ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

யஹோஷுவா என்பதே ஈஸா என்பதன் மூலம் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் யஹோவா(கடவுள்) காப்பாற்றுகிறார் என்பதாகும். பைளாவி இமாமோ இது ஹீப்ருமொழி சொல் என கூறுகிறார்கள். ஆனால் ஏனையோர் இது வெள்ளை என்று பொருள்படும் ஈஸ் என்னும் அரபிச் சொல்லிலிருந்து தோன்றியது என்று சொல்கின்றனர்.

ஈஸா மஸீஹ் எனும் பெயர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. கிரேக்கமொழியில் ஜீஜஸ் கிறைஸ்ட்என்று ஆகி தமிழில் ஏசு கிறிஸ்து என்று மருவியுள்ளது. மஸஹ் என்றால் தடவுதல் என்று பொருள்படும். இவர்கள் நோயாளிகளைத் தம் கைகளால் தடவி அவர்களின் நோயை நீக்கியதால் மஸீஹ் என்னும் பட்டம் ஏற்பட்டதென்று சொல்லுவார்கள். அதுவே கிரேக்க மொழியில் கிரைஸ்ட் ஆகியிருக்கிறது.

ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 20இருக்கும்போது தங்களது சிற்றன்னை நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி ஈஷாஉ அவர்கள் வீட்டிற்குச் சென்று ஒரு மறைவான இடத்திற்குச் சென்று குளிப்பதற்காக உடைகளை மாற்றி உடுத்திக் கொண்டிருக்கும்போது நடைபெற்ற சம்பவத்தை பற்றி அல்லாஹ் தனது திருமையில் கூறுகிறான்.

وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا. فَاتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا . قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّا. قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا .قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا . قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ ۖ وَلِنَجْعَلَهُ آيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ وَكَانَ أَمْرًا مَّقْضِيًّا. فَحَمَلَتْهُ فَانَتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا

இவ்வேதத்தில் (ஈஸா நபியின் தாயாராகிய) மர்;யமைப் பற்றியும் (சிறிது) கூறும். அவர் தம் குடும்பத்தினரை விட்டு விலகி,கிழக்குத் திசையிலுள்ள (தம்) அறைக்குச் சென்று, (குளிப்பதற்காகத்) தம் ஜனங்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில், (ஜிப்ரயீல் என்னும்) தம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் சரியான ஒரு மனிதருடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.(மர்யம் அவரைக் கண்டதும்) ‘நிச்சயமாக நான், உம்மிடமிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளுமாறு ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் நன்னடத்தையுடையவராக இருந்தால்… (இங்கிருந்து அப்புறப்பட்டுவிடும்)’ என்றார்.

அதற்கவர், ‘பரிசுத்தமான ஒரு மகனை உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்பதற்காக நான் உம் இறைவனால் அனுப்பப் பெற்ற (மலக்காகிய) ஒரு தூதன்தான் என்றார்.

அறத்கவர்> ‘எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே’ என்று கூறினார். அதற்கவர், ‘அவ்வாறே (நடைபெறும்) அது எனக்கு எளிது. அவரை மனிதர்களுக்கு ஒரு திருஷ்டாந்தமாகவும்,நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம். இது முடிவாகக் கற்பனை செய்யப்பட்டு விட்ட ஒரு விஷயம்’ என்றுஉமதிறைவன் கூறுகிறான்’ என்றார். பின்னர் (தானாகவே) மர்யமுக்குக் கர்ப்பமேற்பட்டுக் கர்ப்பத்துடன் (அவர் இருந்த இடத்திலிருந்தே வெளியேறித்) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்.’

– அல்-குர்ஆன் 19:16-22

இச்சம்பவத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்;>

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ .   وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ . قَالَتْ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ ۖ قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ

‘(மேலும் மர்யமை நோக்கி) மலக்குகள் (ஆகுக! என்ற) ஒரு சொல்லைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாரயங் கூறுகின்றான். அதன் பெயர், ‘மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ்’ என்பதாகும். இவர் இம்மை-மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்’ என்று கூறினார்.

அன்றி, ‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்போது (தம் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி)யும், (தம் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையோரில் உள்ளவராகவுமிருப்பார்'(என்றும் கூறினார்கள்)

(அதற்கு மர்யம் தம் இறைவனை நோக்கி) ‘என் இறைவனே! எந்த ஒரு மனிதரும் என்னைத் தீண்டாதிருக்கும்போது,எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்’ என்று கூறினார். (அதற்கு) ‘இவ்வாறே,அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால்,அதனை ‘ஆகுக’ என அவன் கூறுவதுதான் (தாமதம்) உடனே அது ஆகிவிடும்’ என்று கூறினான்.’

-அல்-குர்ஆன் 3: 45-47

அதன்பின் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சட்டையில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஊதினார்கள். உடனே கர்ப்பம் உண்டாயிற்று. இவ்வாறு அவர் இறைவனுடைய ஆவியை ஊதி இவர்கள் பிறந்ததினால் ரூஹுல்லாஹ்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டனர். சில காலத்திற்குப் பின் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடம்பில் மாறுதல் உண்டானது. கர்ப்பிணிக்குரிய அடையாளங்கள் தென்பட்டன. இதனைக் கண்ட ஜகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெரும் கவலை கொண்டார்கள். இதனை தமது மனைவியிடம் மெதுவாக சொன்னார்கள்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு ஜகரிய்யா நபி அவர்களின் மனைவியார்,”நல்ல செய்தியைச் சொன்னீர்கள். இதற்காக ஏன் வருத்தப்பட வேண்டும்?”என்ற கேட்டார்கள்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் எவ்வளவு பெரிய அவமானச் செய்தியை உன்னிடம் கூறுகிறேன். நீ அதிர்ச்சியடைவாய் என்று பார்த்தேன். ஆனால் நீ ஆனந்தப்படுகிறாயே! என்று கூறினார்கள்.

