யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் சொல்லும் ஸலவாத்தின் போதும் எழுந்து நிற்பது கூடுமா?

யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் சொல்லும் ஸலவாத்தின் போதும் எழுந்து நிற்பது கூடுமா?

By Sufi Manzil 0 Comment March 31, 2011

கேள்வி:நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் சொல்லும் ஸலவாத்தின் போதும் எழுந்து நிற்பது கூடுமா?

பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில் எழுந்து நிற்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.

ஒருமுறை ஹழ்ரத் ஸஃத் இப்னு மஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள் உங்கள் தலைவரைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் என்று.

(ஆதாரம்: மிஷ்காத், பாகம் 1, கிதாபுல் ஜிஹாத் பாபுல் கியாம்)

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மஜ்லிஸை விட்டு எழுந்தார்களேயானால், நாங்கள் எழுந்து நின்று கொண்டிருப்போம். எதுவரையென்றால் அவர்களின் மனைவியின் வீட்டை சேரும்வரை.

(ஆதாரம்: பதாவா ஆலம்கீரி, பிதாபுல் கரஅ, பாபுல் முலாகாதில் முல்க்)

பெருமானாரின் மறைவுக்குப் பின்னால் அவர்களுக்கு மரியாதை கொடுப்பது பற்றி இமாம்களின் கருத்து: அல்லாமா கஸ்தலானி மற்றும் முஅத்தா இமாம், மாலிக்கின் விரிவுரையாளரான அல்லாமா துர்ஹானி ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் ஆகியோர் சொல்கின்றார்கள்,

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஜீவிய காலமும், அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்ததற்குப் பின் உள்ள காலமும் இவ்விரு வாழ்க்கைக்குமிடையே எத்தகைய வித்தியாசமும் இல்லை. அவர்கள் தங்கள் உம்மத்தினரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் அவர்கள் தமது உம்மத்துக்களின் நிலைகள், நடவடிக்கைகள், செயல்பாடுகள், மேலும் அவர்களின் எண்ணங்களைக் கூட அறிந்து  கொள்கின்றனர். மேலும் அவர்களின் அவைகளை அல்லாஹ் நபியவர்களகு;கு எந்தளவு காட்டிக் கொடுக்கின்றானெனில் அதில் மறைவென்ற வார்த்தைக்கே இடமில்லை.'

(ஆதாரம்: ஷரஹ் மவாகிப், பாகம் 08, பக்கம் 305)

ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், இது விசயத்தில் உலமாக்களில் யாருக்குமே கருத்து வேறுபாடு கிடையாது. அதாவது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மறைவுக்குப் பின்னரும் ஜீவியத்துடன் இருப்பதோடன்றி தமது உம்மத்துக்களின் அமல்களையும் அவர்களின் முன்னாலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இன்னும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை முன்னோக்குவோருக்கு தங்களின் அருள் புரிந்து அவர்களை வழிநடாத்தவும் செய்கின்றார்கள்.

(நூல்: ஹாஷியா, அக்பாருல் அக்பார் பக்கம் 155)

அல்லாஹ் தனது திருமறையில் நபிகளாரின் உயர்வைப் பற்றியும், அவர்களின் கீர்த்தியைப் பற்றியும் கூறும்போது 'வலல் ஆகிரது கைருல்லக மினல் ஊலா'-நபியே! நாயகமே! உங்களுக்கு சென்ற நிமிடத்தைக் காட்டிலும் இனி வரக்கூடிய நிமிடமே உங்களுக்கு உயர்வானது' என்று. ( 93:04)

எனவே, நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைவுக்குப் பின்னரும் நம் மத்தியில் ஹயாத்தோடுதான் இருக்கின்றார்கள் என்பதை இமாம்களின் கருத்து நிரூபிக்கின்றது. மேலும் நாம் அவர்களுக்கு செய்யக் கூடிய கண்ணியத்தையும் ஏற்றுக் கொள்கின்றார்களே என்பது நிரூபணம். எனவே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம் மத்தியில் ஹாழிர், நாளிராகவே இருக்கின்றார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

நன்றி: வெற்றி ஜூன் 2000.