துல்ஹஜ் மாதத்தின் சிறப்பும் அரஃபா நோன்பும் அமல்களும்.
By Sufi Manzil
இஸ்லாமிய ஆண்டுக்கணக்கில் இறுதி மாதமாகிய இது சிறப்புற்ற மாதங்களில் ஒன்றாகும். ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் நிகழ்வுறும் மாதமாக இருப்பதால் இதற்கு துல்ஹஜ் எனப் பெயர் ஏற்பட்டது. துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள் புனிதமானவை.
திருக்குர்ஆனில் இறைவன்,
وَلَيَالٍ عَشْرٍۙ وَالْفَجْرِۙ
‘இன்னும் பத்து இரவுகள் (மீது பிரமாணமாக!)’- 89:1-2
இவ்வசனத்தில் கூறப்பட்ட பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும். இக்கருத்தைத் தான் எல்லா குர்ஆன் விரிவுரை இமாம்களும் உலமாக்களும் ஏகோபித்துக் கூறியுள்ளனர். இக்கருத்துத் தான் சரியானது என இமாம் இப்னு கதீர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களும் கூறியுள்ளார்கள்.
لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِ ۚ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். (அல்குர்ஆன் : 22:28) இவ்வசனத்தில் குறிப்பிட்ட நாட்களில் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும் என இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு), இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர் கூறிய இக்கருத்தைத் தான் உலமாக்கள் அனைவரும் ஏகோபித்து கூறியுள்ளனர்.
இந்த 10 நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படும் நற்செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பானவையாகும். இந்தப் பத்து இரவுகள் ரமலான் மாதத்தைத் தவிர உள்ள எல்லா நாட்களை விட மேலானவை. இந்நாட்களில்தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம் உரையாடவும், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனால் மன்னிக்கப் பெறவும், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக ஆடு பலியிடப் பெறவும், ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துன்பத்திலிருந்து விடுதலைப்பெறவும், ஹுதைபிய்யாவில் நபித் தோழர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கரம் பற்றி பைஅத் செய்யவும் செய்தார்கள்.
இந்த ஒன்பது நாட்களும் குறிப்பாக ஒன்பதாம் நாள் (அரஃபா நாள்) நோன்பு நோற்பது சுன்னத். அன்று ஹஜ்ஜு சென்றிருக்கும் ஹாஜிகள் அரஃபாத்திலிருப்பார்கள். அவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை.
இம்மாதம் தலைப்பிறை அன்றே இப்றாஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகனார் இப்றாஹீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்தனர். இம்மாதம் பிறை 26ல்தான் ஹழ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்தனர்.
அரபா தினத்தின் சிறப்புகள்:
ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளன்று ‘அரபா தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான். ஹிஜ்ரி 10–ம் ஆண்டு நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின் போதும், துல்ஹஜ் பிறை 9–ம் நாளான அரபாதினத்தில்,
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا ؕ
‘இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்’ (திருக்குர்ஆன் 5:3) என்ற வசனம் இறங்கியது. தாரிக் இப்னு ஷிஹாப்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.
யூதர்கள் உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், ‘நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்று கூறினர். உமர்(ரலியல்லாஹு அன்ஹு), ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ் -9ஆம்) நாளில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் அறிவேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம். (இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்; ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்’ எனும் (திருக்குர்ஆன் 5:3 வது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக்கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.
நூல்: புகாரி: 4606
யூதர்களில் ஒருவர் உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ‘அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ‘அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார். ‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்’ (திருக்குர்ஆன் 5:3) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) ‘அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்’ என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.
நூல்: புகாரி: 45
அரபா தின நோன்பு
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாவது தினத்திலும், ஆஷூரா தினத்திலும், ஒவ்வொரு மாதமும் மூன்று தினங்களிலும் நோன்பு நோற்கக் கூடியவராக இருந்தார்கள்.
நூல் : அஹ்மத், அபுதாவூத்
துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூகத்தாதா அல்அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: முஸ்லிம் 2151 மற்றும் புகாரி, அபூதாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா
அரபா தினத்தை விட சிறந்த நாள் வேறெதுவும் கிடையாது. மற்ற தினங்களை விட அன்றைய தினத்தில் அதிகமான நரக கைதிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடுதலை அளிக்கிறான். அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி வந்து, அவர்களின் மாண்பு குறித்து வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நூல்: முஸ்லிம் அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்களுக்குரிய ஸுன்னத்தாகும்.
புனித ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் அரபா தினத்தில் அதிகமதிகம் நன்மைகள் பலவற்றை புரிவதற்கும், உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவதற்கும் ஹாஜிகள் இந்நோன்பை நோற்க முடியாது.
