இறந்தவர்களை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழ வைத்து அடக்கம் செய்தல் பற்றிய சட்ட விளக்கம்- Law of Dead body
By Sufi Manzil
ஊரில் ஒருவர் மௌத்தாகி விட்டால் அந்த மய்யித்தை அடக்கும் முன் அதற்கு தொழுவிக்க வேண்டும். மய்யித்திற்கு தொழும் தொழுகை ஊர்வாசிகள் அனைவர்கள் மீதும் கடமையாகும். ஆனால் அவ்வூரில் ஒருவர் தொழுதாலும் யாவருடைய கடமையும் தீர்ந்து விடும். மய்யித்தை குளிப்பாட்டிய பின்னர் தொழ வைப்பதே அதற்குரிய நேரமாகும். இத் தொழுகை ஃபர்ளு கிபாயா ஆகும். அதாவது சிலபேர் தொழுதால் கடமை தீர்ந்து விடும். அனைவரும் தொழ வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் எல்லோரும் தொழுதால் நன்மையுண்டு. தொழுபவர்கள் மூன்று வரிசைகளுக்குக் குறையாமல் இருப்பது சுன்னத்து. நாற்பது நபர்கள் கூடி தொழுதால் மய்யித்திற்கும், தொழுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் உள்ளன.
ஸஃப் நிறுத்துவது மற்ற தொழுகைகளைப் போலவே இடைவெளி இருக்க வேண்டும். எனினும் நெருக்கடி இருப்பின் ஸஃப்களுக்கிடையே இடைவெளியை குறைத்து நெருங்கி நிற்கலாம்.
நூறு பேர் தொழுதால் அந்த மய்யித்தின் பேரில் அவர்கள் செய்யும் துஆவும், சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற ஹதீது இருக்கிறது. நாற்பது பேரின் துஆவும் சிபாரிசும் அவ்வாறுதான். மய்யித்துடைய உடல் கெட்டுவிடாது என்று இருப்பின் நூறு அல்லது நாற்பது பேர் வரும்வரை காத்திருப்பது உசிதமாகும்.
கடல், கிணறு போன்றவற்றில் விழுந்து விட்டவனை எடுக்கவோ, குளிப்பாட்டவோ, தயம்மும் செய்விக்கவோ முடியாமல் போய்விட்டால் சரியான சொல்படி தொழ வைக்க வேண்டிய அவசியமில்லை.
அந்த ஊரை விட்டும் மறைவான ஊரில் இறந்தவருக்கு ஷாபி மத்ஹப் படி தொழ வைக்கலாம். ஆனால் பெரும் பட்டணமாக இருந்தாலும் அவ்விடத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மய்யித்து ஆஜராகாமல் தொழ வைக்கக் கூடாது. அது அடக்கப்பட்டு விட்டாலும் ஙாயிப் ஜனாஸா தொழுகையும் தொழ வைக்கக் கூடாது.
மய்யித்து ஆணாக இருப்பின் இமாமும் தனியாக தொழுபவரும் மய்யித்தின் தலைக்கு நேராக பின்னால் நிற்க வேண்டும். பெண்ணாக இருந்தால் இடுப்புக்கு நேராக இருக்க வேண்டும். இது சுன்னத்.
தொழ வைக்க உரிமையுள்ளவர்கள்:
தொழவைப்பதற்கு முதன்முதலாக தந்தையும், பிறகு மகன், பறகு மகனுடைய மகன், பிறகு சகோதரன், பிறகு உரிமைவிட்ட எஜமான், பிறகு மகளின் மகன், சகோதரியின் மகன், தாய்மாமன், தாயின் தகப்பன் போன்ற உறவினர்கள். பிறகு கணவன், பிறகு இவர்களுடைய அனுமதி பெற்றவர்கள். இறந்து விட்டவர் உயிருடனிருக்கும்போது தனக்கு இன்னார் தொழ வைக்க வேண்டும் என்று வஸியத்து செய்திருப்பின் அவர் முற்படுத்தப்படுவார்.
குளிப்பாட்டாமலும், தயம்மும் செய்யாமலும் அடக்கப்பட்டிருப்பின் கப்ரைத் தோண்டி எடுதது நான்கு ஃபர்ளுகளையும் நிறைவேற்றுதல் அவசியமாகும். ஆனால் உடல் அழுகியிருப்பின் தேவையில்லை.
வயிற்றில் குழந்தை இருக்கும்போது இறந்து விட்ட பெண்ணின் அக்குழந்தை இறந்து விட்டதென உறுதியாகும் வரை அப்பெண்ணை அடக்க கூடாது. குழந்தை உயிருடன் இருப்பது தெரிந்தால் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்தபின் அடக்க வேண்டும்.
