ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

பனீ இஸ்ரவேலர்கள் வமிசத்தில் ஹழ்ரத் அல் யஸஉ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரராக ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூன்றாவது தலைமுறையில் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றினார்கள்.

ஹழ்ரத் ஹர்கீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மரணத்திற்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்கள் விக்கிரகத் தொழும்பர்களாகவும், எல்லாவிதத் தீமையில் ஈடுபடுபவர்களாகவும் மாறிவிட்டார்கள். இவர்களை நேர்வழிப்படுத்தவே அல்லாஹ் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக அனுப்பினான். ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்ராத் வேதத்தையே பின்பற்றினார்கள்.

யூஷஃ இப்னு நூன் ஸிரியா நாட்டை வென்ற பிறகு பனீ இஸ்ரவேலர்களுக்கு அதனைப் பங்கிட்டுக் கொடுத்திருந்தார்கள். அதில் ஒரு பகுதியாக இருந்ததுதான் ஸமாரியா என்ற சிறு நாடு. இதனை அஹப் என்பவன் ஆண்டு வந்தான். அதன் தலைநகரின் பெயர் ‘பஃலபக்’ ஆகும். இந்தப் ‘பஃலபக்’ என்ற பெயர் வந்ததற்கு காரணம் ‘பஅல்’ என்ற 60அடி உயர விக்கிரகம் ஒன்று இருந்தது. இது வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தூய்மைப்படுத்த 400பேரை அரசன் நியமித்திருந்தான். இது சக்தி வாய்ந்தது என்றும்> நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் என்றும் அவர்கள் நம்பி அதற்கு அளவுக்கு மீறிய மரியாதையும் அளித்து வந்தனர். அந்த விக்கிரகத்தின் வயிற்றுக்குள் ஷைத்தான் புகுந்து கொண்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தான். இந்த மக்களை திருத்தவே அல்லாஹ் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக அனுப்பியிருந்தான்.

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அரசன் அஹபிற்கு புத்திமதி கூறி நேர்வழிப்படுமாறு உபதேசித்து வந்தார்கள். இதேபோல் பல்வேறு சிற்றரசர்களுக்கும் உபதேசித்து வந்தார்கள். அத்தனைப் பேரில் ஒரே ஒருவர் மட்டும் அதைக் கேட்டு முஸ்லிமானார்.

அரசன் அஹபின் மனைவி அஸ்பீல் அரசன் வெளிநாட்டிற்குச் சென்றுவிடும்போதெல்லாம் இவள்தான் அரசாட்சியைக் கவனித்து வந்தாள். இதற்குமுன் 7மன்னர்களை மணம் முடித்து அதன் மூலம் எழுபது ஆண்மக்களை பெற்றாள். நல்லடியார்களையும்> நபிமார்களையும் கொன்றுள்ளாள். கடைசிக் கணவனை முடிக்கும் போது மூப்பு வந்து விட்டதால் அஹபை கொல்ல முயற்சிக்க முயலவில்லை.

அரசன் அஹபுடைய அரண்மனைக்கு அருகாமையிலேயே இறைநேசர் மஸ்தகியின் வீடும்> தோட்டமும் இருந்தது. மஸ்தகி மிகவும் கண்ணியமானவர். எவர் பொல்லாப்புக்கும் போகமாட்டார். சர்வகாலமும் இறைதியாத்திலேயே இருந்து வந்தார். அவருடைய தோட்டம் எல்லோரையும் கவரக் கூடியதாக இருந்து வந்தது. அதனை தம் வசப்படுத்திட அரசி முடிவு செய்தாள். ஆனால் அதற்கு அரசர் தடை செய்து வந்தார். ஒருமுறை அரசர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தபோது அரசி மஸ்தகியை கொலை செய்துவிட்டு அந்த தோட்டத்தை தன் வசப்படுத்திக் கொண்டாள்.

