அபூதுஜானா ரலியல்லாஹு அன்ஹு

அபூதுஜானா சிமாக் இப்னு ஃகரஷா, மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த அன்ஸாரி. அவருடைய பெற்றோர் அவ்ஸ் பின் ஃகரஷா, ஹுஸ்மா பின்த் ஹர்மலா.

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தபோது அவர்களுக்கும் மதீனத்து அன்ஸார்களுக்கும் இடையே நபியவர்கள் ஏற்படுத்திய சகோதர பந்தத்தில் உத்பா பின் கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு அன்ஸாரித் தோழரான அபூதுஜானா சகோதரராக அமைந்தார். தலைசிறந்த இரு தோழர்களுக்கு இடையே அழகிய உறவு உருவானது.

பத்ருப் போரில் கலந்துகொள்ளும்போது அந்த அடையாளத்தைத் தமக்கு அமைத்துக்கொண்டார் அபூதுஜானா.

அதன்பின், உஹதுப் போரில் அவர் ஆற்றிய பங்கு அவரது வீரத்தின் பெரும் பெருமையை விவரித்துள்ளது.

உஹதில் போருக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டுப் படையினருக்குத் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்தார்கள் நபியவர்கள். அவர்களது பேச்சு தோழர்களுக்கு எக்கச்சக்க ஆர்வம் ஊட்டியது. இறைத்தூதரிடம் கூர்மையான ஒரு வாள் இருந்தது. அதை உருவி, “யார் இதை என்னிடமிருந்து பெற விழைகிறீர்கள்?” என்று கேட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

தயக்கமே இன்றிக் கேட்டார் அபூதுஜானா. “அல்லாஹ்வின் தூதரே! அந்த வாளுக்குரிய கடமை என்ன?”

“இந்த வாள் வளையும்வரை இதன் மூலம் எதிரிகளின் முகங்களை நீர் வெட்ட வேண்டும்” என்றார்கள் நபியவர்கள்.

அதை முற்றிலுமாய் உணர்ந்துகொண்ட அபூதுஜானா, “அல்லாஹ்வின் தூதரே! இதன் கடமையை நான் நிறைவேற்றுவேன்” என்று தம் கரத்தை நீட்ட நபியவர்களிடமிருந்த வாள் கைமாறியது.

அதைப் பெற்றுக்கொண்டதும் தம்முடைய சிவப்புத் துணியைக் கட்டிக் கொண்டார் அபூதுஜானா. அதைப் பார்த்த மதீனாவாசிகளிடம் “ஆஹா! அபூதுஜானா மரணத்தின் தலைப்பாகையை அணிந்துவிட்டார்” என்று ஒரே ஆர்ப்பரிப்பு. ஆர்ப்பரித்தார்கள்.

அதைப் பார்த்த நபியவர்கள், “இவ்வாறான நடை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கக்கூடிய ஒன்று – போர்க்களத்தைத் தவிர” என்று அனுமதி அளித்தார்கள்.

மக்காவிலிருந்து வந்திருந்த குரைஷிப் படைகளுடன் யுத்தம் துவங்கியது. அபூதுஜானாவின் கையில் நபியவர்களின் வாள் மின்னி மினுமினுத்தது. அதை உயர்த்திப் பிடித்து, எதிரிகளின் படைக்குள் புகுந்து, தமக்கு எதிரே வந்த ஒவ்வொரு எதிரியையும் சரமாரியாக வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்றார் அபூதுஜானா. அவர்களது அணியைப் பிளந்தவாறு முன்னேறி, தலைகளைக் கொய்யும் ஒவ்வொரு முறையும் இடமும் வலுமும் சாய்ந்து ஓர் ஆட்டம் ஆடி, சிங்கமாய் கர்ஜனை வரும், “நான்தான் அபூ துஜானா.”

நபியவர்கள் அறிவித்தபோது வாளைப் பெற்றுக்கொள்ளக் கை உயர்த்தியவர்களுள் ஸுபைர் இப்னு அவ்வாமும் ஒருவர். அந்த வாள் தமக்குக் கிடைக்காமல், வாய்ப்பு அபூதுஜானாவுக்கு அமைந்ததைப் பற்றி அவருக்கு நிறையக் கவலை.

‘நபியவர்களின் அத்தை ஸஃபிய்யாவின் மகன் நான். குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவன். நானும்தான் முந்திக்கொண்டு நபியவர்களிடம் அந்த வாளைப் பெற முயன்றேன். ஆனால் அந்த வாய்ப்பு அபூதுஜானாவுக்கு அமைந்து போனதே. அபூதுஜானா அப்படி என்னதான் அந்த வாளின் கடமையை நிறைவேற்றுகிறார் என்று பார்ப்போம்’ என்று தமக்குள் கூறிக்கொண்டு அபூதுஜானாவைக் கவனிக்க ஆரம்பித்தார் ஸுபைர்.

‘அபூதுஜானா தாம் சண்டையிட்ட எவரையும் கொல்லாமல் விடவில்லை. வெட்டித் தள்ளியவாறு முன்னேறினார்’ என்று குறிப்பிட்டுள்ளார் ஸுபைர்.

இதனிடையே எதிரிகளுள் ஒருவன், காயமடைந்து களத்தில் குற்றுயிராக விழுந்துள்ள முஸ்லிம்களைத் தேடித் தேடிச் சென்று வீழ்த்திக்கொண்டிருப்பதைக் கவனித்தார் ஸுபைர். இதற்குள் களத்தில் முன்னேறியவாறு இருந்த அபூதுஜானா அந்த எதிரியை நெருங்கிவிட்டார்.அவரது கையிலிருந்த நபியவர்களின் வாள் அவனது வாழ்க்கையை முடித்து வைத்தது.

“நான்தான் அபூ துஜானா” என்று முழங்கிவிட்டுத் தொடர்ந்து எதிரிகளின் அணியைக் கிழித்துக் கொண்டு முன்னேறினார் அபூதுஜானா.

அபூதுஜானா பலமிக்க இரும்புக் கவச ஆடை அணிந்திருந்தார். நபியவர்களை நோக்கி எய்யப்பட்ட அம்புகளையெல்லாம் அவர் தம் முதுகைக் கேடயமாக்கித் தடுக்க, தாக்கிக் கொண்டிருக்கும் எதிரிகளை விலக்கியவாறு முஸ்லிம்களின் படை மலையின் கணவாய்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தது. நபியவர்களின் இத்திட்டத்தைக் கவனித்த எதிரிகள் அதைத் தடுக்க பலமாய்ப் போராட ஆரம்பித்தனர்.

அன்றைய போரில் அபூதுஜானா ஆற்றிய பங்கிற்கு, பின்னர் நபியவர்கள் உரைத்த வாசகம் ஒன்றே போதுமான சான்றாக அமைந்துபோனது. மதீனா வந்தடைந்த நபியவர்கள் தம் மகள் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவிடம் தமது வாளை அளித்து, “இதிலுள்ள இரத்தத்தைக் கழுவவும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இன்று எனக்கு உண்மையாக உழைத்தது” என்றார்கள்.

அலீ ரலியல்லாஹு அன்ஹுவும் அதைப் போல் தமது வாளை தம் மனைவி ஃபாத்திமாவிடம் அளித்து அவ்விதமே கூற, அதற்கு அல்லாஹ்வின் தூதுர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் இன்று போரில் உண்மையாகக் கடமையாற்றியதைப் போலவே ஸஹ்ல் இப்னு ஹனீஃபும் அபூதுஜானாவும் உண்மையாகக் கடமையாற்றினர்” என்றார்கள்.

சில ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற ஃகைபர் போரின்போதும் அபூதுஜானாவின் பங்கு பதிவாகியுள்ளது. யூதர்கள் அபீ கோட்டைக்குள் புகுந்து கொண்டதும் முஸ்லிம்கள் அக்கோட்டையை முற்றுகையிட்டனர். அப்பொழுது இரண்டு யூதர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியில் வந்து, “எங்களுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டையிட யார் வருகிறீர்கள்?” என்று சவால்விட, உடனே இரண்டு முஸ்லிம்கள் முன்வந்தனர். அவர்களுள் ஒருவர் அபூதுஜானா.

வழக்கம்போல் அவரது நெற்றியில் சிகப்புத் துணி. அவர் ஒரு யூதனை வெட்டி வீழ்த்த, மற்றொருவரும் அடுத்த யூதனைக் கொன்றார். அதன்பின் அபூதுஜானாவின் தலைமையில் முஸ்லிம் படைகள் அபீ கோட்டையின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே புக, கடுமையான யுத்தம் நிகழ்ந்தது. இறுதியில் ஃகைபர் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்தது தனி வரலாறு.

