ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி ரழியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி ரழியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment May 2, 2015

Print Friendly, PDF & Email

அப்பாஸியக் கலீபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றல்கள் மீது தாங்க இயலாத கொடுமைகளை செய்து வந்தனர். பக்தாத்தில் வாழ்ந்து வந்த அவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் இஸ்ஃபஹானில் வந்து குடியேறி வாழ்ந்து வரலாயினர்.

அந்நகரில் வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தைச் சார்ந்த காஜா செய்யிது அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார் செசெய்யிது கியாஸுத்தீன் அவர்கள் ஹழ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிசாவழியில் தோன்றிய செய்யிது தாவூது என்ற பெரியாரின் அருமைத் திருமகள் உம்முல் வரா என்ற செய்யிதா மாஹினூரை மணமுடித்திருந்தனர். அவர்களுக்கு ஹிஜ்ரி 530 ஆம் ஆண்டு ரஜப் பிறை 14 (கி.பி.1116 ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள்) வெள்ளிக்கிழமை ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முயீனுத்தீன் (இஸ்லாத்தை வலுப் பெறச் செய்தவர்) என்று பெயரிட்டு அருமைபெருமையாக வளர்த்து வந்தனர்.

ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் வழித் தோன்றல்களில் ஒருவராவார்கள்.

“மீர்ஆதுல் அஸ்றார்” என்ற நூலில் கூறப்பட்டபடி அவர்களின் வம்சவழி பின்வருமாறு’

ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி (ரலியல்லாஹு அன்ஹு)

ஹாஜா கியாதுத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)

ஹாஜா நஜ்முத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது அப்துல் அஸீஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இப்றாஹீம் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் மூஸல் காழிம் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் ஜஃபர் சாதிக் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் முஹம்மது பாகர் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் ஜெய்னு லாப்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் அலி (ரலியல்லாஹு அன்ஹு)

இச்சமயத்தில் தார்த்தாரியர் இஸ்ஃபஹான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி, அதனை நாசப்படுத்தி வந்தனர். எனவே செய்யிது கியாஸுத்தீன் ஹஸன் தம் குடும்பத்தினர்களுடன் அந்நகர் விட்டு நீங்கி குராஸானில் குடியேறினார். அவரின் அருமை மைந்தர் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அவர்கள் இளமையிலேயே மற்றச் சிறுவர்களை விட்டும்  மாறுபட்டவர்களாக விளங்கினர். சின்னஞ்சிறு வயதிலேயே அவர்கள் அன்பு, இரக்கம், தயவு ஆகிய அரும்பெரும் குணங்கள் வாய்க்கப் பெற்றவர்களாக திகழ்ந்தனர். இளமையில் மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடச் செல்வதில்லை. மாறாக பள்ளி சென்று கல்வி பயின்றனர். ஒன்பது வயதிற்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்ட அவர்கள், பின்னர் ஃபிக்ஹ் நூல்களையும், ஹதீது நூல்களையும் பயின்று தேர்ச்சியுற்றனர்.

அன்னனாரின் சிறுவயதிலேயே அவர்களின் அன்னை மறைந்து விட்டார்கள். அவர்கள் 15 வயதை எய்தியபோது அன்னாரின் தந்தையும் மறைந்து விட்டார்கள். அவர்களுக்கு தந்தை வழியாகத் தண்ணீர்  இறைக்கும் காற்றாடியுடன் கூடிய பழத்தோட்டம் ஒன்று வாரிசு பாத்தியமாக கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு; எளிய முறையில் இனிதே வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தார்கள்.

தமக்கு சொந்தமான தோட்டத்தை விற்றுவிட்டு கல்வி தேடி சமர்கந்த், புகாரா நோக்கி பயணமாகி அங்கு மௌலானா ஹிஸ்ஸாமுத்தீனிடமும், ஷைகுல் இஸ்லாம் மௌலானா ஷர்ஃபுத்தீனிடமும் மார்க்கக் கல்விகளை கற்றனர். பின்னர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திப்பதற்காக பகுதாது சென்றார்கள். கௌதுல் அஃலம் அவர்கள் முயீனுத்தீன் சிஷ்தி நாயகத்திற்கு தாய்வழியில் ஒன்றுவிட்ட மாமாவாக இருந்தார்கள்.

தம்மைக் காணவந்த அவர்களை தம் சீடர்களிடம் புகழ்ந்துரைத்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் மாபெரும் மகானாக வருவார்கள் என்று வாழ்த்துரைத்தார்கள். அதன்பின் ஹாரூன் என்ற ஊரை அடைந்து அங்கிருந்த ஷைகு உதுமான் ஹாரூனி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து தமக்கு தீட்சை தருமாறு வேண்டினர். அவர்களும் அவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து சிஷ்தியா தரீகாவில் தீட்சை வழங்கினர். தம் குருவுடன் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருந்தபின், தம் குரு ஆணையின்படி பகுதாது வந்து கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை இரண்டாவது முறையும்> ஷைகு அபூநஜீப் சுஹ்ரவர்தீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றனர்.

