Paradise Paranets-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே!.

Paradise Paranets-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே!.

By Sufi Manzil 0 Comment February 10, 2010

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே!.

தொகுப்பு: குளம் ஜமால் முஹம்மது.

1. ஃபத்ரத் காலம்

2. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்களின் காலம்

3.ஆட்சேபணைகளும், தெளிவான பதில்களும்

4. முடிவுரை

முன்னுரை

எங்கும் நிறைந்திலங்கும் வல்லவனாம் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாகவும், பரிசுத்தத்திலும் பரிசுத்தமான வமிசாவழியில் உயர் குலத்தில் தோன்றிய உத்தமராம் ஹபீப் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்கள், உற்ற தோழர்கள், அவர்களை அணுகளவும் பிசகாமல் நடந்த இறைநேசச் செல்வர்கள், மஷhயிகுமார்கள் மற்றும் ஸாலிஹீன்கள் ரலியல்லாஹு அன்ஹும் அனைவர்கள் மீதும் என்றென்றும் ஸலவாத்தும், ஸலாமும் உண்டாவதாக! ஆமீன்.

அன்புள்ள முஃமின்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாத்தை மக்களுக்குப் போதித்து மக்களை நேர்வழிபடுத்திட வல்ல அல்லாஹ் ரஸூல்மார்களையும், நபிமார்களையும் இவ்வுலகிற்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தான். அவ்வாறு அவன் தேர்ந்தெடுக்கும்போது அவர்களின் வமிசங்கள்,குலங்களை சுத்தமானதாகவும், உயர்வானதாகவும் அமைத்து அதிலிருந்தே அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.

இவ்வுலகில் தோன்றிய நபிமார்கள், ரஸூல்மார்கள் தங்கள் தூதுத்துவத்தை தங்கள் சமூகத்தாரிடம் எடுத்துரைத்த போது, அந்த சமூகத்தாரில் அந்த கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு ஈமான் கொண்டவர்களும், அதை மறுத்து காபிராகிப் போனவர்களும் என்று இரு கூட்டத்தினர் இருந்தனர். நபிமார்களின் கொள்கையை மறுத்தவர்கள் அந்தக் கொள்கையை மறுத்து நடந்தார்களே தவிர, அந்த நபிமார்களை மிக மோசமாக இழிவுபடுத்தியதாக எங்கும் காணக் கிடைக்கவில்லை.

ஆனால் நமது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தில்; முனாபிக்குகள் எனும் நயவஞ்சகர் தோன்றி தங்களது நபியைப் பற்றி தரக்குறைவாகவும், அவர்கள் வமிசத்தையும், அவர்கள் தாய்,தந்தையரைப் பற்றியும் மிகவும் தரக்குறைவாக பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இந்த முனாபிக்குகளின் வழிவந்த வழிகேடர்களான இப்னு தைமிய்யா போன்றோரும் அவரைப் பின்பற்றி நடப்பவர்களும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தாய், தந்தையர் 'முஃமினானவர்கள் அல்ல'-'காபிர்கள்'' என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால்,இவ்வுலகில் தோன்றிய ரஸூல்மார்கள் மற்றும் நபிமார்கள் அனைவர்களும் பரிசுத்தமானவர்களே! முஃமினான தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே! இதுதான் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் உறுதியான கொள்கையாகும்.

இதற்கு ஆதாரமாக நமது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள் பெருமானார் அவர்களின் பெற்றோர்கள் முஃமினானவர்கள்தான் என்று குர்ஆன், ஹதீதுகளிலிருந்து ஆதாரங்களோடு நூல்களாக வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து மக்கள் தெளிவாக விளங்கும் வண்ணம் இதை தொகுத்து எழுதியுள்ளேன்.

இச் சிறுநூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதியில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தாய், தந்தையர் முஃமின்கள் என்பதற்கு ஆதாரங்களும், இரண்டாம் பகுதியில் வழிகேடர்களான முனாபிக்குகள் தொடுக்கும் ஆட்சேபணைகளுக்கு தெளிவான பதில்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

அல்லாஹ்  இந்நூலை படிப்பது கொண்டு நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது கொண்டுள்ள நேசம் மேன்மேலும் சிறந்தோங்க துணைபுரிவானாக! ஆமின்.

01-01-2010                                                                                                                                                       இவண்,

                                                                                                                                   ஷெய்குமார்களின் ஊழியன்,

                                                                                                                                        குளம் ஜமால் முஹம்மது.

 

 

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹு ஸுப்ஹானஹு அத்தஆலா மக்களை நல்வழிபடுத்துவதற்காக ரஸூல்மார்களையும், நபிமார்களையும் இவ்வுலகிற்கு அனுப்பி வந்துள்ளான். நபிமார்கள் அனுப்பப்படாத சமூகமே இவ்வுலகில் இல்லை என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளான். ஆனால், நபிமார்களின் வருகைகளுக்கு மத்தியில் கால வேறுபாடுகள் அதிகரிக்கும் போது அந்தந்த சமூகத்தார்கள் சத்திய மார்க்கத்தைப் பற்றி அறியாத அளவிற்கு சென்று விடுகின்றனர். இந்த கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்- சத்திய மார்க்கம் இதுவென்று அறியப்படாத காலகட்டத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறது என்று விரிவாக அலசிப் பார்த்தால் உண்மைகள் விளங்கத் தொடங்கும்.

ஃபத்ரத் காலம் என்றால் என்ன?

சத்திய சன்மார்க்கம் எதுவென்று அறியப்படாத காலத்தையே இது குறிக்கும். இதில் வாழ்ந்தவர்களை நமது மார்க்க அறிஞர்கள் மூன்று வகையினராக பிரிக்கிறார்கள்.

1. இறைவனுக்கு இணை வைக்காமல் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்:-

அ) இவர்களில் சிலர் முன்பிருந்த மார்க்கத்தில் தங்களை இணைத்திருக்கமாட்டார்கள். உதாரணமாக குஸ் இப்னு சாயிதா, ஜைத் இப்னு அம்ர் இப்னு நுஃபல்.

மார்க்கத் தீர்ப்பு:- இவர்கள் மறுமையில் தனி சமூகமாக எழுப்பப்படுவார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள், 'நிச்சயமாக ஜைத் இப்னு அம்ர் என்பவர் மறுமை நாளில் தனி சமூகமாக எழுப்பப்படுவார்' என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்:- ஹஜ்ரத் சயீத் இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நூல்:- அஹ்மது, ஹாகிம், தப்ரானி(கபீர்)

மேலும் பைஹகீ(தலாயில் நுபுவ்வா) எனும் கிரந்தத்தில் குஸ் இப்னு சாயிதாவை சிறந்தவர் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறிய ஹதீதுகள் இதற்கு சான்றாக உள்ளது.

