Tahajjath Prayer Dua-தஹஜ்ஜத் தொழுகை துஆ

Tahajjath Prayer Dua-தஹஜ்ஜத் தொழுகை துஆ

By Sufi Manzil 0 Comment May 12, 2010

 

தஹஜ்ஜுத் தொழுகை

இரவில் தூங்கி விழித்து தொழுவது தஹஜ்ஜுத் என்ற சுன்னத் தொழுகை ஆகும். தஹஜ்ஜுத்தில் குறைந்தது இரண்டு ரக்அத்துகள். அதிகத்திற்கு அளவில்லை. எனினும், பன்னிரண்'டு ரக்அத்துகள் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஸூரா யாஸீன், ஸூரா முஜம்மில் போன்றவற்றை ஓதலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தஹஜ்ஜுத்திற்காக விழித்து எழுந்தவுடன் முகத்தை இருகைகளாலும் தடவிக்கொண்டு வானத்தைப் பார்த்து, اِنَّ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ  

இன்ன ஃபி ஹல்கி ஸமாவாத்தி வல் அர்ள் (3:190) என்ற ஆயத்தைக் கடைசிவரை ஓதுவதும், முந்திய இரண்டு ரக்அத்துகளைச் சுருக்கமாகத் தொழுதுமு மற்ற ரக்அத்துகளை நீளப்படுத்தித் தொழுவதும் சுன்னத்தாகும்.

தஹஜ்ஜுத் தொழுகை பன்னிரண்டு ரக்அத்திலும் சூரத்துல் பாத்திஹாவிற்குப் பின் குர்ஆனில் ரப்பனா….. என்று தொடங்குகின்ற துஆவுடைய ஆயத்துக்களில் பன்னிரண்டு ஆயத்துக்களை ஓதுவதும், அல்லது முதல் ரக்அத்தில் ஸூரா பாத்திஹாவிற்குப் பின் யாஸீன் சூராவையும், சூரா முஜம்மில் 12 தடவையும், பிறகு இரண்டாம் ரக்அத்தில் ஸூரா யாஸீன் ஒரு தடவை, சூரா முஜம்மில் 11 தடவையும், மூன்றாம் ரக்அத்தில் ஸூரா யாஸீன் ஒரு தடவை, சூரா முஜம்மில் 10 தடவையும், நான்காம் ரக்அத்தில் ஸூரா யாஸீன் ஒரு தடவை, சூரா முஜம்மில் 9 தடவையும் இவ்வாறே பன்னிரண்டு ரக்அத்துகளையும் தொழுவதில் அதிக பலன் உள்ளது என ஸூபியாக்கள் கருதுவார்கள்.

ரக்அத்துகளை அதிகமாக்குவதை விட நிலையில் நீண்ட நேரம் நின்று அதிகமாக ஓதித் தொழுவது சிறப்பாகும்.

தஹஜ்ஜுத் தொழுபவர் முற்பகலில் கைலூலா என்னும் முற்பகல் தூக்கம் கொள்வதும், சுபுஹுடைய சுன்னத்திற்கும், ஃபர்ளுக்குமிடையில் முகத்தை கிப்லாவின் புறம் வைத்து வலப்பக்கம் ஒருசாய்த்து படுத்து கப்ரில் இவ்விதம்தான் கிடப்போம் என்று நினைத்து சற்று நேரம் இளைப்பாறுவதும் சுன்னத்தாகும். அவ்வாறே தஹஜ்ஜுத் தொழுதபின் துஆவையும் இஸ்திஃபாரையும் அதிகப்படுத்துவதும் சுன்னத்தாகும். மேலும் اِنَّ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ  இன்ன ஃபி ஹல்கி ஸமாவாத்தி வல் அர்ள் (3:190) என்ற ஆயத்தை சூரத்து ஆல இம்ரான் கடைசிவரை ஓதவும்.

தஹஜ்ஜுத் துஆவில் பின்வரும் துஆவையும் சேர்த்து ஓதிக்கொள்ளவும்.

 

اِلٰهِيْ نَامَتِ الْعُيُوْنْ وَاسْتَرَاحَتِ الْجُفُوْن يَامَنْ لَّاتَأْخُذُهُ سِنَةٌ وَّلَانَوْمٌ . وَيَامَنْ لَّايُشْغِلُهُ شَأْنٌ عَنْ شَأْنٍ . وَلْمْ يَفْلُتْهُ فِلْتَةُ نَاظٍلرٍ وَلَا لِفْتَةُ خَاطِرٍ اِغْفِرْلِيْ وَارْحَمْنِيْ اٍلٰهِيْ قَدْ اَغْلَقَتِ الْمُلُوْكُ اَبْوَابَهَا وَاَقَامَتْ عَلَيْهَا حُرَّاسَهَا وَحُجَّابَهَا . وَبَابُكَ مَفْتُوْحٌ لِّلسَّآئِلِيْنَ . فَهَآ اَنَافَقِيْرٌ بِبَابِكَ يَآاَللهُ. رَبِّ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْلِيْ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ .

 

பொருள்: என்னுடைய நாயனே! கண்கள் தூங்கி விட்டன. இமைகள் ஓய்வு பெற்றுள்ளன. சிறுதூக்கமோ, ஆழ்ந்த தூக்'கமோ பீடிக்காதவனே! ஒரு வேலைக்காக மற்றொரு வேலையின் கவனத்தை விட்டும் திருப்பி விடப்படாதவனே! என்னுடைய கண் சிமிட்டுதலும், மன ஊசாட்டமும் தன்னை விட்டும் தப்பி விடாதவனே! என்னை நீ மன்னித்து எனக்கு கிருபை செய்வாயாக! என்னுடைய நாயனே! அரசாங்கங்கள் தம்முடைய வாசல்களை அடைத்து அவ்வாசல்களின் மீது பாதுகாவலர்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் உன்னுடைய வாசலோ கேட்பவர்களுக்கு திறந்ததாகவே இருக்கிறது. இதோ தேவையுள்ள நான் உன்னுடைய வாசலில் நிற்கிறேன். யா அல்லாஹ்! ஒரு மிஸ்கீன் உன் வாசலில் நிற்கிறேன். யா அல்லாஹ்! என்னுடைய இரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே அநியாயம் செய்து கொண்டேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! என்னுடைய இரட்சகனே! மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ கிருபை செய்வோரில் மிக சிறந்தவன்.