ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹா

ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

صفية بنت عبد المطلب

அன்னை ஆமினாவுக்குச் சகோதரி ஒருவர் இருந்தார் – ஹாலா பின்த் வஹ்ப். தம்மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆமினாவை மணமுடித்த அப்துல் முத்தலிப் ஹாலாவை மணந்துகொண்டார். ஏறக்குறைய ஒரே காலத்தில் இவ்விருவரின் திருமணங்கள் நடைபெற்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்துல் முத்தலிப் – ஹாலா தம்பதியருக்குப்  பிறந்தவர்களே ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப், ஸஃபிய்யாபின்த் அப்துல் முத்தலிப் – ரலியல்லாஹு அன்ஹுமா.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு ஸஃபிய்யா  பின்த் அப்துல் முத்தலிப், தாயார் ஆமீனாவின் சகோதரிமகள் ஆதலால் அக்காள் என்றொரு உறவு; தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரி என்றவகையில் அத்தை என்று மற்றொரு உறவு. ஆனால் அரபியரின் வழக்கப்படி, அப்துல்முத்தலிபின் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஸஃபிய்யா  ரலியல்லாஹு அன்ஹா, நபியவர்களின் அத்தை என்ற உறவு முறையிலேயே வரலாற்றில் அறியப்படுகின்றார். இரண்டு வயது மூத்த அத்தை.

ஸஃபிய்யாவுக்குமுதல் திருமணம் ஹாரித் இப்னு ஹர்ப் என்பவருடன் நிகழ்ந்தது. ஹாரித் -குரைஷி குலத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவரும்அன்னை உம்மு ஹபீபா, முஆவியா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் தந்தையுமானஅபூஸுஃப்யான் இப்னு ஹர்பின் சகோதரர்.

ஸஃபிய்யாவுக்கு ஹாரித் இப்னுஹர்பின் மூலமாய் ஸஃபி என்றொரு மகன். சில காலம் கழித்து ஹாரித் இப்னுல்ஹர்ப் இறந்த போனார். பின்னர் ஸஃபிய்யாவுக்கு மறுமணம் நிகழ்வுற்றது.

அந்தஇரண்டாம் கணவரின் பெயர் அவ்வாம் இப்னுல் குவைலித். இவர், நபியவர்களின்முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் உடன்பிறந்த சகோதரர்.

அவ்வாம்-ஸஃபிய்யா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர் – ஸுபைர், அல்-ஸாஇப், அப்துல் கஅபா. ஸஃபிய்யாவுக்குப் பிறந்த பிள்ளைகளுள்மற்றவர்களைப் பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை, ஸுபைர் இப்னுல் அவ்வாமைத்தவிர. ‘இவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்’ என்று நபியவர்கள் அறிவித்தார்களேபத்துப்பேர், அவர்களுள் ஸுபைர் இப்னுல் அவ்வாம் ஒருவர்.

அவ்வாம்இப்னுல் குவைலித் இறந்ததும் மீண்டும் விதவையானார் ஸஃபிய்யா . அப்பொழுதுஸுபைருக்குப் பாலகப் பருவம். மிகமிகக் கடுமையான ஓர் எளிய வாழ்க்கைக்குஸுபைரைப் பழக்கப்படுத்தி வளர்க்க ஆரம்பித்தார் ஸஃபிய்யா.

நபியவர்கள்ஏகத்துவத்தைப் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்; அதைத் தம்உறவினர்களிடமிருந்து துவக்க வேண்டும் என்று அல்லாஹ்விடமிருந்து கட்டளைவந்து சேர்ந்தது.

இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!”  (சூரா அஷ்-ஷுரா 26:214) என்று அறிவித்தான் இறைவன். அதன் அடிப்படையில் தம்பாட்டனார் அப்துல் முத்தலிப் வகையிலான உறவினர்களை அழைத்து அவ்வப்போதுபிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்

ஸஃபிய்யாவின்இளவயது மகன் ஸுபைரும் தம் தாயுடன் சேர்ந்து இஸ்லாத்தினுள் நுழைந்தார்.மக்காவில் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குஸஃபிய்யாவும்இலக்கானார். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பொறுத்துக்கொண்டுநகர்ந்தது அவரது வாழ்க்கை. இறுதியில் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் காலம் வந்ததும் அனைத்தையும் துறந்துவிட்டு மதீனா சென்றார்கள்.

இயற்கையிலேயேவீரமும் தீரமும் நிறைந்து போயிருந்ததால் பின்னர் நிகழ்வுற்றப் போர்களில்வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிவிட்டார் ஸஃபிய்யா. உஹதுப் போர் நடைபெற்றபோதுவயதில் மூத்த பெண்மணி அவர். ஆனால் களத்திற்குச் சென்ற முக்கியமான பெண்களுள்அவரும் ஒருவர். தண்ணீர் சுமந்து சென்று களத்திலுள்ள முஸ்லிம் வீரர்களுக்கு அளிப்பது, அம்புகளை உடனுக்குடன் கூர் தீட்டித் தருவது என்று இயங்க ஆரம்பித்தார் அவர்.

போர்எதிரிகளுக்குச் சாதகமாகிப் போன தருணம். நபியவர்களைச் சுற்றி வெகு சிலதோழர்களைத் தவிர யாருமில்லை. அவர்களை நோக்கிக் குரைஷிகள் முன்னேறுவதைக்கண்டார் ஸஃபிய்யா. தண்ணீர் சுமந்திருந்த தோல் துருத்திகளைத் தூக்கிஎறிந்துவிட்டு, தம் குட்டிகளைக் காக்கப் பாயும் பெண் புலியைப்போல்தடதடவென்று ஓடினார் அவர்.