இதன்பின் இந்தியாவிற்கு ஹிஜ்ரி 561 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் (கி.பி. 11-11-1165) அவாக்ள் இந்தியாவிலுள்ள மூல்த்தானுக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தார்கள்.  அதன்பின் லாகூர் சென்று பின் தம் குருநாதர் உதுமான் ஹாரூனி அவர்களை ரேயில் வைத்து சந்தித்து சிலமாதங்கள் கழிந்தபின் ஹிஜ்ரி 562 ஆம் ஆண்டில் ஹஜ்ஜுசெய்வதற்காக மக்கா புறப்பட்டனர். அங்கிருந்து மதீனா சென்று அண்ணலாரின் திருக்கபுர் சரீபை தரிசித்தனர். பின்னர் அவர்கள் இருபது ஆண்டுகள் பற்பல நாடு நகரங்களிலும் சுற்றித் திரிந்து பகுதாது மீண்டனர். அங்கு வைத்து, காஜா அவர்களுக்கு கிலாஃபத் வழங்கிய உதுமான் ஹாரூனி அவர்கள் ‘முயீனுத்தீனே! நான் உம்மை இறைவனளவில் ஒப்படைத்து விட்டேன்’ என்று கூறி அவர்களின் நெற்றியிலும் கண்களிலும் முத்தமிட்டனர்.

தமது 52 ஆம் வயதில் சிஷ்திய்யா தரீகாவில் கிலாஃபத் பதவியைப் பெற்ற காஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்கள்> சில நாட்கள் பகுதாதில் தங்கியிருந்து பின்பு ஊஷ் என்ற ஊருக்கு சென்று குத்புத்தீன் பக்தியார் என்பவர்களுக்கு தீட்சை நல்கினர். இருவரும் மக்கா சென்று ஹஜ்ஜு செய்து விட்டு மதீனா நகர் சென்று பெருமானாரின் தரிசனத்தை பெற்றுக் கொண்டனர். பல்வேறு காடு, மலைகளை சுற்றித் திரிந்து பல்வேறு இறைநேசர்களை பல்வேறு நிலைகளில் கண்டு அவர்களின் துஆப் பேற்றினைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஆப்கானிஸ்தானிலுள்ள ஸப்ஸவார் என்ற ஊருக்கு வந்து சேர்ந்த அவர்கள் அங்கு சுன்னத் ஜமாஅத்தினர்களை கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த ஷியா மதத்தைப் பின்பற்றும் முஹம்மது யாத்கார் என்பவரை திருத்தி சுன்னத் வல் ஜமாஅத்தைப் பின்பற்றச் செய்தார்கள். அவரும் நாயகம் அவர்களின் சீடரானார். பின் அவர்களுடன் புறப்பட தயாரானார். ஷத்மான் கோட்டையை அடைந்ததும் புது மனிதராக காட்சியளித்த முஹம்மது யாத்கார் அவர்களை அங்கு ஆட்சி செய்யுமாறு பணித்து விட்டு இந்தியா புறப்பட்டுச் சென்றார்கள். பின்பு பல்க் சென்று அங்கிருந்து புறப்பட்டு து கஜ்னீ வந்து சேர்ந்து லாகூரை அடைந்து தாதா கன்ஞ் பக்ஷ் ஹுஜ்வீரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தில் பல நாட்கள் கல்வத் இருந்தார்கள். அங்கிருந்து மூல்தான் வந்து அங்கு தங்கி சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டார்கள்.

பின்னர் டில்லி வந்து, அங்கிருந்த மக்களுக்கு இஸ்லாமிய அருள் நெறியைப் போதித்துவிட்டு 700 பேர்களை இஸ்லாத்தில் இணைத்து விட்டு கர்னூல் மாவட்டத்திலுள்ள சூனிபத் என்ற ஊருக்கு வந்து அங்கு அடங்கப்பட்டிருக்கும் ஷைகு நாஸிருத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தில் சில நாட்கள் தங்கி கல்வத்தில் இருந்தார்கள். அவர்கள் கல்வத் இருந்த இடம் இப்போதும் சில்லயே முபாரக் ஹழ்ரத் ஹாஜா கரீப் நவாஸ் என்ற பெயருடன், மரியாதையுடன் அழைக்கப்படுகிறது.

அடுத்து அவர்கள் பாட்டியாலாவிலுள்ள நாரனோஸ் என்ற ஊருக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர். பின்பு அவர்கள் ஸமானா வழியாக அஜ்மீரை நோக்கிப் பயணமாயினர். ஹிஸ்ரி 588 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள் (கி.பி.1192) அவர்களின் புனிதப் பாதங்கள்> அஜ்மீர் மண்ணிலே மிதித்தன. அப்பொழுது காஜா நாயகம் அவர்களுக்கு வயது 57.

இந்நகரமும், அதன் சூழலுமத் பிருதிவிராஜ் என்ற ராஜபுத்திர அரசனின் ஆட்சியில் இருந்தது. அவனுடைய அரண்மனை> அதன் அருகிலுள்ள தாராகட் என்ற குன்றின் மீது இருந்தது. அதன் அடிவாரத்திலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர். அங்கேயே அவனுடைய குதிரை> ஒட்டகை ஆகியவற்றின் தொழுவங்கள் இருந்தன.

