குர்ஆன் ஷரீஃபிற்கு கொடுக்க வேண்டிய கண்ணியமும், மரியாதையும் – சட்ட விளக்கம்.

குர்ஆன் ஷரீஃபிற்கு கொடுக்க வேண்டிய கண்ணியமும், மரியாதையும் – சட்ட விளக்கம்.

By Sufi Manzil 0 Comment August 1, 2011

Print Friendly, PDF & Email

உளுவோ அல்லது முறைப்படி செய்யப்பட்ட தயம்முமோ இல்லாமல்  தொழுவதும், தவாஃப் செய்வதும், குர்ஆனைத் தொடுவதும் அதனைச் சுமப்பதும் ஹராமாகும்.

குர்ஆன் நஜீஸான இடத்தில் கிடப்பதைக் கண்டாலும் அல்லது காஃபிர் உடைய கையில் இருக்கக் கண்டாலும் அல்லது அது சேதமடைந்து விடும் என்று பயந்த நேரத்திலும் உளு இல்லாமலிருப்பினும் அந்த நிலையிலிருந்து அதனை மீட்டிடுவது வாஜிபாகும்.

குர்ஆனின் தாள்களை மூக்குச் சளி, எச்சில் போன்ற அருவருப்பான பொருளில் போடுவதும், எச்சிலைக் கையால் தொட்டு குர்ஆனுடைய தாள்களை புரட்டுவதும் ஹராமாகும். ஆனால் எச்சில் எழுத்தில் படாமல் திருப்புவது ஹராமல்ல.

அதேபோல் குர்ஆனை அணியும் துணியிலோ, சுவரிலோ எழுதுவதும், நெருப்பிலிட்டுக் கரிப்பதும் மக்ரூஹ். ஆனால் அது நஜீஸில் விழுந்து விடுமென்றோ, அல்லது கேவலப்படுத்தப்படுமென்றோ பயந்தால் நெருப்பில் கரிப்பது மக்ரூஹ் அல்ல. எனினும் தண்ணீரில் கரைத்து விடுவது நல்லது.
குர்ஆன் எழுதிய தாளை அப்படியே விழுங்குவது ஹராம். அதனைக் கரைத்துக் குடிப்பது ஆகும். குர்ஆன் எழுத்துக்கள் எழுதப்பட்ட சுவரை இடிப்பதும் கூடும். குர்ஆனுக்கு நேரே காலை நீட்டுவது ஹராமாகும் உயரத்தில் இருந்தால் தவிர.

குர்ஆனை நஜீஸான மை, பேனா ஆகியவற்றினால் எழுதுவதும், வேறு மொழியில் எழுதுவதும், தலைக்கு வைத்துப் படுப்பதும் ஹராமாகும். குர்ஆன் மீது வேறு கிதாபுகளை வைப்பது கூடாது. ஆனால் பைண்டிங் செய்வதற்காக மட்டும் வைக்கலாம்.

உளுவுடன் கிப்லாவை முன்னோக்கி தலை தாழ்த்தி ஓதுவதும், சாய்ந்து உட்காரமலிருப்பதும், பெருமையுடன் அமராமலிருப்பதும், சம்மணமிட்டு உட்காரமலிருப்பதும், தொழுகையில் இருப்பதுபோல் காலை மடித்து அமர்ந்து ஓதுவதும் அதனுடைய ஒழுக்கங்களில் உள்ளவையாகும்.

குர்ஆனை கேவலப்படுத்தும் முறையில் கிழித்தாலும், அதனை; கேவலமாகக் கருதினாலும் முர்த்ததாக ஆகிவிடுவான்.

குர்ஆனுடைய ஆயத்துக்களைத் தொடராக எழுதி அதைச் சுற்றி நாலு பக்கங்களிலும், குர்ஆனின் வரிகளுக்கு இடையிலும் எவ்வளவு விரிவுரை எழுதினாலும் அது குர்ஆன் என்று தான் சொல்லப்படும். அது தஃப்ஸீர் ஆகாது.

குர்ஆனுடைய ஆயத்துக்களை ஒரு பக்கத்தில் ஒரு அளவு எழுதி அதற்குக் கீழ் அந்த பக்கத்தில் தஃப்ஸீரை எழுதி அந்த பக்கத்தில் குர்ஆனை விட தஃப்ஸீர் அதிகமாக இருந்தால் அதனை ஒளு இல்லாமல் தொடலாம். அதிகம் என்பது மொழிவதில் கணக்கிடப்படும்.

