முடியும்? தேவைக்கு மீறி உரத்து சப்தமிடுவதைத்தான் தடுக்கப்பட்டுள்ளது.

எனவே அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நடைமுறைகளிலிருந்து திசைமாறிச் சொல்வோர் இலக்கோ, நோக்கமோ இன்றி மனம்போன போக்கில் செல்கின்றனர். அவர்கள் எந்த 'பந்தை' சார்ந்தவராயினும் அவர்களைப் பின்பற்றாமல் நேரிய வழி செல்லுங்கள். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக! அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நன்றி: வஸீலா 1-5-87 

மேலும் கூட்டு துஆவிற்கான ஆதாரங்கள்

 

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-

இமாம் 'வலழ்ழாளீன்' என்று ஓதி முடித்து 'ஆமீன்' கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள்.;. யாருடைய சொல் மலக்குகளின் கூற்றுக்கு ஒன்றுபட்டு விடுகிறதோ அவருடைய முன்பாவங்களனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: புகாரி-762, நஸயீ-928.

நீங்கள் நோயாளிகளை உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அல்லது மய்யித்தைப் பார்க்கச் சென்றால் நல்லதையே கூறுங்கள். ஏனென்றால், உங்களுடைய கூற்றுக்கு மலக்குகள் ஆமீன் கூறுகிறார்கள்.

-அறிவிப்பாளர்: உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். நூல்: முஸ்லிம்-919, அபூதாவூத்-3115, திர்மிதி-977.

ஒரு முஸ்லிம் மறைவாக உள்ள தனது சகோதரருக்கு துஆ செய்தால் (இறைவனிடம்) அது ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஒரு மலக்கு சாட்டப்படுகிறார். அந்த மலக்கு அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அமீன் என்று கூறி அதுபோன்று உனக்கும் கிடைக்கட்டும் என்கிறார்.

அறிவிப்பாளர்: சஃப்வான் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: முஸ்லிம்-2732, அபூதாவூத்-1534.

(ஓரிடத்தில்) ஒரு கூட்டம் ஒன்று கூடி அவர்களில் ஒருவர் துஆ செய்து, மற்றவர்கள் ஆமீன் கூறினால் அந்த துஆவை இறைவன் உடனடியாக அங்கீகரிக்கிறான்.

அறிவிப்பாளர்: ஹுபைப் இப்னு ஸலமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: ஹாகீம்.