Need Explanation of New Thareeka-புதிய தரீகா பற்றிய விளக்கம் தேவை!

Need Explanation of New Thareeka-புதிய தரீகா பற்றிய விளக்கம் தேவை!

By Sufi Manzil 0 Comment February 13, 2011

கேள்வி:

அஸ்ஸலாமு அலைக்கும்….

நான் முஹம்மத் ஷஹதுல்லாஹ், தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து. மிகப்பெரிய இம்மடலுக்கு மன்னிக்கவும். தங்களுடைய வெப்சைட் மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது. உண்மையான சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படை கொள்கைகளை எங்களைப் போன்றோருக்கு தந்து ஈமானை நிலை படுத்துகிறீர்கள். உங்கள் துஆவில் எங்களையும் சேர்த்து கொள்ளுங்கள். காயல் பதி நான் மிகவும் விரும்பும் ஊராகும், மதீனதுள் அவ்லியா என்ற சிறப்பு பெற்ற ஊரை நேசிப்பது கொண்டு அங்கு வாழும் சகல வலிமார்களின் ஆசியை நாடுகிறோம்.

நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள் படித்தேன், ஸுபி மன்ஜில் வெப்சைட் இல்  நன்றாக விளக்கம் கொடுக்கப் பட்டிருந்தது. மற்றும் வஜ்{ஹன் நகி ஹழ்ரத், அப்துர் ரஜாக் கௌசி ஆலிம் , சைபுதீன் ரஹ்மானி ஸுபி ஹழ்ரத் அவர்கள் தப்லீக் ஜமாஅத் பற்றி பேசிய வீடியோ கேட்டேன். தனித்தனியாக முஹியத்தீன் டிவியிலும், மற்றும் அதே வீடியோக்கள் யூடியுப்பிலும் ஸுபி மன்ஜில் என்ற அக்கௌன்ட் தலைப்பின் கீழ் கேட்டேன். அதில் சைபுதீன் ரஹ்மானி ஸுபி ஹழ்ரத் அவர்கள் நூருன் நூர் என்ற புத்தகம் பற்றி குறிப்பிட்டு, நூரி ஷாஹ்வின் ஸைஹ் கௌசி ஷாஹ் அந்த நூலில் காபிர் என்று பத்வா  கொடுக்கப்பட்ட அஷ்ரப் அலி தானவி பற்றி புகழ்ந்திருப்பதாலும் அதே போல் அஷ்ரப் அலி தானவியும் இந்நூலை  புகழ்ந்திருப்பதாலும், மேலும் மார்க்கத்திற்கு முரணான பல கருத்துக்கள் பொதிந்திருப்பதாலும், அவர்கள் வழிகெட்ட தரீகாவாதிகள் என்று விளக்கினார்கள். வஜ்{ஹன் நகி ஹழ்ரத் அவர்கள் பேசும் போது நூரிஷாஹ் தரீகா சரியானது இல்லை என்பதை சொல்லி விட்டு , கௌசி ஸாஹ்வை ஏற்று கொள்கிறோம் என்று சொன்னார்கள். இதை பற்றி சிறுது விளக்கம் பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.   

