மாடித் தோட்டம்

மாடித் தோட்டம்

By Sufi Manzil 0 Comment August 22, 2020

Print Friendly, PDF & Email

மாடித் தோட்டம் ஏன் தேவை?

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ இந்த பிரபஞ்சத்தில் மனித பிறவியே மிகவும் சிறந்தது என மகான்கள் கூறுகின்றனர்.
அதிகாலை கதிரவன், முழுநிலவு, நீர்வீழ்ச்சி, கண்ணை கவரும் வண்ண பூக்கள், தோகை விரித்தாடும் மயில், குயிலின் கானம், இதமான சீதோஷ்ணம்… என இந்த பிரபஞ்த்தில் எத்தனையோ அதிசய படைப்புக்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் கண்டு, கேட்டு, சுவைத்து, முகர்ந்து, உணர்ந்து அனுபவிக்கக் கூடிய ஆற்றல் படைத்த ஒரே உயிரினம் நம் மனித இனம்தான்.

இயற்கையின் அற்புதப் படைப்பாகிய மனிதன் தன் இயற்கையின் விதிப்படி வாழ்ந்தால், இந்த பிரபஞ்சத்தில் குறைந்தது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் இன்றைய மனிதனின் சராசரி வயது என்ன தெரியுமா? 56.
120— 56

இந்த நிலைக்கு காரணம் என்ன?

இந்த அவலநிலைக்கு நாம் பல காரணங்கள் கூறினாலும், மனிதனின் உடல், உயிர், மனவளங்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உணவுதான்.

உணவேதான் உடலாக வந்துள்ளது.
அப்படிப்பட்ட உணவில் அதிகம் ஊட்டச் சத்து என்று பார்த்தால் அதில் முக்கிய பங்கு வகிப்பது கீரைகள், கனிகள், காய்கறிகள், தானியங்கள்
மனிதர்கள் மட்டுமின்றி இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கக் கூடிய கீரை, கனிகள், காய்கள், தானியங்கள் இவற்றின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

விஷம் விஷம் விஷம்

மண்ணை மலடாக்கிய இரசாயண உரங்கள், மனிதனை பல நோய்க்கு ஆட்படுத்தி கொண்டிருக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், உலகில் உள்ள பல ஜீவராசிகளின் உயிரை விரைவாக குடித்துக் கொண்டிருக்கும் பூச்சிக் கொல்லி விஷம், பசுமை புரட்சி என்ற பெயரில் மனிதகுலத்தின் மீது திணிக்கப்பட்ட நஞ்சுதான் இந்த அவல நிலைக்கு காரணம். நம் ஆரோக்கியத்திற்காக உண்ணும் கீரை, காய்கள், பழங்கள ஆகியவற்றில் விவசாயம் செய்யும் போது விதைத்ததில் இருந்து அறுவடைக்குள் சராசரியாக 12 முதல் 24 முறை பூச்சிக் கொல்லி மருந்து என்ற விசம் தெளிக்கப்படுகிறது.

இன்று நாம் மறந்து, மறுத்துக் கொண்டிருக்கும் நமது பாட்டன், முப்பாட்டன்கள் பின்பற்றிய பாரம்பரிய இயற்கை வழி விவசாயத்தை கோ. நம்மாழ்வார் ஐயா போன்ற சிலர் நமக்கு மீண்டும் நினைவுபடுத்தி மீட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், பெரும்பாலும் சந்தைகளிலல் கிடைப்பது என்னவோ விஷம் நிறைந்த கீரை, காய்கனிகள்தான்.

இந்நிலை மாற, ஆரோக்கியமான கீரை, காய்கனிகள் கிடைப்பதற்கு எங்கோ இருக்கும் யாரையோ எதிர்பார்ப்பதை விட நம்வீட்டு மாடியில் நாமே பயிர் செய்து பலனை அனுபவித்துக் கொள்ளலாம்.

இடம் தேர்வு செய்வது எப்படி?

டேரஸ் கார்டன் – மாடித் தோட்டம் என்றவுடன் கிட்டத்தட்ட அனைவரது மனதிலும் எழும் முதல் கேள்வி ‘ஐயோ’ கடுமையாக சுட்டெரிக்கும் எனது மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பது சாத்தியமா?