காபிர்களுடைய பருவமடையாத குழந்தைகள் கலிமாச் சொல்லி இறந்து விட்டால் கட்டாயமாக கஃபனிட்டு அடக்க வேண்டும். அதனைக் குளிப்பாட்டுவதும் ஆகும். நான்கு மாதங்கள் முடியும் முன் விழுந்த கட்டியும் இவ்வாறுதான். நான்கு மாதங்கள் முடிந்திருப்ப்பின் குளிப்பாட்டி, கபனிட்டு அடக்குவது வாஜிபாகும்.
இரத்தக் கட்டி, சதைக்கட்டி, மய்யித்தின் பல், நகம் ஆகியவற்றையும் புதைப்பது சுன்னத்தாகும்.
மய்யித்தை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்வது அது நல்ல நிலையிலிருந்தாலும் அல்லது வஸிய்யத்துச் செய்திருந்தாலும் ஹராமாகும்.
தனியாக கண்டெடுக்கப்பட்ட உடலுறுப்பு முஸ்லிம் உடையது என்று தெரிந்தால் அதை குளிப்பாட்டி கபனிட்டு தொழ வைத்து அடக்க வேண்டும்.
ஜனாஸாவைக் கண்டவுடன்:
لآ اِلٰه اِلَّا اللهُ سُبْحَانَ الْحَيِّ الَّذِيْ لَا يَمُوْتُ
ஷாபி மத்ஹப் படி ஜனாஸா தொழுகைக்குரிய விதிமுறைகள் வருமாறு:
பர்ளுகள் 7:
1.நிய்யத்து. 2. சக்தியுள்ளவர்கள் நின்று தொழுதல் 3. நான்கு தக்பீர்கள். 4. முதலாவது தக்பீருக்குப் பின் பாத்திஹா ஓதுதல். 5. இரண்டாவது தக்பீருக்குப் பின் ஸலவாத்து ஓதுதல். 6. மூன்றாவது தக்பீருக்குப் பின் மைய்யித்திற்காக பிரார்த்தித்தல். 7. நான்காவது தக்பீருக்குப்பின் ஒருமுறை ஸலாம் சொல்லுதல் ஆகியவைகளாகும்.
اُصَلِّى الْفَرْضَ عَلٰى هٰذَا الْمَيِّتِ اَرْبَعَ ثَكْبِيْرَاتٍ لِلهِ هَعَالٰى اَللهُ اَكْبَرُ .
இரண்டாவது தக்பீருக்குப் பின் ஓதும் ஸலவாத்து:
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ وَسَلَّمْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ اٍنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
மூன்றாவது தக்பீருக்குப் பின்புள்ள பிரார்த்தனை:
اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَانَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاحْيِهِ عَلَى الْاِسْلاَمِ ومَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الْاِيْمَانِ
பொருள்: 'அல்லாஹ்வே! எங்களில் ஜீவிப்பவர், இறந்தவர், பிரசன்னமாயிருப்பவர், மறைந்திருப்பவர், சிறயவர், பெரியவர், ஆண் பெண் யாவர்க்கும் நீ பிழைபொறுத்தருள். அல்லாஹ்வே! எங்களில் யாரை நீ உயிர் வாழச் செய்கின்றாயோ அவரை இஸ்லாமியத்தின் மீது உயிர் வாழச் செய்! இன்னும் எங்களில் யாரை நீ மரிக்கச் செய்வாயோ அவரை ஈமான் மீது நீ மரிக்கச் செய்!:
ஆண் குழந்தையாக இருப்பின் கீழ்காணும் துஆவை சேர்த்துக் கொள்ளவும்:
اَللّٰهُمَّ اجْعَلْهُ فَرَطًا لِاَبَوَيْهِ وَسَلَفًا وَذُخْرًا وَعِظَةً وَاعْتِبَارًا وَشَفِيْعًا وَثَقِّلْ بِهِ مَوَازِيْنَهُمَا وَاَفْرِغِ الصَّبْرَ عَلٰى قُلُوْبِهِمَا وَلَا تَفْتِنْهُمَا بَعْدَهُ وَلَاتَحْرِمْهُمَا اَجْرَهُ
பொருள்: அல்லாஹ்வே! இவரை (இறந்தவரை) தன் பெற்றோர்கட்கு முந்தியவராகவும், முன் சென்றவராகவும், பாதுகாப்புப் பொருளாகவும், நல்லுபதேசமாகவும், நற்சிந்தனையாகவும், மன்றாடுபவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக! இவரால் அவ்விருவரின் தராசுத்தட்டுக்களை (நன்மைகள் கொண்டு) பாரமாக்கி வை. அவ்விருவரின் இதயங்களில் (இவரின் பிரிவால் கலக்கமடையாதவாறு) பொறுமையைச் சொரிந்தருள்! இவருக்குப் பின் அவ்விருவரையும் சோதனையிலாக்கி விடாதே! இவரது கூலியை அவ்விருவரும் அடையாதவாறு பேறு கெடுத்து விடாதே!