மற்றும் எனக்கு நிகழ்ந்த சில நூரி தரீகா பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நானும் நாகூரைச் சேர்ந்த எனது நண்பரும் இந்த நூரி ஷாஹ் தரீகா பற்றி விவாதித்து கொண்டிருந்தோம். அவர் அந்த தரீகாவிற்கு கடுமையான ஆதரவாளர். அனைத்து ஆதாரங்களுடன் அவர் தரீகாவை பற்றி விளக்கிய போது  பதில் தர இயலாத பட்சத்தில் , ஒரு கதை சொன்னார் என்னவென்றால் இவர்களுடைய ஸைஹ்  பைஜி ஷாஹ் ஏர்வாடி தர்காஹ் ஜியாரத்திற்கு சென்ற போது யாரும் அவ்வளவாக மரியாதை செய்யவில்லை, (நான் சுருக்கமாக கூறுகிறேன்) அவர் சென்றதிற்கு பின் இப்ராஹீம் பாதுஷா நாயகமவர்கள் அவர்களுடைய பிள்ளைகள் (லெவ்வைகள்) பலரின் கனவில் சென்று பைஜி ஷாஹ்விற்கு அவர்கள் திருக்கரத்தால் சண்டையிட்ட வாளை வழங்கி கண்ணியப்படுதுமாறு கூறியதாகவும், அதன் பேரில் முக்கியஸ்தர்களான லெவ்வைகள் பலர் கூடி வாளை லால்பேட்டைக்கு எடுத்துசென்று  கொடுக்கும்போதுபின்னால் வரும் சந்ததிகள் வாளை தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடகூடும் எனவே கனவில் சொல்லிருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிய போது, லெவ்வைகள் அனைவரும் ஒரு பத்திரத்தில் வாள் பைஜி ஷாஹ்விற்கு பாதுஷா நாயகமவர்களின் உத்தரவிற்கிணங்க வழங்கப்பட்டது என்று எழுதி விழா எடுக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும், இன்றும் அவ்வாழும் பத்திரமும் லால்பேட்டையில் இருப்பதாகவும் சொல்லி முடித்தார். இதை கேட்டு அதிர்ந்த நான்  அம்பா நாயகம், ஸுபி ஹழ்ரத், ஜலீல் ஹழ்ரத் மற்றும் நம் காலத்தில் இருக்கின்ற ஒவ்லியாக்கள் அனைவரும் நூரி ஷாஹ் தரீகா தவறானது என்று எச்சரித்திருக்க நீ சொல்வது சத்தியமாக சாத்தியமில்லை என்றேன். நான் ஏர்வாடியில் முக்கியமான இரண்டு லெவ்வைகளிடம் இது பற்றி விசாரித்த போது இப்படி ஒரு சம்பவம் நடக்கேவேயில்லை என்றும் வாளும் கிடையாது என்றும் விளக்கினர். இதற்கு பிறகும் என் நண்பர் நூரி ஷாஹ் தரீகாவில் தான் இருக்கிறார், அல்லாஹ் அவரை நேர் வழிக்கு கொண்டு வருவானாக.   

மற்றுமொரு சம்பவத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன் .  சில வருடங்களுக்கு முன்பு என் காயல் நண்பர் ஒருவர் இந்த நூரி தரீகா பற்றி எச்சரித்து இருந்தார். நான் அதை மறந்துவிட்டு மற்றொரு நண்பர் மூலமாக பிலாலி ஷாஹ் தரீகாவில் சேர்ந்தேன். அவருடைய வீட்டில் தான் ஞாயிறன்று திக்ர் மஜ்லிஸ் நடக்கும்.  முதல் தடவையாக பைஅத் வாங்குவதற்கு  சென்றோம்.'முஹம்மத்' என்ற திக்ரு அதிகமாக மஜ்லிஸில் இடம்பெற்றிருந்தது. மஜ்லிஸ் முடிந்தவுடன் யாரெல்லாம் பைஅத் இன்று வாங்கவேண்டுமோ வாருங்கள் என்று அழைத்தார். நாங்கள் சென்று பெற்றுக்கொண்டோம். இந்த நாளிலா அல்லது மற்றொரு நாளிலா (அந்த நாளில் கம்பம் அருகாமையில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரிலிருந்து ஒரு ஆலிம் பைஅத் வாங்கினார்) என்று தெரியவில்லை, பிலாலி ஷாஹ் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டபோது கம்பம் என்றோம். மேலும் தொடர்ந்தார், அம்பா நாயகம் என்றொரு வலியுல்லாஹ் இருக்கிறார்கள் கம்பத்தில், இருவர் அவர்களிடம் சென்று பைஅத் கேட்டனர், அதற்கவர்கள் லவ்{  வைப்பார்துவிட்டு ஒருவருக்கு மட்டும் பைஅத் வழங்கி மற்றொருவரை பிலாலி ஷாஹ்வாகிய என்னிடம் போக சொன்னார்கள். பின்னாளில் பிலாலி ஷாஹ் தரீகாவும் நூரி ஷாஹ் தரீகவும் ஒன்றுதான்  என்றும், இவர்களை பற்றி அம்பா நாயகம் எச்சரிதிருபதையும் கம்பம் நண்பர் ஒருவர் மூலமாக தெரிந்ததும், அம்பா நாயகம் பற்றி பிலாலி சொன்னது பச்சை பொய் என்று விளங்கி அக்கூட்டத்தை விட்டு விலகி விட்டேன். அல்லாஹ் எல்லோரையும் இது போன்ற வழிகெட்டவர்களை விட்டு பாதுகாப்பானாக.

