விருந்தோம்பலின் சட்டங்கள்
By Sufi Manzil
விருந்தோம்பலின் மேன்மை:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவராக யாராவது இருந்தால் அவர் தம் விருந்தாளிகளை சங்கை செய்யவும் என எம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவருக்கு யார் விருந்தளிப்பது என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் 'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து' என்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், 'குழந்தைகள் உண்ணும் உணவைத் தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லையே' என்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், குழந்தைகளை பசியோடு தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார உண்ணுவார், நான் உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மறுநாள் காலை ஸுப்{ஹ தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான், மேலும் சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.
அப்போது அல்லாஹ் ,
'அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்' (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.
'எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும், அவர் தூதருக்கும் மாறு செய்தவராவார்' என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு), இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். புஹாரி அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு).
வலீமா திருமண விருந்து
திருமணத்தின் போது மணமகன் வழங்கும் விருந்திற்கு வலிமா என்று சொல்லப்படும். இந்த விருந்து ஒரு சுன்னத் ஆகும்.
நீங்கள் வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள் என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
அப்துர்ரஹ்மான இப்னு அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற நபித் தோழர் ஒரு அன்சாரிப் பெண்ணை மணம் முடித்தார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், என்ன விசேஷம் என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது என பதிலளித்தார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், எவ்வளவு மஹர் கொடுத்தீர்? என கேட்டார்கள்.
அதற்கு இப்னு அவ்ஃப(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ஒரு பேரித்தம் பழம் அளவு தங்கம் என்றார்கள்.
ரசூல்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'ஒரு ஆட்டையாவது அறுத்து வலிமா விருந்து வைப்பீராக' என்றார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்:புகாரி, முஸ்லிம்.
வலீமா எப்போது கொடுப்பது?
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், 'வலிமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும், இரண்டாவது நாள் கொடுப்பது ஸுன்னத் ஆகும், மூன்றாவது நாள் கொடுப்பது பகட்டாகும். எவன் பகட்டு காட்டுகிறானோ அவனுடைய குறைகளை அல்லாஹ் பகிரங்கப்படுத்துகிறான்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூது (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: திர்மிதீ.
பெருமானாரின் வலீமா வீருந்துகள்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு திருமணத்தின்போது இரு முத்துக்கள் அளவுள்ள கோதுமையையே வலிமாவாக அளித்ததாக ஸபிய்யா(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(1 முத்து என்பது 750 கிராம் ஆகும். ஆதாரம்: புகாரி.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸபிய்யா((ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை திருமணம் செய்த போது நாயகத்தோழர்கள் வலிமா விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். விருந்தில் ரொட்டியோ, கறியோ கிடையாது. போர்வையை விரித்து பேரீத்தம்பழம், பாலாடைக்கட்டி நெய்(போன்றவை) பரிமாறப்பட்டன. ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
வலீமா விருந்தின் சட்டங்கள்:
திருமணத்திற்காக விருந்தளிப்பது முக்கியமான சுன்னத்தாகும்.
திருமணம், கத்னா செய்தல், பிரசவ வலியிலிருந்து சுகம் பெறுதல், குழந்தை பிறப்பு, பிரயாணத்திலிருந்து திரும்பி வருதல், புது வீடு குடிபுகுதல், குர்ஆன் ஹிப்ளு முடித்தல், , குர்ஆன் ஓதி முடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளுக்காக ஒருஆட்டை அறுத்து விருந்து கொடுப்பதும், இதற்கு இயலாதவர் இயன்ற அளவு விருந்து கொடுப்பதும ; சுன்னத்தாகும். இவ்விருந்துக்காக அழைக்கப்பட்டவர் வருவதும் சுன்னத்தாகும்.
திருமணத்திற்கு பின் கொடுக்கப்படும் வலீமா விருந்திற்கு அழைக்கப்பட்டால் வருகை தருவது வாஜிபாகும். விருந்தளிப்பவர் தானே விருந்துக்கு அழைக்க வேண்டும். அல்லது அவர் சார்பாக உள்ளவர் அழைக்க வேண்டும். அப்போதுதான் அது வாஜிபாகும்.
நிகாஹிற்கு முன்பு நடைபெறும் விருந்திற்கு அழைக்கப்பட்டால் செல்வது வாஜிபல்ல. வெறும் விருந்து என்ற முறையில் சுன்னத்தாகும். வலீமா விருந்தை மணமக்களின் உடலுறவு நடைபெற்ற பின் கொடுப்பது சிறப்பாகும். நிகாஹும், விருந்தும் ஒரே நேரத்தில் நடைபெற்றால் அதற்கு செல்வது வாஜிபா இல்லையா? என்பதில் இமாம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
விருந்தோம்பலின் சட்டதிட்டங்கள்:
பசியால் துயரும் ஒருவனுக்கு உணவுள்ளவன் அவன் பசியை போக்குவது வாஜிபாகும்.
