Hyderabad Sufi Hazrath-ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத்

Hyderabad Sufi Hazrath-ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத்

By Sufi Manzil 0 Comment February 11, 2010

ஹைதராபாத் ஸூபி ஹஜரத் ரலியல்லாஹு அன்ஹு.

இவர்களின் தகப்பனார் பெயர் மீர் ஆலம். அவர்களின் தகப்பனார் பெயர் அஹ்மது அப்தால். ஆப்கானிஸ்தான் காபூலில் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள்.

ஹைதரபாத்தில் குத்புஸ்ஸமான் ஷாஹ் ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நடத்தி வந்த அரபிக்கல்லூரியின் பிரபல்யமும், அவர்களின் தரீகாவின்(முஜத்திதிய்யா.நக்ஷபந்தியா) பிரபல்யமும் காபூலில் நன்கு பரவியிருந்தது.  எனவே அந்த அரபிக் கல்லூரியில் சேரவேண்டும் என்ற நோக்கத்துடனும், அவர்களின் சில்சிலாவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்துடனும் காபூலிலிருந்து புறப்பட்டு டெல்லி வந்து பின்பு ஹைதராபாத் வந்து சேர்ந்தார்கள் ஸூபி ஹஜ்ரத் அவர்களின் தகப்பனார் மீர் ஆலம் அவர்கள். சுமார் 4 வருடங்கள் இங்கு தங்கி கல்வி பயின்று இரவு வணக்கத்தில் ஈடுபட்டும், பகலில் கல்வி கற்றும் வந்து ஸனது பெற்றார்கள். ஸஅதுல்லாஹ் ஷாஹ் அவர்கள் அவர்களுக்கு பைஅத் கொடுத்து தங்கள் கலீபாவாகவும் ஆக்கி கொண்டார்கள்.

ஹைதராபாத் சமஸ்தானத்தில் உள்ள ஜனவாடா தாலுக்காவிற்குப் பக்கத்தில் பீதர் ஷரீப் என்ற இடத்தில் மௌலவி ஹமீத்கான் ஜமீன்தார் என்ற நல்ல மனிதர் ஷாஹ் ஸஅதுல்லாஹ் அவர்களின் முரீது. நல்ல கொடையாளி. இவர்களின் மூதாதையர்களும் ஆப்கானிஸ்தானைச் சார்ந்தவர்களே! இவர்கள் தங்கள் மகளை மீர் ஆலம் அவர்களுக்கு மணமுடித்துப் கொடுக்க விருப்பப்பட்டு ஷெய்கு அவர்களிடம் சொன்னபோது ஷெய்கு அவர்களும் மீர் ஆலம் அவர்களிடம் ஒப்புதல் கேட்டு மணமுடித்து வைத்தார்கள். இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன. முதல் பெண் குழந்தை இறந்துவிட்டது. இரண்டாவது ஆண் குழந்தை நமது ஷெய்குநாயகம் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி அவர்கள்.

உருவ அமைப்பு:-

முஹம்மது அப்துல் காதிர் ஸூபி அவர்கள் உயரமாகவோ, கு;டையாகவோ இல்லை. நடுத்தர உயரமுடையவர்கள். ரோஜாப் பூ போன்ற நிறமுடையவர்கள். முகம் அகலமாகவும் தாடி அடர்த்தியாகவும் இருக்கும். கன்னத்தில் மீசைக்கு மேல் மூக்குக்கு பக்கத்தில் ஒரு பருவுமச்சம் கருப்பாக மிக அழகாக அமைந்திருக்கும். கண் மிகவும் அழகு.அகன்ற நெற்றி. மிகவும் இரக்கமும், அனுதாபமும் உள்ளவர்களாகவும்,இகையில் சிறந்தும் விளங்கினார்கள். தங்கள் நண்பர்களிடமும், முரீதுகளிடமும் சரிசமமாக நடந்து வந்தார்கள். விருந்தளிப்பதில் விசேஷ கவனமாக இருந்தார்கள். ஷெய்கை பார்த்தவுடன் அன்பும், பிரியமும் ஏற்பட்டு விடும். அவர்களின் நடை பூமியைப் பார்த்தவர்களாகவும், உயரத்திலிருந்து கீழே இறங்குவது போலும் இருக்கும்.

