ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 4000 நபிமார்களும் ஒரே ஷரீஅத் விதிமுறைகளையே பின்பற்றி வந்துள்ளார்கள். இவர்களில் ஹழ்ரத் யூஷஃஈ ஹழ்ரத் ஷம்வூன், ஹழ்ரத் தாவூத், ஹழ்ரத் சுலைமான், ஹழ்ரத் ஜகரிய்யா, ஹழ்ரத் யஹ்யா அலைஹிமிஸ்ஸலாம் போன்ற நபிமார்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் தவ்ராத் வேதத்தின் அடிப்படையையே பின்பற்றி வந்துள்ளனர்.

ஹழ்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பலஸ்தீன அரசராக முடிசூட்டிக் கொண்டபோது, அவர்களுக்கு வயது 13 தான்.  அவர்களது மேனியின் நிறம் வெண்மையாக இருந்தது. வெண்ணிற ஆடைகளையே அதிகம் விரும்பி அணிந்திருப்பார்கள். அவர்களின் சிரம் பெரிதாக இருந்தது. சுலைமான் என்றால் பெரிய அரசர் என்றும் ஒரு பொருளுண்டு. ஜம்ஷீதூன் என்ற பெயரும் இவர்களுக்கு இருந்தது.

ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து கொண்டு வந்த முத்திரை மோதிரத்தை ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் விரலில் அணிந்து கொண்டதுமே, பறவையினங்கள் அனைத்துமே அணிஅணியாக அவர்களின் தலைக்கு மேல் வட்டமிட ஆரம்பித்தன. வனவிலங்குகள் அனைத்தும் காடுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும் வெளிப்பட்டு அவர்கள் முன்னால் அணிவகுத்து நின்றன. ஜின்கள் அவர்களுக்கு பணி செய்யக் காத்து நின்றன. அனைத்தும் அவர்களுக்கு அடிபணிந்து நின்றன.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் பட்சிகளின் மொழிகளைக் கற்றுக் கொடுத்ததற்காகவும், அவர்களிடம் மனிதர்கள், ஜின்கள், பட்சிகளின் இராணுவம் இருந்ததற்காகவும் அவர்கள் அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள் என்பதை அல்லாஹ் திருகுர்ஆனில் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளான்.
وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ ۖ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيْءٍ ۖ إِنَّ هَٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ

பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். – அல்குர்ஆன் 27:16
وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ

மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு> அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன. – அல்குர்ஆன் 27:17.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஓராயிரம் கண்ணாடி மாளிகைகள் இருந்தன. அவற்றில் அவர்களுடைய முன்னூறு மனைவிமார்களும், எழுநூறு அடிமைப் பெண்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் 20 ஆயிரம் குதிரைகள் இருந்தன.

இந்தக் குதிரைகளை அவர்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்ததில் அஸர் தொழுகை நேரம் முடிவடைந்து விட்டது. அஸர் தொழுகை அக்காலத்தில் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது. அல்லாஹ் அவர்கள் மீது கருணை கூர்ந்து, சூரியனை அஸ்தமிப்பதிலிருந்து தடுத்து மேலெழச் செய்தான். அவர்கள் தங்கள் அஸர் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டு அல்லாஹ் காட்டிய கருணைக்காக அவன் பெயரால், அத்தனைக் குதிரைகளையும் குர்பானி கொடுத்துவிட்டார்கள்.  அவர்களது காலத்தில் குதிரையைக் குர்பானி கொடுப்பது அனுமதிக்கப்பட்டிருந்தது.

இம்மாதிரி அவர்கள் தமது குதிரைகளையெல்லாம் குர்பானி கொடுத்து விட்டதால், அவர்கள் சவாரி செய்ய வாகனமில்லாமல் போய்விட்டது. அல்லாஹ் அவர்களுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்து, அவர்கள் எங்குச் செல்ல நாடுகிறார்களோ, அங்கு அவர்களை அது எடுத்துச் சென்று உதவ ஆரம்பித்தது. காற்றின் உதவியால் அவர்கள் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

தப்ஸீர் கஷாஃப், தப்ஸீர் மதாரிக் கில் பின்வருமாறு காணப்படுகிறது.

‘ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது இராணுவம் தங்குவதற்கு 5000 சதுர கிலோமீட்டர் அளவு இடம் தேவைப்பட்டது. இந்த இடத்தை நான்கு பங்காகப் பிரித்து ஒரு பங்கில் மனிதர்களும், மற்றொரு பங்கில் ஜின்களும், வேறொரு பங்கில் பறவையினங்களும், மீதமுள்ள ஒரு பங்கில் நாற்கள் பிராணிகளும் தங்கி வந்தன. இவ்வளவு திரளான கூட்டமிருந்தும், எந்தவித மோதுதலோ, சண்டை சச்சரவோ இல்லாதது மிகவும் நிம்மதியாக இருந்தது.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது அரியாசனத்தை வைப்பதற்கு வெகு அற்புதமான விரிப்பு ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அந்த விரிப்பின் அளவு 5 கி.மீ. சதுர அளவிலிருந்தது. இந்த விரிப்பின் மத்தியில் தங்கத்தாலும், வெள்ளியாலும் உருவாக்கப்பட்ட அரியாசனம் அமைக்கப்பட்டிருந்தது. அரியாசனத்திற்குக் கீழே இரு சிங்கங்கள் கட்டப்பட்டிருந்தன.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரியாசனத்தில் அமர வரும் பொழுது, இந்த இரு சிங்கங்களும் தங்களது முன்னங்கால்களை அவர்கள் முன்னால் நீட்டிக் காட்டும். அவர்கள் அவற்றை மிதித்து ஏறி அரியாசனத்தில் அமர்ந்து கொள்வார்கள். இரு கழுகுகள் தங்கள் இறகுகளை விரித்து, அவர்களது தலைக்கு மேல் குடைபோல் வைத்துக் கொள்ளும்.’

