மூஸா நபி அலைஹிஸ்ஸலாம்

மூஸா நபி அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 2 Comments February 20, 2015

Print Friendly, PDF & Email

எகிப்தில் கிப்திகள், பனூ இஸ்ரவேலர்கள் என்ற இரு சமூகத்தார் வசித்து வந்தனர். இவர்களில் கிப்திகள் நன்றாக வசதியாக வாழ்ந்தனர். ஏழ்மையாக இருந்த பனூ இஸ்ரவேலர்களை அவர்கள் அடக்கி ஆண்டு வந்தனர். இந்த கிப்திகளின் வம்சத்தைச் சார்ந்தவன்தான் அந்நாட்டின் அரசன் பிர்அவ்ன். பிர்அவ்ன் என்றால் சூரிய புத்திரன் என்றும் பொருள் கொள்ளலாம். எகிப்தை ஆண்ட அரசர்களுக்கு பிர்அவ்ன் என்று பெயர் சொல்லப்படுவது உண்டு.

மூஸா நபி காலத்திலிருந்த பிர்அவ்னின் இயற்பெயர் காபூஸ் இப்னு வலீத் இப்னு முஸ்அப் இப்னு ரியான் என்பதாகும். இவன் 600 வருடங்கள் வாழ்ந்திருந்தான். இதில் 400 வருடங்கள் அரசாட்சி செய்வதில் காலம் கழித்தான்.

இந்த பிர்அவ்ன் தன்னைப் போல் ஒரு சிலையை வடித்து அதனையே மக்களை வணங்கி வருமாறு உத்திரவு பிறப்பித்தான். எப்போது தன்னை இறைவன் என்று இவன் வாதித்தானோ அப்போதெ இவனது முகம் விகாரமாகிவிட்டது. நைல் நதி வற்றி விட்டது. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவனிடம் வந்து நீதான் இறைவன் என்று சொல்கிறாயே! நதியில் தண்ணீர் ஓடச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முறையிட்டார்கள். பிர்அவன் முதலில் திகைத்து> பின்பு சமாளித்துக் கொண்டு அவசியம் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மக்களை சமாளித்துவிட்டு ஒரு மலைக்குச் சென்று இறைவனிடம், ‘இறைவனே! நீதான் உண்மையாக வணங்கத் தகுதியுடையவன். நான் பொய்மையிலிருக்கிறேன். மறுமையில் எனக்கு எந்த நலவும் வேண்டாம். இம்மையிலேயே எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து விடு. வற்றிவிட்ட நைல்நதி மீது மீண்டும் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடச் செய்’ என்று கேட்டு பிரார்த்தித்தான்.

அச்சமயத்தில் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிர்அவ்ன் முன் மனித உருவில் தோன்றி, தன் எஜமானின் அருட்கொடைகளை மறந்து நன்றி கெட்டத்தனமாக நடக்கும் மனிதருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு பிர்அவ்ன், அவனை கடலில் மூழ்கடித்துச் சாகச் செய்ய வேண்டும்’ என்று ஆத்திரம் பொங்க கூறினான். பிர்அவ்னிடமிருந்து அதை எழுத்து மூலமாக வாங்கிக் கொண்டார்கள். பிர்அவ்ன் இவ்வாறு எழுதிக் கொடுத்த சமயத்தில் ‘ஓ! பிர்அவ்னே! உனக்கு நைல்நதி மீது ஆதிக்கம் செலுத்தி வரும் ஆற்றலைத் தந்தோம்’ என்று அசரீரி கேட்டது. இந்த சப்தத்தை எகிப்து வாசிகள் அனைவரும் கேட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது.

பனூ இஸ்ரவேலர்களில் இம்ரான் இப்னு எங்கா என்பவரின் அறிவுத்திறமையைக் கண்டு வியந்த பிர்அவ்ன் அவரை தம் அவையில் ஒரு பெரும் பதவி தந்து அமர்த்திக் கொண்டான். அவருக்கு முராஹூம் என்ற ஒரு சகோதரர் இருந்தார். அவரின் மகள்தான் ஆசியா அம்மையார். இந்த அம்மையார் மிகவும் அழகானவர்கள். இறைதியானத்தில் சிறந்து விளங்கினார். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அத்தை முறையாக இருந்தார்கள். இவரது பேரழகைக் கேள்விப்பட்ட பிர்அவ்ன் இவரை தம் மனைவியாக்க விருப்பப்பட்டான். ஆனால் ஆசியா அம்மையாருக்கு அவனை பிடிக்கவில்லை. ஆனாலும் அவரது விருப்பத்திற்கு மாறாக பிர்அவ்னுடன் திருமணம் நடந்தேறியது.

பிர்அவ்னுக்கும், ஆசியா அம்மையாருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையும் நோயாளியாகவே இருந்து பெரியவளானதும் குஷ்டரோகியாக மாறிவிட்டது.

ஆசியா அம்மையார் பிர்அவ்னின் உறவிலிருந்து விலகியிருக்க விரும்பி ஆண்டவிடம் துஆ கேட்டார்கள். அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்றுக் கொண்டான். அவன் ஆசியா அம்மையாரை உறவு கொள்ள நினைக்கும்போது அவனுக்கு ஆண்மை இழந்து விடும். எனவே அந்த அம்மையாரை கண்களால் பார்த்து ரசித்தவாறே காலம் கடத்தி வந்தான்.

பிர்அவ்னுக்கு கெட்ட கெட்ட கனவுகள் வந்து கொண்டிருந்தன. தம் நாட்டிலுள்ள ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும் கலந்து இதற்கு விளக்கம் கேட்டான். அவர்கள் தங்கள் தேவதைகளிடம் கேட்டதில் இன்ன தேதியில், இன்ன நேரத்தில் பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் ஓர்ஆண் குழந்தை தரிக்கப் போகிறது. அந்தக் குழந்தை பெரியவனாகி பிர்அவ்னையும், அவனது ஆட்சியையும், கிப்தி சமுதாயத்தையும் பூண்டோடு அழித்து விடும். கர்ப்பம் தரிக்கப்படும் இரவு வெள்ளி இரவாகும் என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட பிர்அவன் நிலை குலைந்து போனான். இறுதியாக பனீ இஸ்ராயீல்களுக்கு பிறக்கு ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்று தீர்க்கும் முடிவுக்கு வந்தான். இதன் காரணமாக 12000 நிறைமாத கர்ப்பிணிகள் கொல்லப்பட்டனரென்றும்> சுமார் 90000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. இச்சமயத்தில் பிளேக் நோய் ஏற்பட்டு பனீ இஸ்ராயீல்கள் அழிந்து போயினர். இவ்வாறு அவர்கள் அழிந்து பட்டால் தங்களுக்கு ஊழியம் செய்ய யாருமில்லாமல் போய் விடுவார்கள் என்று எண்ணி கிப்தியர்கள், பிர்அவ்னிடம் முறையிட்டார்கள். அவனும் ஜோசியர்களை கலந்து ஆலோசித்து குழந்தை எப்போது பிறக்கும் என்று கேட்டான். அவர்களும் கணக்குப் போட்டு பார்த்து விட்டு சுமார் 3 ஆண்டுகளுக்குள் குழந்தை பிறக்கலாம் என்றனர். இதனால்  6 மாத காலத்;தில் ;பிறக்கும் ஆண் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்றும்> அடுத்த 6 ஆறுமாத காலத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளை விட்டு வைக்க வேண்டும் என்று பிர்அவ்ன் உத்தரவிட்டான்.

இவ்வாறு விட்டு வைக்கப்பட்ட ஆறு மாத காலக் கெடுவில்தான் இம்ரானுக்கு ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. இம்ரானுக்கு மர்யம் எள்ற பெயருடன் ஒரு பெண் மகவும் இருந்தார். பிர்அவ்னுடைய விசேச பணியாளர்களில் இம்ரானும் ஒருவராக இருந்தார். இம்ரான் பனீஇஸ்ராயீலைச் சார்ந்தவர் என்பது பிர்அவ்னுக்குத் தெரியாது.

இம்ரான் ஹழ்ரத் யகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குமாரர் லாவாவின் வழிவந்தவர் என்றும், ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது ஏழாவது தலைமுறையில் வந்தவர்கள் என்றும் தெரிகிறது.

ஃபிர்அவ்னையும், அவனது ஆட்சியையும் ஒழித்துக் கட்டப்போகும் குழந்தை இன்று இரவு தரிக்கப் போகிறது என்ற செய்தி குறிகாரர்கள் மூலம் பிர்அவ்னுக்குத் தெரியவந்தபோது, அன்றிரவு நகரிலுள்ள அத்தனை ஆண்களையும் நகரை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும், யாராவது ஒரு ஆண் வீட்டில் தங்கினாலும் கூட சிரச் சேதம் செய்யப்படுவார் என்றும் நகரெங்கும் பறைசாற்றி அறிவிக்க கட்டளையிட்டான். இம்ரானை அழைத்து> அவரை அரண்மனையின் பிரதான வாயில்படி முன் காவல் காக்க கட்டளையிட்டான் பிர்அவ்ன்.

தம் கணவரிடம் முக்கியமான விசயத்தை தெரிவிக்க இம்ரானின் மனைவி யூகானிதா அவரைத் தேடிக் கொண்டு அரண்மனைக்கு வந்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையால் இருவருக்கும் விரகதாபம் ஏற்பட்டு உறவு வைத்தனர் அல்லாஹ்வின் நாட்டப்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாயின் கர்ப்பத்தில் வந்து விட்டார்கள்.