ஆ) முன்பிருந்த மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். உதாரணமாக: நஜ்ரான் வாசிகள், வரகத் இப்னு நௌபல், உத்மான் இப்னு ஹுவய்ரிஃத் போன்றோர்.

ஸெய்யிதத்தினா கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வரகத் இப்னு நௌபல் அவர்களின் மறுமை நிலை பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, 'வெண்ணிற ஆடை அணிந்தவராக கனவில் அவரை நான் கண்டேன். அவர் நரகவாசியாக இருந்திருந்தால் வெண்மை ஆடை அவரிடம் காணப்பட்டிருக்காது' என்றார்கள்.

அறிவிப்பாளர்: ஹஜ்ரத் ஆயிஷh ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.
நூல்: ஹாகிம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு வஹீ வந்தபோது ஏற்பட்ட நிலையைப் பற்றி அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தங்கள் உறவினரான வரகத் இப்னு நௌபல் அவர்களிடம் கேட்டபோது, முந்தைய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் நபி இவர்கள் என்று கூறி அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்தவர் ஆவார்கள்.

 மார்க்கத் தீர்ப்பு:- இந்த கூட்டத்தினர் மறுமையில் முன்பிருந்த மார்க்கத்தை சார்தோராக கருதப்பட்டு அம்மார்க்கத்திற்குரிய சட்டதிட்டங்கள்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள்.

2. ஏகத்துவத்தைப் புறக்கணித்து இணைவைப்பில் ஈடுபட்டவர்கள்:

தங்கள் மனம்போன போக்கில் வாழ்ந்து இணை-வைப்பில் ஈடுபட்டு அல்லாஹ்விற்கு மாறு செய்தவர்கள்.

மார்க்கத் தீர்ப்பு:- இவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்குரித்தானவர்கள்.

3. ஏகத்துவக் கொள்கையிலும், இணை வைப்பிலும் ஈடுபடாதவர்கள்:-

இவர்கள் இணைவைப்பிலும், அநியாயம், அழிச்சாட்டியங்களிலும் ஈடுபடாதவர்கள். மற்றும் எந்த ஒரு நபியைப் பற்றியும் அறியாதவர்கள். அவ்வாறு அறிந்திருந்தாலும் அதை மறுக்காதவர்கள்.

மார்க்கத் தீர்ப்பு:- இக் கூட்டத்தினர்களில் ஒருவர் மரணித்துவிட்டால் இவர்களுக்கு மறுமைநாளில் தண்டனை கிடையாது.இவர்கள் ஜெயம் பெற்றவர்கள் என்று மார்க்க சட்ட நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

ஃபத்ரத் காலம் பற்றி அல்-குர்ஆன்:-


وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّى نَبْعَثَ رَسُولاً

1.'நாம் அவர்களுக்கு மத்தியில் தூதரை அனுப்பாதவரை அச் சமூகத்தாரை (நாம்) தண்டிப்போராயில்லை.'
-அல்-குர்ஆன் 17:15


وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرَى حَتَّى يَبْعَثَ فِي أُمِّهَا رَسُولًا يَتْلُو عَلَيْهِمْ آيَاتِنَا

2. 'உம்முடைய இறைவன் எந்த ஊர்களையும் அவற்றின் தலைநகருக்கு ஒரு தூதரை அனுப்பி, அவர்களுக்கு நம்முடைய வசனங்களை அவர் ஓதிக் காண்பிக்கும் வரை – அழிப்பவனாக இல்லை.'
-அல்-குர்ஆன் 28:59

وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ .
ذِكْرَى وَمَا كُنَّا ظَالِمِينَ

3. எந்த ஊ(ரா)ரையும்- அதற்கு அச்சமூட்டி எச்சரிக்கிறவர்கள் இல்லாமல்- நாம் அழித்ததில்லை. மேலும் நாம் அநியாயம் செய்பவராகவுமில்லை.
                           -அல்-குர்ஆன் 26:208,209.

وَلَوْ أَنَّا أَهْلَكْنَاهُم بِعَذَابٍ مِّن قَبْلِهِ لَقَالُوا رَبَّنَا لَوْلَا أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًا فَنَتَّبِعَ آيَاتِكَ مِن قَبْلِ أَن نَّذِلَّ وَنَخْزَى

4. (நம் தூதராகிய) அவருக்க முன்பே நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு அழித்திருந்தால், 'எங்களுடைய இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? அவ்வாறிருந்தால், நாங்கள் தாழ்மையடைவதற்கும், இழிவடைவதற்கும் முன்னரே உன்னுடைய வசனங்களைப் பின்பற்றியிருப்போமே' என்று உறுதியாக அவர்கள் கூறியிருப்பார்கள்.
-அல்-குர்ஆன் 20:134

மேற்கூறிய திருவசனங்கள் நபிமார்கள் அனுப்பப்படாத கால நிலையில் வாழ்ந்தவர்களைப் பற்றியும், அவர்களுக்கு நியாயத் தீர்ப்பின்போது அல்லாஹ் அளிக்கக் கூடிய தீர்ப்பைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

இமாமுனா ஷhபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மத்ஹபின் மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாவது: 'ஒருவன் நபித்துவத்திற்கு முன்போ(அதாவது இஸ்லாம் வெளியாகும் முன்போ) அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படியான (தஃவா) அழைப்பு அவனை அடையும் முன்போ அவன் மரணித்துவிட்டால் அவனை ஈடேற்றம் பெற்றவனாகவே கணிக்கப் பெறும். இதே நிலையைத்தான் மற்ற இமாhம்களும் கூறுகின்றனர். இது ஃபத்ரத் காலத்தில் வாழ்ந்த மூன்றாவது பிரிவினரைப் பற்றிக் குறிப்பிடுவதாகும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்களின் காலம்:

பெருமானாரின் பெற்றோரின் வரலாறும், அவர்களின் நிலையும் மிகத் தெளிவானதாகும். இவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் இவர்களுக்கு முந்தைய நபியான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திற்கும் சுமார் 570 வருடங்களுக்கும் மேல் உள்ளது. இது நீண்ட இடைவெளியாகும்.