கல்வி:-

ஸூபி நாயகமவர்களின் தாயார் நல்ல மார்க்க அறிஞராக இருந்தார்கள். நாயகமவர்களுக்கு நான்கு வயது நான்கு மாதமானவுடன் மத்ரஸாவில் சேர்த்தார்கள். மத்ரஸாவில் மூன்று,நான்கு வருடங்கள் ஓதினார்கள். இச்சமயத்தில் இவர்களின் பாட்டனாரும் அதைத் தொடர்ந்து இவர்களின் தாயாரும் மறைந்து விடவே இவர்களின் படிப்பு சில காலம் நின்றுவிட்டது. சில காலம் கழித்து மௌலவி முஹம்மது வஸீர் கிப்லா அவர்களிடம் கல்வி கற்கச் செய்தனர். ஹைதராபாத்திற்கு சென்று வரும் வழக்கமுடைய ஷெய்குநாயகமவர்களின் தகப்பனார் அவர்கள், தங்கள் பிள்ளையின் கல்வியில் அக்கறை கொண்டு பி;ள்ளையையும் ஹைதராபாத் அழைத்து வந்திருந்தனர்.

அச்சமயத்தில் ஷெய்கு ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகி கொஞ்ச காலம் ஆகியிருந்தது. அவர்கள் ஸ்தானத்தில் அவர்களின் மற்றொரு கலீபா ஷாஹ்மீர் அஷ்ரப் அலி ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து மத்ரஸாவை நடத்திவந்தர்கள். அவர்களி;டம் தங்கள் பிள்ளையை கல்விக்காக சேர்த்தார்கள். அவர்களிடம் பைஅத்தும் பெற்றார்கள். ஷெய்கு ஷாஹ்மீர் அஷ்ரப் அலி ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இல்லத்திலேயே தங்கி கல்வி பயின்று வந்தார்கள். சில வருடங்களிலேயே சகல கல்வியிலும் தேர்ச்சி பெற்றார்கள். சிறு வயதிலேயே பார்ஸி மொழியில் கவி பாடத் துவங்கினார்கள். இந் நிலையில் கல்வி கற்று முடியும் முன் ஷெய்கு அஷ்ரப் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு திடீரென சுகக் குறைவு ஏற்பட்டு வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா ஷெய்கு ஸஅதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ருஷரீபின் விலாப் புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் மத்ரஸா நடப்பது நின்றுவிட்டது. எனவே தங்கள் கல்வியை சிறந்த கல்விமானாக விளங்கிய முல்லா உபைதுல்லாஹ் கந்தாரி அவர்களிடம் கற்று முடித்து ஸனது அவர்களிடமே வாங்கினார்கள்.

கிலாபத்:-

ஹஜ்ரத் மீர் அஷ்ரப் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குடும்பத்தில் இருந்த பெரிய ஷெய்கு மௌலானா ஸுல்தானுத்தீன் ஸாஹிப் நக்ஷபந்தி, முஜத்திதீ அவர்களிடம் நுட்பமான, அகமியமான கல்விகளைக் கற்று இவர்களிடமே நக்ஷபந்தியா, முஜத்திதியா தரீகாவுடைய கிலாபத்தையும் பெற்றுக் கொண்டார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் மதீனாஷரீஃப் ஜன்னத்துல் பகீஃயில் அமைந்துள்ளது.

வியாபாரமும், திருமணமும்:

ஸூபி நாயகமவர்களின் தகப்பனார் 'நாராயண் கேடா' என்னும் ஊரில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். தகப்பனாருடன் சேர்ந்து மகனும் அத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். இச்சமயத்தில் அவர்களுக்கு வயது பதினெட்டு. பகல் முழுவதும் வியாபாரத்தை கவனிப்பதும், இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதுமாக இருந்தார்கள்.