அந்த அரசனிடம் சென்று அவனுக்கு நற்போதனைகள் செய்யுமாறும்> பிறர் பொருளைக் காரணமின்றிப் பறிப்பது பெருங்குற்றமென்றும் உடனே அந்தத் தோட்டத்தை இறந்தவருடைய வாரிசுதாரர்கள் வசம் ஒப்படைத்து விடுமாறும், விக்கிரகத் தொழும்பை விட்டு அல்லாஹ்விற்கு மட்டும் சிரம்பணியுமாறும் இதற்கு உடன்படாவிடிலல் கடுமையான சிறைத் தண்டனையைச் சந்திக்க வேண்டி வருமென்றும் எச்சரிக்குமாறு அல்லாஹ், ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவித்தான்.

நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவ்வாறே செய்தார்கள். ஆனால் தமக்கு புத்தி சொல்ல இவர் யார் என்று கடும் கோபம் கொண்டார். எனவே இல்யாஸ் நபி அவர்களுக்கு கடும் தொல்லை கொடுத்து அவர்களைக் கொன்றுவிடவும் திட்டமிட்டான். இதனையறிந்த இல்யாஸ் நபி அவர்கள் மிகவும் மனவேதனையடைந்து பொறுமையிழந்தவர்களாய் அந்த ஊரை விட்டுப் புறப்பட்டு மலைத்தொடர்கள் நிறைந்த பகுதியில் போய்த் தங்கிக் கொண்டார்கள். இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பல ஒற்றர்களை ஏவியிருந்தான் அரசன் அஹப். நபி அவர்கள் அந்த மலைப்பகுதியில் 7வருடகாலம் வாழ்ந்தார்கள்.

இந்நிலையில் அரசனுக்கு பிறந்த ஒரே மகன் கடும் நோய்வாய்ப்பட்டான். மனம் பதைபதைத்துப் போன அரசன், தேவதை பஅலுக்கு இரவும்> பகலும் பூஜை போட்டுப் பார்த்தான். நோய்தான் குணமானபாடில்லை. பூஜாரிகள் இதற்கெல்லாம் காரணம் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் என்று அரசரிடம் சொன்னார்கள்.

ஸிரியா நாட்டில் உள்ள தேவதை மிகவும் சக்தி வாய்ந்தது. அங்கு இளவரசனை அழைத்துச் சென்றால் குணம் கிடைக்கும் என்று பூஜாரிகள் சொன்னார்கள். இதனால் ஒரு கூட்டம் சிரியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இல்யாஸ் நபி அவர்கள் தங்கியிருந்த பகுதிவழியாக செல்ல நேரிட்டது. அவர்களை இடைமறித்து, நல்லுபதேசம் செய்தார்கள்.

அந்த நல்லுபதேசங்களை கேட்ட அந்தக் கூட்டத்தினர் ஸிரியா செல்லும் நோக்கத்தை கைவிட்டு முஸ்லிமாகி> மறுபடியும் பஃலபக் நகருக்கே திரும்பிவிட்டனர். இவர்கள் மூலம் இல்யாஸ் நபி இருந்த இடத்தை அரசன் தெரிந்து கொண்டான்.

இதனால் ஒரு 50பேர் கொண்ட கூட்டத்தைத் தயாரித்தான். நாங்கள் அனைவர்களும் உங்கள் பேரில் விசுவாசம் கொண்டோம். எனவே தாங்கள் நகருக்குள் வந்து பனீ இஸ்ரவேலர்களுக்கு நற்போதனை செய்து அவர்களையும் விசுவாசம் கொள்ள வேண்டும் என்றும்> இதில் நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் கூறி அவர்களை ஊருக்குள் வரவைக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அந்த 50பேர் கொண்ட கூட்டம் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்து அரசன் சொன்னவாறு சொன்னார்கள். நபி அவர்களுக்கு அவர்களின் பேச்சுக்களில் நம்பிக்கை ஏற்படவில்லை. அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள். உடனே வானிலிருந்து ஒரு தீப்பிழம்பு அந்நயவஞ்சகக் கூட்டத்தினர் மீது பாய்ந்து அவர்களனைவரையும் சுட்டுக் கரித்து விட்டது.

பின் சில முரடர்களை அனுப்பி அவர்களை கட்டி கொண்டு வருமாறு அனுப்பினான். அவர்களும் அவ்வாறு முயற்சிக்கவே நபியவர்கள் அல்லாஹ்விடம் கேட்க> வானிலிருந்து தீப்பிழம்பு சீறிப்பாய்ந்து அவர்களனைவரையும் ஒருசில நொடிகளில் சுட்டுக் கரித்து சாம்பலாக்கிவிட்டது.