உடனே ஈசாஉ அவர்கள், ‘தகப்பன் இல்லாமல் ஒரு நபி பிறப்பார். அவர் மக்களுக்கு நேர்வழி காட்டுவதோடு,அவர்களின் பிணிகளையும் நீக்குவார். மரித்தவர்களை உயிர்ப்பிப்பார். அவரால் மற்றும் பல அற்புதங்களும் நிகழும் என்று நீங்கள் தவ்ராத் வேதத்தில் படித்ததில்லையா? என்றும், அந்த நபியின் கரு இதுவாகத்தான் இருக்கும் என்றும் என் மனசாட்சி கூறுகிறது. எனவே மர்யமை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைத்து வரப்பட்டதும்,நீ ரெம்ப அதிர்ஷ்டசாலிதான். உன் வயிற்றில் உள்ள குழந்தை பிறந்து பல்வேறு அற்புதங்களை செய்யப் போகிறது என்று சொன்னார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ இது உண்மைதானா? என்று கேட்டார்கள். ஆம் அவற்றையெல்லாம் நான் தவ்றாத்தில் படித்துள்ளேன் என்று சொன்னார்கள். இந்த குழந்தை அந்த நபிதான் என்று எப்படி நம்புவது? அதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உனது வயிற்றிலிருக்கும் குழந்தை அந்தநபியேதான். இதற்குரிய இப்பொழுதைய ஆதாரம் என்னவென்றால்,நான் உன்னைச் சந்தித்ததுமே எனது வயிற்றிலிருக்கும் குழந்தை உனது வயிற்றிலிருக்கும் குழந்தைக்குத் தலை தாழ்த்துவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது’ என்றார் ஈஷாஉ. அச்சமயத்தில் நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈசாஉ அவர்களின் கர்ப்பத்தில் இருந்தார்கள்.

அதேசமயம் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ‘அச்சமயத்தில் எனது கருவிலிருக்கும் குழந்தையும் அசைவதை நான் உணர்ந்தேன்;’ என்றார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிற்றன்னையின் மகன் ஒருவர் யூசுஃபுந் நஜ்ஜார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தச்சுச்தொழில் செய்து கொண்டு,மீதியுள்ள நேரத்தில் இறைவனை வணங்கி வந்தார். அவருக்கு இச்செய்தி கிடைத்ததும்,மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களி;டம் அவர்கள் கர்ப்பமான விசயத்தை பற்றி கேட்டார்.

அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் சுத்தமானவள் என்றும்,இது அல்லாஹ்வின் நாட்டம் என்றும் கூறினாள்.

ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிரவச காலம் நெருங்கியது. அனைவரும் ஆலோசனை செய்து,யூசுஃப் நஜ்ஜார் உடன் வெளியூருக்கு அனுப்பி வைத்தார்கள். பைத்துல் லஹ்ம் என்னும் இடத்தை அடைந்ததும் பிரவச வேதனை ஏற்பட்டு அங்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தனர்.

கவலை மிகுதியால் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழ,இறைவன் அசரீரி மூலமாக ஆறுதல் கூறி அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பட்டுப்போன பேரீத்தம் பழ மரத்தன் கிளைகளைப் பிடித்து உலுக்குமாறு கூற, அவர்களும் அவ்விதமே செய்ய,கனிகள் உதிர்ந்தன. அருகில் நீருற்றும் உருவாயிற்று. பேரீத்;தங்கனிகளை உண்டும்,அங்கிருந்த நீரை அருந்தியும் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் பிறந்தத எட்டாம் நாள் அவர்களுக்கு விருத்தசேதனம் (கத்னா) செய்து ‘ஈஸாஹ்‘ என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு யூசுப் நஜ்ஜாருடன் தங்கள் வீடு வந்து சேர்ந்ததும் உறவினர்கள்,ஜனங்கள்,எல்லோரும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்தது அந்த குழந்தையைப் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

இந்த குழந்தை எப்படிப் பிறந்தது? இதற்கு தந்தை யார்? நல்ல குடும்பத்தில் பிறந்த நீ இப்படி செய்வது உனக்கு வெட்கமில்லையா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தனர். இச்சமயம் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்தக் கேள்வவிகளுக்கெல்லாம் எவ்விதப் பதிலும் கொடுக்காமல் குழந்தையை ஜாடை காட்டி குழந்தையிடம் கேளுங்கள் என்று சைகை மூலம் அறிவித்தார்கள்.

அச்சமயம் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் உத்திரவுபடி நோன்பு நோற்றிருந்தார்;கள். அக்காலத்தில் நோன்பு நோற்பவர்கள் பிறருடன் பேசுவதையும் தடைபடுத்திக் கொண்டிருந்தனர்.

தங்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறாது குழந்தையிடம் கேட்கும்படி ஜாடை காட்டுகிறார்களே! என்று குழந்தை எப்படி பேசும்? நாங்கள் பைத்தியக்காரர்களா? என்று அகங்காரத்துடன் வந்திருந்தவர்கள் கடும்கோபம் கொண்டனர்.

உடனே பால்குடித்துக் கொண்டிருந்த அக்குழந்தைத பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அக்கூட்டத்தினரைப் பார்த்து, ‘நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியானாக இருக்கிறேன். அல்லாஹ் எனக்கு இன்ஜீல் என்ற வேதத்தை அருளி,என்னைத் தனது நபியாகவும் ஆக்குவான். நான் எங்கிருந்த போதிலும்,என் மீது பேரருள் புரிந்து கொண்டே இருப்பான். நான் இவ்வுலககில் இருந்து வரும்வரை,தொழுது கொண்டும்,ஏழை வரியைக் கொடுத்துக் கொண்டும் வருமாறு என்னை ஏவியுள்ளான். எனது தாய்க்கு நன்றி செலுத்தி வருமாறும் கூறியுள்ளான். என்னை அவன், என் வாழ்நாள் முழுவதும் வழி தவறச் செய்ய மாட்டான். என்மீது என்றென்றும் அவனது சாந்தியும்,சமாதானமும் நிலைத்து நிற்கும்’ என்று பேசினார்கள். அப்போது அவர்களது வயது நாற்பது நாட்கள்தான்.

இந்தச் சம்பவங்களை அல்லாஹ் தனது திருமறையில்:

فَحَمَلَتْهُ فَانتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا

அப்பால்,மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.

فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَىٰ جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًا مَّنسِيًّا

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து,முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா”என்று கூறி(அரற்றி)னார்.

فَنَادَاهَا مِن تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا

(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்”என்று அழைத்து கூறினார்.

وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا

“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால்,“மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்”என்று கூறும்.

فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ ۖ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”

يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا

“ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).

فَأَشَارَتْ إِلَيْهِ ۖ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَن كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا

(ஆனால்,தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?”என்று கூறினார்கள்.

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا

“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும்,என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا

“இன்னும்,நான் எங்கிருந்தாலும்,அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும்,நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும்,ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا

“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا

. “இன்னும்,நான் பிறந்த நாளிலும்,நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்”என்று (அக்குழந்தை) கூறியது.

ذَٰلِكَ عِيسَى ابْنُ مَرْيَمَ ۚ قَوْلَ الْحَقِّ الَّذِي فِيهِ يَمْتَرُونَ

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).

-அல்-குர்ஆன் 19:23-34

பிறந்து நாற்பதே நாள் ஆன குழந்தை பேசியதும் வந்தவர்களிடையே ஒரே குழப்பம் ஏற்பட்டது. ஜகரிய்யாவையும்,யூசுஃபுந் நஜ்ஜார் ஆகியோர்தான் இதற்கு காரணம். அவர்களை கொன்று விட வேண்டும். அதுதான் சிறந்த பரிகாரம் என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.

இதற்கிடையே வானஇயல் நிபுணர்கள் வானத்தில் புதிதாக தோன்றிய ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘இது உலகில் ஒரு நபி தோன்றியிருப்பதற்கான அடையாளமாக இருக்கிறது’ என்றார்கள். பனீஇஸ்ரவேலர்களளின் மதகுருமார்கள் வேதங்களைப் புரட்டிப் பார்த்து,இச்சமயத்தில் எங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு தேவத் தூதர் பெத்லஹேமில் பிறந்து விட்டார்’ என்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்நாட்டு மன்னனான ஐரதூஸ் இச்செய்தி கேட்டு ஆத்திரப்பட்டான். அந்த குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று எண்ணி அக்குழந்தையை கொன்றுவிட அவன் தீர்மானித்தான்.

அரசனின் இந்த எண்ணத்தை வஹீ மூலம் அல்லாஹ் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெரிவத்து, உடனே அந்நாட்டை விட்டு வெளியேறி எகிப்துக்குச் சென்றுவிட கட்டளையிட்டான். யூசுபு நஜ்ஜாரின் துணையைக் கொண்டு அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி எகிப்து சென்று அங்கு நூல் நூற்று அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டும்,வயல்களில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி உணவு சமைத்தும் மிகவும் கஷ்ட வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு யூசுப் நஜ்ஜாரும் காடுகளுக்கு சென்று விறகு வெட்டி விற்று,அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கொடுத்து உதவி செய்து வந்தார்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மூன்று அல்லது நான்கு வயது ஆனதும் அவர்களை அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கல்வி கற்க ஒரு ஆசிரியரிடம் சேர்த்தார்கள். ஆசிரியர் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்ததும் , ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதனை முழுமையாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதனைக் கண்ட ஆசிரியர் அவர்கள்,இந்த குழந்தை அறிவில் என்னைவிட பன்மடங்கு சிறந்ததாக இருக்கிறது. எனவே அதற்கு நான் கற்றுக் கொடுக்க வேண்டியது ஒன்றுமில்லை என்று சொன்னார்கள். அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘நீங்கள் கற்றுக் கொடுக்காவிட்டாலும் இவனை உங்கள் அருகிலேயே சிறிது காலம் இருக்கவிடுங்ககள்’ என்று கூறி பாலகரான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அந்த ஆசிரியரிடமே விட்டுச் சென்றார்கள். இப்படியே சில காலம் சென்றது.

வாலிபரான ஈஸா அவர்கள்,மக்களை நேர்வழிபடுத்த எவ்வளவோ முயன்றார்கள். அவர்களைக் கண்டாலே மக்களுக்கு கடும்கோபம் ஏற்பட்டது. தகப்பனில்லாது பிறந்த நீரா எமக்கு புத்தி சொல்ல வந்தீர்? காலம் காலமாக நமது மூதாதையர்கள் வணங்கி வந்த தெய்வங்களை நிந்திக்க உமக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று சொன்னதோடு, அவர்களை தீர்த்துக் கட்டவும் முயன்றார்கள்.

பனீ இஸ்ரவேலர்களிடம் தான் நபி என்பதை அறிவித்ததோடு,அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வருகையைப் பற்றிக் குறிப்பட்டதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُم مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ ۖ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَٰذَا سِحْرٌ مُّبِينٌ

‘மர்யமுடைய மகள் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) ‘இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான்,உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன். நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துகிறேன். எனக்குப் பின்னர், ‘அஹ்மத்என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான், (உங்களுக்கு) நன்மாராயம் கூறுகிறேன்’ என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும். (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த சமயத்தில், (அவரை விசுவாசிக்காது) ‘இது தெளிவான சூனியம்!’ என்று அவர்கள் கூறினர்.’

-அல்-குர்ஆன் 61:6

ஒரு சமயம் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலுள்ள நைல் நதியோரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். நதி கரையோரத்தில் சில சலவைத் தொழிலாளிகள், அழுக்கு துணிகளை மூட்டை மூட்டையாகக் குவித்து வைத்துக் கொண்டு துவைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கொண்டு உங்கள் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று உபதேசம் செய்தார்கள். இவர்களின் உபதேசத்தைக் கேட்டு சலவைத் தொழிலாளிகள் சிந்திக்கத் தொடங்கி, அவர்கள் மீது விசுவாசம் கொண்டார்கள்.