இருபத்தி ஐந்தாம் வயதில் ஒரு கண்ணியமான குடும்பத்தில் திருமணம் முடித்து வைத்தார்கள்.12 வருடம் வியாபாரம் நல்லவிதமாக நடந்துவந்தது. இவர்களுக்கு 4 ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்தன. ஜவுளி வியாபாரம் கடன்பட்டதால் அதை மூடி விட்டு, பீதர்ஷரீஃப் வந்துவிட்டார்கள்.

பீதர்ஷரீஃபில்  மத்ரஸா முஹம்மதிய்யா என்ற பெயரில் ஒரு மார்க்க பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார்கள். இச் சமயத்தில் அவர்களி;ன் மனைவிக்கு சுகக் குறைவு ஏற்பட்டதால், இவர்கள் பீரானி அம்மா என்ற மாதரசியை இரண்டாவதாக திருமணம் முடித்தார்கள். இவர்களுக்கு 5 பெண்,ஒரு ஆண் குழந்தைகள் பிறந்தன. இதற்கிடையில் முந்திய மனைவி வபாத்தாகிவிட்டார்கள். மத்ரஸா நிதி நெருக்கடியால் மூடவேண்டிய pலை ஏற்பட்டது. பிள்ளைக் குட்டிகளை பீதர்ஷரீபில் விட்டுவிட்டு ஹைதராபாத் வந்து ஒவ்வொரு இடமாக சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்கள்.

மஹ்பூபு நகர் வந்து அங்கு மத்ரஸா ஆரம்பித்து அது சிறப்பாக நடந்து வந்தது. மத்ரஸாவுடன் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வந்தார்கள்.

ஷெய்கு ஸெய்யிதுஸாதாத் இஸ்மாயில் மஜதூபுஸ்ஸாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்தல்:-

வக்கில் மௌலவி அப்துல் கையூம்கான் ஸாஹிப் அவர்களுடன் ஸூபி நாயகம் அவர்கள் சாக்னேவாடி தெருவில் தங்கியிருந்த ஸெய்யிதுஸாதாத் இஸ்மாயில் மஜதூபுஸ்ஸாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்கச் சென்றார்கள். இவர்கள் போன சமயம் முன்ஷி ஹஜ்ரத் அவர்களுக்கு ஸுலூக் உடைய காலமாயிருந்தது. ஸூபி நாயகமவர்கள் முன்ஷி ஹஜ்ரத் அவர்களிடம், 'நான் தங்களிடம் துஆவுக்காக வந்துள்ளேன்' என்று சொன்னதும், முன்ஷி ஹஜ்ரத் அவர்கள் ஸூபி நாயகமவர்களின் கண்ணோடு தனது கண்ணை சேர்த்து பர்த்து, தலையை அசைத்து 'நல்லது,நல்லது என்று சொன்னார்கள். நடந்தது இவ்வளவுதான்!

இதற்குப்பிறகு, ஸூபி நாயகமவர்களுக்கு தங்கள் பிள்ளைக்குட்டி, குடும்ப கவலைகள், காண்டாக்ட் சம்பந்தமான நினைப்போ இல்லை. இவ்வுலக மனுஷராக அவர்கள் இல்லை. ஜத்புடைய நிலையிலாகிவிட்டார்கள். சுமார் 2 வருடம் வரை இதே நிலைமை நீடித்தது. அதன்பின் ஸுலூக்குடைய படித்தரத்திற்கு திரும்பினார்கள். இச் சமயத்தில் கிடைத்த காண்ட்ராக்ட் வேலைகள் கை நழுவிப் போயின.

ஷெய்கு ஸெய்யிதுஸாதாத் இஸ்மாயில் மஜதூபுஸ்ஸாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் பற்றியும், அடைந்த பாக்கியங்கள் பற்றியும் அரபி, பார்ஸி, உருது பைத்களும் கொண்ட 'புகானே ராஸ்' என்ற புத்தகத்தில் தெளிவுபட கூறியுள்ளார்கள்.

மேலும் அல்ஹக்கு, அத்தகாயிகு, அஸ்ஸுலூக்கு, அல்ஹகீகா, அல்ஹக்கு1, அஸ்ராருல் குர்ஆனிய்யா ஹகாயிகுல் புர்கான் என்ற நூல்களும்; இயற்றியுள்ளார்கள்.

