Fatwa About Janda-Flag- கொடி ஏற்றுவது ஆகும்- பத்வா.
By Sufi Manzil
கொடி ஏற்றுவது ஆகும்- பத்வா.
கேள்வி:- எங்கள் ஊரில் முஹ்யித்தீன் ஆண்டகை பெயரால் நாங்கள் கொடியேற்றி ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஜலாலியா ராத்தீபு நடத்;தி வருகிறோம். இங்குள்ள சிலர் பேஷ் இமாம் உட்பட கொடியேற்றுவது ஷிர்க் என்றும், பித்அத் என்றும் கூறி எங்களை ஏசியும், பேசியும் வருகின்றனர். ஆகவே அவ்லியாக்கள் பெயரால் கொடி ஏற்றுவது கூடுமா? கூடாதா? என்பது பற்றி உலமாசபை பதிலும், பத்வாவும் வழங்க வேண்டுகிறோம்.
யா முஹ்யித்தீன் ஆண்டகை திக்ரு மஜ்லிஸ்,
சிங்கப்பூர் நகர், உடுமலைப் பேட்டை.
பதில்:-கம்பத்தில் பறக்கவிடப்படும் கொடிக்கு அலம்-நிஷான்-ஜண்டா என்று பல பெயர்கள் சொல்லப்படுகின்றன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் போர்முனைக்கு கொடிகளுடன் சென்றுள்ளதாகவும், திருமக்காவை வெற்றி கொண்டு நுழையும்போது கொடி பிடித்ததாகவும் கீழ்கண்ட ஹதீதுகள் அறிவிக்கின்றன.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், 'அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்களின் பெரிய கொடி கருமையாகவும் சிறிய கொடி வெண்மையாகவும் இருந்தது.
நூல்: திர்மிதீ, இப்னு மாஜா, ஆதாரம்- மிஷ்காத் பக்கம்-237.
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் கொடி வெண்மையாக இருந்தது.'
நூல்:- திர்மிதீ, இப்னு மாஜா ஆதாரம்- மிஷ்காத் பக்கம்338.
சூபியாக்களான ஞானவான்கள், அன்பியாக்கள், அவ்லியாக்களை ஜியாரத் செய்வதற்காக போகும்போது கொடிகள் பிடித்துக் கொண்டும், கொட்டு அடித்துக் கொண்டும் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் கூடுமா? என்ற கேள்விக்கு அல்லாமா ஷைகு முஹம்மது கலீலி ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'இவைகள் ஆகுமானவைகள், வேண்டப்படுபவைகள். இவைகளை வழிகெட்ட வம்பர்கள்தான் மறுப்பார்கள் என்று பதிலளித்துள்ளனர்'.
ஆதாரம்: பதாவா கலீலி, பாகம்-2, பக்கம்-351.
மைய்யித்தி(கப்ரி)ன் தலைமாட்டில் கல் அல்லது மரக்கட்டை வைப்பது சுன்னத்தாகும். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்கள் உஸ்மானிப்னு மழ்வூன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமாட்டில் ஒரு பாறைக்கல்லை வைத்தார்கள். அதைக் கொண்டு எனது சகோதரரின் கப்ரு என தெரிந்து கொள்வேன். என் குடும்பத்தில் இறந்தவர்களையும் அங்கு அடக்கிக் கொள்வேன் என்று சொன்னார்கள்.
நூல்: ஷரஹுல் மஹல்லி, பாகம்-1, பக்கம்-351.
இஆனத்துத் தாலிபீன் பாகம்-2, பக்கம்-119.
மறுமையில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்களை கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் திருக்கரத்தால் 'லிவாவுல் ஹம்து' என்னும் கொடி கொடுக்கப்படுகின்றது.
எனது கரத்தில் 'லிவாவுல் ஹம்து' என்னும் கொடி இருக்கும். எனக்கு பெருமையில்லை. ஆதமும் அவர்களல்லாத எந்த நபியும் என் கொடியின் கீழே இருந்தே தவிர இல்லை. இந்த ஹதீஸை அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்.
நூல்:திர்மிதீ ஆதாரம் மிஷ்காத், பக்கம்-513.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், '
'மறுமை நாளில் 'லிவாவுல் ஹம்து' என்னும் கொடியை நான் சுமப்பேன்.'
நூல்:திர்மிதீ ஆதாரம:; மிஷ்காத், பக்கம்-513.
எனவே கொடி ஏற்றுவதன் மூலம் இது ஒரு மகானின் கப்ரு என்று அறிவிப்பதாலும், ஒரு வலியை கண்ணியப்படுத்துதல் இருப்பதாலும், மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாலும் இது மார்க்கத்தில் ஆகுமான காரியமாகும். ஆகாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு தேசியக் கொடி என்றும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கட்சிக் கொடி என்றும் ஏற்படுத்தி அதற்கான கொடியேற்று விழா, கொடி தினம் என்று கொண்டாடி வரும் இக்காலத்தில் அவ்லியாக்களுக்கு கொடி ஏற்றக் கூடாது என்று சொல்வது அறிவுpனத்தையும், அவ்லியாக்கள் மீதுள்ள பகைமையையும் காட்டுகின்றது. அல்லாஹ் அதை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக! அல்லாஹ் மிக அறிந்தவன்.
17-12-1995 ஒப்பம்:
மௌலானா மௌலவி முஹம்மது அலி சைபுத்தீன் ரஹ்மானி
பேராசிரியர்: மஹ்லறா அரபிக் கல்லூரி.
மௌலானா மௌலவி செய்யது முஹம்மது ஆலிம்.
பேராசிரியர்: மஹ்லறா அரபிக் கல்லூரி.
மௌலவி ஹாபிஸ் எப்.எம். இப்றாகிம் ரப்பானி,
ஆசிரியர்: அஹ்லெ சுன்னத் மாத இதழ்.
மௌலானா மௌலவி சையத் வஜீஹுன் நகீ சக்காப்
நாஜிமே அஃலா, தாருல் உலூம் கௌஸிய்யா.
மௌலானா மௌலவி கே.என். நூஹ் முஹ்யித்தீன் ஆலிம்,
முதல்வர்: அல் மத்ரஸத்துல் ஹமீதிய்யா.
வெளியீடு:- தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை
மதுரை ரோடு, திருச்சி-620008.