துணிக்கு சாயம் ஏற்றும் தொழில் செய்பவரிடம் சென்று மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழில் கற்க ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்துச் சென்றார்கள். அவனும் அதற்கு ஒத்துக் கொண்டு, ஒவ்வொரு பானையிலும் சாயத்திற்கு ஏற்றவாறு துணிகளை போட்டு சாயம் ஏற்றச் சொன்னார்கள். ஆனால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனைத்து துணிகளையும் ஒரே பானையில் போட்டு சாயத்தில் ஏற்றினார்கள். சாயக்காரர் வந்து, மிகவும் கோபப்பட்டு, துணிக்காரர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று அங்கலாய்த்தார். அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லி ஒவ்வொரு துணியாக எடுங்கள். நீங்கள் நினைத்த சாயம் அந்தந்த துணிகளில் இருக்க காண்பீர்கள் என்று சொன்னார்கள். அதன்படி அவன் செய்ய, அவ்வாறே வந்தது. இதைக் கண்டு அவன் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது ஈமான் கொண்டான்.

மன்னன் ஐரதூஸ் இறந்த சேதி ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், யூசுப் நஜ்ஜார் அவர்களையும் அழைத்துக் கொண்டு பைத்துல் முகத்தஸ் திரும்பினார்கள். வழியில் அவர்கள நாசரேத் என்ற ஊரில் சிறிது காலம் தங்கியிருந்தார்கள். இந்த நாசரேத் என்ற ஊரில் அவர்கள் தங்கியிருந்ததன் காரணமாகத்தான் அல்லாஹ் திருக்குர்ஆனிலல் கிறித்துவர்களை ‘நஸரா’ என்று குறிப்பிட்டுள்ளான்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 30ஆகியது. ஒலிவ இலைகளைச சேகரித்து வருவதற்காக அவாக்ள் தங்கள் தாயுடன் ஒரு மலைமீது ஏறினர். சில இலைகளைப் பறித்துத் தாயிடம் ஒப்படைத்து விட்டு,அந்த மலையின் ஓரிடத்தில் அமர்ந்து இறைதியானத்தில் ஈடுபட்டார்கள். அச்சமயத்தில் அவர்களின் முன் ஒரு பேரொளி தோன்றியது. திடுக்கிட்ட அவர்கள் அதனைக் கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவ்விடத்தில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து இது இன்ஜீல் வேதமாகும். அல்லாஹ் பனீ இஸ்ரவேலர்களுக்கு நேர்வழிக்காட்டக் கூடிய தூதராக உங்களை நியமித்துள்ளான். அவர்களை விக்கிரக ஆராதனையை விட்டு விலக்கி, அல்லாஹ்வை மட்டும் வணங்கிவர வைப்பீர்களாக!’ என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்கள்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் பாஷையான சுர்யானீ (அரேமிய பாஷை)பாசையில் வேதம் இறக்கப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்த உபதேசங்களெல்லாம் அவர்களது நெஞ்சத்தில் ஆழப் பதிந்து விட்டன. இந்த இன்ஜீல் வேதம் இறக்கபட்டது ரமலான் மாதம் 18அன்று. தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்ட ஜபூர் வேதம் இறக்கப்பட்ட 1,200வருடங்களுக்குப் பிறகுதான் இந்த இன்ஜீல் வேதம் இறக்கப்பட்டதென்று ஒரு குறிப்பு காணப்படுகிறது.

அதன்பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் தாயிடம் தான் நபியாக அனுப்பப்பட்ட விசயத்தையும்,அதனால் தங்களுக்கு சேவை புரிவதில் அதிகமாக ஈடுபட முடியாது என்பதையும் எடுத்துச் சொன்னார்கள்.

அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன்னுடைய இந்த நிலையைப் பற்றி அல்லாஹ் நீ பிறக்கும் முன்பே எனக்கு அறிவித்து விட்டான். அதனால் நீ எதற்கும் கவலைப்படாமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வா என்று சொன்னார்கள்.

மலையிலிருந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கையில் வழியில் ஒரு குஷ்டரோகி தென்பட்டான். அவனை ஈஸா நபியவர்கள் தடவி இறைவனிடம் நோயை குணமாக்கும்படி இறைஞ்சினார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அவன் பரிபூரணமாக குணமடைந்தான். அவன் இச்செய்தியை பைத்துல்முகத்தஸ் சென்று மக்களிடம் சொன்னான். இச்செய்தி காட்டுத்தீ போல நகரெங்கும் பரவி விட்டது.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நகருக்குள் நுழைந்ததும், பிறவிக் குருடர்கள், ஊமையர்கள், முடவர்கள், குஷ்டரோகிகள் ஆகியோர் அவர்கள் முன்னால் கூடிநின்று தங்களையும் குணப்படுத்துமாறு வேண்டிநின்றனர். ஈஸா நபியவர்கள் அவர்கள் அனைவரையும் குணப்படுத்தினார்கள்.

இப்பெரும் கூட்டத்தினரிடையே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏகத்துவத்தை எடுத்தியம்பினார்கள். விக்கிரக வணக்கத்தை விட்டு விலகுமாறு வேண்டினார்கள். பனீ இஸ்ரவேலர்கள் அல்லாஹ் அவர்கள் மீது செய்துள்ள கிருபைகளையும்,உதவிகளையும் மறந்து விக்கிரகத் தொழும்பர்களாக மாறிவிட்டதையும் மதகுருமார்கள் இறைப் பணியை மறந்து விட்டு பேராசை பிடித்து வீண் ஆடம்பரவhழ்வில் அலைக்கழிந்து கிடப்பதையும் கடுமையாக சாடினார்கள்.

இதனால் பனீ இஸ்ரவேலர்களில் ஒரு பகுதியினரும்,மதகுருமார்களும் அவர்களுக்கு பரமவிரோதிகளாக மாறினர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு சனிக்கிழமை அன்று குளக்கரையில் அமர்ந்து கொண்டு,களிமண்ணால் பறவைகளைப் போன்று உருவங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். இது அவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. ஈஸா நபியின் இச்செயலை அவர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

وَرَسُولًا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ ۖ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ ۖ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَىٰ بِإِذْنِ اللَّهِ ۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும்,நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

– அல்குர்ஆன் 3:49

அப்படியானால் எலும்பில்லாத ஒரு பறசையைச் செய்து அதனைப் பறக்கச் செய்யுங்கள் பார்ப்போம் என்று கிண்டலாகக் கூறினர். ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வவ்வாலைப் போன்று ஒரு பறவையைக் களிமண்ணில் செய்து,அதன்மீது ஊதினார்கள். உடனே,அது உயிர்ப்பெற்று பறக்க ஆரம்பித்தது.