இதில் பெண் குழந்தையாக இருப்பின் 'ஹு' என்று வரும் இடங்களில் 'ஹா' என்று சேர்த்து ஓத வேண்டும்.
பொதுப்படையாக பெரியவராயினும், குழந்தையாயினும் ஓத வேண்டிய துஆவின் சுருக்கம்:
اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ
'அல்லாஹும்ம மக்பிர்லஹு வர்ஹமஹு'
நான்காவது தக்பீருக்குப் பின் ஸலாம் கெடுப்பதற்கு முன் ஓத வேண்டியது:
اَللّٰهُمَّ لَا تَحْرِمْنَا اَجْرَهُ وَلَاتَفْتِنَّا بَعْدَهُ وَاغْفِرْلنَا وَلَهُ
அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தஃப்தின்னா பஹ்தஹு வக்ஃபிர்லனா வலஹு
ஹனபி மத்ஹப் படி ஜனாஸா தொழுகையின் விதிமுறைகள்:
நிய்யத்:
اُصَلِّ لِلهِ تَعَالٰى دَاءِيًا لِلْمَيِّتِ
அல்லாஹ்வுக்காக தொழுகிறேன். இந்த மய்யித்திற்காக துஆ செய்கிறேன் என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.
நின்று தொழ வேண்டும்(நிற்க சக்தியில்லாதவர்கள் உட்கார்ந்தும் தொழலாம்.)
முதல் தக்பீருடன் மூன்று தக்பீர்களும் சேர்த்து நான்கு முறை தக்பீர் சொல்ல வேண்டும்.
முதல் தக்பீரில் இமாம், மஃமூம் யாவரும் சாதராணத் தொழுகைகளில் ஓதும் ஃதனாவை ஓத வேண்டும்.
இரண்டாம் தக்பீருக்குப் பின் கீழ்காணும் ஸலவாத் ஓத வேண்டும்.
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ وَسَلَّمْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ اٍنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
மூன்றாவது தக்பீருக்குப் பின் மய்யித்திற்காக பாபமன்னிப்பு கோரி துஆ செய்ய வேண்டும்.
اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَانَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاحْيِهِ عَلَى الْاِسْلاَمِ ومَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الْاِيْمَانِ
நான்காம் தக்பீருக்குப் பின் இரண்டு பக்கமும் திரும்பி ஸலாம் சொல்லித் தொழுகையை முடிக்க வேண்டும்.
رَبَّنَا اتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
பொருள்: எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகிலும் ஆகிரத்திலும் நன்மையைத் தந்தருள்வாயாக! ஆமீன்
இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தக்பீர்களின் போது 'அல்லாஹு அக்பர்' என்று மட்டும் இமாமுடன் தொடர்ந்து சொல்ல வேண்டும். கைகளை எடுக்கவோ உயர்த்தவோ கூடாது.
இமாம் தொழ வைத்துக் கொண்டிருக்கும் போது பிந்தி வந்தவர் இமாம் ஸலாம் கொடுத்து முடிந்த பின் மீதியைத் தொழ வேண்டும். அந்தந்தத் தக்பீருக்குப் பின்னால் ஓதவேண்டியவைகளை ஓத வேண்டும். ஜனாஸாவை எடுத்துச் சென்று விட்டாலும் பிந்திவந்தவர் தொழுது முடிக்க வேண்டும். ஆனால் தொழுது முடிக்கும் வரை ஜனாஸாவை தூக்கிச் செல்லாமலிருப்பது சுன்னத்தாகும்.
மரணத் தருவாயில் செய்ய வேண்டியவை
பருவமடைந்த ஒரு முஸ்லிம் மரணத்திற்கு தயார் நிலையில் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்டவர் நற்செயல் புரிந்து, களாவாகிவிட்ட பர்ளான செயல்களை நிறைவேற்றி, பிறர் யாரும் தன்மீது பின்தொடர்ச்சி கொள்ளாத முறையில் உரியவர்களுக்கு கடைமைகளை நிறைவேற்றி, வழக்காளிகளை திருப்தியுறச் செய்து, குற்றங்குறைகளுக்கு இடம் வைக்காமல், பாவங்களுக்கு தவ்பா செய்தவர்களாக தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஒருவருக்கு மௌத்துடைய நேரம் வந்து விட்டால் அவருடைய முகத்தைக் கிப்லாவுக்கு நேராக திருப்பி வலப்பக்கத்தில் ஒருசாய்த்து படுக்க வைப்பது சுன்னத்தாகும். அப்பொழுது அவருக்கு யாராவது ஒருவர் அருகிலிருந்து லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலல்லாஹ் என்ற கலிமாவை அதட்டாத முறையில் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர் சொல்லிவிட்டால் மறுபடி சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அவர்அருகிலிருந்து ஸூரத்து யாஸீன், ஸூரத்து ரஃது ஆகியவற்றை ஓதுவது சுன்னத்து.