ஜகீரத்துல் முலூக் என்ற நூலில், ‘ ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது அரியாசனத்திற்கு வலப்புறம் தங்கத்தினாலான ஆறாயிரம் நாற்காலிகளும், இடப்புறத்தில் வெள்ளியிலான ஆறாயிரம் நாற்காலிகளும் போடப்பட்டிருக்கும். முன்பகுதியில் ஆறு மெஹ்ராப் போன்ற பெரும் பெரும் வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரியாசனத்தில் வந்தமர்ந்த பிறகு, தங்கள நாற்காலிகளில் நபிமார்களும், அவ்லியாக்களும், வெள்ளி நாற்காலிகளில் மார்க்க அறிஞர் பெருமக்களும் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். வளைவுகளுக்குள் பனீ இஸ்ரவேலர்கள் வந்து அமர்ந்து கொள்வார்கள்.’

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களது அரியாசனத்தில் அமர்ந்திருக்கும்போது பறவையினங்கள் அவர்களது காதில் ஏதோ அதன் பாஷையில் சொல்லிவிட்டு சென்றன. அவர்கள் அவையில் அமர்ந்திருப்பவர்களை நோக்கி, அவை என்ன சொன்னது என்று தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவையோர் அல்லாஹ்வும், அவனது நபியுமே அறிவார்கள் என்று சொன்னார்கள். அந்தப் பறவைகள் சொன்னதை சுலைமான் நபி அவர்கள் சொன்னார்கள்:

1.  நீங்கள் இறப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறீர்கள். இழப்பதற்காகவே அளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
2. படைக்கப்பட்டவை படைக்கப்படாமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று கூறியது ஆந்தை.
3. நீ எவ்விதம் செயல்படுகின்றாயோ, அவ்விதமே அதன் கூலியைப் பெறுவாய் என்று கூறியது மயில்.
4. எவன் அன்பைச் செலுத்தமாட்டானோ, அவன் அன்பைப் பெறவும் மாட்டான்’ என்று கூறியது ஹுத் ஹுத் பறவை.
5. குற்றவாளிகளே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியது வட்டூரா பறவை.
6. உயிருள்ள அனைத்தும் இறக்க வேண்டியவையே! புதியன அனைத்தும் பழைமை ஆகக் கூடியதே. என்று கூறியது கிளி.
7. எனதிறைவன் தூயவன். அவன் தனது திருநாமத்தையும், புகழையும் வானங்களிலும், பூமியிலும் அவற்றின் இடையிலுள்ளதிலும் நிரப்பி வைத்துள்ளான்;’ என்று கூறியது சிட்டுக் குருவி.
8. மறுமையில் பெற்றுக் கொள்வதற்காக, இம்மையில் இன்றே முற்படுத்தி நன்மைகளை அனுப்பி வைத்து விடுங்கள் என்று கூறியது அபாபீல் குருவி.
9. அல்லாஹ்வைத் தவிர  எல்லாம் அழியக் கூடியவையே என்று கூறியது பருந்து.
10. வாய்மூடி இருப்பவன் ஈடேற்றம் பெற்று விட்டான் என்று கூறியது காடைக் குருவி.
11. ஒளியைப் படைத்த அல்லாஹ் மிகத்தூய்மையானவன் என்று கூறியது காகம்.

இவ்வாறு விவரித்துக் கூறிய சுலைமான் நபி அவர்கள் அதை நற்பதிவேட்டில் பதிந்து கொள்ளுமாறு அவையில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி சொன்னார்கள்.

ஒருமுறை ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமக்களித்துள்ள அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘ யா அல்லாஹ் உனது படைப்பினங்கள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய சக்தியை நீ எனக்கு அருளியிருக்கிறாய. தயவு செய்து அவற்றிற்கு இரணமளிக்கும் பொறுப்பையும் எனக்குத் தரக்கூடாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு இறைவன் அது உன்னால் முடியாத காரியம் என்று சொல்லி மறுத்துவிட்டான்.. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீ எனக்கு அதை தந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று சொன்னார்கள்.

வல்லநாயன் நான் உனக்கு ஒரு ஜீவனுக்கு இரணம் அளிக்கும் பாக்கியத்தை தருகிறேன். அதற்கு நீ வயிறு நிறைய உணவளித்தால்  இவ்வுலகிலுள்ள ஜீவன்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை தந்துவிடுவேன் என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட கடலுக்கு சென்று இன்ன பெயரைக் கொண்டு அழையுங்கள். ஒரு மீன் வரும் அந்த மீனுக்கு வயிறு நிறைய உணவளியுங்கள் போதும் என்றான்.

சுலைமான் நபி அவர்களும் அல்லாஹ் சொன்ன அந்த கடலுக்கு சென்று கரையில் நின்று  ஜின்கள், தேவதைகள், மனிதர்கள் அனைவரையும் ஏவி கடற்கரைபக்கம் உணவை கொண்டு வரச் சொன்னார்கள். அவைகள் உணவுகளை ஒரு மலைபோல் குவிக்கத் துவங்கின.

பின் அந்த மீனின் பெயரை அழைத்தார்கள். அம்மீன் வந்தது. உணவிற்காக வாயைத் திறந்தது. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குவித்து வைக்கப்பட்ட உணவுகளை அதன் வாயில் கொட்டும்படி ஜின்களுக்கு கட்டளையிட்டார்கள். அத்தனை உணவுகளையும் அவைகள் கொட்டின.

அதன்பிறகும் அவை உணவுக்காக வாயைத் திறந்தது. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இனி இதற்கு போட என்னிடம் உணவுகள் இல்லை என்று சலிப்புடன் சொல்லி, அந்தக் கடலில் உள்ள மீன்களில் நீதான் பெரிய மீனா என்று கேட்டார்கள். அதற்கு அந்த மீன் சொல்லியது, அங்குள்ள மீன் கூட்டத்தில் நான்தான் சிறிய மீன் என்றது.