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை தலைவர் ஸைஹ் அப்துல்லாஹ் ஜமாலி நூரி ஷாஹ் தரீகாவை ஆதரிப்பதாக கேள்விப்பட்டேன், அவர் பயானை கேட்க தயக்கமாய் உள்ளது.

கீழக்கரை சுஐப் ஆலிம் அவர்கள் நூரி ஷாஹ் தரீகா பக்கம் இருப்பதாக சொல்கிறார்கள் , பிலாலி பங்கேற்ற மேடையில்  சுஐப் ஆலிம் அவர்கள்  பிலாலியை  புகழ்ந்ததாக கூறுகிறார்கள், அவர்கள் சொல்வது சுத்தப் பொய்யாகத் தான் இருக்கும்.

 ஏர்வாடி பாதுஷா நாயகம் அவர்கள் ஹாலிராகி மதிப்பிற்குரிய மதுரை அப்துஸ்ஸலாம் ஹழ்ரத் அவர்களுக்கு கண்ணாடி பைத்தை வெளியாக்கினார்கள். அவர்களுடைய பேரராகிய மதுரை அப்சர் ஹுசைன் ஹழ்ரத் அவர்கள் ஷாதுலியா தரீகாவின் கலிபாவாகவும் இருகிறார்கள். இவர்களுடைய மகன் முஹம்மது முயினுதீன் இப்ராஹீம் ஆலிம் பைஜி அவர்கள் 'அரபி மௌலித் ' என்ற ஏர்வாடி ஷரீபின் அரபி மௌலித்  கிதாபிலே பாதுஷா நாயகத்தின் பேரராகிய நல்ல இப்ராஹீம் நாயகத்தின் மீது (புத்தகத்தின் கடைசியில் இருந்து மூன்று பக்கங்களுக்கு முன்னாள்) கவி யாத்திருகிரார்கள் . இவர்கள் பெயர் பைஜி என்று முடிவடைகிற படியால் எனக்கு இவர்கள் மேல் சந்தேகம் வந்தது. இது தவறா என்று தெரியவில்லை, எனக்கு தெளிவுபடுத்தவும் .

தேங்கை ஷரபுதீன் மிஸ்பாஹி அவர்கள் எழுதிய 'கன்னித்தமிழில் கசீததுல் புர்தா  பானத்  சுஆத் ' என்ற நூலில்  பக்கம் 6 இல் சங்கைக்குரிய ஜலீல் ஹழ்ரத் அவர்களை புகழ்ந்து சொல்லிவிட்டு பக்கம் 8 இல் பிலாலி ஷாஹ்வையும் சில வார்த்தைகளால் சிலேகித்திருகிறார். இப்புத்தகத்தை நான் படிக்கலாமா.