குறிகாரர்களுக்கும், ஜோதிடர்களுக்கும்  தாயின் வயிற்றில் மூஸா அலைஹிஸ்ஸலாம் வந்தது தெரியவந்தது. அதை பிர்அவ்னிடம் சொன்னார்கள். கோபத்தின் உச்சிக்கே சென்ற அவன் அன்றிலிருந்து ஒருவருடம் பிறக்கும் குழந்தைகளை கொல்ல உத்தரவிட்டான். வீடு வீடாக சென்று பரிசோதிக்கவும் கட்டளையிட்டான். இம்ரான் பிர்அவ்னின் ஊழியராக இருந்ததால் யாரும் அவரை சந்தேகிக்கவில்லை. அவர் வீட்டை சோதிக்கவும் இல்லை.

இறுதியாக யூகானிதா ரமலான் பிறை 22 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். யூகானிதாவின் சகோதரியே அருகிலிருந்து அவருக்கு உதவி செய்தார். குழந்தையின் அழகு காண்போரை சொக்க வைத்தது. அது பிறந்ததேதி பிர்அவ்னுக்கு தெரிந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைக்கும்போது அவருக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

இம்ரானுடைய மனைவிக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது என்ற செய்தி எப்படியோ பிர்அவ்னுடைய சிப்பாய்களுக்கு தெரிந்து அவர் வீட்டை சோதனையிட உள்ளே நுழைந்தனர்.

இதற்கிடையில் தம் வீட்டை சோதனையிடப் போகிறார்கள் என்றதும்> அந்த குழந்தையை ஒரு பானைக்குள் போட்டு வைத்தார்கள். அப்பானை தீப்பற்றி எரியும் அடுப்பில் இருந்தது. சிப்பாய்கள் பல இடங்களிலும் தேடிப்பார்த்து விட்டு குழந்தை இல்லை என்றதும் போய் விட்டார்கள். பின்னர் குழந்தை இருந்த பானையை பார்த்தபோது குழந்தை கை, கால்கைள ஆட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்து கண்டு மிகவும் சந்தோசமுற்றார்கள். ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்து 40 நாட்கள் ஆயின. யூகானிதாவுக்கு வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது. ‘குழந்தையை பாலூட்டி நல்லவிதமாக வளர்த்து வரவும். அதன் உயிருக்கு யாராலும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது. அவ்வாறு குழந்தையை பாதுகாப்பதில் அச்சம் ஏற்பட்டால் அக்குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நைல்நதியில் விட்டுவிடவும். சில நாட்களுக்குப் பின் அக்குழந்தை உம்மிடமே வந்து சேரும்’ என்று.

யூகானிதா கிஜ்பீலு என்ற தச்சரை அணுகி ஒரு பெட்டி தயார் செய்து அதில் குழந்தையை வைத்து நைல்நதியில் விட்டாள். இந்த கிஜ்பீலு மூஸா நபியை விசுவாசித்த முதல் முஸ்லிம் ஆவார். அந்த பெட்டி போகும் திசையை தம் மகள் மர்யம் மூலம் அறிய ஏற்பாடு செய்தாள். அப்பெட்டி மிதந்து கொண்டு சென்று பிர்அவ்னின் அரண்மனைக்கு அருகிலிருந்த கரையில் ஒதுங்கியது. அச்சமயம் பிர்அவ்ன், ஆசியா அம்மையார், அவள் மகள் ஆகியோர் அங்கிருந்தனர். மரப்பெட்டியைக் கண்ட அவள் மகள் அதிலிருந்த குழந்தையை எடுத்து தம் மார்போடு அணைத்துக் கொண்டாள். அதனால் அவளைப் பீடித்துக் கொண்டிருந்த குஷ்ட நோய் முற்றிலும் குணமானது.

இந்த அற்புதத்தைக் கண்ட பிர்அவ்னும், ஆசியாவும் மிகவும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். குழந்தை பிர்அவ்னிடம் சேர்ந்ததும் அதை யூகானிதாவின் மகள் மர்யம் தம் தாயிடம் சொன்னாள். அதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

அல்லாஹ் இதைத் தன் திருமறையில்…

فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا ۗ إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ

28:8. (நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும்,ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.

وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّي وَلَكَ ۖ لَا تَقْتُلُوهُ عَسَىٰ أَن يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ

28:9. இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது – இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.

وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَارِغًا ۖ إِن كَادَتْ لَتُبْدِي بِهِ لَوْلَا أَن رَّبَطْنَا عَلَىٰ قَلْبِهَا لِتَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ

28:10. மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால்> அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.

وَقَالَتْ لِأُخْتِهِ قُصِّيهِ ۖ فَبَصُرَتْ بِهِ عَن جُنُبٍ وَهُمْ لَا يَشْعُرُونَ

28:11. இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.

وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِن قَبْلُ فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ أَهْلِ بَيْتٍ يَكْفُلُونَهُ لَكُمْ وَهُمْ لَهُ نَاصِحُونَ

28:12. நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: “உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.”

என்று அல்-குர்ஆன் 28: 8-12 ல் குறிப்பிட்டுள்ளான்.

குழந்தை மரப்பெட்டியில் வைத்து வந்ததால் மூஷா என்று பெயர் வைத்தார்கள் ஆசியா அம்மையார். ஹீப்ரு மொழியில் ‘மூ’ என்றால், தண்ணீர் என்று பொருள். ‘ஷா’ என்றால் மரம் என்று பொருள். அறபி மொழியில் மூஷா என்ற பெயர் மருவி மூஸா என்று ஆகிவிட்டதாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

குழந்தைக்குப் பாலூட்ட செவிலித்தாயை ஏற்பாடு செய்ய நினைத்தான் பிர்அவ்ன். இறுதியில் மூஸா நபியின் தாயாரே அந்த செவிலித்தாயாக வந்து சேர்ந்தார்கள்.

إِذْ أَوْحَيْنَا إِلَىٰ أُمِّكَ مَا يُوحَىٰ

20:38. “உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!

أَنِ اقْذِفِيهِ فِي التَّابُوتِ فَاقْذِفِيهِ فِي الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِّي وَعَدُوٌّ لَّهُ ۚ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِي

20:39. அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.

إِذْ تَمْشِي أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَن يَكْفُلُهُ ۖ فَرَجَعْنَاكَ إِلَىٰ أُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِي أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍ يَا مُوسَىٰ

20:40. (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.

இதை அல்லாஹ் அல்குர்ஆன் 20:38-40 ல் கூறுகிறான்.

இரண்டு வருடங்கள் போனபின், பிர்அவ்னின் மடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிர்அவ்னின் தாடியைப் பிடித்து இழுத்ததோடு, அவனது கன்னத்தில் அறைந்தும் விட்டது. இதனால் கடும் கோபம் கொண்டான். குழந்தையை கொல்ல நினைத்தான். ஆனால் குழந்தைதானே. அதற்கு என்ன தெரியப் போகிறது என்று சொல்லி மின்னும் மாணிக்கத்தையும், ஜொலிக்கும் நெருப்புக் கங்குகளையும் அருகருகே குழந்தை முன் வைத்தாள். அக்குழந்தை தவழ்ந்து சென்று தனது கையை மாணிக்கம் வைக்கப்பட்டிருந்த பக்கம் கொண்டு சென்றது. ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தக் கையை நெருப்புக் கங்கின் மீது திருப்பிவிட்டார்கள். குழந்தை அதை எடுத்து தம் வாயில் போட்டு விட்டது. கையும் வெந்து, நாக்கும் வெந்து போனது. அதனால்தான் மூஸா நபி அவர்களுக்கு கொன்னல் ஏற்பட்டது. பிர்அவ்ன் எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அவனால் அந்த நோயைக் குணமாக்க முடியவில்லை.

இருபது வயது கொண்ட வாலிபராக மூஸா நபி இருக்கும்போது ஒரு வீதி வழியே நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.  அப்போது கிப்தி இனத்தைச் சார்ந்த கலான் என்பவனுக்கும், பனீ இஸ்ராயீல் இனத்தைச் சார்ந்த ஸாமிரிக்கும் வாய்ச்சண்டை ஆரம்பமாகி கைச் சண்டையாக மாறிக் கொண்டிருந்தது.

இருவரின் சண்டடை அவ்வழியே சென்று கொண்டிருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் வந்தது. கலான் பனீ இஸ்ராயீலுக்காக பரிந்து பேச வந்துவிட்டதாக சொல்லி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தள்ளி விட்டான். ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. அந்தக் கலானை நோக்கி ஒரு குத்து விட்டார்கள். அவ்வளவுதான். அந்தக் குத்தை தாங்கமாட்டாது அவன் அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போனான். இதை சற்றும் எதிர்பாராத மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டார்கள். இவ்விஷயம் யாருக்கும் தெரியாது.

மறுநாள் வேறொரு வழியாக மூஸா நபி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்படிப் போகும்போது ஸாமிரி மற்றொரு கிப்தியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அதை விலக்கப் போன மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயந்து ஸாமிரி அலறி அடித்துக் கொண்டு நேற்று நடந்த விபரீதம் யாரால் நடந்தது என்பதை சப்தமிட்டுக் கொண்டே தெரியப்படுத்திக் கொண்டு ஓடஆரம்பித்தான். இது பிர்அவ்னுக்கும் தெரியவந்தது.

இதனைக் குறித்து அல்லாஹ் தனது திருமறையில்…

وَدَخَلَ الْمَدِينَةَ عَلَىٰ حِينِ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَٰذَا مِن شِيعَتِهِ وَهَٰذَا مِنْ عَدُوِّهِ ۖ فَاسْتَغَاثَهُ الَّذِي مِن شِيعَتِهِ عَلَى الَّذِي مِنْ عَدُوِّهِ فَوَكَزَهُ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيْهِ ۖ قَالَ هَٰذَا مِنْ عَمَلِ الشَّيْطَانِ ۖ إِنَّهُ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِينٌ

28:15. (ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் – மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.

قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

28:16. “என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் – நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.

قَالَ رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ

28:17. “என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

فَأَصْبَحَ فِي الْمَدِينَةِ خَائِفًا يَتَرَقَّبُ فَإِذَا الَّذِي اسْتَنصَرَهُ بِالْأَمْسِ يَسْتَصْرِخُهُ ۚ قَالَ لَهُ مُوسَىٰ إِنَّكَ لَغَوِيٌّ مُّبِينٌ

28:18. மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.

فَلَمَّا أَنْ أَرَادَ أَن يَبْطِشَ بِالَّذِي هُوَ عَدُوٌّ لَّهُمَا قَالَ يَا مُوسَىٰ أَتُرِيدُ أَن تَقْتُلَنِي كَمَا قَتَلْتَ نَفْسًا بِالْأَمْسِ ۖ إِن تُرِيدُ إِلَّا أَن تَكُونَ جَبَّارًا فِي الْأَرْضِ وَمَا تُرِيدُ أَن تَكُونَ مِنَ الْمُصْلِحِينَ

28:19. பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.

وَجَاءَ رَجُلٌ مِّنْ أَقْصَى الْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَا مُوسَىٰ إِنَّ الْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَاخْرُجْ إِنِّي لَكَ مِنَ النَّاصِحِينَ

28:20. பின்னர்> நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.

فَخَرَجَ مِنْهَا خَائِفًا يَتَرَقَّبُ ۖ قَالَ رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

28:21. ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.

-அல்குர்ஆன் 28:15-21

பிர்அவ்ன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தைப் பருவம் முதல் என்னென்ன செய்தார்கள் என்பதை தொகுத்துப் பார்த்து> மற்ற பிரதானிகளையும் கலந்து ஆலோசித்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சிரச்சேதம் செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்தான். இதை கிஜ்பீலுதான் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முதன்முதலில் தகவல் அறிவித்தார்.

ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி அவர்கள் முன் தோன்றி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து மத்யன் செல்லுமாறு சொன்னார்கள். உடனே எகிப்து நாட்டிலிருந்து மத்யனுக்கு கால்நடைப் பயணமாக புறப்பட்டார்கள். ஒன்பதாம் நாள் மத்யன் நகரின் எல்லையை அவர்கள் தொட்டார்கள். அங்கு ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, இரு பெண்களுக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்தார்கள்.

அந்த இருப் பெண்களின் பெயர்கள் ஸயா, ஸபூரா ஆகும். அவர்கள் இருவர்களும் ஹழ்ரத் ஷுஐப் நபி அவர்களின் மக்களாவார்கள். ஷுஐப் நபி அவர்கள் கண் பார்வையை இழந்திருந்தார்கள். தம் மக்கள் வழக்கத்திற்கு மாறாக முற்கூட்டியே வீடு வந்து சேர்ந்ததற்கு காரணம் கேட்டார்கள். அங்கு நடைபெற்றதை தம் தந்தையிடம் அவ்விருவரும் சொன்னார்கள். உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வரும்படி தம் மக்களிடம் ஷுஐப் நபி அவர்கள் சொன்னார்கள்.

மக்கள் மூஸா நபி அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்று அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். ஷுஐப் நபி அவர்கள் மூஸா நபியை விசாரித்தார்கள். மூஸா நபி அவர்கள் தங்களுடைய விசயங்களை ஆரம்பம் முதல் விவரித்து சொன்னார்கள்.

தங்களுடைய ஆடுகளை மேய்ப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸாம் அவர்களை நியமித்து, தம் மகளில் ஒருவரை திருமணம் முடித்துக் கொடுப்பதாகவும் அதற்கு மகராக எட்டாண்டுகள் ஆடுகளை மேய்க்கும்படி சொன்னார்கள். இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில்…

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَىٰ رَبِّي أَن يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ

28:22. பின்னர்> அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்” என்று கூறினார்.

وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ ۖ قَالَ مَا خَطْبُكُمَا ۖ قَالَتَا لَا نَسْقِي حَتَّىٰ يُصْدِرَ الرِّعَاءُ ۖ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ

28:23. இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர,பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது – மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.

فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰ إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

28:24. ஆகையால்> அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார்.

فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ أَجْرَ مَا سَقَيْتَ لَنَا ۚ فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ ۖ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

28:25. (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.

قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ ۖ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ

28:26. அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”

قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَىٰ أَن تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ ۖ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِندِكَ ۖ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ ۚ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ

28:27. (அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் – ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”

قَالَ ذَٰلِكَ بَيْنِي وَبَيْنَكَ ۖ أَيَّمَا الْأَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَيَّ ۖ وَاللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌ

28:28. (அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை – நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.

-அல்-குர்ஆன் 28:22-28

தப்ஸீர் ஐனுல் மஆனி யில், கஸஸ் அத்தியாயத்தின் விளக்கவுரையில், ‘ஆடுகளை மேய்ப்பதற்காக ஹழ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு கைத்தடியைக் கொடுத்தார்கள். இந்தக் கைத்தடி ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயரத்திற்குச் சமமாகப் பத்தடி நீட்டமிருந்தது. அதன் மேல் பாகத்தின் நுனியில் இரு கிளையாகப் பிரிந்திருந்தது. இக்கைத்தடிக்கு 18 விசேச சிறப்புகளிருந்தன. இதை ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். ஒவ்வொரு நபியின் கைக்கும் மாறிமாறி இறுதியாக இது ஹழ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து, இப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வசம் வந்து விட்டது.’

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இக்கைத்தடி மிகவும் உதவி புரிந்ததாக வரலாற்றில் காணக்கிடக்கிறது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மத்யன் வந்து 8 வருடங்கள் கழித்து ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூத்த மகளான ஹழ்ரத் ஸபூராவுடன் ஒரு வெள்ளிக்கிமை திருமணம் நடைபெற்றது.

தங்கள் குடும்பத்தாரை எகிப்து சென்று பார்க்கும் ஆசை மூஸா நபி அவர்களுக்கு ஏற்பட்டது. ஹழ்ரத் சுஐபு நபி அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். ஷுஐப் நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதை அறிந்து தம்முடைய கண் பார்வைக்காக துஆ செய்யும்படி கேட்டார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள் நீங்கள் துஆ செய்யுங்கள். நான் ஆமீன் கூறுகிறேன் என்று சொன்னார்கள். அவ்வாறு ஷுஐப் நபி அவர்கள் துஆ கேட்க மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆமீன் கூற ஷுஐப் நபி அவர்களுக்கு பார்வை கிடைத்து விட்டது. அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திக் கொண்டார்கள் நபி சுஐபு அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸபூரா அம்மையாருடன்  மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்து புறப்பட்டார்கள். துவா என்ற பள்ளத்தாக்கை கடந்து கொண்டிருக்கும்போது ஸஃபூரா அம்மையாருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. அன்று துல்கஃதா பிறை 18 வெள்ளிக்கிழமை இரவு எங்கும் ஒரே இருட்டு. மழையும் பெய்து கொண்டிருந்தது. ஸபூரா அம்மையார் குளிரில் நடுங்க ஆரம்பித்தார்கள். சக்கிமுக்கி கல்லை எடுத்து நெருப்பை மூட்ட முயற்சித்தார்கள். அதிலிருந்து தீ வரவில்லை. வேறெங்கும் வெளிச்சம் தெரிகிறதா?என்று பார்து வர சென்றார்கள். தூர்ஸீனாய் மலைப்பக்கம் அவர்களுக்கு நெருப்பு காணப்பட்டது. மனைவியையும், பணியாட்களையும் அங்கேயே வைத்துவிட்டு தாம் மட்டும் விரைந்து சென்றார்கள்.

அங்கு அல்லாஹ்வுடன் மூஸா அலைஹிஸ்ஸலாம்; அவர்கள் வசனித்தார்கள். இதைப் பற்றி அல்லாஹ் கூறும்போது…

إِذْ رَأَىٰ نَارًا فَقَالَ لِأَهْلِهِ امْكُثُوا إِنِّي آنَسْتُ نَارًا لَّعَلِّي آتِيكُم مِّنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى النَّارِ هُدًى

20:10. அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).

فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَىٰ

20:11. அவர் (நெருப்பின்) அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.

إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ ۖ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى

20:12. “நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَىٰ

20:13. இன்னும் “நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.

إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي

20:14. “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.

إِنَّ السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَىٰ

20:15. “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.

فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَن لَّا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوَاهُ فَتَرْدَىٰ

20:16. “ஆகவே> அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.

وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰ

20:17. “மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)

20:18   قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَىٰ

20:18. (அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.

قَالَ أَلْقِهَا يَا مُوسَىٰ  . فَأَلْقَاهَا فَإِذَا هِيَ حَيَّةٌ تَسْعَىٰ .

20:19. அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.

20:20. அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.

قَالَ خُذْهَا وَلَا تَخَفْ ۖ سَنُعِيدُهَا سِيرَتَهَا الْأُولَىٰ. وَاضْمُمْ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آيَةً أُخْرَىٰ . لِنُرِيَكَ مِنْ آيَاتِنَا الْكُبْرَى . اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ . قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي . وَيَسِّرْ لِي أَمْرِي . وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي. يَفْقَهُوا قَوْلِي . وَاجْعَل لِّي وَزِيرًا مِّنْ أَهْلِي . هَارُونَ أَخِي . اشْدُدْ بِهِ أَزْرِي . وَأَشْرِكْهُ فِي أَمْرِي .

20:21. (இறைவன்) கூறினான்: “அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.”