அங்கு, களத்தில் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டு, எதிரிப் பெண்களால் உடல் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கிடந்தார்.  தம் சகோதரனின் உடல் கிடக்கும் களப்பகுதிக்கு ஸஃபிய்யா ஓடிவருவதைக் கண்ட நபியவர்கள் உடனே ஸுபைரிடம், “உன்தாயார் வருகிறார், அவரை தடுத்து நிறுத்து,” எனப் பணித்தார்கள்.

தம் சகோதரன் அவ்விதம் கிடப்பதை ஸஃபிய்யா காணக்கூடாது, அது அவருக்குப் பெரும்சோகத்தை விளைவிக்கும் என்று நபியவர்கள் கருதினார்கள். விரைந்து சென்றஸுபைர் தம் தாயை வழிமறித்து, “திரும்பிச் செல்லுங்கள் அம்மா. திரும்பிச் செல்லுங்கள்” என்று தடுத்தார்.

“ஹும்!வழியைவிடு. உனக்கு இன்று தாயே கிடையாது!” என்று மூர்க்கமான பதில் வந்தது.அவர் கண்களிலும் புத்தியிலும் இருந்த ஒரே அக்கறை நபியவர்களின் நலம்.

“அல்லாஹ்வின் தூதர் உங்களைத் திரும்பிச் செல்லும்படி கட்டளையிட்டுள்ளார்கள்” என்றார் ஸுபைர்.

“ஏன்?” என்று கேட்ட ஸஃபிய்யாவுக்கு விஷயம் உடனே புரிந்து போனது. “என் சகோதரன்ஹம்ஸா கொல்லப்பட்டார்; அவரது அங்கங்கள் துண்டாடப்பட்டன. அதுதானே விஷயம்? அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு மடிந்து விட்டார் என்பது எனக்குத்தெரியும். அல்லாஹ்வுக்காக இது நிகழ்ந்திருப்பின் எனக்கு அது மகிழ்வே. அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவன் நாடினால் நான் பொறுமையுடன் இருப்பேன்.வழியைவிடு.”

நபியவர்களுக்கு ஸஃபிய்யாவின் பதில் தெரியவந்ததும், அவரை அனுமதிக்கும்படி ஸுபைருக்குத் தெரிவித்தார்கள்.

போர்முடிவுற்றதும் ஸஃபிய்யா தம் சகோதரன் ஹம்ஸாவின் உடலைக் கண்டார். நிதானமானதீர்க்கமான வார்த்தைகள் வெளிப்பட்டன.

“நாம்அல்லாஹ்வுக்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே நாம் மீள்வோம். இதுஅல்லாஹ்வுக்காக நிகழ்ந்துள்ளது. அல்லாஹ் என்ன விதித்துள்ளானோ அதை நான்ஏற்றுக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குரியஅல்லாஹ்வின் வெகுமதிக்காக நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.”

இந்தப் போரில் முக்கியமான ஓர் ஏற்பாடாக முஸ்லிம் பெண்களை ஹஸ்ஸான் இப்னுதாபித் ரலியல்லாஹு அன்ஹுவுக்குச் சொந்தமான ‘ஃபாஉ’ எனும் கோட்டை ஒன்றில்பத்திரமாகத் தங்க வைத்திருந்தார்கள் நபியவர்கள். அது உயரத்தில்அமைந்திருந்த, பாதுகாப்பான வசதிமிக்க கோட்டை. இந்தப் போரில் பனூகுரைளாவினர் யூதர்கள் முதல் வேலையாக இந்தக் கோட்டைக்குச் சிலஒற்றர்களை அனுப்பிவைத்தார்கள்.

இங்கு முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாவலாய் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பது பனூ குரைளா யூதர்களின் யூகம். எனவே, முஸ்லிம் பெண்களுக்கு இங்குத் தொந்தரவு அளிக்க ஆரம்பித்துவிட்டால்அங்கு, களத்தில் ஆட்டத்தை எளிதாகக் கலைத்துவிடலாம் என்று நயவஞ்சக யூத மூளைதிட்டமிட்டது. அந்தக் கோட்டையை நெருங்கி வேவுபார்க்க ஆரம்பித்தனர் சிலர்.

உளவு பார்க்க வந்த யூதனை கொன்று கோட்டைக்கு வெளியே வீசினார்கள். அதைக் கண்ட கோட்டைக்கு வெளியே இருந்த மற்ற யூதர்கள் அலறிக் கொண்டு ஓடினர். அவர்களின் திட்டம் தவிடுபொடியானது ஸபியா நாயகியின் வீரதீரத்தால்.

தமக்குள்சுரந்த வீரத்தைப் பாலாகவும் சொல்லாகவும் செயலாகவும் தம் மகனுக்கு ஊட்டிவளர்த்த வீரத் தாய் அவர்.

முஸ்லிம்களின் எதிரியைத் தனியாளாகக் கொன்ற முதல் பெண் எனும் பெருமை பெற்றவராக நீண்டகாலம் வாழ்ந்து, கலீஃபா உமர் இப்னுல் கத்தாபின் காலத்தில் மரணமடைந்துஜன்னத்துல் பகீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப் பெற்றார் ஸஃபிய்யா பின்த்அப்துல் முத்தலிப்.

Add Comment

Your email address will not be published.