விருந்தாகிறது நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வழிமுறையைச் சேர்ந்ததாகவும், ஏற்றமான சுன்னத்தான வணக்கமாகவும் அல்லாஹ் தஆலாவினால் தன் அடியார்களுக்கு சொர்க்கத்தில் விருந்தென்று பெயரிட்டு கொடுக்கப்படுமென்று ஹதீஸ் குத்ஸியில் கூறப்பட்டுள்ளதாக இருப்பதால், சுன்னத்தை நாடிக் கொடுக்க வேண்டுமே தவிர முகஸ்துதிக்காகவோ, பெருமையை நாடியோ கொடுப்பது ஹராமாகும்.
விருந்துகளில் மிகவும் மகத்தான விருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்பாடும் மௌலிது விருந்து ஆகும்.
விருந்தில் பத்து வகை உண்டு. 1. கல்யாண விருந்து 2. புது வீடு, புது நிலம், புதுக் கப்பல் போன்றவற்றை சொந்தமாக்கிக் கொண்டதற்காக விருந்து. 3. குழந்தை பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பது. 4. புது வீடு குடிபுகுவதற்காக விருந்து. 5. தலைக் குழந்தை சுகப்பிரசவத்திற்காக விருந்து. 6. பிரயாணம் செல்லும் போது விருந்து. 7. கத்னா விருந்து 8. மௌத்துடைய விருந்து 9. குர்ஆன் முடிப்பது, ராத்திபு, திக்ரு செய்வது ஆகியவற்றிற்காக விருந்து. 10. எவ்விதக் காரணமுமின்றி விருந்து.
விருந்துண்ணச் செல்வதற்கு ஷர்த்துக்கள்.
1. குறிப்பாக அவனை அழைத்திருக்க வேண்டும்.2. அவனுடைய கூட்டத்தினர், தோழர்கள் அனைவரையும் அவன் தகுதிக்குத் தகுந்தவாறு அழைத்திருக்க வேண்டும். 3. அவனுடைய பொருளின் மீது அல்லது அவனுக்குள்ள அந்தஸ்தின் மீது ஆசை (உள்நோக்கம்) வைத்ததற்காகவோ, அல்லது அவனை பயந்ததற்காகவோ அழைக்காதிருக்க வேண்டும். 4. விருந்தளிப்பவன் அநியாயக் காரனாகவோ, பாவம் செய்பவனாகவோ இல்லாதிருக்க வேண்டும். 5. விருந்துணவில் ஹராமான பொருட்கள் மிகைக்காமலிருக்க வேண்டும். 6. விருந்து நடைபெறும் இடத்தில் ஹராமான காரியங்கள் நடைபெறாமலிருக்க வேண்டும். 7. விருந்து நடைபெறும் இடத்தில் உருவப்படங்கள் இல்லாதிருக்க வேண்டும். 8. பருவமடைந்த ஆண்கள் அவ்விடத்தில் பட்டுத்துணியையும், தங்கம், வெள்ளி, ஐம்பொன் ஆகியவற்றையும் அணியாதிருக்க வேண்டும். 9. அவ்விடத்திற்கு செல்வதினால் வெளிப்படையான நோவினை எதுவும் ஏற்படாமலிருக்க வேண்டும். 10. அவ்விடத்தில் புலித்தோல், மான்தோல் விரிப்புகுள் விரிக்காதிருக்க வேண்டும். 11. அவ்விடத்தில் பொய்யையும், கெட்ட விசயங்களையும் கூறி மக்களை சிரிக்க வைக்கும் விகடகவி, கோமாளி போன்ற நகைச்சுவைக்காரர்களோ, வேடமிடுபவர்களோ இல்லாதிருக்க வேண்டும்.
ஊர் முழுவதும் விருந்துக்கு அழைத்தால் எவர் வேண்டுமானாலும் செல்லலாம். குறிப்பிட்ட சிலர் மட்டும் அழைக்கப்படும் போது அழைக்கப்படாதவர் செல்வதும், அழைக்கப்பட்ட பெரிய மனிதர் ஒருவரைத் தொடர்ந்து அழைக்கப்படாத ஒருவர் செல்வதும் ஹராமாகும்.
இருவர் விருந்துக்கு அழைத்தால் முதலில் அழைத்தவருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் அழைத்தால் நெருங்கியவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இருவரும் நெருங்கியவர்களாக இருப்பின் சீட்டுப் போட்டு பார்க்க வேண்டும்.
பெண்கள் விருந்துக்கு அழைத்தால் ஹராமான தனித்திருத்தல் உண்டாகாமலும், பித்னாவை பயப்படாமலும் இருக்க வேண்டும்.அவ்வாறிருப்பின் அதனை ஏற்றுக் கொள்வது ஹராம்.
விருந்தாளி வீட்டினுள் சென்றதும் பெண்களிருக்கும் அறைக்கு நேராக உட்காராமல் இருப்பதும், உணவு கொண்டு வரப்படும் தாலத்தை பார்க்காமலிருப்பதும், சாப்பிட்ட பின் துஆ செய்வதும் ஒழுக்கமாகும்.
ஒருவன் மனப்பூர்வமாக விருந்துக்கு அழைக்கவில்லை என்று தெரிந்தால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மனப்பூர்வமாக அழைப்பதாக தெரிந்தால் அதனை மறுப்பதும் கூடாது.
