விழி நீர் மல்க! கரங்களை ஏந்தி

       வேண்டுகின்றோமே இறையோனே

வளமார் உந்தன் கருணை யினாலே

       வேண்டலை ஏற்பாய் ஏகோனே!

எங்கள் நாட்டில் வீதியில் முனையில்

       எவ்வித பிணி நோய் அணுகாமல்

தங்கடமின்றி யாவரும் சுகமாய்

       திகழ்ந்திட அருள்வாய் முதலோனே!

அறிவினை இழந்து அடியவர் நாங்கள்

       ஆற்றிய பாவம் பிழைப் போக்கி

பெரிதும் எம் மீது இரங்கி அன்போடு

பேரருள் புரிவாய் ரஹ்மானே!

காலங்கள் கடந்தும் கரைச் சேராமல்

       கலங்கியே தவிக்கும் குமர்களெல்லாம்

காலத்தின் கணவன் கைப் பிடித்திணைய

       கனிவுடன் அருள்வாய் தனியோனே!

குழந்தைக ளின்றி தவித்திடும் பேர்க்கு

       குறைகளில்லாதக் குழந்தைகளை

கொடுத்தருள் செய்து குடும்பத்தில் மகிழ்ச்சி

       அரும்பிடச் செய்வாய் ரஹ்மானே!

வாணிபம் தொழில் தடையணுகாமல்

வாகுடன் தழைத்தே அதன் மூலம்

வாழ்ந்திடுங் குடும்பம் மாண்பினையடைய

       வகையினைப் புரிவாய் பெரியோனே!

வயல்களும் மரங்கள்

       பயிரினம் யாவும்

வடிவுடன் செழித்தே வளர்ந்தோங்க

       பயனுள்ள மழையைப்

பொழிந்திடச் செய்து

பயன் பெறப் புரிவாய் மறையோனே!

எங்களுக்கிடையில் பகைக்

       குணம் மிகைத்து

இடர் பல விளைக்கும் நிலை மாற்றி

       பொங்கிடும் அன்பு பாசத்தினோடு

பிணைந்திட அருள்வாய் ரஹ்மானே!

(விழி நீர் மல்க…)

(நிறைவு)

Recommend to friends
  • gplus
  • pinterest

About the Author

Leave a comment