அரேபியர்களினிடத்தில் அனுப்பப்பட்ட நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், இவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் இடையே சுமார் 3000 வருடங்கள் இடைவெளி இருந்தது. இது மிகமிக நீண்ட இடைவெளியாகும்.

இக்காலகட்டத்தில் சத்திய சன்மார்க்க சட்டதிட்டங்களை அறிந்தவர்கள், அதை முறையாக பின்பற்றுபவர்கள் இலைமறை காயாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் தவிர யாரும் இருக்கவில்லை. இத்தகையவர்களைத் தெரிந்தவர்கள் மிகவும் சொற்பமானவர்களே!

இன்னும்,இக்கால மக்காவாசிகள் முந்தைய நபிமார்கள் பற்றிய எந்த செய்தியையும் அறிந்திருக்கவில்லை. முஷ்ரிக்குகளுக்கும் இதுபற்றிய அறிவு இல்லை என்பது, 'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவத்தை எடுத்துரைத்து தன்னை நபியாக ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் சொன்னபோது, அம்மக்கள் எங்கள் மூதாதையர் சொல்லாத ஒன்றையல்லவா இவர் சொல்கிறார் என்று ஏற்க மறுத்துவிட்டதாக அல்குர்ஆனும், ஹதீதுகளும் சான்று பகர்கின்றன. இக்காலத்தில்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் எவ்வித அட்டூழியங்களோ, அழிச்சாட்டியங்களோ செய்ததாகவும், இணை வைப்பில் ஈடுபட்டதாகவும் எவ்வித வரலாறும், ஹதீதுகளும் கூறவில்லை. மறுப்பாளர்கள் இதற்குரிய ஆதாரங்களை இன்றுவரை கொண்டுவரவில்லை. இனி கொண்டும் வரமுடியாது. ஆதாரம் இருந்தால்தானே கொண்டு வருவதற்கு? அவர்கள் கூறும் வெற்றுக் கூற்றுகளுக்கு உரிய பதிலை ஆதாரத்துடன் அடுத்த பாகத்தில் இன்ஷாஅல்லாஹ் விளக்குவோம்.

ஆக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் ஃபத்ரத் காலத்தில் வாழ்ந்த மூன்றாவது கூட்டத்தினர்களான ஜெயம் பெற்ற கூட்டத்தினர்களைச் சார்ந்தவர்கள் என்பது புலனாகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

உயர்ந்த குலத்தில், பரிசுத்த வமிசத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்:

நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் மிக உயர்ந்த குலத்தில், பரிசுத்தமான வமிசத்தில் தேர்ந்தெடுத்து அனுப்பினான். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறும்போது,


الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ. وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ .

'நீங்கள் நிற்கும்போது உங்களையும் (இறைவனை) வணங்குவோர்களிடையே நீங்கள் புரண்டு வந்ததையும் அ(வ்விறை)வன் பார்க்கிறான்.
 

-அல்-குர்ஆன்: 26:218,219.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறும்போது:

1. நான் நபியாக அனுப்பப்படும் வரை ஆதமுடைய மக்களில் மிகச் சிறந்தோர் மத்தியிலே நான் காலங்காலமாக அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தேன்.
 

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல்: புகாரி.

2.நான் சிறந்தோர் வழியாகவே வந்துள்ளேன்.
 

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூற்கள்: தப்ரானீ(கபீர்), ஹாகிம், பைஹகீ(தலாயில் நுபுவ்வா)

3. மக்கள் இருபிரிவினராக பிரிகின்றபோது அவற்றில் சிறந்த பிரிவில் என்னை இறைவன் அமைத்தான்.
 

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல்: பைஹகீ(தலாயில் நுபுவ்வா)

4.அல்லாஹ் படைப்பினங்களை சிருஷ;டித்தபோது அதில் என்னையே சிறந்த சிருஷ;டியாகவும்(அந்த படைப்பில்) வமிசாவழியினரை அமைக்கையில் என்னையே சிறந்தவராகவும், அந்த வமிசாவழியில் ஆத்மாக்களை உருவாக்கையில் என்னையே சிறந்த ஆத்மாவாகவும், அந்த ஆத்மாக்களில் குடும்பத்தினரை ஏற்படுத்தும்போது அதில் என்னையே சிறந்த குடும்பமாகவும் ஆக்கினான்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்பாஸ் இப்னு அப்துல்முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல்: திர்மிதீ, பைஹகீ.

5. அறியாமை காலத்து திருமண வழிமுறையில் நான் பிறக்கவில்லை. இஸ்லாமிய திருமணத்தைப்போல் அமைந்த திருமணத்தின் வாயிலாகவே நான் பிறந்தேன்.
 

அறிவிப்பாளர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூற்கள்: பைஹகீ, தப்ரானீ(கபீர்), இப்னு அஸாகிர்.

6. ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், சூரியன் உதிக்குமிடத்திலிருந்து சூரியன் மறையும் இடம்வரை மண்ணுலகம் முழுவதையும் புரட்டிப் பார்த்தேன். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைவிட சிறந்த மனிதரை நான் பெற்றுக் கொள்ளவில்லை. பனூ ஹாஷpம் குடும்பத்தைவிட வேறு சிறந்த குடும்பத்தினரை நான் பார்க்கவில்லை.
 

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷh ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.
நூற்கள்: தப்ரானீ(அவ்சத்), பைஹகீ(தலாயில் நுபுவ்வா)

7. உங்களில் நான் சிறந்தவன். உங்கள் தந்தைமார்களில் எனது தந்தை சிறந்தவர்.
 

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல்: பைஹகீ(தலாயில் நுபுவ்வா)

8. நான் உயர்ந்த கூட்டத்திலிருந்தே ஆதமுடைய மக்களில் புரட்டிக் கொண்டு வரப்பட்டேன்.
 

நூல்: மிஷ்காத் ஷரீஃப்.

9. ஆதமுடைய பிள்ளைகளில் தலைமுறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாக நான் அனுப்பப்பட்டேன்.
 

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல்: புகாரி.

மேற்காணும் ஹதீதுகள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்ப சிறப்பையும், அவர்களின் தலைமுறை சிறப்பையும் தெளிவாக விளக்குவதிலிருந்து அவர்களின் பெற்றோர்கள் மிகச் சிறந்த வர்கள் என்றும், முஃமின்கள் என்றும் சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகிறது.
 