ஜத்புடைய காலங்களுக்குப் பின் அவர்கள் உபதேசம் அதிகமதிகம் செய்தனர். அவர்களின் உபதேசத்திற்கு மக்கள் திரளாக வருகை தந்து நற் பயன் பெற்றனர். தங்களுடைய வபாத்திற்கு ஏழு, எட்டு வருடங்களுக்கு முன்பு பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்தவர்களுக்கு ஷம்ஷியாபாத்திலுள்ள தம் இல்லத்தில் தங்க வைத்து அவர்களுக்கு திக்ரு, முராகபா,தியானம்,முஷாஹதா முதலியவைகளில பயிற்சி கொடுத்து பலருக்கு கிலாபத்தும் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பி வந்தார்கள்.

தொடர்ச்சியாக உபதேசம் செய்ய ஆரம்பித்ததால் காண்ட்ராக்ட் வேலைகளை சரிவர கவனிக்க முடியாமல் நிறுத்தும்படி ஆகிவிட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களை பார்த்து நன்மாராயம் பெறுதல்:-

ஸூபி நாயகமவர்கள் சொல்லியிருக்கிறார்கள்: 'ஒரு நாள் நான் முராகபாவிலிருக்கும் போது பிரகாசமான மாளிகையைக் கண்டேன். அந்த மாளிகையிலிருந்து பிரகாசமான மனிதர்கள் வருவதும்,போவதுமாக இருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்துக் கேட்டேன், 'இங்கு என்ன விசேஷம்?' என்று. அதற்கவர்கள் இந்த மாளிகையில் மஹ்பூபு சுபுஹானி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வருகை தந்துள்ளார்கள் என்றார்கள். நான் ஆவல் ஏற்பட்டு அம் மாளிகைக்குள் சென்று பார்த்தேன். அங்கு நாயகமவர்கள் ஒரு அழகான நாற்காலியில் அமர்ந்திருந்தாhக்ள் அவர்கள் அங்கிருந்த மனிதர்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்றுநேரத்தில் என்பக்கம் திரும்பி தங்களது முபாரக்கான விரலை சைக்கினை காட்டி சொன்னார்கள், 'சர்வமும்(மெயப் பொருள்) ஹக் அவனே!' என்று.

இது விசயத்தில் நமக்கு சந்தேகம் இருந்து கொண்டிருந்ததே! இவ்விதம் நாயகமவர்கள் சொல்கிறார்களே! என்று நினைத்தேன். உடனே அவர்கள் சொன்னார்கள், 'ஹமாஊஸ்த் வஹ்தத்துல் உஜுது விஷயத்தில் தங்களுக்கு நன்மாராயம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தங்கள் திருவாயால் மலர்ந்தார்கள். உடனே நான் நாயகமவர்களின் பாதங்களில் விழுந்துவிட்டேன். ஆண்டவர்கள் தங்கள் கையை என் நெஞசில் வைத்தார்கள். நான் விழித்துக் கொண்டேன். அப்போது பஜ்ரு உடைய பாங்கு சொல்லிக் கொண்டிருந்தது. எனது நெஞ்சு இறைவனது மெஞ்ஞானத்தைக் கொண்டு விசாலமாகிவிட்டது. இப்போது என்னை தூக்குமரத்தில் ஏற்றினாலும் நான் வஹ்தத்து உஜுது எனும் கொள்கையிலிருந்து மாறமாட்டேன்' என்று சொன்னார்கள்.

ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத் பெறுதல்:-

ஒரு தடவை முராகபாவில் இருக்கும்போது, 'ஒரு மஜ்லிஸில் குத்புநாயகம் ஸெய்யிது ஸாதாத் இஸ்மாயில் ஸூபி அவர்களும், அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் வீற்றிருக்கிறார்கள். ஸூபி நாயகம் அவர்கள் என் கையைப் பிடித்து அலி நாயகத்திடம் கொடுத்து நேரடியாக பைஅத் பெறும் பாக்கியத்தை ஏற்படுத்தி தந்தார்கள்.