மௌத்தானது உறுதியாக தெரிந்தவுடன், பிஸ்மில்லாஹி வஅலா மில்லத்தி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என கூறி அவருடைய இரு கண்களையும் மூடிவிட்டு, நாடியைக் கட்டி, கைகால் முழிகளை மெல்ல நீட்டி மடக்கி பின் நீட்டிவிட்டு வயிற்றில் (இருபது கழஞ்சு எடையுள்ள) கனமான ஏதேனும் ஒரு பொருளை வைத்து, தலையை நிமிர்த்தி வைத்து, மௌத்தான நேரத்திலிருந்த துணிகளைக் களைந்து (கசப்பு மாற்றி) கட்டில் போன்ற உயரமான இடத்தில் கிப்லாவுக்கு நேராக முகத்தையும் உள்ளங்கால்களையும் வைத்துப் படுக்கச் செய்து, மெல்லிய துணியால் தலையுட்பட மேனி முழுவதையும் மூடி மறைத்து , துணியின் ஒரு தலைப்பைத் தலைக்குக் கீழும் மற்றொரு முந்தியை காலின் கீழும் ஆக்குவதும் சுன்னத்தாகும்.
மௌத்தான நேரம் முதல் குளிப்பாட்டும் வரை அருகில் வாசனைப் புகை போடுவது நல்லது.
ஒருவருக்கு சக்கராத்தின் நிலை போன்ற மரணத்தின் அறிகுறிகள் தென்பட்டால், அவருக்குப் பக்கத்திலிருந்து மரணம் ஏற்படும் வரை யாஸீன் ஓதுவது சுன்னத்தாகும்.
தொட்டால் ஒழு முறியாதவர்கள் மய்யித்தை முத்தமிடலாம். அந்நிய மய்யித்தைத் தொடுவதால் அவர்களுக்கு உளு முறிந்து விடும். மய்யித்திற்கு உளு முறியாது. எனினும் அந்த மய்யித்து ஸாலிஹானதாயிருப்பின் முத்தமிடுவது சுன்னத்தாகும்.
ஜுனுபாளியும், ஹைளுகாரியும் மய்யித்தை விட்டு தூரமாக இருந்து கொள்வார்கள்.
மய்யித்தை குளிப்பாட்டுவது, கஃபனிடுவது, தொழவைப்பது, அடக்குவது இந் நான்கும் ஃபர்ளு கிபாயாவாகும். ஒரு மய்யித்தை மலக்குகளோ, ஜின்களோ குளிப்பாட்டி, கஃபனிட்டு, தொழ வைக்கக் கண்டாலும் மனிதர்கள் மீது உள்ள கடமை நீங்காது.
மய்யித்திற்கு தேவையான கஃபன் மற்றுமுள்ள செலவினங்கள் அனைத்தும் மய்யித்தினுடைய சொந்தப் பொருளிலிருந்தே செய்ய வேண்டும். மனைவிக்கும், அவளுடைய வேலைக்காரிக்கும் (அவளுக்குரிய சொத்திருந்தாலும் சரி) அந்த மய்யித்துகளுக்கு செலவளிப்பது வசதியுள்ள கணவன் மீது கடமையாகும்.
இறந்து விட்டவருக்கு சொத்து இல்லாவிட்டால் அந்த மய்யித்துடைய வாழ்நாளில் அவருக்கு உணவு உடை அளிப்பது யார் மீது கடமையாயிருந்ததோ அவர் மீது அக்கடமை சாரும். அவ்வாறில்லாதிருப்பின் பைத்துல் மால் என்னும் பொதுநிதியைச் சாரும். பைத்துல்மால் இல்லாதிருப்பின் வசதியுள்ளவர்களின் மீது கடமையாகும்.
மய்யித்தைக் குளிப்பாட்டும் முறை:
தண்ணீரில் தாழ்ந்து மிதந்த மய்யித்தாக இருப்பினும் மேனி முழுவதும் ஒருமுறை தண்ணீர் ஓட்டுவது ஃபர்ளாகும். கத்னா செய்யப்படாதவராக இருந்தால் தோலினுள் தண்ணீர் செல்லாத நிலையிருந்தால் தயம்மும் செய்விக்க வேண்டும். உள்ளே தண்ணீரைச் செலுத்துவதற்காக மய்யித்தை வருத்தப்படுத்துவது ஹராமாகும்.