மற்றும் ஒரு கடைசி சந்தேகம், முஹியித்தீன் டிவியில் ஒரு ப்ரோக்ராம் பார்க்கையில், அது  மஸ்னவி ஷரீப் விளக்கம் கூடிய ஒரு புத்தகத்தின் வெளியீடு விழா. சங்கைக்குரிய ஸுபி ஹழ்ரத் (ஸுபி ஹழ்ரத்  அவர்களின் கலீபா  சிகப்பு தலைப்பாகை எப்போதும் அணிந்திருப்பார்கள், பெயர் தெரிய வில்லை) அவர்களின் கலீபா, மற்றும் சங்கைக்குரிய ஜலீல் ஹழ்ரத் அவர்கள் பங்கேற்று வெளியிட வந்திருந்தார்கள் ,நூலை முத்தமிட்டு வெளியிட்டார்கள். மக்லரா அரபிக் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் ஹழ்ரத் அவர்கள் முதலில் பேசினார்கள்.   

பின்பு நிகழ்ச்சி நிரலாக ஒரு ஹழ்ரத் பேசினார்கள்(பெயர் தெரியவில்லை).  பேசும் போது மஸ்னவி ஷரீப் விளக்கம் நூலை பற்றி பேசிவிட்டு இந்நூலை வெளியிட்டவரை  இவருடைய ஸைஹ் என்று கூறினார், அவர் ஸைஹ் என்று கூறப்பட்டவர் நூரிஷாஹ் தரீகாவை ஒட்டியதாக இருந்தது. இவர் தான் பிரச்சனை. இவரும் காயல் தான். வழக்கமாக நான் சென்னை திருவல்லிக்கேணி பள்ளியில் (பெரிய தெருவில் உள்ளது), தொழும் போது (இன்றும்) இவர் தான் பிரசங்கம் செய்வார். ஒருமுறை ஏதோ ஒரு வருடம் ஆ{ரா நாளா, பராஅதா  தெரியவில்லை, அன்றைய ஜும்மாவில்  பேசிவிட்டு அன்றைய சிறப்புக்குரிய நாள் பற்றி ஒரு புத்தகம் தான் எழுதி இருப்பதாகவும், ஜும்மா முடிந்து 15 ரூபாய் ஹதியா கொடுத்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.நானும் தொழுகை முடிந்ததும் அச்சிறுநூலை வாங்கி அணிந்துரை படித்தேன், அதில் இந்த பைஜி ஷாஹ் பற்றி புகழ்ந்து கூறப்பட்டதனால் அந்நூலை கிழித்தெறிந்து விட்டேன். முடிந்தால் இதை பற்றிய விளக்கம் தரவும்.

நான் இவ்வளவு பெரிய கேள்வி லிஸ்டை கொடுத்ததற்கு (சிரமத்திற்கு) மன்னிக்கவும். சில சமயம் சம்பந்தம் இல்லாத விசயங்களையோ கேள்விகளையோ இந்த கடிதத்தில் கொடுத்திருந்தால் மன்னிக்கவும்.

சலாம்……
சி.முஹம்மது ஷஹதுல்லாஹ்

பதில்:

அன்புள்ள சகோதரார் சி.முஹம்மது ஷஹதுல்லாஹ் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களுடைய மடல் கிடைத்தது. மடல் மிக நீண்டு இருந்தாலும் விசயங்கள் அதிகம் இருந்தது. தாங்கள் நூரிஷாஹ் தரீகாவைப் பற்றி மிகவும் அறிந்து வைத்திருக்கிறீர்கள். அவர்களின் வழிகேட்டைப் பற்றி நாங்கள் விபரமாக எழுதியிருந்தோம். தாங்கள் பார்த்து தங்களின் சந்தேகங்களை எழுதியிருக்கிறீர்கள். இன்ஷாஅல்லாஹ் ஷெய்குமார்களின் உதவியால் இந்த விசயங்களை நாம் தெளிவுபடுத்துவோம்.