அங்கு வந்த காஜா நாயகம் தம் சீடர்களுடன் வெட்ட வெளியில் இளைப்பாற அமர்ந்தனர். அரசரின் ஆட்கள் வந்து நீங்கள் இங்கு தங்க கூடாது. இது அரசரின் ஒட்டகை அடைக்கும் இடம் என்று சொன்னார்கள். அதுகேட்ட காஜா நாயகம் அவர்கள் அரசரின் ஒட்டகை இங்கேயே அடைபட்டுக் கிடக்கட்டும் என்று சொல்லி விட்டு தம் சீடர்களுடன் அருகிலுள்ள அன்னாசாகர் என்ற ஏரிக் கரையில் போய் தங்கினர்.

காலையில் ஒட்டகம் மேய்ப்பவர்கள் வந்து ஒட்டகையை எழுப்ப முற்பட்ட போது அவைகளால் எழும்ப முடியவில்லை. உடனே அவர்களுக்கு நேற்று நடந்த சம்பவம் நினைவுக்கு வரவே காஜா நாயகத்திடம் வந்து மன்னிப்புக் கேட்டனர்.

அவர்களும் மன்னித்து, இது எந்த எசமானுடைய ஆணைக்காக அமர்ந்திருந்ததோ அந்த எசமானுடைய ஆணை மீது அவை எழுந்து நடக்கும் என்று கூறினர். அவ்விதமே ஆயிற்று. அதுகண்டு ஒட்டகம் மேய்ப்பவர்கள் வியந்து அரசனிம் இச்சம்பவம் பற்றி சொன்னார்கள்.

இதைக் கேட்ட அரசன் அதிர்ந்தான். ஏனெனில் மன்னனின் அன்னை வாசவதத்தா சோதிடத்தில் மிகவும் புலமை பெற்று விளங்கினாள். அவள் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே இன்ன இன்ன அடையாளமுள்ள ஒருவர் இங்கு வவருவார். அவரின் வரவால் உன் ஆட்சி வீழும் என்று தன் மகனிடம் முன்னறிவிப்பு செய்திருந்தாள். அதைக் கேட்ட மன்னன் அப்போது அவர்களின் படத்தை தம்அன்னையிடமே வரைந்து கேட்டு அதன்படிப் பல பிரதிகள் எடுத்து இத்தகு உருவமுடையவர் எவரேனும் தம் நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவரைப் பிடித்து என் முன் கொண்டு வர வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான்.

எனவே இச்செய்தியைக் கேட்டவுடன் அந்த நபர் இவர்களாகத்தான் இருக்குமோ என்று எண்ணி அவர்களை அங்கிருந்து விரட்ட ஆட்களை அனுப்பினான். அரசரின் ஆணையை சிரமேற்றோங்கிச் செயலாற்ற அவனின் பணியாளர்கள் முயன்ற போது நாயகம் அவர்கள் ஒருபிடி மண்ணை அள்ளி, அதில் ஆயத்துல் குர்ஸீயை ஓதி ஊதி, அவர்கள் மீது வீசி எறிந்தார்கள். அவர்கள் அதனைத் தாங்க இயலாது, பெரும் கூச்சலிட்டுக் கொண்டு வெருண்டோடினர்.

இதனை அறிந்த அரசன் காஜா அவர்களைப் பெரிய மந்திரவாதி என்று எண்ணிக் கொண்டு, மந்திரத்தை மந்திரத்தால் தான் வெற்றி கொள்ள வேண்டுமென்று எண்ணி, சாதுராம் என்ற மாபெரும் மந்திரவாதியைக் காஜா அவர்களிடம் அனுப்பி வைத்தான். அவர் காஜா நாயகத்தைப் பார்த்ததும் திடுக்கம் ஏற்பட்டு அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அன்னாரின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவி அவர்களின் ஊழியத்தில் இருந்து கொண்டார். அவருக்கு ஷாதிதேவ்(மகிழ்ச்சியாளர்) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

இதன்பின் காஜா அவர்களை எதிர்த்து, மந்திர ஆற்றலினால் போராடி, அவர்களை அங்கிருந்து விரட்டிவிட> ஜெய்ப்பால் என்ற மற்றொரு மந்திரவாதியை அனுப்பி வைத்தான் அரசன். அவர் தம்முடைய 1500 சீடர்களுடன் தம்மை எதிர்க்க வருகிறார் என்பதை அறிந்த காஜா நாயகம் அவர்கள் தம்முடைய கைக்கோலை கொடுத்து, நம்முடைய ஜமாஅத்தினரைச் சுற்றி பூமியில் ஒரு கோடு கிழியும். அதற்குள் நாம் இருக்கும் வரையில், அவர்களால் நமக்கு யாதொரு தீங்கும் செய்ய இயலாது என்று கூறினார்கள். அவ்விதமே அவரும் செய்தார்.

