ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

நபித்துவம் என்னுடன் முற்றுப் பெறாதிருந்தால் உமர் நபியாகத் தகுந்தவரே’ என்றும்,

உங்களிடையே நான் இன்னும் எத்துணை காலம் உயிர் வாழ்வேன் என்பதை நிச்சயமாக நான் அறிய மாட்டேன். எனக்குப் பின்னர் நீங்கள் அபூபக்கரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்றும்,

என அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

‘எல்லா அரபுகளின் அறிவையும் ஒரு தட்டில் வைத்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவைத் துலாக்கோலின் மறுதட்டில் வைத்தால் அந்த மறுதட்டே கனத்து நிற்கும்…. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு ஒரு கணம் அமர்ந்திருப்பதை ஓராண்டு கால வழிபாட்டை விட நான் மேலானதாக நினைக்கிறேன்’ என்றார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே வாளெடுத்து கொல்ல சூளுரைத்து வந்தவர்தானே ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

பொறுப்புகளை பகிர்ந்து மக்கமா நகரத்தை நிர்வகித்து வந்து பத்துக் குறைஷி கோத்திரங்களில் ‘அதீ’ கோத்திரத்தமும் ஒன்று. அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏழாவது தலைமுறைப் பாட்டனார் ‘முர்ரஹ்’வின் உடன்பிறந்தவரே அதீ.

அதீயின் புதல்வர் ஸராஹ்

அவரின் புதல்வர் கர்த்

அவரின் புதல்வர் அப்துல்லாஹ்

அவரின் புதல்வர் ரபாஹ்

அவரின் புதல்வர் அப்துல் உஜ்ஸா

அவரின் புதல்வர் நுபைல்

அவரின் புதல்வர் கத்தாப்

அவரின் புதல்வர் ஹழ்ரத் உமர்

இவர்களின் அன்னை’கன்த்தமா’ ஹிஷாம் இப்னு முகீராவின் மகள். இவ்வகையில் அபூஜஹலும் இவர்களுக்குத் தாய்மாமனே ஆக வேண்டும்.

எழுதப்படிக்கத் தெரிந்த பதினேழு பேரில் தாமும் ஒருவர் என்ற தகுதியை அவர்கள் தமக்குத் தாமே உண்டாக்கிக் கொண்டவர்கள் உமர் இப்னு கத்தாப் அவர்கள்.குறைஷிகள் சார்பாக பிற நாட்டவரிடமும், பிற கூட்டத்தாரிடமும் தூது செல்லும் பொறுப்பு அதீ குடும்பத்தாரைச் சார்ந்திருந்தது. வாழையடிவாழையாக தம்மை வந்து சேர்ந்த பொறுப்பை இனி தம் மகனார் உமரே வகிக்கத் தகுதியானவர் என எண்ணி அவர்களிடமே அதனை ஒப்படைந்து விட்டார் கத்தாப்.

இவ்வாறாக உமர் ரலியல்லாஹு அன்ஹு 27ஆம் வயதில் உலவிக் கொண்டிருந்த போது அண்ணலெம்பெருமானார் அல்லாஹ்வின் தூதர் என்று தம்மை அறிவித்து இஸ்லாத்தை எடுத்துரைக்க ஆரம்பித்திருந்தனர்.

ஏறத்தாழ ஆறாண்டு காலம் வரை அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. ஆனால் தம் உடன்பிறந்த தங்கை பாத்திமா, தங்கையின் கணவர் ஸஈத் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறவினர் நுஐம் இப்னு அப்துல்லாஹ் ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர்.

முஹம்மதை கொல்வேன் என்று வாளேந்தி சென்று கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வழியில் ஹழ்ரத் நுஐம் இப்னு அப்துல்லாஹ் தடுத்து, உமது வீட்டில் சென்று பாரும். அங்கு உம் தங்கையும், அவர் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளனரே என்று சொன்னார். அதற்கு ஆதாரமென்ன? என்று கேட்டார்.

உம்மால் அறுக்கப்பட்டவற்றின் இறைச்சியினை அவ்விருவரும் உண்ணமாட்டார்கள். ஏனெனில் நீர் அவற்றை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்திருக்க மாட்டீர் என்று.

ஒரு வெள்ளாட்டின் பொரித்த இறைச்சியை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு தம் உடன்பிறந்தாரின் வீட்டுக்கு சென்றார். உள்ளே இனிமையாக ஓதப்படும் குரல் கேட்டார்.

அதன் பிரதிகளை தம்மிடம் தருமாறும் அதைப் பார்த்துவிட்டுத் தருகிறேன் என்றும் கேட்டார்கள். நீர் சுத்தமாக குளித்து விட்டு வந்தால்தான் அதைத் தருவேன் என்று கூறினார் தங்கை. அவ்வாறே அவர் செய்து விட்டு வந்ததும்,

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ طه . مَا أَنزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَىٰ. إِلَّا تَذْكِرَةً لِّمَن يَخْشَىٰ.

‘அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவக்குகிறேன்.

தாஹா நபியே! அஞ்சக் கூடியவர்களுக்கொரு நல்லுபதேசமாகவே அன்றி நீர் துன்பப்படுவதற்காக இந்தக் குர்ஆனை நாம் உம்மீது அருள் செய்யவில்லை’

(அல்-குர்ஆன் 20:1-3)

என்று ஓதிய அவர்கள் தொடர்ந்து ஓத ஆரம்பித்தார்கள். இதில் எட்டாவது வசனத்தை ஓதி முடித்ததும்

அவனைத் தவிர வேறு யாரைத்தான் அழைப்பது? இதைத்தான் குறைஷிகள் எதிர்க்கிறார்களா? என்று

அங்கேயே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும், அண்ணல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவனின் தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன் என்றும் உரத்துக் கூறினார்கள்.