 இவ்வளவு தெளிவான ஆதாரங்கள், சான்றுகளை எடுத்துக் கூறியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் சிலர் அவர்களின் பெற்றோர்களை முஃமின்கள் என்று சொல்வதற்கு ஆட்சேபணை தெரிவிக்கின்றனர். அதற்கு அவர்கள் தரும் ஆதாரங்களையும் அதற்குரிய தெளிவான பதில்களையும் இனி பார்ப்போம்.

பகுதி 2

ஆட்சேபணைகளும், தெளிவான பதில்களும்.

ஆட்சேபணை-1

நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் நாளில் (மறுமையில்) ஃபத்ரத்தில் மரணித்தவன், பைத்தியம் பிடித்ததில் மரணித்தவன், பிறந்தவுடன் மரணித்த குழந்தைகள், வயது முதிர்ந்து மரணிக்கும் தருவாயில் இஸ்லாம் பற்றி தெரிந்தவன் ஆகியோர் இறை சமூகம் கொண்டு வரப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள். அப்பரிசோதனையில் இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களே ஜெயம் பெறுவார்கள் என்றும், ஏனையோர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டு நரகம் செல்வர் என்றும் ஹதீதுகள் தெளிவானதாக இருக்க, ஃபத்ரத்தில் மரணித்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி     வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் எங்ஙனம் சுவர்க்கம் செல்வார்கள்? மேலும் அவர்கள் அந்த பரிசோதனையில் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாகக் கூற முடியுமா?

தெளிவான பதில்:

இவ்வுலகை உய்விக்க வந்த உத்தமத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நல்லெண்ணம் வைப்பதோடு மட்டுமில்லாமல், அவர்களைக் கண்ணியப்படுத்தவும் வேண்டும். சிறிதளவேனும் கண்ணியக் குறைவாக நடந்தால் அவனது ஈமான் பறிபோய் விடும் என்று அல்லாஹ்வின் திருமறையிலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி    வஸல்லம் அவர்களின் ஹதீதுகளிலும் காணக் கிடைக்கிறது.

இந்நிலையில், சிறந்த வமிசத்திலும், ஸுஜூது செய்பவர்களின் வழியாகவும் (பிறந்த) வந்துதித்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் முஃமின்கள் இல்லை என்று சொல்வது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் அவர்களைக் கண்ணியப்படுத்துவது ஆகுமா? இழிவுபடுத்துவது ஆகுமா?

பெருமானர் அவர்களின் பெற்றோர்கள் ஃபத்ரத் காலத்தில் வாழ்ந்தவர்கள்தான். அந்த காலத்தில் வாழ்ந்த எவ்வித அநியாயம், அழிச்சாட்டியங்கள் செய்யாத மற்றும் இணைவைப்பில் ஈடுபடாத ஜெயம் பெற்ற மூன்றாம் பிரிவினர்களைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் எவ்வித கேள்வி கணக்குமின்றி சுவர்க்கம் செல்வார்கள் என்று நமது முன்னோர்களான இமாம்கள், நாதாக்கள் சொல்லியுள்ளார்கள்.

ஸெய்யிதினா அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்:

ஸுஜூது செய்பவர்களிலிருந்து புரண்டுவந்த இவர்கள், சிறந்த வமிசத்தில் வந்தவர்கள் என்று ஹதீது, ஆயத்துக்கள் மூலம் விளங்குகிறது. உங்கள் தந்தைமார்களைவிட எனது தந்தை மிகவும் சிறந்தவர் என்ற நபிமொழி அவர்களின் அந்தஸ்தை தெளிவாக விளக்குகிறது. இவ்வாறிருக்க ஈடேற்றம் பெற்ற இவர்கள் எவ்வித கேள்வியும் இன்றி சொர்க்கமே செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஸெய்யிதத்தினா ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்:

உத்தம திருநபியை தமது வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த அன்னையான இவர்கள் கூறுகிறார்கள்: 'நான் கர்ப்பிணியாக இருந்தபோது என்னிடம் கூறப்பட்டது, நிச்சயமாக நீங்கள் இந்த சமூகத்தின் தலைவரை சுமந்துள்ளீர்கள். அவர் இம்மண்ணுலகில் பிறந்தவுடன் பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்து ஏக இறைவனிடம் இக் குழந்தைக்குப் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறுங்கள்.
அவர் பிறக்கும்போது ஒரு பேரொளி வெளிப்படும். அப்பேரொளியின் பிரகாசம் சிரியா நாட்டின் புஸ்ரா கோட்டையை நிரப்பிவிடும். இதுவே, அவர் இந்த சமுதாயத்தின் தலைவர் என்பதற்குரிய அத்தாட்சியாகும்'என்று.
 

அறிவிப்பாளர்: ஹழ்ரத் இப்னு இஸ்ஹாக் ரலியல்லாஹு அன்ஹு
 

நூல்: பைஹகீ(தலாயில் நுபுவ்வா)
 

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நவின்றார்கள், ' திண்ணமாக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் களிமண்ணில் பிணைந்திருந்தபோதே நான் இறையடியாராகவும், இறைத்தூதராகவும் இருந்தேன். அதைப்பற்றிய செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்:
 

1) எனது பாட்டனார் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை.
2) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னைப் பற்றி வழங்கிய நற்செய்தி.
3) எனது தாயார் கண்ட கனவு ஆகியவற்றின் வெளிப்பாடாக நானுள்ளேன்.

இறைத்தூதர் அவர்களை ஈன்றெடுத்த சமயம் அவர்களின் தாயார் ஒரு பேரொளியைப் பார்த்தார்கள். அதன் மூலம் சிரியா நாட்டு கோட்டைகளெல்லாம் பிரகாசித்தன.

மற்ற நபிமார்களை ஈன்றெடுக்கும் போது அவர்களின் தாய்மார்களும் இவ்வாறே பார்த்தார்கள்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் இர்பாழ் இப்னு சாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூற்கள்: அஹ்மத், ஹாகிம், தப்ரானி(கபீர்), பைஹகீ(தலாயில் நுபுவ்வா)

இவ்வாறே அனைத்து நபிமார்களின் தாயாருக்கும் அற்புதங்கள் நிகழ்ந்தன. இதைத் திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது. ஸூரா மாயிதா வசனம் 75 நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் பற்றியும் , ஸூரா ஹூது வசனம் 73 நபி இ;ஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் பற்றியும், ஸூரா அல் கஸஸ் வசனம் 7 மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் பற்றியும், ஸூரா இப்றாஹிம் வசனம் 41 நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் பற்றியும், ஸூரா நூஹ் வசனம் 28 நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் பற்றியும் அவர்கள் நல்லடியார்கள் என்று மிகத் தெளிவாக விளக்குகிறது.

