பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம்-Bidat

பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம்.

அன்று முதல் இன்று வரை நாம் பின்பற்றியொழுகி வருகின்ற எத்தனையோ நல்ல செயல்களை அவை பித்அத் என்று கூறி, அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகுறு பாதையிலிருந்து விலகி வழி கெட்டும், வழிகெடுத்தும் வருகின்றனர் சில அதிபுத்திசாலிகள்(?)!

திருமறையையும், திரு நபி வழிமுறைகளையும் மட்டுமே நாங்கள் பின்பற்றுகின்றோம், ஏற்றுக் கொள்கிறோம்ட என்று கூறித்  திரியும் இவர்கள் திருமறை மூலமாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் நற்செயல்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்ட காரியங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக பித்அத் எனவும், பித்அத்துகள் அனைத்தும் வழிகேடே எனவும் பிரச்சாரம் புரிகின்றனர்.

சுன்னத் என்றால் என்ன? பித்அத் என்றால் என்ன? என்பது குறித்து அடிப்படை அறிவு இல்லாத காரணத்தினாலேயே அவர்கள் இவ்வாறான தப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்

'திருமறை , திருநபி வழிமுறை, சஹாபாக்களின் நடைமுறை, இமாம்களின் ஒத்தக் கருத்துரை ஆகியவற்றிற்கு எதிராக – புதிதான ஒன்றைக் கொண்டு வந்தால் அது வழி கெட்ட-தவறான பித்அத்!'

மேற்கூறப்பட்டவைகளுக்கு முரணில்லாமல் ஒரு நற்செயலை உருவாக்கினால் அது ஏற்றுக் கொள்ளாபபட்ட –புகழுக்குரிய பித்அத்! என சட்டமேதை இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றானர்.

நூல்: பத்ஹுல் முபீன் பக்கம் 95, தஹ்புல் அஸ்மாஉ வல்லுகாத் பாகம் 2 பக்கம் 23.

பித்அத்துகளை இவ்வாறு இருவகையாகப் பரித்து எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? 'எல்லா பித்அத்துகளும் வழிகேடு, எல்லா வழிகேடுகளும் நரகில்' என்று அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றனரே! ன்பது சில அளிவாளிகளின் வினா! விடையைத் தேடும் இந்த வினாவுக்கான பதில் சற்று விரிவாகத்தான் தர வேண்டும்!

'அல்லாஹ்வை நீங்கள் நேசிப்பீர்களாயின்  என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் என நபியே ! கூறுங்கள்' (அல்-குர்ஆன்)

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுவது என்றால் என்ன? அவர்களின் சுன்னத்துக்களை ஏற்றுக் கொண்டு செயல்படுதல்! (சுன்னத் என்றால்-நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் மூன்றும் இடம் பெறும்)

பித்அத் என்றால் 'அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இல்லாத ஒரு புதிய செயல்'  (மிர்காத் பாகம் 1, பக்கம் 178)

பெருமானாரின் காலத்தில் இல்லாதவற்றை நாம் செய்யலாமா? கூடாதா? எல்லா பித்அத்துகளுமே வழிகேடுகள்தானா? ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம். இமாம்கள் பித்அத்களை இரண்டாகப் பிரித்து நல்லவை, கெட்டவை எனப்  பெயர் சூட்டியது எந்த அடிப்படையில்? இதனையும் ஹதீஸ்கள் மூலமே தெளிவுபடுத்துவோம்.

ஸெய்து இப்னு தாபித் கூறுகின்றார்கள்: 'யமாமா போர் நடந்துக் கொண்டிருந்த போது கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு என்னை அழைத்துவர ஆளனுப்பினார்கள். நான் சென்றபோது கலீபாவுடன் உமரும் இருந்தார்கள். யமாமாப் போரில் குர்ஆனைப் பாடமிட்டிருந்த பலர் மறைந்து விட்டனர். மீதமுள்ளோரும் இப்படியே கொல்லப்பட்டு விடுவார்களாயின் குர்ஆனைப் பாடமிட்டவர்கள் இல்லாமலாகிவிடுவாரோ என அஞ்சுகின்றேன்.