நேரே தாருல் அர்க்கம் சென்றார்கள். அண்ணலெம்பெருமானார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றனர்.

சஹாபாக்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அண்ணலார் உமர் நாயகத்திற்கும் ஹிஜ்ரத்திற்கு அனுமதி கொடுத்தார்கள். அன்னார் நெஞ்சுரத்தோடு குறைஷிகளின் முன் சென்று இந்த உமர் ஹிஜ்ரத் புறப்பட்டு செல்கிறான். தைரியமிருந்தால் தடுப்பவர்கள் தடுத்துப்பார்க்கட்டும் என்று வீரமாக பேசியே சென்றார்கள். அவர்களுடன் ஏறத்தாழ இருபத நபர்கள் இணைந்து சென்றார்கள்.

மதீனாவில் அன்னாரின் வாழ்வை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். நாயகத்தோடு இருந்த பதினோராண்டு காலத்தில் அவர்களின் வாழ்வு நாயகத்தோடு பின்னிப் பிணைந்தே இருந்தது.

முஹாஜிர்களுக்கும், அன்சார்களுக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட சகோதரப் பிணைப்பில் ஹழ்ரத் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸாலிம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தலைவரான உத்பா இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற அன்சாரியின் சகோதரர் ஆயினர். ஆரம்பத்தில் அந்த குடும்பத்தார் குபாவில் வாழ்ந்து கொண்டிருந்ததால் ஹழ்ரத் உமர் நாயகமும் ஆரம்பத்தில் சில நாட்கள் குபாவில் வாழ நேர்ந்தது. குபாவோ மதீனாவிலிருந்து மூன்று கல் தொலைவில் இருந்தது. அதனால் தொடர்ச்சியாக நாயகத்தின் மஜ்லிஸுகளில் கலந்து கொள்ள முடியாமலிருந்தது.

இஸ்லாத்தின் முதல் போரானது பத்ருபோரில் உமர் நாயகமும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களில் உமர் நாயகத்தின் குடும்பத்தினர் மட்டும் 12பேர் இருந்தனர்.

போரில் சிறைபிடிக்கப்பட்ட 70குறைஷிகளையும் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களிடமிருந்து ஈட்டுப் பணம்பெற்றுக் கொண்டு விடுவிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்தனர். ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ அந்த குறைஷிகள் அல்லாஹ்விற்கும் ரஸூலுக்கும் பகைவர்களல்லவா? எனவே அந்த கைதிகளை அவர்களின் உறவினர்களிடமே ஒப்படையுங்கள். அவர்கள் தத்தம் கரங்களாலேயே அவர்களின் உறவினர்களை வெட்டி மாய்க்கட்டும். இதுவே தண்டனை என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குமுறலாக கூறக் கேட்டதைக் கண்ட நபிகளார்,

‘என் தோழர் அபூபக்கர் நபிமார்களில் இப்றாஹீம், ஈஸா அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரைப் போன்றவர். உமரோ நூஹ், மூஸா அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரை ஒத்தவர்’ என வர்ணித்த நபிகளார் ஹழ்ரத் அபூபக்கர் அவர்களின் கருத்துக்கேற்பவே கைதிகளை விடுதலை செய்தனர்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் நடைபெற்ற உஹத் போரில் வீரத்துடன் போரிட்டனர். தாம் வென்று விட்டதாக ஆணவமாக கூக்குரலிட்ட குறைஷிகளுக்கு தக்க நேரத்தில் பதிலளித்து அன்னார்களின் சந்தோஷத்தை இல்லாமலாக்கினர்.

ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டில் அகழ்ப்போரில் தீவிரப் பங்காற்றினர்.

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டில் இறையில்லத்தை உம்ரா செய்யும் எண்ணம் கொண்டு நபி பெருமானார் அவர்கள் தங்கள் தோழர்களுடன் நிராயுதபாணியாகவே புறப்பட்டார்கள். ‘துல்ஹுலைஃபா’ என்ற இடத்தில் தங்கிய சமயம் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே, ‘பெருமானே! நாம் நிராயுதபாணியாக செல்வது சரியில்லை’ என்று சொன்ன கருத்தை நபிகளார் ஏற்று மதீனாவிலிருந்து ஆயுதங்களை கொண்டு வரச் செய்தார்கள். ஹழ்ரத் உமர் நாயகத்தின் ஊகம் சரியானது என்பதற்கு ஹுதைபிய்யாவில் நடைபெற்ற சம்பவங்களே சான்றாய் அமைந்து விட்டது.