பின்பு என் வாயில் அவர்களின் உமிழ் நீரை செலுத்தினார்கள்.அவர்களின் உமிழ்நீரை என் முகத்திலும் உமிழ்ந்தார்கள். பின்பு பேசுங்கள்! என்றார்கள். இதன்பின் எனது அறிவு விசாலமானதாகவிட்டது. என்னுடைய விரோதிகள் கூட அப்துல்காதிர் அவர்களை சீண்டவேண்டாம்! அவர்கள் உரை இல்லாத கூரிய வாளாயிருக்கும்! அதன்பக்கம் விரோதத்துடன் யார் சென்றாலும் அவர்கள்தான் வெட்டுப்பட்டு அழிந்து போவார்கள்' என்று சொல்கிறார்கள்.

ஹைதராபாத் சௌக்கி ஜும்ஆ பள்ளியில் ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும் ஜும்ஆவிற்குப்பின் உபதேசம் ஆரம்பித்தர்கள். மக்கள் திரளாக கூட்டம்கூட்டமாக வந்து இவர்களின் உபதேசத்தைக் சேட்டவண்ணம் இருந்தனர். 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹி வலாஹி லாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்' என்ற ஆயத்துக்கு மட்டும் சுமார் மூன்றரை வருடங்கள் வியாக்கியானம் செய்தார்கள். ஒருநாள் செய்த வியாக்கியாத்தின் கருத்து அடுத்து வரும் நாட்களில் இருக்காது. அடுத்து 'அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்' என்ற ஆயத்துக்;கு இரண்டு வருட காலமும், பிஸ்மில்லாஹ் ஆயத்துக்கு ஒன்றரை வருடமும், 'இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன் என்ற ஆயத்துக்கு மூன்றரை வருடமும் வியாக்கியானம் செய்தார்கள்.

ஸூபி நாயகமவர்களின் மஜ்லிஸுகயில் மனிதர்கள் மட்டுமின்றி ஜின்களும், அவுலியாக்களும் வருகிறார்கள். அதை நாம் நன்கு அறிவோம் என்று குத்பு நாயகம் ஸெய்யிது இஸ்மாயில் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் நல்லவிதமாக உபதேசம் செய்தார்கள் என்று யாராவது அவர்களிடம் சொன்னால், அவர்கள் எங்கு உபதேசம் செய்தார்கள்? நாமல்லவா உபதேசம் செய்தோம்' என்று சொல்வார்கள். இவ்வாறு பல்வேறு ஊர்களுக்கும் சென்று உபதேசம் செய்தார்கள். அடுத்து ஷம்ஷியாபாத்தில் சொந்தமாக வீடு ஒன்று கட்டினார்கள். இவர்களின் உபதேசம் மிகவும் பிரபலமாயிருந்ததால் நிஜாம் அவர்கள் இவர்களின் ஜீவிய காலம்வரை மாதம் ஒன்றுக்கு ரூ நூறு சன்மானமாக கொடுக்க உத்தரவிட்டார்.

சென்னை வருகை:

சென்னை திருவல்லிக்கேணி மீலாது கமிட்டி (ஹைதராபாத் நிஜாமிடமிருந்து மானியமாக பணஉதவி பெற்றுக கொண்டிருந்த) ஒன்று நிஜாம் அவர்களிடம் உபதேசம் பண்ண ஆள் அனுப்பும்படி கேட்டிருந்தது அதன்படி ஸூபி நாயகமவர்களிடம் அனுமதி பெற்று அவர்களும் சென்னை பயணமானார்கள். அங்கு அவர்கள் நீண்டதொரு பயானை செய்து முடித்தார்கள். மக்களுக்கு அவர்களின் உபதேசம் நன்கு பிடித்திருந்தது. எனவே அதிக நாட்கள்(29 நாட்கள்) தங்கி மேலும்மேலும் பயான் பண்ணினார்கள். இச்சமயத்தில் அனேகர் அவர்களிடம் பைஅத் பெற்று பாக்கியம் பெற்றுக் கொண்டார்கள்.