குளிப்பாட்டுவதில் சிறந்த முறையாவது: மேலே முகடு உள்ள ஒரு கட்டில் போன்ற உயரத்தில் மய்யித்தை வைத்து, குளிப்பாட்டுபவர்களைத் தவிர, மற்றவர்களை அப்புறப்படுத்தி, ஒரு பழைய போர்வை (இளப் போர்வை)யால் மூடி குளிர்ந்த தண்ணீர் கொண்டு குளிப்பாட்ட வேண்டும். குளிர்ந்த நீர் என்பது உப்பு நீராக இருப்பது சிறந்தது. ஏனெனில் உப்பு உடலை உப்ப விடாமல் தடுப்பதால். உடலில் உள்ள பூச்சு பத்து, ஏதேனும் சாயம், அல்லது அழுக்கு ஆகியவற்றை நீக்குவதற்காகவும், அல்லது கூதலாக இருக்கும் காரணத்திற்காகவும், தண்ணீரை வெதுவெதுப்பாக்கிக் கொள்வது நல்லது. ஜம்ஜம் நீரினால் குளிப்பாட்டுவது கூடாது.
குளிப்பாட்டுவதில் ஒற்றைப்படையாக இருப்பதும், குளிப்பாட்டுபவர்கள் நான்கு நபர்களுக்கு மேல் இல்லாமலிருப்பதும், மய்யித்தின் முகத்தை மூடி வைப்பதும், அல்லாஹ்வை திக்ரு செய்வதும், ஷஹாதத் கலிமா சொல்வதும், குளிப்பாட்டுபவர் மய்யித்தை மெதுவாக இருப்பாட்டித் தன்னுடைய வலது முட்டுக்காலில் கொஞ்சம் சாய்த்து வைப்பதும், மய்யித்தில் ஏதேனும் குறையைக் கண்டால் அதனை மறைப்பதும் சுன்னத்தாகும்.
முதலில் மய்யித்தின் மேலிலுள்ள நஜீஸை நீக்கிக் கொள்ள வேண்டும். குளிப்பாடடுகிறவர் தன் கையில் ஒரு துணியை சுற்றிக் கொள்ள வேண்டும். உறுப்புகளுக்குரிய துஆவையும், திக்ரையும் சொல்லி ஒழு செய்து அதற்குரிய துஆவை ஓதியபின் கையை கீழே போட்டு 'ஸூரத்துல் கத்ர்-இன்னா அன்ஸல்னா' ஸூராவை 3 தடவை ஓதிக் கொள்வது சுன்னத்தாகும். பின்வரும் துஆவை தனக்கும் மய்யித்துக்கும் சேர்தது கேட்க வேண்டும்.
اَللّٰهُمَّ اجْعَلْنِيْ وَاِيَّاهُ مِنَ الْمُتَطَهِّرِيْنَ . وَاجْعَلْنِيْ وَاِيَّاهُ مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ . وَاجْعَلْنِيْ وَاِيَّاهُ مِنَ الَّذِيْنَ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ .
பொருள்: 'யா அல்லாஹ்! என்னையும் இவரையும் பரிசுத்தவான்களில் உள்ளவர்களாக ஆக்கியருள்வாயாக! என்னையும் இவரையும் உன்னுடைய நல்லடியார்களில் உள்ளவர்களாக ஆக்கியருள்வாயாக! என்னையும் இவரையும் அச்சமும் கவலையும் இல்லாதவர்களாக ஆக்கியருள்வாயாக!'
குளிப்பாட்டுகிறவர் தன்னுடைய கலிமா விரலால் மிஸ்வாக் செய்வித்து, சுண்டு விரலால் மூக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். இலந்தை இலை, சீயக்காய், அரப்பு, சோப்பு போன்றவற்றால் சிரமப்படுத்தாமல் மெதுவாகத் தேய்த்து கடப்புச் செய்யாமல் வலப்பக்கம் தொடங்கி, உடல் முழுவதும் மூன்று தடவை தண்ணீரை ஓட்டிக் குளிப்பாட்ட வேண்டும். கடைசியில் சிறிதளவு சூடம் கலந்த தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டி முடிந்தவுடன் மெல்லிய துணியால் துடைப்பது சுன்னத்து.
தண்ணீர் கிடைக்காவிட்டாலும் அல்லது மய்யித்து நெருப்பில் வெந்திருப்பதினாலோ அல்லது தண்ணீரில் நீண்ட நேரம் கிடந்ததினாலோ அதைக் குளிப்பாட்டுவதால் சேதமடைந்து விடும் என்று இருந்தாலோ தயம்மும் செய்து விப்பது வாஜிபாகும். தற்'கொலை செய்தவனுக்கும் நான்கு ஃபர்ளுகளையும் நிறைவேற்றுவது ஃபர்ளாகும்.