ஒருமுறை உடல்நலமின்றி இருந்த அபூதுஜானாவைச் சந்திக்கத் தோழர்கள் வந்திருந்தனர். உடல் மிகவும் சுகவீனமற்று இருந்தாரே தவிர, அபூதுஜானாவின் முகம் நோயின் தாக்கம் இன்றிப் பளிச்சென்று பொலிவுடன் இருந்தது. வியப்புற்ற தோழர்கள், “உம்முடைய முகம் பிரகாசமாக உள்ளதே அபூதுஜானா” என்று விசாரிக்க,

“என்னுடைய செயல்களுள் இரண்டின்மீது எனக்கு மிக நல்ல நம்பிக்கை உள்ளது. ஒன்று, எனக்குச் சம்பந்தமற்ற பேச்சை நான் பேசுவதில்லை. அடுத்தது, எந்தவொரு முஸ்லிமின் மீதும் கசப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி இன்றி அவர்களைப் பற்றி என் மனத்தில் நல்ல அபிப்ராயத்திலேயே இருக்கிறேன்.”

பொய்யன் முஸைலமாவுடன் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போர் யமாமா போர். அந்தப் போரில் முஸைலமாவின் படையைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய பத்தாயிரம் பேர்வரை கொல்லப்பட்டிருந்தனர். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் அந்த எண்ணிக்கை இருபதாயிரம் என்கிறார்கள். அதனாலேயே அத்தோட்டத்திற்கு “மரணத் தோட்டம்” என்ற பெயர் ஏற்பட்டுப்போனது.

முஸ்லிம் வீரர்கள் ஐந்நூறிலிருந்து அறுநூறுவரை  உயிர்த் தியாகிகள் ஆகியிருந்தனர். அந்த உயிர்த் தியாகிகளுள் ஒருவர் அபூதுஜானா சிமாக் இப்னு ஃகரஷா.

அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.

 கஸ்ரஜ் பெருங்குலத்தின் பிரிவான பனூ நஜ்ஜார் கோத்திரத்தின் தலைவர் அபூதல்ஹாவின் இயற்பெயர் ஸைத் இப்னு சஹ்ல் அந்நஜ்ஜாரீ.  யத்ரிப் நகரில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரை ஒரு மரணச் செய்தி வந்தடைந்தது. ஆனால் அவருக்கு அது, சற்று உற்சாகத்தை அளித்த செய்தி!

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்னை ருமைஸா  என்ற உம்முஸுலைமின் இரண்டாவது கணவரான இவர்கள் உம்முஸுலைமை மணக்க விரும்பியபோது, உம்முஸுலைம் கூறினார்: “அபூதல்ஹா! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் சாட்சியாகக் கொண்டு பகர்கிறேன். நீங்கள் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நான் உங்களிடமிடமிருந்து ஒரு குன்றுமணி தங்கம், வெள்ளி என்று எதுவும் பெறாமல், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதை மட்டுமே மணக்கொடையாக (மஹ்ராக) ஏற்றுக் கொண்டு நான் உங்களை மணந்து கொள்வேன்”.
உம்முஸுலைமின் பதில் அபூதல்ஹாவை மிகவும் யோசிக்க வைத்தது.

யோசனையின் இறுதியில் இணங்கினார் அபூதல்ஹா. “நான் முஸ்லிம் ஆக வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்?”
“கூறுகிறேன். மிக எளிது. ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்’ என்று சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தாங்கள் வாயால் சாட்சி பகர வேண்டும். அவ்வளவே! வீட்டிற்குச் சென்றதும் தங்களது சிலைகளை அப்புறப்படுத்தி விடுங்கள்”.

“வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன்”.

பூரண திருப்தியுடன் இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் அபூதல்ஹா அல்அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு. அடுத்த சிலநாட்களில் இருவருக்கும் திருமணம் நிகழ்வுற்றது. வியந்தது மதீனா.

அபூதல்ஹா அழகானவர் மட்டுமல்ல, அவர் சார்ந்திருந்த இனத்தின் தலைவர். ஏராளமான சொத்து இருந்தது; சமூகத்தில் நல்ல அந்தஸ்து இருந்தது. உம்முஸுலைமின் அதே பனூ நஜ்ஜார் கோத்திரம்தான் இவரும். தவிர அக்கோத்திரத்தின் மிகச் சிறந்த போர் வீரர். யத்ரிப் நகரிலேயே அவர் ஓர் அசாத்திய வில்லாளி.

நபியவர்களை அகபாவில் சந்தித்து சத்தியப் பிரமாணம் (இரண்டாவது அகபா உடன்படிக்கை) செய்த 75 பேர் கொண்ட குழுவில் முக்கியமானவர்கள் அபூதல்ஹாவும் அவருடைய மனைவி உம்முஸுலைமும். அன்றைய உடன்படிக்கையின்போது யத்ரிபில் ஏற்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு 12 பேர்களைத் தலைவராக நியமித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதில் அபூதல்ஹாவும் ஒருவர்.

நபியவர்கள் மேல் அபூதல்ஹா பாசம் கொள்ள ஆரம்பித்தார்.. நபியவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் அலாதி ஆனந்தம் அடைந்தார் அபூதல்ஹா! கண்கள் அசதி மறந்தன. நபியவர்களுடன் உரையாடுவது என்பது அவருக்கு அளவிலா இனிமையாய் இருந்தது.
நபியவர்களிடமே ஒருநாள் கூறினார், “உங்களுக்காக நான் என்னுடைய ஆவியைத் தரத் தயாராக இருக்கிறேன். உங்களுடைய திருமுகத்திற்கு எத்தகைய தீங்கும் ஏற்படாமல் நான் என்னுடைய முகத்தைக் கொண்டு தடுப்பேன்”.
அது கபடமற்ற பேச்சு. விரைவில் நிரூபணம் ஆனது.
உஹதுப் போர் – முஸ்லிம் படைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டு, குரைஷிகளின் படை முன்னேறி தாக்கிக் கொண்டிருந்தது. நாலாபுறமிருந்தும் அவர்கள் முஸ்லிம்களைச் சூழ ஆரம்பித்திருந்தனர். நிலைமை மிகவும் கடுமையடைந்து, நபிகளாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. அவர்களது நெற்றியில் ஆழமான வெட்டு, உதட்டிலும் வெட்டுக் காயம்.

அந்தக் களேபரமான சூழ்நிலையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி ஒன்று தீயாய்ப் பரவ ஆரம்பித்தது. அது குரைஷிகள் மத்தியில் அதிக உற்சாகத்தை அளிக்க ஆரம்பித்தது. முஸ்லிம் வீரர்களையோ அது மேலும் பலவீனப்படுத்தி, பலர் செயலிழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட, மிகச் சிறிய அளவிலான படைக்குழு ஒன்று மட்டுமே நபியவர்களை அப்பொழுது சூழ்ந்திருந்தது; எஞ்சியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் அபூதல்ஹா.

அந்தச் சிறிய அளவிலான தோழர்கள் கடும் ஆக்ரோஷத்துடன் முஹம்மது நபியைச் சுற்றி அரண் அமைத்தார்கள். அதுவரை முஸ்லிம் படைகளுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை வலிமையாய் அத்துடன் தடுத்து நிறுத்தினார்கள்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குமுன் ஒரு மனிதக் கேடயமாக வந்து குதித்தார் அபூதல்ஹா. நபிகள் நாயகத்தின் மீது மேற்கொண்டு யாரும் எதுவும் தாக்க இயலாவண்ணம் ஒரு மலை போல் நின்று கொண்டார். வில்லைப் பூட்டினார். அம்பெய்ய ஆரம்பித்து விட்டார். குறி தவறாது பாய்ந்து சென்றன அவரது அம்புகள். குரைஷிப் படை வீரர்களைத் தாக்கிச் சாய்க்க ஆரம்பித்தன. அதேநேரத்தில் களத்தில் நபியவர்கள் தாக்கப்படாமலிருக்க, அவர்களின் காப்புக் கேடயமாகச் சுழன்று கொண்டிருந்தார் அபூதல்ஹா.

