Zikhir Adab- திக்ரு செய்யும்போது பேண வேண்டியவைகள்.
By Sufi Manzil
Zikir Adab
By: Moulana Assheikh Assah Sheikh Abdul Qadir Sufi Hazrath Kahiri Kadasallahu Sirrahul Azeez.
திக்ரு செய்வதற்குரிய அதபுகள் (ஒழுக்கங்கள்).
அறிந்து கொள்! திக்ருடைய மஜ்லிஸாகிறது, அல்லாஹு தஆலாவுடைய மஜ்லிஸும் மலாயிக்கத்துகள், நபிமார்கள், அவ்லியாக்களுடைய மஜ்லிஸுமாகயிருக்கும்.
ஆகையினால் அவர்களுக்கு முன்னால் எப்படி இருக்க வேண்டுமென்பதை மனதில் கவனித்து அச்சத்தோடு ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் ஒழுக்கங்கெட்டவனை சமூகத்தைவிட்டும் மிருகங்கட்டுமிடத்திற்கு துரத்தப்படும்.
ஹதீது ஷரீபில் வந்திருக்கிறது:- மூன்று விஷயம் அல்லாஹுத்தஆலாவினுடைய சமூகத்தில் ஒரு கொசுவின் இறகுக்கும் சரியாகாது.
ஒன்றாவது:- உள்ளச்சம் இல்லாத தொழுகை.
இரண்டாவது:- மறதியோடு செய்கிற திக்ரு. ஏனென்றால் அல்லாஹுத்தஆலா மறந்த இருதயத்தில் நின்றும் துஆவையும், திக்றையும் ஒப்புக் கொள்ளமாட்டான்.
மூன்றாவது:- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரியாதையில்லாது அவர்கள் பேரில் ஸலவாத்து சொல்வதுமாக இருக்கும்.
ஆகையினால் கல்பு ஹுழுறுடனும் உள்ளச்சத்துடனும் ஒழுக்கமாகவும் திக்ரு செய்ய வேண்டும். திக்ரு செய்ய முன்னால் தவ்பா செய்ய வேண்டும்.
தவ்பாவுக்கு மூன்று ஷர்த்துகள் உண்டு.
ஒன்றாவது:- சென்ற பாவத்தின்பேரில் கவலைப்படுகிறது.
இரண்டாவது:- தற்போது பாவம் செய்யாதிருப்பது.
மூன்றாவது:- இனி ஒரு போதும் இது போன்று பாவத்தை செய்ய மாட்டேன் என்று நல்லெண்ணம் வைக்கிறது.
ஒருவர் சொல்கிறார்:-
தவ்பாவாகிறது, சென்ற பாவத்தின் பேரில் கவலைபடுவது ஒன்றேதான். ஆகிலும் கவலை உண்மையானதாக இருக்குமேயானால் மற்ற இரண்டு ஷர்த்துகளும் தன்னாலே உண்டாகிவிடும்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவுளமாயிருக்கிறார்கள்,
أندم ثوبة "அன்னதமு தவ்பதுன்- செய்த பாவத்தைப் பற்றி கவலைப்படுவதாகிறது- தவ்பாவாகயிருக்கும்."
ஆகையினால் திக்ரு செய்கிறவர்கள் செய்த பாவத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
ராத்திபு செய்கிற இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அத்தர், சந்தனம், பூக்களை முன்னாடியே மஜ்லிஸிலுள்ளவர்களுக்கு பூசியும், சாம்புராணி ஊதுபத்தி போன்ற வாசனை புகைகளை கொண்டு இடத்தை வாசமாக்கி கொண்டு பின் சாம்புராணி சட்டி மற்றதுகளை 'ஹல்கா'வை விட்டும் அப்புறப்படுத்திவிட வேண்டும்.
ராத்திபு செய்கிறவர்கள் ஹலாலான துப்புரவான உடை கொண்டும் உளு செய்வது கொண்டும் உடலை அழகாக்கியும் ஹலாலான உணவை அதிலும் குறைந்த அளவை அருந்துவது கொண்டு வயிற்றை துப்புரவாக்கியும் (கல்பு ஹுழுராகிறதை போக்கக் கூடிய பசியில்லாது போனால் ஆகாரம் புசிக்காதிருப்பதுவே நல்லது.)
அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்வது கொண்டு அவனுடைய மஹப்பத்தையும், பொருத்தத்தையுமே அல்லாது எப்பொருளையும் அவனிடம் ஆதரவு வைப்பதையும் அவை மனதில் ஊசாடுவதையும் விட்டு மனதை தூய்மையாக்கியும் அதபாக உட்கார்ந்து தொடையில் கையை வைத்து கண்ணைப் பொத்திக் கொண்டு, தனக்கு முன்னால் ஷெய்கு அவர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்கள் கிட்டவே இருக்கிறோம் என்று நினைத்து அவர்கள் சூரத்தை மஹப்பத்தோடு ஞாபகப்படுத்திக் கொண்டு, நமக்கு எல்லா உதவியும் நமது ஷெய்கு அவர்களைக் கொண்டுதான் கிடைக்கிறது. அவர்களுக்கு அவர்கள் ஷெய்கைக் கொண்டும் கடைசியாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை கொண்டும்தான் எல்லா உதவியும் கிடைப்பதாக முழு மனதோடு நம்பிக்கை வெத்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஷெய்குபேரில் மஹப்பத்தை அதிகப்படுத்துவதும், அவர் முன்னாலேயே இருக்கிறோமென்று அவர் சூரத்தை ஞாபகப்படுத்தி அதபாக இருப்பதுவும் மிக முக்கியமானதாகும்.
நகீப்(திக்ரை நடத்துபவர்) அவர்கள் 'நக்ரவுல் பாத்திஹா' என்று ஒதம் போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மற்றும் எல்லா ஷெய்குமார்களும் மஜ்லிஸிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய பேர்களையும் சொல்லி அவர்களுக்கெல்லாம் காத்திஹா ஓதுகிறோம் என்று சொல்கிறார் என்றும் மனதில் நினைக்க வேண்டும். .
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஷெய்குமர்களும் நமக்கு முன்னாலேயே இருப்பதினால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் வொல்லும் போது '(ஸலவாத்து) அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்' என்பதையும், ஷெய்குமார்கள் பெயர் சொல்லும் போது'(தறழ்ழி)' ரலியல்லாஹு அன்ஹு என்பதையும் சப்தமிட்டு சொல்லாமல் வாய்க்குள்ளேயே சொல்லிக் கொள்ள வேண்டும்.
நகீப் அவர்கள் 'இலாஹீ பிஹுர்மாத்தி ஸிர்ரில் மஹப்பத்தி' என்று ஓதும்போது ஷெய்குமார்கள் ஒவ்வொருவர்கள் பெயரையும் குறிப்பிட்டு அல்லாஹுத்தஆலா இடத்தில் வஸீலா தேடி பாவங்களை பொருத்து கல்புக்கரளை நீங்கி ஷெய்குமார்களின் கல்புகளில் உதிக்கும் கடாட்சத்தைக் கொண்டு நம் கல்பை பரிணமிக்கச் செய்து நம்மை அவனின் சொந்த அடியார்களான நாதாக்களின் கூட்டத்தில் சேர்க்கும்படி கெஞ்சுவதாக நினைத்து, பாவம் செய்த அடிமை எஜமான் முன்னிலையில் பாவமன்னிப்புக்காக மன்றாடுவது போல் மன உருக்கத்தோடும் கவலையோடும் இருக்க வேண்டும்.
நகீப் அவர்கள் 'அல்மதத்,அல்மதத் என்று ஓதும்போது ஷெய்குமார்களிடத்தில் எங்களுக்கு உதவியாக இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும். எங்களை கைவிட்டு விடாதீர்கள் என்று கெஞ்சுவதாகவும் நினைக்க வேண்டும்.
பின்பு கொஞ்சநேரம் மனதையே நோட்டமிட்டுக் கொண்டிருந்து நகீப் அவர்கள் திக்ரை ஆரம்பிக்கிற போது அவர் சொல்வது போல், அவர் நீட்டி சொன்னால் நீட்டியும், துரிதமாக சொன்னால் துரிதமாகவும், எல்லாவர்களும் ஒற்றுமையாகவும் சப்தமிட்டு (முழு ஹிம்மத்தோடு) இனியும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லமுடியாதென்ற விதமாக முழு சக்தியோடும் எல்லாவர்களும் ஒரே தொனிவோடும் திக்ரின் கருத்தை மனதில் கவனித்துக் கொண்டும் சொல்ல வேண்டும்.
