முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது ஒலி ரலியல்லாஹு அன்ஹு
By Sufi Manzil
முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா மேன்மை தங்கிய மஹான் ஹக்கீமுல் ஹூக்கமா செய்யிதினா ஷெய்குல் அஃலம் குத்பேரப்பானி ஆரிபு பில்லாஹி வஷ்ஷெய்கு சமதானி அஷ்ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டவர்கள் அடக்கமாகி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மகத்துவமிக்க ஒரு மாபெரும் புனித ஸ்தலமாகும். மஹான் அவர்களை கருணை வள்ளல், காரணக்கடல், மருத்துவ வேந்தர் என்ற சிறப்பு சொற்களால் மக்கள் போற்றி வருகிறார்கள். தர்ஹா ஜாம்புவானோடை கிராமத்தில் அமைந்திருந்தாலும் உலக மக்களால் முத்துப்பேட்டை தர்ஹா என போற்றி வரப்படுகிறது
மஹான் அவர்களின் அருள் வேண்டி உலகின் பல பகுதிகளிளிலிருந்தும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சவுதிஅரேபியா, இலங்கை, அமெரிக்கா, குவைத், துபாய் முதலிய நாடுகளிலிருந்தும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து அருள் பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றார்கள். தீராத நோய்களும், ஓடாத பேய்களும் மருந்துகளுக்கும் மந்திரங்களுக்கும் கட்டுப்படாத மனக்குழப்பங்களும் மனிதர்களை நிலைத் தடுமாறச் செய்திடும் வஞ்சினை, செய்வினை, ஏவல்,பில்லி, சூனியங்களும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் மஹான் அவர்களின் பேரருளால் தீர்க்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இது ஏதாவது ஒரு நாள் மட்டும் நிகழ்வு அல்ல அன்றாடம் நடக்கும் அற்புத நிகழ்வுகள் ஆகும்.
மேன்மை தங்கிய மஹான் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் அவர்கள் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கவ்மில் இஸ்ராயில் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஜாம்புவானோடை கிராமம் அடர்ந்த புதர்களால், மண்டிய மரம், செடி, கொடிகயாலும் நிறைந்த காடு ஆகம். இப்பகுதி மக்களால் இன்றும் கூட அக்கரைக்காடு என்று இதை அழைப்பது உண்டு. காடுகளை அழித்து விவசாயம் செய்ய முனைந்த கருப்பையாக் கோனார் எருது பூட்டி உழுதழட இரத்தம் பீரிட்டு அடித்து, கண்பார்வையற்று மயங்கி மூர்ச்சையாகிவிடுகிறார்.
உடனே பாவா அவர்களுடைய தரிசனமும் அசிரீரி வாக்கும் அவருக்கு கிடைக்கிறது. நான் ஒரு இஸ்லாமிய இறை நேசர். எனது பெயர் ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ். நீர் ஏர் உழுத இடத்தில் தான் நான் அடக்கமாகி இருக்கிறேன், கவலைப்படவேண்டாம். மயக்கம் நீங்கி பார்வை தெரியும். உடனடியாக நாச்சிக்குளம் சென்று அங்கு எனக்கு பணிவிடைகள் செய்வதற்காக காத்திருப்பவர்களை அழைத்து வாரும் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் கோனாரின் மனைவி உணவு எடுத்து வந்து சேருகிறார். ஏர் அப்படியே இருக்கிறது. கணவர் கீழே விழுந்து கிடக்கிறார். முகத்தில் இரத்தம் வழிகிறது. அதிர்ச்சியோடு கணவரை உசுப்புகிறார். நினைவு திரும்பிய கோனார் உழுந்து நடந்த விபரங்களை சொல்கிறார்.
அங்கே இரு இஸ்லாமிய சகோதரர்கள் இவர்களை எதிர்பார்த்து தயாராக இருக்கிறார்கள். நடந்த விபரத்தை அவர்களிடம் சொல்லும் முன்பே இந்த விபரங்களை பாவா அவர்கள் தங்களிடம் அறிவித்து விட்டதாக சொல்லி கோனாரோடு ஜாம்புவானோடை வந்து சேர்ந்த போது நிலத்தில் ஏர் உழுத அடையாளம் எல்லாம் மறைந்து கபுர்(சமாதி) கூட்டப்பட்டு கால்மாடு தலமாடு அடையாளத்திற்கு இரண்டு எலுமிச்சம் பழங்களும் வைக்கப்பட்டு இருக்கிறது. நாச்சிக்குளத்திலிருந்து வந்த கான் சகோதரர்கள் பத்தி கொளுத்தி, சாமிபிராணி போட்டு, விளக்கு ஏற்றி கபுருக்கு போர்வை போர்த்தி பாத்திஹா யாசின் ஓதி துஆ செய்து கபுருக்கு மேல் கீற்றுக்கொட்டகை போட்டு பகல் நேரங்களில் மட்டும் வந்திருந்துவிட்டு இரவில் விளக்கு ஏற்றிவைத்து விட்டு சென்று கொண்டு இருந்துள்ளார்கள்.