முன்னால் என்ன நடக்கிறது என்பதைக் காண அவரது தோளைத் தாண்டி முஹம்மது நபி காண முற்படும்போதெல்லாம், அவர்களைத் தடுத்து பின்னுக்கு நகர்த்தி, “அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பெற்றோரை உங்களுக்குப் பகரமாய் இழப்பேன். தயவுசெய்து தாங்கள் எதிரிகளைக் காண முற்பட வேண்டாம். அவர்கள் உங்கள்மீது அம்பெய்தி விடலாம். அதைவிட எனது கழுத்திலும், மார்பிலும் அது தைப்பது எனக்கு மிகவும் உவப்பானது. நான் தங்களுக்காக என்னையே இழக்கத் தயாராயிருக்கிறேன் யா ரஸூலல்லாஹ்!” என்று பதட்டமானார் அபூதல்ஹா..

எண்ணற்ற குரைஷி வீரர்கள் அவரால் அன்று கொல்லப்பட்டனர். எண்ணற்றக் காயங்களுடன் வரலாற்றில் தனது அத்தியாயத்தை அன்று பதிவு செய்தார் அபூதல்ஹா.

இப்போரில் எதிரிகளின் அம்புகள் குறிபார்து அண்ணலாரைநோக்கி வந்தபோது அதைத் தம் கைகளால் தடுத்ததால் அவர்களின் விரல்கள் எப்போதும் பயன்படாவண்ணம் படுகாயமுற்றன. இவர்கள் உஹது போரில் தமது ஒரு கையை இழந்தனர் என்று மற்றொரு வரலாறு கூறுகிறது.

போர் முடிந்ததும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூதல்ஹாவின் உடலைப் பார்த்த போதுஅதில் எழுபது காயங்கள் இருந்தன. கையில் மட்டும் இருத்திநான்கு காயங்கள் காணப்பட்டன.

இப்போரில் அண்ணலார் அபூதல்ஹா அவர்களை ‘தல்ஹத்துல் கைர்(நல்ல தல்ஹா) என்றும், ஹுனைன் போரில் இவர்களை ‘தல்ஹதுல் ஜூத்’ (தயாளமுள்ள தல்ஹா) என்றும், அஷீரா போரில் ‘தல்ஹத்துல் பையால்'(உதவும் தல்ஹா) என்றும் அழைத்தனர்.

போரில் தல்ஹா இடும் பெரும் சத்தம் ஒரு படையினர் போடும் சத்தத்தை விட மிகைத்தது என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.அபூதல்ஹா காலையில் எழுந்து சுப்ஹுத் தொழத் தயாராவார். நபிகள் நாயகத்துடன் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுதுவிட்டு, அவருடன் ஏறக்குறைய பாதிநாள் அளவு தங்கியிருப்பார். பிறகு வீட்டிற்கு வந்து குட்டித் தூக்கம், உணவு, நண்பகல் தொழுகை. பிறகு மீண்டும் தயாராகி கிளம்பிச் செல்பவர், தனது தொழில், அலுவல் எல்லாம் பார்த்து முடித்து இரவு இஷா நேரத்தில்தான் வீடு திரும்புவார். அனாவசியங்களில் நேரத்தைத் தொலைக்காத வாழ்க்கை.

மதீனாவிலேயே, பேரீச்ச மரத்தோட்டங்கள் மிக அதிகமானவற்றுக்குச் சொந்தக்காரச் செல்வந்தர் அபூதல்ஹா. அவரிடம் பைருஹா என்றொரு தோட்டம் இருந்தது. அவருக்கு மிகவும் விருப்பமானது அது. அந்த பைருஹா, மஸ்ஜிதுந் நபவீயின் எதிரே அமைந்திருந்தது. முஹம்மது நபி அவ்வப்போது அங்குச் சென்று அதிலோடும் சுனையின் சுவையான நீரை அருந்துவது வழக்கம்.

ஒருநாள் நபியவர்களுக்கு வசனம் ஒன்று இறைவனால் அருளப்பட்டது:

“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்”அல்குர்ஆன் 3:92)

இது அருளப்பெற்றதும் அத்தோட்டத்தை அல்லாஹ்வின் வழியில் அறம் செய்துவிட எண்ணினர். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆலோசனைப்படி அதை உறவினர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்து விட்டனர்.

பேரீச்ச மரங்கள், திராட்சைக் கொடிகள் நிரம்பிய அழகான தோட்டம் ஒன்றும் அபூதல்ஹாவிடம் இருந்தது. ஒருநாள் அந்தத் தோட்டத்தில் மரநிழலில் அபூதல்ஹா தொழுது கொண்டிருந்தார். அப்பொழுது எங்கிருந்தோ பறந்து வந்தது அழகிய பறவை அங்கும் இங்கும் பறந்ததால் அவர்களின் கவனம் சிதறிவிட்டது. தாம் தொழுதது எத்தனை ரக்அத்துகள் என்பதை மறந்து விட்டார்கள். அதனால், ஒரு தொழுகை தட்டுக்கெட்டுப் போனதற்கு மொத்தத் தோட்டத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டார் அபூதல்ஹா.

தொழுகை மட்டுமல்ல, அபூதல்ஹா நோற்ற நோன்புகளும் அலாதியானவை. வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளின்படி அவர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவிற்கு முன்னர் பல போர்களில் பங்கெடுத்துக் கொண்டதால் நோற்க முடியாமல்போன ஸுன்னத்தான நோன்புகளை நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இரு பெருநாள்கள் தவிர ஓராண்டின் பெரும்பாலான நாட்களிலும் அவர் நோன்பிருந்திருந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன.
தள்ளாத வயதை அடைந்த பின்னரும் இறைவனின் பாதையில் போரிடுவதை அவர் விடவில்லை.

இந்நிலையில்தான் மூன்றாவது கலீஃபா உதுமான் இப்னு அஃப்பானின் ஆட்சிக் காலத்தில் கடல் தாண்டிய படையெடுப்பிற்கு அழைப்பு வந்தபோது மகன்களின் பாசத் தடையை மீறிக் கிளம்பிவிட்டார் அவர். கடலில் முன்னேறிக் கொண்டிருந்தது முஸ்லிம்களின் படை. அப்பொழுது அபூதல்ஹாவை வந்துத் தழுவியது நோய்!. வயோதிகம், நடுக்கடல் என்பதால் பெரிய அளவில் சிகிச்சை ஏதும் அளிக்க இயலாத நிலை, பிரயாணத்தின் கடுமை வேறு. அவருடைய உடல் நிலை மோசமடைந்து கொண்டே வந்து இறுதியில் இறைவனின் பாதையில் தமது 51ஆவது வயதில் மரணமடைந்தார் அபூதல்ஹா.
முஸ்லிம்கள், அவரை நல்லடக்கம் செய்ய அருகில் ஏதும் நிலம் தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். இறுதியில் தீவு ஒன்று தென்பட்டது. ஆனால் அதற்குள் ஏழு நாட்கள் கழிந்துவிடடன. அந்த அத்தனை நாட்களும், கப்பலில் இருந்த அவரது உடல், அப்படியே உறங்கிக் கொண்டிருப்பவரைப் போல், கெடாமல் பத்திரமாக இருந்துள்ளது!

இவர்கள் ஜமல் போரில் மறைந்ததாக ‘தாரீகெ காமிலி’ல் கூறப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் பின் ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு

இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது பங்குபெற்ற 73 ஆண்களுள் முக்கியமான மற்றொருவர்அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.நுஃமான் இப்னு பஷீர் ரலியல்லாஹு அன்ஹுவின் தாய்மாமன். அகபா உடன்படிக்கைமுடிந்தவுடன் அவர்களுக்குப் பன்னிருவரைத் தலைவராக நியமித்தார்கள்நபியவர்கள். அவர்களுள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவும் ஒருவர். இவர் சிறந்த வீரர் மட்டுமில்லாமல் எழுதப்படிக்கத் தெரிந்த சிலரில் ஒருவராகவும் இருந்தார்கள். எனவே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்களை தங்கள் எழுத்தாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.அப்புறம்கவித்திறன். நபியவர்களே மகிழும் அளவிற்குக் கவிதைகள் புனைந்திருக்கிறார்.

‘அகபாஉடன்படிக்கை முடித்து, மக்கள் யத்ரிபுக்குத் திரும்பினார்கள்; அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்வுற்ற மிகமுக்கியப் போரான பத்ருப் போரும் நமக்குத் தெரியும். அப்பொழுது களமிறங்கியமுந்நூற்றுச் சொச்சம் முஸ்லிம்களுள் இப்னு ரவாஹாவும் ஒருவர். அந்தப் போரில்முஸ்லிம்கள் வெற்றியடைந்ததும் அந்தச் செய்தியை மதீனாவில் அறிவிக்க ஸைதுஇப்னு ஹாரிதாவையும் இப்னு ரவாஹாவையும்தாம் அனுப்பிவைத்தார்கள் நபியவர்கள்.

