ஸூபி ஹழ்ரத் வாழ்க்கை வரலாறு

ஸூபி ஹழ்ரத் வாழ்க்கை வரலாறு

By Sufi Manzil 0 Comment June 30, 2015

Print Friendly, PDF & Email

அல்ஆரிபுல்லாஹ் அல்முஹிப்புர்ரஸூல் அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹலரத் பாழில் நூரி ஸித்தீகி காதிரி காஹிரி கத்தஸல்லாஹுஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்.

பூவுலக மக்கள் புண்ணிய வாழ்க்கைக்கு வழிகாட்டி, அவர்களை நெறிபடுத்தி நல்வாழ்வு வாழ வகை செய்திட வல்லான் அல்லாஹ் தன் வளமார்கருணையின் பொருட்டினால் நபிமார்களை வையகத்திற்கு அருளாய்த் தந்தான்.பேரருளாய்ப் பிறந்த பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுடைய வருகையோடு நபிமார்கள் என்ற தொடர் முற்றுப் பெறவும் …….

தொடர்ந்து அவர்களின் வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆன்மீகத்தையும், ஏகத்துவத்தையும், எழிலார் இஸ்லாத்தின் இனிய நற்கருத்துக்களையும் அவனி மக்களுக்கு எடுத்துரைத்து அவர்கள் நெறி தவறிப்போகாமல் நல்வழிப்படுத்தவும், நீதமான வாழ்க்கை முறைகளை மேற்கொள்ளவும் செய்திட இறை நேயப் பெருமக்களை அன்பளிப்பாக வழங்கினான் இறைவன்!

இறைநேசர்கள்:

அல்லாஹ்வின்ஆணைகளையும், ரசூலுல்லாஹ்வின் போதனைகளையும் சிரமேற் கொண்டு சன்மார்க்க நெறி தவறாது ஷரீஅத் – தரீகத் – ஹகீகத் ஆகிய படித்தரங்களைக் கடந்து இறுதிக் கட்டமாக மஃரிபத் எனும் ஞானப்பேரமுதை மாந்தி மகிழ்ந்தவர்கள் தாம் இறைநேசப் பெருமக்கள்.

உயர் மர்தபாவின் உச்சாணிக் கொம்பிலே கொலுவீற்றிருக்கும் இறை நேசர்களைக் குறித்து ‘இறைவனுக்கு உவப்பானவர்கள் இவர்கள்! அந்தரங்க –பகிரங்க விஷயங்களைத் தெரிந்தவர்கள் இவர்கள் இறைவனது கண்ணாடிகள்.ஒவ்வொரு ஒலியும் நூஹ் நபியவர்களுடைய கப்பல் என அறிந்து கொள்க! இவர்களை உவந்து போற்றினால் நாசமெனும் ஜலப் பிரளயத்திலிருந்து நீ தப்பி விடுவாய்!’ என்று மத்னவீ மணி மாலையில் ஞான மகான் அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.

பாரில் பல பொருட்கள் ஒன்று மற்றொன்றைச் சார்ந்து அதன் உதவியைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் ஒட்டி உறவாடி நிற்பதைக் காணலாம். வெப்பமும் தண்ணீரும் பூமிக்குத் தேவை. இவற்றினால்தான் பூமி செழிப்புடன் பூக்கிறது. காய்க்கிறது!

மண்ணின் பசுமைக்கு வெயிலும், மழையும் தேவைப்படுவது போன்றே உலக மக்கள் நேர்வழி சென்றுய்ய நபிமார்களுடையவும், பின்னர் இறை நேசர்களுடையவும் தேவையினை எதிர் நோக்கி உள்ளனர்.

அருளை வழங்குபவன் அல்லாஹ். ஆனால் அதனைப் படைப்பினங்களுக்குப் பங்கு வைத்து தருபவர் அண்ணல் நபியுல்லாஹ் அவர்களே! பின்னர் இப்பணி ஒலிமார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே தான் ‘எனது உம்மத்துகளில் நாற்பது நபர்கள் நபி இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்களின் இதயத்தை உடையவர்களாக என்றும் இருந்து வருவர்.இறைவன் அவர்களைக் கொண்டு மக்களின் பிணிகளைப் போக்குவான். மழை பொழிவிப்பான். அவர்களைக் கொண்டு தான் உலகோர்க்கு உதவிகள் புரியப்படும்’ (நூல் : தப்ரானி) என நாயகமவர்கள் அறிவித்தனர்.

நபி பெருமானுடைய நுபுவ்வத் எனும் பேரொளிப் பிழம்பை ஸஹாபாக்கள் நேரடியாக பெற்றார்கள். பின்னால் வந்த இறைநேசர்கள் நபிதோழர்களிடமிருந்து அந்த பேரொளியை பெற்றனர். நாம் ஒலிமார்களிட மிருந்து அதனைப் பெறுகின்றோம்.

ஏனெனில் இறைத் தோழர்கள் நுபுவத்தின் ஜோதியினைப் பிரதிபலித்துக் காட்டுகின்ற கண்ணாடிகள். அதனற்றான் இறைக்காதலர்களது புனிதக் கரம் பற்றி பைஅத்து பெறுகின்ற பொதுமக்கள் அதனைப் பின்பற்றி தம் வாழ்க்கை முறைகளையும், வழிமுறைகளையும் அமைத்துக் கொண்டு அமல் செய்கின்ற போது நுபுவ்வத்தின் ஜோதியினைப் பெறுகின்றனர்.

ஈமான், இஸ்லாம் பற்றி விளக்கம் தந்து நல்வழி காட்டுவோர் ஆலிம்கள். ஆலிம்களால் தெளிவாக்கம் செய்யப்பட்டஈமானைப்பாதுகாத்து இறையச்சமுடையோராய் வாழ்வதற்கு பாதையமைத்துத் தருவோர் அவ்லியாக்கள்தான்!

தொழுகையில் உடல் சுத்தம், இடம் சுத்தம், கிப்லாவை முன்னோக்குதல் ஈறாக இன்னபிற ஷர்த்துக்களையும், பர்ழுகளையும், சுன்னத்துகளையும் கற்றுத் தருகின்றனர் ஆலிம்கள்!

ஆனால் தொழுகையின் போது உளத் தூய்மையாக இருக்க வேண்டுவது குறித்துக் கற்றுத் தருவோர் இறைநேசர்களன்றோ? கற்றுத் தருவதோட அதற்கான பக்குவ நிலையை ஊட்டுபவர்களும் அவர்களே!

துரு ஏறிவிட்ட இரும்பை நெருப்பு உலையில்வைத்து துருவை அகற்றலாம். ஆனால் இருளால் சூழ்ந்து அக அறிவை இழந்துவிட்ட இதயத்தை என்ன செய்வது? அக்காரிருளை அகற்றிட இறைநேசர்தம் தோழமை அவசியம்.

இறைநேயப் பெருமக்களின் சகவாசமும் அவர்களது அருட்நிறை பார்வையும் கண நேரத்தில் மனித மனங்களின் மருவினைப் போக்கி அகத்தெளிவினை அள்ளி வழங்கிய வரலாறுகள் ஏராளம்!

ஷெய்குனா ஹலரத்:

இப்படி இறைவனால் மனுக்குலத்திற்கு கருணையாய் வழங்கப்பட்ட இறைநேச பெருமக்களுள் பல
நூற்றுக்கணக்கானோர் பிறந்த – வளர்ந்த வாழ்ந்த பேரூர் காயல்பட்டணம்.

பண்டைய காலம் முதற் கொண்டு வகையான வரலாற்றுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் காயல்பட்டணத்தில் தோன்றி மறைந்த இறைநேசர்களது பட்டியலைத் தயாரிப்பது என்றால் அதுவே மகத்தானதோர் பணியாக அமையும்.

இப்பட்டியலில் சிறப்பானதோர் இடத்தினைப் பெற்று நிறைவானதோர் வாழ்வினை மேற்கொண்ட பெருந்தகைதான் நம் கண்ணியத்திற்குரிய அல்ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பர்ரஸூல் அல்லாமா அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல்காதிர் ஸூபி ஹலரத் கத்தஸ்ல்லாஹுஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள்!