20:22. “இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும்; அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இது மற்றோர் அத்தாட்சியாகும்.

20:23. “(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.

20:24. “ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்” (என்றும் அல்லாஹ் கூறினான்).

20:25. (அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!

20:26. “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!

20:27. “என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!

20:28. “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!

20:29. “என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!

20:30. “என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!

20:31. “அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!

20:32. “என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!

அல்-குர்ஆன் 20:10-32

எகிப்து சென்று பிர்அவ்னுக்கு இஸ்லாத்தைப் போதிக்கும் படி சொன்னான். அதேபோல் அவர்கள் வைத்திருந்த கைத்தடியை கொண்டு அற்புதம் நிகழ்த்தும் சக்தியை அல்லாஹ் கொடுத்தான். மலையிலிருந்து திரும்பி வந்தபோது மலையில் நடந்த விசயத்தை தம் மனைவியிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னபோது, ‘என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து உடனே எகிப்து செல்ல ஆயத்தமாகுங்கள்’ என்று விடைகொடுத்து அனுப்பினார்கள்.

மிகவும் சிரமப்பட்டு தங்கள் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை இம்ரான் காலமாகிவிட்டிருந்தார்கள். சில நேரம் கழித்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து வந்தவர் தமது மகன் மூஸாதான் என்று அவரது தாயார் யூகானிதா அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்களது சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தம் சகோதரரை அறிந்து கொண்டார்கள். அவர்களிடம் நடந்த அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொன்னார்கள்.

அல்லாஹ் தமக்கு நபித்துவம் அளித்து பிர்அவ்னை சந்தித்து உபதேசிக்க சொன்னதையும் விபரமாக சொன்னார்கள். இதைக் கேட்ட தாயாருக்கு சந்தோஷம் ஏற்பட்டு அல்லாஹ்வுக்கு பலமுறை சஜ்தா செய்தார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வுக்கு சிரம் தாழ்த்தி நன்றி செலுத்திக் கொண்டார்கள்.

தற்போதைய பிர்அவ்னின் கொடுங்கோன்மையை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொன்னார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்> மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பிர்அவ்னுடைய  அரண்மனையைச் சென்றடையும் போது, இரவு நேரமாயிருந்தது. தாங்கள் வந்திருப்பதை வாயிற்காவலனிடம் சொல்லி அனுப்பினார்கள். நீண்ட நேரம் கழித்தபின் ஒரு சேவகன் வந்து அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான்.

அங்கு அவர்களிருவரும் ‘நாங்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள். உமக்கு புத்திக் கூறி நேர்வழிப்படுத்துமாறு அல்லாஹ் எங்களிருவரையும் ஏவியுள்ளான். நீர் உம்மை இறைவன் என்று கூறுவதைவிட்டு> அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி> உம்மையும் எங்களையும்> அண்டசாரங்களையும் அத்தனையும் படைத்துப் பாதுகாத்து வரும் அந்தச் சர்வலோக இரட்சகன்பால் உமது முகத்தை திருப்பிக் கொள்ளும். எங்களுடைய இந்த நல்லுபதேசத்தை செயல்படுத்தவில்லையானால் இம்மை> மறுமையில் கடுமையான தண்டனையை அல்லாஹ் கொடுத்து விடுவான்’ என்று கூறினார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அடையாளம் கண்டு கொண்ட பிர்அவ்ன், நீர் அல்லாஹ்வின் தூதர் என்பதை நான் எப்படி நம்புவது? என்று கேட்டான். உடனே ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் வசமிருந்த தமது கைத்தடியைக் கீழே போட்டார்கள். அது பச்சை நிறத்தில் ஆண் பாம்பாக பயங்கர உருவெடுத்து விட்டது. அதன் முதுகில் கறுப்பு அம்பு போன்ற நீண்ட முடிகள் காணப்பட்டன. சபையிலிருந்த அத்தனைப் பேரும் அலறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார்கள். தாறுமாறாக ஓடிய அவனது ஆட்களில் பலர் மிதிபட்டே இறந்து போனார்கள். ஓ மூஸாவே! உமது பாம்பை பிடித்துக் கொள்ளும் என்று பிர்அவ்ன் அலறினான்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாம்பின் தலை மீது கை வைத்தார்கள். அது பழைய நிலைக்கு வந்து கைத்தடியாகவே மாறிவிட்டது. வேறொரு அத்தாட்சியை காட்டும்படி பிர்அவ்ன் சொன்னான். தமது கையை சட்டைப் பைக்குள் விட்டு வெளியே எடுத்தார்கள். அந்தக் கரம் ஆயிரம் சந்திரனடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்க ஆரம்பித்தது. அந்த சபையிலுள்ள அத்தனைபேரும் அதனைக் கண்டு கண்கூசி மயங்கி விழுந்துவிட்டார்கள். இதனை அல்லாஹ் திருமறையில்….

وَقَالَ مُوسَىٰ يَا فِرْعَوْنُ إِنِّي رَسُولٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ

7:104. “ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.

حَقِيقٌ عَلَىٰ أَن لَّا أَقُولَ عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ ۚ قَدْ جِئْتُكُم بِبَيِّنَةٍ مِّن رَّبِّكُمْ فَأَرْسِلْ مَعِيَ بَنِي إِسْرَائِيلَ

7:105. “அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் – ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).

قَالَ إِن كُنتَ جِئْتَ بِآيَةٍ فَأْتِ بِهَا إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ

7:106. அதற்கு அவன்> “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் – நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.

فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُّبِينٌ

7:107. அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் – உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.

– அல்-குர்ஆன் 7:104-108

இப்போதாவது எங்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்வாயா! என்று மூஸா நபி கேட்டார்கள்.

சிறிது யோசனையில் ஆழ்ந்த பிர்அவ்ன் அவ்வாறு ஏற்றுக் கொண்டால் அல்லாஹ் எனக்கு என்ன தருவான்?’ என்று கேட்டான்.

அவ்வாறு நீர் ஒப்புக்கொண்டால் உனக்கு நிரந்தர வாலிப வயதை அளித்து விடுவான். அடுத்து உமக்கு சக்திமிக்க அரசாங்கத்தை கொடுப்பான். மூன்றாவதாக உமக்கு என்றுமே நோய் அண்டாது. நல்ல திடகாத்திரத்துடன் வாழ்ந்து வருவீர்கள். நான்காவது உமக்கு இன்பம் கொழிக்கும் சுவனவாழ்வு கிடைக்கும் என்றார்கள்.

ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பேச்சைக் கேட்டதும் அவர்கள் பேரிலும், அல்லாஹ் பேரிலும் விசுவாசம் கொள்ளலாமா? என்று ஆசை பிறந்தது. முதுமையுடன் வாழ அவன் விரும்பவில்லை. விசுவாசம் கொண்டபின், அல்லாஹ் தன்னை ஏமாற்றிவிட்டால், இப்படியொரு சந்தேகம் பிர்அவ்னை அலைக்கழித்தது. நான் எனது மந்திரிகளுடன் ஆலோசனை செய்து சொல்கிறேன் என்று சொல்லி ஆசியா அம்மையாரிடம் வந்து நடந்த விசயத்தை விபரித்து சொன்னான்.

உடனே ஆசியா அம்மையார் மகிழ்ச்சியடைந்து, ‘இது மிகவும் அருமையான விசயமாயிற்றே. உடனே நீங்கள் மூஸாவின் கூற்றுப்படி நடந்து கொள்ளுங்கள். இப்படியொரு சந்தர்ப்பம் நமக்கு மீண்டும் கிடைப்பது அரிது’ என்றார்கள்.

தனது பிரதம மந்திரி ஹாமானை கலந்து ஆலோசித்த பிர்அவ்ன், மன்னாதி மன்னா சக்திபடைத்த மன்னராகிய நீங்கள் சாதாரண மூஸாவிடம் சரணடைவதா? காலையில் எழுந்தவுடன் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் என்றான்.

அன்றிரவு பிர்அவ்ன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவனின் முடிக்கு கறுப்புசாயத்தை ஹாமான் பூசச் செய்துவிட்டான். உலகில் முதன்முதலில் ரோமத்திற்கு கறுப்பு சாயம் பூசிக் கொண்டது பிர்அவ்ன்தான்.

காலையில் எழுந்தவுடன் பிர்அவ்ன் தம் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். தனக்கு இளமை திரும்பி விட்டதாக எண்ணினான்.

ஹாமானின் பேச்சை கேட்டு மூஸா செய்து காட்டிய சூனியத்தைப் போல நாமும் சூனியம் செய்து காட்டி, அவரைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்ய நாட்டிலுள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினான். சுமார் 70 அல்லது 80 ஆயிரம் சூனியக்காரர்கள் பிர்அவ்னுடைய அரண்மனையை நோக்கி வந்து கூட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு நான்கு பேர் தலைமை தாங்கி நின்றார்கள். அவர்கள் முன் சூனியக்காரர்கள் தங்கள் சூனியங்களை செய்தனர். ஆனால் அல்லாஹ் மூஸா நபி அவர்களுக்கு கொடுத்த அற்புதத்தினால் அவை அனைத்தையும் அவர்கள் வென்றார்கள். சூனியக்காரர்கள் அனைவரும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது விசுவாசம் கொண்டு அல்லாஹ்விற்கு அடிபணிந்து முஸ்லிமானார்கள். அதை அல்லாஹ் தனது வேதத்தில்….

قَالَ الْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَٰذَا لَسَاحِرٌ عَلِيمٌ

7:109. ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.

يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُمْ ۖ فَمَاذَا تَأْمُرُونَ . قَالُوا أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ . يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ . وَجَاءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ . قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِينَ  .

7:110. (அதற்கு> ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)

7:111. அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!