அபூதர்தா, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா இருவரும் நீண்ட நெடுங்காலமாய் இணைபிரியாநண்பர்கள். இப்னு ரவாஹா இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே இருவரும் தோழமையில்சகோதர உறுதிமொழி எடுத்துக் கொண்டு, “நீயும் நானும் இன்றிலிருந்துஅண்ணன்-தம்பி” என்று ஆகிவிட்டனர்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தமது தோழர் அபூதர்தா இஸ்லாத்தை ஏற்காதது இவருக்கு உறுத்தலாகவே இருந்தது. ஒருநாள் அவர்கள் தம் நண்பர் அபூதர்தா வீட்டிற்கு சென்றார். அங்கு அபுதர்தாவின் மனைவி மட்டும் இருந்தார்.

இவர்கள் தம் நண்பரைப் பற்றி விசாரித்தபோது, கடைத்தெருவிற்கு சென்றிருப்பதாக அவர் மனைவி கூறியதும், அவருக்காக வீட்டில் காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டார். அபுதர்தாவின் மனைவி மற்ற வேலைகளில் மும்முரம் காட்டியதும், ரவாஹா அவர்கள் அபுதர்தாவின் பூஜை அறைக்குள் நுழைந்து தாம் ஏற்கனவே கொண்டுவந்திருந்தசிறுரம்பத்தை கொண்டுகிடுகிடுவென்று அந்தச் சிலையைத்துண்டு துண்டாக அறுக்க ஆரம்பித்துவிட்டார். “அல்லாஹ்வைத் தவிர வேறெதையும்வணங்குவது பொய்மையே” என்று சொல்லிக் கொண்டே அந்தச் சிலையை வெட்டிஎறிந்துவிட்டு, அபூதர்தாவின் வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டார்.

வீட்டிற்கு வந்த அபுதர்தா நிலைமையை பார்த்துவிட்டு கொதித்தெழுந்தார். அபூதர்தாவின் மனம் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பழி வாங்கத்துடித்தது. கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, அரற்றி, புலம்பி எல்லாம்முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்தபோதுதான் அவரது புத்திக்குச் சட்டென்று அதுபட்டது. “இந்தச் சிலைக்கு என்று ஏதாவது ஒரு சக்தி இருந்திருக்குமானால் அதுதன்னைத் தானே தற்காத்துக் கொண்டிருக்க வேண்டுமே!”

அந்தஎண்ணம் தோன்றியவுடன் நிதானமடைந்து மிகவும் யோசிக்க ஆரம்பித்தார். உடனே நபிகளாரை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார்.

ஒருமுறைநபியவர்கள் பள்ளிவாசலில் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது அங்கு வந்து கொண்டிருந்தார் இப்னு ரவாஹா. சொற்பொழிவின் இடையேநபியவர்களின் ஒரு வாக்கியத்தில், “அமரவும்” என்ற வார்த்தைஇடம்பெற்றிருக்கிறது. அதை அவர்கள் உச்சரித்ததுதான் தாமதம்; பள்ளிவாசலுக்குவெளியே இருந்தவர் அங்கேயே அப்படியே சட்டென்று அமர்ந்துவிட்டார். பின்னர்இவ்விஷயம் நபியவர்களுக்குத் தெரியவந்தது. “அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கீழ்படியும் உமது விருப்பத்தை அல்லாஹ் அதிகப்படுத்திவைப்பானாக” என்றார்கள் நபியவர்கள்.

இறையச்சம்உதிரத்தில் கலந்து, நாடி-நாளமெங்கும் பரவி இருந்திருக்கிறது இப்னுரவாஹாவுக்கு. ஒருநாள் வீட்டில் அமர்ந்திருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவிசும்பி அழ ஆரம்பித்தார். ‘என்ன ஏது என்று தெரியவில்லை. கணவர் இப்படிஅழுகிறாரே’ என்று அவரது மனைவிக்கும் அழுகை தொற்றிக்கொண்டது.

அவரும் அழுதார். தம் மனைவியிடம், “நீ எதற்கு அழுகிறாய்?” என்றார் இப்னு ரவாஹா.

“நீங்கள் அழுதீர்கள். அதைக் கண்டு எனக்கும் அழுகை வந்துவிட்டது; அழுதேன்.”

“நான்நரக நெருப்பின் அருகே வருவேனே, அதிலிருந்து காப்பாற்றப்படுவேனோ, மாட்டேனோஎன்று எனக்குக் கவலை ஏற்படுகிறது. அதனால் எனக்கு அழுகை,” என்றார் இப்னுரவாஹா.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த புதிதில் ஒருநாள் தம் கழுதை மீதேறிச் சென்ற போது வழியில் நயவஞ்சகத் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையைச் சந்தித்து அவனை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். அப்போது அவன் ‘ முஹம்மதே! உம்மிடம் எவரும் வந்தால் அவரை இஸ்லாத்தின்; பால் அழையும். உம்மை எவரும் இங்கு அழைக்காதபோது ஏன் வீணாக தொந்திரவு செய்கிறீர்’ என்று கூறினான்.

அதுகேட்டுப் பொறுக்காத அப்துல்லாஹ் இப்னு ரவாஹா அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எங்களிடம் வந்து அருளுரை பகருங்கள். நாங்கள் அதை விரும்புகிறோம். உங்களை நேசிக்கிறோம்’ என்று கூறினர். தம்முடைய நண்பரே இவ்வாறு கூறியது அப்துல்லாஹ் இப்னு உபைக்கு மிகவும் சங்கடமாகிப் போய்விட்டது.

ஹுதைபிய்யாஉடன்படிக்கையின் அடிப்படையில்அடுத்த ஆண்டு நபியவர்களும் முஸ்லிம்களும் உம்ராவுக்குக் கிளம்பிச்சென்றார்கள்.

நபியவர்கள்அல்-கஸ்வா என்ற பெயருடைய தம் ஒட்டகத்தில் அமர்ந்துவர, அதன் வாரைப்பிடித்துக்கொண்டு முன்நடந்தார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. நபியவர்கள் கஅபாவைச் சுற்றிவரும்போது அவர்களுக்கு முன்னால் சென்ற அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கவிதைஉரைத்தார்.

இறைமறுப்புக் குலத்தவரே விலகிச் செல்வீர்!
இன்றும்மோ டிறைவாக்கால் பொருத வந்தோம்
உறைவாளின் வீச்சால்உம் தலைகள் வீழும்!
உறுநண்பர் நண்பர்க்கே உதவ மாட்டார்!

இதைச்செவியுற்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு “ஓ இப்னு ரவாஹா! புனித இறைத்தலத்தில்அதுவும் நபியவர்கள் முன்னிலையில் நீ இப்படிக் கவிதை சொல்லலாமா?” என்றுஆட்சேபம் தெரிவித்தார்.

நபியவர்கள்உமருக்கு பதில் அளித்தார்கள். “இவர் சொல்லட்டும் உமர். சத்தியமாகச்சொல்கிறேன், இவரது வார்த்தைகள் ஈட்டி துளைத்தால் ஏற்படும் வலியைவிட அதிகவலியை இறைமறுப்பாளர்களுக்கு ஏற்படுத்தும்.”

பிறகுஅவர்களுக்கு மற்றொரு பிரார்த்தனையைச் சொல்லித் தந்தார்கள். “அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை; அவன் தனியோன்; வாக்குறுதியை நிறைவேற்றுபவன்; தன்அடியாருக்கு அவன் வெற்றியை அளித்தான்; தன் படையினரைக் கண்ணியப்படுத்தினான்; எதிரணியிர் அத்தனை பேரையும் தனியனாய்த் தோற்கடித்தான்.”

மிகஉரத்த குரலில் இதை உச்சரிக்க ஆரம்பித்தார் இப்னு ரவாஹா. முஸ்லிம்களும் அதைத் தொடர்ந்து உச்சரிக்க , குன்றுகளில் எதிரொலித்தது அந்த ஒலி.அங்கிருந்த குரைஷிகளின் உள்ளங்கள் அதிர்ந்தன.