எனவே திருமறையை நூலுருவில் கொண்டுவர வேண்டுமென உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர். 'நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்திராத ஒரு காரியத்தை நாம் எப்படி செய்வது? என்று உமரிடம் கேட்டேன். 'இறைவன் மீது ஆணையாக! இது நல்லதோர் செயல்! என உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள். அல்லாஹ் இது விஷயத்தில் உமருடைய இதயத்தை விசாலமாக்கி வைத்தது போன்று எனது இதயத்தை விசாலமாக்கி வைப்பது வரை என்னிடம் பலமுறை எடுத்துக் கூறினார்கள். தற்போது எனக்கும் உமருடைய அபிப்ராயம்தான்! எனவே அறிவாளியும், இளைஞரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;ன் வஹியை அவ்வப்போது எழுதி வந்தவர்களுமான தாங்கள் குர்ஆனை நூலுருவில் சேர்க்கின்ற பணியினை செய்திட வேண்டும்' என கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

பெரியதொரு மலையைப் பெயர்த்தெடுக்க கூறினால் அது எனக்கு இலேசான செயலாக இருந்திருக்கும். நபி பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யத் துணியாததை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?  என நான் கேட்டேன். அபூபக்கர் அவர்கள் சொன்னார்கள். 'இஃதோர் சிறந்த செயல்' என இதயத்துக்கு சமாதானம் ஏற்படுவது வரை பன்முறை இந்தக் காரியத்தை குறித்து அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தனர். பின்னர் நான் குர்ஆனை சேகரிக்கத் தொடங்கினேன்.'

(புகாரி: பாகம் 1, பக்கம் 745)

நபிகளாரின் காலத்தில் இல்லாத செயல்கள் எல்லாமே வழிகேடு. நரகத்தில் சேர்ப்பவை என்றிருக்குமாயின் அபூபக்கர், உமர், ஜைது போன்ற கண்ணியமிகு நபிமணித் தோழர்கள் அண்ணலார் செய்யாத ஒரு செயலைச் செய்து 'அதற்கு நற்செயல்' என பெயருமிட்டனர் என்றால், அவர்கள் வழி கேட்டிற்குத் துணைபோயினரா? அனாச்சாரத்தின் மீது ஸஹாபாக்களும் ஒத்த கருத்து கொண்டிருந்தனரா?

இந்த அடிப்படையில்தான் இமாம்கள் பித்அத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தனர். நல்லது, கெட்டது என வகைப்படுத்தினர்.

எனவே, 'அண்ணலாரின் காலத்தில் இல்லாத புதிய செயல்களுக்கு ஷரீஅத்தில் பித்அத் என்று கூறப்படும். இது நல்லது, கெட்டது என இரு வகைப்படும்.' என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: தஹ்தீபுல் அஸ்மாஉ பாகம் 2, பக்கம் 22

மிர்காத், பாகம் 1, பக்கம் 178.

ரமலானின் ஓரிரவில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு நான் பள்ளிக்குச் சென்றேன். சிலர் தனித்தும், வேறு சிலர் ஜமாஅத்தாகவும் தொழுது கொண்டிருந்தனர். இதனைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு இவர்களை ஒரே இமாமின் கீழ் ஜமாஅத்தாக தொழச் செய்வது மிகச் சிறந்தது எனக் கூறி உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் ஜமாஅத்தாக்கினார்கள். மற்றொரு நாள் நான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிக்குச் சென்றபோது மக்கள் ஜமாஅத்தாக தொழுது கொண்டிருந்தனர். இது கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'இஃ;தோர் நல்ல பித்அத்' என்றனர். அப்துற் றஹ்மான் இப்னு அப்துல் காரி அறிவிக்கின்ற இந்நிகழ்ச்சியை புகாரி (பாகம் 1 பக்கம் 269)ல் காணலாம்.

தராவீஹ் தொழுகையினை ஜமாஅத்தாக தொழச் செய்து அதற்கு நல்ல பித்அத் என்று பெயரும் சூட்டினர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். எனவே எல்லா பித்அத்துகளும் வழிகேடல்ல என்பது தெளிவாகிறது. யாராவது இஸ்லாத்தில் ஒரு நல்ல செயலை அறிமுகப்படுத்தினால் அதனுடைய கூலியும், அதனை செயல்படுத்தியரின் கூலியும், அறிமுகப்படுத்தியவருக்குக் கிடைக்கும். யாராவது ஒரு தீய செயலைக் கொண்டு வந்தால் அதனுடைய தண்டனையும் கிட்டும். (முஸ்லிம் பாகம் 1, பக்கம் 241, இப்னுமாஜா பக்கம் 18, மிஷ்காத் பாகம் 1 பக்கம் 33)