மேலும் நான் பிறந்ததுமுதல் இன்றுதான் பாதி வயிற்று உணவுடன் திரும்பிப் போக  வேண்டியதாகிவிட்டது. ஏன் என்னை உணவு உண்ண அழைத்தீர்கள்.? என்னைப் படைத்த அல்லாஹ் இதுவரை இப்படி என்னை அரை வயிறு உணவு கொடுத்து அனுப்பவில்லை என்று முனங்கிக்கொண்டே கடலுக்குள் சென்று விட்டது.

அப்பொழுதுதான் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பபடைப்பினங்கள் அனைத்திற்கும் உணவு அளிக்கும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு என்றும், மற்றவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உள்ள பொறுப்பு இது என்றும் உணர்ந்து தம்முடைய தவறுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

ஒருதடவை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானவீதியில் தமது படையினருடன் வலம் வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் எறும்பு மற்ற எறும்புகளைப் பார்த்;து, ஓ எறும்புகளே!  உங்களின் இருப்பிடங்களுளுக்கு சென்று பதுங்கிக கொள்ளுங்கள். சுலைமானும், அவரது படையினரும் அவர்கள் அறியாமல் உங்களை நிச்சயமாக நசுக்கிவிடாமல் இருக்கட்டும் என்று எச்சரித்தது.

அது எறும்புகளின் அரசி என்றும், அதன் பெயர் தாஹினா என்றும், கதமி என்றும், முன்திர் என்றும், மலாஹியா என்றும், மகுனஸாதாயித் என்றும் பல்வேறாக குறிப்பிடுகிறார்கள். அது பெண் நொண்டி எறும்பு என்றும், ஜின்களுக்கு வாகனமாக இருந்ததாகவும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது.
حَتَّىٰ إِذَا أَتَوْا عَلَىٰ وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும்> அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.  – அல்குர்ஆன் 27:18

இது சம்பந்தமாக தப்ஸீர் மஆலிமுத் தன்ஜீலில், ‘ ஒரு நாள் காலை நேரத்தில், தம் படைபரிவாரங்களுடன் சிரியாவிலிருந்து புறப்பட்டு எமன் நாட்டுப் பக்கம் வானவீதியில் சென்று கொண்டிருந்தார்கள். தாயிப்பிற்குத் தெற்கே ஒரு கணவாய் இருக்கிறது. அங்கு எறும்புக் கூட்டமாகவே இருந்தது. இந்த எறும்புகளெல்லாம் ஜின்வர்க்கத்திற்கு வாகனமாகப் பயன்பட்டு வந்தன. அச்சமயத்தில்தான் அந்த எறும்பு தம் கூட்டத்தாரை எச்சரித்தது.

இதைக் கேட்ட சுலைமான் நபி அவர்கள் அந்த எறும்பை நோக்கி, எனது படையினர் யாருக்கும் தொல்லை தருவதில்லை என்பது உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் நபி அவர்களே! தாங்கள் கூறுவது முற்றிலும் சரிதான். ஆனால் நான் எனது கூட்டத்தாருக்கு தலைமை வகித்துள்ளதால் அவர்களை எச்சரிப்பது என் பேரிலுள்ள கடமையல்லவா என்றது.

உனது இனத்தின் தலைமையின் கீழ் எவ்வளவு தொகை இருக்கும்? என்று விசாரித்தார்கள்.

‘எனது தலைமையின் கீழ் பல படைப்பிரிவுகள் உள்ளன. 4ஆயிரம் பெரிய அதிகாரிகள் உள்ளனர். ஒவ்வொரு அதிகாரியின் கீழும் 4 ஆயிரம் சிறிய அதிகாரிகள் உள்ளனர். அந்த ஒவ்வொரு சிறிய அதிகாரியின் கீழும் 40 ஆயிரம் எறும்புகள் உள்ளன என விவரித்தது அந்த எறும்பு.

அவர்களுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்ததைப் பற்றி அல்குர்ஆன் 34: 12ல் கூறியுள்ளான்.
وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ ۖ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ ۖ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரசாங்கம் எகிப்திலிருந்து ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தது. காலையில் அவர்கள் திமிஷ்க்கிலிருந்து புறப்பட்டு நண்பகல் இஸ்தகர் வந்து சேர்வார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு அஸ்தமன நேரத்திற்கு காபூல் வந்து விடுவார்கள் என்றும் அதிகமாக அவர்கள் ததத்மூர் என்ற ஊரில் வந்துதான் உணவு அருந்துவார்கள் என்றும் ஒரு குறிப்பு உள்ளது.

ததத்மூர் நகரை ஜின் வர்க்கத்தினர் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்குவதற்காக விசேசமாக நிர்ணமானித்திருந்தனர்.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம்  அவர்களிடம் ஓர் அபூர்வமான் நாற்காலி இருந்தது. அதில் ஆயிரம் பாகங்கள் இருந்தன. ஒவ்வொரு பாகத்திலும் ஆயிரம் அறைகள் இருந்தன. இவற்றில், மனிதர்களும், ஜின்களும் தங்கியிருந்தனர். இதன் ஒவ்வொரு பாகத்தையும் ஆயிரம் ஷைத்தான்கள் சுமந்து கொண்டிருந்தனர். அவர்கள் எங்கு செல்ல நாடுகின்றார்களோ, காற்று அந்த இடத்திற்கு அந்த அதிசய நாற்காலியைக் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.
தப்ஸீர் மதாரிக்கில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைகள் உண்பதற்காக, ஜின்கள் மரத்தினால் தயாரித்திருந்த அமர்ந்து சாப்பிட முடியும். உணவு சமைக்கப்படும் அண்டா கருங்கல்லினால் தயாரிக்கப்பட்டிருந்தது. சாப்பிடுவதற்காக விரிக்கப்பட்ட விரிப்பின் மீது காலியாக உள்ள  அண்டாக்கள் வைக்கப்பட்டிருக்கும். மேகம் மழையைக் கொட்டி அந்த அண்டாக்களை நிரப்பி விடும்.

