Fatwa about Ziyarat-ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா

Fatwa about Ziyarat-ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா

By Sufi Manzil 0 Comment May 6, 2010

ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா

வினா:

ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து குழுமியிருக்கும் குற்றமான கருமங்களே முற்றும் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில்  குறிப்பிட்ட ஒரு தினத்தில் அவுலியாக்களுடைய 'கப்றுகளை' ஜியாரத்துச் செய்யும் விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன?

மேலும் இவ்விதமான குற்றங்கள் உண்டாகி இருக்கும் நிலைமையில் அந்த ஜியாரத்தைத் தடை செய்லாம் என்பது பற்றி அல்லாமா ஷெய்கு இப்னு ஹஜர் அவர்களுடைய ஃபத்வாக்களில் காணப்படுகிறதா?

இப்படிக்கு,

என். அஹ்மது ஹாஜி.

விடை:

'கப்றுகளை' ஜியாரத்து செய்வது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்தாகும். குற்றமான கருமங்களும், விலக்கலான விஷயங்களும் நடைபெறுகின்றன என்பதற்காக 'ஜியாரத்' விடப்பட மாட்டாது. ஏனெனில் 'பித்அத்' கருமங்களுக்காக 'ஸுன்னத்தான காரியம் விடப்படமாட்டாது. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய ஹுக்மு உண்டு. கருமங்கள் அவற்றின் நாட்டமென்ற லட்சியங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஆகவே நாடுகின்ற நாட்டத்தின் அசல் சரியாயிருந்தால் எத்தகைய இடையூறும் தீங்கிழைக்க இயலாது. அல்லாமா இப்னு ஹஜர் ஹைதமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய ஃபத்வாவில் கண்ட விடையின் விளக்கம் பின்வருமாறு:

1. குறிப்பிட்ட அத்தினம் விலக்கலான காரியங்களை விட்டும் நீங்கினதாய் அந்நாள் முழுதுமிருக்கலாம். இது ஒரு வகை, இந்நிலையில் ஜியாரத்துடைய சட்டத்தை விளக்கி கூறுவது தேவையில்லை. தெளிவாக இருக்கிறது.

2. அத் தினம் முழுவதும் விலக்கலான கருமங்களைக் கொண்டதாயிருக்கலாம். இது இரண்டாவது வகை. இந்நிலையில் 'ஜியாரத்'துடைய ஹுகும் ஆகிறது, 'ஆணும் பெண்ணும் ஒன்றாக கலந்து நிற்பதை விட்டும் அகல்வதும் அந்த ஆகாத கருமங்களை வெறுப்பதும் தனக்கு சாத்தியமான மட்டில் அவற்றை நீக்கித் தனது அமலை செய்வதுமாகும்.'

3. அத்தினம் சிலவேளை விலக்கலான கருமங்களை விட்டும் நீங்கினதாயும் சிலவேளை விலக்கலான கருமங்களை கொண்டதாயும் இருக்கலாம். இது மூன்றாவது வகை. இந்நிலையில் 'ஜியாரத்'துடைய ஹுகும் இருவிதமாகும்.

'விலக்கலான கருமங்களை விட்டும் நீங்கின வேளையில் 'ஜியாரத்து' செய்வது மேலாகும். விலக்கலான கருமங்களைக் கொண்டதாயுள்ள வேளையில் 'ஜியாரத்துச் செய்வது அனுமதிக்கப்பட்டதாகும்.' இவ்விருவிதத்துள் முந்தியது மேலே கூறப்பட்ட மூன்று வகை விதத்துள் முதலாவது வகையைச் சேர்ந்தது. பிந்தியது இரண்டாவது விதத்தைச் சார்ந்தது. ஆகையால் ஜியாரத்து செய்பவன் ஆண்பெண் கலந்து நிற்பதை விட்டு விலகுவதிலும் ஆகாத கருமங்களை வெறுத்து தன்னாலியன்ற மட்டில் அவற்றை விலக்கி நீக்குவதிலும் பேணுதலோடு நடந்து கொள்வான்.சட்டப்படி ஜியாரத்து அனுமதிக்கப்பட்டதேயன்றி விலக்கப்படவில்லை. ஏனெனில் விலக்கப்பட்ட கருமங்களை விட்டும் நீங்கியிருக்கும் வேளையில் 'ஜியாரத்' செய்வது மிகவும் அமல் என இப்னு ஹஜருடைய வாசகம் தெளிவாகிறது. இத்தகைய பிரிவுகளையெல்லாம்  உற்றுணராமல் ஒரேடியாக பொதுவாக ஜியாரத்துச் செய்வதே கூடாதென்று யாராகிலும் விலக்குவானேயானால் அவனுடைய சொல்லுக்கு ஒருவிதத்திலும் மதிப்பு கிடையாது. (இப்னு ஹஜர் ஹைதமியின் ஃபத்வாவில் உள்ள விஷயத்தின் கருத்து முடிந்தது)

அதுபற்றி ரத்துல் முஹ்தர் கிரந்தத்தில் அல்லாமா ஷெய்கு இப்னு ஆபிதீன் என்ற பிரபல்யம் பெற்ற முஹம்மது அமீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்தின் சுருக்கம் பின்வருமாறு:

'இப்னு ஹஜர் தனது ஃபத்வாக்களில் கூறுகிறதாவது 'ஜியாரத்து'ச் செய்யப் போகுமிடத்தில் விலக்கப்பட்ட கருமங்களிருப்பினும் ஆணும் பெண்ணும் கலந்து நிற்பது போன்ற குற்றங்கள் நிகழ்ந்தாயிருப்பினும் நீ ஜியாரத்தை விட்டு விட வேண்டாம். இவைபோன்ற காரணங்களுக்காகப் புண்ணியமான கருமங்கள் விடப்பட மாட்டாது. ஜியாரத்துச்  செய்ய வேண்டியது மானிடனின் மீது பொறுப்பாகும். பித்அத்தானவற்றை வெறுக்க வேண்டும். ஆனால் இயலுமாயின்  பித்அத்துகளை நீக்க வேண்டும்.

ஆகவே இமாம் இப்னு ஹஜர் அவர்களுடைய ஃபத்வாக்களிலிருக்கும் விஷயம் யாதெனில் ஜியாரத்துச் செய்கிற ஸ்தலங்களில் விலக்கப்பட்ட கருமங்கள் நிகழக்கூடிய நேரத்தில் ஜியாரத்துச் செய்யும் விதத்தை விபரிப்பதேயன்றி அதை விலக்குவதன்று என்பதே.

இப்படிக்கு,

மௌலானா அஹ்மது கோயா ஷாலியாத்தி,

கேரளா.

நன்றி: வஸீலா 15-11-87, 1-12-1987