ஹி;ஜரி ஏழாம்ஆண்டில் நடைபெற்ற கைபர் படையெடுப்பின் வெற்றியில் தங்களுக்கு கிடைத்த ஒரு நிலத்தை ஹழ்ரத் உமர் அவர்கள் அல்லாஹ்வுக்காக வக்பு செய்தார்கள். வரலாற்றில் வக்பு செய்யப்பட்ட முதல் பூமி இதுவே.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் மக்கா வெற்றியின் போது பெருமானார் கரம் பற்றி மக்கள் கூட்டம் கூட்டமாக பிரமாணம் ஏற்ற போது, பெண்களிடம் பிரமாணம் பெறும் பொறுப்பை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே ஏற்றிருந்தனர். அதனையடுத்து நடைபெற்ற ஹுனைன் போரிலும் அவர்கள் பங்காற்றினர். ஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் தபூக் போருக்காகத் தங்கள் உடைமைகளில் சரிபாதியை பிரித்துக் கொணர்ந்து அன்புடன் அளித்தனர். ஹிஜ்ரி 10ஆண்டில் நபி பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறைவேற்றிய ஹஜ்ஜிலும் உடன் இருந்தனர்.

வாழ்நாள் நெடுகிலும் தம்மைத் துயர்ந்து உடலாலும் பொருளாலும் தம்மை அர்ப்பணித்த அத்தோழரை பெருமானார் அவர்களும் பெரிதும் நேசித்தார்கள்.

‘அரஃபாவாசிகளைக் கொண்டு பெருமை கொள்ளும் அல்லாஹ் உமரைக் கொண்டு அதிகம் பெருமை கொள்வான்’ என்றுரைத்த நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உமரிடத்தில் பகை கண்டவர் என்னிடத்திலேயே பகை கொண்டார். உமரை நேசித்தவர் என்னையே நேசித்தார்’ என்றும் அறிவித்தார்கள்.

ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமகளார் ஹஃப்ஸா நாயகி ஒரு போரில் தம் கணவரை இழந்து கைம்பெண்ணாக நின்றபோது, நபி பெருமானார் அவர்கள் அவரைத் தாமே மணந்து மறுவாழ்வளித்து பெருமையுறச் செய்தார்கள்.

ஒருநாள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வலக் கரத்தை ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோளின் மேலிட்டவர்களாக, தம் இடக்கரத்தை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோழில் மேலிட்டவர்களாக, பள்ளியினுள் நுழைந்த போது அங்கிருந்த தோழர்களை நோக்கிக் கூறினார்கள்:

‘இப்படித்தான் நாங்கள் எழுப்பப்படுவோம் மறுமை நாளன்று’ என்று.

அண்ணல் எம்பெருமானார் அவர்கள் மறைந்த அன்று தங்கள் இல்லத்துள் நடைபெற்ற நிகழ்வை அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விவரிக்கிறார்கள்: அன்னையாரின் அனுமதி பெற்று ஹழ்ரத் உமர் அவர்களோடு ஹழ்ரத் முகீரா இப்னு ஷுஅபா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் உள்ளே நுழைகிறார்கள். படுக்கையில் இருந்த அண்ணலாரின் முகத்தை உற்றுநோக்கிய ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகக் கவலையோடு கூறிக் கொண்டார்கள்: ‘எத்துணை கடுமையான மயக்கம் ஏற்பட்டிருக்கிறது எம்பிரான் அவர்களுக்கு’ என்று.

அவர்களின் தோள்களைப் பற்றிய ஹழ்ரத் முகீரா அவர்கள் கேட்டார்கள்:’ அபல் ஹஃப்ஸ்! அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பது விளங்கவில்லையா உமக்கு’ என்று.

மறுகணமே, ‘முகீரா’ என்ற உறுமல் கேட்டது ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து. என்ன உளறுகிறீர்கள்? நீங்கள் சொல்வது பொய். நீ ஒரு குழப்பக்காரனாய்த் தோன்றுகிறீர்கள்? ஒரேயொரு நயவஞ்சகனும் மதீனாவினுள் எஞ்சியிருக்கும் நிலையிலும் நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிப்பார்களா? இல்லை. ஒருக்காலும் இல்லை’ எனக் கூறியவர்களாக வெளியேறிய அவர்களின் கரம் வாளை உருவிக் கொண்டது.

பள்ளியினுள் நுழைந்த அவர்கள், ‘நபிபெருமானார் அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று கூறத் துணிந்தவர்களை இந்த வாளால் வெட்டுவேன். ஒருக்காலும் அவர்கள் மரணிக்கவே இல்லை. மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வோடு வசனிக்கச் சென்றிருக்கிறார்கள். மீண்டும் வருவார்கள்’ என்றார்கள்.

ஆயிஷா நாயகியும் கூறுகிறார்கள்: ‘நானும் அப்படித்தான் எண்ணினேன். உமருடைய கூற்று உண்மையாகவே இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். இன்னும் சற்று நேரத்தில் நபி அவர்கள் விழித்தெழுவார்கள். தாங்கள் இறந்து விட்டதாகக் கதைத்துக் குழப்பம் விளைவிக்க எண்ணயவர்களை வாளேந்தி வெட்டி வீழ்த்துவார்கள் என எதிர்பார்த்தேன்’ என்று.

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் திருமறையின் 3:144ஆம் வசனத்தை ஓதிக் காட்டி அவர்களுக்கு உண்மையை விளங்க வைத்தார்கள்.

நபிகள் நாயகத்தை குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் அன்ஸாரிகள் ஒன்றுகூடி அவர்களில் ஒருவரை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க எண்ணினார்கள் என்ற செய்தி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஹழரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுத்த உரிமை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையேச் சாரும்.

ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதவியேற்ற நாள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனா வாழ்வின் இரண்டாம் கட்ட ஆரம்ப நாளாகும். அன்னாரின் இரண்டே காலாண்டு காலமும் அவர்களுக்குத் துணையாக நின்றார்கள்.