திக்ரு செய்யும்போது கல்பே திக்ரு செய்வது போலும் தான் அதைக் கேட்டு நாவால் மொழிவது போலும் கருதி கல்பின் பக்கம் காது தாழ்த்தி கேட்டுக் கொண்டும் திக்ரின் பொருளைக் கவனித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.
மேலும், அல்லாஹுத்தஆலாவின் பேரில் மஹப்பத்தும், ஆசையும் உண்டாகி அதிலேயே மூழ்கி தன் உணர்வுஅற்று மயக்கம் உண்டாகும் வரையிலும் திக்ரை நிறுத்தக் கூடாது.
பின்பு திக்ரை முடித்துவிட்டால் வாய்பொத்தி ஒடுங்கி திக்ரை கல்பில் நடத்தாட்டிக் கொண்டு திக்ரின் ஞாபகத்திலேயே(முறாக்கபா) வாரிதாத்து தஜல்லியாத்துகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். ஏனென்றால் முப்பது வருஷத் தெண்டிப்பினாலும் உண்டாகாத (மஹப்பத்து)-ஆசை, (ஸுஹ்து)-உலக வெறுப்பு, (வரஃ)பேணுதல், (தஹ்ம்முல்)சகிப்பு, (ரிழா) அல்லாஹ்வின் கற்பனையில் திருப்தி இது போன்ற வாரிதுகளில் ஒன்று, அல்லது மறைவான உலகத்தின் ஒளி தோற்றமென்ற தஜல்லியாத்துகளில் ஒன்று ஒரு கணத்தில் இவனை வந்து கவர்ந்துக் கொள்ளவும் கூடும்.
ஆகையினால் வாய்பொத்தி ஒடுங்கி மூச்சை பல முறையும் அடக்கி விட்டுக் கொண்டே திக்ரின் கருத்திலேயே இருப்பானேயானால் (வாரிது) அல்லாஹ்வின் அருள் இவனை எல்லா ஆலம்களிலும் கொண்டு சுற்றும். ஆகையினால் கொஞ்சம் தாமதிப்பது அவசியமாகும்.
திக்ரு செய்யும்போதும், திக்ரு முடித்த பின்பும் தண்ணீர் குடிக்காதிருப்பது திக்ரின் அதபுகளில் முக்கியமானதாயிருக்கும்.
ஏனென்றால் திக்ரானது, கல்பில் உஷ்ணத்தை உண்டாக்கும்.
அதனால் கல்பில் பிரகாசமும், தஜல்லியாத்தும், வாரிதாத்தும் வரும். தண்ணீர் கடிப்பதினால் கல்பின் உஷ்ணம் தூர்ந்து போகும். ஆகையினால் குறைந்தது அரைமணி நேரமாகிலும் சென்றபின் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு நேரம் அதிகம் சென்றாலும் நல்லதுதான். தண்ணீர் தேவைப்பட்டவர்கள் திக்ரு ஆரம்பிக்க முன்னாடி குடித்துக் கொள்ளலாம்.
'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று திக்ரு செய்யும்போது எல்லாவர்களும் ஒன்றுபோல் 'லா' என்று ஆரம்பித்து ஒன்றுபோல் 'இலாஹ' என்று சொல்லி ஒன்றுபோல் இல்லல்லாஹ் என்றும் அதலுள்ள 'ஹ்' க்கு ஸுகூன் கொண்டும் சொல்லி மூச்சை விடவேண்டும்.
'லாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று இரண்டு விடுத்தம் சொல்லும்போது முந்திய 'இல்லல்லாஹு'வில் 'ஹு'க்கு பேஷ் கொண்டும் இரண்டாவது'இல்லல்லாஹு'வில் 'ஹ்' க்கு ஸுகூன் கொண்டும் சொல்லவேண்டும்.
முதலாவது (லாயிலாஹ)விலோ அல்லது இரண்டாவது (லாயிலாஹ)விலே நிறுத்தியும் (இல்லல்லாஹ்)வை ரெம்ப அழுத்தமாக்கி இரண்டு கலிமாவையும் பிரித்தும், அல்லது ஒருவர் 'லாயிலாஹ' என்றும் மற்றொருவர் 'இல்லல்லாஹ' என்றும் சொல்லக் கூடாது.
மேலும் 'லாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று துரிதமாக சொல்லிக் கொண்டே போகி கடைசி 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று ஒரே விடுத்தமாக சொல்வதுபோல் ஆகவேண்டும்.