தமிழகம், கேரளம் மட்டுமின்றி ஈழத் திருநாட்டில்மற்றும் அன்னாரைத்தெரிந்தோரெல்லாம் கண்ணியத்தொடு – அன்பொடு ‘ஸூபி ஹலரத்’ என்று அழைக்கப்பட்ட இப்பெருமகனார் -காயல்பட்டணத்தின் பெருமைக்குரிய கம்பெனியார் குடும்பத்தில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு ஊ.யு.மு.அகமது முஹ்யித்தீன் – முஹம்மது இபுராஹீம் நாச்சி தம்பதியருக்கு கடைசிக் குழந்தையாகப் பிறந்தார்கள்.

ஷெய்குனா அவர்களின் வம்சப் பரம்பரை :

வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வகையானவாழ்வில் ஒன்றாக இணைந்து அவர்களின் சுக துக்கங்களில் தோளோடு தோள் நின்ற இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் போற்றிப் புகழப்படுகின்ற பெருமகனார் செய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் 39 வது தலைமுறையில் பூவுலகம் பெற்றெடுத்த புனிதப் பெருமகனார் எங்கள் ஷெய்குனா அவர்கள். அகத்துறை வென்ற அந்த ஆன்மீகப் பெருவள்ளலது வமிசப் பரம்பரைப் பட்டியல் இதோ :

1.செய்யிதினா அபுபக்கர் 2.அப்துல்லாஹ் 3.ஸஈது 4. ஸஃது 5.இஸ்மாயீல்6.ஈஸா 7.இல்யாஸ் 8.அப்துல் கரீம் 9.இப்ராஹீம் 10.ஹுசைன் 11.ஜாபிர்12.அஹ்மது 13.ஸாலிம் 14.ஸாலிஹ் 15.ஜகரிய்யா 16.அப்துல் கரீம் 17.மகுதூம் 18.ஹாஷிம் என்ற பெயரில் பிரபலமான உமர் 19.ஸுபைர் 20.ஹுஸைன் அப்துல்லாஹ் 21.முஹம்மது 22.ஷெய்கு மகுதூம் 23.முஹம்மது கில்ஜீ மிஸ்ரி காஹிரி 24.ஹிழ்று 25.ஷிஹாபுத்தீன் 26.அல்ஹாஜ்ஜுல் ஹரமைன் அஹ்மது 27.முஹம்மது 28.அஹ்மது 29.முகம்மது 30.மகுதூம் 31.அப்துல் காதிர் 32.அஹ்மது மீரான் சாஹிபு 33.மீரான் லெப்பை 34.அஹ்மது தம்பி 35.மணிப்பாட்டு மரைக்காயர் என்று அறியப்பட்ட முஹம்மது இஸ்மாயீல் மரைக்காயர் 36.மகுதூம் முகம்மது 37.முஹம்மது இஸ்மாயீல் 38.சின்ன அஹமது முஹ்யித்தீன் 39.ஷெய்குனா ஷெய்குல் காமில் ஷெய்கு அப்துல் காதிர் காதிரி காஹிரி.

ஷெய்குனா அவர்களின் கல்வி:

ஷெய்குனா அவர்களை சிறப்பானதொரு ஹாபிழாக்கிப் பார்க்க வேண்டுமென்பது அன்னாரது பெற்றோர்களின் வேணவா. எனவே அவர்களுக்கு ஆரம்பக் கல்வியை உள்ளூர் உலமாப் பெருமக்களிடம் கற்றுக் கொடுத்த பின்னர், காயல்பட்டணத்திலேயே ஹிப்ழு மதரசாவில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் ஷெய்குனா அவர்களின் அவா வேறு விதமாக அமைந்திருந்தது. ஊரில் ஹாபிள்களை விட ஆலிம்களுக்கே அதிக மதிப்பு இருப்பதை கவனித்து வந்த ஹலரத் அவர்களது இளம் மனது தாமும் ஒரு ஆலிமாகிட வேண்டும் என்பதிலேயே இலயித்திருந்ததால் ஹிப்ளில் அவர்களது முழுக் கவனமும் செல்லவில்லை.

ஷெய்குனா அவர்களுடைய விருப்பத்தைப் புரிந்துக் கொண்ட தந்தையார் அவர்களை ஓத வைக்க இணக்கம் தெரிவித்தார் ஆயினும் மகனார் வெளியூர் சென்று கல்வி கற்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

உள்ளூரில் இருக்கின்ற தரமிக்க ஆலிம்களிடம் கல்வி பயிலலாமெனக் கூறினர்.மட்டுமின்றி அந்நேரத்தில் இல்மு காயல்பட்டணத்தில் தான் இருக்கிறது மற்ற இடங்களில் இல்லை என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் எக்காரணத்தைக் கூறினாலும் ஷெய்குனா அவர்கள் தாம் வெளியூர் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றும் பின் வாங்கவில்லை. இக்காரணங்களால் அவர்களது ஹிப்ளு 8 ஜுஸ்வுகளுடன் நின்று போயிற்று!

அந்நேரத்தில் காதிரிய்யா தரீகாவின் பிரபலமான ஷெய்காக விளங்கிய கண்ணியமிகு லியாவுல் ஹக் ஸூபி நாயகம் அவர்கள் ஹைதராபாத்திலிருந்து காயல்பட்டணம் வருகை தந்தனர். செய்யிது குடும்பத்தவரான அவர்கள் மகோன்னதம் மிக்க ஒரு இறைநேசர்.

மக்கள் பலரும் தம் உள்ளக்கிடக்கைகளை அவர்களிடம் எடுத்துரைத்து நிவர்த்தி பெற்றுப் போவதைக் கவனித்து வந்த நம் ஷெய்குனா அவர்களும் தமது விருப்பத்தினை – வெளியூர் சென்று கல்வி கற்றிட கொண்டுள்ள அவாவினை அன்னாரிடம் கூறியபோது ஷெய்குனா அவர்களது கல்வித் தாகத்தினைப் புரிந்துக் கொண்ட அன்னார் உளம் பூரித்து ஷெய்குனா அவர்களது பெற்றோரிடமும் உறவினரிடமும் தாமே நிலைமையை எடுத்துரைத்து அவர்களின் ஒருங்கிணைந்த சம்மதத்தைப் பெற்றுத் தந்ததோடு ஊர் எல்லை வரை வந்து அன்போடு ஷெய்குனா அவர்களை உச்சி முகர்ந்து வழியனுப்பி வைத்தனர்.

இதற்கு மத்தியில் இளைஞர் முதல் முதியோர்வரை பலதரப்பட்டோர் லியாவுல் ஹக் ஸூபி நாயகத்திடம் ஞான தீட்சை – பைஅத் பெற்றுச் செல்வதைக் கண்ட இளவல் ஷெய்குனா தமக்கும் பைஅத் தருமாறு வேண்டி நிற்க, அவர்கள் சொன்னார்கள் ‘என்னை விட மகத்தான வேறொருவர் தங்களுக்கு அப்பெரும் பாக்கியத்தினை தந்தருள் புரிவார்கள். காலம் வரும் காத்திருங்கள்!’

பிற்காலத்தில் ஹைதராபாத் வழங்கிய ஞானப் பெருவள்ளலிடம் ஷெய்குனா பைஅத்தும் கிலாபத்தும் பெறவிருக்கிறார்கள் என்பதை இப்படிச் சுட்டிக் காட்டினார்கள் லியாவுல் ஹக் ஸீபி நாயகமவர்கள்!

தம் தோழராம் ஹஸன் மௌலானா என்பாருடன் கல்வி கற்றிடப் புறப்பட்டுச் சென்ற ஷெய்குனா சென்னை வந்து ஜமாலிய்யா அரபிக் கல்லூயில் சேர்ந்தார்கள். கண்ணியமிகு மதார் சாகிபு ஆலிம் அவர்கள் அப்போது அங்கே முதல்வராகப் பணியாற்றி வந்தார்கள்.