சில வருடங்கள் கழித்து இவ்வழியாக தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கர் தனது பரிவாரங்களுடன் வந்த போது ஆற்றங்கரையில் மன்னரின் பட்டத்து யானை கீழே விழுந்து படுத்துக்கொண்டது. எவ்வளவு முயற்சித்தும் எழும்பாமல் போகவே மஹான் பாவா அவர்களுடைய ஜியாரத்தில் இருந்து புனித சந்தனம் தப்ருக் (பிரசாதம்) எடுத்துச் சென்று யானையின் நெற்றியில் வைக்க, உடனே எழுந்து விடுகிறது. மஹான் அவர்களுடைய மகிமையையம், அற்புதத்தையும் அறிந்து வியந்த அரசர் தனது பரிவாரங்களுடன் நடந்தே வந்து பாவா அவர்களை வணங்கி மரியாதை செய்து பிரர்த்தித்து உடனடியாக தற்போது தர்ஹா அமைந்துள்ள இடம் உட்பட 5 1/2 வேலி நிலத்தையும். ஷேக் தாவூது ஆண்டவர் தர்ஹா என்ற பெயரில் பட்டயம் போட்டுக் கொடுத்து சென்றுள்ளார்கள்.
இன்று அரசரின் யானை விழுந்த இடத்தை ‘யானை வழுந்தான் கிடங்கு’ என்று மக்களால் சொல்லப்படுகிறது. அதன் பிறகு படிப்படியாக தர்ஹா கட்டடமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜ்ரி வருடத்தில் ஜமாத்துல் அவ்வல் பிறை 1-ல் கொடியேற்றமும், பிறை 10ல் சந்தனக்கூடும், பிறை 14ல் கொடி இறக்கமும் பெரிய ஹந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உரூஸ் என்னும் பெரிய ஹந்தூரி விழாவில் பல்லாயிரக்கணக்கான இந்து, முஸ்லீம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேன்மை தங்கிய பாவா அவர்களை நாகூர் ஆண்டவர் ஹஜரத் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களும், ஞானக்கடல் சதக்கத்துல்லா அப்பா அவர்களும். பல்லாக்கு தம்பி ஒலியுல்லாஹ் அவர்களும், பொதக்குடி நூர் முகம்மது ஷா வலியுல்லாஹ் அவர்களும் இன்னும் பல வலிமார்களும் தங்களின் ஹயாத்தோடு வந்து தரிசித்து இருக்கிறார்கள்.
மேன்மை தங்கிய மஹான் பாவா அவர்களின் சன்னிதானத்தில் நோய்வாய்ப்பட்டவர்களும், பேய், பிசாசு பிடித்தவர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் வஞ்சினை, செய்வினை, ஜின், சைத்தான், பில்லி, சூனியங்களால் பாதிக்கப்பட்டவர்களம் 11 நாட்கள், 41 நாட்கள் என நேர்த்தி கடனுக்கு தங்கி இருந்து நல்ல சுகம் பெற்று செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கழமை இiவு கிழமை இரவாக கருதப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து, முஸ்லீம் பக்தர்கள் வந்து இரவு தங்கி இருந்து காலையில் செல்கிறார்கள்.
மேன்மை தங்கிய பாவா அவர்களின் சன்னிதானத்தில் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கும் தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கனவிலும், நினைவிலும் சுகம் அருளப்படுகிறது. அவர்களுடைய வியாதிகளுக்கு தகுந்தவாறு ஆப்ரேஷன் மூலமாகவும்வாய்வழியாகவும். கிளாஸ,; ஓடு, முடி, எலுமிச்சம்பழம் உருவங்கள் போன்றவைகள் எடுக்கப்படுவதை கண்கூடாக காணப்படுகிறது. தீராத நோய்களுக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு ஆப்ரேஷனும் மஹான் அவர்களால் நடத்தப்படுகிறது. அதனால்தான் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் புரியும் ஒரு அற்புத மருத்துவசாலையாகவும், அருள்மனம் கமழும் சோலையாகவும் அண்ணலின் பீடம் திகழ்கிறது. மேன்மை தங்கிய மஹான் பாவா அவர்கள் இங்கு அடக்கமாகிய நாள் தொட்டு இன்று வரை எண்ணலடங்கா அற்புதங்கள் பல நிகழ்ந்து வருகிறது.
மேன்மை தங்கி பாவா அவர்களை நாடி வரக்கூடியவர்களக்கு பாவா அவர்களின் ஜியாரத்து கப்ரிலே பூசி இருக்கும் சந்தனமும், மேலே போடப்பட்டுள்ள பூவும், திருவிளக்கில் எரித்த எண்ணையும், புனித ஷிஃபா குளத்து தண்ணீரும் நோய்தீர்க்கும் அருமருந்துகளாக பயனபட்டு வருகிறது.
பாவா அவர்களின் ஜியாரத் 60 அடியாகும் ஜயாரத் கதவு தினமும் காலை சுபுஹூக்கு பாங்கு கொத்தவுடன் திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூடப்படுகிறது. ஒவ்வொரு திங்கள்கிழமை இரவும் மஹ்ரிபு தொழுகைக்குப் பின்னால் தாவூதியா மஜ்லிஸில் மௌலூது ஷரீப் ஓதப்படுகிறது..