இறைவனும் இறைத்தூதரும் திருப்தியுறாத வழிதவறிய ஒரு பித்அத்தை கொண்டு வருபவனுக்கு அதனுடைய தண்டனையும், அதை செய்பவனுக்குரிய தண்டனையும் கிடைக்கும் (இப்னு மாஜா பக்கம் 19, மிஷ்காத் பாகம் 1 பக்கம் 30) இந்த நபி மொழிக்கு விளக்கமெழுதிய ஹதீஸ்கலை விற்பன்னர் முல்லா அலீ காரீ ரஹ்மத்துல்லாஹி  அலைஹி அவர்கள் நல்ல பித்அத்துகள் தவறானதல்ல என்பதைக் காட்டுவதற்கே தீய பித்அத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தமது மிர்காத் பாகம் 1 பக்கம் 202ல் எழுதுகிறார்கள்.

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் தான் இமாம்கள் பித்அத்துகளை வகைப்படுத்தினார்களே தவிர, ஆதாரமின்றி வகைப்படுத்தவுமில்லை. புதுக்கொள்கைகாரர்கள் கூறுவது போன்று எல்லா பித்அத்துகளும் வழிகேடுமல்ல. அப்படிக் கூறுபவன் தான் வழிகேட்டின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றான் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே ஹதீஸ்கள், ஸஹாபாக்களின் நடைமுறைகள் ஆகயிவற்றின்படி இமாம்கள் வகுத்துத் தந்துள்ள நல்ல பித்அத்களை நாம் செய்தால் அவற்றுக்கு அல்லாஹ்வுடை;யவும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடையவும் அங்கீகாரம்  உண்டு. நற்கூலியும் உண்டு என்பது உறுதி.

நபிமொழித் தொகுப்பு நூற்களில் 'எல்லா பித்அத்துகளும் தவறானவை' என்று கூறுகின்ற சில ஹதீஸ்களைக் காணலாம். இங்கெல்லாம் பித்அத்தெ ஸய்யிஆ-தீய பித்அத் என்றே நபி மொழிக் கலை வல்லுனர்கள் விளக்கம் தந்துள்ளனர்.
 

'எல்லா பித்அத்துகளும் வழிகேடனாவை' என்று மிஷ்காத் பாபுல் இஃதிஸாம் எனும் பாடத்தில் வருகின்ற நபிமொழிக்கு, மிஷ்காத்தின் விளக்கவுரை நூலான அஷிஃஅத்துல்லம்ஆத் இவ்வாறு விளக்கம் கூறுகின்றது:

'எந்தவொரு பித்அத்தும் அடிப்படைவிதிகளுக்கும், ஸுன்னத்திற்கும், ஷரீஅத்தின் நடைமறைகளுக்கும் ஒத்திருந்தால் அதனை பித்அத்தே ஹஸனா-நல்ல பித்அத் எனவும், முரண்பட்டிருந்தால் பித்அத்தே ஸய்யிஆ-தீய பித்அத் எனவும் கூறப்படும்.

இப்போது பித்அத்துகளெல்லாம் வழிகேடு என்று கூறப்படுவதின் அர்த்தம் புரிந்திருக்கும். வல்லான் அல்லாஹ் உண்மைகளைப் புரிந்து, அதனை ஏற்றுக் கொண்டு செயல்படும் அஹ்லுஸ்ஸுன்னத்தின் அழகிய பாதையில் என்றும் நம்மையும், நம் சந்ததிகளையும் நிலைத்து வாழச் செய்வானாக! ஆமீன்.

முற்றும்.

நன்றி: வஸீலா 1-3-1987.

Qurbani in the view of Shariah-குர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள்

குர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள்.

தொகுப்பு: சையத் ஷாஹ் வஜீஹுன்னகீ சக்காப் ஷுத்தாரில் காதிரி அவர்கள்

குர்ஆன் கூறுகிறது 'அதன் (குர்பானியின் மாமிசமோ, அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை. எனினும் உங்களின் தக்வா(பயபக்தி)தான் அவனை சென்றடைகிறது'. –அல்-குர்ஆன் 22:37.