'இல்லல்லாஹ்' என்றும், 'அல்லாஹ்' என்றும் திக்ரு செய்யும் போது (ஹ்)க்கு ஸுக்குன் கொண்டும் (ஹ்) விளங்கும்படியாகவும் சொல்ல வேண்டும்.
இ-ல்-ல-ல்-லா-ஹு என்றும், அ-ல்-லா-ஹு என்றும் எழுத்துக்களை பிரித்து சொல்லாமல் இல்லல்லாஹ்,அல்லாஹ் என்று சேர்ந்தாற் போல் சொல்லவேண்டும்.
லாயிலாஹ இல்லல்லாஹு என்று திக்ரு செய்யும்போது (லா) என்று கல்பிலிருந்து ஆரம்பித்து கீழே இடலு மட்டுக்கால் வரையிலும் வந்து வலது முட்டுக்காலுக்கு திரும்பி அதிலிருந்து மேலே தலை உச்சிவரை வந்து (இலாஹ) என்று சொல்லி அதிலிருந்து (இல்லல்லாஹ்) என்று முழு சக்தியோடு கல்பில் தாக்க வேண்டும்.
(லா) என்பதை ஒரு கூறான முனையான கத்தி என்றும் அதை கல்பில் குத்தி அதிலிருந்து கீழே இடது முட்டுக்கால் வரையும், பின் வலது முட்டுக்காலிலிருந்து மேலே தலை உச்சி வரையும் கிழித்தெறிவதாக நினைக்க வேண்டும்.
அறிந்துகொள்! கிழிப்பதாகிறது நம்முடைய திரேகத்தை அல்ல. எங்கிலும் நம்முடைய (அன்னியத்) அதாவது நாம் ஒரு தனிபொருள் என்று உணரும் எண்ணத்தையேயாகும்.
மேலும் மனிதன் முழு உலகத்திலிருந்தும் அதி நுட்பமான ஒவ்வொரு பாகத்தைக் கொண்டு சேர்க்கப்பட்டவனாக இருப்பதினால் நம்முடைய(அன்னியத்)திலிருந்து ஒவ்வொரு பாகம் அறுபடும்போதும் முழு உலகத்திலிருந்தும் ஒவ்வொரு பாகமும் அறுபட்டுக்கொண்டே போகுதென்றும், நம்முடைய(அன்னியத்)அறுபட்டு கீழே வீழ்ந்து மடியும்போது முழு உலகமும் அவைகள் தான்தானாகவே நிற்கக் கூடியதும், ஹக்குத் தஆலாவிற்கு வேறான தனிப்பொருள் என்று உணரும் (ஙைரியத்) பூராவும் அறுபட்டு வீழ்ந்து மடிவதாகவும் உறுதியாக நினைக்க வேண்டும்.
(இல்லல்லாஹ்) என்று கல்பில் தாக்கும்போது ஹக்குதஆலாவின் உஜூது ஒன்றுதான் ஜோதியாக நிலைத்திருக்கிறது என்றும் உறுதிக் கொள்ள வேண்டும். எழும்பி நின்று (தாயிம் அல்லாஹ்) என்று திக்ரு செய்யும்போது தாயீம் என்று யேயை நீட்டாமல் (தாயிம்) என்றும் தலையை குனிந்தும் அல்லாஹ் என்று தலையை உயர்த்தியும் அல்லாஹ்விலுள்ள (ஹ்)வுக்கு ஸுகூன் வைத்தும் சொல்லி மூச்சை விடவேண்டும்.
(தாயிம் அல்லாஹ் ஹைய்) என்று திக்ரு செய்யும்போது (ஹைய்) எனும்போது திரும்பவும்தலை குனிந்தும் சொல்லி அதில் மூச்சை விடவேண்டும்.
தாயிம் அல்லாஹ் என்றும் தாயிம் அல்லாஹ் ஹைய் என்றும் சொல்லும்போது சதோகயமாக எப்பொழுதுமிருக்கிறவன் அல்லாஹ் ஒருவனே. அவனே உயிருள்ளவன், மற்றவை அனைத்தும் செத்து மடிந்து அழிந்து விட்டது.