இவ்வாறு இறைவனின் நல்லடியாராகவும், இறைநேசச் செல்வியாகவும் வாழ்ந்த உத்தமியான அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் எவ்வாறு நரகவாதியாக ஆக முடியும்? அவர்கள் எவ்வித கேள்வியுமின்றி சுவர்க்கவாசியாக சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்.

இதைப் பற்றி இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் குறிப்பிடுகையில், 'மறுமைநாளில் மகாமே மஹ்மூத் எனும் புகழுக்குரிய இடத்தில் நானிருக்கும்போது என் தாய்தந்தைக்காக என்னிறைவனிடம் நான் கேட்பேன். (நான் கேட்டதை) அவன் எனக்கு வழங்குவான்.

அறிவிப்பாளர்: ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல்: ஹழ்ரத் ஹாகிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முஸ்தரக் என்ற கிரந்தம்.
 

இதற்கு நமது பெரியோர்கள், தன் தாய்,தந்தைக்காக கேட்பேன் என்று நபிகளார் கூறியது, அவர்களை சுவர்க்கத்தில் தம்முடன் உயர்ந்த சுவர்க்கத்தில் இருக்கச் செய்யவே அன்றி வேறில்லை என்று விளக்கமளித்திருக்கிறார்கள்.
 

மேலும் எனது ரப்பிடம் என் குடும்பத்தில் எவரையும் நரகில் நுழைப்பிக்கக் கூடாது என்று கேட்டேன். அதனை அவன் ஏற்றுக் கொண்டான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீது இமாம் இப்னு ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தப்ஸீரில் காணக் கிடைக்கிறது.

இதே ஹதீதை ஹழ்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, அல்லாமா அபூஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் ஷரஹுன் நுபுவ்வா எனும் நூலிலும் பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் புகாரி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புகாரி எனும் கிரந்தத்தில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பிறந்த செய்தியைக் கேள்விபட்ட சந்தோஷத்தில் அவர்களது பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் தன் சுட்டுவிரலைக் காட்டி ஒரு அடிமையை விடுதலை செய்ததால் அவன் நரகில் கடும் வேதனை படும்போது கூட, திங்கட்கிழமை தோறும் அபூலஹபிற்கு அவன் சுட்டிக்காட்டிய விரலிலிருந்து அமுதமான பால் சுரந்து அதன் மூலம் அவன் தாகம் தீர்த்துக் கொள்கிறான் என்ற செய்தியை நபிகளார் சொல்லி இருக்கிறார்கள்.

ஆகவே,ஒரு காபிருக்கு நபிகளாரின் மீலாதை கொண்டாடியதற்காக நரகில் வேதனை குறைக்கப்படுகிறது என்றால், உத்தம திருநபியை பெற்றெடுத்த பெற்றோர்களை எங்ஙனம் நரகம் தீண்டும்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?

ஆக, இந்த அறிவுக் குருடர்கள் தெரிவித்த முதல் ஆட்சேபணை எவ்வித முகாந்திரமும், ஆதாரமும் அற்றது என்று இதன் மூலம் தௌ;ளத் தெளிவாக விளங்க வருகிறது.

ஆட்சேபணை 2:

ஸுஜூது செய்பவர்களிலிருந்து புரட்டிக் கொண்டு வரப்பட்டதாக சொல்கிற நீங்கள், நபிகளாரின் வமிசாவழியின் முன்னோரான நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை 'ஆஸர்' ஒரு சிலை வணக்கம் செய்பவராகவே இருந்தார் என்று குர்ஆன், ஹதீதுகள் மற்றும் வரலாறுகள் தெளிவாகக் கூறியிருக்கிறதே! இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

தெளிவான பதில்:

முதலில் 'ஆஸர்' என்பவர் யார்? என்று தெளிவாக விளங்க வேண்டும். ஆஸர் என்பவர் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை அல்ல. அவர்களின் பெரிய தந்தையே! இதுபற்றி குர்ஆனில் வந்துள்ள ஆயத்தில்,

وَاِذۡ قَالَ اِبۡرٰهِيۡمُ لِاَبِيۡهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصۡنَامًا اٰلِهَةً ‌ ۚ اِنِّىۡۤ اَرٰٮكَ وَقَوۡمَكَ فِىۡ ضَلٰلٍ مُّبِيۡنٍ‏

இப்றாஹிம் தம் தந்தை ஆஸரிடம் சிலைகளை தெய்வமாக நீர் ஆக்கிக் கொண்டீரா? உம்மையும், உம்முடைய சமூகத்தினரையும் பகிரங்கமான பழிகேட்டில் இருப்பதை நிச்சயமாக நான் காண்கிறேன்'என்று கூறிய நேரத்தை(நினைவு கூறுவீராக!)                      -அல்-குர்ஆன் 6:74
 

இவ்வசனத்தில் தந்தை என்று கூறப்பட்டிருக்கும் சொல்லான 'அபி' என்ற அரபி சொல்லிற்கு தந்தை என்ற அர்த்தம் இருப்பது போல் சிறிய தந்தை, பெரிய தந்தை, பாட்டனார் என்ற அர்த்தங்களும் அரபியில் உண்டு. எனவே இதில் கூறப்பட்டிருக்கும் ஆஸர் இப்றாஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெரிய தந்தையையே குறிக்கும்.

அதேபோல் குர்ஆனில், இதே வார்த்தைக்கு தந்தை என்ற பொருளில்லாமல் மற்ற பொருளோடு வரும் ஆயத்துக்களும் உண்டு. உதாரணமாக,

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, தன் பிள்ளைகளிடம் எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்? எனக் கேட்டபோது, நீங்கள் சாட்சியாளர்களாக இருந்தீர்களா? (அப்பிள்ளைகள்) கூறினார்கள்: உங்கள் இறைவனும் உங்கள் தந்தையரான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரேயொரு இறைவனையே வணங்குவோம். மேலம் நாங்கள் அவனுக்கே (முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்' எனக் கூறினர்.
 

-அல்-குர்ஆன் 2:133

இதில் 'அபி' என்ற சொல் தந்தை மற்றும் மேற்கூறப்பட்ட அனைத்து பொருள்களிலும் பொருந்துவதாக வந்துள்ளது. இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை 'தாரஃக்' என்பவர்கள் ஆவார்கள். இவர்கள் தங்கள் 75-ம் வயதில் இப்றாஹிம் நபி அவர்களை ஈன்றெடுத்தனர். இவர்களின் மறைவிற்குப்பின் ஆஸரினால் வளர்க்கப்பட்டார்கள். எனவே ஆஸரையே தந்தை என்று அழைத்து வந்தார்கள். இதையே இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
 

நூல்: அல் பித்யா வன் நகாயா. வால்யூம் 1, பக்கம் 139.