பூமியில் ஷைத்;தான்கள் உமரைக் கண்டு அஞ்சியோடுகின்றனர். வானத்திலோ எந்த ஒரு மலக்கும் உமரைக் கண்ணியப்படுத்தாமல் இல்லை’, என்றும்,

‘பெருமானே! உமர் அவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். அவரின் கோபம் இறைவனுக்கு மிகப் பிரியமானதாக இருக்கிறது என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே வந்து கூறியதாகவும்,

ஒருமுறை ஹழ்ரத் உமர் அவர்களைச் சுட்டிக்காட் நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இவரின் பொருட்டால் குழப்பங்களின் வாசல் அடைபட்டிருக்கிறது. இவர்கள் உயிரோடிருக்கும்வரை எந்த ஒருவனும் குழப்பம் விளைவிக்க துணிவு பெறமாட்டான் என்றும் உள்ள பொன்மொழிகளையும், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடத்தையைக் கண்டும் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே கிலாபத்துக்கு தகுதியானவர்கள் என்று அவர்களை தங்கள் மரணத் தருவாயில் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நியமித்தார்கள்.

ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு ஜமாதில் அவ்வல் மாதம் 13ஆம் நாள் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனா வாழ்வின் மூன்றாம் கட்டத் துவக்க நாளாகும். மறைந்த கலீஃபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை அடக்கம் செய்தபின் உமர் ரலியல்லாஹு அன்ஹு கிலாஃபத்தை அன்று ஏற்றார்கள்.

பதவிஏற்றபின் உடல் அடக்கத்திற்காக நாட்டின் பல புறமிருந்தும் வந்திருந்தவர்கள் கலீஃபாவிடம் பிரமாணம் செய்தபின் அவர்களை போருக்கு அணிதிரளுமாறு அழைப்பு விடுத்தார்கள் கலீஃபா அவர்கள். ஜுஸ்ர் போர் எனப் பெயரிடப்பட்ட ஈரானியர்களுடன் நடைபெற்ற அந்த போரில் முஸ்லிம்களுக்கு தோல்வியே கிடைத்தது. முஸ்லிம்களுக்கு கிடைத்த தோல்வி இதுதான் கடைசியான தோல்வியாக இருந்தது.

தோற்றுப் போன முஸ்லிம்களிடம் வீரஉரை நிகழ்த்திய கலீபா அவர்கள், அன்னாரின் பேச்சைக் கண்டு நாடெங்கும் வாழ்ந்த அரபு கிறித்துவர்களையும் கிளர்ந்தெழுகச் செய்தது. அவர்களையும் சேர்த்து ஹழ்ரத் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் பஜ்லி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் படையை அனுப்பி அதில் வெற்றியும் கண்டனர். அந்த போருக்கு ‘லுபைப் போர்’ எனப்பட்டது. இப்போரில் ஓரிலட்சம் ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். அப்போரில் தோல்வியடைந்த ருஸ்த்தும் முஸ்லிம்களுக்கு ஆபத்தானவனாக இருந்தான். ஹிஜ்ரி 14ஆம் ஆண்டில் மதீனாவின் பொறுப்பை ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தாமே படைநடத்தி சென்றனர். சில காரணங்களுக்காக கலீபா அவர்கள் ஹழ்ரத் ஸஃது இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை படைநடத்திட செய்தனர். காதிஸிய்யா என்னுமிடத்தில் நடைபெற்ற போரே ரானியர்களுக்கு ஊதப்பட்ட ஸூர் ஆகும்.

ஹிஜ்ரி 15ஆம் ஆண்டில் ரோமானியர்களோடு யர்மூக்கில் போர் புரிந்து வென்றனர். இதுவும் காதிஸியாப் போர் போல் வரலாற்றில் மிகவும் இடம் பெற்றுவிட்டது.

ஹிஜ்ரி 16ஆண்டில் பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது.

ஹிஜ்ரி 17ஆம் ஆண்டில் ஹிஜாஸை வாட்டிய பஞ்சத்தால் வான் பொய்த்து, பயிர்களும் கனிகளும் அழிந்து, மக்கள் பரிதவித்தலைய பைத்துல்மால் செல்வத்தை மக்களின் பசிதீர்க்க செலவழித்தனர்.ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் பஞ்சம் பீடித்தது.

ஹழ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கனவில் திருத்தோற்றம் வழங்கி நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள ‘பிலாலே! உமருக்கு என் ஸலாமைக் கூறுவீராக, வான்பொழியும். பஞ்சம் ஒழியும் என அவருக்கு நன்மாராயம் கூறுவீராக! எனினும் எமக்களித்த வாக்குறுதியை அவர் நிறைவுப்படுத்தாதேனோ!’ எனக் கேட்டு மறைந்தார்கள்.

மறுநாள் தாம் கண்ட கனவை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சொன்னதும், சஹாபாக்கள் ஒன்றுகூடி தீர்க்கமாக ஆராய்ந்தார்கள். இறுதியாக ‘ஸலாத்துல் இஸ்திஸ்கா’ என்னும் பஞ்சகாலத் தொழுகையை நாம் தொழ நபிகளார் பணித்திருக்கிறார்கள் என்று முடிவு கண்டனர்.