சற்று நேரத்தில் ஜெய்ப்பாலும்,அவரின் சீடர்களும் அங்கு வந்து, அக்கோட்டிற்குள் தம் கால்களை வைத்ததும், அவர்கள் மயங்கிக் கீழே விழுந்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த அவர்கள், தள்ளாடித் தள்ளாடி அன்னாசாகர் ஏரிக்கரையின் ஒரு புறத்தில் சென்றமர்ந்து, அன்னாசாகரின் தண்ணீரைக் காஜா அவர்கள் இருக்கும் பக்கம் செல்லவிடாது தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாயினர்.

இதனைக் கண்ட காஜா நாயகம் அவர்கள் ஷாதிதேவை அழைத்து, அவரின் கரத்தில் ஒரு பாத்திரத்தை கொடுத்து ‘நீர் அன்னாசாகரின் நீரை இந்தப் பாத்திரத்தில் எடுத்;து வாரும்’ என்று கூறினர். அவர் சென்று அவ்வாறே நீர் எடுத்து வந்ததும், அந்த ஏரியிலுள்ள அனைத்துத் தண்ணீரும் அப்பாத்திரத்துக்குள் வந்து அந்த ஏரி மட்டுமில்லாது, அதனைச் சூழ இருந்த எல்லாக் கிணறுகளும் வற்றி வரண்டு விட்டன. மக்களும், மாக்களும் நீரின்றி செத்து மடிய வேண்டிய அவலநிலை ஏற்பட்டு விட்டது.

ஜெய்ப்பால் திடுக்கிற்று காஜா நாயகம் அவர்களிடம் இரங்கி வேண்ட, பாத்திரத்தில் எடுத்த நீரை ஏரியிலேயே கொட்டும்படி பணித்தனர். அவ்வாறே செய்ய ஏரி தண்ணீரால் நிரம்பி தளும்பியது. இதன்பின்னரும் அறிவு பெறாது, ஜெய்ப்பாலும், அவருடைய சீடர்களும் மந்திங்களை ஜெபிக்கலாயினர். உடனே ஆயிரக்கணக்கான பாம்புகள் காடுகளிலிருந்து படையெடுத்து வந்து நாயகம் இருக்கும் கோட்டு வளையத்திற்குள் தலையை விட்டதும் வெருண்டு பின்வாங்கி ஓடத் துவங்கின. அப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவேயில்லை.

ஜெய்ப்பால் முன் வந்து, வானத்தை அண்ணாந்து பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரிக்க, உடனே வானிலிருந்து நெருப்பு மழை பெய்து, சுற்றிலும் இருந்த மரங்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கியது. எனினும், ஒரு நெருப்புப் பொறிகூட நாயகம் அவர்களும், அவர்களின் சீடர்களும் இருந்து கோட்டு வளையத்திற்குள் வந்து விழவில்லை.

இதுகண்டு பெரிதும் விரக்தியுற்ற ஜெய்ப்பால் மான் தோல் ஒன்றை எடுத்து, அதனை விண்ணை நோக்கி எறிந்து, அதில் பாய்ந்தேறி விண்ணிலே பறந்து, மக்களின் கண்களுக்கு தெரியாமல் மறைந்து விட்டான்.

அப்பொழுது காஜா நாயகம் அவர்களின் சீடர்கள் தியானத்திலிருந்த காஜா நாயகம் அவர்களை அணுகி, ஜெய்ப்பாலின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி கூறவும், நாயகம் அவர்கள் தங்கள் காலணியை எடுத்து விண்ணை நோக்கி எறிந்தனர்.

அது விண்ணிலே பறந்து சென்று ஜெய்ப்பாலைக் கண்டுபிடித்து அவரின் தலையில் ஓங்கி, ஓங்கி அடித்தவண்ணம், அவரை பூமிக்கு இறக்கி வந்து, காஜா நாயகம் அவர்களின் திருமுன் கொண்டு வந்து விட்டது. அவர் அழுது சலித்து நாயகம் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டி அரவணைத்தார்கள் காஜா நாயகம் அவர்கள்.

இதனால் யாது செய்வதென்று அறியாது திகைத்துக் கொண்டிருந்தான். இனியும் பொது இடத்தில் தங்க வேண்டாம் என்று காஜா நாயகம் அவர்களை ஷாதிதேவும், அப்துல்லாஹ்வும் கூறி ஷாதி தேவ்விற்கு சொந்தமான இந்திரகோட்டின் அருகில் உள்ள நிலத்தில் போய் தங்கினர். அவ்விடத்திலேயே அவர்களின் தர்கா இப்பொழுது உள்ளது.

அங்கு காஜா நாயகம் சென்று அமர்ந்ததும், அங்கு தாங்களும், தங்களின் சீடர்களும் தங்குவதற்கான வீட்டு வசதிகளைச் செய்து கொண்டனர். அங்கு ஒரு சமையல் விடுதியும் நிர்மாணிக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தவமடத்தில் அமர்ந்து காஜா நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை தொடங்கினர். அவர்களின் மாண்பினைக் கேள்வியுற்ற  மக்கள், நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து, அவர்களின் கரம்பிடித்து இஸ்லாத்தைத் தழுவினர். நாயகம் அவர்களும் பல்வேறு பகுதிகளில் வாழும் பிரமுகர்களுக்கும், அரசனுக்கும் இஸ்லாத்தில் இணைய அழைப்பு விடுத்தனர்.

