ஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா?

ஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா?

By Sufi Manzil 0 Comment May 5, 2010

Print Friendly, PDF & Email

ஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா?

கேள்வி:

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்கிறபோது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் நாடியவற்றை இறைவனிடம் கேட்பது சுன்னத்தா? அல்லது முதுகை கிப்லாவின் பக்கம் ஆக்கி மண்றையை முன்னோக்கி நின்று துஆ செய்வது சுன்னத்தா?

பதில் சொல்பவர்: (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி என்ற அமைப்பின் அடிப்படை உறுப்பினரும், முன்னாள் எகிப்து முப்தியுமான பெரியார் ஹுஸைன் முஹம்மது மக்லூப் அவர்கள்)

மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ராவிகளில் ஒருவரான இப்னு ஹமீது என்பவர் மூலமாக கிதாபுஷ்ஷிபா என்ற நூலில் காழி இயாழ் அறிவிக்கிறார்கள்:

அபூஜஃபர் மன்ஸூர் நாழிர் என்பார் பெருமானாருடைய பள்ளிவாசலை பரிபாலனம் செய்து வந்தார். அவருக்கு மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொன்னார்கள், 'அமீருல் முஃமினீன்! இந்த பள்ளிவாசலில் உமது சப்தத்தை உயர்த்த வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் ஒரு கூட்டத்துக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும்முகமாக இவ்வாறு கூறுகின்றான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சப்தத்தை விட உங்களுடைய சப்தத்தை உயர்த்த வேண்டாம். உங்களில் சிலர், சிலரிடம் சப்தமிட்டுப் பேசுவதைப் போன்று அண்ணலாரிடம் சப்தமுயர்த்திப் பேச வேண்டாம். அப்படிச் செய்தால் உங்கள் அமல்கள் அழிந்து விடும். அதனை நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்கள்' (அல்-குர்ஆன் 49:2) என்றும்,

ஒரு கூட்டத்தினரை புகழும்முகமாக இறைவன், 'நிச்சயமாக எவர் அல்லாஹ்வுடைய தூதரின் முன் மரியதைக்காக தங்களது குரலைத் தாழ்த்திக் கொள்கின்றனரோ அத்தகையோருடைய இதயங்களை பரிசுத்தப்படுத்துவதற்காக இறைவன் சோதனை செய்தான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு' (அல்-குர்ஆன் 49:3) என்றும்,

ஒரு கூட்டத்தினரை இகழ்வதற்காக இறைவன், 'எவர்கள் உம்மை தங்களது அறைகளுக்குப் பின் நின்று உரக்கக் கூவி அழைக்கின்றாரோ அவர்களில் பெரும்பான்மையோர் அறிவில்லாதவர்களே!'(49:4) என்றும் கூறுகின்றான்.

நிச்சயமாக அவர்கள் மறைந்த பின்னர் கொடுக்கப்படக் கூடிய மரியதை, கண்ணியம் அன்னார் உயிரோடிருக்கும் போது அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய கண்ணியத்தையும், மரியாதைiயும் போன்றதே! (என மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்)

அதற்கு அபூஜஃபர், அபூ அப்துல்லாஹ்! கிப்லாவை முன்னோக்கிநின்று நான் ஜியாரத் செய்தபின் துஆ செய்யட்டுமா? அல்லது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி நிற்கட்டுமா? எனக் கேட்க,

மாலிக் அவர்கள் சொன்னார்கள், 'உனது முகத்தை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட்டுத் திருப்பாதே! அன்னார் மறுமையில் இறைவனிடத்து உனக்கு வஸீலாவாக இருக்கிறார்கள். உனது தந்தை ஆதமுக்கும் வஸீலாவாக இருக்கிறார்கள். அவர்களையே நீ முன்னோக்கு! அவர்களைக் கொண்டே ஷபாஅத் தேடு! அல்லாஹ் உமது விஷயத்தில் அண்ணலாரைக் கொண்டே ஷபாஅத் அருள்வான். இறைவன் கூறுகிறான்: 'அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட நேரத்தில் உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி, ரஸூலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை பிழை பொறுப்போனாகவும், அன்டீடையோனுமாகவும் பெற்றுக் கொள்வார்கள். (4:64)'

ஷிஹாபுல் கிபாஜி தமது நூலில் கூறுகிறார், ஸலாம் சொல்வதற்காகவும், துஆச் செய்வதற்காகவும் அண்லாரின் புனித கப்ரை முன்னோக்குதலே விரும்பத்தக்கது என்பது இமாம் மாலிக், அஹ்மது, ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் மத்ஹபாகும். அவர்களுடைய நூற்களில் இதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் தமது அத்கார், ஈளாஹ் எனும் நூற்களில் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இமாம் சுப்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கிறார்கள் '(ஸியாரத் செய்கிறபோது) கப்றுஷரீபை முன்னோக்கி, கிப்லாவை பின்னோக்கி கப்றின் தலைபகுதிக்கு 4 அடி தூரத்தில் நின்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், சற்று அகன்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஸலாமுரைத்துவிட்டு முதலில் நின்ற இடத்திற்கு வந்து கப்றை முன்னோக்கி தான் நாடியவைகளை துஆ செய்வான்!'

இவ்வாறே இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மத்ஹபிலும் காணப்படுகிறது. பத்ஹுல் கதீர் என்ற நூலிலிருந்து கமால் அவர்களும் இவ்வாறே எடுத்துரைக்கிறர்கள். பதாவா ஹிந்திய்யா (பதாவா ஆலம்கீரி)விலும் இப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லைஸ் ரஹ்மத்துல்லாஹி அவர்களும், இப்னு தைமிய்யாவும் துஆ ஓதும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டுமென்கின்றனர். ஆனால் காழி இயாழ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் போன்ற மார்க்க மேதைகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

(பதாவா ஷர்இய்யா வ புஹூதுல் இஸ்லாமிய்யா ஹுஸ்னைன் மக்லூப்)

வஹ்ஹாபியக் கொள்கையில் ஊறித் திளைத்த ராபிதாவின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கும், நம் ஆதித்தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் வஸீலாவாக அமைந்துள்ளனர் என்பதை ஏற்பதோடு, தமது பத்வாவிற்கு ஆதாரமாக இமாம்களுடையவும், அவர்களது மத்ஹபுகளை பின்பற்றிய அறிஞர்களின் கருத்துக்களையும் எடுத்தாள்கிறார். இந்தியப் பெருநாட்டின் அரபியல்லாதார்களால் தொகுக்கப்பட்ட பதாவா ஆலம்கீரியை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள அரபி மேற்கோளுக்காக எடுத்தாள்கிறார்.

தகவல்: அக்பாருல் ஆலமில் இஸ்லாமி என்ற  சவூதி வாரப்பத்திரிகை
ஹிஜ்ரி 1407 ரபியுல் அவ்வல் 15 திங்கட்கிழமை, பக்கம் 10
.

நன்றி: வஸீலா  ஏப்ரல் 1987