ஷெய்குனா அவர்களது கல்வித் தாகம் மென்மேலும் அதிகரிக்கவே அங்கிருந்து பொதக்குடி வந்து அந்நூருல் முஹம்மதிய்யி அரபிக் கல்லூரியில் சேர்ந்தார்கள். ஆஷிகுர் ரசூல், கன்சுத்தகாயிகு, ஷெய்குல் காமில் அப்துல் கரீம் குத்திஸ ஸிர்ருஹுஅவர்கள் அங்கே முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஷெய்குனா அப்துல் கரீம் ஹலரத் அவர்களின் தனியன்புக்குப் பாத்திரமான மாணவராகத் திகழ்ந்தார்கள். கல்வி கற்கின்ற காலத்திலேயே அவர்கள் மிக்கத் திறமையும், ஒழுக்கமும, பெற்றவர்களாகவும், நற்குணமும், நல்லியல்புகளும் கைவரப் பெற்றவர்களாகவும் விளங்கி வந்ததோடு ஒவ்வொரு ஆண்டும் வகுப்பிலேயே முதல் மாணவராகவும் தேறினார்கள்.

அக்காலத்தில் பொதக்குடி மதரசாவில் தஹ்ஸீல் வகுப்பில் தேறிய மாணவர்களுக்கு ஸனது வழங்கும் வழக்கமில்லை. ஆயினும் ஹிஜ்ரி 1345ல்அப்துல் கரீம் ஹலரத் திடீரென இறையடி சேர்ந்த பின்னர் ஸனது வழங்குதல் ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி கல்லூரியின் பழைய மாணவரான ஷெய்குனா அவர்களுக்கு 1349ல் அப்போதைய கல்லூரி முதல்வர் முஹம்மது அப்துர்ரஹ்மான் இப்னு முஹம்மது ரஜப் ஆலிம் அவர்களால் மௌலவி ஆலிம் பாஸில் நூரி ஸனது வழங்கப்பட்டது.

அஹ்மது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் அவர்கள்:

இலங்கை காத்தான் குடியில் முகம்மது தம்பி ஆலிம் ஹாஜியார் – மரியம் உம்மா ஆகியோரின் செல்வப் புதல்வராம் அகமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் அவர்கள் நம் ஷெய்குனா பொதக்குடி மதரசாவில் கல்வி பயிலச் சேர்ந்த மறு ஆண்டு பொதக்குடி வந்தார்கள். இருவரும் உற்ற தோழராயினர். ஷெய்குனாவை விட மூத்தவராக இருந்தாலும் இருவரும் ஒத்த மனமுடையோராக – கல்வி ஆர்வம் மிக்கோராக – ஞானத்தை தேடும் ஆர்வலர்களாக – உற்ற நண்பர்களாக – சகோதரர்களாக வாழ்ந்தனர்.

மேன்மக்களை மேன்மக்களே நன்கறிவர்! ஒரு இறைநேசப் பெருமகனாரை மற்றொரு இறைநேசரே நன்கறிவார் அகமியத்தைப் புரிந்துக் கொள்வார்!

இருவரும் பிற்காலத்தில் ஒன்றாக சம்சியாபாத் சென்று ஞானப் பெருவேந்தர் முகம்மது அப்துல் காதிர் குத்திஸ ஸிர்ருஹுஅவர்களிடம் கிலாபத் பெற இருந்த காரணத்தினால் அல்லாஹ் இவ்விருவாதம் தம் மனதையும் ஒரே நோக்கில் செல்லக் கூடியதாக ஆக்கி வைத்தான் போலும்!

அகமது மீரான் ஸூபி அவர்கள் 1930 ல் அருட்கவி அப்துர் ரஹ்மான் ஆலிம் அவர்களுடைய மகளார் செய்னம்பு உம்மா என்பாரை மணமுடித்து நல்லற வாழ்வு வாழ்ந்து 1952 அக்டோபர் 2ம் நாள் ஞாயிறு இசாவுக்குப் பின் இறையடி சேர்ந்தார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அவர்களது பொன்னுடலம் அவர்களது இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஷெய்குனா பொதக்குடி மதராசாவில் ஓதி முடித்தாகிவிட்டது. தோழர் அகமது மீரான் ஸூபியவர்கள் ஓதி முடிக்க ஓராண்டு பாக்கி இருந்தது. தோழரை விட்டுப் பிரிய மனமில்லாததோடு காமில் வலி அப்துல் கரீம் ஹலரத் அவர்களிடம் தங்கி இருந்து வேண்டிய பணிவிடைகள் செய்து பாக்கியம் பெற்றிட வேண்டுமென்ற ஆசையும் நெஞ்சம் நிறைய இருந்தது. அத்தோட முஹ்யித்தீன் இப்னு அரபி (ரலியல்லாஹுஅன்ஹு) அவர்களுடைய ஞான விளக்கப் பெருநூல் புஸூஸுல் ஹிகமை அப்துல் கரீம் ஹலரத்திடமே ஓதிட வேண்டுமென்ற எண்ணமும் கொண்டிருந்தார்கள் ஷெய்குனா அவர்கள்!

ஒரு ஞானவானின் நெஞ்சத்து எழுத்தை மற்றொரு ஞானவானால் படித்திடவா முடியாது? ஷெய்குனா அவர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அப்துல் கரீம் ஹலரத் ஷெய்குனாவை தமது உதவியாளராக நியமித்துக் கொண்டு மதராசாவில் தாம் இல்லாத வேளைகளில் தமது பாடங்களை நடத்த அனுமதி கொடுத்து தமது அறையிலேயே அவர்களைத் தங்க வைத்துக் கொண்டார்கள். காமில் வலியின் அருகிலிருக்கும் பாக்கியத்தைப் பெரும் ளபேறாகக் கருதி அவர்களுக்கு ஊழியம் புரிவதிலும் அவர்களிடமிருந்து ஞான அமுதைப் பருகுவதிலும் பேரின்பம் கண்டார்கள் ஷெய்குனா.

ஹைதராபாத் ஸூபி ஹலரத் அவர்கள்:

ஷெய்குனா அப்துல் கரீம் ஹலரத் அவர்களின் ஊழியத்தில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில்தான் அப்துல் கரீம் ஹலரத்தின் உஸ்தாது சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது மதார் சாகிபு ஸூபி திடீரென இறைவனடி சேர்ந்து விட்ட செய்தியை அறிகின்ற அப்துல் கரீம் ஹலரத் ஷெய்குனாவுடன் சென்னை சென்று மதார் சாகிபு ஸூபியவர்களை ஸியாரத் செய்து விட்டு சென்னையில் தங்கி இருந்த இமாமுல் ஆரிபீன் ஸுல்தானுல் வாயிழீன் பஹ்ருல் ஹகாயிகு வத்தகாயிகு ரயீசுல் மஜாதீப் ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் குத்திஸ ஸிர்ருஹு அவர்களை கண்டு தமது மதரசாவிற்கு வருகை தந்திட அழைப்பு விடுத்தனர். இவ்வழைப்பினை ஏற்றுக்கொண்ட அப்பெரு மகனார் பொதக்குடிக்கு வருகை தந்திட இசைந்தனர்.

ஹைதராபாத் ஞானப் பெருமகான் ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய நான்காவது கலீபா மட்டுமின்றி தமிழ் கூறும் நல்லுலகின் தலை சிறந்த பல பெரியார்களுக்கு பைஅத்து வழங்கி உள்ளனர். அன்னாரிடம் பைஅத்துப் பெற்று பாக்கியம் பெற்ற சிலகுறிபிடத்தக்கவர்கள்:

சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி மதார் சாகிபு ஆலிம் அவர்கள்

வேலூர் பாக்கியாத் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி அப்துல் ஜப்பார் ஆலிம் அவர்கள்

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயீல் சாகிப்
திண்டுக்கல் மௌலானா மௌலவி அமீர் பாட்சா ஆலிம் அவர்கள்

தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை ஸ்தாபகர் தென்காசிமேடை முதலாளி அப்துர் ரஹ்மான் சாகிப்

தஞ்சை மாவட்டம் கொடிக்கால்பாளையம் அ.த.அப்துல் மஜீது ஸூபி அவர்கள்

அல்லாமா அப்துல் ஜப்பார் ஆலிமவர்கள் பெரிய ஷெய்குனா அவர்களால் கேள்வி – பதில் வடிவில் எழுதப்பட்ட ‘அல்ஹக்‘என்ற உர்து நூலை அரபியில் மொழியாக்கம் செய்ததோடு அன்னாரைப் போற்றிப் புகழ்ந்து’அலா அய்யுஹ்ஷ் ஷெய்குல் வலீ………’ என்று தொடங்கும் அரபு கஸீதா ஒன்றினை இயற்றினார்கள். அந்த கஸீதாவில் ஹைதராபாத் மெஞ்ஞானப் பெருவேந்தரைக் குறித்து –மேன்மைமிக்க ஷெய்கு வலியுல்லாஹ் அவர்களே! இக்கால மார்க்க அறிஞருள் நிகரற்ற சம்பூரண பிரகாசமுடைய சூரியனாகத் தாங்கள் இலங்குகின்றீர்கள். அகமியங்களுடைய ஞானப் பெருமான் தாங்கள். வலிமை நிறைந்த ரப்புடைய மழ்ஹர் தாங்கள்!