பிருதிவிராஜன் பல்வேறு முயற்சிகள் செய்தும் காஜா நாயகம் அவர்களை அடிபணிய வைக்க முடியவில்லை. அஜ்மீரை விட்டு 3 நாளில் விலகுமாறு அரசன் பிருதிவிராஜன் காஜா நாயகத்திற்கு கடிதம் ஒன்று கொடுத்திருந்தான்.

அச்சமயத்தில் ஷிஹாபுத்தீன் கோரியின் கனவில் காஜா நாயகம் அவர்கள் இந்தியாவுக்கு படைஎடுக்குமாறு சொன்னார்கள். அவரும் இரண்டாவது தடவையாக தாரவாடியில் பாளையம் இறங்கி பிருத்விராஜனுக்கு கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் யுத்தத்திற்கு தயார் என்று அரசன் பிருத்விராஜன் சொன்னதால் தாரவாடியில் போர் மூண்டது. பிருத்விராஜனுக்கு துணையாக வந்த சிற்றரசர்கள், மன்னர்களும் போரில் உயிர் நீத்தனர். பிருத்விராஜன் ஓடிப்போனார். அவனை ஸர்ஸுரி என்ற இடத்தில் கைது செய்தார் ஷிஹாபுத்தீன் கோரி.

வெற்றி பெற்ற பின் கோரி அஜ்மீர் சென்று நாயகத்தை சென்று சந்தித்து காணிக்கைகள் வழங்கினார்.

தம்மைக் காண வந்த பிருத்விராஜனின் தாய், மனைவி மற்றும் மகன்களை அன்போடு வரவேற்ற கோரி அன்னையாரின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்சிப் பொறுப்பை பிருத்விராஜனின் மகன் கோலாவிடம் கொடுத்து விட்டு டில்லியில் குத்புதீன் ஐபக் என்பவரிடம் ஆட்சியை ஒப்படைத்து அஜ்மீர் நகரை நிர்வாகிக்க ஸையித் ஹஸன் மஷ்ஹரீ என்பவரை நியமித்து விட்டு கஜ்னி நகர் நோக்கி வெற்றி வீரராக சென்றார்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒரு சிற்றரசரின் மகளை இஸ்லாத்திலாக்கி அவருக்கு பீபி அமதுல்லாஹ் என்று பெயரும் சூட்டி திருமணம் முடித்துக் கொண்ட நாயகம் அவர்கள் அதன்மூலம் பக்ருத்தீன், ஹிஸாமுத்தீன் என்ற இரண்டு ஆண்மக்களையும், பீபி ஹாபிஸ் ஜமால் என்ற பெண்மகளையும் பெற்றெடுத்தனர்.

டில்லியில் வசித்து வந்த ஆன்மீக சீடர் குத்புத்தீன் பக்தியாரி அவர்களை  சந்திப்பதற்காக டில்லி அய்னுத்தீன் பள்ளிவாசலுக்கு வருகை தந்தபோது அதைக் கேள்விபட்ட மக்கள் அப்பள்ளிவாசலுக்கு அலைஅலையாய் ஓடிவந்து அவர்களை சந்தித்தனர்.

இதன்பின் மற்றொரு நிகழ்ச்சி டில்லியில் ஏற்பட்டது. ஹிஜ்ரி 611 ஆம் ஆண்டு துல்ஹஜ் பிறை (கி.பி.1215 ஏப்ரல் 2 அன்று) காஜா நாயகம் அவர்களின் ஆன்மீக ஆசான் உதுமான் ஹாரூனி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மாணவரைக் காண்பதற்காக அங்கு வருகை தந்தனர். ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் தம் ஆசானின் ஆசானின் ஆசானையும் காண்பதற்கு தங்களுக்கு இறைவன் தந்த இரு கண்கள் பற்றாது மூன்றாவது கண்ணும் வேண்டுமென்று டில்லி மாநகர மக்கள் பேசிக் கொண்டார்கள்.

சுல்தான் அல்தமிஷும், தம் அமைச்சர் பெருமக்களுடன் உதுமான் ஹாரூனி அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் நாயகம் அவர்களை நோக்கி ஆன்மீகப் பாதையில் வழிகாட்டும் ஒரு நூலை ஆக்கிக் கொடுக்குமாறு ஆணையிட்டனர்.

அவ்விதமே அவர்கள் ‘கன்ஸுல் அஸ்ரார்’ என்ற பெயருடன் 25 பகுதிகளடங்கிய ஒரு நூலை எழுதி, சுல்தானுக்கு அன்பளிப்புச் செய்தனர்.

