Islamic Months-இஸ்லாமிய மாதங்கள்
By Sufi Manzil
இஸ்லாமிய மாதங்கள்
புனித அல்குர்ஆனில் அல்லாஹ் சூரியனின் படைப்பு இரகசியத்தையம், சந்திரனின் வளர்ச்சி, தேய்வு பற்றிய தத்துவங்களையும் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளான்.
இன்று வழக்கத்திலுள்ள கி.மு, கி.பி. மற்றும் ஹிஜ்ரி ஆண்டுகள் நபிமார்களை மையமாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கி.பி என்பது இயேசு கிறித்து (ஹழ்ரத் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிறப்பை நடுநாயகமாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது. அதில் கி.மு. கிறித்துவுக்கு முன் உள்ள நிகழ்ச்சிகளையும், கி.பி. கிறித்துவுக்கு பின் உள்ள நிகழ்ச்சிகளையும் இன்றளவும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.
'ஹிஜ்ரி' ஆண்டு என்பது அண்ணல் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்குப் பயணித்த 'ஹிஜ்ரத்' பயணத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும்.
சூரியன், சந்திரனைப் பற்றி குறிப்பிடும்போது நாட்குறிப்பு வசதிக்காகவே நாம் அவற்றைப் படைத்தோம் என்று புனித திருமறை கூறுகிறது.
'(நபியே! வளர்ந்து தேயும்) பிறைகளைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். அவை மக்களுக்காகவும், ஹஜ்ஜுக்காகவும், கால நேரங்களைக் குறிப்பிடுபவையாகும் என்று நீர் கூறுவீராக.' -(அல்பகரா:189)
'அவன்தான் சூரியனை சுடரொளி மிக்கதாகவும், சந்திரனை தன்னொளியாகவும் ஆக்கினான். இன்னும் நீஞ்கள் ஆண்டுகளின் (மாதங்கள், நாட்களின்) எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்கு பல மன்ஜில்களையும் (தங்குமிடங்களையும்) அவன் ஏற்படுத்தினான். அல்லாஹ் உண்மை(யாகத் தக்க காரணம்) கொண்டே தவிர இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் மக்களுக்கு (த் தன்னுடைய) அத்தாட்சிகளை இவ்வாறே விவரிக்கிறான்'. –(யூனுஸ்: 5)
இந்த ஆயத்தில் சூரிய ஒளியை 'லியாவு' என்றும், சந்திர ஒளியை 'நூர்' என்றும் வர்ணிக்கிறான். 'லியாவு' என்பது கடுமையான ஒளி என்றும் இது பகல் நேரங்களில் நாம் நமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையானதென்றும், 'நூர்' இதமான ஒளியென்றும் இது இரவில் நாம் சுகமாக இருப்பதற்கு ஏற்றதென்றும் சான்றோர் பொருள் கொள்வர். –(ஆரிபு)
மேலும் 'சூரா தவ்பாவில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று அழுத்தந்திருத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. 'நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை ….அல்லாஹ்வுடைய (லவ்ஹுல் மஹ்பூலில்) உள்ளபடி ஓராண்டுக்கு பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும்' -(தவ்பா: 36)
காலத்தை வேளைகளாகவும், நாட்களாகவும், மாதங்களாகவும், ஆண்டுகளாகவும் மனிதர்கள் கணக்கிட்டுக் கொள்ளும்பொருட்டு இறைவன் சூரியன், சந்திரன் ஆகியவைகளைப் படைத்ததாக இவ்வசனங்கள் மூலம் தெரிகிறது.
உலகில் மனிதன் தோன்றிய ஆரம்ப காலத்தில் சூரியனைக் கொண்டு காலை, மதியம், மாலை, இரவு, ஒருநாள் என்றும் சந்திரனின் முதல் பிறையைக் கண்டதும் மாதத்தின் துவக்கமென்றும் பின் அதன் வளர்ச்சியை வைத்து முதல் பதினைந்து நாட்களையும், தேய்வை வைத்து அடுத்த பதினைந்து நாட்களையும் கணித்து மாதத்தின் முடிவு என்றும், இப்படியே அவன் மாதங்கள், வருடங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டிருப்பான்.
கிறித்துவ ஆண்டுக்கும் ஹிஜ்ரி ஆண்டுக்குமுள்ள வேற்றுமைகள்:
சூரியனைக் கொண்டு கணக்கிடப்பட்டு வரும் ஆண்டுக்கு இயேசு கிறித்து பிறப்பை மையமாக வைத்து கிறித்து பிறப்பதற்கு முன் (கி.மு.) என்றும், கிறித்து பிறந்த பின் (கி.பி.) என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன்படி 24 மணிநேர கால அளவினை ஒரு நாளுக்குச் சமமாக்கிக் கொள்கிறோம். கிறித்துவ ஆண்டுக் கணக்கு சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நாட்கள் பெரும்பாலும் 365 ஆகவும், ஹிஜ்ரி ஆண்டு சந்திர பெயர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு நாட்கள் பெரும்பாலும் 355 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த கணக்கின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு மாதம் அதிகரிக்கிறது. 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு வருடம் அதிகரித்து விடுகிறது எனவும் அறிகிறோம்.