அடுத்த வருடமும் இவர்களை பயானுக்கு சென்னை மக்கள் அழைத்திருந்தனர். அவர்களும் வந்திருந்தனர். சென்னை பெரம்பூர் ஜமாலிய்யா மத்ரஸாவின் உலமாக்களும்,மாணவர்களும், பெரியோர்களும் பைஅத்து பெற்று பாக்கியம் பெற்றனர். அடுத்து வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத் அரபிக் கல்லூரிக்கு சென்று அங்கும் உபதேசம் செய்தார்கள். அங்கு மாணவர்களும்,மக்களும், உஸ்தாதுமார்களும் பைஅத்து பெற்றேகினர்.

பொதக்குடி மத்ரஸாவிற்கு வருகை:

பெரம்பூர் ஜமாலிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா மதார் ஹஜ்ரத் அவர்கள் வபாத்தின் போது ஸூபி நாயகம் அவர்கள் பெரம்பூர் அமீர்பாஷா ஹஜ்ரத் அவர்கள் வீட்டில்தான் இருந்தார்கள். இந்த மறைவு செய்தி அறிந்ததும், பொதக்குடி மத்ரஸா அந்நூருல் முஹம்மதிய்யாவின் முதல்வர் அப்துல் கரீம் ஹஜ்ரத் அவர்கள் அன்னாரை ஜியாரத் செய்வதற்காக சென்னை வந்தார்கள். அச் சமயம் அங்கிருந்த ஸூபி நாயகமவர்களை சந்தித்து மத்ரஸாவிற்கு வருகைதர அழைப்பு விடுத்தார்கள். அவ்வழைப்பை ஏற்றுக் கொண்டார்கள் ஸூபி நாயகமவர்கள்.

அதன்படி பொதக்குடி வந்த ஷெய்குநாயகமவர்களை அப்துல்கரீம் ஹஜ்ரத் அவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றார்கள்.த தங்கள் மாணவர்களைப் பார்த்து, 'உங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்குமோ அவ்வளவு நேரத்தை ஷெய்கு அவர்களிடம் செலவிட்டு அன்னாரிடம் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்கள். மேலும் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புஸூஸுல் ஹிகம் கிதாபை ஓதிக் கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து, முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களே வந்துள்ளர்கள.; அவர்களை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்கள். (இச் சமயத்தில்தான் காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் அவர்களும், அவர்களுடைய நண்பர் அஹ்மது மீரான் ஸூபி அவர்களும் ஷெய்கவர்களை சந்தித்து, அவர்களின் ஹைதராபாத் வரவேண்டுமென்ற வேண்டுகோளை ஏற்றனர்.)

மேலும் பொதக்குடி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, பூதமங்கலம், நாகூர், கொடிக்கால்பாளையம், காரைக்கால் போன்ற நகரங்களுக்கும் சென்று தரீகாவை பரப்பினார்கள். அவர்களிடம் ஏராளமானோர் பைஅத் பெறும் பாக்கியம் பெற்றனர். கொழும்பு,இரங்கூன், சிங்கப்பூர்,மலாயா,ஜாவா,சுமத்ரா, சி;போயா நாடுகளிலுள்ளவர்களும் இந்த தரீகாவின் தொடர்பை ஏற்படுத்தி பாக்கியம் பெற்றுக் கொண்டுள்ளனர். பர்மாவாசிகளின் அழைப்பை ஏற்று இருதடவை ரங்கூனுக்கும் போய் வந்துள்ளார்கள்.

எண்ணற்ற இறைநேசர்களுக்கும், ஞானவான்களுக்கும் ஷெய்காக திகழ்ந்த ஷெய்கு முஹம்மது அப்துல்காதிர் ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி1356 ம் ஆண்டு ஷவ்வால் பிறை 10 செவ்வாய்க் கிழமை தங்களது 77 வது வயதில் இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள்.

அன்னாரின் புனிதமிகு ஜனாஸா ஹைதராபாத்தில் மிஸ்ரிகன்ஜ் என்னுமிடத்தில் அடக்கப்பட்டு இன்றும் ஜியாரத் நடைபெற்று வருகிறது.