ஷெய்குனா அப்துல் காதிர் ஜீலானி அவர்களுடைய திருப்பெயர் தாங்கி இருக்கிறீர்கள். எந்த அரசனும் பெரிய மனிதனும் சீமானும் தர இயலாத மாபெரும் பேரின்பப் பாக்கியங்களை எங்களுக்கு வழங்கி உள்ளீர்கள்.

உங்களிடத்தில் ஒளலியாக்களுடைய ரூஹ்களெல்லாம் வருகின்றன! எனப் போற்றிப் பாடுகிறார்கள், அப்துல் ஜப்பார் ஹலரத்!

ஷெய்கு படே சாகிபு எனும் குத்பு ஷைய்கு அஹ்மது பதுருத்தீன் அவர்கள் நமது ஞானப் பெரு வள்ளலுக்கு தமது சென்னை இல்லத்தில் ராஜோபசார விருந்தொன்று அளித்த போது தரையில் அன்னார் நடந்து வருவதற்காக விலை மிகுந்த துணி விரித்து வரவேற்பு நல்கியதோடு அவர்களை ஆரத்தழுவி, ‘உங்களை கௌதாக்கி விட்டான்! உங்களை கௌதாக்கி விட்டான்!’ என பரவேசத்தோடு கூறினார்கள்.

பைஅத்தும் கிலாபத்தும்

‘தற்காலத்தின் ஜுனைதுல் பக்தாதி!’ என்று புகழப்பட்ட ஞான மகானைப் பற்றி கேள்வியுற்றிருந்த நம் ஷெய்குனா அவர்களைக் கண்ணாரக் கண்டு பைஅத்து பெற்றிட வேண்டுமென பேரார்வம் கொண்டிருந்தனர்.

அவர்கள் பொதக்குடிக்கு வருகை தந்தபோது அன்னாரது வருகை குறித்து படே சாகிபு ஹலரத் அப்துல் கரீம் ஹலரத்தவர்களுக்கு முஹ்யித்தீன் வருகிறார். பலனடைந்து கொள்வீர்களாக! என்று தகவல் கொடுத்தார்கள்.

பொதக்குடி மதரசாவிற்கு வருகை தந்த அன்னாரை கண்ணியத்தோடு வரவேற்ற அப்துல் கரீம் ஹலரத் மாணவர்களுக்கு விடுமுறையளித்து மாணவர்களை அப்பேரின்ப ஞானப் பெரு வள்ளலிடம் முஸாபஹா செய்திடப் பணித்தனர்.

ஆனால் அம்மகான் தாமே முன்வந்து ஒவ்வொரு மாணவரிடமாக சென்று நம் ஷெய்குனாவிடம் வந்த போது உர்துவில் ‘நீங்கள் ஹைதராபாத் வாருங்கள்’ என்று கூப்பிட்டார்கள். அகமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிமவர்களுக்கு உர்து தெரியாதென்பதை தமது ஞானப் பார்வையால் புரிந்துக் கொண்டு ‘அதுரீதுல் மஜீஅ இலா ஹைதராபாத்!’ எனக் கேட்கின்றனர். உளம் பூரித்த தோழர்கள் முழுமனதுடன் அவ்வழைப்பினை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை நினைவு கூறுகின்ற ஷெய்குனா நான் அப்பெருமகனாரிடம் தனியாக உரையாட வேண்டுமென நினைத்திருந்தேன். அந்த எண்ணத்துடனேயே முஸாபஹா செய்தேன் அன்னாரும் என்னை ஹைதராபாத்திற்கு வரும்படிச் சொன்னார்கள் என்பார்கள்.

அவர்கள் ஹைதராபாத் சென்ற சிறிது காலத்திற்குப் பின்னர் ஷெய்குனா அவர்களும் தோழர் வெள்ளி ஆலிமவர்களுமாக ‘நாங்கள் எப்போது தங்களின் –சன்னிதானத்திற்கு வர வேண்டு’மெனக் கேட்டுக் கடிதம் எழுதினர். ‘இந்தக் கதவு எப்பொதும் திறந்தே இருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பதில் வந்தது.

இருவரும் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். முன்பின் அறிமுகமில்லாத ஊரில் இருவரும் ரயிலை விட்டிறங்கி அங்கே நின்ற போலீஸ் ஒருவரிடம் ஹலரத் அவர்களது முகவரியைக் காட்டி வழிகேட்டனர். அவர்களை அவரே அழைத்துச் சென்றார்.

ஹலரத் அவர்களின் இல்லத்தின் முன்னே நின்று குரல் கொடுத்தனர். அன்னார் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து ‘கை கழுகி உள்ளே வாருங்கள்’ என கூறி சென்றனர். இருவரும் கை கழுகி உள்ளே சென்றனர். அங்கோர் இன்ப அதிர்ச்சி!

மூவருக்கு உணவு பரிமாறி வைக்கப்பட்டிருந்தது இரண்டு தட்டில் சோறு. ஒரு தட்டில் ரொட்டி. ஹைதராபாத் ஞான வள்ளல் ரொட்டிதான் உண்பார்கள். மூவரும் பசியாறினர்.

அங்கே ஆறு மாதங்கள் வரை இருவரும் தங்கி இருந்து ஞான வாரிதியாய் விளங்கிய அந்த மெஞ்ஞான போதகரிடமிருந்து அள்ளக் குறையா ஞானப் பேரமுதை அருந்தி அருந்தி மகிழ்வுற்றனர்.

விடை பெறும் காலம் வந்தது ஹலரத் அவர்கள் இருவருக்கும் பைஅத் கொடுத்ததோடு தமது கலீபாக்களாக இருவரையும் ஆசீர்வதித்து தொழில் வர்த்தகம் ஆகியவற்றைவிட இந்த ஞானப் பெருவழியை தேர்ந்தெடுத்து செயலாற்றுமாறு உபதேசித்து வழி அனுப்பி வைத்தனர்.

நமது ஷெய்குனா அவர்களுக்கு ஹைதராபாத் ஹலரத் அவர்கள் காதிரிய்யா, நக்ஷபந்திய்யா, ரிபாஇய்யா, ஜிஷ்திய்யா, முஜத்திய்யா ஆகிய தரீகுகளின் ஜதுபுசுலூக்கு வழிகளில் பைஅத்தும் கிலாபத்தும் வழங்கி உள்ளனர்.

காதரிய்யாத் தரீகாவின் ஷெய்குமார்களில் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து 40-வது தலைமுறையிலும்,

காதிரிய்யா அக்பரிய்யாவின் ஷெய்குமார்களில் நாயகமவர்களிடமிருந்து 35-வது தலைமுறையிலும்,

நக்ஷபக்திய்யா ஊலாவின் ஷெய்குமார்களில் நாயகமவர்களிடமிருந்து 33 –வது தலைமுறையிலும்,

நக்ஷபக்திய்யா தானியாவின் ஷெய்குமார்களில் நாயகமவர்களிடமிருந்து 33–வது தலைமுறையிலும் நமது ஷெய்குனா அவர்கள் வருகிறார்கள்.