குர்ஆனை விட தப்ஸீர் அதிகமாக இருக்கின்றதா? சமமாக இருக்கின்றதா?  என்பதில் சந்தேகம் ஏற்பட்டாலும் வெளிப்படையில் அதைத் தொடுவது ஹலாலாகும். ஆனால் குர்ஆனும் தஃப்ஸீரும் சமமாக இருப்பதாக சந்தேகமறத் தெரிந்தால் அதைத் தொடுவதோ சுமப்பதோ ஹராமாகும்.
உளுவில்லாத ஒருவர் குர்ஆனுடைய தாளை ஒரு குச்சியினால் புரட்டுவதானால், அந்த தாளின் கனம் அவருடைய கையின் மீதல்லாமல் அந்த குச்சியின் மீது இருக்குமளவுக்குக் குச்சி கனமாக இருந்தால் கூடும். துணிபோல் உள்ளதை கையில் சுற்றிக் கொண்டு பலகையில் குர்ஆன் ஆயத்துக்களை எழுதுவதும் தொடுவதும் இவ்வாறுதான்.

ஒருவர் தன்னுடைய தேவைக்காக பருவமடையாத சிறுபிள்ளையை குர்ஆனைத் தொடும்படி அல்லது எடுக்கும் படி சொல்வது ஹராமாகும். அவ்வாறின்றி, அப்பிள்ளை தான் படிக்கும் தேவைக்காகத் தொடுவதும் எடுப்பதும் கூடும். அதனைத் தடுக்கக் கூடாது.

சுவரில், உத்திரத்தில் குர்ஆனுடைய ஆயத்துகள் எழுதப்பட்டிருந்தால், எழுத்தில்லாத இடத்தை உளு இல்லாமல் தொடலாம். அந்த எழுத்துக்களை அழித்து விட்டால் அவற்றில் வடிவங்கள் முற்றிலும் போய், வாசிக்க முடியாத நிலை ஏற்படும் வரை அதனைத் தொடுவது ஹராமாகும்.

அதேபோல் உளுஇல்லாமல் குர்ஆனுடைய பைண்டிங் உறையும், அது வைக்கப்பட்டிருக்கும் ரைஹாலையும் தொடக் கூடாது. உளுவின்றி குர்ஆனை சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் இமாம் அபூ ஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மத்ஹபைத் தொடர்ந்து ஒரு துணியைக் கையில் வைத்து அதற்கு மேல் குர்ஆன் இருக்கும் விதமாக தூக்கலாம். குர்ஆன் கையில் படக்கூடாது.

கிதாபு ஒன்றில் ஒரு பக்கம் ஸூராக்களும், மறுபக்கத்தில் அதன் உரை, வேறு அவ்ராதுகள் எழுதியிருந்தால் ஒவ்வொன்றுக்கும் அதனதனுடைய சட்டம் உண்டு என்பதாகவும், அக்கிதாபை ஒளுவில்லாமல் தொடலாம் என்பதாகவும் இமாம் சும்ஹூதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

குர் ஆனை, அல்லது அது எழுதப்பட்டிருக்கும் பலகையைப் பார்த்தாலும், அல்லது ஓர் ஆலிமைப் பார்த்தாலும், வயதில் மூத்தவரைக் கண்டாலும் எழுந்து நிற்பது சுன்னத்தாகும்.
குர்ஆனை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை குர்ஆனுடைய நிய்யத்தில்லாமல் சுமப்பது கூடும்.

குல்ஹுவல்லாஹு போன்ற ஸூரத்து அல்லது ஆயத்துகள் எழுதப்பட்டிருக்கும் நாணயத்தை தொடுவதும், ஆயத்துகள் எழுதப்பட்டிருக்கும் துணிகளை அணிவதும் கூடும். அவன் ஜீனூபாளியாக இருந்தாலும் சரி.

குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவன் காற்றுப் பிரியும் நேரம் வந்தால் ஓதுதலை நிறுத்தி விட வேண்டும். அப்பொழுது ஓதுவது மக்ரூஹ்.

குர்ஆனை மிகச் சிறியதாக எழுதுவது மக்ரூஹ்.

குர்ஆனில் ஏதேனும் தவற்றை கண்டால் அதனை உடனே திருத்துவது வாஜிபு. அது பிறருடைய குர்ஆனாக இருப்பினும் சரியே. குர்ஆனை வீணாக கிழிப்பது ஹராம்.

குர்ஆன் ஓதப்பட்டால் அதனைக் காது தாழ்த்திக் கேட்பதும், அல்லாஹ்வை பயப்படுவதும், அழுகை வராவிட்டாலும் அழுகையை வரவழைப்பதும், குர்ஆனுக்கு மணம் பூசுவதும், அதனை முத்தமிடுவதும், உயரமான இடத்தில் வைப்பதும் சுன்னத்து. குர்ஆனை பார்ப்பதும் ஹாபிழாக இருப்பினும் பார்த்து ஓதுவதும் சுன்னத்து.

ரூபாய் நோட்டு, பவுன் போன்றவற்றை குர்ஆன் தாள்களுக்கிடையில் வைப்பது ஹராம்.

மேற்காணும் சட்டங்கள் ஷாபிஈ மத்ஹப் சட்ட நூலான ‘மஙானீ’ என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

முற்றும்.