விருந்தாளியை கண்ணியப்படுத்துவது:
விருந்தாளியை கண்ணியப்படுத்துவதும், விருந்தாளி வீட்டுக்கு வரும் பொழுது எதிர் கொண்டு அழைத்து வருவதும், அவர் புறப்படும் பொழுது வீட்டின் வாசல் வரை சென்று வழி அனுப்புவதும் சுன்னத்தாகும்.
விருந்தாளிக்கு உணவை கொண்டு வைத்தவுடன் பிஸ்மில்லாஹ் என்றோ அல்லது சாப்பிடுங்கள் என்றோ சொல்லி சாப்பிட அனுமதிப்பது விருந்தளிப்பவனுக்கு முஸ்தஹப்பாகும்.
வெளியூரிலிருந்து விருந்தாளியாக வந்திருப்பவருக்கு முதலில் கிப்லா திசையை அறிவிப்பதும், கழிவறை, உளு செய்யுமிடம் போன்றவற்றை காட்டிக் கொடுப்பதும், தானோ அல்லது தன் மக்களில் ஒருவரோ உடனிருந்து சாப்பிடுவதும் ஒழுக்கமாகும்.
விருந்து கொடுப்பவர் எவ்வளவு உயர்வான உணவைக் கொடுத்து சிறப்பித்தாலும் தான் குறை செய்து விட்டதாக வெளிப்படுத்துவதும், விருந்து சாப்பிட்டவர் என்ன குறையிருந்தாலும் அதனை பெரிய மனது வைத்து ஒதுக்கிவிட்டு அந்த விருந்தை பெரியதாகக் கண்டு நன்றி செலுத்துவதும் சுன்னத்தாகும்.
விருந்தாளிக்கு மூன்று இரவு பகல் விருந்தளிப்பது சுன்னத்து முஅக்கதாவாகும். மூன்று தினங்களுக்கு மேல் விருந்தாளி தங்குவது கூடாது, ஆனால் விருந்து உபசரிப்பவர் விரும்பிக் கேட்டுக் கொண்டால் தங்கலாம்.
பலர் சாப்பிடும்போது நல்ல உணவை ஒருசிலர் மட்டும் தங்களுக்கென்று ஒதுக்கிக் கொள்வது மக்ரூஹ் ஆகும்.
உடையவனின் அனுமதியின்றி பிச்சைக்காரனுக்கோ, பூனை போன்றவற்றிற்கோ உணவைப் போடுவது ஹராமாகும்.
விருந்து கொடுப்பவரை மகிழ்விப்பதற்காக தன் வழக்கத்தை விட சற்று அதிகமாக சாப்பிடுவது சுன்னத்தாகும்.
நல்லடியார்களான ஏழைகளைப் எதிர்பார்த்து வந்திருப்பவர்களை சற்று தாமதப்படுத்தலாம். ஒரு பணக்காரரை எதிர்பார்த்து தாமதிக்க கூடாது. வந்திருப்பவர்களை வேதனைப் படுத்தும் அளவிற்கு தாமதப்படுத்தக் கூடாது.
விருந்து கொடுப்பவர் விருந்தாளியைக் கண்டவுடன் மர்ஹபா என்று வாழ்த்துக் கூறுவதும், அல்லாஹ்வைப் புகழ்வதும் சுன்னத்து.
ஒவ்வொருவரும் தனக்கும் தன் மனைவிக்குமாக ஒரு விரிப்பையும், விருந்தாளிக்காக ஒரு விரிப்பையும் வைத்துக் கொள்வது முஸ்த்தஹப்பாகும்.
ஒரு மஜ்லிஸில் சாப்பிட்டு முடித்த பிறகு விருந்தளித்தவரிடம் அனுமதி பெற்று வெளியேறுவது ஒழுக்கமாகும்.
விருந்து கொடுப்பவர் விருந்தாளிகளில் சிலருக்கு மட்டும் நல்ல வகை உணவுகளைக் கொடுப்பது மக்ரூஹ். பெரியோர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் உடையவனின் அனுமதியின்றி சிறியவர்கள் கை இடுவது ஹராமாகும்.
ஒரு விருந்தாளி பத்து ரஹ்மத்துகளைக் கொண்டு வீட்டினுள் நுழைகிறார். பத்து கவளம் உணவால் பத்துப் பாவங்களைப் போக்கிவிடுகிறார் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பித்அத்காரன் அல்லது குழப்பக்காரன, வஹ்ஹாபிகள் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவ்விருந்துக்கு செல்வது கூடாது. ஏனெனில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் பிளவை உண்டு பண்ணி பித்னாவை ஏற்படுத்துவதாலும், அவர்களை கண்ணியம் குறைவு, மரியாதைக் குறைவாக பேசுவதாலும் எழுதுவதாலும் மேலும் அவர்களை உங்கள் கிட்ட நெருங்கவிடாதீர்கள் நீங்களும் அவர்களுடன் சேராதீர்கள் என்ற நபிமொழிக்கு இருப்பதினால் அவர்களின் விருந்துக்கு செல்வது கூடாது.அதே போல் அவர்களை விருந்துக்கும் அழைப்பது கூடாது.