இவ்வளவு மகத்தான அற்புதத்தை ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்து காட்டியும்,அந்தப் பனீ இஸ்ரவேலர்கள் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்ளாது,இது ஒரு கண்கட்டு வித்தை. கொஞ்சம் முயற்சி எடுத்தால் யாரும் இதைப் போல் செய்யலாம் என்றனர்.

அவர்கள் இப்படிச் சொன்னதும்,ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘ என்னை நம்புங்கள். நான் அல்லாஹ்வின் தூதனே! இதனை நிரூபிப்பதற்காக அல்லாஹ்வின் உத்திரவைக் கொண்டு இது போன்ற இன்னும் பல அற்புதங்களை செய்து காட்டுவேன். பிறவிக் குருடர்களுக்கும்,பார்வை வரச் செய்வேன். குஷ்டரோகத்தையும் குணப்படுத்துவேன்’ என்று கூறினார்கள்.

அவர்கள் இப்படிச் சொன்னதும்,இதனைப் பரிசோதிப்பதற்காக வேண்டி,அப்பகுதியிலிருந்த அத்தனைப் பிறவிக் குருடர்களையும்,குஷ்டரோகிகளையும் அழைத்துக் கொண்டு அவர்கள் முன் நிறுத்தினார்கள். அவர்கள் அனைவரையும் அதிசயிக்கத்தக்க விதத்தில் அனைவரும் குணமாயினர். ஒரு நாளில் மட்டும் 50,000பேர் குணமடைந்ததாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

இச்செய்தி வெளியில் தெரியவாரம்பித்ததும் பல்லாயிரக்கணக்கானோர் அவர்களை நாடி வந்தனர். அவர்கள் அனைவரின் நோய்களையும் குணப்படுத்தினார்கள். இவ்வளவு செய்தும் பனீ இஸ்ரவேலர்கள் அவர்களை நபி என்று நம்ப மறுத்தனர். மாறாக,இவர் பெரிய சூனியக்காரர் என்றே கூறி வந்தனர்.

ஈஸா நபியவர்கள் அவர்களை நோக்கி ‘நான் எத்தகைய அற்புதத்தை செய்து காட்டினால் என்னை நபி என்று நம்புவீர்கள்’ என்று கேட்டனர். அதற்கு பனீ இஸ்ரவேலர்கள் ‘இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘சரி’ யென்று சொன்னார்கள்.

இதனால் ஆச்சரியத்தில் மூழ்கிய அம்மக்கள், அக்காலத்தில் மிகப் பெரிய அறிவாளியாகவும்,மருத்துவ நிபுணராகவும் இருந்த ஜாலினூஸ் என்பவரிடம் வந்து,இது பற்றி கேட்டனர். அவர் ஈஸா அவ்வாறு இறந்தவர்களை உயிர்ப்பிக்ச் செய்தால் அவர் அல்லாஹ்வின் தூதர் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என்றார்கள்.

உடனே அவர்கள் ஈஸா நபி அவர்களிடம் வந்து மூன்று நாட்களுக்கு முன்னர் ஆஸர் என்பவர் இறந்துவிட்டார். அவரது சடலத்தை உயிர்ப்பித்து காட்டுங்கள் என்றனர்.

அவர் அடக்கப்பட்ட இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றனர் ஈஸா நபி அவர்கள். அங்கு அவர்கள் அந்த சமாதிக்கருகில் சென்று, ‘அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு எழுந்திரும்’ என்று சொன்னார்கள். என்ன ஆச்சரியம். அவர் தூங்கியெழுந்தவரைப் போன்று சோம்பலை முறித்துக் கொண்டே எழுந்து வெளியே வந்தார். பனீ இஸ்ரவேலர்களுக்கு அதை நம்பவே முடியவில்லை. இப்பவாது என்னை அல்லாஹ்வின் தூதர் என்று நம்புகிறீர்களா? என்று கேட்டார்கள் ஈஸா நபியவர்கள்.

அதற்கு என்ன பதில் சொல்வது? என்று புரியாமல் நழுவிவிட்டனர். புதிதாக இறந்தவரைத்தான் உயிர்ப்பித்து விட்டார். இறந்து நீண்ட காலமாகிவிட்டவர்களை இவரால் எழுப்ப முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு பனீ இஸ்ரவேலர்கள் மீண்டும் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அணுகி,புதிதாக இறந்துவிட்டவரைத்தான் நீங்கள் உயிர்ப்பித்து விட்டீர்கள். இறந்;து நீண்ட காலமாகிவிட்டவரை உங்களால் உயிர்ப்பிக்க முடியுமா என்று கேட்டார்கள்.

அல்லாஹ் நாடினால் எதுதான் நடக்காது? என்று ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறுமொழி பகர்ந்தனர்.

பனீ இஸ்ரவேலர்கள் மிகவும் சிதிலமடைந்து போயிருந்த ஒரு சமாதியைக் காட்டி,இங்கு அடக்கமானவர் நான்காயிரம் வருடங்களுக்கு முன் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர். இவர் பெயர் ஸாம் என்றனர்.

உடனே ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் கூறியது போலவே அல்லாஹ்வின் உத்திரவைக் கொண்டு எழுந்திரும்’ என்று சொன்னார்கள். அதிலிருந்து ஒரு மனிதர் எழுந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸலாம் சொன்னார். இம்மாதிரி இறந்து போன பலரை உயிர்ப்பித்து காட்டியும் பனீ இஸ்ரவேலர்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் அவர்களில் 12பேர் மட்டும் அவர்கள் மீது விசுவாசம் கொண்டனர். இவர்களுக்கு ஹவாரிய்யூன்கள் என்று கூறப்படுகிறது. இதில் பெரும்பான்மையோர் சலவைத் தொழிலாளியாக இருந்தனர்.