யூதர்களுக்குஎதிரான ஃகைபர் யுத்தம் அதில்முஸ்லிம்கள் வெற்றிபெற்றபின், கைப்பற்றிய விளைநிலத்தை யூதர்களிடமே திருப்பிஅளித்தார்கள் நபியவர்கள். விளைச்சலில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் பங்குசெலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பங்கைநிர்ணயித்து விளைச்சலைப் பாகம் பிரிக்க அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைத்தான்நபியவர்கள் அனுப்பிவைப்பார்கள். மிகவும் கவனமுடன் அனைத்தையும் சரிபார்த்து, விளைச்சலைப் பங்கிட்டு எது முஸ்லிம்களுக்கு எது யூதர்களுக்கு என்று இப்னுரவாஹா சொன்னதும்,“நீர் நியாயமாய்ப் பங்கு பிரிக்கவில்லை இப்னு ரவாஹா.” என்று சிலசமயம் யூதர்கள் குறுக்கிடுவார்கள்.

நியாயமாய்அது கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மிக எளிதான உபாயத்தைக்கையாண்டார் இப்னு ரவாஹா. “அப்படியா! ஒன்றும் பிரச்சினையில்லை. உங்களுக்குஎந்தப் பங்கு வேண்டுமோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.”

ஒருமுறைஅந்த யூதர்கள் தங்கள் பெண்களின் நகைகள் சிலவற்றைத் திரட்டி அவருக்குஇனாமாய் அளிக்க வந்தார்கள். “இந்தா இது உனக்கு. உன் வீட்டுப் பெண்கள்மகிழ்வார்கள்; வைத்துக்கொள். ஏதோ பங்கு பிரிப்பதைப் பார்த்துச் செய்யப்பா!” அது வேறொன்றுமில்லை. கிம்பளம். கையூட்டு அளித்து அவரைக் கைக்குள்போட்டுக்கொண்டால், தங்களுக்குச் சாதகமாய் அவர் பங்கு பிரிப்பார் என்பதுயூதர்களது எண்ணம்.

ஆனால்அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, “ஓ யூதர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக்கூறுகிறேன்! இறைவனின் படைப்பில் நீங்களே எனக்கு மோசமானவர்கள். ஆனால்அதற்காக உங்களுக்கு அநீதி இழைக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான்ஒருநாளும் நினைத்ததில்லை. கையூட்டுப் பெறுவது எங்களுக்குத்தடைசெய்யப்பட்டுள்ளது. அதை நாங்கள் தொடக்கூட மாட்டோம்.”

அந்தபதிலைக் கேட்டுவிட்டு மறைக்க இயலாமல் உண்மையைப் பேசினார்கள் யூதர்கள். “இது, இந்த நீதிதான் வானத்தையும் பூமியையும் தாங்கிப் பிடித்துள்ளது.”

முஃத்தா எனும் சிறிய கிராமம் இன்றைய ஜோர்டான்நாட்டு மலைப்பகுதிகளில் சிரியா நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள்ரோமர்களைக் களத்தில் சந்தித்த முதல் போர். மூத்தா படையெடுப்பின்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஜைத், ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள் இறந்து விடின் அப்படையணிக்குத் தலைமை தாங்குமாறு பணிக்கப்பட்டார்கள்.

சுமார் 3000படைவீரர்கள் கொண்ட ஒரு படையை தயார் செய்து தன்யத்துல் விதாவில் வைத்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் அனுப்பி வைத்தபோது, ‘அல்லாஹுத்தஆலா என் பாவம் பொறுத்து இப்போரில் மாள்பவர்களில் என்னை ஒருவனாக ஆக்குவாயாக! அப்போது என் அடக்கவிடத்தைக் கடந்து செல்பவர்கள், ‘வீராதி வீரரான இப்னு ரவாஹாவே! நீர் நேர்மையாளராகவும், வெற்றியாளராகவும் இருந்தீர். அதேபோன்று இறைவன் உம்மை மறுமையிலும் ஆக்குவானாக! என்று இறைஞ்சிவிட்டுச் செல்பவர்களாக’ என்று பாடினார்.

இதேபோன்ற பாடலை அவர் வழிநெடுக பாடிக் கொண்டே வருவதை இவருடன் வாகனத்தில் வீற்றிருந்த இளைஞர் ஜைத் இப்னு அர்க்கம் கேட்டுத் தேம்பித் தேம்பி அழுதபோது, ‘மகனே! எனக்கு இறைவன் மார்க்கத்திற்காக உயிர்தியாகம் செய்த நற்பேற்றினை நல்கி, உலகக் கவலைகளை விட்டும் என்னை அப்புறப்படுத்துங்கால் நீ ஏன் அழுகிறாய்? அது நல்லதல்லவா?’ என்று கூறிக்கொண்டே கீழே இறங்கி இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஜைதை நோக்கி மகனே! இறைவன் என் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வான்’ என்று கூறினர்.

அங்கோகடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை! பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களைஅனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ  கோத்திரங்களைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர்.ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள்.

அப்பொழுது அவர்களுக்கு ரோமர்களின் பிரம்மாண்ட படையைப்பற்றிய தகவல் கிடைத்தது. நிச்சயமாய் முஸ்லிம்களுக்குப் பெரும் கிலேசத்தைஏற்படுத்தியது அந்தச் செய்தி. அவர்கள் மத்தியில்எழுந்து நின்றார் இப்னு ரவாஹா.

“உங்களதுதயக்கம் எனக்குப் புரிகிறது! ஆனால், இந்தப் பரிசிற்காகத்தான் நீங்கள்கிளம்பி வந்துள்ளீர்கள் – ‘ஷஹாதத்’ வீர மரணம் எனும் பரிசு. நமது எதிரிகளின்எண்ணிக்கையின் அடிப்படையிலோ, ஆயுத வலிமையின் அடிப்படையிலோ, குதிரைகளின்எண்ணிக்கையின் அடிப்படையிலோ நாம் போரிடுவதில்லை. நமக்கு அல்லாஹ் அருளியுள்ளஇந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக மட்டுமே போரிடுவோம். நாம்முன்னேறிச் செல்வோம்”

“நான்பத்ருப் போரில் கலந்து கொண்டேன். அப்பொழுதும் நம்மிடம் இரண்டு குதிரைகள்மட்டுமே இருந்தன. உஹது யுத்தத்தில் நம்மிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒருகுதிரைவீரர் மட்டுமே. முன்னேறுங்கள் சகோதரர்களே! நமக்கு இரண்டில் ஒரு பரிசுநிச்சயம். ஒன்று நமக்கு வெற்றி – இதைத்தான் அல்லாஹ்வும் அவன் தூதரும்நமக்கு வாக்களித்துள்ளார்கள். அவ்வாக்குப் பொய்ப்பதில்லை. அல்லது நமதுஉயிர்த் தியாகம். பிரிவது நமது உயிர் எனில் நமக்குமுன் சொர்க்கம் புகுந்தநம் சகோதரர்களுடன் நாம் சென்று இணைவோம்”

அந்தச்சிறு உரை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது.அவர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இப்னு ரவாஹாஉண்மையை உரைத்தார்.”

முன்னேறியதுமுஸ்லிம்களின் படை. முஸ்லிம்கள் முஃத்தாபகுதிக்கு நகர்ந்து சென்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். துவங்கியதுயுத்தம். மும்முரமான போர். ஆனால்அதன் தீவிரம் சொல்லிமாளாத உக்கிரம்.

ஸைதுஇப்னு ஹாரிதா வீரமாய்ப் போரிட்டு வீர மரணம் எய்தினார். அடுத்து, தலைமைஜஅஃபரிடம் வந்து சேர்ந்தது. அவரும் போரிட்டு மரணம் அடைந்தார். போர்தீவிரமான நிலையை அடைந்திருந்தது. அடுத்து தலைமை அப்துல்லாஹ் இப்னுரவாஹாவிடம் வந்து சேர்ந்தது. அதுவரை படை அணியில் ஒரு வீரராய்ச் சுற்றிச்சுழன்று போரிட்டுக் கொண்டிருந்த அவருக்குத் தம்மிடம் வந்தடைந்த கூடுதல்பொறுப்பு ஒரு சிறு தயக்கத்தை ஏற்படுத்தியது. உடனே தமது ஆன்மாவிற்குஊக்கமளிக்கத் தமக்குத்தாமே கவிதை உரைத்தார் இப்னு ரவாஹா.

சபதம் செய்தேன் ஆன்மாவே!
சமரில் பொருதல் விதிஎன்றே
சபலம் ஒன்றும் எனக்கில்லை
சாப வெறுப்பும் எனக்கில்லை

பறையை முழக்கிப் பெருங்கூட்டம்
பாய்ந்தே வந்தும் எனக்கென்ன?
சிறையாம் உலகின் வாழ்வின்முன்
சேர்ந்த சொர்க்கம் பெரிதன்றோ?