தங்களின் முதல் சந்தேகத்திற்குரிய பதில்:

நூரிஷாஹ் தரீகா ஆரம்பத்தில் சுன்னத் வல் ஜமாஅத் என்ற போர்வையில் தரீகா ஷெய்குமார்கள் வேஷத்தில் ஹைதராபாத்திலிருந்து கேரளத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வந்தது. அந்த சமயத்தில் இதன் வெளிவேஷத்தைக் கண்டு மயங்கிய பலர் ஆலிம்கள் உட்பட கேரளாவிலும் அதன்பின் தமிழகத்திலும் அதில் சேரத்துவங்கினர். நல்ல பண்பட்ட ஆலிம்கள் இதன் அந்தரங்கத்தைத் தெரிந்து அதை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இது சுன்னத் வல் ஜமாஅத்திற்கு முற்றிலும் மாறுபட்டது என்று விளங்கி அதற்கு எதிராக பத்வா வெளியிட்டார்கள்.

தமிழகத்தில் இந்த தரீகாவின் தாககம் அதிகமானது சுமார் 18 வருடங்களாகத்தான். அதனால் நமது ஷெய்குமார்களும், ஆலிம்களும் அதைப் பற்றி சிந்திக்கத் தலைப்படவில்லை. சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமாக ஒரு கொள்கை, இயக்கம் வருகிறதென்றால் நமது ஆலிம்கள் அதற்கு எதிராக செயல்பட்டு மக்களை எச்சரிக்கத் தவறுவதில்லை. ஆனால் இந்த தரீகா தரீக் என்ற போர்வையிலும், ஷெய்குமார்கள், சில்சிலாக்கள் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் என்ற போர்வையிலும் வந்ததால் இதன் அடிப்படைக் கொள்கை என்னவென்று மக்களுக்குத் தௌ;ளத் தெளிவாக தெரியாமல் இருந்தது. மேலும் அவர்கள் தங்கள் போதனைகளை இரகசியமாக செய்து வந்தனர். அவர்களின் கொள்கை மற்றும் ஷெய்குமார்கள் தொடர்பு பற்றி தெரியாமலிருந்தது.

இச்சமயத்தில் சுமார் 18 வருடங்களுக்கு முன் தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமாசபை தஞ்சாவூரில் கூடி இது பற்றி கவனத்தில் எடுத்துக் கொண்டு இதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முயற்சித்தது. அச்சமயம் இந்த சபையில் உறுப்பினராக இருந்த மௌலவி ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்கள் அந்த தீர்மானம் கொண்டுவர விடாமல் தடுத்துவிட்டார். அவர்களைப் பற்றி விசாரித்து அதன்பின் தீர்மானம் கொண்டு வரலாம் என்று கூறியதால் அதற்கு என்று ஒரு குழு போடப்பட்டு அதில் அந்த ஜமாலி ஹஜ்ரத் அவர்களையும் உறுப்பினராக்கி விளக்கம் கேட்க சொல்லப்பட்டது. சுமார் 18 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை அவர் விளக்கம் கேட்கவும் இல்லை. மாறாக இந்த சபையிலிருந்து வெளியேறி தனியாக ஒரு அமைப்பைத் துவக்கி நூரிஷா தரீகாவிற்கு ஆதரவாக செயல்படத் துவங்கினார். ஆக ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு விரோதமான நூரிஷாஹ் தரீகாவின் தீவிர ஆதரவாளர் என்பது உண்மைதான்.