ஹிஜ்ரி 615 ல் உதுமான் ஹாரூனி அவர்கள் டில்லியை விட்டு மக்கா நகர் நோக்கி சென்றனர். அதன்பின் சிலகாலம் நாயகம் அவர்கள் டில்லியில் தங்கியிருந்து மன்னருக்கும், மற்றவர்களுக்கும் ஆன்மீக பயிற்சி அளித்துவிட்டு அஜ்மீர் திரும்பி அதையே தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டனர்.

சிறிது காலத்தில் நாயகம் அவர்களின் அன்பு மனைவி பீபி அமதுல்லாஹ் மறுமை வாழ்வை எய்தப் பெற்றனர்.

தமது 90ஆவது வயதில் ஷியாப் பிரிவைச் சார்ந்த பீபி இஸ்மத்துல்லாஹ்வை இரண்டாவதாக மணமுடித்துக் கொண்டனர். இதன் காரணமாக ஏராளமான ஷீயாக்கள் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு வந்தனர். இந்த திருமணத்தின் மூலம் காஜா நாயகம் அவர்களுக்கு ஜியாவுத்தீன் அபூஸயீத் என்ற மகன் பிறந்தார்.

இரவெல்லாம் கடும் வணக்கம் புரிந்து வந்தனர். சுமார் 70 ஆண்டுகள் தலையணையில் தலைவைத்து படுத்ததில்லை. ஒவ்வோர் இரவும் அவர்கள் மக்கா சென்று வணக்கம் நிகழ்த்தி விட்டு, வைகறைத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அஜ்மீர் திரும்பி விடுவர் என்றும், இந்தியாவிலிருந்து சென்ற யாத்ரிகர்கள் அவர்களைப் பலதடவை கஃபாவை இடம் சுற்றி வரக்கண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

திருக்குர்ஆனை ஓதிவருவதில் மிகவும் இன்புற்றிருப்பார்கள். நான் அவர்களின் ஊழியத்தில் இருபதாண்டுகள் இருந்துள்ளேன். அதில் அவர்கள் ஒருநாள் கூட தமக்கு உடல் நலத்தை வழங்குமாறு கேட்கவில்லை என்று குத்புத்தீன் பக்தியாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தனர். அன்னாரின் அருளுரைகளைக் கூறும் போதெல்லாம் உளம் உருகிக் கண்ணீர் சொரிவார்கள். ஒரு தடவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளுரைகளைக் கூறிய அவர்கள்> ‘நியாயத் தீர்ப்பு நாளின்போது, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களின்திருவதனத்தைப் பார்க்க நாணமுறுபவனைப் போன்ற கொடிய பாவி எவனுமில்லை. அப்பொழுது நாணமுறுபவன், வேறு எங்கு போய்த்தான் ஒளிந்து கொள்வான்? அவனுக்குப் புகலிடம் தான் ஏது?’ என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதார்கள்.

இறையச்சம் அவர்கள் உள்ளத்தை எப்பொழுதும் ஆட்கொண்டிருந்தது. சிலபொழுது இறையச்சத்தால் நடுங்கவும், தேம்பித் தேம்பி அழவும் செய்வர்.

தம்மைக் கொல்ல வந்தவனை தன் உள்ளுணர்வால் தெரிந்து கொண்ட அவர்கள் அதை அவனிடம் சொல்லியதும் அதிர்ந்த அவர் நாயகம் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு இஸ்லாத்தை தழுவினார். 14 தடவை மக்காவிற்கு நடந்து சென்று ஹஜ்ஜு செய்து அங்கேயே இறப்பெய்தி ஜன்னத்துல் முஅல்லாவில் அடங்கப் பெற்றார்.

தாழ்மையின் உருவாக விளங்கிய அவர்கள் எவருக்கும் அவர்களே முதலில் ஸலாம் கூறுவர். வயோதிகர் எவரும் தம்மைக் காணவரின் அவரைக் கண்டதும் எழுந்து நின்று அவருக்கு முதலில் ஸலாம் உரைத்து> வரவேற்று அமரச் செய்வார்கள். தேவையுடையோரின் தேவைகளை ஒவ்வொரு நாளும் காலையில் சென்று விசாரித்து அவற்றை நிறைவேற்றி வைப்பார்கள்.

அவர்களின் உணவும், உடையும் மிக எளிமையாக இருந்தன.நோன்பு நோற்க விலக்கப்பட்ட நாட்களைத் தவிர்த்து மீதி நாட்களில் நோன்பு நோற்றார்கள். எப்பொழுதும் பகீர்களின் உடையை அணிந்து வந்த அவர்கள், அது கிழிந்துவிடின் அதில் ஒட்டுப் போட்டு தைத்து அணிந்து கொள்வார்கள்.