தினசரி பல்லாயிரக்கணக்கான ஒட்டகங்களும், ஆடுகளும் இறைச்சிக்காக அறுக்கப்பட்டு வந்தன. இவைகள் அனைத்தும் அவர்கள் படைகளுக்காக தயாரிக்கப்படும் உணவுகள். ஊழியர்களுக்காகவும், ஊழியம் புரியும் பிராணிகளுக்காகவும் தனியாக பல்லாயிரக்கணக்கான அண்டாக்களில் உணவு தயாராகும்.

ஆனால் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ தினசரி பகலில் நோன்பு நோற்று வந்தார்கள். அரச பரிபாலன வேலை நேரம் போக மீத நேரங்களில் போரில் உபயோகிக்கும் இரும்புக் கவசங்களை தயாரிப்பார்கள். அவற்றை விற்று, அதனால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இரண்டு தொலிக் கோதுமையிலான ரொட்டியைச் சுட்டு, அவற்றை எடுத்துக் கொண்டு கப்ருஸ்தானுக்குச் செல்வார்கள். வழியில் தென்படும் ஏழைக்கு ஒரு ரொட்டியைக் கொடுத்து, மற்றொரு ரொட்டியைக் கொண்டு நோன்பு திறந்து கொள்வார்கள். இரவு நேரங்களில் ஒரு கம்பளியைப் போர்த்துக் கொண்டு நித்திரை செய்து கொள்வார்கள்.

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிருகங்கள், பறவைகள், ஜின்கள், தேவதைகள் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பொறுப்பைக் கொடுத்திருந்தார்கள். ஹுத்ஹுத் என்றழைக்கப்படும் மரங்கொத்திப் பறவைக்குத் தண்ணீர் கிடைக்கும் இடத்தைக் கண்டு பிடித்துத் தெரிவிக்கும் பொறுப்பைத் தந்திருந்தார்கள். எந்த இடத்தில் எத்தகையத் தண்ணீர் கிடைக்கிறது என்பதை மிகத் துல்லியமாக சுiமான் நபிக்கு அறிவித்து விடும். அவ்விடத்தை ஜின்களை விட்டு அவர்கள் தோண்டச் செய்து தேவையான தண்ணீர்  எடுத்துக் கொள்வார்கள்.

ஹுத்ஹுத் என்ற பறவையின் தலைமையின கீழ் 12 ஆயிரம் உதவித் தலைமைப் பறவைகளும், ஒவ்வொரு உதவித் தலைமைப் பறவையின் கீழும் 12ஆயிரம் உதவி புரியும் பறவைகளும் இருந்து வந்தன என்றும், நபி அவர்கள் பவனி வரும்போது இந்த அத்தனைப் பறவைகளும் மேலே பறந்து அவர்களுக்கு குடைபோல நிழலிட்டு வரும் என்றும், ஹயாத்துல் ஹய்வான் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் மக்காவில் தங்கியிருந்த போது இதேநகரில் ஒரு  நபி வரவிருக்கிறார்கள். அவர்களே இறுதி நபியாகவும் இருப்பார்கள். மற்ற நபிமார்களைவிட அவர்கள் அந்தஸ்திலும், குணாதிசியங்களிலும் உயர்ந்து, சிறந்து விளங்குவார்கள் என்று புகழ்ந்துரைத்தார்கள்.

அவர்கள் எப்போது வருவார்கள் என்று கேட்டதற்கு, ஓராயிரம் வருடங்களுக்குப் பிறகு என்று பதில் கூறினார்கள். அங்கிருந்து புறப்பட்டு எமன் தேசத்தை அடைந்தார்கள். அப்போது தொழுகை நேரம் வந்துவிட்டதால் உளு செய்வதற்காக தண்ணீர் தேவைப்பட்டது. அப்போது தண்ணீர் இருக்குமிடம் கண்டறிய ஹுத்ஹுத் பறவையைத் தேடினார்கள். அது எங்கோ சென்று விட்டது கண்டு அவர்களுக்கு கடுமையான கோபம் கொண்டார்கள். கழுகை ஏவி அதை அழைத்து வருமாறு சொன்னார்கள்.

வழக்கத்திற்கு மாறாக அன்று ஹுத்ஹுத் பறவை வானத்தில் வெகு உயரத்தில் பறந்து பல பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டே வரும்போது, ஒரு சிறு பட்டினமும், அழகான தோட்டமும் அதன் பார்வைக்கு பட்டது. அங்கு இறங்கி சற்று இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, மற்றொரு பறவை வந்தது. அது ஸபா நகரத்திலிருந்து வருவதாகவும், அதை ஒரு அரசி ஆண்டு வருவதாகவும், அந்த அரசியின் அரியாசனத்தையும் காண கண்கள் ஆயிரம் வேண்டும் என்று புகழ்ந்து கூறியது.

ஹுத்ஹுத் பறவை நேரமாகிவிட்டபடியால் தன்னை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் தேடிக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லி வேகவேகமாக பறந்து சென்று விட்டது. அவ்வாறு திரும்பிக் கொண்டிருக்கும்போது கழுகு இடைமறித்து சுலைமான் அலைஹிஸ்ஸலாம் கோபமாக இருப்பதாக சொன்னது.