இந்த ஹவாரிய்யூன்கள்தாம் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரதம சீடர்களாகச் செயல்பட்டு வந்தனர். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் கூடவே சென்று வருவார்கள். அவர்கள் காடு,மேடு,பள்ளம்,மலை,பாலைவனம் போன்ற இடங்களில் சுற்றித்திரிந்து மக்களுக்கு நற்போதனை புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் சீடர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தார்கள்.

தமது சீடர்களுக்கு பசி ஏற்படின் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு தரையில் தட்டுவார்கள். அதிலிருந்து ரொட்டி வரும். அதை பங்கிட்டுக் கொடுப்பார்கள். தண்ணீரையும் அவ்வாறே பெற்றுக் கொடுத்தனர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெட்டையாகவும் இல்லாது,குட்டையாகவும்இல்லாது நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள். அதிக வெண்மையும்,அதிக கறுப்புமில்லாது பொதுநிறமாக இருந்தார்கள்.கம்பளியால் தயாரிக்கப்பட்ட உடையையும் தொப்பியையும்அணிந்து வந்தார்கள். அவர்களது உடையில் பல ஒட்டுகள் இருந்தன. கிழிபடும் உடைகளை அவ்வப்போது தைத்துக் கொண்டனர். அதற்காக ஊசியையும்,நூலையும் தம் சட்டையில் வைத்துக் கொண்டனர். அவர்களின் கரத்தில் எப்போதும் ஒரு கம்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் சுற்றுப்பிராயணம் செய்யும் போது எவ்விடத்தில் இரவு வருகிறதோ அங்கேயே இரவை கழித்துக் கொள்வார்கள். படுக்கையில் மிருதுவான விரிப்புகளை விரிப்பதில்லை. அடிக்கடி நோன்பு நோற்பவர்களாக இருந்தனர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களது சீடர்களில் இருவரை அந்தாக்கியா நகருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நல்லுபதேசம் செய்யுமாறு அனுப்பி வைத்தனர். அவ்விருவரும் அந்நகருக்கு அருகில் சென்றபோது,ஆடுகளை மேய்க்கும் வயோதிகன் எதிர்ப்பட்டான். அவர்கள் இருவரையும் விசாரித்தான்.

அதற்கு அவர்கள் நாங்கள் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரதிநிதிகளாக வந்திருக்கிறோம் என்று கூறினர்.

நீங்கள் உண்மையாளர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டார்.

அதற்கு நாங்கள் அல்லாஹ்வின் கிருபையால் கொடிய நோயையும் குணப்படுத்துவோம் என்று கூறினர். என் மகன் தீராத நோயால் அவதிப்படுகிறான். அவனை எல்லா மருத்துவர்களும் கைவிட்டு விட்டனர். முதலில் என் மகனின் நோயை குணப்படுத்துங்கள், நான் உங்களை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று கூறினார்.

அதன்பிறகு அவர்கள் அந்த முதியவரின் மகன் இருக்கும் இடத்திற்கு சென்று அவனை குணப்படுத்தினர். உடனே அவர் மகிழ்ச்சியடைந்தவராக முஸ்லிமாகி விட்டார். இச்செய்தி காட்டுத்தீ போல் ஊரெல்லாம் பரவி விட்டது. பல்வேறு நோயாளிகள் அவர்களைத் தேடிவந்து நலம் பெற்று சென்றனர்.

இச்செய்தி அந்நகர் அரசனுக்கு எட்டியது. அந்த அரசன் விக்கிரகத் தொழும்பனாக இருந்தான். அவ்விருவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். இது ஈஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. அவ்விருவரும் தொடர்ந்து தங்கள் பணியைச் செய்ய ஷம்ஊன் என்பவரை அந்தாகிய்யா அனுப்பி வைத்தார்கள். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்:

وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ . إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُم مُّرْسَلُونَ

(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.

நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது,அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே,“நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்”என்று அவர்கள் கூறினார்கள்.

-அல்-குர்ஆன் 36:13,14

ஷம்ஊன் அந்தாகியா சென்றார். அங்கு தான் எந்த நோக்கத்திற்காக வந்திருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தவே இல்லை.

அவர் அரண்மனைச் சேவகர்களை தொடர்பு கொண்டு அவர்களையும்,பின்பு மந்திரிகளையும்,அடுத்து அரசனையும் தொடர்பு கொண்டு நல்லவிதமாக நட்பு கொண்டு அனைவரின் அன்பையும் பெற்றுக் கொண்டார். அவரது நுண்ணறிவையும்,தீட்சண்யத்தையும் பார்த்து அரசன் அவரை தம்முடைய அந்தரங்க ஆலோசகராக நியமித்துக் கொண்டான். அவரைக் கேட்காமல் எந்த காரியத்தையும் அரசன் செய்ய மறுத்து வந்தான்.

ஒருசமயம் சிறைக் கைதிகளை அரசன் பார்வையிட்டுக் கொண்டே வரும்போது அவனுடன் ஷம்ஊனும் சென்றார். ஈஸா நபியின் சீடர்கள் இருக்கும் இடம் வந்ததும், ‘இவர்கள் கொலைகாரர்களாகவோ,திருடர்களாகவோ எனக்குத் தெரியவில்லையே! ஏன் இவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று அரசரிடம் கேட்டார்.

அதற்கு அரசர் அவர்கள் அவ்வாறு செய்திருந்தால் பரவாயில்லை. இவர்கள் எங்கள் கடவுளர்களை தூஷிப்பவர்களாக இருப்பது மட்டுமில்லாமல் புதுவிதமான மார்க்கத்தை கொண்டு மக்களிடம் புகுத்த பார்த்தார்கள்.

இதுபற்றி அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று ஷம்ஊன் சொன்னார்.

அவ்விருவரையும் சிறைக்கதவை திறந்து வெளியே கொண்டு வருமாறு அரசன் உத்தரவிட்டான். அவ்விருவர்களும் சிறையை விட்டு வெளியே வந்தார்கள். ஷம்ஊன் அவர்களிடம் கண்சாடை காட்டிக் கொண்டு கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அவர்கள் மிகத் தெளிவாக அல்லாஹ்வின் சக்தியைப் பற்றியும், ஈஸா நபியின் தூதுத்துவம் பற்றியும் சொன்னார்கள். நோயாளிகளை குணமாக்குவது பற்றியும்சொன்னார்கள்.