சான்சே இல்லை போங்கப்பா!

என்று நாமே மனதில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு ஒரு தவறான பதிலை நாமே கொடுத்து அற்புதமான மாடித் தோட்டம் என்ற திட்டத்தையே நிராகரித்து விடுகிறோம்.

ஆனால் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் அற்புதமான ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகிறார். ஒரு தாவரம் நன்கு வளர்வதற்கான தகுதிகளுள் மிகவும் முக்கியமானது சூரிய ஒளிதான்.
அதிலும் அதிக வெயில் உள்ள இடத்தில்தான் கீரை, காய்கனிகள், தானியங்களின் விளைச்ச் அதிகமாகவும், தரமானதாகவும் உள்ளது என்கிறார். அவரின் இந்த சிந்தனைதான் இன்று பலரது வீட்டு மாடியை பசுமையாக மாற்றி கொண்டு இருக்கிறது. ஆக மாடித தோட்டத்திற்கு முதல் தகுதியே வெயில்தான்.
இனி வெயிலை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. சந்தோஷப் படுவோம். நம்வீட்டில் வெயில் படக்கூடிய மொட்டை மாடி, பால்கனி, ஜன்னல், போர்டிகோ, கோட்டை சுவர் என எதில் வேண்டுமானாலும் தோட்டம் அமைக்கலாம்.

மாடித் தோட்டம் அமைக்கத் தேவையான பொருட்கள்

பேக்ஸ் அல்லது தொட்டி செடி பை, மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண்,, சுடோமொனஸ், டி.விரிடி, உயிர் உரங்கள், வேப்பம் புண்ணாக்கு, பூவாளி, தெளிப்பான், பஞ்சகவ்யா, 2 அடி குச்சிகள், சரளை கல், பிளாஸ்டிக் கயிறு, கத்தரிக் கோல், வேப்ப எண்ணெய், சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி மற்றும் உபகரணம், தண்ணீர் உள்ளே இறங்குவதை தடுக்க தரையில் வெள்ளை நிற வாட்டர் ஃப்ரூவ் பெயின்ட் தரையில் அடிக்கவும்.

செடி பை வைக்கும் முன் சிறு சரளை கல் சிறிது கொட்டி அதன் மேல் வைப்பதால் நன்மை உண்டு.

எதில் வளர்ப்பது?

ஒரு மாடித் தோட்டத்தில் 50 முதல் 60 செடிகளாவது வளர்த்தால் தான் ஒரு வீட்டிற்கு தேவையான கீரை, காய்கள் கிடைக்கும்.

இத்தனை செடிகள் வளர்ப்பதற்கு தொட்டிகள் வாங்குவதென்றால் அதற்கே ரூ. 7000 முதல் ரூ.10000 வரை செலவாகும். இது எதற்கப்பா என்று மலைப்பவர்களுக்கு செலவே இல்லாமலல் 60 தொட்டிகளை ஏற்படுத்துவோமா.

ஒரு விசயத்தை நன்றாக மனதில் வைத்துக் கொள்வோம். செடிகளை எதில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். நம் வீட்டில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் குடம், வாளி, டப்பு, கூடைகள், ஜவுளிகடை பைகள்,பெரிய கேரி பைகள், அரிசி பைகள், தண்ணீர் கேன்கள், மூங்கில் கூடை தட்டுகள் என எதில் வேண்டுமானாலும் வளர்க்கலாம்.
இப்பொழுது சொல்லுங்கள் செலவே இல்லாமல் ஒரு 50 அல்லது 60 தொட்டிகள் உங்கள் வீட்டிலேயே தயாராக உள்ளதா?

செடி வளர்க்கும் தொட்டியில் அதிகப்படியான தண்ணீர் தேங்கக் கூடாது. ஆகவே கேரிபேக், பிளாஸ்டிக் பொருட்களில் பக்கவாட்டின் கீழ் பகுதியில் மூன்று அல்லது நான்கு சிறிய துளைகள் போடவும். இந்த துளைகள் அதிகப்படியான நீரை தொட்டிகளில் தங்கவிடாமல் வெளியேற்றி செடிகளை பாதுகாக்கிறது.