ஆசிரியர்: இமாம் இப்னு கதீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

ஆகவே இப்றாஹிம் நபி அவர்களின் தந்தை தாரஃக் என்பவர்களே என்பது,


الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ. وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ .

இறைவனை வணங்குவோர்களிடையே நீங்கள் புரட்டிக் கொண்டு வரப்பட்டீர்கள்'                                        –

-அல்-குர்ஆன் 26:218,219.
 

என்ற திருவசனத்திற்கும்,


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ

'உறுதியாக இணை-வைப்போரெல்லாம் அசுத்தமானவர்களே'
-அல்-குர்ஆன் 9:28

என்ற ஆயத்திற்கும் மாற்றமில்லாமல் அமைந்து விடுகிறது. இதுவே உறுதியான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையாகும்.

இப்றாஹிம் நபி அவர்கள் தம் தந்தைக்காக பாவமன்னிப்பு தேடுதல்:


وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلاَّ عَن مَّوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلّهِ تَبَرَّأَ مِنْهُ

இப்றாஹிம் நபி அவர்கள் தம் தந்தைக்காக பிழை பொறுக்கத் தேடியது ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை, அதனை அவருக்கு அவர் வாக்களித்திருந்தார். நிச்சயமாக அவர் அல்லாஹ்விற்கு விரோதி என்று தெளிவான போது, அதை விட்டும் அவர் ஒதுங்கி கொண்டார்.
-அல்-குர்ஆன் 9:114

ஆஸர் ஷிர்க்கில் மரணித்தார் என்று தெரிந்ததும் அவருக்காக பாவமன்னிப்பு கேட்பதை விட்டுவிட்டார்கள் இப்றாஹிம் நபி அவர்கள்.

பின்னர், இறைக் கட்டளை பிறகாரம் ஷாமிற்கு பயணமானார்கள். அதன்பின் மிஸ்ரு சென்று விட்டு மக்கா திரும்பினார்கள். அங்கு இறையில்லமான கஃபாவை எழுப்பியபின் செய்த பிரார்த்தனையில் தம் தாய்,தந்தைக்காக பாவமன்னிப்பு தேடியதும் ஒன்றாகும்.


رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய்,தந்தைக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பு வழங்குவாயாக!              -அல்-குர்ஆன் 14:41

இறைவனிடம் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் தந்தைக்கு பாவமன்னிப்பு கேட்பதை விட்டுவிட்டார்கள் என்று கூறிய அல்லாஹ்(அல்குர்ஆன் 9:114), தம் பெற்றோருக்காக பாவமன்னிப்பு தேடினார்கள் (அல்-குர்ஆன் 14:41) என்று கூறும்போது, அவ்விருவரும் வேறானவர்கள் என்று அறிய முடிகிறது.

மேலும், பாவமன்னிப்பு கேட்பதை நிறுத்திவிட்டார்கள் என்ற வசனம் இப்றாஹிம் நபி அவர்களின் ஆரம்ப கட்டத்திலும், பாவமன்னிப்பு கேட்டதற்கான இறைவசனம் திரு கஃபாவை கட்டியெழுப்பியபின் அவர்களது இறுதி காலத்தில் நடைபெற்றதுமாகும். ஆகவே உறுதியாக நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை ஆஸர் இல்லை என்பது உறுதியாகிறது.

இவ்வாறிருக்க இவர்கள் ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என்றால், குர்ஆனையும், ஹதீதையும் சரிவர விளங்காததுதான் காரணம். ஆக இந்த அறைகுறை மதியாளர்களின் ஆட்சேபணை செயலிழந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

ஆட்சேபணை 3

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் தாய், தந்தையரை கப்ரிலிருந்து எழுப்பி கலிமா சொல்லிக் கொடுத்து இஸ்லாமாக்கினார்கள் என்ற கூற்று, அவர்களிருவரும் காபிர்கள் என்பதால்தான் அவ்வாறு செய்தார்கள் என்று தெரிகிறல்லவா?

தெளிவான பதில்:

திண்ணமாக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் பெற்றோரை உயிர்த்தெழ வைக்குமாறு இறைவனிடம் கெட்டார்கள். அவ்விருவருக்கும் இறைவன் உயிர் கொடுத்தான். நபிகளார் அவர்களை அவ்விருவரும் ஈமான் கொண்டார்கள். பிறகு இறைவன் அவ்விருவரையும் மரணிக்கச் செய்துவிட்டான்.
 

அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷh ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.

நூற்கள்: லஆலீ மஸ்னூஆ, கஸ்புல் கஃபா.

இதுபற்றி ஹதீதுகள் ஹழ்ரத் இப்னு ஷhஹின் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 'அந்நாஸிக் வல் மன்ஸூக்' என்ற நூலுpலும், ஹழ்ரத் கதீப் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 'அஸ்ஸாபிக் வல்லாஹிக்' என்ற நூலிலும், இமாம் தாரகுத்னீ, ஹழ்ரத் இப்னு அஸாகிர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் 'கராயிப் மாலிக்' என்ற நூலிலும் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீதுகள் பற்றி தெளிவுபடுத்த இமாம் சுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனி நூலையே கோர்வை செய்துள்ளார்கள். ஹதீதுக்கலை ஆய்வாளர்கள் இந்த ஹதீதுகள் மௌழூஃ(பொய்யாக இட்டுக் கட்டப்பட்டது) அல்ல என்கிறார்கள்.

நபிகளார் தங்கள் பெற்றோர்களுக்கு கலிமா சொல்லி கொடுத்தார்கள் என்பது, அவர்கள் காபிராக மரணித்தார்கள் அதனால் அவர்களை இஸ்லாமாக்க கலிமா சொல்லிக் கொடுத்தார்கள் என்பதற்காக அல்ல. மாறாக, அல்லாஹ்வினால் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி,


كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ

'நீங்கள் மிகச் சிறந்த சமுதாயமாக உள்ளீர்கள்'
 

– அல்குர்ஆன் 3:110

மிகச் சிறந்த உம்மத்தான உம்மத்தே முஹம்மதிய்யாவில் அவர்களை இணைத்துக் கொள்ளவே கலிமா சொல்லி கொடுத்து தங்களை ஈமான் கொள்ளச் செய்தார்கள். ஆகவே பெருமானாரின் பெற்றோர்கள் நபிகளாரை ரஸூலாக ஏற்றுக் கொண்ட ஸஹாபிகள் ஆவார்கள்.