திருமணம்:

ஹிஜ்ரி 1349 ஜமாதுல் அவ்வல் பிறை 22 புதன் கிழமை (15-10-1930) அன்று ஷெய்குனா அவர்கள் தோல்சாப்பு முகம்மது அப்துல்லா நாச்சி என்ற பெண்ணரசியை மணம் புரிந்தனர். இம்மண விழா நிகழ்ச்சியில் ஷெய்குனா அவர்களின் ஞானத் தந்தை ஷெய்குனா ஹைதராபாத் ஸூபி ஹலரத் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். அப்போது அவர்கள் ஷெய்குனா அவர்களிடம் உங்களுக்கு இன்னொரு மாலை காத்திருக்கிறது என்றனர்.

ஷெய்குனா அவர்களும் பெண்ணரசி அப்துல்லா நாச்சியவர்களும் கொண்ட இனிய இல்லற வாழ்வில் ஆண் மகவொன்றினைப் பெற்றெடுத்தனர். அவருக்குத் தம் தந்தையாரின் பெயரான அகமது முஹ்யித்தீன் என்ற பெயரினை இட்டு மகிழ்ந்தார்கள் ஷெய்குனா அவர்கள்!

1932ல் முதல் மனைவி இறையடி சேர்ந்துவிடவே தமது குருநாதருடைய முன்னறிவிப்பின் படி இரண்டாவதாக தோல்சாப்பு மகுதூம் பாத்திமா எனும் மாதர்கரசியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு முகம்மது அப்துல்லா நாச்சி முகம்மது இப்ராஹீம் நாச்சி முகம்மது பாத்திமா என்று மூன்று பெண் மக்கள் பிறந்தனா. இவர்களை முறையே கத்தீபு ஆ.ளு.அகமது முஹ்யித்தீன் மௌலவி M.M.செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி O.V.முஹயித்தீன் தம்பி ஆகியோர் மணம் முடித்துள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்துக் கொண்டு ஷெய்குனா அவர்கள் விட்டுச்சென்ற பணியினை சிறப்புற ஆற்றிவரும் அன்னாரின் கலீபாக்களுள் ஒருவராகத் திகழுகின்றார்கள். ஷெய்குனா அவர்களின் இரண்டாவது மருகர் மௌலவி எம்.எம்.செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள்!

(ஷெய்குனா அவர்களின் ஏகப் புதல்வர் அஹ்மது முஹிய்யித்தீன் அவர்கள் 24-2-1983வியாழக்கிழமை இரவு திடீரென தாறுல் பகாவின் சுந்தர வாழ்வினை ஏற்றனர். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அவரது பிழைகள் பொறுத்து சுவனப் பெருவாழ்வினைத் தந்தருள் புரிவானாக! ஆமீன்)

கல்வத்:

ஷெய்குனா அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வியாபாரங்கள் செய்தனர்.ஆரம்பத்தில் அவை மிக நன்றாக செழிப்போடு நடந்து வரும். ஆனால் சீக்கிரமே அவை பயனளிக்காமல் போய்விடும். இச்சூழ்நிலையில் அவர்களுடைய இரண்டாவது திருமணமும் முடிகிறது.

வியாபாரங்களில் தொடர்ந்து நஷ்டமும் அதனால் மன நிம்மதியும் இழக்கவே வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தமது ஆசானின் உபதேசப்படி ஞாலமக்களுக்கு ஞானம் பயிற்றுவிக்க அந்த ஞானப்பிதா தன் பேரொளிப் பார்வையினைத் திருப்பியது. அகத்துறை துலக்கும் இந்த ஆன்மீகப் பணியிலேயேஅவர்கள் தம் வாழ்வு முழுவதையும் செலவிட்டனர்

அதற்கு முன்னோடியாக கல்வத்-தனித்திருந்து இறையோனை திக்று செய்வதற்காகவும் தன் ஆன்மீகச் சகோதரர் இலங்கை அட்டாளச்சேனை அகமது மீரான் ஸூபி அவர்களைச் சந்திப்பத்ற்காகவும் 1946ம் ஆண்டுஇலங்கை சென்றார்கள். அப்போது அகமது மீரான் ஸூபியவர்கள் கிராங்குளம் எனுமிடத்திலுள்ள தோட்டத்தில் கல்வத் இருப்பதையறிந்து தாமும் அங்கு சென்று இருவருமாக ஒன்றரை மாதங்கள் வரை கல்வத்தில் இருந்தனர். பின் காத்தான்குடி, ஏறாவூர், கொழும்பு முதலிய இடங்களுக்குச் சென்று விட்டு காயல்பட்டினம் வந்தனர்.

பேரின்பத்தைத் தேடி அலைகின்ற உள்ளத்திற்கு உலகத்துச் சிற்றின்பங்கள் எம்மாத்திரம்? ஷெய்குனா இறைதியானத்திலேயே தம் முழுநேரத்தையும் செலவிட்டனர். ஊரில் அவர்களுக்கு முழுநேரமும் தம்மை மறந்த நிலையில் தானெனும் அன்னியத்தை விட்டொழித்த நிலையில் ஹக்கைத் தேடுகின்ற பரமானத்த நிலையில் மூழ்கிப் போக சந்தர்ப்பம் சரியாக வாய்க்காததால் ஊராரிடமோ குடும்பத்தாரிடமோ ஏதும் சொல்லிக் கொள்ளாமல் தனிவழி புறப்பட்டுப் போயினர்.

தன்னந்தனியராகப் புறப்பட்டுச் சென்ற அத்தகமையாளர் தஞ்சை மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் இருந்த தமது ஆத்மீகச் சகோதரர் அ.த.அப்துல் மஜீது ஸூபியவர்களிடம் வந்து சேர்ந்து அவர்களுடைய தோட்டத்திலேயே சில காலம் கல்வத்தில் இருந்தார்கள்.

பின்னர் மாதிஹுர் ரஸுல் ஷெய்கு சதகக்கதுல்லாஹ் அப்பா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹலரத் மீக்காயீல் அலைஹிவஸல்லம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடியதும் கல்லும் கசிந்துருக உரையாற்றியதுமான காயல்பட்டணம் இரட்டைக்குளம் பள்ளிவாசலில் ஓராண்டு காலம் கல்வத் இருந்தார்கள்.

1949ல் மீண்டும் ஷெய்குனா அவர்கள் இலங்கை சென்று சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலில் சில மாதங்கள் இமாமத் பணியினை ஏற்று செவ்வனே செயலாற்றி வந்தனர். ஆயினும் சுதந்திரமாக இறைவனைத் தியானிப்பதற்கும் மக்களுக்கு ஞானபோத விளக்கம் செய்வதற்கும் இப்பணி தடையாக இருப்பதாகத் தோன்றவே அப்பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மெஞ்ஞானப் போதங்களை அள்ளி வழங்கி மாசு படிந்த உள்ளங்களை சுத்தப்படுத்தி ஆன்மீக ஒளியேற்றி வைத்தார்கள்.

முராகபா பற்றிய விளக்கம்:

பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இயற்றும் தவநிலையான முராகபா மூலம் பதவி – இறை சன்னிதானத்தில் உயர் மர்தபாவினை ஆன்றோர்கள் பெற்றனர். உயர்வுக்குரிய – உயர்வைப் பெற்றுத் தருகிற இந்த முராகபாவை எப்படிச் செய்ய வேண்டும்? என்பது பற்றி ஷெய்குனா அவர்கள் தமது ஸில்ஸிலாவில் முராகபா என்ற பகுதியில் மிகத் தெளிவாக கீழ்கண்டவாறு சொல்லித் தருகிறார்கள்.

தாலிபு அதிக பசி, தாகம் இல்லாமலும் வயிறு நிரம்பாலும் இருக்கும் போது ஓசைகளற்ற தனித்த இடத்தில் அமர்ந்து (இரவின் மூன்றில் இரு பகுதி கழிந்த பின் ஓசைகள் அடங்கிவிடும். எனவே இந்த நேரத்தைப் பயன்படுத்துவது சிறப்பு) கண்ணைப் பொத்தி இடது மார்புக்குக் கீழே இருக்கிற இதயக் கமலத்தை மனக்கண்ணால் கூர்ந்து நோக்கி அல்லாஹ் அல்லாஹ் என மனதால் சொல்ல வேண்டும். தூக்கம் வருமாயின் வாயாலும் கூறலாம்.