இறுதியில் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் சென்று இதுபற்றி விபரங்களை தெரிவித்தன.
அந்த ஸபா நகரை யார் ஆட்சி செய்கிறார்கள்? அவர்கள் எந்த மார்க்கத்தை சார்ந்தவர்கள்? என்று கேட்டார்கள் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

அந்த ஸபா நகரை ஒரு பெண்தான் ஆட்சி செய்து வருகிறார். அவர் பெயர் பல்கீஸ் அவர் வீற்றிருக்கும் அரியாசனம் தங்கத்தாலும், வெள்ளியாலும் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அரசியும், அந்த நகர மக்களும் சூரியனை வணங்கக் கூடியவர்களாக உள்ளார்கள். அந்த அரசி மிகவும் அழகுள்ளவளாக இருக்கிறாள். நான் அவசரமாக திரும்ப வேண்டியதிருந்ததால் மேலும் என்னால் அதிகமான செய்திகளை திரட்ட முடியவில்லை என்றது ஹுத் ஹுத்.
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரசி பல்கீஸுக்கு,

‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நீங்கள் என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்’
என்று கடிதம் எழுதி ஹுத்ஹுத் பறவையிடம் கொடுத்து ஸபா நகர அரசிக்கு கொடுக்கச் சொன்னார்கள்.
ஹுத்ஹுத் அதை எடுத்துச் சென்று அரசி பல்கீஸ் முன் போட்டுவிட்டு, அக்கடிதம் சம்பந்தமாக அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை கேட்பதற்கு ஓரிடத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.

அரசி அந்தக் கடிதத்தைப் படித்து பார்த்து, தம் அவையோர்களிடம் கொடுத்து, இது கண்ணியம் வாய்ந்த ஒருவரிடமிருந்து வந்திருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் சொல்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.
‘அவையோர் அவருடன் போர் புரிய வேண்டும் என்று கருத்து சொன்னார்கள். இது அரசி பல்கீஸுக்குப் பிடிக்கவில்லை. நாம் அவருடைய அழைப்பை ஏற்று அங்கு செல்வதே உசிதம் என்று சொல்லி சுலைமான் நபிக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்புப் பொருட்களை சேகரிக்க சொன்னார்கள்.

விலையுயர்ந்த  நவரத்தினங்கள் பதித்த கிரீடம், 1000 தங்கப்பாளங்கள், வெள்ளிப் பாளங்ள், கஸ்தூரி, துளையிடப்படாத ஒரு பெரிய குண்டு முத்து, வளைந்து துவாரமிடப்பட்ட ஒரு குண்டு முத்து இத்தனையையும் சேகரித்ததோடு 500 அழகிய பெண் அடிமைகள், 500 அழகிய ஆண் அடிமைகள் ஆகியோர்களை திரட்டி, ஆண்களை பெண்களைப் போலவும், பெண்களை ஆண்களைப் போலவும் வேடமிடச் செய்து சுலைமான் நபிக்கு முன்னால் அவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் போதித்து இவர்களை தலைமையேற்று நடத்திட முன்திர் இப்னு அம்ர் என்பவரை நியமித்து அவரிடம் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கவனிக்குமாறும் சொன்னார்.

அவர் நபியாக இருந்தால் இந்த ஏற்பாடுகளை எல்லாம் நன்றாக கவனித்து விடுவார் என்று அரசி பல்கீஸ் சொன்னார்.
இத்தனை ஏற்பாடுகளையும் ஹுத்ஹுத் பறவை முற்கூட்டியே ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் எடுத்து சொல்லிவிட்டது. மற்றொரு குறிப்பில் அல்லாஹ் அவர்களுக்கு தெரிவித்துக் கொடுத்தான் என்றும் உள்ளது.

அரசி பல்கீஸ் அனுப்பி வைத்த ஆட்களோடு கொடுத்தனுப்பிய வெகுமதியோடு வந்து சேர்வதற்குள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜின்களை அனுப்பி அவர்களிடம் வெகுதூரத்திற்கு தங்கம், வெள்ளியிலான பாளங்களை பரத்தி வைக்கவிட்டு அதன் மேல் பொன்னாலான தூண்களையும், சிகரங்களiயும் எழுப்பி நடு மத்தியில் தமது அரியாசனத்தை அமைத்து, அதன் இருபகுதியிலும் நான்காயிரம் நான்காயிரம் பொன்னாலான நாற்காலிகளை வைத்திருக்குமாறு கூறினார்கள்.

பல்கீஸை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருமணம் முடித்தால் அவர்களுக்கும் சேவகம் செய்ய வேண்டிவரும் என்று எண்ணி ஜின்கள் ஒன்று கூடி அரசியைப் பற்றி பலவாறு இகழ்ந்துரைத்து, அவளின் காலின் பாதங்கள் கழுதையைப் போன்றிருக்கும் என்று சொல்லி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏமாற்றப்பார்த்தன. அதையெல்லாம் அவர்கள் செவிமடுக்கவில்லை.

பல்கீஸ் அரசியின் பிரதிநிதி முன்திர் இப்னு அம்ர் அங்கு வந்ததும்  இந்த ஏற்பாடுகளை கண்டு பிரமித்தார். சுலைமான் நபி அவர்கள் தங்க அரியாசனத்தில் அமர்ந்திருப்பதை கண்டார். இந்த ஏற்பாடுகள் முன் தாம் கொண்டு வந்த வெகுமதிகள் கொஞ்சம்தான் என நினைத்து அனைத்தையும் தூர வைத்து விட்டார்.

சுலைமான் நபி அவர்கள் மிக மரியாதையுடன் அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். முன்திர் அரசி பல்கீஸ் அனுப்பிய அறிமுகக் கடிதத்தை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக் கொண்ட அவர்கள், ‘அரசி பல்கீஸ் கொடுத்த இரு முத்துக்கள் அடங்கிய அந்த பொன்சிமிழ் எங்கே? என்று கேட்டார்கள்.
திகைத்துப் போன முன்திர் அந்த  முத்துக்கள் இருந்த பெட்டியை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துளையிடப்படாத அந்த முத்தையெடுத்து கரையானை அழைத்து அதன் முன்னால் வைத்து இதில் துவாரத்தைப் போட்டு விடு என்று கூறினாhர்கள். நொடிப்பொழுதில் கரையான் அதில் துளையிட்டுவிட்டது. ஒரு புழுவை அழைத்து அதன் வாயில் ஒரு நூலைக் கொடுத்து கோணல் கோணலாகத் துவாரமுள்ள இந்த முத்திற்குள் நுழைந்து இந்த நு{லைக் கோர்த்து விடு என்றார்கள். அதுவும் உடனே செய்து முடித்தது.