அரசனின் அவையில் இருந்த ஒரு முஸ்லிம் மந்திரியை அழைத்து அவர் மாதிரி சிலர் முஸ்லிமாக விரும்புவதாகவும் எனவே நகருக்குள் வருமாறும் கேட்டு அவர்களை நகருக்குள் அழைத்து வர அனுப்பினான். அவர்கள் வரவில்லை என்றால் அவர்களை கொலை செய்துவிட சில முரடர்களை மறைமுகமாக அனுப்பினான். அவரும் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்து பஃலபக் நாட்டு நிலவரங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினார். ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அல்லாஹ் முஸ்லிம் மந்திரியுடன் செல்லுமாறும் அவ்வாறு செல்லவில்லையென்றால் உங்களை கொலை செய்ய அரசன் ஆளனுப்பி உள்ளார் என்றும் வஹீ அறிவித்தான்.

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம்மை அழைக்க வந்த மந்திரியுடன் பஃலபக் நாட்டிற்குப் புறப்பட்டார்கள். அவர்களுக்கு முன்னதாகவே> அவர்களைக் கொல்ல திட்டமிட்டிருந்த கூட்டம் நகருக்குள் சென்று அரசரிடம் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருகிறார்கள் என்று சொல்லியது.

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் ஊருக்குள் நுழைந்த சமயம் அரசனின் மகன் இறந்துவிட்டான். இந்த களேபரத்தில் ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அரசன் மறந்து போனான். மலைவாழ்வு வாழ்ந்த இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் நகருக்குள் ஓரிடத்தில் வாழலாம் என்று முடிவு செய்து ஒரு குடிலைத் தேர்ந்தெடுத்தனர். அது நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மத்தாவினுடையதாக இருந்தது.

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த வீட்டைவிட்டு சென்றுவிட்ட பின்னர் மத்தா அம்மையாருக்கு மனநிம்மதி அழிந்து போனதோடு> குழந்தையாக இருந்த ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறந்து போய்விட்டார்கள். இதனால் பெரும் கவலையில் ஆழ்ந்து விட்ட அந்த அம்மையார் நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மலைப்பகுதிக்குள் தேடிக் கண்டுபிடித்து தமது வீட்டிற்கு வருமாறும் இறந்துவிட்ட குழந்தையை அல்லாஹ்விடம் துஆ செய்துமீண்டும் உயிர்ப்பெற்று வாழ உதவி செய்ய வேண்டுமென்றும் மன்றாடிக்கேட்டுக் கொண்டார்கள்.

ஹழ்ரத் இல்யாஸ் நபி அவர்கள் மாத்தா அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் வீட்ற்கு வருகைதந்து அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் உயிர்ப்பிக்கச் செய்தான். உயிரில்லாமல் நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 2வாரங்கள் இருந்ததாகவும், ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவினால் தூக்கத்தில் இருந்து எழுபவரைப் போல எழுந்து உட்கார்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சிறிதுகாலம் மத்தா அம்மையாரின் வீட்டிலேயே வாழ்ந்து வந்த இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு சேவையிலும் ஈடுபடாது வீட்டில் அடைபட்டிருப்பதை வெறுத்து, மீண்டும் மலைப் பொதும்பு வாழ்வை மேற்கொண்டார்கள். பனீ இஸ்ரவேலர்களைத் திருத்த தாம் இவ்வளவு முயற்சி மேற்கொண்டும் அவர்கள் திருந்தாததால் மிகவும் மனவேதனையுடன் இறைவனிடம் அவர்கள் மீது தண்டனை இறக்க வேண்டினார்கள்.

அல்லாஹ் மூன்று வருடகாலம் அந்தப் பிரதேசத்தில் மழை இல்லாது செய்தான். இதனால் புற்பூண்டுகள் கருக ஆரம்பித்தன. பறவையினங்களும்> விலங்கினங்களும் செத்தொழிய ஆரம்பித்தன. ஒரு சொட்டுத் தண்ணீருக்குக் கூட அந்த மக்கள் ஆளாய்ப் பறக்க ஆரம்பித்தனர்.

நபியவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு அல்லாஹ் சில பட்சிகளை ஏவியிருந்தான். அவைகள் அதற்கு உணவுகள் கொடுத்து வந்தன. பஃலபக் நகரம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அந்த நகருக்குள் சென்றார்கள் இல்யாஸ் நபியவர்கள். அவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தார்கள். அவர்கள் கால்பட்டதும் அந்த வீடுகளில் பஞ்சம் அகன்று சுபிட்சம் பெறத் துவங்கியது.

ஒரு வீட்டில் நுழைந்து பார்க்கும்போது அங்கு ஒரு சிறுவன் நோய்வாய்ப்பட்டிருந்தான். அவர்களை குணப்படுத்த சில நாட்கள் அவர்கள் அந்தவீட்டிலேயே தங்க வேண்டியது ஏற்பட்டது. அந்தச் சிறுவன் குணமடைந்ததும் நபி இல்யாஸ் அவர்களுக்கு ஊழியனானார். அவர்கள்தான் ஹழ்ரத் எஸஉ அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களும், இலட்சக்கணக்கான ஜீவராசிகளும் இறந்து போயினர். இந்த நிலையைக் கண்டு ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகவும் மனம் வருந்தினார்கள். அந்த மக்களை நோக்கி> ‘விக்கிரக வணக்கத்தை விட்டொழித்து வல்ல அல்லாஹ்வை வணங்குங்கள். அவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள். அல்லாஹ் மன்னிப்பதில் நிகரற்றவன். கண்டிப்பாக மழையை வருஷிப்பான். அதனால் பஞ்சம் நீங்கும். உங்கள் வாழ்வு மலர்ந்து விடும்’ என்று உபதேசித்தார்கள்.

ஆனால் அந்த மக்கள் அவர்களின் உபதேசங்களுக்கு செவிமடுக்காது சிலைவணக்கத்திலேயே ஈடுபட்டு வந்தனர். வெயில் தாக்கம் இன்னும் அதிகமாயிற்று.

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மக்களைப் பார்த்து, ‘இப்பவாவது புரிந்து கொண்டீர்களா? இந்த விக்கிரகங்கள் உங்களுக்கு உதவாது என்று.

அதற்கு அவர்கள் சொன்னார்கள் நீங்கள்; உங்கள் அல்லாஹ்விடம் சொல்லி முதலில் மழை பொழியச் செய்யுங்கள். உண்மையாகவே அப்படி மழை பொழிந்து விட்டால்> நீங்களும் உங்களுடைய அல்லாஹ்வும் உண்மையாளர்கள் என்று நம்பி நாங்கள் எங்கள் தெய்வங்களை வணங்கி வருவதை விட்டு விடுகிறோம் என்றார்கள்.

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மழை பொழியச் செய்யும்படி துஆ செய்தார்கள். அல்லாஹ் அவர்களது துஆவை உடனே ஏற்றுக் கொண்டு பலத்த மழையைப் பொழியச் செய்தான். வறண்ட பூமி செழிப்படைந்தது.

இவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டபிறகும் அந்த மக்கள் மனங்கள் மட்டும் மாறுதல் அடையவில்லை. அவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிபடி நடந்து கொள்ளாது> மீண்டும் தங்களது வழமைபோல் விக்கிரக ஆராதனை செய்ய ஆரம்பித்துவிட்டனர்;.

ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனம் வெறுத்து போய்> இந்த மக்கள் நேர்வழி பெறுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. இனி இவர்களோடு வாழ நான் விரும்பவில்லை. என்னை உன்னிடமே அழைத்துக் கொள்’ என்று கண்ணீர் வீட்டு கேட்டார்கள்.

உடனே ஒளிப்பிழம்புடன் ஒரு புரவி வந்தது. அதில்ஏறி, தம் மேல் துணியை அல்யஸஃவின் தோள்களில் வீசித் தம் பிரதிநிதியாக நியமித்துச் சென்றார்கள். உயிருடன் வாழும் நபிமார்களில் ஒருவராக ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருக்கிறார்கள்.

Add Comment

Your email address will not be published.