அரபா நாளின் சிறப்பை அறிந்துதான் நமது முன்னோர்கள் அரபா நாளன்று புதுமனைப் புகுதல், புதிதாக கட்டப் போகும் கட்டிடங்களுக்கு அடிக்கல்நாட்டுதல், பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், இன்னும் பல்வேறு விசேச வைபவங்களை இந்நாளில் சிறப்புற செய்து வந்திருக்கின்றனர். அதனால் பலனும் பெற்றிருக்கின்றனர்.
அரபா நாளின் இரவில் ஓதவேண்டிய துஆக்கள்
உல்ஹியா (குர்பானி) கொடுத்தல்:-
துல்ஹஜ் பத்தாவது தினத்திலும் அய்யாமுத் தஷ்ரீக்குடைய (துல்ஹஜ் பிறை 11,12,13) தினங்களிலும் குர்பானி கொடுப்பது ஸுன்னத்தாகும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இத்தினத்தில் தனது கையாலேயே இரண்டு ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்துள்ளார்கள்.
ஆதாரம் : ஸுனன் அபூதாவூத் 1767
அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்பான நாள் குர்பானி நாள் (துல் ஹஜ் பத்தாவது நாள் ) பிறகு துல்ஹஜ் 11 வது நாள்.
குர்பானிக்குரிய சட்டதிட்டங்கள் ஷாபிஈ
குர்பானிக்குரிய சட்டதிட்டங்கள் ஹனபி
தக்பீர் கூறுவது:-
பெருநாளைக்காக கூறக்கூடிய விசேட தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் இறுதி நாளான துல்ஹஜ் பிறை 13 அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல் வேண்டும். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123.
கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது சிறப்புடன் விரும்பத்தக்கது. தக்பீரின் வாசகங்கள்:
الله أكبر، الله أكبر، الله أكبركبيرا
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீறா
الله أكبر. الله أكبر. لاإله إلا الله والله أكبر .الله أكبر. ولله الحمد
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் அல்லாஹுஅக்பர் வலில்லாஹில் ஹம்து
துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹூ அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு,
நூல் – முஸ்லிம்
துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்கான காரணம் இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும். தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறைவேற்றப்படுகின்றன. இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை. எனவே நாம் இந்நாட்களில் நல்அமல்களில் அதிக கவனம் செலுத்துவது சிறப்புக்குரிய அம்சமாகும். -ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தமது பத்ஹுல் பாரி (ஸஹீஹுல் புஹாரியின் விளக்கவுரை) 2/ 534
ஹஜ்ஜும் உம்ராவும் :
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு உம்ரா மறு உம்ராவரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)
நூல்: புகாரி 2 /629
நன்னாளில் செய்யத் தகுந்த அமல்கள்
அல்லாஹ் இந்நன்நாட்களை மிகவும் சிறப்பித்துக் கூறியிருப்பதால் அவனுக்கு மிகவும் பிடித்த, அவன் வரையறுத்துள்ள நல்லமல்களை அதிகமதிகம் செய்ய வேண்டும். குறிப்பாக இரத்த பந்தங்களையும், உறவினர்களையும் ஆதரிப்பது, பசித்தவர்களுக்கு உணவளிப்பது, மக்களுக்கு மத்தியில் நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, நாவைப் பேணுவது, அண்டை வீட்டார்களுக்கு உதவுவது, விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது, அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது, நடைபாதையில் மக்களுக்கு தொல்லை தருவதை அகற்றுவது, மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் செலவு செய்வது, அனாதைகளை அரவணைப்பது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவது, மறைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் மகான்களின் கப்ருஷரீஃப்களை தரிசிப்பது, பெரியவர்களிடம் சென்று ஆசி பெறுவது, பாவமன்னிப்புத் தேடிக் கொள்வது, அதிகமதிகம் ஸலவாத்து ஷரீஃப்களை ஓதுவது, தரீகாகளின் அமல்களை செய்வது, உடன்படிக்கைகளை நிறைவேற்றுவது, ஹறாமானவற்றிலிருந்து பார்வையை தாழ்த்திக் கொள்வது,
தஹஜ்ஜத் மற்றும் உபரியான தொழுகைகளில் அதிக கவனம் செலுத்துவது. தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய திக்ருகளை ஓதுவது, காலை, மாலை திக்ருகளை செய்வது, முஸ்லீம்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் பங்கெடுப்பது, இது போன்ற அனைத்து நல் அமல்களிலும் ஈடுபட்டு அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், விலாயத்தைப் பெற்று முக்தி பெற முயற்சிப்போம்.
அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நமது ஷெய்குமார்களின் பொருட்டால் அருள்புரிவானாக! ஆமீன்.