பிறவிக் குருடன் ஒருவரை வரவைத்து அவனை குணமாக்கும்படி சொன்னார் ஷம்ஊன். அவர்களும் அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்தார்கள். அந்தக் குருடன் பார்வை பெற்றான்.

உடனே ஷம்ஊன் அரசனிடம் சென்று அவன் காதருகில்,இவர்கள் அல்லாஹ்விடம் வேண்டி பிறவிக் குருடனை பார்வை பெறச் செய்து விட்டனர். நாமும் நம் கடவுள்களிடம் சொல்லி ஏதாவது அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று சொன்னார். நமது கடவுள்கள் கல்லால் ஆனவர்கள்.அவர்களால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்து வெட்கத்தால் அரசன் முகம் சிவந்தான்.

அதேபோல் இளவயதில் இறந்து போன அரசனின் மகளை உயிர்ப்பித்துக் காட்டினார்கள். உடனே அரசன் மிக்க மகிழ்ச்சி கொண்டு, உடனே முஸ்லிமானார். அந்தாகியா மக்களையும் முஸ்லிம் மார்க்கத்தை தழுவும்படி சொன்னார். அந்நாட்டு மக்கள் அனைவரும் முஸ்லிமாயினர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை கண்டு சிலர் முஸ்லிமாயினர். சிலர் இது வெறும் சூன்யம் என்று சொல்லி அல்லாஹ்தான் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உருவில் வந்துள்ளான் என்றனர். சிலர் அல்லாஹ்வின் மனைவிதான் மர்யம் என்றனர்.இப்படிப் பலர் பலவிதமாக கற்பனை செய்து கொண்டிருந்தனர்.

இவற்றைக் கண்டித்து அல்லாஹ் தனது திருமறையில்,

يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ ۚ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَىٰ مَرْيَمَ وَرُوحٌ مِّنْهُ ۖ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ۖ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ ۚ انتَهُوا خَيْرًا لَّكُمْ ۚ إِنَّمَا اللَّهُ إِلَٰهٌ وَاحِدٌ ۖ سُبْحَانَهُ أَن يَكُونَ لَهُ وَلَدٌ ۘ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்”ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே,அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் – ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

-அல்குர்ஆன் 4:171

لَّقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ۚ قُلْ فَمَن يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَن يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا ۗ وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ,அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்”என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும்,பூமியிலும்,அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

-அல்-குர்ஆன் 5:17மற்றும்

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ۖ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۖ إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்”என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும்,உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்”என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான்,மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்,அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

لَّقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ ۘ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا إِلَٰهٌ وَاحِدٌ ۚ وَإِن لَّمْ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.

أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَهُ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து,அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.

مَّا الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ وَأُمُّهُ صِدِّيقَةٌ ۖ كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ ۗ انظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْآيَاتِ ثُمَّ انظُرْ أَنَّىٰ يُؤْفَكُونَ

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை.இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!

-அல்-குர்ஆன் 5:72-76வரை உள்ள வசனங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

சிலர்,அல்லாஹ்விடம் நாங்கள் முழு நம்பிக்கை கொள்ள வேண்டுமெனில் எங்களுக்கு வானததிலிருந்து உணவுத் தட்டை இறக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றனர்.

அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்குப் பிறகும் நீங்கள் சந்தேகப்படுவீர்களானால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை செய்தனர். அதன்பின் அவர்கள் சொன்னபடி அவர்கள் 30நாட்கள் நோன்பிருந்து தொழுது துஆ செய்து வந்தார்கள்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்ன நாளும் வந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை. நபியவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி உணவுத் தட்டை இறக்க வேண்டினார்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அதைத் திறந்தார்கள். அதில் பொரித்த மீன் ஒன்று இருந்தது. அதில் நெய் ஓடிக் கொண்டிருந்தது. தலை மீது உப்பும்,வால் மீது காடியும் இருந்தது. அதனைச் சுற்றி ஐந்து ரொட்டிகள் வைக்கபட்டிருந்தன. ஒன்றின் மீது ஜைத்தூண் எண்ணெய்யும், இன்னொன்றின் மீது தேனும்,இன்னொன்றின் மீது பன்னீரும் இன்னொன்றின் மீது நெய்யும் இன்னொன்றின் மீது பொரித்த இறைச்சியும் வைக்கப்பட்டிருந்தது.

உணவுத் தட்டை விரும்பியவர்களிடம் நீங்கள் விரும்பியவாறு உணவுத்தட்டு இறங்கிவிட்டது. இதனை உண்டு அல்லாஹ்விற்கு மாறு செய்யாமலிருங்கள் என்று சொன்னார்கள்.

உணவுத்தட்டிலுள்ள பொரித்த மீனை உயிர்ப்பெற்று எழுமாறு அவர்கள் வேண்டினார்கள். அல்லாஹ்விடம் நபியவர்கள் கையேந்தஅது உயிர்ப்பெற்று எழுந்தது.

இம்மாதிரி உணவுத் தட்டு 40நாட்கள் இறங்கிக் கொண்டிருந்தது என்றும்,காலையில் விண்ணிலிருந்து இறங்கிய இந்தத் தட்டுகள், மாலையானதும் மேலேறி விண்ணுக்குச் சென்று விடும் என்றும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

விண்ணிலிருந்து இறங்கும் தட்டுகளிலுள்ள இந்த உணவை,ஏழைகள்,அனாதைகள்,நோயாளிகளைத் தவிர வேறு யாரும் உண்ணக் கூடாது என்று அல்லாஹ்விடமிருந்து உத்திரவு வந்தது. இது நல்ல ருசியாகவும்,மணமுள்ளதாகவும் இருந்ததால் வசதி படைத்த செல்வந்தர்களும் இதை உண்ண ஆரம்பித்தார்கள். மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் கொள்ளவில்லை. எனN உணவுத் தட்டு இறங்குவது நின்று விட்டது. இதனால் அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பொய்யர் என்றும், சூனியக்காரர் என்றும் நிந்தித்தனர். இதனால் மனம் வேதனையடைந்த நபியவர்கள் அல்லாஹ்விடம் அவர்களைத் தண்டிக்குமாறு வேண்டினர்.

