ஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா?
By Sufi Manzil
ஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா?
எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி ஸுபி
அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அழகிய திருநாமத்தை எழுதப்படும் பொழுது அத்துடன் 'ஸல்' என்ற வார்த்தையையும் எழுதப்பட்டு வருவதைக் காண்கிறோம்.
ஸலவாத்தின் சுருக்கம்தான் இந்த ஸல், ஸல் அம் என்பவை. இது ஆகுமானதா? என்பது பற்றி ஒரு மார்க்கத் தீர்ப்பு எமது பார்வைக்கு கிட்டியது.
அசட்டையாக சோம்பேறித்தனமாக இப்படி சுருக்கி எழுதுவது விரும்பத் தகுந்ததல்ல! என்று அந்த பத்வா கூறுகிறது.
நமது பாரத் நாட்டில் மிக அறிமுகமான பெரியாரும் ஸுன்னத் வல் ஜமாஅத்தில் தலைசிறந்தவரும், பிரபல மார்க்க அறிஞரும் முப்தியுமான ஒரு மேதையருக்கு ஆப்பிரிக்காவிலிருந்து விளக்கம் கேட்டு ஒரு வினா வருகிறது. கேள்வி கேட்;டவர், தமது கேள்வியில் அண்ணலாரைப் பற்றிக் குறிப்பிடும்போது 'ஸல் அம்' என்று எழுதியிருந்தார். எனவே அந்த மார்க்கப் பேரறிஞர் அதை மகி கண்டித்து அப்படி எழுதுவது ஆகாது என்று ஒரு பத்வாவே வழங்குகிறார்கள். அந்த பத்வாவின் சுருக்கத்தை இனி காண்போம்.
தங்களது வினாவில், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று எழுதும் இடங்களில் 'ஸல் அம்' என்று எழுதப்பட்டிருந்தது. இது மிக்க கடுமையான ஆகாத காரியமாகும். இந்தப் பழக்கம், நானூறு ஆண்டுகளாக பாமர மக்களிடையேயும், பெரும் மேதைகளிடமும் எப்போடியோ ஊடுருவி விட்டது. சிலர் 'ஸல் அம்' என்றும் வேறு சிலர் 'ஸல்லம்' என்றும், மற்றும் சிலர் 'ஸாது, என்றும் இன்னும் சிலர் 'அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்' என்பதற்கு 'அம்' என்றும் எழுதுகின்றனர்.
கொஞ்ச அளவுமை, அல்லது ஒரு அங்குலக் காகிதம், அல்லது சில வினாடிப் பொழுதை மிச்சப்படுத்துவதற்காக எவ்வளவோ அபரிதமான பாக்கியத்தை விட்டுவிடுகின்றனர்.
'முதன் முதலில் இப்படி ஸலவாத்தைச் சுருக்கி எழுதியவரின் கை துண்டிக்கப்பட்டதாக' இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹிமஹுல்லாஹ் நவின்றுள்ளார்கள்.
'மன்கதப – அலைஹிஸ்ஸலாம் – பில் – ஹம்ஸதி – வல் மீமி – யக்புறு – லிஅன்ஹு – தக்பீபுன் – வதக்பீபுல் – அன்பியாயி – குப்ருன் – அலைஹிஸ்ஸலாம் என்பதை ஹம்ஸு கொண்டும், மீம் கொண்டும் ('அம்' என்று) எவன் எழுதுவானோ அவன் காபிராகுவான். ஏனென்றால் இலேசாக மதிப்பதுவாகும். நபிமார்களை இலெசாக மதிப்பது குப்ராகும்' என்று அல்லாமா செய்யிது தஹ்தாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் துர்ருல் முக்தாரின் ஹாஷpயாவில், பதாவாதாதர் கானியாவில் இருந்து நகல்படுத்துகிறார்கள். வேணுமென்று லேசாக மதிப்பானாகில் அல்லது ஏளனமாக நினைப்பானாகில் அவன் காபிராகி விடுவான் என்பதில் ஐமில்லை. (மஆதல்லாஹ்)
சோம்பேறித்தனமாக, பொடு போக்காக, அறியாமைத்தனமாக செய்வார்களாயின் அவர்கள் காபிராக மாட்டர்கள் என்றாலும், பாக்கியமற்ற, நஸீபு கெட்ட வேலை இது என்றால் மிகையாகாது. இரு நாவுகளில் ஒரு நாவு பேனா! அது போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று எழுதப்பட வேண்டிய இடங்களில் ஸல் அம் என்று எழுதினால் ஸலவாத்தை நாவினால் மாற்றிய சட்டம் வரத்தானே செய்யும்? 'சொல்லப்பட்ட ஒன்றை வேறொன்றாக மாற்றுவது குற்றம்' என்று குர்ஆன் கூறுகின்றது:-
ப-பத்தலல்லதீன….. அநியாயக் காரர்கள் அவர்களுக்கு ஏவப்பட்டது அல்லாத சொல்லாக மாற்றிவிட்டனர். (அல்லாஹ்வின் வழிபாட்டை விட்டும்) வெளியேறிய காரணத்தால் அநியாயக் காரர்களான அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து கொடிய வேதனையை இறக்கினோம். – அல்குர்ஆன் (2:59)
'ஹித்தத்துன்- எங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதே எங்கள் வேண்டு கோள்' என்று சொல்லுங்கள் என அங்கு இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் சொன்னான். இக்கட்டளையை மாற்றி 'ஹின்ததுன்-கோதுமையே எங்கள் வேண்டு கோள்' என்று சொன்னார்கள். பொருள் அர்த்தமுள்ள வார்த்தையாக அவர்கள் மாற்றியும் கூட இறைவனால் ஏற்பட்ட கட்டளையை மாற்றியதாக தண்டனை பெற்றார்கள் என்றால், இங்கு நமக்கு 'ஈமான் கொண்டவர்களே! அவரின் (நாயகத்தின்) மீது ஸலவாத்து சலாம் சொல்லுங்கள்' என்று இறைவன் கட்டளை பிறப்பித்துள்ளான்.
