Kasr and Jammu Prayer-கஸ்ரு ஜம்உ தொழுகை

Kasr and Jammu Prayer-கஸ்ரு ஜம்உ தொழுகை

By Sufi Manzil 0 Comment May 23, 2010

கஸ்ரு ஜம்உ தொழுகை

ஆங்கிலேய 56 1/2 மைலுக்குக் குறையாமல் ஒரு ஊரை நாடிப் பிரயாணம் செய்யக் கூடியவர் தமது ஐங்காலத் தொழுகைகளில் 4 ரக்அத்துகள் உள்ள ளுஹர், அஸர், இஷா ஆகிய ஒவ்வொரு தொழுகையையும் இரண்டு ரக்அத்துகளாக குறைத்துத் தொழும் தொழுகைக்கே 'கஸ்ரு தொழுகை'என்று சொல்லப்படும்.

ஒருவர் தாமிருக்கும் ஊரின் எல்கையைக் கடந்தபின்னரேதான் பிரயாணம் என்பது உறுதியாகும். மேற்படி எல்கையை கடந்தது முதல் அந்த எல்கையை மீண்டும் அடையும்வரை அவர் பிரயாணியாகவே இருப்பார். எனவே கஸ்ரு, ஜம்உ தொழுகைகளை ஊர் எல்லை கடந்த பின்பே தொழ வேண்டும். ஹனபி மத்ஹபில் ஜம்உ கிடையாது.

நிபந்தனைகள்:

இதற்கு நிபந்தனைகள் ஏழு:

1. பிரயாணத்தின் தொலை மேற்சொன்ன தொலைவை அடைதல். 2. ஏதும் ஒரு குறிப்பிட்ட ஊரை நிர்ணயித்தல். 3. பாவச் செயலை நோக்கமாகக் கொண்டு பிரயாணம் செய்யாதிருத்தல்.4. பிரயாணத்தின் போது குறைத்துத் தொழாத (நான்கு ரக்;அத்துகளையும் பூரணமாக தொழக்கூடிய) ஒரு இமாமை பின்பற்றாதிருத்தல். 5. தக்பீரு தஹ்ரிமாவிலேயே கஸ்ரு தொழுகையை நிய்யத்து செய்தல்.6. நிய்யத்தைப் பேதப்படுத்தாதிருத்தல். 7. தொழுகை தீருமளவும் அவ்வூரில் தங்கிவிடுவதை எண்ணாமல்) பிரயாணம் நிலைத்திருத்தல் ஆக ஏழு நிபந்தனைகள்.

ஜம்உ தொழுகை:

மேற்காணும் தொலைதூரத்திற்கு பிரயாணம் செய்யும் ஒருவர் தமத ஐங்காலத் தொழுகைகளில் ளுஹ்ர், அஸ்ர் ஆகிய இவ்விரு நேரத் தொழுகைகளையும் மஃரிப் இஷா ஆகிய இவ்விரு நேரத் தொழுகைகளையும் (முன்னேரத்திலோ அல்லது பின்னேரத்திலோ) சேர்த்துத் தொழும் தொழுகைக்கு 'ஜம்உ தொழுகை' என்று சொல்லப்படும்.

முன்னேரத்தில் தொழுவதற்குரிய நான்கு நிபந்தனைகள்:

1. முன்னேரத் தொழுகையை முதலில் தொழுதல் 2. முன்னேரத் தொழுகை தீருவதற்கு முன்னர், பின்னேரத் தொழுகையை நிய்யத்தில் கொள்ளல். 3. பின்னேரத் தொழுகைக்காக தக்பீர் கட்டி முடிக்கும் வரை பிரயாணம் நிலைத்திருத்தல். 4. இரு நேரத் தொழுகைகளுக்குமிடையே தொடர்பு பற்றியிருத்தல் ஆகிய நான்கு நிபந்தனைகள்.

நிய்யத்: மஃரிபுடன் இஷாவை முற்படுத்தும்போது,


 اُصَلِّيْ فَرْضَ الْعِشَاءِ جَمْعَ تَقْدِيْمٍ مَعَ الْمَغْرِبِ

 'உஸல்லீ ஃபர்ளல் இஷாயி ஜம்அ தக்தீமின் மஅல் மக்ரிபி'

இவ்வாறே ளுஹருடன் அஸ்ரை முற்படுத்தும்போது அந்த நேரத்தின் வக்தை சொல்லிக் கொள்ளவும்.

பின்னேரத்தில் தொழுவதற்குரிய இரண்டு நிபந்தனைகள்:

1. பின்னேரத்தில் முன்னேரத் தொழுகையைத் தொழுவதாக முன்னேரத்தில் நிய்யத் வைத்தல்.
2.பின்னேரத் தொழுகை தீருமளவும் பிரயாணம் நிலைத்திருத்தல்.

நிய்யத்: ளுஹருடன் அஸ்ரை பிற்படுத்தும்போது

 

اُصَلِّيْ فَرْضَ الظُّهْرِ جَمْعَ تَأْخِيْرٍ مَعَ الْعَصْرِ

 
உஸல்லீ ஃபர்ளளுஹரி ஜம்அ தஅஹ்ஹீரின் மஅல் அஸ்ரி

இவ்வாறே மஃரிபுடன் இஷாவை பிற்படுத்தும்போது அந்த நேரத்தின் வக்தை சொல்லிக் கொள்ளவும்.

கஸ்ரும் ஜம்உம் உடைய நிய்யத்:

உஸல்லீ பர்ளள் ளுஹ்ரி கஸ்ரன் வஜம்அ தக்தீமின் மஅல் அஸ்ரி முஸதக்பிலன் இலல் கஃபதஜஷ்ஷரீபதி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.

ளுஹ்ர் உடைய பர்ளை கஸ்ராக அஸ்ருடைய பர்ளுடன் தக்தீம் ஜம்ஆகவும் (பிற்படுத்தி தொழுவதனால் தஉகீர் ஜம்ஆகவும்) சிறப்பான கஃபா அளவில் முன்னோக்கி அல்லாஹுத்தஆலாவுக்காக தொழுகின்றேன் அல்லாஹு அக்பர்' என்று நிய்யத் செய்ய வேண்டும்.

இவ்வாறே மக்ரிப், இஷாஆகிய தொழுகைகளுக்கும் அந்தந்த நேரத்தைக் குறிப்பிட்டு நிய்யத்துச் செய்து கொள்ளவும்.