மரணித்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா? என்று கேட்கப்பட்டால், பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒருவன் கொல்லப்பட்ட பிறகு அவனுக்கு உயிர் கொடுக்கப்பட்டு கொலைகாரன் யாரென்று அறிவித்த செய்தி (அல்-குர்ஆன்-2:73)யும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்தவர்களை உயிர்த்தெழச் செய்தார்கள் (அல்-குர்ஆன்-3:49) என்ற செய்தியையும் மறுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுவிடும். அல்லாஹ் காப்பாற்றுவானாக!

தப்ஸீர் ரூஹுல் பயானில், யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தார் இறைவனின் வேதனையைக் கண்டு ஈமான் கொண்டபோது, அவர்களது ஈமான் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறப்பட்டதை திருமறையும் எடுத்தியம்புகிறது. மற்ற நபிமார்களுக்கெல்லாம் இந்த தனித்தன்மைகள் கொடுக்கப்பட்டிருக்கும்போது, அனைத்து நபிமார்களிலும் சிறந்தவர்களான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த தனிச் சிறப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கிழக்கேயிருந்து மேற்கு திசையை நோக்கி அஸ்தமித்த சூரியனை திரும்பவும் உதிக்கச் செய்து 'களா'வாகிய(நேரம் தவறிய) தொழுகையை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு திரும்ப பெற்றுக் கொடுத்தது (ஆதாரம்: தப்ரானீ(கபீர்), இப்னு அஸாகிர், ஷவ்கானீ(ஃபவாயித் மஜ்மூஆ) சாத்தியமெனில், தமது அருமைப் பெற்றோர்களை உயிர்ப்பித்து தங்கள் உம்மத்தில் சேர்த்துக் கொண்டதும் சாத்தியமாகும்.
 

ஆக, இந்த ஆட்சேபணையும் வீணானது என்பது தெளிவாகிறது.

ஆட்சேபணை 4

தம் தாயாருக்காக பாவமன்னிப்பு கேட்க இறைவனிடம் பெருமானார் அனுமதி கேட்டபோது அல்லாஹ் மறுத்துவிட்டான். அவர்கள் காபிர்களாக இருந்ததால்தானே அல்லாஹ் மறுத்தான்.

தெளிவான பதில்:
 

1) என் தாயாருக்கு பாவமன்னிப்பு தேடுவதற்காக எனதிறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி தரவில்லை. எனது தாயாரின் கப்ரை தரிசிக்க அனுமதி வேண்டினேன். இறைவன் எனக்கு அனுமதி தந்தான்.

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
 

நூல்: முஸ்லிம்

நபியே! உமது தாயார் அவர்களுக்கு பாவமன்னிப்புத் தேட வேண்டாம். அதற்கு அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் ஜெயம் பெற்ற சுவர்க்கவாசிகள் என்பதால் அவன் அனுமதி கொடுக்கவில்லை.
 

ஆதாரம்: தப்ஸீர் மித்ரக், தப்ஸீர் ஜமல்.

ஆனால் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய அனுமதியளித்திருக்கிறான் எனும்போது அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உண்மை முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பது தெளிவாக விளங்கும். ஏனெனில்,


وَلاَ تَقُمْ عَلَىَ قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُواْ بِاللّهِ وَرَسُولِهِ

(நபியே அவர்களில்) யாருடைய கப்ருக்கு அருகிலும் நிற்காதீர்கள்! நிச்சயமாக அவர்கள் இறைவனையும், அவன் திருத்தூதரையும் மறுத்துவிட்டார்கள்.
 

-அல்-குர்ஆன் 9:84

என்ற ஆயத்து இறைமறுப்பாளர்களின் கப்ருக்கருகில் கூட நிற்க அனுமதிக்கவில்லை. ஆனால் ஆமினா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் முஃமினாக இருந்ததால்தான் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

2) ஒரு கிராமவாசி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் வந்து 'யாரஸூலல்லாஹ்! எனது தந்தை எங்கே? எனக் கேட்க, அவர்கள் 'அவர் நரகத்திலுள்ளார்' என்றதும், 'உங்கள் தந்தை எங்கே? என்று அந்த கிராமவாசி கேட்டதும், 'எனது தந்தையும், உமது தந்தையும் நரகில் உள்ளனர்' என்று நபிகளார் கூறினார்கள். இதை ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாக முஸ்லிம், அபூதாவூது கிரந்தங்களில் காணக்கிடக்கிறதே! என்று கேட்கப்பட்டால்,

இந்த அறிவிப்பில் வரும் அறிவிப்பாளர்கள் ஒன்றுபடவில்லை. இதனை அறிவிப்பு செய்பவரான ஹம்மாது பின் ஸலமா அவர்கள் ஹழ்ரத் தாபித், ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறுகின்றனர்.

இவரை(ஹம்மாதை)ப் பற்றியும், அவர் அறிவிப்புகள் பற்றியும் பலவிதமான கருத்துக்களை காண முடிகிறது. இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இவர் மனன சக்தி அற்றவராக இருந்ததின் காரணமாக இவரின் அறிவிப்புகளுக்கு தமது நூலில் இடமளிக்கவில்லை.
 

நூல்: தஹ்ஃதீபுத் தஹ்ஃதீப்.

ஆனால் இதே ஹதீதை முஃமர் அவர்கள் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து கிடைத்ததாகக் கூறுகின்றார். இந்த ஹதீதில் எனதும், உனதும் தகப்பன் நரகிலே எனக் கூறியதாக குறிப்பிடவேயில்லை. மாறாக, பொதுவாக காபிர்களின் கபுறருகில் செல்வீர்களாயின் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யுங்கள் எனக் கூறியதாகவே குறிப்பிடுகிறார்.

ஹழ்ரத் முஃமர் அவர்களை ஏற்றுக் கொண்டதாலேயே இமாம் புகாரி அவர்களும், இமாம் முஸ்லிம் போன்றோரும் தமது கிரந்தங்களில் இவ்வதீதுகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த முஃமர் அவர்களின் கூற்றுக்கு ஒத்ததாக கிடைத்த மற்றொரு ஹதீது, ஒரு கிராமவாசி நபிகளார் அவர்களின் திருச்சபைக்கு ஆஜராகி என் தந்தை எங்கே? எனக் கேட்டார். பெருமானார் அவர்கள் 'நரகில்' என்றார்கள். மீண்டும் அவ்வரபி உங்கள் தகப்பன் எங்கே? எனக் கேட்க, நீ காபிர்களின் கப்ரருகில் சென்றால் நரகிற்கு சொந்தமானவர்கள் எனக் கூறும்படியாக சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூற்கள்: தப்ரானீ, பைஹகீ. 