அவரின் விளக்கம் கிடைக்காததினால் கடந்த சில வருடங்களுக்கு முன் மேற்கண்ட உலமாசபை கூடி நூரிஷாஹ் தரீகா சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒருவழி கெட்ட இயக்கம். அதில் மக்கள் சேரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி அதை பிரசுரமாக அச்சடித்து மக்கள் மத்தியிலும் விநியோகிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் நமது சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் இந்த தரீகாவைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்கள். அதில் நமது சகாப் ஹஜ்ரத் அவர்கள் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து பலர் சொல்வதைக் கேள்விபட்டு கௌஸிஷாஹ் நல்லவர் என்று கூறியிருப்பார்கள். முன்பு நூரிஷாஹ்வின் கலீபாக்கள்தான் அஷ்ரப்அலி தானவியை போற்றுவதாக சொல்லப்பட்டது. அதை வைத்து சகாப் ஹஜ்ரத் அவர்கள் பயானில் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய ஷெய்குமார்களும் அவரை ஆதரிக்கிறார்கள் என்ற உண்மை அந்த தரீகாவினர் தங்கள் கொள்கைகளை புத்தகங்களாக வெளியிட்ட போதுதான் தெரியவந்தது.

அந்த புத்தகங்களைப் பார்த்து ஆராய்ந்துதான் ஷெய்கு ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் கௌஸி ஷாஹ்வும் வழிகேடர்தான் என்றும், அவர்களின் ஸில்ஸிலா தொடர் வழிகேடர் இஸ்மாயில் திஹ்லவி(தக்வியத்துல் ஈமானை எழுதியவர்)யின் நண்பர் மற்றும் ஷெய்குமான செய்யிது அஹ்மது பரேலவீ மூலம் வருகிறது என்பதைக் கண்டறிந்து மொத்த தரீகாவும் வழிகேடானது என்று சொல்கிறார்கள்.

மேலும் அவர்கள் சிலர் சொல்லாததையும், எழுதாததையும் சொல்லியதாகவும், எழுதியதாகவும் சொல்கிறார்கள். இதே விசயத்தில்தான் 'அம்பாநாயகம்' அவர்கள் மதிப்புரை கொடுக்காததை கொடுத்ததாக சொல்லியிருக்கிறார்(திருக்கலிமாவின் பொக்கிஷம் என்ற நூலில் வந்த மதிப்புரை)
இதேமாதிரிதான் அவர்களின் கராமாத்துக்களும்(?) சம்பவங்களும் இருக்கின்றன. அதை நீங்களும் பார்த்து எமக்குத் தகவல் தந்திருக்கிறீர்கள்.

கீழக்கரை சுஐப் ஆலிம் அவர்கள் தங்கள் மத்ரஸா பட்டமளிப்பு விழாவிற்காக பைஜிஷாஹ்வை அழைத்திருந்தது உண்மை. தாங்கள் சுஐப் ஆலிம் அவர்களைப் பற்றி தாங்கள் கேள்விப்பட்டது உண்மையாக இருக்கலாம்.

'பைஜி' என்று பைஜிஷாஹ்விடம் முரீதாகியவர்கள் தங்கள் பெயரின் பின்னால் போட்டுக் கொள்கிறார்கள். அதே சமயம் சில மத்ரஸாக்களில் கொடுக்கப்படும் ஆலிம் ஸனதுகளுக்குப் பெயரும் பைஜி என்று இருக்கிறது. உதாரணமாக கேரளா பட்டிக்காடு அரபி மத்ரஸாவில் அளிக்கப்படும் பட்டம் பைஜி, திருநெல்வேலி பேட்டை மத்ரஸாவில் அளிக்கப்படும் பட்டமும் பைஜிதான். ஆகவே இதை ஆராய்ந்து பார்த்து தெளிவு பெறுவது நலம்.

இந்த புத்தகத்தில் பிலாலிஷாஹ்வின் அணிந்துரை எழுதப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி தேங்கை சர்புத்தீன் அவர்களிடமும், அதை வெளியிட்ட சுலைமானியா பப்ளிஷர் நிறுவனர் சுலைமான் ஹாஜி அவர்களிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் ஆஷிகே ரஸூல் அல்லவா? என்றார்கள். பிலாலி ஷாஹ் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருந்தது அவ்வளவுதான். அவரின் கொள்கையைப் பற்றித் தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், கற்றறிந்த ஆலிம்களும் இதில் சிக்கி மாட்டித் தவிக்கின்றனரே எனும்போது வியப்பிற்குரியதாக இருக்கிறது.