நாயகம் அவர்கள் பேரின்ப இசை நிகழ்ச்சிகளிலும் அதிக ஈடுபாடுடையவர்களாக இருந்தனர். அதில் கலந்து கொண்டு அவர்கள் சொக்கி மகிழ்ந்து தம்மையே மறந்த நிலையிலாகிவிடுவார்கள்.  அவர்களுடன் ஷைகு ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்தீ, ஷைகு முஹம்மது கிர்மானீ> ஷைகு முஹம்மது இஸ்பஹானீ போன்ற இறைநேசச் செல்வர்களெல்லாம் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று அவர்களின் மாணவர் குத்புத்தீன் பக்தியாரி காக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஆன்மீக செங்கோல் செலுத்தி சுமார் 90 இலட்சம் பேர்களை இஸ்லாத்தில் இணைத்த நாயகம்அவர்கள் 97 வயதானபோது தமக்கு இறப்பு அண்மி விட்டதை அறிந்து தம் மாணவர் குத்புத்தீன் பக்தியாரி அவர்களை அஜ்மீர் வருமாறு அழைத்து ‘இன்னும் சின்னாட்களில் நான் மறைவேன்’ என்று சொல்லி தமது பிரதிநியை நியமிக்கும் கிலாஃபத் நாமாவை ஷைகு அலீ சஞ்சரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எழுத்ச் செய்து அவர்களிடம் ஒப்படைத்து, அவர்களை டில்லிக்கு அனுப்பி வைத்து விட்டுத் தாங்கள்  உலகிற்கு வந்த பணி நிறைவுற்றதென மனநிறைவுற்றார்கள்.

இதன்பின் சில நாட்கள் உருண்டோடிசர்ன. ஹிஜ்ரி 627 ஆம் ஆண்டு ரஜப் மாதம், ஆறாம் நாள் (கி.பி. 1226 மே 21) திங்கட்கிழமை இரவு இஷா தொழுதபின் ததம் அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தனர். வைகறையில் கதவு தட்டப்பட்டபோது அது திறக்கப்படவில்லை. பிறகு ஒருவாறு கதவை திறந்து சென்று பார்த்தபோது, அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்திருந்தார்கள். அவர்களின் நெற்றியில் ‘ஹாதா ஹபீபுல்லாஹ் – மாத்த பி ஹுப்பில்லாஹ் (இவர் அல்லாஹ்வின் நேசர், அல்லாஹ்வின் நட்பிலேயே உயிர் நீத்தார்) என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டதும், அவர்களின் வியப்புப் பன்மடங்கு அதிகமாகியது.

விடிந்ததும் அவர்களின் மூத்த மகன் காஜா பக்ருத்தீன் தந்தையின் ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்த பின்னர் அவர்களின் பொன்னுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாயகம் அவர்கள் மறைந்த செய்தி டில்லியிலிருந்த அவர்களின் கலீபா குத்புத்தீன் பக்தியாரி காக்கி அவர்களுக்குப் பல நாட்களுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.

நாயகம் அவர்களின் அடக்கவிடத்தை ஷைகு ஹமீதுத்தீன் நாகூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியில் தோன்றிய ஷெய்கு ஹுஸைன் நாகூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பராமரித்து வந்தார்கள். அப்பொழுது காஜா நாயகம் அவர்களின் அடக்கவிடத்தின் மீது யாதொரு கட்டிடமும் எழுப்பப்படவில்லை.

அரசர் மஹ்மூது கில்ஜி அன்னாரின் மகிமையை உணர்ந்து அவர்களை பல்முறை டில்லிக்கு வருமாறு அழைத்தும் அவர்கள் செல்லவில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியைக் காண வருமாறு அழைத்ததுமே அதைக் காண அங்கு சென்றார்கள். சுல்தான் ஷெய்கு ஹுஸைன் நாகூரிக்கு பணமுடிப்பு அளித்தும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தம் மகனாரின் வேண்டுகோளை ஏற்று காஜா நாயகத்தின் அடக்கவிடத்தின் மீது கட்டிடம் கட்டும் எண்ணத்தோடு அப்பணத்தைப் பெற்று அதைக் கொண்டு அவர்களின் கட்டிடம் நிர்ணமானிக்கப்பட்டது.

பின்னர் சுல்தான் மஹ்மூது கில்ஜி தர்காவின் அண்மையில் இறைவனைத் தொழுவதற்காக ஒரு பள்ளிவாயிலை நிர்மாணித்தார். அதுவே இப்பொழுது ‘ஸந்தல் மஸ்ஜித்’ என்ற பெயருடன் திகழ்கிறது. அவரே ‘புலந்து தர்வாஸா'(உயரமான வாசல்) என்ற பெயருடன் விளங்கம் வாயிலையும் நிர்மாணித்தார்.

மால்டாவின் மன்னர், மால்தேவை வென்றபின் டில்லி மன்னர் ஷெர்ஷா சூரியும் அஜ்மீர் வந்து காஜா நாயகத்தை தரிசித்து அங்கு நிலவிய தண்ணீர்ப் பஞ்சத்தை அறிந்து அங்கு தம் பெயரால் ஓர் ஏரியை வெட்ட ஏற்பாடு செய்தார்.