7:112. “அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.

7:113. அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால்> நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.

7:114. அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”

قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَّكُونَ نَحْنُ الْمُلْقِينَ . قَالَ أَلْقُوا ۖ فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ  . وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ . فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ . فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ . وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ . قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ . رَبِّ مُوسَىٰ وَهَارُونَ .

7:115. “மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

7:116. அதற்கு (மூஸா). “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.

7:117. அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.

7:118. இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.

7:119. அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.

7:120. அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து:

7:121. “அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;

7:122. “அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.

அல்குர்ஆன் 7:109-122

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 72 கிப்திகள் உட்பட சுமார் ஆறு இலட்சம் பேர் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது விசுவாசம் கொண்டு முஸ்லிம்களாகி விட்டதாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், முஸ்லிம்களின் பெருக்கம் அதிகமாகி விட்டதால் கடைவீதிகளிலும், தெருக்களிலும் வணங்குவதற்கு வணக்கவழிபாட்ட இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கிஜ்பீல் மூஸா நபிக்கு உதவி செய்தார். இதனை அறிந்த பிர்அவ்ன் அந்தவழிபாட்டுக் கூடங்களை இடிக்க உத்தரவிட்டான். கிஜ்பீலை சிரச்சேதம் செய்யவும் கட்டளையிட்டான். கிஜ்பீல் அங்கிருந்து தப்பி ஒரு குகையில் பதுங்கிக் கொண்டார்.

பகிரங்கமாக அல்லாஹ்வை வழிப்படுவது ஆபத்தாகி விட்டதால், தத்தம் வீடுகளிலேயே இரகசியமாகத் தொழுது வருமாறு அல்லாஹ்வின் உத்தரவு வந்தது. அதன்படியே முஸ்லிம்கள் தொழுது வந்தனர்.

கடும் கோபத்திலிருந்த பிர்அவ்ன் பனீ இஸ்ரவேலர்களையும், மூஸா நபி மீது விசுவாசம் கொண்ட கிப்தியர்களையும் சொல்லொண்ணாத் துன்பம் கொடுக்க ஆரம்பித்தான். இதில் அவன் மனைவி ஆசியா அம்மையாரும் கொடுமைக்கு ஆளானார்கள். பிர்அவ்ன் மீது தண்டனை விதிக்க அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு பனீ இஸ்ரவேலர்கள் மூஸா நபி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக இறக்கினான். 1. பஞ்சத்தை கொடுத்தான். 2. மழை, காற்றை அதிகப்படுத்தி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினான். 3. வெட்டுக்கிளிகளைப் படையாக அனுப்பி அவர்களை இம்சித்தான். 4. தவளைக் கூட்டங்களை ஏவி தொல்லைக் கொடுத்தான். 5. பேன்களை ஏவி அவர்களை சித்திரவதை செய்தான். 6. தண்ணீரை இரத்தமாக மாற்றி அவர்களை கதிகலங்கச் செய்தான். 7. சிலநாட்கள் தொடர்ந்து சூரியன் உதிக்காதபடி செய்து அவர்களைத் திக்குமுக்காடச் செய்தான். 8. மூன்று தினங்கள் வரைத் தொடர்ந்து மண் மாரி பொழியச் செய்து> அவர்களை மண் குவியல்களில் மூழ்கடித்தான். 9. ஒவ்வொரு வீட்டிலும் தலைக் குழந்தைகளை இறக்கச் செய்தான். இவ்வேதனை பிர்அவ்னை ஆதரிக்கும் மக்களுக்கு மட்டுமே ஏற்பட்டது.

இத்தனை வேதனைகள் இறக்கப்பட்ட பின்னரும் பிர்அவ்ன் மாறியிருப்பான் என்று எண்ணிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிர்அவ்னிடம் வந்து முஸ்லிமாகிவிட உபதேசம் புரிந்தார்கள்.

ஆனால் அவன் அல்லாஹ்வை காணப் போகிறேன் என்று சொல்லி ஹாமானிடம் ஒரு உயரமான கோபுரத்தை கட்டச் சொல்லி அதில் ஏறி மூஸாவுடைய அல்லாஹ்வை கண்டுபிடித்து அவனை ஒழித்துக் கட்டிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று சொன்னான். இந்தக் கோபுரம் கட்டும் பணியில் ஐம்பதாயிரம் கொத்தனார்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஏழாண்டுகள் இந்தப் பணி நடைபெற்றது. சுமார் 20 ஆயிரம் அடி இருந்தது என்றும் 10 ஆயிரம் அடி இருந்தது என்றும் இருகூற்றுகள் உள்ளன.

ஹாமானை அழைத்துக் கொண்டு கோபுரத்தின் மேல் ஏறிப் பார்த்து மூஸாவின் அல்லாஹ்வை நெருங்கி விட்டதாக பெருமை பட்டுக்கொண்டான். அங்கிருந்து விஷம் தோய்ந்த அம்மை எய்தான். அவை திரும்ப இரத்தக் கறையுடன் கீழே விழுந்தன.

ஒரு தப்ஸீரில் இந்தக் கோபுரத்தின் ஒரு பகுதி படைவீரர்களின் பாசறை மீது விழுந்தது. மற்றொரு பகுதி நைல்நதி மீது விழுந்தது. பிறிதொரு பகுதி அந்தக் கோபுரத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கொத்தனார்கள் மீது விழுந்தது. அத்தனைப் பேர்களையும் உருத்தெரியாது அழித்;து விட்டது.

மூஸாவின் அல்லாஹ்வை கொன்றுவிட்டேன் என்று பிர்அவ்ன் ஆசியா அம்மையாரிடம் சொன்ன போது, ஆசியா அம்மையார் நகைத்து விட்டாhர்கள். மூஸா நபியையும், அவனது இறைவனையும் விசுவாசம் கொண்டதாக சொன்னார்கள். கோபம் கொண்ட பிர்அவ்ன் ஆசியா அம்மையாரை அரைகுறை ஆடையிலாக்கி முச்சந்தியில் நிறுத்தி ஆணியடித்து சித்திரவதை செய்தான்.

இந்நிலையில் அப்பக்கம் வந்த மூஸா நபி அவர்களிடம் இதை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா? என்று கேட்டார்கள். ஆம். என்றார்கள் மூஸா நபி. உம் விருப்பம் என்ன? என்று அல்லாஹ் கேட்கிறான் என்று கேட்டார்கள்.

எனக்கு சுவர்க்கத்தில் ஒரு  மாளிகையை அமைத்து தருவாயாக! பிர்அவ்னுடையதும், அவனுடைய கூட்டத்தை விட்டும் என்னை பாதுகாப்பாயக! என்று வான்பக்கம் நோக்கி பிரார்த்தித்தார்கள். வெண்முத்துக்களால் அமைக்கப்பட்ட மாளிகையை அல்லாஹ் அவர்களுக்கு காண்பித்தான். அதனைப் பார்த்து ஆசியா அம்மையார் கல கலவென்று சிரிக்க ஆரம்பித்தார்கள். பிர்அவ்ன் தம்மை அவர்கள் கேலி செய்கிறார்கள் என்று எண்ணி ஒரு பணியாளை அனுப்பி அவர்கள் மீது பெரிய கல்லை போடச் செய்தான். அக்கணமே அவர்கள் உயிர் பிரிந்து விட்டது.

மூஸா நபியின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதைப் பார்த்த பிர்அவன் அவர்களை ஒழிக்க பனீ இஸ்ரவேலர்களை கடும் கொடுமைக்கு ஆளாக்க உத்தவிட்டான். அக் கொடுமைகளைத் தாங்காத பனீ இஸ்ரவேலர்கள் மூஸா நபியிடம் நடந்ததை சொன்னார்கள்.

அல்லாஹ் கிப்திகள் மீது வேதனைகளை இறக்க ஆரம்பித்தான். அவ்வாறு வேதனை இறங்கும்போது, அவர்கள் மூஸா நபியிடம் வந்து அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சுமாறு கேட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் மீதும் விசுவாசம் கொள்வதாக வாக்குறுதி செய்தார்கள். ஆனால் அதற்கு மாறு செய்தார்கள்.

நீண்டகாலமாகவே மூஸா நபி அவர்கள் பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் திருத்த – நேர்வழிபடுத்த எவ்வளவோ நல்லுபதேசம் செய்து பார்த்தார்கள். எல்லாம் வீணாகிப் போயின. பிர்அவ்னின் அட்டகாசம் கூடிக்கொண்டேதான் போயிற்று. இறுதியாக அல்லாஹ்விடம் இருந்து அவர்களுக்கு இரவோடிரவாக எகிப்தை விட்டும் கிளம்பி கடல் வழியாக வெளியே சென்று விடுங்கள் என்று உத்திரவு வந்தது. பிர்அவனுக்கும் அவனது கூட்டத்தாருக்கும் வேதனை இறங்கப் போகிறது என்றும் அல்லாஹ் சொன்னான்.

எகிப்தை விட்டு வெளியேறும் குறிப்பிட்ட நாள் வந்தது. ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்;களின் உடலை எடுத்துக் கொண்டு நைல்நதியை கடந்து பனீஇஸ்ரவேலர்கள் அனைவருடனும்; எகிப்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வாறுபோகும்போது கடல் குறுக்கிட்டது. பின்னால் பிர்அவ்னின் படைகள் அவர்களைத் துரத்திக் கொண்டே வந்தது.