அல்லாஹ் என்ற வார்த்தை, மூச்சு வருவது போவது எத்தனை தடவைகள் என்பவற்றில் சிந்தனையை செலுத்தக் கூடாது.

இவ்வாறு முழு வைராக்கியத்துடன் செய்யச் செய்ய தன்னை மறந்து உணர்வற்று ஸ்தம்பித்துப் போகும். இந்நிலைதான் முராகபா – சமாதி நிலை!

இந்நிலைக்குப் பின்னர் தான் முஷாஹதா – காட்சி ஏற்படும். முஷாஹதா பெரும் முயற்சிக்குப் பின்னர் தான் ஏற்படும். முயற்சி இல்லாமல் காட்சி நிலை ஏற்படாது. முடிந்தவரை அதிக நேரத்தை திக்றில் செலவழிக்க வேண்டும். குறைந்தது 15 நிமிட நேரமாவது திக்றுச் செய்ய வேண்டும்.

இரண்டாவது தன்னை மறப்பது, இதற்கு தனது எல்லா நிலைகளிலும் உட்காரும்போதும், நிற்கும்போதும், தூங்கும்போதும், குடிக்கும்போதும், புசிக்கும் போதும் மற்ற வேலைகளை செய்யும் போதும் தன் இயக்கத்தை தியானத்தின்பால் திருப்பிவிட வேண்டும்.

தான் செய்யும் வேலைகளில் மனதை முழுமூச்சாக செலுத்தி விட்டால் பின்னர் தனித்திருந்து திக்று செய்கின்றபோது சிந்தனை அந்த வேலைகளிலேயே இழுபட்டுவிடும்.

உலக சம்பந்தமான எத்தொழிலில் ஈடுபட்டாலும் இறைவனின் எண்ணத்திலேயே இருக்கிற மகான்களைக் குறித்து ‘வியாபாரமும் கொடுக்கல் வாங்கலும் அவர்களை அல்லாஹ்வின் நினைப்பை விட்டு பராக்காக்காது’ என்று இறைவன் புகழுகின்றான். முராகபவின் நிலைபற்றி மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் ஷெய்குனா அவர்கள் தருகிற விளக்கமிது!

1963- ம் ஆண்டு ஷெய்குனா அவர்கள் இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ்ஜினை காயல்பட்டணத்திலிருந்து சென்று மிகச் சிறப்புடன் நிறைவேற்றி வந்தார்கள்.

ஞான வாரிதி தந்த ஆன்மராக நூல்கள்:

ஷெய்குனா அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டுவது போன்று மனிதன் ஒரு கண்ணாடியைப் போன்றவன். கண்ணாடியில் அழுக்கு படிந்து விட்டால் பார்ப்பவரின் உருவத்தை அதில் காண இயலாது. கண்ணாடியில் அழுக்கு இல்லாமல் கண்ணாடி என்ற கோலமும் மறைய வேண்டும். கோலம் மறைகிற போது கோலத்தை மறக்கின்றபோது உருவம் தெளிவாகத் தெரியும்.

அதுபோன்று மனிதனுடைய மனதில் தான் என்ற அழுக்கு அகம்பாவ எண்ணம் வேரூன்றி நிற்பது வரை – தான் என்ற நினைப்பு நிறைந்திருப்பது வரை இறைவன் அந்த இதயத்தில் வெயிப்பட மாட்டான். ஆதம் நபியை கலீபாவாக தேர்ந்தெடுத்த இறைவன் அவர்களில் தன் அஸ்மாக்களை வெளிப்படுத்தியது போன்று அதற்கான அருகதையோடு மக்களைப் படைத்துள்ளான். உள்ளே இருக்கின்ற இத்தன்மைகள் வெளியே வந்து விடுமானால் அதுதான் முக்தி – சம்பூரணம்.

தான் என்ற எண்ணம் இல்லாமல் போய் விடுகின்ற போது இறைவன்பால் இவன் நெருங்கிவிட்டான் எனப் பொருள். அல்லாஹ்வின் சமூகத்தில் சென்றான் என்பது அவனது அஸ்மாக்கள் அவனிடத்தில் வெளியாக இவன் லாயக்கானவன் ஆகிவிட்டான் என்று பொருள். இப்போது இவர் முக்தி பெற்றார்.

இப்படி தத்துவ முத்துக்களை பாமரர்களும் புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் தெளிவாக வாரித் தந்த ஷெய்குனா அவர்கள் ஞானப் பேரமுதை அருந்தி மகிழ அற்புதமான ஞான நூற்கள் பலவற்றை எழுதியுள்ளார்கள். ஷெய்குனா அவர்கள் எழுதிய ஆன்ம நூற்கள் அக இருள் போக்கி அறிவொளி நல்கும் அற்புதமான நூற்களாகும். அவைகளாவன:

1. அத்துஹ்பத்துல் முர்ஸலா 2. அஸ்ஸுலூக்
3. ஞான தீபம் 4. அல்ஙக் 5.அத்தகாயிகு
6. அஸ்ராருல் கல்வத் – கல்வத்தின் ரகசியங்கள்
7. அகமியக்கண்ணாடி 8. கலிமத்துல் ஹக் 9. அல்ஹக் (கேள்வி-பதில்)

ஷெய்குனா அவர்கள் தம்மிடம் பைஅத்துப் பெறுவோருக்கு சில உபதேசங்கள் செய்வார்கள். அந்த உபதேச ரத்தினங்கள் அவர்களால் வழங்கப் பெறுகின்ற அஸ்ஸில்ஸிலத்துல் அலிய்யதுல் காதிரிய்யா வெனும் ஸில்ஸிலா கிதாபிலும் காணக் கிடைக்கிறது. அவை:

1. அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும்.
2. ஷரீத்தின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுபட வேண்டும்
3. தரீகத்தினுடைய ஒழுக்கங்களைப் பேண வேண்டும்
4. சுன்னத் ஜமாஅத்தின் கொள்கைகளுக்கு மாறுபட்ட கொள்கைகளைவிட்டு விடுவதோடு, ஜனங்கள்பால் கெட்ட எண்ணம், கபடம், பொறாமைமுதலிய தீய குணங்களைவிட்டு மனத்தூய்மையாக இருக்க வேண்டும்.
5. எல்லோரையும் விட தன்னைத் தாழ்வாகக் கருத வேண்டும்.
6. ஈகை பரோபகாரத்தைக் கடை பிடிக்க வேண்டும்.
‘நான் அல்லாஹ்வின்பால் இரவில் தொழுததாலும், பகலில் நோன்பு வைத்ததாலும், கல்வியைக் கற்று கொடுத்ததாலும் சேர்ந்து விடவில்லை. எனினும் ஈகையும் தாழ்மையும் மனத் தூய்மையும் தான் என்னை இறைவன்பால் இணைத்தது’ என்று ஷெய்குனா அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றனர்.
7. பித்அத்காரர்கள், அவ்லியாக்களை தரீக்காக்களைப் பற்றி குறைவாகப் பேசுபவர்கள், கெட்டகுணங்களை உடையோர் ஆகியவரோடு வெளிரங்கத்தில் கூட நட்புக் கொள்ளக் கூடாது
8. ஷெய்கின் பேரிலுண்டான முஹப்பத்தில் மூழ்க வேண்டும். முரீது ஜெயம் பெறுவதற்கு அடையாளம் மற்றவர்களைவிட தன் ஷெய்கைத் தெரிந்து அவரை நேசிப்பதும் அவர் கூறுவதை மனமுவந்து கேட்டு நடப்பதும் அவருடன் அவரது எல்லாக் காரியங்களிலும் இணக்கமாக இருப்பதும் வேண்டும்.
9. நற்குணங்களைக் கொண்டு பயன் பெறுவதற்காக கல்பைச் சுத்தமாக்கமுயற்சிக்க வேண்டும். எல்லா சகோதரர்கள் பேரிலும் பொதுவாகவும் நமது தரீகா சகோதரர்களின் பேரில் குறிப்பாகவும் நேசம் வைக்க வேண்டும்.