அல்லாஹ் மேலும் கூறுகிறான். 'எனவே நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்கு பகரமாக்கினோம்' –அல்-குர்ஆன் 37:107

ஹஜ்ரத் இப்றாகிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் அனுப்பி வைத்த செம்மறி ஆட்டை குர்பானி கொடுத்தார்கள்.                                                                           –தப்ஸீர் குர்துபி

ஹிஜ்ரி 2-ம் வருடம் குர்பானி கடமையாக்கப்பட்டது. ஹனபி மத்ஹபின் படி குர்பானி கொடுத்தல் வாஜிபாகும். இமாம் ஷாபிஈ அவர்களிடத்தில் குர்பானி கொடுத்தல் சுன்னத்தே முஅக்கதாவாகும்.

குர்பானி யார் மீது கடமை?

இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'தமது ஊரில் தங்கி இருக்கக் கூடிய வசதியான அடிமைகளாக இல்லாத சுதந்திரமான முஸ்லிம்களின் மீது குர்பானி கொடுத்தல் வாஜிபு' எனக் கூறுகின்றனர்.

குர்பானி கொடுக்கக் கூடிய நபரின் பொருளாதார வசதியை இமாம்கள் 200 திர்ஹம் மாத வருமானம் உள்ளவர்கள் என நிர்ணயிக்கின்றனர்.
                                                              நூல்: அல் பிக்ஹு வல் மதாஹிபில் அர்பஆ.

நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்திற்குப் பின் மதீனாவில் வாழ்ந்த பத்து ஆண்டுகாலமும் குர்பானியை நிறைவேற்றி வந்தனர்.

குர்பானி கொடுப்பவர் 'துல்ஹஜ்மாதம்' பிறை பார்த்ததிலிருந்து  குர்பானி கொடுக்கும் வரை தலைமுடி இறக்குவதோ, முடியை வெட்டுவதோ, நகம் தரிப்பதோ சுடாது.

குர்பானிக்குரிய பிராணிகள்

ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை குர்பானி கொடுத்தல் வேண்டும்.

ஆடு: குர்பானி கொடுக்க மிகச் சிறந்த பிராணி. ஏனெனில் இறைவன் ஹஜ்ரத் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பகரமாக ஆட்டைதான் குர்பானியாக கொடுக்கச் சொன்னான் என்பதாக முபஸ்ஸிரீன்களான குர்ஆனின் வியாக்கியானிகள் கூறுகின்றனர்.                    
                                                                                                                                            –ஆதாரம்: தப்ஸீர் குர்துபீ

குர்பானி கொடுக்கப்படும் செம்மறியாடு அல்லது வெள்ளாடு ஒரு வருடம் முழுவதும் பூர்த்தியடைந்ததாக இருத்தல் வேண்டும்.

ஆறுமாத செம்மறியாடு நன்கு கொழுத்ததாக இருந்து அதை ஒரு வருடத்திய ஆடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு வருடத்திய ஆடு போல் தெரிந்தால் குர்பானி கொடுக்கலாம்.

வெள்ளாட்டுக்கு கண்டிப்பாக ஒரு வருடம் முழுதும் பூர்த்தியடைந்து இரண்டாம் வருடம் ஆரம்பமாயிருத்தல் மிகவும் அவசியம்.

ஒரு நபருக்கு ஒரு ஆடு என்ற விகிதத்தில் குர்பானி கொடுத்தல் வேண்டும். இயற்கையாகவே கொம்பில்லாத, மோழையாக உள்ள விதையடிக்கப்பட்ட ஆட்டையும் குர்பானியாக கொடுக்கலாம்.
                                                                                                                                     ஆதாரம்: பதாவா ஆலம்கீரி.

மாடு: இரு வருடங்கள் முடிந்து மூன்றாம் வருடம் ஆரம்பமாகியிருத்தல் வேண்டும். எருமையையும் மாடு போன்றே கருதி குர்பானி கொடுக்கலாம்.

ஒட்டகம்: ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் வருடம் ஆரம்பமாயிருத்தல் வேண்டும்.

மாடு, ஒட்டகம் போன்றவற்றில் ஒரே பிராணியை ஏழு நபர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் இதில் ஒரு நபர் கூட்டில் குறைந்தாலும் குர்பானி நிறைவேறாது.

குர்பானியில் முஸ்தஹப்பான (பேணப்பட வேண்டிய) காரியங்கள்

1. பிராணியை அறுக்கும் போது கிப்லாவை முன்னோக்கி படுக்கச் செய்தல்.

2. குர்பானி கொடுப்பவர் அறுக்கத் தெரிந்திருந்தால் தாமே அறுக்க வேண்டும். இல்லையெனில் அறுக்கத் தெரிந்தவரை அறுக்கச் சொல்லி தாமும் பக்கத்திலேயே இருக்க வேண்டும்.

