இஸ்லாத்தில் இசை-Music in Islam
By Sufi Manzil
இஸ்லாமும் இசையும்
கேள்வி: இஸ்லாத்தில் இசை அனுமதிக்கப்பட்டுள்ளதா?
(அப்பாஸ்-சைதாப் பேட்டை, சென்னை)
பதில்:- 'அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தனக்கு நெருங்கிய ஒருப் பெண்ணை அன்சாரித் தோழர்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (அப்பொது) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவிடம், 'திருமணம் நடத்துகிறாய். கேளிக்கை ஏதும் இல்லையா? அன்சாரிகளுக்கு கேளிக்கைப் பார்ப்பது மிகவும் விருப்பமானதாச்சே!' என வினவினார்கள்.
அறிவிப்பாளர்: உர்வா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி.
மதம், மார்க்கம் என இருந்தாலே அங்கு திருநாட்களும், பெருநாட்களும் இருக்கும்.
ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் சிலர் வாழ்கின்றனர். அவர்கள் இன்புறும் விதமாக திருநாளோ, பெருநாளோ அதில் இல்லை என்றால் அக் கோட்பாட்டிற்கு மதம் எனப் பெயர் சூட்டப்பட மாட்டாது.
ஒவ்வொரு மதத்தாரும் தத்தமது திருநாட்களைப் புதுப் பொலிவுன் கொண்டாடி மகிழவே ஆசைக் கொள்வர்.
இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டு பெருநாட்கள் இன்பம் தருகின்றன. இவ்விருப் பெருநாட்களும் அறிவுப்பூர்வமான காரணத்தைக் கொண்டே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
வீடுகட்டி முடித்தபின் பால் காய்ச்சுகிறோம். திருமணம் முடிந்தபின் விருந்து தருகிறோம். போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்க்கு பரிசுகள் தருகிறோம். ஆம்! ஒரு நோக்கம் நிறைவேறும் போது மனம் சந்தோசப்படுகிறது. அதை வெளிப்படுத்த விழாக்கள், விருந்துகள் நடத்துகிறோம்.
அதுபோல, ஒரு மாதகாலம் அல்லாஹ்விற்காக, அவனுக்கு மிகவும் விருப்பமான நோன்பிருந்து முடித்த சந்தோசத்தை வெளிப்படுத்த 'ஈதுல் பித்ரு' பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
'ஹஜ்' எனும் இறைக்கட்டளைய நிறைவேற்றிப் பூரிப்பை வெளிப்படுத்த அந்த ஏகனாலேயே வழங்கப்பட்டது தான் 'ஈதுல் அல்ஹா' எனும் தியாகத் திருநாளாகும்.
இப்பெருநாட்களில் முழுமையான சந்தோசத்தை அடைய வேண்டுமானால் சாதாரண நாளைய சட்டத்தின்பிடி சற்று தளர வேண்டும்.
இஸ்லாத்தில் சாதாரண நாட்களில் வேடிக்கை விளையாட்டுகளுக்கு இடமில்லை. ஆனால் வேக்கை விளையாட்டுகளால் மனதுக்கு இன்பத்தை தரமுடியும் என்பதை மறுப்பதிற்கில்லை. எனவே எல்லைதாண்டா வேடிக்கையும், விளையாட்டையும், எல்லா நாட்களிலும் அனுமதிக்காவிட்டாலும் பெருநாள் நாட்களிலாவது அனுமதிக்க வேண்டும்.
'எந்தப் பொதுச் சட்டமானாலும் அதில் விதிவிலக்கு உண்டு.'
அந்த இசையினால் கேளி;க்கையினால் சந்தோசம் உருவாகுமானால் அதனைப் பெருநாள் தினத்திலும், திருமண தினத்திலும் செய்வது குற்றமல்ல.
திருமண தினத்தில் கொட்டு போன்றவைகளை முழங்குவதையும், பாட்டு பாடுவதையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆகுமாக்கி இருப்பதைப் போலவே பெருநாளன்று சைப்பதையும், பாடுவதையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆகுமாக்கியுள்ளார்கள்.
அன்சாரிகள் திருமணம் செய்யும் போது சின்னச்சின்ன கருவிகளைக் கொண்டு இசையமைத்துப் பாடுகின்ற பெண்களை வைத்து பாடக் கேட்டு மகிழ்வார்கள். இந்தப் பழக்கத்திற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். (இந்தப் பழக்கம் அரபகம் எங்கும் இன்றும் தொடர்கிறது)
'அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தனக்கு நெருங்கயி ஒருப் பெண்ணை அன்சாரித் தோழர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது (இசைக்கும் பெண்ணை அழைத்திருக்கவில்லை) நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆயிஷாவே! (இசையோடு கலந்த) கேளிக்கைக்கு ஏற்பாடு செய்யவில்லையா, அன்சாரிகள் அதனை மிகவும் விரும்புவார்களே!' எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உர்வா ரலியல்லாஹு அன்ஹு
நூல் பத்ஹுல் பாரி, பாகம் 11, பக்கம் 133.
ஒருமுறை அண்ணலாரிடம் ஒருவர் வந்து (திருமணத்தில்) இசைப்பதையும், கேளிக்கை நடத்துவதையும் அனுமதித்துள்ளீர்களா? என வினவினார். அதற்கு, 'ஆம்! அது திருமணம்தானே! விபச்சாரமல்லவே!' என நபகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: தப்ரானி, பத்ஹுல் பாரி, பாகம் 11, பக்கம் 133
இவற்றின் மூலம் திருமணத்தின்போது இசையும் கேளிக்கையும் ஆகுமானதாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
பெருநாள் தினத்தில் இசை
பெருநாள் தினத்தன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு பெண்கள் இசையோடு பாடிக் கொண்டிருந்தனர். வந்தப் பெருமானார் படுத்துக் கொண்டார்கள்.(பாடல் நடந்து கொண்டிருந்தது) அப்போது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள், இறைத்தூதரின் வீட்டில் ஷைத்தானின் இசையா?' என் கோபமுடன் கடிந்தார்கள். உடனே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, 'அபூபக்கரே! (அந்தப் பெண்களை இசைக்க) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் பெருநாட்கள் உண்டு. இன்று நமக்குப் பெருநாள்' எனக் கூறினார்கள்.
நூல்: பத்ஹுல் பாரி, பாகம் 2, பக்கம்9, பாகம் 3, பக்கம் 94.
இந்த ஹதீதின் மூலம் பெருநாளன்று இசைக் கேட்கலாம் என்பது தெளிவாகிறது.
பொதுவாக தவறு செய்யத் தூண்டாத இசையும், பொருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் குறிப்பிட்டுத் தடுக்கப்படாத கருவிகளினால் எழுப்பப்படும் இசையும் தவறானதல்ல.
ஒரு இசைக் கேட்பதால் ஏதேனும் பாவம் செய்யக் கூடுமெனில் அந்த இசையைக் கேட்பது ஹறாமாகும். இதைத்தான் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அப்துல் கனி நாபிலிஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் போன்ற மாமேதைகள் கூறுகின்றனர்.
நன்றி:- வஸீலா, ஏப்ரல் 1990