பின்னர் டில்லியை ஆண்ட பேரரசர் அக்பரும் பலதடவை நாயகத்தின் தர்பாருக்கு வருகை தந்துள்ளார். சித்தூரில் வெற்றி கிடைத்தால் கால்நடையாகவே அஜ்மீர் வருவதாக நிய்யத்து செய்து வெற்றி கிடைத்ததும் அதன்படியே செய்து தமது நேர்ச்சையை நிறைவேற்றிக் கொண்டார். அவருக்கு மகன்கள் பிறந்த பின்னரும் பலமுறை அஜ்மீர் வருகை தந்துள்ளார். சிவப்பு நிறக்கற்களால் ஒரு பள்ளிவாயிலும், காஜா அவர்கள் வாழ்ந்து மறைந்த குளிப்பாட்டப்பட்ட இடத்தில்> தர்வேஷ்கள் தங்குவதற்கு ஒரு தங்குமிடமும் ‘ஸஹன் சிராஹ்’ என்ற விளக்கு மண்டபமும் நிர்மாணித்ததோடு, 125 மணங்கு (தபர்ருக்) சோறு சமைக்கக் கூடிய பெரிய செம்பு சட்டி  ஒன்றையும் செய்து கொடுத்தார். மேலும் அஜ்மீரைச் சுற்றி பாதுகாப்புச் சுவரும் எழுப்பினார்.

அக்பரின் மகன் சலீம் என்ற ஜஹாங்கீர் பலமுறை அஜ்மீர் தர்காவிற்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள சிறிய செம்பு சட்டி அவர் காணிக்கையாக நல்கியதேயாகும். அதில் ஒரு வேளைக்கு 60 மணங்கு சோறு சமைக்கலாம். இதை காணிக்கையாக வழங்கிய அன்று இதில் சோறு சமைத்து 5000 ஏழைகளுக்கு வழங்கினார் அவர்.

அவரின் மகன் ஷாஜஹானும் இங்கு 5 தடவை வந்து அடக்கவிடத்தை தரிசித்தார். இங்கு வெள்ளை சலவைக் கற்களாலான ஒரு பள்ளிவாயிலையும், நகார்கானாவையும் நிர்மாணித்தார்.

ஷாஜஹான் மகள் ஜஹானரா ஹிஜ்ரி 1503 ஷஃபான் மாதம் 18 ஆம் தேதி காஜா நாயகத்தை தரிசிக்க சென்று ரமலான் மாதம் 7 ஆம் நாள் அஜ்மீர் சென்று அன்னாரின் அடக்கவிடத்தை தரிசித்ததை மிகவும் பாக்கியமாக கருதி தம்முடைய ‘முனிஸுல் அர்வாஹ்’ என்ற நூலில் வரைந்துள்ளார். மேலும் தமக்கு ஊழியம் செய்ய வந்த ஊழியர்கள் அனைவரையும் அங்கேயே விட்டு விட்டு> டில்லி மீண்டார். அந்த ஊழியர்களின் வழித்தோன்றல்களே இன்றும் அங்கு ஊழியம் செய்து வருகிறார்கள்.

ஷாஜஹானுக்குப் பின் அரியணை ஏறிய அவ்ரங்கசீபும் காஜா நாயகம் அவர்களின் தர்பாருக்கு பலமுறை வந்துள்ளார். அஜ்மீருக்கு வரும் ஒவ்வொரு தடவையும் தம் தங்குமித்திலேயே ஆயுதங்களை வதை;துவிட்டு> கால்நடையாகவே காஜா அவர்களின் அடக்கவிடத்திற்கு வந்து தரிசித்து வந்தார். அப்பொழு ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் காணிக்கை செலுத்தி வந்தார்.

பிற்காலத்தில் காஜா அவர்களின் அடக்கவிடத்திற்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவி மேரி ராணி அம்மையார்> ஆப்கான் அமீர் ஹபீபுல்லாஹ் கான்> ராம்பூர் நவாப் ஹாமித் அலீகான்> ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீகான்> தீதா சமஸ்தான மன்னர் மகாராஜா கோபதிசிங்> தோல்பூர் மகாராஜா ராஜா உதயபான் சிங்> மகாத்மா காந்தி> ஜவஹர்லால் நேரு> மௌலானா முஹம்மது அலீ ஜவ்ஹர் ஆகியோரும் வந்து தரிசித்து சென்றுள்ளனர்.

மலேசிய தேர்தலில் வெற்றி பெற்ற துங்கு அப்துர் ரஹ்மான் அமைச்சராக பொறுப்பேற்றதும் அஜ்மீர் வந்து காணிக்கை செலுத்தி சென்றார்.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோரும் இந்த இடத்தை வந்து தரிசித்து சென்றுள்ளனர். பராக் ஒபாமா நாயகம் அவர்களின் அடக்கவிடத்திற்கு அழகிய போர்வையை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.

ஜாதி> மத பேதமின்றி அனைவரையும் மாட்சிமையுடன் ஆட்சி செய்யும் அஜ்மீர் நாயகம் அவர்களின் மாண்பினைக் கண்டேன் என்று கி.பி. 1902 ஆம் ஆண்டில் அங்கு வருகை தந்த இந்திய வைஸ்ராய் கர்ஸன் பிரபு தர்காவின் நிகழ்ச்சிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Your email address will not be published.