அக் கிராமவாசி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகவும் இமாம் பைஹகீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
 

ஒரு வாதத்திற்காக  நபிமொழியில் கூறப்பட்டுள்ள 'இன்ன அபீ' என் தந்தையும் என்று கூறியதாக இருந்தாலும்;, அது அபூலஹப்- பெருமானாரின் பெரிய தந்தை தானே தவிர அப்துல்லாஹ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அல்ல. ஏனெனில் பெருமானார் அவர்கள் அபூலஹபையும் 'அபீ' என்றே அழைத்து வந்துள்ளனர்.

நூல்: நஜாது ஆபாயின்னபிய்யில் அத்ஹார் பக்கம் 136.
 

எவ்வாறு நோக்கினும் இவர்களின் ஆட்சேபணைகள் வீணானதாகியே விடுகிறது.

ஆட்சேபணை 5

மத்ஹபுக்குரிய இமாமான இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஃபிக்ஹுல் அக்பர் எனும் நூலில் பெருமானாரின் பெற்றோர்கள் குப்ரில் மரணமடைந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்களே! என்றால்,

தெளிவான பதில்:

ஃபிக்ஹுல் அக்பர் எனும் நூலில் வழிகேடர்கள் இடைச் சொருகல்கள் நிறைய செய்திருக்கிறார்கள். அதில் பெருமானாரின் பெற்றோர்கள் குப்ரில் மரணித்தார்கள் என்ற வார்த்தையும் ஒன்று. அசலான பிக்ஹுல் அக்பர் நூலில் இவ்வார்த்தைகள் இடம் பெறவில்லை. ஒரு தெளிவான சான்றில்லாமல் குப்ரின் மீது பத்வா கொடுக்க முடியாது.

ஒரு வாதத்திற்காக, அந்த வழிகேடர்கள் சொல்வதுபோல் இருப்பதாக ஒப்புக் கொண்டாலும், அந்நூலில் 'மாதா அலல் – குஃப்ரி' என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இதற்கு பொருள் குஃப்ருடைய காலகட்டத்தில் மரணமடைந்தார்கள்-அதாவது காலத்தைக் குறிக்கும் சொல்லாகத்தான் இச் சொல் அமைந்துள்ளது.

ஆளைக் குறிக்கும் சொல்லாக இருப்பின் 'மாதா காஃபிரய்னி' என்றுதான் இருக்க வேண்டும். அவ்வாறில்லை எனும்போது இவர்களின் ஆட்சேபணை அர்த்தமற்றதாகிவிடுகிறது.

முடிவுரை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறுவதைப் பாருங்கள்: 'எனது ரப்பிடம் என் குடும்பத்தில் எவரையும் நரகில் நுழைப்பிக்கக் கூடாது என்று கேட்டேன்.அவன் அதை ஒப்புக் கொண்டான்.

மேலும் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீது, 'நபிகளாரின் திருப் பொருத்தங்களில் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் எவரும் நரகில் நுழையக் கூடாது என்பதும் ஒன்றாகும்'

-இமாம் இப்னு ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தப்ஸீர்.

அனைத்து நபிமார்களுடைய பெற்றோர்களும் முஃமினானவர்களாகவே இருந்துள்ளனர் என nஷய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆக, உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் குர்ஆன,; ஹதீது ஆதாரங்களாலும், வழிகேடர்கள் செய்துவரும் ஆட்சேபணைகளுக்கும் தெளிவான பதில்களாலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் காபிரல்ல, அவர்கள் உண்மையான தூய முஃமின்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்தபின் தங்கள் பெற்றோர்களை உயிர்த்தெழச் செய்து கலிமா சொல்லிக் கொடுத்து உம்மத்தே முஹம்மதிய்யாவில் இணைத்திருப்பதால் அவர்கள் இருவரும் ஸஹாபிகள் எனும் அந்தஸ்தையும் பெறுகிறார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

சாதாரணமாக ஒருவனைப் பார்த்து உனது பெற்றோர் அநியாயக்காரர்கள் என்று சொல்லுவோமானால், அவனுக்கு மன வேதனை உண்டாகி, மிகக் கோபம் ஏற்பட்டு அவ்வாறு சொன்னவனை உண்டுஇல்லை என்று பண்ணிவிடுவான் என்பது உலகியல் நடைமுறை.

உலகை உய்விக்க வந்த உத்தமரான பெருமானார் அவர்களின் பெற்றோர்களைப் பார்த்து ஒருவன், இல்லாத ஒன்றை சொல்வானானால்-அதாவது அவர்கள் காபிர்கள்-நரகவாதிகள் என்று சொல்வானானால், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மனது எவ்வாறு வேதனைப்படும்?

அன்னவர்களை வேதனைப் படுத்துபவர்களைப் பற்றி வல்ல இறைவன் தனது திருமறையில்,


وَالَّذِينَ يُؤْذُونَ رَسُولَ اللّهِ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ

'அல்லாஹ்வின் தூதர் அவர்களை எவர்கள் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.'

-அல்-குர்ஆன் 9:61


إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا

'அல்லாஹ்iவும் அவனது தூதரையும் நிச்சயமாக நோவினை செய்பவர்கள்- அவர்களை உலகத்திலும், மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையை தயார் செய்து வைத்துள்ளான்'

-அல்-குர்ஆன் 33:57

என்று தெளிவாகக் கூறுகிறான்.

இறவனின் திருப் பொருத்தத்தை பெறவேண்டுமாயின் நபிகளாரின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொள்வது அவசியம். அன்னாரின் பெற்றோர்களை தரக்குறைவாக, கண்ணியக் குறைவாக பேசுவது அன்னவர்களை நோவினை செய்வதாகும். அவர்களை நோவினை செய்தால் அத்திருப் பொருத்தம் நமக்கு கிடைக்குமா?.

அல்லாஹ் நம்மனைவர்களையும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப்படுத்துவது கொண்டு நமக்கு அன்னாரின் திருப் பொருத்தத்தையும், அதைக் கொண்டு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் தந்தருள்வானாக! ஆமீன்.

முற்றும்.