அதேபோல் மாறு வேடத்திலிருந்த ஆண், பெண்களைப் பார்த்து, நெடுந்தூரம் களைத்து போய்விட்டீர்கள். எனவே, அதோ அந்தப் பாத்திரங்களில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. உங்கள் முகம், கைகால்களைக் கழுவி அவற்றின் மீது படிந்துள்ள தூசுகளைக் களைந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

பெண்கள் வேடமிட்ட ஆண்கள் ஆண்கள் வழமையாக கழுவிக் கொள்வதைப் போல தங்களின் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளிக் கழுவ ஆரம்பித்தனர். ஆண்கள் வேடமிட்டிருந்த பெண்களோ, பெண்களின் வழமைப்போல தண்ணீரை ஒரு கையில் வார்த்து மறுகையில் விட்டு பிறகு இரு கைகளாலும் கழுவ ஆரம்பித்தார்கள். இவற்றை கவனித்துக் கொண்டிருந்த சுலைமான் நபி அவாக்ள் தண்ணீரை அள்ளிக் கழுவுவர்களெல்லாம் ஆண்கள். வார்த்துக் கழுபவர்கள் எல்லாம் பெண்கள் என்று கூறிவிட்டார்கள்.

பிறகு முன்திர் அவர்கள் தாம் கொண்டுவந்த வெகுமதிகளை சுலைமான் நபி முன்னால் வைத்தார். உடனே சுலைமான் அலைஹிஸ்ஸலாம் இதுவெல்லாம் அழியும் பொருட்கள். எனக்குத் தேவையில்லை.இதை உங்கள் அரசியிடமே கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

உங்கள் அரசி பல்கீஸை இங்கே வரச் சொல்லுங்கள். அதுதான் சிறந்த வழி. இதற்கு மாறு செய்தால், அல்லாஹ் எனக்களித்துள்ள பலத்தைக் கொண்டு உங்களனைவரையும் தண்டித்து அவமானமுறச் செய்வேன்’ என்று எச்சரித்து பல்கீஸிடம் திருப்பி அனுப்பி வைத்தார்கள்.

முன்திர் அவர்கள் அரசி பல்கீஸிடம் திரும்பிச் சென்று அங்கு நடந்ததெல்லாவற்றையும் சொன்னார். அதற்கு அரசி, அவர் சாதாரண அரசர் மட்டுமல்ல. நபியாகவும் இருக்கிறார். எனவே அவரது அழைப்பை நாம் தட்டிக் கழிக்கக் கூடாது. அது பேராபத்தாகவே முடியும்’ என்று கூறிவிட்டு சுலைமான் நபி அவர்களைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.
பல்கீஸ் வந்து சேருமுன் அவரது அரியணையை கொண்டு வரவேண்டும். உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள் என்று சுலைமான் நபி அவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது இஃப்ரீத் என்ற பெயர் கொண்ட ஒரு ஜின் எழுந்து நின்று அல்லாஹ்வின் நபியே! தாங்கள் உத்தரவிடுவீர்களேயானால், இந்த அடியேன் அந்த அரியாசனத்தை சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு முன் இங்குக்கொண்டு வந்து சேர்ப்பித்து விடுகிறேன் என்றது.

அதற்கும் முன்னதாக கொண்டுவர இங்கு யார் தயாராக இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

அல்லாஹ் நாடினால் கண் இமை மூடித் திறப்பதற்குள் அதனை இங்கு கொண்டு வந்து விட முடியும் என்றார் ஆஸிஃப் இப்னு பர்கியா என்ற இறைநேசர்.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனுமதியளிக்கவே, அவர் சொன்னபடி அரசி பல்கீஸின் சிம்மானம் கொண்டு வரப்பட்டது.

மேலும் ஜின்கள் முன்பு சொன்ன அரசியின் பாதங்கள் கழுதையின் பாதங்களைப்  போன்றிருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். ஒரு மாளிகை எழுப்பி அதன் முன்பகுதியில் ஒரு பெரும் குளம் தயாரித்து, அதில் வண்ண மீன்களை விட்டு குளத்தை கண்ணாடி பளிங்கு தளத்தால் மூடச்செய்தார்கள். பார்;ப்பதற்கு மூடப்படாத, தண்ணீர் நிறைந்த குளம் மாதிரியே அது காட்சியளித்தது.

அதன்பிறகு பல்கீஸை அங்கு வரச் செய்தார்கள். அவள் அதை குளமென்று நினைத்து, ஆடைகள் தண்ணீரில் நனைந்துவிடாமலிருக்க தம்முடைய ஆடையை சற்று தூக்கினார். இதில் அவருடைய காலின் அடிப்பாகம் கெண்டைக்கால் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. சுலைமான் நபி அவர்கள் ஜின்கள் சொன்னது கட்டுக்கதை என்று அறிந்தார்கள். அரசி பல்கீஸுக்கு இது பளிங்கு தரைதான் என்று உண்மையை உரைத்தார்கள்.

இதனைக் கேட்ட அரசி பல்கீஸ் அல்லாஹ்வின் தூதரே! நான் என் தவறுகளை உணர்ந்து கொண்டேன். அல்லாஹ் என் பாவங்களை மன்னித்தருள்வானாக! சூரிய வணக்கத்தை ஒழித்துக்கட்டி, அந்தச் சூரியனைப் படைத்தவனை வணங்கச் செய்து, உங்கள் பேரில் விசுவாசம் கொண்டு முஸ்லிமாகி விட்டேன் என்றார்.