கடலை தம் கைத்தடியால் அடிக்கும்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹீ வந்தது. அவர்கள் அடித்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்து வழி விட்டது. அதில் மூஸா நபியும் அவர்கள் கூட்டத்தார்களும் நடந்து சென்றார்கள். பின்னால் துரத்திச் சென்ற பிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் அவ்வழியே போக முற்பட்டனர். நடுக்கடலுக்கு அருகில் சென்றதும் கடல் மூடிக் கொண்டது. அச்சமயத்தில் மூஸா நபி அவர்களின் கூட்டம் அக்கரையை அடைந்திருந்தது. அப்போது பிர்அவ்னும் அவனின் கூட்டத்தாரும் கடலில் மூழ்கி இறந்து போயினர். கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் இறுதித் தருவாயில் பிர்ஒளன் ஈமான் கொள்கிறேன் என்று கத்தினான். ஆனால் அவனது இறுதிநேர விசுவாசம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவன் மூழ்கடிக்கப்பட்டான். பிர்அவ்ன் இறக்கும்போது அவனுக்கு வயது 600.

பிர்அவ்னுடைய அழிவிற்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிரியா நோக்கி பயணமானார்கள். செல்லும் வழியில் பல விக்கிரக ஆராதனை செய்பவர்களை நேர்வழிபடுத்தினார்கள். இவ்வுலகில் 3500 வருடங்கள் வாழ்ந்து வந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மகளான ஸபூராவின் மகனும், ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கப்பல் கட்ட மரத்தை வேருடன் பிடுங்கி கொண்டு வந்து கொடுத்தவனுமான அவ்ஜ் இப்னு உனக்கை கொன்றார்கள். இவ்வாறு சுமார் 40 ஆண்டுகள் வரை பயணம் செய்தார்கள்.

வழியில் பனீஇஸ்ரவேலர்கள் சிற்சில இடங்களில் பசியாலும், தாகத்தாலும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு நிரந்தரமாக உணவு கிடைப்பதற்கு துஆ செய்யுமாறு மூஸா நபி அவர்களிடம் அவர்கள் வேண்டினார்கள். அவர்களும் து ஆ செய்தார்கள். அனைவருக்கும் நாளொன்றுக்கு இரண்டு விட்டர் அளவு மன்னு என்ற பொருளை அல்லாஹ் இறக்க ஆரம்பித்தான்.

சிலகாலம் இதை சாப்பிட்டு வந்தபின் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. எனவே இறைச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி மூஸா நபியிடம் வேண்டினார்கள். அவர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்ததில் ஸல்வா என்ற குருவிகளை ஆளுக்கு ஒன்று என்று தினமும் இறக்கினான். பிறகு அருந்துவதற்கு தண்ணீர் கேட்டார்கள். அதையும் ஏற்பாடு செய்தார்கள் ஆனாலும் பனீ இஸ்ராயீல்கள் திருப்தி அடையவில்லை. மேலும், மேலும் அது வேண்டும், இது வேண்டும் என்று நச்சரித்ததோடு இறைவனுக்கு மாறு செய்யவும் முனைந்தார்கள். இதனால் சினம் கொண்ட அல்லாஹ் தான் அனுப்பி வந்த அத்தனை அருட்கொடைகளையும் நிறுத்தி விட்டான். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில்…

وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ ۖ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ۖ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ

இன்னும். உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக> தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

அல்குர்ஆன் 2:57

பிர்அவ்னுடைய காலம்வரை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கால சட்டதிட்டங்களின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்தார்கள். தங்களுக்கு என்று தனியாக சட்டதிட்டங்களை கோரிப் பெறுமாறு மூஸா நபி அவர்களை அவர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர்.

மூஸா நபியவர்கள் இதை ஏற்று தங்களுக்கு தனிச் சட்டம் வேண்டுமென்று துஆ செய்தார்கள். அதனை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் முப்பது நாட்கள் நோன்பிருந்து தூர்சீனா மலைக்கு வந்து சந்திக்குமாறு சொன்னான்.

நோன்பிருந்ததின் காரணமாக வாயில் ஏற்பட்ட வாடையைப் போக்க மிஸ்வாக் செய்தார்கள். இதனைக் கண்ட வானவர்கள் வருத்தப்பட்டார்கள். நீங்கள் மிஸ்வாக் செய்ததால் மேற்கொண்டு 10 நாட்கள் நோன்பிருக்கும்படி அல்லாஹ் பணித்தான். அதன்பின் தமது சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தங்கள் பிரதிநிதியாக நியமித்து விட்டு தூர்சீனா மலை சென்று அல்லாஹ்வுடன் நாற்பது நாட்கள் வரை உரையாடிக் கொண்டிருந்த அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்க ஆசைப்பட்டார்கள். தன்னுடைய ஒளியிலிருந்து ஒரு ஊசிமுனை அளவு அம்மலை மீது விழச் செய்தான். அதனால் அம்மலை தவிடுபொடியாகிவிட்டது. இதனால் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்கள்.

அச்சமயம் உலகில் உள்ள அத்தனைப் பைத்தியங்களும் தெளிவு பெற்றனர். நோயாளிகள் அனைவரும் சுகம் பெற்றனர். வறண்ட பூமியின் பகுதிகளெல்லாம் பசுமை பெற்றன. விக்கிரகங்கள் எல்லாம் தலைகுப்புற விழுந்தன.

மூர்ச்சை தெளிந்த மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் அழுது புலம்பி பாவமன்னிப்புக் கோரினார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டான். பிறகுஅவர்களை அவர்களின் கூட்டத்தாருக்கு ரஸூலாக நியமித்து தனியாக சட்டதிட்டங்களை அளித்தான்.

அதன்பின் வானத்திலிருந்து அல்லாஹ்வின் கட்டளைகள் அடங்கிய ஏழு அல்லது ஒன்பது பலகைகளும், தவ்ராத் வேதமும் இறங்கியது. தவ்ராத் வேதத்தில் ஆயிரம் அத்தியாயங்களும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆயிரம் வசனங்களும் இருந்தன என கூறப்படுகிறது. பலகையில் பத்;துக் கட்டளைகள் பொறிக்கப்பட்டிருந்தன.

இச்சமயத்தில் ஸாமிரி என்பவன் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து நயமாக பேசி கிப்தியர்களிடமிருந்து கைப்பற்றிய செல்வங்களை பெற்று அதைக் கொண்டு ஒரு காளை மாட்டை வடிவமைத்து, ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குதிரையில் வரும்போது அதன் காலடி மண்ணை ஏற்கனவே எடுத்து வைத்திருந்த அவன் அதை அந்த காளை மாட்டின் வாயில் போட அது உயிர் பெற்று பேச ஆரம்பித்து விட்டது.

பனீ இஸ்ரவேலர்களை நயமாக பேசி அவர்களை ஏமாற்றி அந்த காளை மாட்டை வணங்க வைத்து விட்டான். ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வளவோ தடுத்தும் ஒருசிலரைத் தவிர அவர்கள் அனைவரும் அதை வணங்கி வந்தனர். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில்…

قَالَ فَإِنَّا قَدْ فَتَنَّا قَوْمَكَ مِن بَعْدِكَ وَأَضَلَّهُمُ السَّامِرِيُّ  . فَرَجَعَ مُوسَىٰ إِلَىٰ قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا ۚ قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ۚ أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدتُّمْ أَن يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّن رَّبِّكُمْ فَأَخْلَفْتُم مَّوْعِدِي

20:85. “நிச்சயமாக,(நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான்.

20:86. ஆகவே,மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).

قَالُوا مَا أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَٰكِنَّا حُمِّلْنَا أَوْزَارًا مِّن زِينَةِ الْقَوْمِ فَقَذَفْنَاهَا فَكَذَٰلِكَ أَلْقَى السَّامِرِيُّ

20:87. “உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.

فَأَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهُ خُوَارٌ فَقَالُوا هَٰذَا إِلَٰهُكُمْ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِيَ

20:88. பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

أَفَلَا يَرَوْنَ أَلَّا يَرْجِعُ إِلَيْهِمْ قَوْلًا وَلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَلَا نَفْعًا

20:89. அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?

وَلَقَدْ قَالَ لَهُمْ هَارُونُ مِن قَبْلُ يَا قَوْمِ إِنَّمَا فُتِنتُم بِهِ ۖ وَإِنَّ رَبَّكُمُ الرَّحْمَٰنُ فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي . قَالُوا لَن نَّبْرَحَ عَلَيْهِ عَاكِفِينَ حَتَّىٰ يَرْجِعَ إِلَيْنَا مُوسَىٰ

20:90. இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.

20:91. “மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

அல்குர்ஆன் 20:85-91

மலையிலிருந்து வந்த மூஸா நபியவர்கள் இவர்களின் இச்செயலைப் பார்த்து கடும் கோபம் கொண்டார்கள். ஹாரூன் அலைஹிஸ்ஸலம் அவர்களை பிடித்து ஏன் இவர்களை தடுக்கவில்லை என்று கேட்டார்கள். அதற்கு ஹாரூன் நபி அவர்கள் நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன் அவர்கள் கேட்கவில்லை என்று அடக்கமாக பதில் சொன்னார்கள்.

அதன்பின் அந்தக் கோபம் சாமிரி மீது திரும்பி அவன் யாரைத் தொட்டாலும், யாருடனும் பேசிவிட்டாலும் அவர்களுக்கு கடும் குளிர் ஜுரம் ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு உன்னை அடித்து விரட்டட்டும் என்று சாபமிட்டார்கள். காளை மாட்டை நெருப்பிலிட்டு சிதைத்து கடலில் எறிந்தார்கள். இதைப்பற்றி அல்குர்ஆன் அத்தியாயம் 20:92-97 வரை தெளிவாகக் கூறுகிறது.

قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا. أَلَّا تَتَّبِعَنِ ۖ أَفَعَصَيْتَ أَمْرِي.

20:92. (மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.

20:93. “நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”

قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي ۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي

20:94. (இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.