இறைவனது இக்கட்டளை வாஜிபு அல்லது முஸ்தஹப்பு என்பது அவர்களது திருப்பெயரை கேட்கும் போதெல்லாம், நாவால் சொல்லும் போதெல்லாம், பேனா முனையால் தீட்டும் போதெல்லாம் பொருந்தும்.
அவர்களது திருப் பெயரை எழுதும் போது அதன் தொடராக 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று பூரணமாகத்தானே எழுதப்பட வேண்டும். அதுவின்றி 'ஸல்லம்' 'ஸல்அம்' என்று மாற்றி சுருக்கி அர்த்தமற்றதாக ஆக்குவது எங்ஙனம் பொருந்தும்?
அர்த்தமுள்ள சொல்லாக மாற்றிய இஸ்ரவேலர்களுக்கு கொடிய வேதனை இறக்கப்பட்டிருக்கும்போது அவனது ஹபீபின் ஸலவாத்தை அர்த்தமற்ற வார்த்தையாக மாற்றினால் கொடிய வேதனை கிடைக்காது என்று எவரால் உறுதி கூற முடியும்? (வல் இயாது பில்லாஹ்-காவல் அவனைக் கொண்டே இருக்கிறது) இதுவரை ஸலவாத்தை சுருக்குவது முறையில்லை என்று உணர்த்தி வந்தோம்.
அதுபோன்றே ஸஹாபாப் பெருமக்கள், இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்கள் திருப் பெயர்களோடு 'ரலியல்லாஹு அன்ஹு' என்று எழுதப்படுவதை சுருக்கி 'ரலி' என்று எழுதுவதை நம் சங்கைக்குரிய உலமா பெருமக்கள் 'மக்ரூஹ்' என்றும, பாக்கியமற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
'யுக் ரஹுர்ரம்ஸு-பித்தரழ்ழி……. ரலியல்லாஹு அன்ஹு ன்பதை 'ரழி' என்று எழுத்தால் சாடை காட்டுவது மக்ரூஹ் வெறுக்கப்பட்டதாகும் என்று அல்லாமா செய்யிது தஹ்தாவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். இதை எவன் பொடு போக்கு செய்கின்றானோ அவன் அனேகமான நன்மையை விட்டும் பேறுகெட் போகிறான். ஏராளமான சிறப்பை இழந்து விடுகிறான்' என்று இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷரஹு முஸ்லிமில் எழுதுகிறார்கள்.
அது போன்றே 'குத்திஸ ஸிர்ருஹு' என்பதற்கு சாடையாக 'க' என்றும், 'ரஹ்மத்துல்லாஹி அலைஹி' என்பதற்கு 'ரஹ்' என்றும் எழுதப்படுவதும் பரக்கத் அற்ற துர்பாக்கியத்தனமாகும், இப்படிப்பட்ட காரியங்களை விட்டும் தற்காத்து கொள்வது சாலச் சிறந்தது, அதை எடுத்து நடக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக. (ஆதார நூல்: பத்வா ஆப்பிரிக்கா பக்கம் 45)
எனவே எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் முழுமையாக எழுதுவது-பிரசுரிப்பது மூலமாக வாசகர்களின் நாவுகளில் 'ஸலவாத்'மணத்தைக் கமழச் செய்கின்ற பாக்கியத்தினை பெறலாமல்லவா? அற்குரிய நற்கூலியையும் பெற்றிடலாமன்றோ?
நூல்: யாரஸூலல்லாஹ் என அழைக்கலாமா?