கலீபா அவர்கள் மக்களனைவரையும் ஊருக்கு வெளியே ஒன்று திரட்டினார்கள். நபிமணித்தோழர்களை அவர்களுக்கு முன்னே நிற்கச் செய்தார்கள். நபிகளாரின் சிறிய தந்தை ஹழ்ரத்; அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தலைமையாக நிறுத்தினார்கள். அன்னை ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்த பெருமானாரின் திருப்போர்வையை கேட்டுப் பெற்று தங்கள் சிரசின் மேல் போர்த்திக் கொண்டவர்களாக, ஹழ்ரத் அப்பாஸ் நாயகமவர்களின் கரத்தை விண்ணின்பால் தாங்கிப் பிடித்தவர்களாக, ‘எங்கள் நாயனே! உன் தூதர் பெருமானை நீ எங்களிடமிருந்து அழைத்துக் கொண்ட நிலையில், இன்று எங்களிடையே இருக்கும் அவர்களின் சிறிய தந்தையையே உன் முன் வஸீலாவாக வைத்து நிற்கிறோம். அவர்களின்பொருட்டு எங்களின் பிழைகளை நீ பொறுத்தருள்வாயாக! என்று இறைஞ்சினார்கள். அவர்களின் வேண்டுதலை ஏற்று ஹழ்ரத் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கரங்களை ஏந்தி இறைஞ்ச ஆரம்பித்தார்கள். அவர்களின் இறைஞ்சுதல் நிறைவுறும் முன்னதாகவே மழைபொழியத் துவங்கியது. சுமார் ஒருவாரகாலம் வரை மழை பெய்தது.

மதீனாவின் பஞ்சம் அகலும் முன்பாகவே ஸிரியாவில் காலரா நோய் பரவியது. ஹிஜ்ரி 17ஆம் ஆண்டு இறுதியில் உருவாகிய இந்நோய் ஹிஜ்ரி 18ஆம் ஆண்டில் பயங்கரமாக உருவெடுத்து மெஸபடோமியா வரை தொடர்ந்தது. இந்நோய்க்கு பெருவாரியான வீரர்கள் பலியாகினர். கலீஃபா அவர்கள் நிவாரணப் பணிகளை அவ்வப்போது செய்து வந்தனர்.

பாரஸீகத்தில் காதிஸியாப்போரில் தோல்வி கண்ட ஈரானியத் தளபதி ஹர்மூஸான் முஸ்லிம்களுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பல்வேறு போர்களுக்கு வித்திட்டாலும்,அதில் தோல்விகளையே தழுவினான். இறுதியில் நடந்த போரில் ‘தன்னை மதீனாவுக்கே அனுப்பி ககலீஃபா அவர்களின் நேரடித் தீர்ப்புக்கு விட்டுவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு சரணடைந்து விட்டான்.

அதன்படி மதீனா வந்த ஹர்மூஸான் வெகு சாதுரியத்தோடு கலீபா அவர்களிடம் உயிர்ப் பிச்சை வாங்கிக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று கலீஃபாவிடமே உபகாரச் சம்பளமும் பெற்றுக் கொண்டு மதீனாவிலேயே தங்கி வாழ்ந்தான்.

ஹர்மூஸானின் விசாரணையின் போது கலீஃபா அவர்கள் ஓர் உண்மையைப் புரிந்து கொண்டார்கள். ஈரானிய பூமியில் சகல கலகங்களுக்கும் யஸ்தஜி;ர்தின் பின்னணி உதவியே காரணம் என்பதைப் புரிந்து கொண்ட கலீஃபா அவர்கள் அவனை ஒழிக்காதவரை நிம்மதியாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

ஹிஜ்ரி 21ல் ‘நிஹாவந்த்’ என்ற இடத்தில் ஒன்றரை லட்சம் ஈரானியர்கள் மர்தான்ஷா என்பவனின் தலைமையில் ஒன்று திரண்டனர். இம்முறை யஸ்தஜிர்தின் விஷமத்தை வேரோடு பிடுங்கியெறிய கலீபா உமர் அவர்கள் நிஹாவந்த்துக்கு தாமே புறப்பட்டு சென்றார்கள். ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதனை தடுத்து, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கூஃபாவிலிருந்த நுஉமான் இப்னு முக்ரின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படைத்தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டு கலீஃபா அவர்களின் கட்டளைகள் அவருக்கு பறந்தது. பஸராவிலிருந்து அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சேர்ந்து முப்பதினாயிரம் படைகளைத் திரட்டி நிஹாவந்த் சென்றார்கள்.

கிஸ்ராவின் வலிமையையே நிர்மூலமாக்கி ஈரானிய பூமி முழுவதிலும் இஸ்லாம் விரைந்து பரவத் தலைவாசலாக அமைந்தது நிஹாவந்த் போரேயாகும். நிஹாவந்தில் இஸ்லாமியர்கள் பெற்ற வெற்றியை ‘ஃபத்ஹுல் ஃபுத்தூஹ்’- வெற்றிகளுக்கெல்லாம் பெரு வெற்றி என்கின்றனர்.

ஹிஜ்ரி 20ஆம்ஆண்டிலேயே எகிப்து வெல்லப்பட்டது. ஹிஜ்ரி 21ஆண்டில் இஸ்ஃபஹானும், 22ஆம் ஆண்டில் அஜர்பைஜானும்,23ல் கிர்மான், ஸீஸ்தான் முதலியவற்றையும் வென்று இந்திய நாட்டின் எல்லையை ஒட்டிய மக்ரானிலும் முஸ்லிம் வீரர்கள் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டினர்.

ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு ஜமாதில் அவ்வல் மாதம் 23ஆம் நாள் ஹிஜாஸின் எல்லைக்குள் மட்டுமே அடங்கிய ஒரு சிறு இஸ்லாமியக் குடியரசின் தலைமையை ஏற்ற ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 23ஆண்டு இறுதி நாளன்று எகிப்து, ஸிரியா, இராக், ஈரானிய மாநிலங்களையும் ஒன்றிணைத்த பரந்து விரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் சக்ராதிபதியாக இருந்தார்கள். ஏறத்தாழ ஓராயிரத்து நானூற்று நாற்பத்து நான்கு நகரங்கள் வெள்ளிக் கொள்ளப்பட்டிருந்தன.

இதில் ஒரு விசேசமான செய்தி என்னவென்றால், கலீபா அவர்கள் எந்தவொரு போர்க்களத்திலும் காணப்படவேயில்லை. ஆனால் உமர் என்ற வெறும் பெயரைக் கேட்டே எதிரிகள் பொறிகலங்கி போயினர். ஒரு குறுகிய காலத்தில் இருபத்தி நான்கு இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து முப்பது சதுரமைல்களுக்குப் பரந்து விரிந்த ஒரு சாம்ராஜ்யத்தை அவர்கள் நிறுவினார்கள்.

படைகளை போருக்கு அனுப்பிவிட்டு தங்களது ஞானதிஷ்டியால் அதை கண்காணித்து படைகளை வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

பாருங்கள்! மதீனாப் பள்ளியில் ஒருநாள் வெள்ளிக்கிழமை உரைநிகழ்த்திக் கொண்டிருந்த கலீபா அவாக்ள் தங்கள் உரையினூடே சற்று தாமதித்து ‘யா ஸாரியா! அல்ஜபல், யா ஸாரியா அல்ஜபல் – ஸாரியாவே! அதோ மலை, ஸாரியாவே அதோ மலை –என அடுத்தடுத்து மும்முறை கூறினார்கள். சிறு மவுனத்துக்குப் பின் கலீபா அவர்கள் தங்கள் உரையைத் தொடர்ந்தார்கள்.

தொழுகை முடிந்ததும் ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதுபற்றி கலீபா அவர்களிடம் கேட்டார்கள், எதிரிகளின் கூட்டம் முஸ்லிம்களைப் பின் தொடர்ந்து செல்வது எனக்குக் காட்டப்பட்டது. நம் சகோதரர்களை நான் எச்சரித்தேன்’ என்று பதிலுரைத்தார்கள்.

படைநடத்திவிட்டு மதீனா திரும்பிய ஸாரியா இப்னு ஸனீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், படைநடத்திக் கொண்டிருந்தபோது கலீபாவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். அங்கு மலை தெரிந்தது. மலைமீது ஏறிப் பார்த்தேன். மறுபுறம் எங்களின் எதிரிகள் எங்களை தேடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே நாங்கள் மலை மீதிருந்தே அவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்து வெற்றியும் கண்டோம்’ என்று சொன்னார்கள்.

கலீபா அவர்கள் எந்தவொரு விசயத்திலும் தன்னிச்சையாக செயல்படுவதில்லை. கருத்து சொல்வதற்கென்று முஹாஜர்களைக் கொண்ட குழு ஒன்றும், முஹாஜிர்களும், அன்சாரிகளும் கலந்த குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் கலந்து ஆலோசித்தபின்னரே பள்ளியில் மக்களை கூட்டி அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சொல்லி கருத்து கேட்பார்கள். பின்னர் முடிவு எடுப்பார்கள்.

ஒற்றர்கள் தரும் செய்திகள் துல்லியமாக ஆராயப்படும். இதற்கென்று ஹழ்ரத் முஹம்மத் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு என்ற அன்ஸாரித் தோழர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்துவார்கள்.

தவறு புரிந்தவர்களைக் கண்டித்த கலீஃபா அவாக்ள் தம் ஆளுநர்களின் திறமையை சிலாகிக்கவும் தவறவில்லை.

கலீபா அவர்கள் மக்களிடையே மார்க்க ஒழுக்கப் பேணுதல்களை நிலை நிறுத்துதில் மிக உன்னிப்பாக கவனம் செலுத்தினார்கள்.

மொத்தத்தில் கலீஃபா அவர்களின் காலத்தில் மதீனா ஒரு பல்கலைக் கழகமாகவே திகழ்ந்தது. அனைத்துக் கலைகளுக்கும் வல்லுனர்கள் அங்கு பயிற்றுவிக்கப்பட்டனர். பரிசோதிக்கப்பட்டனர். பின்னரே அவர்களுக்குப் பொறுப்புகள் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

நீதித்துறையில் ஒருக்காலும் அவர்கள் பரிந்துரையை அனுமதிப்பதில்லை. கலீபா காலத்தில் விசாரணைகள் மிக எளிதாக இருந்தன. சம்பிரதாயங்கள் பூரண சுதந்திரத்துடன் கடைபிடிக்கப்பட்டன. வழக்குகள் உடனுக்குடன் துரிதமாக நிறைவேற்றப்பட்டன. வழக்குகள் நியாயமாக நடைபெற கலீபா அவர்களின் கண்காணிப்பு இருந்தது.