ஷெய்குனா அவர்களின் கொள்கைப் போர்:

ஷெய்குனா அவர்கள் தமது குருநாதரின் வழியைப் பின்பற்றி வழிகேடார்களுக்கும் குழப்பக் கொள்கை படைத்தோருக்கும் ஒரு பெரும் சவாலாகவே எப்போதும் விளங்கி வந்துள்ளார்கள். தீனை விற்றுப் பிழைக்கும் வகையற்றோரின் முகமூடி கிழித்துக் கொள்ளச் செய்வதில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் அவர்கள் செய்த பணி மகத்தானது! மறுக்க முடியாதது!

ஸூபி ஹலரத் என்ற பெயரைக் கேட்டதும் தமிழகத்திலும் சரி. ஈழத்திலும் சரி. வஹ்ஹாபிகள், ஜமாஅத்தே இஸ்லாமிகள், தப்லீகர்கள் போன்ற இன்ன பிற கொள்கைக்காரர்கள் நடுங்கி வாய் பொத்திய வரலாறுகள் ஏராளம் உண்டு!

கபட வேட தாரிகளின் கூடாரங்களை கதிகலங்கச் செய்த ஷெய்குனா அவர்கள் மீது காழ்ப்பு கொண்ட குறைமதியாளர்கள் அவ்வப்போது ஏவிய கேள்விக் கணைகள் சொல்லம்புகள் ஆகியவற்றை முனை மழுங்கச் செய்ததோடு சில அறைகுறை மேதாவிகள் சொரிந்த இழிமொழிகளையும் தாங்கிக் கொண்டு தம் கருமத்தில் கண்ணாயிருந்தார்கள் எங்கள் கண்ணியத்திற்குரிய ஷெய்குனா அவர்கள்!

இப்பணிக்காகவும், இறை தியானத்திற்காகவும், இலங்கையின் பல்வேறு இடங்களிலும் காயல்பட்டிணம், தூத்துக்குடி, மேலப்பாளையம்,கேரளத்தின்பீமாபள்ளி மற்றும் பல பகுதிகளிலும் ஹிஸ்புல்லாஹ் ஸபை ஸூபி மன்ஸில் என்ற பெயரில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படவைத்தர்கள்.

தமிழ் கூறும் தீன்குலப் பெருமக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளையும்> மாற்றாரின் குழப்ப வாதங்களையும் தெளிவாகத் தெரிந்துக் கொண்டு செயல்பட – அதள் மூலமாக ஈருலக நல்வாழ்வினையும் பெற்றிட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் பல கொள்கை விளக்க நூற்களையும் ஷெய்குனா எழுதினார்கள். அவற்றுள் குறிப்பிடத் தக்க நூற்கள்:

1. இன்ஹாருல் ஹக் – சத்தியப் பிரகடனம்2. உலமாக்களின் உண்மை பத்வா3. அறிவாளர்களே ஆராய்ந்து பாருங்கள்4. காதியானி – தேவ்பந்த் சம்பாசனை 5. தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்6. சுவர்க்க நகைகளா? அல்ல! அது நரக விலங்குகள் 7. தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்த விதமாக தலையில்தட்டு8. மவ்தூதி சாகிபும் அவரது ஜமாஅத்தே அஸ்லாமி இயக்கமும்9. அல்முஹன்னதின் அண்டப் புழுகு10. தப்லீக் என்றால் என்ன? 11. புலியைக் கண்டு ஓட்டம்

(மேற்கண்ட ஞான விளக்க கொள்கை விளக்க நூற்களில் பல வெளிவந்து விட்டன. சில இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவர உள்ளன. நூற்கள் தேவைப்படுவோர் ஹிஸ்புல்லாஹ் ஸபை – ஸூபி மன்ஸில் குத்துக்கல் தெரு, காயல்பட்டணம். என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.)

மறைவு:

இறுதி வரை எந்தவொரு தனிமனிதனுக்கும் சரி, சக்திக்கும் சரி பணியாமல் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவோ அல்லது பின் வாங்கவோ செய்யாமல் இழி மொழிகளை – சுடுசொற்களை கேட்டு முகம் சுளிக்காமல் சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களால் வகுத்துத் தரப்பட்ட நேர்வழியில் தீரத்தோடு சென்ற – வீரத்தோடு போதித்த கொள்கை முரசம் குணங்குன்று எங்கள் நேசத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாமா ஷெய்குல் காமில் ஷெய்குனா ஹலரத் ஹிஜ்ரி 1402 புனித ரமாலான் பிறை 24 வெள்ளிக்கிழமை சுப்ஹுக்கு சற்று முன்னர் 16-7-1982 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த நேரத்திலும்கூட நேசமிக்க முரீதீன்கள் பலர் கேட்டுக் கொண்ட போதும் அன்னார் ஒத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நோன்பு வைத்து வந்த நிலையிலேயே எல்லாம் வல்லவனாம் ஏக இறையோன் அல்லாஹுவின் அன்பழைப்பினை ஏற்று இம்மை வாழ்வினை முடித்துக்கொண்டு மறுஉலகப் பெரு வாழ்வினைத் தொடங்கினார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

வழிகேடர்களுக்கு சிம்ம சொப்பமாக விளங்கிய ஷெய்குனா அவர்கள்எண்பது ஆண்டு காலமாக பாரில் வாழ்ந்திருந்து தீன் சேவையாற்றினார்கள்.

ஒரு பெரும் குழுவினர் செய்ய வேண்டிய மாபெரும் சேவையினை தனியொரு மனிதராக நின்று அவர்கள் ஆற்றினார்கள். அப்பெருமகனாரின் தீரமிகு சேவை மகத்தானது மட்டுமல்ல!வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதுமாகும்.

தள்ளாத வயதிலும் தளராத மனத் துணிவோடு புனித இஸ்லாத்தின் நேரான பாதையை சீராக போதித்த ஷெய்குனா அவர்களது பொன்னுடலத்தை தாங்கி நிற்கும் பாக்கியத்தை கொழும்பு குப்பியாவத்தை மையவாடி பெற்றுள்ளது. அன்றாடம் அந்த புனித மிகு அடக்கவிடத்தினில் கூடுகின்ற ஜனத்திரள் அவர்களது ஆன்மீக வித்தையின் அற்புத்ததினை படம் பிடித்து காட்டுகிறது!

எளிய வாழ்வு வாழ்ந்த எங்கள் ஷெய்குனா:

நாடறிந்த ஞான மகானாக வாழ்ந்த ஷெய்குனா அவர்களிடம் ஒரு போதினிலும் சிறிதளவு கூட படாடோபம் இருந்ததில்லை. பெருமையை, விளம்பரத்தை அவர்கள் விரும்பியதுமில்லை.வெள்ளை அல்லது வெள்ளையில் கோடுபோட்ட கைலி ஒரு பனியன, மேலே ஒரு ஜிப்பா, ஒரு துருக்கித் தொப்பி,அதே நிறத்தில் ஒரு சால்வை! இவைகள் தான் அவர்களுடைய உடைகள். எங்கும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த உடைகளுடனும், புன்னகை அரும்பி சாந்த ஒளி முகத்துடனும் தான் மகோன்னதமிக்க அம்மனிதருள் மாணிக்கத்தை கொஞ்சம் கூட அகந்தையோ, ஆணவமோ அற்ற ஞான வள்ளலை இனிய குணங்களில் இமயமாய் உயர்ந்து நின்ற எங்கள் ஷெய்குனா அவர்களை காணலாம்.

ஒரு பெரும் மகானை சந்திக்கச் செல்கின்றோம் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஷெய்குனா அவர்களைச் சந்திக்க வருவோர் அன்னாரின் எளிமைத் தோற்றத்தையும் வயது வித்தியாசங்களையோ ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டையோ பாராமல் எல்லோருடனும் கனிவு ததும்ப இனிமை நிறைய உரையாடுகின்ற, போதனை புரிகின்ற பாங்கை மன விசாலத்தைக் கண்டு அதிசயத்துப் போய் விடுவார்!