ஆண்களை ஆண்களும், பெண்களை பெண்களும்தான் குளிப்பாட்ட வேண்டும். கணவன் மனைவி இருவரில் ஒருவர் மற்றவரைக் குளிப்பாட்டலாம். எனினும் கையில் ஒரு துணியைச் சுற்றிக் கொள்வது சுன்னத்தாகும். மய்யித்தைக் குளிப்பாட்டுவதற்கு தகுதியுள்ளவரே அதற்குத் தொழ வைப்பதற்கும் தகுதியுள்ளவர்.
ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து இன்னா அன்ஜல்னாஹு சூராவை ஏழு தடவை ஓதி அதில் ஊதி அந்த மண்ணைக் கஃபனில் அல்லது கப்ரில் வைத்து விட்டால் அவருக்கு கப்ருடைய வேதனை இலேசாக்கப்படும் என்பதாக அல்லாமா புஜைரமீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'ஃபத்ஹுல் வஹ்ஹாபு' என்றும் நூலில் கூறியுள்ளார்கள்.
கஃபனிடுதல் பற்றிய விபரம்:
கஃபனிடுவதில் பெண்களுக்கு முகமும் மணிக்கட்டுவரை இரு கைகளையும் தவிர மீதியுள்ள உடல் முழுவதையும் ஆண்களுக்கு முழங்காலிலிருந்து தொப்புள் வரைக்கும் மறைப்பது ஃபர்ளாகும்.
ஆண்களுக்குக் கஃபனில் நிரப்பமானது மூன்று அடையவளைந்தானாகும். பெண்களுக்கு நிரப்பமானது இரண்டு அடையவளைந்தானும் ஒரு கைலியும், ஒரு சட்டையும் ஒரு முகமூடியுமாகும். ஆண்களுக்கு ஒரு சட்டையும் ஒரு தலைப்பாகையும் அதிகமாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.
சிறந்த கஃபனாகிறது கிழிசல் இல்லாத கெட்டியான பழைய வெள்ளைத்துணியாகும். அறவே துணி கிடைக்காவிட்டால் தோலோ அல்லது இலைதலையோ அல்லது களிமண் பூசியோ கஃபனிடுவது வாஜிபாகும்.
பெண்களின் ஜனாஸாவாக இருப்பினும் பட்டுத் துணி, தங்கம், வெள்ளி ஜரிகைத் துணியால் மறைப்பது ஹராமாகும்.
கஃபனை அம்பர், சாம்பிராணி போன்றவற்றால் மூன்று தடவை புகைப்பிடிப்பதும், அடையவளைந்தானை ஒவ்வொன்றாக விரித்து அதில் பல மணத்தை வைப்பதும், ஜனாஸாவுடைய உடல் துவாரங்களிலும்( கண்கள், மூக்கு, காதுகள், வாய், முன் துவாரம், பின்துவாரங்கள்), ஸஜ்தாவுடைய ஏழு உறுப்புகளின்(நெற்றி, இருகைகள், இரு கால்கள், இரு முழங்கால்கள்) மீதும் சூடத்துடன் கலந்து பஞ்சை மெதுவாக வைப்பதும் பிறகு அதற்கு மேல் சூடத்தை அதிகமாக வைப்பதும், ஜனாஸாவை மெதுவாக கஃபனில் வைத்து முகம் கவிழ்க்காமல் கஃபனிடுவதும் சுன்னத்தாகும்.
காயம்பட்ட இடங்களிலும் மேற்கூறப்பட்ட வாசனைப் பொருட்களை வைப்பது சுன்னத்தாகும்.
கஃபனில் தலைப்பக்கம், கால்பக்கம் ஆகிய இரு பக்கங்களை துண்டுக்கரையால் கட்டுவது சுன்னத்தாகும்.
ஜனாஸாவை மூன்று நபர்களுக்கு குறைவாகச் சுமந்து செல்வது மக்ரூஹ் ஆகும். கையில் ஏந்திச் செல்லும் குழந்தையாக இருப்பின் குறைவாக இருப்பது கூடும்.
ஜனாஸாவைத் தொடர்ந்து செல்பவர்கள் அதனைச் சேர்ந்தார்போல் முன்னால் கால் நடையாக செல்வதும், திக்ரு, ஷஹாதத் கலிமா சொல்லிக் கொண்டு செல்வதும் சுன்னத்தாகும்.
ஜனாஸா தொழுகை நடைபெறும்போது அவ்விடத்தில் தொழாமல் இருந்தவன் பிறகு அதனைத் தொழுவது சுன்னத்தாகுமென்றிருந்தாலும் அவனுக்கு ஃபர்ளாகவே ஆக்;கப்படும்.
பல ஜனாஸாக்களுக்கு ஒரு தொழுகை போதுமானது. அனைவருக்கும் தொழுவதாக நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனாஸாவை அடக்கிய பின் தொழுவது ஹராமாகும். ஆனால் கப்ரின் அருகில் தொழுதால் ஃபர்ளு நீங்கி விடும்.