அல்லாஹ் அவர்களை பன்றிகளாக உருமாற்றினான். ஒரு நாளில் மட்டும் 5000பேர் இவ்வாறு உருமாற்றப்பட்டனர். மூன்று நாட்கள் வரை அந்த விலங்கு போல வாழ்ந்து அதன்பிறகு இறந்துவிட்டார்கள்.

இதனைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்,

إِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ ۖ قَالَ اتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?”என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால்,அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்”என்று கூறினார்.

قَالُوا نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ الشَّاهِدِينَ

அதற்கவர்கள்,“நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும்,நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும்,இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்”என்று கூறினார்கள்.

قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ

மர்யமுடைய மகன் ஈஸா,“அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு – எங்களில் முன்னவர்களுக்கும்,எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும்,உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்”என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

قَالَ اللَّهُ إِنِّي مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۖ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّي أُعَذِّبُهُ عَذَابًا لَّا أُعَذِّبُهُ أَحَدًا مِّنَ الْعَالَمِينَ

அதற்கு அல்லாஹ்,“நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால்,அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால்,உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்”என்று கூறினான்.

-அல்-குர்ஆன் 5:112-115

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தவாறே பைத்துல் முகத்தஸ் வந்து சேர்ந்தார்கள். எவ்வளவுக்கெவ்வளவு தீவிரமாக பிரச்சாரம் செய்தார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களுக்கு எதிர்ப்பும் பலமாக இருந்தது.

ஒரு நாள் மக்களை நோக்கி,ஓ! மக்களே! நீங்கள் இதுவரை தவ்ராத் வேதத்திலுள்ள சட்டங்களைப் பின்பற்றி வந்தீர்கள். இப்போது நான் அல்லாஹ்வின் தூதனாக வந்துள்ளேன். எனவே அந்த சட்டங்களை விட்டுவிட்டு என்னுடைய புதிய விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்வீர்களாக!’ என்று உபதேசித்தார்கள்.

இதனால் பனீ இஸ்ரவேலர்கள் வெகுண்டார்கள். அவர்கள் ஈஸா நபியவர்களையும், அவர்களது தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் வாய்க்கு வந்தவாறு பேசினர். அவதூறுகளை சொன்னார்கள். இதனால் மனம் வெறுத்த நபியவர்கள் அத்தகையவர்களை தண்டிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அத்தகையவர்களை அல்லாஹ் குரங்குகளாக மாற்றினான். மூன்று தினங்களுக்குப் பின் அவர்கள் செத்தொழிந்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பனீஇஸ்ரவேலர்கள் நபியவர்களுக்கு ஜன்மவிரோதிகளாக மாறினர். அவர்களை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டனர். ஈஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான யஹூதா என்பவனை தங்கள் வலையில் சிக்க வைத்து அவனுக்கு காசுகள் கொடுத்து தங்கள் உளவாளியாக நியமித்தனர் அவன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு தெரிவித்து வந்தான்.

இஸ்ரவேலர்கள் சூழ்ச்சிகள் செய்து நபியவர்களை ஒரு வீட்டிற்குள் சிறைப்பிடிக்கச் செய்தனர். அவர்களை எப்படிக் கொல்வது என்று ஆலோசித்தனர். இறுதியில் முச்சந்தியில் பலர் முன் சிலுவையில் அறைந்து கொன்று விடுவது என்று முடிவெடுத்தனர்.

ஒருநாள், விடியற்காலை நேரத்தில் யஹூதாவை அனுப்பி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தங்கள் முன் இழுத்து வரும்படி ஏவினர். அவ்வாறே யஹூதா நபியவர்கள் இருந்த வீட்டிற்கு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அச்சமயத்தில் அல்லாஹ்வின் பெரும்கருணையால் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாகக ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திக் கொண்டான் அவர்களை இழுத்துக் கொண்டு செல்ல வந்த யஹூதாவின் முகத்தோற்றத்தை ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றத்திற்கு மாற்றினான்.

சற்றுநேரம் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது திக்பிரமை பிடித்தபடி அவன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.

இச்சம்பவத்தைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில்,

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمْ ۚ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ ۚ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًا

இன்னும்,“நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்”என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;  மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

بَل رَّفَعَهُ اللَّهُ إِلَيْهِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

– அல்குர்ஆன் 4:157,158.

அப்போது பனீ இஸ்ரவேலர்களும் அவனைத் தேடி அங்கு வந்தனர். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோற்றத்திலிருந்த யஹூதாவை பரபரவென்று இழுத்துச் சென்று உதைத்து அவன் கதறியும் விடாமல், உண்மையை விசாரித்து தண்டிக்குமாறு ஆளுநரிடம் அனுப்பி வைத்தனர். அவரும் விசாரித்து உண்மையான குற்றவாளி என்று சொல்லி சிலுவையிலறைந்து கொல்லும்படி தீர்ப்பு வழங்கினார்.

இதன்படி ஒரு பெரிய சிலுவையை தயாரித்து, அதனை யஹூதாவை சுமக்கச் செய்து கல்வாரி மலை மீது ஏற்றினார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் அந்த சிலுவை நட்டப்பட்டு அதில் அவனை பெரும் பெரும் ஆணிகொண்டு அடித்து விட்டார்கள். அவன் மரணமடைந்தான்.

இச்சம்பவத்தை அல்லாஹ் தனது திருமறையில்

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்

– அல்குர்ஆன் 3:54

ஈஸா அலைஹிஸ்ஸாம் அவர்கள் விண்ணகத்தில் நான்காம் வானத்திற்கு உயர்த்தப்பட்டது கி.பி. 33ஆம் ஆண்டு> ஏப்ரல் 3ஆம் தேதி> வெள்ளிக்கிழமை. அவர்கள் விண்ணகத்திற்கு சென்ற ஆறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களது தாயார் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலமானார்கள்.

Add Comment

Your email address will not be published.