மனமே நேரம் நீள்கிறது
மாற்றம் வருமுன் சீர்படுவாய்
இனமோ விந்தின் துளியாவாய்
இனியேன் உனக்குச் சபலங்கள்?

என்றன் உளமே படைநடுவில்
இறப்பேன் வெட்டப் பட்டவுடன்
உன்றன் விதியில் இறப்பொன்றே
உண்டோ அதுவே விதியாகும்

எதனை எதிர்பார்த் திருந்தாயோ
இறப்பாம் அதனை அடைவாய்நீ
முதலில் சென்ற அவ்விருவர்
முடிவே உனக்கும் விதியாகும்!

முஸ்லிம்கள்சரியான உணவை உட்கொள்ளக்கூட நேரமின்றி அன்று போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் உறவினர் ஒரு துண்டு இறைச்சியைஎடுத்துக்கொண்டு அவரிடம் ஓடிவந்தார்.

“இதைச் சாப்பிட்டுக் கொஞ்சம் தெம்பேற்றிக்கொள்ளுங்கள். இன்றைய போரில் உங்களது உடல் மிகவும் களைப்புற்றுவிட்டது.”

அதைவாங்கிச் சிறிது கடித்துச் சுவைத்திருப்பார். போர்களத்தின் ஓசையும்இரைச்சலும் காதில் விழுந்தன. “நான் இன்னுமா இந்த உலகில் இருக்கிறேன்?”

‘சகோதரர்கள்அங்கு உயிரைப் பணயம் வைத்திருக்க இங்கு என்ன இன்னும் ஆற அமர உணவு!’ என்றுஅந்த இறைச்சியைத் திருப்பித் தந்துவிட்டுக் களத்தில் குதித்தார் அவர்.

அச்சமயம்நபியவர்கள் மதீனாவில் தோழர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.அதனிடையே நேரில் காண்பதுபோல் இந்தச் செய்தியை அறிவித்தார்கள். ‘ஸைத் இப்னுஹாரிதா கொடியைக் கையிலெடுத்து இஸ்லாமியப் படையினருக்குத் தலைமை தாங்கிக்கொண்டுள்ளார் … இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார் … பிறகு, ஜஅஃபர்அதைத் தம் கையில் எடுத்துத் தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டுள்ளார் … அவரும் கொல்லப்பட்டுவிட்டார் … பிறகு, அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹாதம் கையில் எடுத்துத் தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டுள்ளார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார் … பிறகு, தளபதியாகநியமிக்கப்படாமலேயே காலித் இப்னு வலீத் அதைக் கையிலெடுத்துள்ளார். அவருக்குவெற்றியளிக்கப்பட்டுவிட்டது. வீர மரணத்தினால் பெரும் பேற்றினைஅடைந்துவிட்டார்கள். ஷஹாதத் எனும் பெரும்பேறு அவர்களுக்குக்கிடைத்துவிட்டது. அதைவிட அவர்கள் நம்முடன் இருப்பது மகிழ்ச்சிக்குரியதல்ல …”

இதைக் கூறியபோது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

முஃத்தா போரில் தமது உயிரைத் தியாகமாக்கி சொர்க்கவாசியாகிப் போயிருந்தார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு

ஸொஹ்ரா என்ற குறைஷிக் கிளையைச் சேர்ந்த இவர்கள் துவக்கத்தில் அப்து அம்ர் என்றோ, அப்துல் கஃபா என்றோ அழைக்கப்பட்டனர். இவர்களின் தந்தையின் பெயர் அவ்ஃப், தாயார் பெயர் ஷிஃபா. ஷிஃபாதான் அன்னை ஆமினாவிற்குப் பிள்ளைப் பேறு பார்த்தவர். அன்னையின் வயிற்றிலிருந்து இவரின் கையில்தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விழுந்தனர்.

நெடிதுயர்ந்த உடலும், நல்ல உடலமைப்பும், சிவந்த கன்னங்களும், சுருள் முடிகளையும், பிரகாசமான முகத்தோற்றத்தையும், இன்னும் வலிமையான உடலமைப்பையும் கொண்டவர் தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். மிகச் சிறந்த வியாபாரியும், இன்னும் மத விவகாரங்களில் மிகச் சிறந்த ஞானத்தையும், உண்மையையும், நேர்மையையும் பண்பாகப் பெற்றவர். கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார்.

இவர்களின் பெயரைஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அப்துர் ரஹ்மான் என மாற்றினார்கள்.

தமத்துல் ஜந்தல் என்னும் போருக்கு தளபதியாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களால் நியமிக்கப்பட்டு, இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் திருக்கரங்களால் தலைமைப் பொறுப்பை பறைசாட்டக் கூடியதற்கான தலைப்பாகையை அணிவிக்கப்பட்டவரும் ஆவார்கள். அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து வந்த சத்திய அழைப்பை ஏற்று, தனது 30 வது வயதில் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இருமுறை ஹிஜ்ரத் செய்த அதாவது ஒருமுறை அபீசீனியாவிற்கும் இன்னொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்து சென்ற நற்பேற்றுக்கும் உரியவராவார்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பொழுது அவர்கள் வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எந்தவித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்த நிலையில், சஅத் பின் ரபீஈ அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு என்ற நபித் தோழருடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சகோதரராக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இணைத்து வைத்தார்கள். அவரை வரவேற்றுக் கண்ணியப்படுத்திய சஅத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

சகோதரரே..! இறைவன் என்மீது அளவற்ற அருட்கொடைகளைச் சொறிந்துள்ளான். இந்த மதீனாவிலேயே நான் தான் மிகப் பெரிய செல்வந்தனாகவும் இருக்கின்றேன். இப்பொழுது என்னிடம் இரண்டு மிகப் பெரிய தோட்டங்களும், இரண்டு மனைவிகளும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு தோட்டங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கின்றதோ அதனையும், இரண்டு மனைவிகளில் உங்களுக்குப் பிடித்த மனைவி ஒருவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற தோட்டத்தை உங்கள் பெயரிலும், நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற மனைவியை நான் விவாகாரத்தும் செய்து தருகின்றேன், அவளது இத்தா தவணை முடிந்ததும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள்.

ஆனால், கண்ணியமும், சுயமரியாதையும் கொண்ட அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது சகோதரரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், அவர் கூறினார்:

அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பானாக! இன்னும் உங்களது உடமைகளிலும், உங்களது குடும்பத்தினர் மீதும், உங்களது குழந்தைகளின் மீது அருள்பாலிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு வணிகச் சந்தைக்கான வழியைக் காட்டுங்கள். எனது வாழ்வாதாரத்தை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு ஒரு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

அதன் பின் வணிகச் சந்தைக்கான வழியை அறிந்து கொண்ட அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அவர் எப்பொழுது தனது சொந்த வியாபாரத்தைத் தொடங்கினாரோ அப்பொழுதிலிருந்து இறைவன் அவரது வியாபாரத்தின் மீது அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.

ஒருநாள் மாலை நேரத்தில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளை அணிந்த நிலையில் வித்தியாசமான தோற்றத்தில் நின்று கொண்டிருந்த அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், அப்துர் ரஹ்மானே..! உங்களது தோற்றத்தில் நான் ஒரு வித்தியாசத்தைக் காணுகின்றேனே..! என்று கூறினார்கள்.

மரியாதையோடும், அன்போடும் .. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களே..! நான் ஒரு அன்ஸாரிப் பெண்ணை மணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

நீங்கள் எவ்வளவு மணக்கொடை கொடுத்துத் திருமணம் புரிந்தீர்கள். ஒருகட்டித் தங்கத்தைக் கொடுத்துத் திருமணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

திருமண வலிமா விருந்து கொடுத்தாகி விட்டதா? இல்லையெனில், ஒரு ஆட்டையாவது அறுத்து விருந்து கொடுங்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வியாபாரத்தில் இறைவன் தனது பூரண அருட்கொடைகளை வழங்கியிருந்தான். அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்துச் சென்றன. அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தான்.

