ஆதி ஏகன் தூதர் நபி …
By Sufi Manzil
ஆதி ஏகன் தூதர் நபி
அண்ணலர் முஹம்மதரின்
ஆன்ற புகழ் பாடிடுவோம்
வாரீரோ – அந்த
ஜோதி நபி அஹ்மதெனும்
சொர்க்கப் பதி நாயகரின்
தூய புகழ் பாடிடுவோம் வரீரோ!! (2)
பூ தலத்தின் மார்பிட மாம்
புனித மக்கா பதிப் பிறந்த
பூரணரின் புகழிசைப் போம்
வாரீரோ – அந்த
மாது நல்லாள் ஆமினாம்மா
மணி வயிற்றில் அமைந்து வந்த
மாணவரின் புகழிசைப்போம் வாரீரோ! (ஆதி…)
வல்லவனும் புகழ்ந் துயர்ந்த
வானவரும் வாழ்த்துகின்ற
வள்ளலவர் மாண்பிசைப்போம்
வாரீரோ – சுவை
வெல்லமெனச் சொல்லுதிர்த்து
வன்குஃப்ரின் இருளறுத்த
வெண்ணிலவின் புகழிசைப்போம்
வாரீரோ! (ஆதி..)
அனைத்து நபிமார்களுக்கும்
அதி சிறந்தோராக இங்கே
அவதரித்தோர் புகழிசைப்போம்
வாரீரோ –நாம்
நினைத்து நெஞ்சில் எப்பொழுதும்
நிலைப்படுத்திக் கொண்டவரின்
நறும் புகழை நாமிசைப் போம்
வாரீரோ! (ஆதி…)
அமைதி தவழ் மதினத்திலே
ஆட்சி செய்யும் மாட்சி மிகு
அரசரவர் புகழிசைப்போம்
வாரீரோ – விழி
இமை யெனவே முஃமீன்களே
என்று மிங்கே காக்கு முயர்
ஏந்தலவர்ப் புகழிசைப்போம்
வாரீரோ! (ஆதி…)
மஹ்மூ துஸைன் பாடலிதைப்
பாடும் நாங்கள் அனைவர்களும்
மனங்குளிரப் பாடிடவே
வாரீரோ – அந்த
மஹ்ஷரிலே நமக்குதவும்
மா முஸ்தஃபா நபியவரின்
மகத்துவமார் ஆசிப் பெற
வாரீரோ! (ஆதி ஏகன்…)
(நிறைவு)