கொழும்பில் அவர்கள் தங்குமிடத்திற்குச் சென்றால் மிகத் தெளிவாக அன்னாரது எளிய வாழ்வு தெரிய வரும். ஒரு சிறிய அறை! அதனுள் ஒருமூலையில் இரண்டொரு கைலிகள் ஜிப்பாக்கள் கயிற்றில் தொங்கும். சிலபாய்கள் விரிக்கப்பட்டு ஒரு ஓரத்தில் இரண்டு சிறு தலையணைகள் அறையின் ஒரு புறத்தில் ஏராளமான கிதாபுகள்! இவைதான் அவர்களுடைய சொத்து!

எப்போதும் கிதாபு பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது வருகை தருவோருக்கு ஞான விளக்கங்கள், கொள்கை விளக்கங்களைப் போதிப்பதும் அவர்களுடைய சந்தேகங்களுக்கு அறிவுப் பூர்வமான – ஆதாரங்களைத் தருவதுமாகவே அவர்களைக் காணலாம்.

இலங்கை ஏட்டின் புகழாரம்:

இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் நாளேடான தினகரன் ‘ஆலமுல்இஸ்லாம்’ பகுதியில் ஷெய்குனா அவர்கள் மறைந்த நாற்பதாம் நாள் கத்முல் குர்ஆன் விழாவினையொட்டி சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிட்டது.அக்கட்டுரையில் ஈழத்தில் ஷெய்குனா அவர்கள் ஆற்றிய அரும் பணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையின் சுருக்கம்இதோ:

‘பஸ்அலூ அஹ்லத் திக்ரி இன்குன்தும் லா தஃலமூன்’; என்ற இறை வசனம் நீங்கள் அறியாதவராக இருந்தால் இறைதியான சிந்தையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வீர்களாக! என்ற பொருள் தருவதை உணர்ந்த எண்ணற்ற முஸ்லிம்களால் ‘ஷெய்க்’; என்றும் ‘ஸூபிஹலரத்’ என்றும் அழைக்கப்பட்ட பெரியார் மௌலானா மௌலவி அல் ஆலிமுல் பாஜில் அல்ஹாஜ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஸித்தீகி காதிரி காஹிரி நக்ஷபந்தி அவர்கள்!

தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு முன்னைய காலங்களில் சன்மார்க்க விஜயம் செய்து இஸ்லாமிய சமயப் பணியாற்றி இந்த நாட்டில் இஸ்லாமிய உணர்வு தழைத்தோங்க வழிகோலிய மார்க்க உலமாக்களை நாம் மறக்க முடியாது. அத்தகைய சாலிஹான சமயப் பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இந்த ஸூபி ஹஸரத் குறிப்பிடத் தகுந்த ஒருவராவார்.

தற்காலத்தில் நம்மவர் நடுவே இஸ்லாமிய சமயப் பணியாற்றி மெஞ்ஞான வழியின்பால் இஸ்லாமிய இதயங்களை ஈர்த்து சமய உணர்வு பேரின்பமாகப் பெருகியோட வழி சமைத்து நம்மவர் நடுவே வாழ்ந்து மறைந்தவர் இந்த ஸூபி ஹஸரத்தாகும்.

நம் நாட்டு அரசியலில் பங்கேற்றுள்ள சகல கட்சிகளையும் சார்ந்த முஸ்லிம் தலைவர்கள் உட்பட நம் இலங்கை சமுதாயத்தின் சகல துறைகளையும் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் சாதாரணமானவர்கள் என்று பலர் இப்பெரியாரின் மார்க்க உபன்னியாச பயானில் ஈர்க்கப்பட்டு இந்த ஷெய்கிடம் முரீது பெற்று ஞான சிஷ்யர்களாகத் திகழ்வதை மறுக்க முடியாது. மேமன்பாய் சமூகத்து சகோதரர்கள் இப்பெரியாரை ‘பீர்பாபா’ என்று பேருவகையுடன் அழைக்குமளவிற்கு அவர்களிடம் இப்பெரியாருக்கு பெரு மதிப்பு இருந்தது.

தப்லீக் என்றால் என்ன? தப்லீகின் தாத்பரியம் யாது? அதன் ஸ்தாபகர் யார்? ஸ்தாபகரின் கொள்கை யாது? நபி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தப்லீக் யாது? அதற்கும் இதற்குமுள்ள வேறுபாடுகள் யாவை? என்பன போன்ற வினாக்களுக்கு மிகத் துணிவாகவும் ஆதாரப்பூர்வமான நிறுவுதல்களுடனும் விளக்கம் தந்த ஒரே பெரியார் இந்த ஸூபி ஹஸ்ரத்தான் என்றால் அதை விருப்பு வெறுப்பற்ற விஷயம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

இவர் தன் முரீதுகளுக்கு வழங்கி வந்த ஞானப் பயிற்சி சொல்லுந்தரமன்று. வாராவாரம் ஹிஸ்புல்லாஹ் ஸபையினர் நாடெங்குமுள்ள ஸூபி மன்ஸில்களில் நடத்தி வரும் ராத்திபு – திக்று மஜ்லிஸ்கள் பல நூறு இதயங்களை ஞான வழியின்பால் ஈர்த்து முரீதீன்களாக்கி வருவது குறிப்பிடத் தக்க அம்சமேயாகும்!

ஷெய்குனா அவர்களைக் குறித்து இலங்கை ஏடு சூட்டியுள்ள புகழாரம் இது!

உண்மையாம் மார்க்கத்தின் தூய கொள்கையெனும் வித்துக்களை சமுதாய மக்கள் தம் உள்ளப் பரப்பில் விதைத்து செழித்து வளர வைத்து உயரிய வாழ்வு ஈருலகிலும் பெறத்தக்க வழி சமைத்துத் தந்த – மாறுபட்ட கொள்கைகளில் வேறுபட்டவர்களின் தவறான வழிகாட்டுதல்களை மக்களுக்கு சுட்டிக் காட்டி – அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகிய பாதையினை சிறப்பாக விளக்கித் தந்த எங்கள் ஷெய்குனா

சத்தியத்தின் பேரொளியாய் நின்றுலவி
சகலோர்க்கும் நல்வழி புகட்டிய
சத்தான சன்மார்க்க சீலர்
ஷரகின் வழி நின்ற தீரர்.

இன்று புற வாழ்வில் நம்முடன் இல்லை! ஆயினும் மகோன்னதம் மிக்க அந்த மாமேதை அவர்களால் வகுத்துத் தரப்பட்ட நெறி முறைகள் நம் முன் இருக்கின்றன!

பூ ரத மனதில் புகழ் இறை
பொங்கிய அருட் சுனையை
நா ரதம் ஏந்தி
நயமுடன் தந்தவரே!
சாந்தமும் சத்திய வேத நன்னூலின்
சாறும் கலந்ததனை
எமக்கீந்தவரே!

எம் இனிய ஷெய்குனா! நுங்கள் வழியில் அயராது நாங்கள் உழைத்துய்ய எல்லா அருளும் பெற்றிட வல்லான் இறையிடம் உங்களை வஸீலாவாக்கி வேண்டுகிறோம்!

அருளாளன் அல்லாஹ் ஷெய்குனா அவர்களின் பொருட்டினால் நம் பிழைகள் பொறுத்து வகையான வாழ்வினை ஈருலகிலும் ஈந்தருள் புரிவானாக! ஆமீன்.

ஷெய்குனா அவர்களின் கலீபாக்கள்:-

1. மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்கள்

2. மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள்( இவர்கள் மறைந்து விட்டார்கள்)

3. மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஊண்டி M.M. செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள்( இவர்கள் மறைந்து விட்டார்கள்)

4. மௌலானா மௌலவி H.N. ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் ( இவர்கள் மறைந்து விட்டார்கள்)

5. மௌலானா மௌலவி ஹனீபா ஆலிம்(இலங்கை) அவர்கள்( இவர்கள் மறைந்து விட்டார்கள்)

ஆகியோரை தங்களது கலீபாக்களாக நியமித்துச் சென்றார்கள்.

Add Comment

Your email address will not be published.