வியாபாரத்தை அடுத்து, விவசாயத்திலும் அதிகக் கவனம் செலுத்தினார். மிகப் பரந்த அளவில் விவசாயத்தை ஆரம்பித்த அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு, கைபரில் ஒரு பெரிய நிலத்தையே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கினார்கள். ஜர்ராஃப் என்ற இடத்தில் இருந்த அவரது நிலத்திற்கு தண்ணீர் இறைப்பதற்காகவே, அவரிடம் 20 ஒட்டகங்கள் இருந்தன. இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது சம்பர்த்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும், இத்தனை சொத்துக்களில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை, அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம், 700 ஒட்டகங்கள் நிறைய வணிகப் பொருட்களுடனும், தானியங்களுடனும் மதீனமா நகரத்துக்குள் நுழைந்த பொழுது, அந்த வணிகக் கூட்டத்தின் வருகையால் மதீனா நகரமே அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த சலசலப்பை செவியுற்ற அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், இந்த மதீனாவிற்கு என்ன நேர்ந்து விட்டது, ஒரே சலசலப்பாக இருக்கின்றதே..! என்று தனது பணிப் பெண்ணிடம் கேட்கின்றார்கள். அப்துர் ரஹ்மானின் 700 ஒட்டகங்கள் வணிகப் பொருட்களுடன் மதீனா நகருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் இந்த சலசலப்புக்கள் என்று அவருக்குக் கூறப்பட்டது.

இதனைக் கேட்ட அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் :

”அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுவனத்தில் நுழையும் பொழுது, தவழ்ந்த நிலையிலும், குதித்துக் குதித்தும் நுழைவார்கள்;” என்று கூறினார்கள்.

இதனைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து அன்னையவர்களிடம், நீங்கள் இவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றீர்களா என்று கேட்டார்கள். அன்னையவர்களும் ஆம்..! எனச் சொன்னதும்,

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் திருவதனங்களால் தனக்கு அறிவிக்கப்பட்ட இந்த நன்மாராயத்திற்காக, அல்லாஹ்வின் பெயரால் இந்த வணிகப் பொருட்களையும், அதனைச் சுமந்து வந்திருக்கின்ற இந்த ஒட்டகங்களையும் நான் இந்த முஸ்லிம் உம்மத்தின் நல்வாழ்வுக்காக தானமாகக் கொடுக்கின்றேன் என்று கூறி, அத்தனை பொருட்களையும் ஒட்டகங்களையும் தானம் செய்து விட்டார்கள்.

அவரது நான்கு மனைவிகளுக்கு மட்டும் எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவற்றை வெட்டி, அவரது சந்ததியினரிடையே பங்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம் ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார்.

ஒருமுறை அவர் நோன்பு திறப்பதற்காக வேண்டி அவருக்கு முன் தட்டில் உணவு வைக்கப்பட்டது. அவர் முன் வைக்கப்பட்ட உணவுத் தட்டுக்களைப் பார்த்தவுடன், அவரது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்தது.

முஸ்அப் பின் உமைர்..! நீங்கள் இவனை விடச் சிறந்தவர்கள்.. என்று தன்னைச் சுட்டிக் காட்டிக் கொண்ட அவர்கள், ஒருமுறை இவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர், அப்துர் ரஹ்மானே..! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது, ஏன் இப்படித் தேம்பித் தேம்பி அழுகின்றீர்கள்? உங்களது கண்களில் கண்ணீர் வழிகின்றன, இன்னும் நீங்கள் கவலை தோய்ந்தவர்களாக இருக்கின்றீர்களே? காரணமென்ன என்று வினவினார். அதற்கு அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்,

இந்த முஸ்லிம் உம்மத்தின் ஆட்சியாளராக இருந்து, இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுச் சென்று விட்ட நம் தலைவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், தனது குடும்பத்திற்காக எதனையும் விட்டு விட்டுச் செல்லவில்லை. மிகவும் எளிமையான அளவில் கூட, இன்னும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உணவைக் கூட அவர்கள் விட்டு விட்டுச் செல்லவில்லை. ஆனால் நாம் இப்பொழுது செல்வ வளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது இறுதி முடிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து அருட்கொடைகளையும் சுகிக்கும்படி நம்மை விட்டு விட்டு, மறுமையில் நம்மை அனாதரவாக விட்டு விடாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன், என்று அவருக்கு பதில் கூறினார்கள்.

அவர்கள் இந்த உலக வாழ்க்கையும், மறுமையையும் நினைத்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் என்னவென்று சொல்வது..! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தனது வியாபாரம் மற்றும் விவசாயப் பணிகளுக்கிடையேயும் அப்துர் ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பல போர்களில் கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக ஜிஹாதில் கலந்து கொண்டார்கள். ஒரு போரில் கலந்து கொண்ட அவர் இஸ்லாத்தின் பிரதான எதிரியாகத் திகழ்ந்த உமைர் பின் உஸ்மான் என்பவனை தீரத்துடன் துணிந்து அவனது தலையைக் கொய்து பெருமை படைத்தார்கள்.

இவர்கள் பத்ரு, உஹதுப் போர்களில் கலந்து கொண்டு வீரப் போர் செய்துள்ளனர். பத்ருப் போர்க்களத்தில் அபூஜஹ்லைக் கொல்வதற்காகத் தேடிவந்த மஆத் மற்றும் மாஊத் ஆகிய இளைஞர்களிடம் கவசம் தரித்திருந்த அவனைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் அவனுடைய இறப்புக்கு வழிகோலியவர்கள் இவர்களேயாவர்.

உஹதுப் போரில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காத்து நின்று வீரப் போர் செய்த இவர்களின் உடலில் இருபது காயங்கள் ஏற்பட்டன. காலில் ஏற்பட்ட படுகாயத்தினால் இவர்கள் தம் ஆயுள் முழுவதும் நொண்டி நடக்க வேண்டியதாயிருந்தது.

தபூக் படையெடுப்புக்காக இவர்கள் 4000 திர்ஹம்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து, ‘என்னிடமிருந்த எட்டாயிரம் திர்ஹங்களில் பாதியைப் போர்நிதிக்காகக் கொண்டு வந்தேன். பாதியை என் குடும்பத்திற்காக வைத்துக் கொண்டேன்’ என்று கூறினர். ‘நீர் தந்ததற்காகவும் வைத்துக் கொண்டதற்காகவும் அல்லாஹ் உம்மை ஆசிர்வதிப்பானாக!’ என்று இறைஞ்சினர். இவர்களின் வீரத்தைப் பாராட்டும் முகமாகத்தான்ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு தாமத்துல் ஜன்தல் என்ற இடத்தை முஸ்லிம்களின் நிலப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பனூ கலப் என்ற குலத்தவர்கள் வசித்து வந்தார்கள், இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரிகளாகச் செயல்பட்டார்கள். இந்தப் படைக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தளபதியாக நியமித்து அனுப்பி வைத்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், தலைவருக்கான தலைப்பாகையையும் அணிவித்து, அவரது கையில் இஸ்லாமியக் கொடியையும் கொடுத்து அனுப்பி வைக்கின்றார்கள்.

இஸ்லாமியப் படை தபூக் நோக்கி நகர்ந்த பொழுது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அந்தப் படையில் இணைந்து கொண்டார்கள். முஸ்லிம் படை ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி ஓய்வெடுத்த பொழுது, அங்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இல்லாத காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னிற்க தொழுகை நடத்தப்பட்டது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாமாக முன்னின்று தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, இடையில் வந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கொடைத்தன்மைக்கும், பரிசுத்த ஆன்மாவுக்கும், நேர்மைக்கும் பெயர் போன தனது ஆருயிர்த் தோழரைப் பின்பற்றி தொழ ஆரம்பித்தார்கள்.

இன்னும் அந்த குலத் தலைவர் தனது மகள் துமாதிரைஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்தார்.

இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக கணக்கு வழக்கின்றி, அளவில்லாமல் அள்ளிக் கொடுத்து சேவை புரிந்து வந்தார். செல்வத்தை இவ்வாறு தானம் செய்ததன் காரணமாக, இஸ்லாமிய வீரர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. ஒருமுறை இஸ்லாமிய வீரர்கள் போரில் பயன் படுத்துவதற்காக வென்றே ஐநூறு குதிரைகளை வாங்கினார்

அவர் இறப்பதற்கு முன்பாக தன்னிடம் இருந்த அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்தார். இன்னும் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் ஐநூறு திர்ஹம்களை பரிசாக வழங்கினார்.

இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் மனைவிமார்களுக்கு தனது சொத்திலிருந்து ஒரு பகுதியை வழங்குமாறு தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக அடிக்கடி பிரத்யேகமாகப் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

யா அல்லாஹ்..! அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உனது சுவனத்தில் உள்ள சல்சபீல் என்னும் ஓடையில் ஓடும் தூய நீரைப் பருகச் செய்யும் பாக்கியத்தை வழங்குவாயாக!