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ – كُلُّ شَيْئٍ هَالِكٌ اِلَّا وَجْهَهُ
உலகிலுள்ளவை அனைத்தும் அன்றும் இன்றும் என்றும் இறந்தவைகள் எல்லாப்பொருளும் முக்காலமும் இல்லாமலானது,அழிந்தது. எங்கிலும் அல்லாஹுத்தஆலா ஒருவனின் பரிசுத்த தாத்து ஒன்றுதான் நிலையானது என்றும் உறுதிகொள்ள வேண்டும்.
இதுபோலவே மற்றயெல்லா திக்ருகளிலும் அவர் சொல்வது போலவே சொல்ல வேண்டும். ஜத்பானவர்கள் தன் நினைப்பில்லாது சொல்வதை அனுசரித்து அவர்களைப்போல் மற்றவர்களும் சொல்லக் கூடாது.
இப்போது சொல்லப்பட்ட அதபுகள் எல்லாம் சுயத்தோடு இருக்கிறவர்களுக்குத்தான். ஆனால் சுயமிழந்த ஜத்புடையவர்களோ அவர்களுக்கு உண்டாகும் (லம் ஆத்) வெளிச்சம், (தஜல்லி) பிரகாசம்(தவ்க்) அனுபோகத்துக்கு தக்கவாறு அவர்கள் நாவிலிருந்து (அல்லாஹ்-அல்லாஹ்)- ஹூ – ஹூ அல்லது (ஆ ஆ) அல்லது (ஆஹ் ஆஹ்) அல்லது (பீ பீ) அல்லது அச்சரமில்லாத சப்தம் அல்லது அழுகை அல்லது கைகாலை அடிப்பது, உருளுவது இது போன்றதுகள் உண்டாகும்.
அப்போது அவர்களுக்கு அதபாகிறது: அது என்னது? என்று சிந்திக்காமலும், வேண்டுமென்றும் செய்யாமலும் வாரிதாத்து செய்வது போல் செய்யவிட்டு கொடுத்துவிட வேண்டும்.
வாரிதாத்து செய்யும் வேலையை செய்து முடிந்து தனக்கு ஞாபகம் வந்தபின் மேலும் வாரிதாத்து வருவதை எதிர்பர்த்துக் கொண்டும் ஒடுங்கியிருக்க வேண்டும்.
வாரிதாத்தினால் பரவசமுண்டாகும் போது அது நம்மை என்னென்ன செய்யுமோ, நம் வாயிலிருந்தும,; உறுப்புகளிலிருந்தும் என்னென்ன சொற்செயல்கள் உண்டாகுமோவென்றும் அஞ்சி ஆரம்பத்தில் கொஞ்சம் ஞாபகமிருக்கும்போது அதை நிறுத்தக் கூடாது.
வாரிதாத்தின் போக்குபோல் விட்டுவிட வேண்டும். ஏனென்றால் ஒரு வீடுத்தம் கொஞ்சம்(ஜத்பு) ஹக்கின் ரஹ்மத் அடியானின் கல்பை பிடித்து அவன் பக்கம் இழுப்பதானது கல்பை விட்டும் எவ்வளவோ கறல்களை நீக்கி விடுகிறது.
நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருவுளமாயிருக்கிறார்கள்:-
ரஹ்மானுடைய கிருபையின் இழுப்புகளில் ஒரு லேசான இழுப்பாகிறது (மனு ஜின்னு ஆகிய) இரு கூட்டத்தார்களின் இபாதத்தைப் பார்க்கிலும் விஷேசமாக இருக்கும்.
ஆனால் ஜத்பானவர்கள் தங்களுக்கு ஜத்பு நீங்கி நல்ல சுயம் வந்தபின் அவர்கள் சுயமாகவும் ஞாபகத்தோடும் ஏற்கன சுயமில்லாத போது ஏற்பட்ட சொற்செயலை சொல்லாதும் செய்யாதும் மற்றவர்கள் சொல்வது போல் திக்ரு செய்தும் திக்ரின் கருத்திலேயே கவனத்தை செலுத்திக் கொண்டும், திரும்பவும் ஜத்பு வருவதை எதிர்ப்பார்த்து கொண்டுமிருக்க வேண்டும்.
மேலும் குறிப்பிட்டபடி திக்ருகள் முழுவதையும் செய்ய வசதியில்லாத போது லாயிலாஹ இல்லல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ், இல்லல்லாஹ், அல்லாஹ் என்ற நான்கு திக்ருகளையும், அதற்கும் வசதியில்லாதபோது அல்லாஹ் எனும் திக்ரு ஒன்றையாவது செய்துக் கொள்ளலாம்.