Print Friendly, PDF & Email

ஹழ்ரத் ஐயூபு அலைஹிஸ்ஸலாம் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதல் மகன் ஈசுவுடைய வழியில் வந்தவர்கள் என்றும், இவர்களின் தந்தை ஆமூஸ் என்றும் இவர்களின் அன்னை லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிவந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இவர்களில் தந்தை நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவர்களின் மனைவி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் அப்ராயீமின் மகள் ஆவார்.

இவர்கள் உயரமாகவும், கருநிறக் கண்களும் சுருள்முடியும் பெற்றிருந்தார்கள். இவர்களின் தலை பெரியதாகவும், கழுத்து குட்டையாகவும், கை கால்கள் நீண்டவையாகவும் இருந்தன. இவர்கள் பழுப்பு நிறமுடையவர்களாக இருந்தார்கள். இவர்கள் வசித்த நாடு ஹெளரான் அல்லது பதானியா அல்லது சிரியாவிலுள்ள மித்னா என்றும் பலவித கூற்றுக்கள் உண்டு.

செல்வந்தரான இவர்கள் 1000 பெண் குதிரைகளும், 1000 ஆண் குதிரைகளும், இரண்டாயிரம் கோவேறு கழுதைகளும், 700 ஒட்டகங்களும், 1000 காளைகளும், 1000 பசுக்களும், ஆயிரம் ஆடுகளும் வைத்திருந்தனர். ஒருநாள் இப்லீஸ் அல்லாஹ்விடம் நான் உன் நல்லடியார்களை வழிகேட்டிலாக்கிவிட்டேன் என்று சொன்னபோது, அல்லாஹ் இவர்களை சுட்டி இவர்களை வழிகேட்டிலாக்க முடியுமா? என்று கேட்க, முடியும் என்று கூறி இவர்களின் உடைமையில் ஆதிக்கத்தை கேட்டான். அதன்பின் இவர்களின் உடைமைகளை அழித்தான். ஆனால் அதற்காக இவர்கள் பொறுமை இழக்கவில்லை.

பிறகு இப்லீஸ் இவர்கள் மக்கள் மீது உரிமை கோர இறைவனும் அவ்வாறே அளித்தான். இப்லீஸ் இவர்களின் மக்களை மரிக்கச் செய்ய அப்பொழுதும் இவர்கள் பொறுமை இழக்கவில்லை. அடுத்து இவர்களின் உடல் மீது ஆதிக்கம் பெற்று இவர்களின் உடல் மீது கொடிய புண் ஏற்படச் செய்தான். அவற்றில் எண்ணற்ற புழுக்கள் நெளிந்தன. அவை கீழே விழும்தோறும் அதை எடுத்து தம் உடலில் விட்டுக் கொள்வார்கள். அரிப்போ மிகவும் கடுமையாக இருந்தது.

இந்தக் கொடுமையிலிருந்து விடுபட இறைவனிடம் கையேந்தக் கூடாதா? என்று இவர்களின் மனைவி ரஹ்மா அவர்கள் சொல்ல, வளமாக வாழ்ந்த நாம் சோதிக்கப்படுகிறோம். இச்சோதனையை விரைவில் நீக்க இறைவனிடம் இறைஞ்ச நான் நாணமுறுகிறேன் என்று சொல்லிவிட்டார்கள்.

வறுமையினால் இவர்களின் மனைவி கூலி வேலை செய்து தமக்கும், தம் கணவருக்கும் உணவுப் பொருட்கள் வாங்கச் சென்றபோது வழியில் இப்லீஸ் இவர்களை ஒரு வயோதிகச் செல்வந்தர் போல் வேடமிட்டு சந்தித்தான். தம்மை மணமுடித்துக் கொண்டால் இன்பவாழ்வு வாழலாம் என்று ஆசை காட்டினான். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்.

இவர்களின் நிலையைக் கண்ட ஊர்மக்கள் அன்னாரை ஊருக்கு வெளியே போகச் செய்ய முயற்சித்தனர். மேலும் அன்னாரை கொல்லவும் துணிந்தனர். ஆனால் அம்முயற்சிகள் எல்லாம் வீணாகின. எனவே அவர்கள் அங்கிருக்க விரும்பாமல் சிலரின் உதவியோடு ஊருக்கு வெளியே சென்று தங்கினர்.

ஒருநாள் இப்லீஸ் மருத்துவர் வேடமிட்டு வந்து,  இவர்களின் மனைவியிடம் இந்நோய் நீங்க பன்றி கறியும் மதுவும் அருந்தினால் நோய் நீங்கப் பெறும் என்று கூறினான். இதனை ரஹ்மா அம்மையார் இவர்களிடம் கூற இவர்கள் அதனை அடியோடு மறுத்து விட்டார்கள்.

ஒரு வெள்ளிக்கிழமை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து இவர்களை எழுந்து நின்று காலை மண்ணில் அடிக்குமாறு கூறினர். அவ்விதமே இவர்கள் செய்ய ஒரு நீருற்றுப் பொங்கியது. இவர்கள் அதில் குளித்து அதன் நீரை அருந்த இவர்கள் உடலில் உள்ள நோய் நீங்கிப் பொன்மேனிப் பெற்றார்கள். அதன்பிறகு இவர்களின் வாழ்வு மீண்டும் வளம் பெற்றது.

இவர்களுக்கு நோய் ஏற்பட்டது 70 ஆம் வயதில் என்று குறிப்பு ஒன்று காணப்படுகிறது. இவர்கள் நோய் நீங்கப்பெற்று 20 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்றும், முன்பு வாழ்ந்தது போன்று 70 ஆண்டுகள் மீண்டும் இவர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஒரே இறைவணக்கத்தை மக்களுக்குப் போதித்தனர். ரூம் நாடு சென்று அங்கும் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தனர். சுமார் 27 வருடங்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர். தம் மகனார் ஹுமைலை உலகில் தம் பிரதிநிதியாக நியமித்து விட்டு காலமாயினர். இவர்களின் அடக்கவிடம் திமிஷ்கின் அண்மையில் உள்ள நாவா என்ற இடத்தில் இருக்கிறது.

நோய் குணமடைய நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

ﺃَﻧِّﻲ ﻣَﺴَّﻨِﻲَ ﺍﻟﻀُّﺮُّ ﻭَﺃَﻧﺖَ ﺃَﺭْﺣَﻢُ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ

‘நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்.’ (அல்குர்ஆன் 21: 83)

Recommend to friends
 • gplus
 • pinterest

About the Author

Comments

 1. mohideen
  May 11, 2015 at 1:05 pm

  நபிமார்கள்மற்றும் இறைநேசச் செல்வர்கள் உடைய வரலாறு தாங்கள் எதைக் கொண்டு இங்கு பதிவேற்றம் செய்தீர்கள்?

  • Sufi Manzil
   May 11, 2015 at 3:15 pm

   நபிமார்கள், இறைநேசர்களின் வரலாறுகள் அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் எழுதிய நூற்களிலிருந்துதான் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

Leave a comment