குறிப்பு: கீரை வளர்ப்பதற்கு உயரம் குறைவான பொருட்களையும், செடி வளர்ப்பதற்கு சற்று உயரமான பொருட்களையும், செடி முருங்கை மற்றும் கொடிகளில் படரக்கூடிய செடிகளை வளர்ப்பதற்கு உயரம் அதிகமான பொருட்களையும் பயன் படுத்த வேண்டும்.

மாடியை பாதுகாக்க…?

அடுத்து நம் மனதில் எழும் ஒரு முக்கியமான கேள்வி. பலர் மனதிலும் மாடித் தோட்ட திட்டத்திற்கு ஆரம்பத்திலேயே முற்றுப் புள்ளி வைக்கும் கேள்வி.

மாடித் தோட்டம் அமைந்தால் தண்ணீர் தொட்டிகளில் இருந்து கசிந்து மேல்தளம் முழுவதும் ஈரமாகவே இருந்து தளமும் பழுதடைந்து, கான்கிரீட்டும் பாழாகி விடுமே என்பதுதான்.
உண்மைதான். மேல்தளத்தில் எப்போதும் ஈரமாகவே இருக்கும் பட்சத்தில் அது கட்டிடத்திற்கு பாதிப்புதான். இப்பொழுதும் செலவே இல்லாமல் மேல்தளம் மற்றும் கான்கிரீட்டுக்கு ஒரு சதவீதம் கூட பாதிப்பில்லாமல் ஒரு கலை நமக்குத் தெரிந்தால் மாடித் தோட்டத்தை அமைக்க நீங்கள் தயாரா?

உலகில் மிக மிக மதிப்பு குறைந்த ஒரு பொருளே மாடித் தோட்டத்தில் மிகவும் மதிப்பு மிக்கது. ஆம் அதுதான் ‘தேங்காய் சிரட்டை’. நாம் செடிகள் வளர்க்கும் தொட்டிகள் அல்லது பைகளை 4 சிரட்டைகளை கவிழ்த்து வைத்து அதன்மேல் பைகளை வைத்தால் நாம் செடிகளுக்கு ஊற்றும் அதிகப்படியான தண்ணீர் கசிந்து தரையில் பட்டு உடனே ஆவியாகிவிடும். இதனால் மேல்தளம் கான்கிரீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மண் தேர்வு

மாடித்தோட்டம் அமைப்பதற்கு எந்த மண்ணை பயன்படுத்துவது என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. தாவரங்கள் பொதுவாக செம்மண், கரம்பை மண் என எதில் வேண்டுமானாலும் வளரும். ஆனால் மாடித் தோட்டத்தை பொறுத்தவரையில் இரண்டு கேள்விகளுக்கு நம்மை நாமே தெளிவுபடுத்த வேண்டும்.

மாடித் தோட்டத்தில் பயன்படுத்தப்படும் மண் அதிக பாரம் இருந்தால் கட்டிடம் தாங்குமா?

மாடியில் ஒரு சிறிய தொட்டியில் உள்ள மண்ணில் ஊற்றும் தண்ணீர் சீக்கிரமே காய்ந்து விடுவதால், செடிகள் வளர்வதில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதற்கு என்ன செய்வது?

இந்த இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு அற்புதமான மண் கலவையை நாம் தயார் செய்யலாம்.
மாடித் தோட்டத்தை வெற்றிகரமாக அமைக்க ஒரு மண் கலவை முறை

தேவையானவை:

செம்மண் அல்லது கரம்பை மண் 1/3

தென்னை நார் பித்து (லூசு) 1/3

ஆடு அல்லது மாட்டுச் சாணம் 1/3

இந்த விகிதாச்சரத்தில் மண்ணை கலக்க வேண்டும்.

இந்த கலவையில் இயற்கை உரம் மற்றும் தண்ணீர் முறைப்படி தெளிக்கவும்.

45 முதல் 60 நாட்களில் அருமையான உயிர் மண் தயாராகிவிடும். இந்த கலவை முறை மண்ணில் சிறிது மாற்றங்கள் ஏற்பட்டாலும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

இந்தக் கலவை மண் தயாரிக்க வசதியில்லாதவர்கள் மற்றொரு முறையை பயன்படுத்தலாம்.
2 பங்கு – செம்மண்
1 பங்கு – ஆற்றுமணல்
1 பங்கு சாணம் (மாடு அல்லது ஆடு)

இந்தக் கலவை மண்ணையும் மாடித் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
எந்த மண்ணாக இருந்தாலும் சரியான முறையில் மூடாக்கு போட்டால் முழுமையான பயன் கிடைக்கும்.