இன்னும் இந்த பூமியிலே வாழ்ந்த எண்ணற்ற மக்களின் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்ளும் நற்பேறு பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்கள். இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், தான் வாழ்ந்த காலத்திலேயே தனது ஆருயிர்த் தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சுவனம் உண்டென்று நற்செய்தி வழங்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.

இத்தகைய அருமையான பாக்கியமும் கௌரவமும் வேறு யாருக்குத் தான் கிட்டும்!

இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரபல்யமான வரலாற்றுச் சம்பவமான மக்கா வெற்றியின் பொழுதும், இன்னும் அதனை அடுத்து ஹஜ்ஜத்துல் வதா என்ற இறுதி ஹஜ்ஜின் பொழுதும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடன் உடன் இருந்த நற்பேறு பெற்றவருமாவார்.

ஹிஜ்ரி 10 ம் ஆண்டு, இறைவனது அழைப்பின் பேரில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள். அதன் பின் இஸ்லாமிய உம்மத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிப்பது யார் என்றதொரு பிரச்னை எழுந்த பொழுது, அந்தப் பிரச்னையைத் தீர்த்து அபுபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தலைமைப் பொறுப்பிற்குக் கொண்டு வருவதற்காக, முக்கியப் பங்காற்றியவர்களில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராவார்.

முதலாவது கலீஃபா அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கலீபாவாக தேர்ந்தெடுத்ததிலும், அவர்களுக்குப் பின் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேர்ந்தெடுத்ததிலும் மிகவும் முக்கியப் பங்காற்றியவர்கள்அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராவார்.

அடுத்த கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டஉதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது கரங்களில், முதன் முதலில் பைஅத் என்ற உறுதிப்பிரமாணத்தை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களே வழங்கினார்கள்.

அமீருல் முஃமினீன் உதுமான் பின் அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கின்றேன், எனக்குப் பின்னால் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான எனது மனைவிமார்களை நாணயமும், நம்பிக்கையும், நேர்மையும், தூய்மையான சிந்தனையும் கொண்ட ஒருவர் பாதுகாக்கக் கூடியவராக இருப்பார். அந்த வகையில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு தனது கடமையைச் சரியாகச் செய்தார் என்று உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடக் கூயடிவர்களாக இருந்தார்கள்.

ஒரு ஹஜ்ஜின் பொழுது, இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததோடல்லாமல், அவர்களுக்கு சரியாக வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

ஹிஜ்ரி 31 ஆம் ஆண்டில் தங்களது 73ஆவது வயதில்உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னின்று நல்லடக்கத்தை செய்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Salman Farsi-ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு.

Short Histroy-Hazrath Salman Farsi

 

Kuniat Abu Abdullah , Country Iran , Faras

He  was fire prayer then accept Christianity.

He was Alim of Christianity.

He was then informed by an Alim , who was at the verge of death , that 

              “The Final Prophet has been came and you

               should then go to him and accept Islam.”

He was then went to Madina and Embraced Islam on the hands of Hazrath Muhammed Mustafa  .

Hazrat Muhammed Mustafa , one day, called him  that,

                          Salman- minna-ahlal-bait     

                  i.e., “Salman  is in my family”

He  was in those students who learn Islam by Hazrat Muhammed Mustafa 

( known as Ashabe Suffa )

He  was at the age of more than 250 years when he  passed away from this world to Rafiq-e-Aala in 10 th Rajab 33 Hijri.

ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு.
 
      அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் உற்றத் தோழர்களில் ஒருவரான இவர்களின் பெயர் மாபா. தந்தை பெயர் பூஸகஷான் அல்லது திக்கான். இஸஃபஹபனின் அண்மையிலுள்ள ஜீ என்ற சிற்றூரில் பிறந்தார்கள். தொடக்கத்தில் தந்தை போன்று ‘அக்னி’ வணக்கக் காரராய் திகழ்ந்த இவர்கள் கிறித்துவர்களின் வணக்க முறையால் கவரப்பட்டதை அறிந்த இவரது தந்தை இவர்களை சிறையில் அடைத்தார்கள். அதிலிருந்து தப்பிய இவர்கள் சிரியா சென்று சிறித்துவ மதத்தை தழுவி கிறித்துவ பாதிரியாரின் ஊழியத்தில் இருந்தார். அவர் இறந்ததும் மூஸலில் இருந்த கிறித்துவ பாதிரியாரிடம் சென்று வாழ்ந்தார்கள். அவருக்கு இறப்பு அண்மியதும், அவரின் ஆணைப்படி நஸீப்யன் நகர் சென்று அங்கிருந்த கிறித்துவ பாதிரியாரிடம் வாழ்ந்தர்கள். அவருக்கும் இறப்பு நெருங்கவே ‘நான் இனி எங்கு செல்வேன்?’ என்று இவர்கள் அவரை நோக்கி கேட்க, ‘பேரீச்சம் மரங்கள் அடர்ந்த இடத்தில் ஒரு நபி வருவார். அவரை அடைவீராக! என்று கூறிச் சென்றார்.
      இறுதி நபியைத் தேடி இவர்கள் வரும்வழியில், ஒரு கூட்டத்தினர் அதற்கு தாங்கள் வழிகாட்டுவதாகக் கூறி யத்ரிபிலுள்ள யூதன் ஒருவனுக்கு இவரை விற்று விட்டனர். அச்சமயத்தில் அண்ணல் நபி அவர்கள் குபா வந்திருந்தனர்.அங்கு அவர்களை சந்தித்த இவர்கள், கிறித்துவ பாதிரியார் சொன்ன அடையாளங்கள் அவர்களிடம் இருப்பதைக் கண்டதும், இஸ்லாத்தை தழுவினர்.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இவர்களுக்கு ஸல்மான் என்று பெயரிட்டனர். இவர்கள் பாரசீக நாட்டைச் சார்ந்தவராகயிருந்தால் ஃபார்ஸி என்று சேர்த்து அழைக்கப்பட்டனர்.
  
     இவர்கள் அடிமையாய் இருந்தால் பத்ர், உஹது போர்களில் கலந்து கொள்ளவில்லை. 300 பேரீச்சம் நாற்றுகளை நடுவதோடு, 40 அவுன்ஸ் தங்கம் தந்தால் இவர் விடுவிக்கப்படுவார் என்று இவர் எசமான் கூற, அதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களே கொடுத்து அவர்களை விடுதலை செய்து, அபூதர்தா அன்ஸாரி அவர்களுடன் சகோதரராக இணைத்தார்கள்.
  
     அகழ்ப்போரில் இவர்கள் ஆலோசனைப்படியே அகழ் வெட்டப்பட்டது. அகழ் வெட்டுவதில் ஏனையவரை விட இவர்களே சிறந்து விளங்க, முஹாஜிர்களும் அன்ஸரிகளும்’இவர் எங்களைச் சார்ந்தவர்’ என்று கூறி தங்களுடன் சேர்த்துக் கொள்ள போட்டி போட்டனர். ‘ஸல்மான் மின்னா அஹ்லல் பைத்'(ஸல்மான் நம் குடம்பத்தைச் சார்ந்தவர்) என்று கூறி தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.
   
     இவர்கள் மீது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்கள். ‘இப்படியே பேசிக் கொண்டிருந்து விடுவார்களோ’ என்று அண்ணலாரின் மனைவிமார்கள் எண்ணுமளவிற்கு இரவில் வெகுநேரம் அண்ணலார் இவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள்.
  
     ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் மதாயினின் ஆளுநராய் நியமிக்கப்பட்டார்கள். அப்போது தமக்கு அளிக்கப்பட்டு வந்த 5000 பொற்காசுகளை ஏழைகளுக்கு தானமாக வழங்கிவிட்டு, விறகு விற்றும் பாய் முடைந்து விற்றும் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். எளிய உடையுடன் மதாயின் நகரில் சென்றபோது கூலியாள் என்றெண்ணி சுமை சுமந்து வருமாறு சிலர் கூறிய சம்பவங்கள் இவர்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.
   
   ஈரானியரில் முதல் முஸ்லிமான இவர்களை ‘அறிவில் லுக்மான் ஹகீமுக்கு நிகரானவர்’ என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள். ஸூபித்துவத்தின் நிர்மாணகர்த்தாக்களுள் ஒருவர் என்று கூட கருதப்படுகிறார்கள். பல தரீகாக்கள் இவர்களை தங்கள் முன்னோடியாக வைத்துள்ளன. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுக்கு இவர்கள் முடியிறக்கியதால் நாவிதர்களின் போஷகனாகவும் கருதப்படுகிறார்கள். சுமார் 250 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் மதாயின் ஆளுநராய் இருந்தபோதே காலமாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.