போரில் கிடைத்த கனீமத்துப் பொருட்களை பங்கீடு செய்ய முறையான வழிமுறை அமைத்தார்கள். பைத்துல்மால்களுக்குச் சொந்தமாக கட்டிடங்களை அமைத்து அவற்றில் பொருள்களை பாதுகாக்கச் செய்து அதனை முஸ்லிம்களிடையே நிரந்தரத் தொடர் ஊதியமாக பங்கீடு செய்ய முறை அமைத்தார்கள்.

வெற்றி கொள்ளப்பட்ட பூமிகளில் அதிகாரிகளை நியமித்து நிலங்களை அளக்கச் செய்து தீர்வைகளை விதித்தார்கள்.

உலகாதாய முன்னேற்றித்தினூடே ஆன்மீக உயர்விலும் கலீபா அவர்கள் கவனம் செலுத்தினார்கள். தம்மைப் போலவே தம் மக்களும் மாநபி வாழ்வை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஹிஜ்ரி 14ஆம் ஆண்டில் தராவீஹ் என்னும் கூட்டுத் தொழுகையின் மூலம் புனித ரமலானின் இரவுகளுக்கு உயிரூட்டச் செய்தார்கள்.

ஹிஜ்ரி 17ஆம் ஆண்டில் உம்ராவிற்காக மக்கா வந்த கலீபா அவர்கள் கபாவைச் சூழ இருந்த வணக்கத்தலத்தை விரிவுப்படுத்தினார்கள். அறிஞர்களைக் கொண்டு ஹரம் எனப்படும் புனித எல்லைகளை ஆய்ந்து நிர்ணயப்படுத்தி அடையாளக் கல்தூண்களை ஆங்காங்கே நட்டுவித்தார்கள்.

ஹிஜ்ரி ஆண்டு சகாப்தம் ஹிஜ்ரி 17ஆண்டில் கலீபா அவர்களாலே உருவாக்கப்பட்டது.

சஹாபாக்களின் கருத:;துக்கேற்ப தங்கள் குடும்பத்திற்காக அவர்கள் செலவழித்ததெல்லாம் நாளொன்றுக்கு இரண்டு திர்ஹங்களேயாகும்.அவர்களின் உணவோ மிக எளிமையானதாக இருந்தது. சாதாரண ரொட்டியும், ஜைத்தூண் எண்ணெயுமாக இருந்தது. அந்த ரொட்டியும் சலிக்காத மாவினாலானது.

தம்முடைய ஹஜ்ஜுப் பயணங்களில் கூட ஒரு கூடாரத்தையும் தம்முடன் செல்வதில்லை. மரங்களின் மேல் போர்வையை விரித்து அதன் நிழலிலேயே தங்கிக் கொள்வார்கள்.

ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற வந்திருந்த கலீஃபா அவர்கள், மினாவின் வெளியில் தங்கியிருந்தபோது, தங்கள் இரு கரங்களையும் ஏந்தி ‘இறைவா! நான் முதுமையை அடைந்து விட்டேன். என் நினைவுகள் நிலைமாறிக் கொண்டிருக்கின்றன. அறிவு தடுமாறி, தீமைகள் உருவாகும் நிலைமை தோன்றுமுன் என்னை உன்பால் அழைத்துக் கொள்வாயாக! என்று இறைஞ்சிய பின் கலீஃபா அவர்கள் சரியாக ஒருமாதம் கூட உலகில் வாழவில்லை.

ஹஜ்ஜின் கடமைகளை முடித்து மதீனா திரும்பிய கலீஃபா அவர்கள் பள்ளியில் ஒரு நாள் உரையாற்றிய போது, ‘ ஒரு செந்நிறச் சேவல் என்னை இரண்டு அல்லுது மூன்று முறை கொத்திட கனவில் கண்டேன். என் மரணம் அண்மிவிட்டதற்குரிய முன்னறிவிப்பு இது’ என்று குறிப்பிட்டார்கள். பள்ளியில் அவர்கள் ஆற்றிய கடைசிஉரையாகவும் அது அமைந்துத விட்டது.

துல்ஹஜ் பிறை 26ம் பிறை தேய்ந்து மறைந்து மறுநாள் பொழுதும் புலர்ந்து கொண்டிருந்தது. என்றும் போல் அன்றும் சுப்ஹு தொழுகையை நடத்துவதற்காக கலீஃபா அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். மிஹ்ராபை அடைந்து அல்லாஹு அக்பர் என்று சொல்லி தக்பீர் கட்டி மிஸ்மிலையும் ஓதி முடித்தார்கள். அச்சமயம் பின்னால் அணிகளிடையே முகத்தை மறைத்தவண்ணம் ஒரு முஸ்லிமைப் போன்றே கலந்து நின்றிருந்த ‘அபூலூலூ’ என்றழைக்கப்பட்ட பைரோஸ் என்பவன் (நிஹாவந்த் போரில் சிறைபிடிக்படப்பட்டு ஹழ்ரத் முகீரா இப்னு ஷுஅபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கிடைத்த ஒரு பாரஸீக அடிமை) சரெனெப் பாhய்ந்து கலீபா அவர்கள் மீது

وَكَانَ اَمْرُ اللهِ قَدَرً اٰمَّقْدُوْرَا.

அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன’ (33:38) என்ற திருவசனம் அவர்கள் ஓதி நின்ற சமயம் தனது குறுவாளை கலீபாவின் உடலின் மீது அடுத்தடுத்து ஆறு முறை செலுத்தினான். சற்றுப் பின் நகர்ந்து தம் பின்னே நின்ற ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கரம் பற்றி முன் நகர்த்திவிட்டு கீழே சாய்ந்தார்கள் கலீஃபா.