விதை தேர்ந்தெடுத்தல்

ஆரோக்கியத்திறாக அமைக்கப்படும் மாடித்தோட்டத்தில் விதைத் தேர்வு என்பது மிகவும் முக்கியம்.
விதைகள் இரண்டு வகை

பாரம்பரிய நாட்டு விதைகளில் விளைந்தவை இயற்கையானது, வாழ்விற்கு இனிமையானது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் விளைந்தவை. அழகானது, வாழ்விற்கு ஆபத்தானது.

மரபணு மாற்றப்பட்ட விதைகளின் குணங்கள்

இந்த விதைகளில் முளைக்கும் காய், கனிகளில் மீண்டும் விதைகள் உருவாகுவதில்லை. அப்படியானால் இது மலட்டு காய்கனிகள்தானே.
இது விளையும் மண்ணையும் மலடாக்குகிறது. இதை உண்ணும் மனிதனையும், மற்ற உயிரினங்களையும் மலடாக்குகிறது.
இவை வளர்வதற்கு இரசாயண உரங்களும் தேவைப்படுகிறது.
இதில் விளையும் காய், கனிகளை நாம் உண்பதால் பல நோய்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகிறோம்.
இந்தக் காய்கனிகளில் முளைப்புத் திறன் இல்லாததால் விதைக்காக பிறரை சார்ந்து, அதற்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்படுகிறோம்.
120 முதல் 180 நாட்களில் விளையக் கூடியவற்றை 30 முதல் 60 நாட்களிலேயே விளைய வைப்பதால் 120 வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டிய மனிதன் இன்று 25 வயதிலேயே பல நோய்களுக்கு உட்பட்டு சராசரியாக 60 வயதை கடப்பதே சாதனையாக உள்ளது.
ஆரோக்கியமற்ற, ஆபத்தான சுவையுமற்ற காய், கனிகளை தரக்கூடிய இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் நமக்குத் தேவையா?

பாரம்பரிய நாட்டு விதைகளின் குணங்கள்

இயற்கையின் நேரடி படைப்பு. சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாழ்வின் ஆதாரம் இந்தத விதையில் விளைந்த காய், கனிகள் மீண்டும் பல விதைகளை கொடுத்து, பல சந்ததிகளை செடிகளுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வழங்கிக் கொண்டே இருக்கிறது.
விதைக்காக யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் நமது பாரம்பரிய விதையில் கிடையாது. இந்த விதையில் விளையும் கீரை, காய்கனிகளில் சத்துக்கள் ஒப்பற்றது.
இதன் சுவையை அனுபவித்தால் மட்டுமே தெரியும். இயற்கை உரத்தின் துணையோடு வளரும் நமது பாரம்பரிய விதையின் வளர்ச்சி நமக்கு மிக்க மகிழ்ச்சி.

விதை நேர்த்தி செய்தல்

நாம் விதைகளை மண்ணில் விதைப்பதற்கு முன்பு விதை நேர்த்தி செய்தல் என்பது விதைகளில் நல்ல முளைப்புத்திறன் கிடைப்பதற்காக செய்வது.

விதைகளை மண்ணில் விதைப்பதற்கு முதல்நாள் இரவில் விதைகளை பஞ்சகாவ்யா, அமிர்தகரைசல், பசுங்கோமியம், பசுஞ்சானம், கரைத்த தண்ணீர், ஆட்டுச் சாணம் கரைத்த தண்ணீர் இவற்றில் ஏதாவது ஒன்றில் ஊற வைக்கவும்.

கீரை போன்ற சிறிய விதைகளை மூன்று முதல் ஆறு மணி நேரமும் வெண்டை, பாகல், அவரை, சுரை போன்ற பெரிய விதைகளை ஒன்பது மணி நேரமும் ஊற வைக்கலாம். (இதில் நேரம் சிறிது மாறினாலும் தவறு ஒன்றும் இல்லை.)
இந்த முறையில் விதைக்கும் விதைக்கும் அதிக பலனைத் தரும்.