3. குர்பானி கொடுக்கும் போது மிகக் கூர்மையான கத்தியைக் கொண்டு அறுக்க வேண்டும்.

4. விதையடிக்கப்பட்ட, கொம்புள்ள, நல்ல வயதுள்ள பருமனான கொழுத்த செம்மறிக்கடாவாக இருக்க வேண்டும்.

இறைச்சியை என்ன செய்ய வேண்டும்?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துக்களான முஃமின்களுக்கு மட்டுமே குர்பானியின் இறைச்சி ஹலாலாக்கப்பட்டுள்ளதுமு. அதிலும் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து அதில் முதல் பாகத்தை ஏழைகளுக்கு ஸதகாவாக(தர்மமாக)வும், இரண்டாம் பாகத்தை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மூன்றாம் பாகத்தை தமக்காகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
                                                                                                                                                            ஆதாரம்: ஹிதாயா.

அறுக்கு முன் ஓத வேண்டிய துஆ

இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ பத்ரஸ் மாவாத்தி வல் அர்ழ ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரிகீன்.

இன்ன ஸலாத்தீ வ நுஸுக்கீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீகலஹு வபி தாலிக்க உமிர்த்து வ அன மினல் முஸ்லிமீன்.

மேற்கண்ட துஆவை ஓதியபின் குர்பானியின் பிராணியை கிப்லாவின் பக்கம் முகம் இருக்குமாறு படுக்க வைத்த அறுப்பவர் 'அல்லாஹும்ம லக வ மின்க பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' என்று ஓதியபடியே கூர்மையான கத்தியைக் கொண்டு விரைவாக மூன்று அறுப்பில் அறுத்து முடிக்க வேண்டும்.

பின்னர் அங்கு நின்று கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி கீழ்காணும் துஆவை ஓத வேண்டும்.

அல்லாஹும்ம தகப்பல் மின்னீ கமா தகப்பல்த்த மின் கலீலிக்க ஸையிதினா இப்றாஹிம வ மின் ஹபீபிக்க ஸையிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வ அலா ஆலிஹீ வ அஸ்ஹாபிஹி வ பாரிக் வ ஸல்லிம்.

அடுத்தவருக்காக அறுக்கும்போது,

அல்லாஹும்ம தகப்பல் மின்னீ என்ற இடத்தில் மின் என்று கூறி பின்னர் குர்பானி கொடுப்பவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

                                                                  ஆதாரம்: பதாவா ஆலம்கீரி, பஹாரே ஷரீஅத்.

குர்பானி கொடுக்கும் நேரம்

ஈதுல் ளுஹாவின் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சூரியன் உதயமான நேரத்திலிருந்து குர்பானி கொடுத்தல் துவங்குகிறது.

பெருநாள் தொழுகையை அடுத்து குத்பா ஓதி முடிந்தபின் குர்பானி கொடுத்தல் சிறந்ததாகும்.
                                                                                                                                       நூல்: மிஷ்காத்.

தல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம். இதில் குர்பானி கொடுக்க முதல் (பெரு) நாளே சிறந்ததென ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலீ, ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற நபித் தோழர்கள் அறிவிக்கின்றனர்.

                                                                                                                                         நூல்: ஹிதாயா.

குர்பானியில் வெறுக்கத்தக்கவை (மக்ரூஹ்)

1. அறுக்கும் போது தலை துண்டாகி விடுதல்.

2. பிராணியை படுக்க வைத்தபின் கத்தியை தீட்டுதல்.

3. கிப்லாவை முன்னோக்கி படுக்க வைக்காமல் அறுத்தல்.

4. அறுக்கப்பட்டபின் உயிர் முழுவதுமாக அடங்குமுன்பே தோலை உரித்தல்.

5. உயிர் நன்கு பிரியுமுன் தலையை ஒடித்தல், துண்டித்தல்.

6. அறுக்கும்போது  தேவையில்லாதவைகளை செய்வதன் மூலம் பிராணிக்கு துன்பம் கொடுத்தல்.

7. ஒரு பிராணிக்கு முன் மற்றொரு  பிராணியை அறுத்தல்.

குர்பானிக்கு தகுதியற்ற பிராணிகள்

குர்பானி கொடுக்கப்படும் பிராணி குருடு, கண்பார்வை குறைந்தது, நடக்க முடியாதது, சொறி பிடித்தது, காது, வால் போன்றவை துண்டிக்கப்பட்டிருத்தல், ஆணுமற்ற பெண்ணுமற்ற பிராணி போன்றவற்றை குர்பானி கொடுத்தல் கூடாது.