இதன்படி, சூரிய ஆண்டு ஒரு குறிப்பிட்ட மாத காலத்தில் ஒரு குறிப்பிட்ட பருவம் என்று உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும். இதில் பெரும்பாலும் அதிக வேற்றுமை இருக்க முடியாது. பருவ காலங்களிலும் அதிக வித்தியாசம் இருக்க முடியாது. வசந்த காலம், கோடைக் காலம், மழைக் காலம், குளிர் காலம் ஆகியன கிறித்து ஆண்டின்படி குறிப்பிட்ட மாதங்களில் தோன்றுகின்றன. பருவங்கள் தோன்றுவது கொண்டே மனிதன் செயல்பட முடியும்.
ஆனால் அதேசமயம் ஹிஜ்ரி மாதங்களுக்கும், பருவங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. காரணம் மூன்று சூரிய ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ஹிஜ்ரி மாதமும், முப்பத்தாறு சூரிய ஆண்டுகளுக்கொரு முறை பன்னிரண்டு ஹிஜ்ரி மாதங்களும் சுற்றி வருகின்றன. உதாரணமாக இவ்வாண்டு ஹஜ்ஜுடைய காலம் ஏப்ரல் மாதத்தில் வருகிறதென்றால், எதிர்வரும் நான்காவது ஆண்டில் மார்ச் மாதத்தில் ஹஜ்ஜுடைய காலம் வரும். இவ்வாறே பிறையாண்டுகளும், பருவ காலங்களும் மாறி மாறி வருகின்றன.
இஸ்லாம் பிறையாண்டை கையாளுவதின் காரணம் முழு நிலவைப் பார்த்து மாதத்தின் '12, 14, 15, 16' ஆம் நாட்களை கணக்கிட முடியும். சூரியன் மறைந்து நடுநிசிக்குப் பின் உதிக்கும் நிலவைக் கணக்கிட்டு பதினாறுக்கு மேல் உள்ள நாட்களையும் கணக்கிட முடியும். மாதத்தின் முதல் பிறை மற்றும் ஒவ்வொரு நாளும் மேற்குத் திசையில் கீழ்வானத்திற்கும், நிலவுக்கும் இடையில் தோன்றும் இடைவெளியையும், பிறை வளர்ச்சியையும் வைத்து பன்னிரண்டு நாட்களைக் கணக்கிடலாம். இவ்வாறு பிறைக் கணக்கை வைத்து மாதங்களையும் ஆண்டுகளையும் கணிக்க முடியும். ஆனால் சூரியனைக் கொண்டு ஒரு நாள், பகல், இரவு நேரங்களை மட்டுமே கணிக்க முடியும், மாதங்கள் வருடங்களைக் கணக்கிட முடியாது. சூரியத் தேதிகளை மறந்து விட்டால் கணக்கிடுவது சிரமம்.
பெண்கள் தங்கள் மாதவிலக்குக் காலங்களை கணக்கிடவும், கர்ப்பம், பேறுகாலம் இன்னும் பல நிகழ்வுகளைக் கணக்கிட்டுக் கொள்ளவும், இரு பெருநாட்கள், வாரந்தோறும் வரும் ஜும்ஆ நாட்கள் ஆகியவற்றைக் கணக்கிடவும் பிறையாண்டைப் போல் சூரிய ஆண்டில் முடியாது. படித்தவர், படிக்காதவர் உள்ளபட அனைத்துத் தரப்பினரும் பிறையாண்டை கணக்கிட்டுக் கொள்ளலாம். பிறையாண்டைக் கணக்கில் கொள்வதால் ஹஜ்ஜு, ரமலான் மாதங்கள் வௌ;வேறு காலங்களில் மாறி வருகின்றன.
'பிறை கண்டால் நோன்பு வையுங்கள், பிறை கண்டு நோன்பை விடுங்கள், மேபமூட்டமாக இருந்தால் 30 நாட்களை எண்ணிக் கொள்ளுங்கள்' எனக்கூறி தமது உம்மத்தாரை ஹிஜ்ரி ஆண்டைக் கணக்கிடச் சொன்னார்கள்.
ஆகவே பிறையாண்டு அனைத்து சமூகத்தினர்க்கும் கணக்கிடுவதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது தெளிவு.