வெறியன் பைரோஸ் தப்பிக்க குறுவாளை சுழற்றிக் கொண்டே ஓடினான். அந்தவாள் பதிமூன்று பேர்கள் மீது பட்டு அதில் அறுவர் இறந்தனர். இறுதியில் ஒரு ஈராக்கிய வீரர் அவனை முகத்தில் துணியை வீசி பிடித்துவிட்டார். இனி தப்பிக்க முடியாது என்றெண்ணிய அவன் குறுவாளாலேயே தன்னையம் மாய்ந்துக் கொண்டான்.

மயக்கமடைந்த அவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர். குறுவாள் ஆழமாகப் பாய்ந்ததில் அவர்களின் குடலே துண்டிக்கப்பட்டுவிட்டது. கொடுக்கம் மருந்துகளும், உணவுகளும் அவ்வழியே வெளியில் வந்தது.

மறுநாள் தங்கள் மகனார் ஹழ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து தங்களுக்கிருந்த கடனை கணக்கிட செய்தார்கள். எண்பதாயிரம் திர்ஹங்கள் இருப்பதாக தெரிந்தது. என் வீட்டை விற்று கடனை தீர்த்துவிடு. அதுபோதாதெனில் அதீ கோத்திரத்தாரைக் கொண்டு அதனைத் தீர்த்து விடு. அதுவும் போதாவிடில் குறைஷிகளின் துணை கொண்டு அதனை தீர்த்துவிடு. எக்காரணம் கொண்டும் பிறர் மீது இச்சுமையை ஏற்றிவிடாதே என்று கூறினார்கள்.

தங்கள் மகனாரை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று தம் முன்னோடிகளான இரு தோழர்களுக்கும் அருகிலேயே தாம் அடங்கப் பெற விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் அனுமதியளிப்பார்களா என்றும் கேட்டு வரும்படி கூறினார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னையாரிடம் சென்று கேட்டபோது, ‘அந்த இடத்தை எனக்காகவே நான் வைத்திருந்தேன். அமீருல் முஃமினீன் அவர்களுக்கு இன்று நான் அதனை அன்பளிப்பாகத் தந்து விட்டேன்’ என்று கூறினார்கள். அச்செய்தியைக் கேள்வியுற்ற கலீஃபா அவர்கள் ‘என் வாழ்வில் இதுவே நான் பெற்ற இறுதிப் பெரும்பேறு’ என்றார்கள்.

மரணத்தின் மடியில் மூன்று நாட்கள் வரை அறபோதம் செய்து கொண்டிருந்த கலீஃபா அவர்களின் ஆன்மா ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் கடைசி நாளோடு தன் உடற்கட்டை விட்டும் பிரிந்தது. ஹழ்ரத் ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையை நடத்தி முடித்தார்கள். அந்தவுடல் அன்னையாரின் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் ரஸூலே! தங்களின் அன்புத் தோழர் தங்கள் அருகை நாடுவதால் அவருக்கு மறைவதற்காக நான் இவ்விடத்தைத விட்டும் செல்கிறேன்’ என்றவர்களாக அதனை விட்டும் வெளியேறிவிட்டனர்.

ஹழ்ரத் உதுமான், அலீ, அப்;துர் ரஹ்மான், தல்ஹா, ஸமது இப்னு அபீவக்காஸ், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் கலீஃபாவின் உடலை ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மண்ணறையின் அருகில் அடக்கம் செய்தார்கள்.

குடும்ப வாழ்வு:

நிறைய மக்களை பெற வேண்டும் என்பதற்காக பலமுறை மணமுடித்திருந்தார்கள்.

முதல் திருமணம் ஹழ்ரத் உதுமான் இப்னு மல்ஊன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடன்பிறந்த ஜைனப் என்ற பெண்மணியோடு நடைபெற்றது. இவர்கள் மக்காவிலேயே மரணித்து விட்டார்கள். இவர்கள் மூலம் அன்னை ஹஃப்ஸா, ஹழ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் பிறந்தனர்.

2ஆவது அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரி கரீபா என்பவர். இவர் இஸ்லாத்தை ஏற்காததால் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டில் விவாக பந்தத்திலிருந்து விலக்கப்பட்டார்.

3ஆவது ஆத்திகா. இவரும் இஸ்லாத்தை ஏற்காது விவாக விடுதலை பெற்றவராயினும், இவரின் மகனார் ஹழ்ரத் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு முஸ்லிமாகி வாழ்ந்தனர்.

மதீனா வாழ்வில் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டில் ஆஸிம் இப்னு தாபித் ரலியல்லாஹு என்ற அன்ஸாரியின் மகளார் ஜமீலா என்பவரை மணமுடித்தார்கள். ஆயினும் ஏதோ காரணத்தால் இவரும் மணவிடுதலை செய்யப்பட்டார்.

தங்கள் பிந்திய காலத்தில் பெருமானார் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவுத் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொண்டு ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமகளார் உம்மு குல்தூம் பின்த் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்தார்கள்.

மனிதர்களில் சிறந்த இப்புனிதரைப் பற்றி ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேடி உலகம் வரவில்லi. அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அதனைத் தேடிச் செல்லவில்லை. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமோ உலகம் வந்து குவிந்து நின்றது. அவர்களோ அதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லi என்றார்கள்.

முற்றும்

Add Comment

Your email address will not be published.