அடக்கம் செய்தல்:
கப்ருடைய ஆழத்தில் குறைந்த அளவாவது ஜனாஸாவின் நாற்றம் வெளியில் வராமலும் ஐவாய் மிருகங்கள் தோண்டி எடுத்துவிடாத அளவிலும் இருப்பதாகும். இதில் நிரப்பமாகிறது:
'சுமார் நாலரை முழம் ஆழமும் ஒன்றரை முழ அகலமும் உள்ளதாகும். கப்ருடைய அடிப்பாகத்தில் கிப்லாவின் புறத்தில் பிள்ளைக் குழி தோண்டி அதில் ஜனாஸாவை நுழைய வைப்பது சிறந்ததாகும். கெட்டியான பூமியாக இருப்பின் இவ்வாறு தோண்டலாம். இல்லாவிட்டால் கப்ரின் நடுவில் மய்யித்திற்கு அளவான குழியைத் தோண்ட வேண்டும். பெட்டியில் வைத்து அடக்குவது மக்ரூஹ்(பூமி மணற்பாங்கானதாக அல்லது தண்ணீர் ஊறும்படியானதாக இருந்தாலே தவிர).
மண்வெட்டி அல்லாத கருவிகளால் தோண்டுவது மக்ரூஹ். கப்ரில் ஜனாஸாவை இறக்கும்போது தேவையான அளவுக்கு ஆட்கள் ஒற்றைப்படையாக இருந்து, கப்ரின் கால்மாட்டின் பக்கமாக மய்யித்தின் தலையைக் கொண்டு போய் கப்ருக்குள் இறக்கி வைத்து ஒரு திரையினால் மூடிக் கொண்டு, வலது கன்னத்தை விட்டும் கஃபனை நீக்கி மண்ணில் அதனை சேர்த்து வைத்து, பச்சைச் செங்கள் போன்றதை தலைக்கு தலையணை போன்று வைத்து, கட்டுகளை அவிழ்த்து விட்டு, பிறகு பிள்ளைக் குழியைச் செங்கள் போன்றவற்றால் அடைப்பது சுன்னத்தாகும். சுட்ட செங்கலையோ அல்லது நெருப்பில் வெந்த ஏதேனும் ஒரு பொருளையோ கப்ருக்குள் வைப்பது நான்கு இமாம்களிடத்திலும் மக்ரூஹ் ஆகும்.
மய்யித்தின் முகத்தை கப்ரில் கிப்லாவுக்கு நேராகத் திருப்பி வைப்பது வாஜிபாகும்.
கப்ரில் மய்யித்தை இறக்கும் போது,
بِسْمِ اللهِ وَعَلٰى مِلَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
என்று சொல்வது சுன்னத்து.
முன்னால் அடக்கப்பட்ட மய்யித்து முற்றிலும் மக்கி அழிவதற்கு முன் அந்தக் கப்ரைத் தோண்டுவதும், அதில்வேறொரு மய்யித்தை அடக்குவதும் ஹராமாகும். சில முக்கியமான காரியங்களுக்காகவே தவிர பொதுவாகக் கப்ரைத் தோண்டுவது ஹராம். அவையாவன: குளிப்பாட்;டாமல் அடக்கியிருப்பின், முதலில் அடக்கப்பட்ட மய்யித்து முற்றிலும் மக்கிப் போயிருந்தால், அபகரிக்கப்பட்ட பிறருடைய நிலத்தில் அடக்கப்பட்டிருப்பின், பிறருடைய பொருளை அவன் வயிற்றில் விழுங்கியிருந்தால், கப்ரில் மோதிரம் போன்ற ஒரு பொருள் விழுந்திருந்தால், கிப்லா அல்லாத திசையில் அடக்கப்பட்டிருந்தால், ஒரு காபிரை ஹரம்ஷரீபில் அடக்கியிருந்தால், வாரிசுதாரர்கள் அடக்கப்பட்டவர் ஆணா,பெண்ணா என்று தர்க்கித்துக் கொண்டிருந்தால், வயிற்றில் குழந்தையுடன் அடக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருக்கிறது அதை எடுக்க முடியும் என்று தெரிந்தால்,ஒருவன் கர்ப்பமுற்றிருந்த தன் மனைவியை நோக்கி உன் வயிற்றிலிருப்பது ஆணாக இருந்தால் நீ தலாக் என்று சொல்லியிருக்க, அவள் இறந்து அதனை அறிவதற்கு முன் அடக்கப்பட்டு விட்டால் போன்ற நிர்பந்தமான நிலைகளில் கப்ரைத் தோண்டலாம்.
கப்ரைத் தோண்டிக் கொண்டிருக்கும்போது எலும்பு காணப்பட்டால் அந்த எலும்பை அதே இடத்தில் போட்டு மூடிவிட்டு வேறு இடத்தில் கப்ரு தோண்டுவது வாஜிபு.