                                                                                                                          நூல்: ஹிதாயா, பதாவா ஆலம்கீரி.

இதர மார்க்கச் சட்டங்கள்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை குர்பானி கொடுப்பதற்கு வசதியாக சிறிது முற்படுத்திக் கொள்ளல் சிறந்ததாகும்.                                                                      நூல்: பதாவா ஆலம்கீரி.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை முற்படுத்தித் தொழுதல் ஷாபிஃ மத்ஹபில் சுன்னத்தாகும்.

                                                                                                                         நூல்: இஆனத்துத் தாலிபீன்

பெருநாள் தொழுகைக்கு செல்லும்போது கண்ணியத்துடன் பார்வை நிலம் நோக்கும் வண்ணம், பார்வையை அங்குமிங்கும் அலைபாய விடக் கூடாது. ஈத்காஹ் சென்று சேரும்வரை தக்பீரை சப்தமாக சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.

பெருநாள் தொழுகைக்கு செல்பவர் எதையும் பருகாமலும், அருந்தாமலும் செல்வதுடன் குர்பானி கொடுப்பவர் அதன் இறைச்சியை பெருநாளன்று முதன்முதல் உண்பதும் சுன்னத்தாகும்.

குர்பானிக்காக வாங்கப்பட்ட பிராணி திடீரென இறந்துபோய் விட்டால், அல்லது காணாமல் போய்விட்டால் செல்வந்தராக இருப்பின் அவர் வேறொரு பிராணி வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும். ஏழையாக இருந்தால் அவர் மாற்று பிராணி வாங்கி குர்பானி கொடுக்க வேண்டியதில்லை.

குர்பானிக்குரிய பிராணி காணாமலோ அல்லது திருட்டு போய் விட்டாலோ அதற்குப் பதிலாக வேறொன்று வாங்கப்பட்டபின் காணாமல் போன அல்லது திருட்டுப் போன பிராணி கிடைத்துவிட்டால் ஏழையாக இருந்தால் அவர் ஒரு பிராணியை மட்டும் அறுத்தால் போதுமானது. செல்வந்தராக இருந்தால் அவர் இரண்டையும் குர்பானி கொடுக்க வேண்டும்.
                                                                                                                              நூல்: ஹிதாயா, பதாவா ஆலம்கீரி.

குர்பானி கொடுப்பவர் ஒரு ஊரிலும், குர்பானியின் பிராணி வேறொரு ஊரிலும் இருந்தால் அவர் எனது குர்பானியை நிறைவேற்றுங்கள் எனத் த கவல் தந்தாலும், குர்பானிக்குரிய பிராணி எந்த ஊரில் உள்ளதோ அங்கு பெருநாள் குத்பா தொழுகை முடிந்ததன் பின்னரே அவருக்காக குர்பானி கொடுக்க வேண்டும்.

குர்பானி கொடுப்பவர் தமது வீட்டிற்கு விருந்துண்ண வருகை தரும் 'காபிர்'களுக்கு உணவளித்தல் உறுதியான கூற்றுப்படி மக்ரூஹ் அல்ல. ஆகுமான செயலே.

அய்யாமுத் தஷ்ரீக் தக்பீர் கூறும் முறை

துல்ஹஜ் மாதம்  9ம் தேதி (அரபாத் நாள்) காலை பஜ்ருதம் தொழுகை முடிந்த நேரத்திலிருந்து 13ம் தேதி அஸர் தொழுகைவரை (23 தொழுகை நேரங்களில்) ஒவ்வொரு வேளையும் பர்ளுத் தொழுகைக்குப் பின் தக்பீர் சொல்ல வேண்டும். இது ஹனபி மத்ஹபில் வாஜிபும் ஷாஃபி மத்ஹபில் சுன்னத்துமாகும்.

குர்பானித் தோல்களையோ அல்லது அதன் கிரையத்தையோ மார்க்க கல்வியை போதிக்கும் மத்ரஸாக்களுக்கு கொடுத்தல் மிகச் சிறந்ததாகும். தோலை விற்று அதன் கிரயத்தை தாமே வைத்துக் கொள்வதோ அல்லது கூலிக்குப் பகரமாகக் கொடுப்பதோ கூடாது.

                                                                                                       நூல்: மஸாயிலே ரஸாயில்.

முற்றும்.