قَالَ فَمَا خَطْبُكَ يَا سَامِرِيُّ . قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا بِهِ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ أَثَرِ الرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتْ لِي نَفْسِي . قَالَ فَاذْهَبْ فَإِنَّ لَكَ فِي الْحَيَاةِ أَن تَقُولَ لَا مِسَاسَ ۖ وَإِنَّ لَكَ مَوْعِدًا لَّن تُخْلَفَهُ ۖ وَانظُرْ إِلَىٰ إِلَٰهِكَ الَّذِي ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا ۖ لَّنُحَرِّقَنَّهُ ثُمَّ لَنَنسِفَنَّهُ فِي الْيَمِّ نَسْفًا

20:95. “ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.

20:96. “அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.

20:97. “நீ இங்கிருந்து போய் விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு; அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார்.

பிறகு அல்லாஹ்வின் உத்திரவின்படி காளை மாட்டை வணங்கியவர்கள் அனைவரையும் சிரச் சேதம் செய்யப்பட்டனர். அவர்கள் மொத்தம் 70>000 பேர்.

மூசா நபியின் சிறிய தந்தையின் மகனான காரூன் என்பவன் மூஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சகோதரியையும் திருமணம் முடித்திருந்தான். மிக்க செல்வந்தனாகவும், அழகனாகவும் இருந்தான். அவன் மூஸா நபி மீது பகைமை கொள்ள ஆரம்பித்து விட்டான். இச்சமயத்தில் அல்லாஹ்வின் உத்திரவின்படி பனீ இஸ்ரவேலர்கள் ஜகாத் கொடுக்க கடமையாக்கப்பட்டனர். காரூன் செல்வந்தனாயிருந்ததால் அவனும் ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவனானான்.

இதனால் கோபம் கொண்ட அவன் ஒருசிலரை சேர்த்துக் கொண்டு மூஸா நபி மீது பழி போட ஆயத்தமானான். அதற்காக ஒரு விபச்சாரியை பேரம் பேசி மூசா நபி அவர்கள் என்னோடு விபரச்சாரம் செய்தார்கள் என்று சொல்லும்படி ஏவினான். அவன் கட்டளையை ஏற்றுக் கொண்ட அவள், மூஸா நபியின் தோற்றத்தைக் கண்டதும் நடந்த உண்மைகளை சொல்லி விட்டாள். இதனால் காரூனும் அவனுடன் சேர்ந்தோரும் தப்பி ஓட முயன்றனர்.

மூஸா நபி அவர்களுக்கு ‘அல்லாஹ்விடமிருந்து பூமியை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்ததாக வஹீ வந்தது. பூமியை காரூனையும், அவனைச் சார்ந்தோரையும் விழுங்க கட்டளையிட்டார்கள். உடனே பூமியானது அவர்களை விழுங்கியது. உலக முடிவு வரை அவன் பூமியின் கீழே சென்று கொண்டே இருப்பான்.

இறுதியில் உலக முடிவுநாளன்று ஏழாவது பூமி அவனை விழுங்கும் என்று ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

பனீ இஸ்ராயீல்களில் பணக்கார வயோதிகர் ஒருவர் இருந்தார். அவருக்கு மக்கள் இல்லை. ஆனால் அவருடைய தந்தையின் சகோதரருடைய ஆண் மக்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கு அந்த வயோதிகரின் சொத்தின் மீது கண் இருந்து கொண்டே இருந்தது. இறுதியில் அவ்வயோதிகரை கொன்று ஊரின் எல்லையில் கொண்டு போய் போட்டு விட்டனர்.

வயோதிகரை யார் கொன்றார் என்ற கேள்வி எல்லாப் பகுதியிலிருந்தும் எழுந்தது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் உங்கள் அல்லாஹ்விடம் கேட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அதற்கு அல்லாஹ், ஒரு மாட்டை அறுத்து ஒரு குறிப்பிட்ட பகுதியின் இறைச்சியை எடுத்து, இறந்தவரின் உடலில் தேய்த்தால் இறந்தவர் உயிர்ப்பெற்று எழுந்து தன்னை கொன்றவர் யார் என்று சொல்லி விடுவார் என்று சொன்னான். இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில்….

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً ۖ قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا ۖ قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ

2:67. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர்’ “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ ۚ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَٰلِكَ ۖ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ

2:68. “அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல. கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا ۚ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ

2:69. “அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِن شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ

2:70. “உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُولٌ تُثِيرُ الْأَرْضَ وَلَا تَسْقِي الْحَرْثَ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيهَا ۚ قَالُوا الْآنَ جِئْتَ بِالْحَقِّ ۚ فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ

2:71. அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.

وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا ۖ وَاللَّهُ مُخْرِجٌ مَّا كُنتُمْ تَكْتُمُونَ

2:72. “நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).

فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا ۚ كَذَٰلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَىٰ وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

2:73. “(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.

அல்-குர்ஆன் 2:67-73

பிர்அவ்ன் அழிந்து போனபிறகு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ இஸ்ரயீல்களுக்கு நற்போதனைகள் புரிந்து வந்தார்கள். ஒரு நாள் ஒருவர் மூஸாவே! உம்மை விட அறிந்தவர் இவ்வுலகில் யாரும் உள்ளார்களோ? என்று கேட்டார். அதற்கு மூஸா நபியவர்கள் எனக்குத் தெரியாது என்று சொன்னார்கள். தமது உள்ளத்தில் நம்மைவிட அதிகம் தெரிந்தவர் யாராக இருக்க முடியும் என்று எண்ண ஆரம்பித்தார்கள். உடனே அல்லாஹ், வஹீ மூலம் ஓ மூஸாவே! உம்மை விட அதிகம் அறிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவரைப் போய் நீர் சந்தியும். அவர் இரு கடல்கள் சந்திக்கும் இடத்தில் உள்ளார். அவருக்கு உம்மை விட அதிக அறிவைத் தந்துள்ளோம். நம்பிக்கைக்குரிய ஒருவரை துணையாக அழைத்துக் கொண்டு பொறித்த மீனை எடுத்துக் கொண்டு அவரைத் தேடி கொண்டு செல்லவும். அந்தப் பொறித் மீன் உமக்கு வழிகாட்டும்’ என்று அறிவித்தான்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யூஷஃ இப்னு நூன் (இவர் மூஸா அலைஹிஸ்ஸாம் அவர்களின் சகோதரர் மகன் என்றும், இவர்களது தந்தையான நூன் என்பவர் ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குமாரரான அப்ராயீமின் மகன் என்றும் 126 வயது வரை வாழ்ந்தார்கள் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.) அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு பொரித்த மீனையும், ரொட்டியையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். ஒரு இடத்தில் பொரித்த மீன் உயிர் பெற்றெழுந்து கடலுக்குள் ஓடியது.

அப்பகுதியில்தான் அந்தப் பெரியார் இருப்பதாக அல்லாஹ் முன்னறிவித்திருந்தான். அதன்படி அவர்கள் அங்கு சென்று பார்த்தார்கள். அங்கு ஒரு பெரியவர் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள்.

وَإِذْ قَالَ مُوسَىٰ لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّىٰ أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا

18:60. இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.

فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا

18:61. அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِن سَفَرِنَا هَٰذَا نَصَبًا

18:62. அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.

قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ ۚ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا

18:63. அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.

قَالَ ذَٰلِكَ مَا كُنَّا نَبْغِ ۚ فَارْتَدَّا عَلَىٰ آثَارِهِمَا قَصَصًا

18:64. (அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.

فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِّنْ عِندِنَا وَعَلَّمْنَاهُ مِن لَّدُنَّا عِلْمًا

18:65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.

அல்-குர்ஆன் 18:60-65 ல் தெளிவாகக் கூறுகிறான்.

அவர்கள் தம்மை ஹிளுரு என்று அறிவித்தார்கள். தமக்கு அல்லாஹ் அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியை தந்திருப்பதாகவும், நீங்கள் வெளிரங்கத்தை அறிந்திருப்பதால் நம்மிருவருக்கும் ஒத்து வராது. கருத்து மோதல்கள் ஏற்படும் என்றார்கள்.

அல்லாஹ் நாடினால் உங்களுடைய கருத்துக்கு ஏற்றவாறே நான் நடந்து கொள்வேன். இதில் நான் உறுதியாக இருப்பேன் என்றும் வாக்களிக்கிறேன் என்றார்கள் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

அப்படியானால், நான் என்ன காரியத்தை செய்தாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்கக் கூடாது. நான் அதற்கு விளக்கம் தரும்வரையில் பொறுமையாக இருந்து கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொள்வதாக இருந்தால் நீங்கள் என்னோடு இருந்து கொள்வதில் எனக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை என்று சொன்னார்கள் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்கு சம்மதித்து அவர்கள் கடலோரமாக சென்று கொண்டிருந்தார்கள்.

இதை அல்லாஹ் திருக்குர்ஆன் 18:66-82 ல் தெளிவாகக் கூறுகிறான்.

قَالَ لَهُ مُوسَىٰ هَلْ أَتَّبِعُكَ عَلَىٰ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا . قَالَ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا . وَكَيْفَ تَصْبِرُ عَلَىٰ مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا. قَالَ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا

18:66. “உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.

18:67. (அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.

18:68. “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)

18:69. (அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.

قَالَ فَإِنِ اتَّبَعْتَنِي فَلَا تَسْأَلْنِي عَن شَيْءٍ حَتَّىٰ أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا

18:70. (அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் – நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை – நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.

فَانطَلَقَا حَتَّىٰ إِذَا رَكِبَا فِي السَّفِينَةِ خَرَقَهَا ۖ قَالَ أَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا

18:71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர்> (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.

قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا

18:72. (அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.

قَالَ لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا

18:73. “நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.

فَانطَلَقَا حَتَّىٰ إِذَا لَقِيَا غُلَامًا فَقَتَلَهُ قَالَ أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَّقَدْ جِئْتَ شَيْئًا نُّكْرًا

18:74. பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.

قَالَ أَلَمْ أَقُل لَّكَ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا

18:75. (அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.

قَالَ إِن سَأَلْتُكَ عَن شَيْءٍ بَعْدَهَا فَلَا تُصَاحِبْنِي ۖ قَدْ بَلَغْتَ مِن لَّدُنِّي عُذْرًا

18:76. இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் – நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.

فَانطَلَقَا حَتَّىٰ إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُ ۖ قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا

18:77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.

قَالَ هَٰذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ ۚ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِع عَّلَيْهِ صَبْرًا

18:78. “இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.

أَمَّا السَّفِينَةُ فَكَانَتْ لِمَسَاكِينَ يَعْمَلُونَ فِي الْبَحْرِ فَأَرَدتُّ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَاءَهُم مَّلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ غَصْبًا

18:79. “அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.

وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا

18:80. “(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.

فَأَرَدْنَا أَن يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا

18:81. “இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.

وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَن يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنزَهُمَا رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي ۚ ذَٰلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِع عَّلَيْهِ صَبْرًا

18:82. “இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.

இப்போது நீங்கள் எம்மை விட்டு பிரிந்து செல்லலாம் என்று கிளுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா நபிக்கு உத்திர கொடுத்தார்கள். அதன்பின் மூஸா நபி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க> நற்போதனைகள் புரிந்தார்கள்.

இதன்பிறகு அல்லாஹ்வின் உத்தரவிற்கிணங்க அர்பஹாவிற்குச் சென்று அமாலிகாவுடன் போர் புரியுமாறு இஸ்ரவேலர்களை ஏவினார்கள். அமாலிகா கூட்டத்தினர் அரீஹா நவாஹ் என்ற பகுதியில் வசித்து வந்தனர். இவர்கள் 240 அடி உயரமிருந்தனர்.

وَلَا تَكُونُوا كَالَّذِينَ قَالُوا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ

8:21. (மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்” என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.

إِنَّ شَرَّ الدَّوَابِّ عِندَ اللَّهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِينَ لَا يَعْقِلُونَ

8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.

وَلَوْ عَلِمَ اللَّهُ فِيهِمْ خَيْرًا لَّأَسْمَعَهُمْ ۖ وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوا وَّهُم مُّعْرِضُونَ

8:23. அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால்> அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ

8:24. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்ககூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.

وَاتَّقُوا فِتْنَةً لَّا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنكُمْ خَاصَّةً ۖ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

8:25. நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை – நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

وَاذْكُرُوا إِذْ أَنتُمْ قَلِيلٌ مُّسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِ وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

8:26. “நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாய்ஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் – இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!”

அல்குர்ஆன் 8:21-26

இப்படியே பனீ இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குள்ளான நாற்பது ஆண்டுகள் கழித்ததும் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களை அழைத்துக் கொண்டு அஹா நவாஹ்வை வென்று அங்கேயே நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா நபியை விட 3 அல்லது 4 வயது மூத்தவர்களாக இருந்தார்கள். 150 வருடங்கள் வரை வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. இவர்கள் மூஸா நபி மரணிப்பதற்கு ஒரு வருடம் முன்னதாக ஸினாய் பாலைவனத்திலுள்ள ஒரு மலையின் உச்சியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அந்த மலை சவீக் மலை என்றும்,  ஹுர் மலை என்றும்> ஹாரூன் மலை என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது.

ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைந்ததும் சிலர் அவர்களை மூஸா நபிதான் கொன்று விட்டார்கள் என்று வதத்தியை பரப்பி விட்டார்கள். ஹாரூன் நபிஅவர்கள் மீண்டும் உயிர்ப்பெற்றெழுந்து பனீ இஸ்ரவேலர்கள் முன்னிலையில் தோன்றி தாம் இயற்கையாகவே மரணித்ததாக சொல்லி மீண்டும் மரணித்து விட்டார்கள்.

இதன்பிறகு ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது பிரதிநிதியாக ஹழ்ரத் யூஷஃ அலைஹிஸ்ஸலாம் அவர்களை நியமித்து விட்டுத் தாம் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.

ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறையும் போது அவர்களது வயது 123 என்றும் 150 என்றும் இரு கருத்துக்கள் உள்ளன.

2 Comments found

User

ஆதாரம்

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 72 கிப்திகள் உட்பட சுமார் ஆறு இலட்சம் பேர் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது விசுவாசம் கொண்டு முஸ்லிம்களாகி விட்டதாக ஒரு குறிப்பில் காணப்படுகிறது

Reply
User

abdul jaleel

நபி மூஸா அலைஹி வசல்லம் அவர்களின் காலத்தில் அதிகமான தவறு செய்த மக்களின் வெறுப்புக்குள்ளான ஒரு மனிதன் வாழ்ந்து வந்தார் .

அவர் இறந்த பின்பு அவர் மீதிருந்த வெறுப்பின் காரணத்தினால் மக்கள் அவரை குளிப்பாட்டி கபனிடாமல் ஒரு காட்டு பகுதியில் தூக்கி வீசிவிட்டனர் .

அல்லாஹ் நபி மூஸா அலைஹி வசல்லம் அவர்களை அழைத்து மூஸா (அலைஹி வசல்லம் ) அவர்களே இந்த இடத்தில் என்னுடைய நேசர் ஒருவரின் உடல் இருக்கிறது அவரை குளிப்பாட்டி கபனிட்டு அடக்கம் செய்யுங்கள் என்று கட்டளை இடுகிறான் .

நபி மூஸா அலைஹி வசல்லம் அவர்களும் தன் சகாக்களுடன் இறைவன் கூறிய இடத்தை சென்றடைகிறார்கள் .அங்கே மனிதர்களால் வெறுக்கப்பட்ட அந்த மனிதரின் உடல் இருக்கிறது .

நபி மூஸா அலைஹி வசல்லம் அவர்களின் தோழர்கள் “மூஸாவே (அலைஹிவசல்லம்) இந்த மனிதரையா அல்லாஹ் கூறினான் ? நன்றாக கேட்டு சொல்லுங்கள். காரணம் இந்த மனிதர் தீய பழக்கங்கள் அதிகம் உடையவராயிற்றே ,இவரை மக்கள் வெறுத்தார்களே இவர் எப்படி இறை நேசராக இருக்க முடியும்? என்று கேட்டார்கள் .

நபி மூஸா அலைஹி வசல்லம் அவர்களும் அல்லாஹ்விடம் இறைவா! மக்கள் இப்படி சொல்கிறார்களே இவர் உன் நேசரா?விளக்கமென்ன என்று கேட்டார்கள் .

அதற்க்கு அல்லாஹ் நபி மூஸா அலைஹி வசல்லம் அவர்களே! மக்கள் சொல்வதும் உண்மைதான் அவர் தீய பழக்கங்கள் உடைய மனிதர்தான் ஆனால் இறப்பதற்கு முன் மூன்று விசயங்களை முன் வைத்து என்னிடம் பாவ மன்னிப்பு தேடினார் அவரை நான் மன்னித்து விட்டேன் என்று கூறினான் .

நபி மூஸா அலைஹி வசல்லம் அவர்கள் இறைவா! அந்த மூன்று விஷயங்கள் என்ன ? எனக்கும் கற்றுக்கொடு என்று கேட்டார்கள் .

அல்லாஹ் கூறினான் .

மூஸா அலைஹி வசல்லம் அவர்களே அவர் முன்வைத்த மூன்று விஷயங்கள்

1. இறைவா நான் தவறு செய்பவன்தான் ஆனால் ஒவ்வொரு முறை தவறு செய்த பின்னும் அதை நினைத்து வருந்துவேன் .பிறகு இந்த தவறை செய்யக்கூடாது என்று நினைப்பேன் ஆனால் ஷைத்தானும் ,எனது நப்சும் என்னை மிகைத்துவிடுவார்கள் .உள்ளத்தை அறிந்தவன் நீயே நான் சொல்வது உண்மை என்றால் என்னை மன்னித்து விடு .

2. இறைவா என்னை சுத்தி தீயவர்கள் இருப்பார்கள் ,இருந்தாலும் என்னை தேடி நல்ல மனிதர்கள் யாராவது வந்தால் அவரை அழைத்து உபசரித்து அவருக்கு வேண்டியதை செய்து கொடுப்பேன் இந்த செயல் உனக்கு பிடித்து இருந்தால் என்னை மன்னித்து விடு .

3. இறைவா நான் செய்த தவறின் காரணத்தினால் என்னை நீ தண்டித்தால் ஷைத்தான் சந்தோஷப்படுவான் .உனது நபிமார்கள் கவலைப்படுவார்கள் .ஷைத்தான் சந்தொஷப்படுவதையோ ,உன் நபிமார்கள் கவலைப்படுவதையோ நீ விரும்ப மாட்டாய் இது உண்மை என்றால் என்னை மன்னித்து விடு என்று கேட்டார் .

அவர் கூறிய மூன்று விசயங்களும் உண்மைதான் .இந்த மனிதர் மட்டுமல்ல உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களும் இந்த மூன்று விசயங்களை முன் வைத்து என்னிடம் பாவ மன்னிப்பு கேட்டால் அவர்களை மன்னித்துவிடுவேன் என்று கூறினான் .

where this incident precents

Reply

Add Comment

Your email address will not be published.