ஒரு கப்ரில் ஆண், பெண் இருவரை அடக்குவது ஹராமாகும். ஆனால் திருமணம் செய்ய ஹராமானவர்களாக இருந்தால் அல்லது கணவன் மனைவியாக இருந்தால் அவ்வாறு அடக்கலாம்.கப்ரின் அருகில் நிற்பவர்கள் ஒரு கைகளினாலும் கப்ரின் தலைப்பக்கத்தில் மூன்று தடவை மண் எடுத்து முதல் தடவையில், مِنْهَا خَلَقْنَاكُمْ
என்று கப்ரில் போடவும். இரண்டாவது தடவையில்,
وَفِيْهَا نُعِيْدُكُمْ என்றும்
மூன்றாவது தடவையில்
وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى என்றும் கூறி அம்மண்ணை கப்ரில் போடுவது சுன்னத்து.
கப்ரை ஒரு சாண் அளவு உயர்த்தி முகடு போன்று ஆக்குவதும், ஒரு பெரிய கல்லை, அல்லது குறிப்பு பலகையை தலைமாட்டில் ஊன்றி வைப்பதும், அதன் கால் பக்கமும் அவ்விதம் செய்வதும் , செடி, கொடிகளை ஊன்றி வைப்பதும,; இன பந்துக்களை அருகருகில் ஒன்று சேர்த்து அடக்குவதும் சுன்னத்தாகும்.
முஸ்லிம்களின் கப்ரை மிதிப்பது மக்ரூஹ் ஆகும். அடக்கியபின் கப்ருக்கருகில் துஆ செய்வதும், குர்ஆன் ஓதி ஹதியா செய்வதும் சுன்னத்தாகும். கப்ரின் தலைமாட்டில் இருந்து தல்கீன் ஓதுவது சுன்னத்தாகும். மற்றவர்கள் நிற்பது நல்லது.மய்யித்து பெண்ணாக இருந்தால் கிப்லாவை முன்னோக்கியும், ஆணாக இருந்;தால் கிப்லாவை பின்னோக்கியும் உட்கார்ந்து ஓதுவது முஸ்தஹப்பாகும்.
ஹனபி மத்ஹபில் தல்கீன் ஓதுவது அவசியமில்லை. ஆனால் ஷாபி மத்ஹபுகாரர்கள் அவ்வாறு ஓதுவதை தடுக்கக் கூடாது.
காபிருடைய ஜனாஸாவிற்கு தொழ வைப்பது ஹராமாகும். எந்த மய்யித்தாக இருப்பினும் கயிற்றால் கட்டி இழுத்துச் செல்வதும், அலங்கோலமாக சுமந்து செல்வதும், நாற்றமடிக்க போட்டு வைப்பதும் ஹராமாகும்.
ஜிஹாத் என்னும் மார்;க்கப் போரில் ஷஹீதானவர்களை குளிப்பாட்டுவதும், தொழ வைப்பதும் ஹராம். அவர்களுடைய உடலில் படிந்திருக்கும் இரத்தக் கறையை நீக்குவதும் ஹராம்.
கடலில் கப்பலில் இறந்தவர்களை கரைக்குக் கொண்டுவருவது சிரமமானால் நான்கு ஃபர்ளுகளையும் நிறைவேற்றி இரண்டு பலகைகளுக்கு இடையில் அல்லது இரண்டு கம்புகளுக்கு இடையில் ஜனாஸாவை வைத்து கனமான பொருளை அத்துடன் கட்டிக் கடலில் இறக்க வேண்டும்.
ஷஹீதானவர்களைப் போன்று பத்து நபர்களுக்கு மறுமையின் நன்மை வழங்கப்படும். ஆனால் அவர்களை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழவைத்து அடக்க வேண்டும். அவர்கள்:
அநியாயமாக கொலை செய்யப்பட்டவர்கள், காலரா,பிளேக்கு போன்ற நோயினால் இறந்தவர்கள், தாய், தந்தை மகன் அனைவரைவிட்டும் தனித்திருக்கும் நிலையில் பரதேசியாய் இறந்தவர்கள், நெருப்பினால் கரிந்து, நீரில் மூழ்கி, வீடு போன்றவை இடிந்து விழுந்து, பாம்பு போன்ற விஷ ஜந்து கடித்து இறந்தவர்கள், பிள்ளைப் பேறு உடைய வருத்தத்தினால் இறந்தவர்கள், பிள்ளைப்பேறு தொடக்கு (நிபாஸ்) நீங்குமுன் இறந்தவர்கள், மார்க்க கல்வியை கற்கும் காலத்தில் இறந்தவர்கள், உண்மைக் காதலினால் இறந்தவர்கள்( அது எவ்வித இஷ்க்காக இருந்தாலும் சரி) ஆகியோர்களாவார்.
முற்றும்.