அபூலஹப் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பைக் கேள்வியுற்று ஒரு அடிமையை சுட்டுவிரல் காட்டி உரிமைவிட்டதினால் அவன் ஆஷிகே ரஸூல் ஆகிவிடுவானா? முனாபிக்குகளின் தலைவனான அப்துல்லாஹ் இப்னு உபை தன் மரண நேரத்தில் தம் மகனாரை அழைத்து (மகனார் ஒரு ஸஹாபி) நபிகளாரின் உடையை தனக்கு கபனாக போர்த்தும்படி சொன்னதினால், அவர் ஆஷிகே ரஸூலாகி விடுவாரா?இதேபோல்தான் பிலாலிஷாஹ்வும். அவர் தான் சேர்ந்திருக்கிற வழிகெட்ட தரீகாவை விட்டும், ரஸூல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்திய அஷ்ரப் அலி தானவியை போற்றும் ஷெய்குமார்களை விட்டும் தவ்பா செய்து வெளியில் வரட்டும். நான் ரஸூலையும் புகழ்வேன் அவர்களை இகழ்ந்தவர்களையும் புகழ்வேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நீங்களே யோசியுங்கள்.

மஸ்னவி ஷரீப் புத்தகம் வெளியிட்டதும் அதில் சங்கைமிகு ஜலீல் ஹஜ்ரத் மற்றும் சங்கைமிகு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் ஸூபி போன்றோர் கலந்து கொண்டதும் உண்மை. மஸ்னவி ஷரீபை (தமிழ்) முதன் முதலில் சென்னையில் வெளியிட்ட நபர் தாங்கள் கூறிய மௌலவி அபூதாஹிர் ஆலிம் மஹ்லரி அவர்களின் ஷெய்கான பஹீமுல்லாஹ் ஷாஹ் என்பதும் உண்மை. இவர் நூரிஷாஹ் தரீகாவை சார்ந்தவர் அல்ல.

ஆனால் அவ்வெளியீட்டு விழாவில் நூரிஷாஹ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டது பின்புதான் தெரியவந்தது. இந்த அபுதாஹிர் ஆலிம் மஹ்லரி அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்திருந்தார். இவரின் தந்தை ஸூபி ஹஜ்ரத் அவர்களின் முரீதுமாக இருந்தார்கள். ஆக இதை நம்பித்தான் மேற்கண்ட இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தெரியாமல் நடந்துவிட்ட சம்பவம் இது. மேலும் சங்கைமிகு ஜலீல் ஹஜ்ரத் அவர்கள் நடாத்தும் முஹிய்யத்தீன் டிவியில்தான் நூரிஷாஹ் தரீகா பற்றிய விபர உரைகளும் இடம் பெறுகின்றன. அதேபோல் அவர்கள் அதை சி.டிக்களாக வெளியிட்டும் வருகிறார்கள்.

ஆக நூரிஷாஹ் தரீகா வழிகேடானது என்பதில் ஐயமில்லை. இன்னும் மக்கள் மத்தியில் இதைப் பற்றிய தெளிவான விபரங்கள் தெரியவில்லை. ஆகவே தெரியாமல் சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

எங்களால் முடிந்த அளவு உங்களுக்கு அல்லாஹ்வின் உதவியாலும் ஷெய்குமார்களின் துஆபரக்கத்தாலும் பதில் அளித்து விட்டோம். இதில் தங்களுக்கு திருப்தி இருக்கும் என்று நம்புகிறோம்.

எங்கள் ஹக்கில் துஆ செய்ய வேண்டுகிறோம்.

நிர்வாகி,

ஸூபிமன்ஜில் டாட் ஓஆர்ஜி இணையதளம்.