மிகவும் சந்தோஷம். இனி உமது ஊருக்கு நீர் சென்று உமக்குப் பிடித்தமான ஒருவரை மணந்து சந்தோஷமாக வாழ்ந்து கொள்ளலாம் என்றார்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

நான் திருமணம் சென்று கொண்டால் உங்களைத் தவிர வேறு யாரையும் மணக்க விரும்பவில்லை என்று சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அரசி பல்கீஸை சுலைமான் அலைஹிஸ்ஸாம் அவர்கள் சிறப்புடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன் பிறகு இருவரும் சுமார் 27 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதன்பிறகு, அரசி பல்கீஸ் அவர்கள் ஸிரியா நாட்டிலுள்ள ததத்மூர் என்ற ஊரில் மறைந்து,  நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார். – அல்குர்ஆன் – 27:19

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார். -அல்குர்ஆன் – 27:20

لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ

“நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார். -அல்குர்ஆன் – 27:21

فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِن سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ

(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.” -அல்குர்ஆன் – 27:22

إِنِّي وَجَدتُّ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ

“நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும்> அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. -அல்குர்ஆன் – 27:23

وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ

“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. -அல்குர்ஆன் – 27:24

أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ

“வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? -அல்குர்ஆன் – 27:25

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

“அல்லாஹ் – அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று). -அல்குர்ஆன் – 27:26

قَالَ سَنَنظُرُ أَصَدَقْتَ أَمْ كُنتَ مِنَ الْكَاذِبِينَ

(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார். -அல்குர்ஆன் – 27:27

اذْهَب بِّكِتَابِي هَٰذَا فَأَلْقِهْ إِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانظُرْ مَاذَا يَرْجِعُونَ

“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்). -அல்குர்ஆன் – 27:28

قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ

(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.” -அல்குர்ஆன் – 27:29

إِنَّهُ مِن سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று (துவங்கி) இருக்கிறது. -அல்குர்ஆன் – 27:30

أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ

“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).  – அல்குர்ஆன் – 27:31

قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنتُ قَاطِعَةً أَمْرًا حَتَّىٰ تَشْهَدُونِ

எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள். -அல்குர்ஆன் – 27:32

قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانظُرِي مَاذَا تَأْمُرِينَ

“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள். -அல்குர்ஆன் – 27:33

قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً ۖ وَكَذَٰلِكَ يَفْعَلُونَ

அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள். -அல்குர்ஆன் – 27:34

وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِم بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُونَ

“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.” -அல்குர்ஆன் – 27:35

فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُم بَلْ أَنتُم بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ

அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்! -அல்குர்ஆன் – 27:36

ارْجِعْ إِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُم بِجُنُودٍ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخْرِجَنَّهُم مِّنْهَا أَذِلَّةً وَهُمْ صَاغِرُونَ

“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி> அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).  -அல்குர்ஆன் – 27:37

قَالَ يَا أَيُّهَا الْمَلَأُ أَيُّكُمْ يَأْتِينِي بِعَرْشِهَا قَبْلَ أَن يَأْتُونِي مُسْلِمِينَ

“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். -அல்குர்ஆன் – 27:38

قَالَ عِفْرِيتٌ مِّنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَ ۖ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ

ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.” -அல்குர்ஆன் – 27:39

قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِندَهُ قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார். -அல்குர்ஆன் – 27:40

27:41   قَالَ نَكِّرُوا لَهَا عَرْشَهَا نَنظُرْ أَتَهْتَدِي أَمْ تَكُونُ مِنَ الَّذِينَ لَا يَهْتَدُونَ
27:41. (இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா> அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”
27:42   فَلَمَّا جَاءَتْ قِيلَ أَهَٰكَذَا عَرْشُكِ ۖ قَالَتْ كَأَنَّهُ هُوَ ۚ وَأُوتِينَا الْعِلْمَ مِن قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِينَ
27:42. ஆகவே> அவள் வந்த பொழுது> “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம்> நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
27:43   وَصَدَّهَا مَا كَانَت تَّعْبُدُ مِن دُونِ اللَّهِ ۖ إِنَّهَا كَانَتْ مِن قَوْمٍ كَافِرِينَ
27:43. அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.
27:44   قِيلَ لَهَا ادْخُلِي الصَّرْحَ ۖ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَكَشَفَتْ عَن سَاقَيْهَا ۚ قَالَ إِنَّهُ صَرْحٌ مُّمَرَّدٌ مِّن قَوَارِيرَ ۗ قَالَتْ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَانَ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
27:44. அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்)> “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக> எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு> ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.

ஒரு முறை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவையில் வீற்றிருக்கும் போது ஒரு மனிதர் வந்து சபையில் இருந்த ஒருவரை முறைத்துப் பார்த்து சென்றுவிட்டார். அந்த மனிதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து இப்போது வந்துவிட்டு போனாரே அவர் யார்? என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் அவர்கள்தான் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இங்குள்ள யாரோ ஒருவருடைய உயிரைப் பறிக்க வந்துள்ளார்கள் என்றார்கள்.
அவர் என்னைத் தான் முறைத்துப் பார்த்தார். எனவே என்னுடைய உயிரைத்தான் பறிக்க வந்துள்ளார் என்று நினைக்கிறேன். எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறினார்.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காற்றை அழைத்து இந்த மனிதரை ஏழு கடல்களுக்கு அப்பால் கொண்டுபோய் சேர்த்துவிடு என்று ஆணையிட்டார்கள்.
காற்று நொடிப்பொழுதில் அவரை ஏழுகடல்களுக்கு அப்பால் சேர்த்துத விட்டது. அப்பாடா! தப்பித்தேன் என்று இருக்கும் சமயம் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதே மனிதஉருவில் அவர் முன் தோன்றினார்கள்.
இங்கேயுமா வந்து விட்டீர்? என்று அந்த மனிதர் கேட்டார். அல்லாஹ் இந்த இடத்தில் வைத்துதான் உம்முடைய உயிரை வாங்க கட்டளையிட்டிருக்கிறான்.  ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தர்பாரில் இருந்த தாங்களை இங்கே கண்டது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அல்லாஹ்வுடைய நாட்டத்தை மாற்றமுடியாதல்லவா என்று சொல்லிக் கொண்டே அவரது உயிரைப் பறித்துக் கொண்டார்கள்.
ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம்; அவர்கள் இறைமறுப்பாளானாகிய பவுனவகு என்ற தீவின் அரசனோடு யுத்தம் செய்து அவனை கொன்றுவிட்டார்கள். அவனுக்கு ஷம்ஷாத் என்ற மகள் இருந்தாள். அவளை முஸ்லிமாக்கி நபி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அவளை எவ்வளவோ சிறப்பான முறையில் வாழவைத்தும் அவள் தம் தந்தையின் பிரிவால் சர்வகாலமும் அவரை நினைத்து அழுதவண்ணமே இருந்தாள்.
தம் தந்தையின் சிலையை ஓரிடத்தில் வைத்து அவன் நினைவாகவே இருந்தவள் நாளடைவில் அதை வணங்கவும் ஆரம்பித்துவிட்டாள். இதனையறிந்த சுலைமான் அலைஹிஸ்ஸலாம்; அவர்கள் அந்தச் சிலையை அவள் கண்முன்னாலேயே சுக்குநூறாக உடைத்துப் போட்டுவிட்டார்கள். அதைக் கண்டதும் பதறிஅடித்துக் கொண்டு பித்தம் பிடித்தவளைப் போல் அழுதுகொண்டே தாம் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பிறந்த அமீனா என்ற பெண் பிள்ளையையும் அங்கேயே விட்டுவிட்டு காட்டுக்கு ஓடிவிட்டாள்.
அந்தப்பிள்ளையை மிகவும் கண்காணிப்பாக வளர்த்து வந்தார்கள். ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொடுத்த முத்திரை மோதிரத்தை தாம் குளிக்கப் போகும்போது அந்த சிறுமியிடம் கழற்றி கொடுத்துவிட்டு சென்றார்கள். இதை கண்காணித்துக் கொண்டிருந்த சன்ஹரா என்ற ஜின் சுலைமான் நபியைப் போல் வேடமிட்டு வந்து அந்த மோதிரத்தை தந்திரமாக வாங்கிக் கொண்டது. அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யவும் ஆரம்பித்துவிட்டது. அதற்கே அனைவரும் வழிப்பட்டனர்.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முத்திரை மோதிரம் இல்லாததால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் மனம் வெறுத்துப் போய் சுலைமான் நபி அவர்கள் வேறுவழியின்றி அந்நகரை விட்டு வெளியேறி கடற்கரைக்குச் சென்று மீனவர்களுக்கு ஊழியம் செய்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அதிகமான வணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
சுமார் 40 நாட்களும் கடந்து விட்டது. ஆட்சி செய்து அலுத்துவிட்ட அந்த தேவதை ஒரு நாள் கடற்கரைக்கு வந்து முத்திரை மோதிரத்தை கழற்றி கடலில் வீசிவிட்டு காட்டிற்குள் ஓடிவிட்டது. அதை ஒரு மீன் விழுங்கி விட்டது. வழக்கம்போல் சுலைமான் நபி அவர்கள் மீனவர்களுக்கு ஊழியம் செய்து கிடைத்த மீனை அறுக்கும்போது அதில் முத்திரை மோதிரம் இருக்கக் கண்டு அதைக் கையில் அணிந்து கொண்டு அரியணை ஏறி ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கட்ட ஆரம்பித்து பாதியில் நின்றுபோன  பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதைக் கட்ட ஆரம்பித்தார்கள். இதில் ஏழாயிரம்பேர் ஈடுபடுத்தப்பட்டனர். ஏழு வருட காலம் பணி தொடர்ந்து நடந்து வந்தது.
பைத்துல் முகத்தஸ் கட்டி முடிய ஒரு வருடத்திற்கு முன் சுலைமான் நபி அவர்களுக்கு அல்லாஹ்வின் அழைப்பு வந்து விட்டது.  சஜ்தைவில் இருந்த படியே அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் மறையும் போது அன்னாருக்கு வயது 180. அவர்கள் சொன்ன அறிவுரைப் படி அவர்கள் மறைந்தபின்னர், அவர்கள் வழக்கமாக அணியும் ஆடைகளை அணிவித்து ஒரு தடியை ஊன்றி பைத்துல் முகத்தஸ் ஆலயத்தின் கட்டிடத்தை பார்வையிட்டு வருவது போல் நிறுத்தி வைத்தனர். ஜின்கள் அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணியே கட்டிட வேலைகளை முடித்தனர். ஓராண்டு வரை இவ்வாறு நடந்தது.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம்  அவர்களைத் தாங்கியிருந்த தடியை கரையாண்கள் அரித்;துவிட்டது. அதன்காரணமாக அத்தடி பாதியில் முறிந்துவிட்டது. அத்தோடு சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடலும் சாய்ந்துவிட்டது. ஜின்களுக்கு இச்செய்தி தெரிந்ததும் அவைகள் அனைத்தும் மலைக் இருந்த இடம் நோக்கி ஓடிவிட்டன. இதைப் பற்றி
فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُ ۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَن لَّوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ
அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
அல்-குர்ஆன் 34:14 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உத்திரவிற்கிணங்க ஜின்கள் பைத்துல் முகத்தஸ்ஸை கட்டின விபரத்தை அல்லாஹ் தன் திருமறையில்
يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَاتٍ ۚ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا ۚ وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ

அவை ஸுலைமான் விரும்பிய> மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
-அல்-குர்ஆன் 34:13

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடல் பைத்துல் முகத்தஸிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களை அடக்கம் செய்வதில் அரசி பல்கீஸின் மகன் ருஜஹீம் பங்கு கொண்டார். அவரே அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார் என்றும், அவர் ஒரு நபியாக இருந்தார் என்றும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

Add Comment

Your email address will not be published.