விதைக்கும் முறை

விதைப்போம் வாருங்கள்
கீரை விதைகள் அளவில் மிகவம் சிறியவை. இவை ஒவ்வொன்றாக விதைப்பது சாத்தியமில்லை. அதனால் இது விதைக்கும் மண்ணில் மூன்று அங்குலம் இடைவெளி விட்டு ஒரு சிறிய குச்சியை வைத்து ஒரு கோடு போடவும். சிறிது கீரை விதைகளை கைகளில் எடுத்து இந்த கோடு போட்ட பள்ளத்தில் தூவி விட்டு, விதைகளின் மேல் சிறிது மண்ணை போட்டு மூடவும்.

பெரிய விதைகள் விதைக்கும் போது கைவிரல்களால் ஒன்று முதல் ஒன்றரை அங்குலம் துளையிட்டு அதில் விதைக்கவும்.

கீரை மாதிரி செடிகள் விதைத்த இரண்டு, மூன்று நாட்களிலேயே முளைத்துவிடும். மற்ற காய்கறி விதைகள் முளைப்பதற்கு 5லிருந்து 7 நாட்கள் வரை ஆகும்.

இந்த நாட்களை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஒரு சில விதைகள் முளைப்பதற்கு 10 நாட்கள் கூட எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் முளைக்கவில்லையென்றால் அந்த தொட்டியில் இன்னொரு முறை விதைகளை விதைக்கலாம்.

வெண்டை, தக்காளி, கத்திரி, கொத்தவரை, மிளகாய் போன்ற செடிகளை ஒரு தொட்டியில் அல்லது பையில் ஒன்று மட்டும் வளர்க்கவும்.
ஒரே பையில் மூன்று, நான்கு செடிகளை வளர்த்தால் செடிகள் வளரும்.
பூ பூக்கும் ஆனால் காய்கள் காய்க்காது அல்லது மிகச் சிறிய அளவாகவே காய்கள் காய்க்கும்.

விதைப்பது தண்ணீர் ஊற்றுவது – காலைப் பொழுது
இயற்கை உரமிடுவது பூச்சி மருந்திடுவது – மாலைப் பொழுது.

மூடாக்கு என்றால் என்ன?

மாடித் தோட்டத்தை மகிழ்விக்க நம்மாழ்வார் ஐயா கொடுத்த விருந்து மூடாக்கு. ‘ அது என்ன மூடாக்கு’

மொட்டை மாடியில் சுட்டெரிக்கும் வெயில்

எங்கும் தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை

இந்த இரண்டு சாபங்களுக்கம் மத்தியில் மாடித் தோட்டம் அமைக்க முடியுமா?
என்று பலரும் என்னிடம் கேட்டதுண்டு. நீங்கள் இதை சாபமாக நினைத்தால் இதற்கு கிடைத்த வரம்தான் மூடாக்கு. இங்கு ஒரு உண்மையை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு செடி, கொடி, மரம் வளரும்போது அதன் தண்டு, கிளைகள், இலை, பூ, காய் கனிகள் இவற்றிற்குத்தான் நேரடியாக சூரிய ஒளி கண்டிப்பாக தேவை. ஆனால் மண்ணிற்கும், வேரிற்கும் சூரிய ஒளி நேடியாக தேவை இல்லை.

அதனால் செடி வளர்க்கும் மண்ணிற்கு மேலே காய்ந்த இலைதழைகள், நம்வீட்டு காய்கறி கழிவுகள், வெங்காயத் தோல், முட்டைக் கூடு, தேங்காய் நார் என்று மண்ணில் மக்கக் கூடிய பொருட்களை போடலாம். இதற்குப் பெயர்தான் மூடாக்கு.

மூடாக்கு போடுவதால் மண்ணிற்கும் வேர்களுக்கும் ஏசி போட்டது போல் குளுமையாக இருக்கும். இதனால் மாடித் தோட்டத்தை பொறுத்தவரையில் கிரீன் சேட் என்ற பச்சை விரிப்பு கூட தேவையில்லை.

மூடாக்கு எவ்வளவு உயரம் போடுவது?

நாம் வளர்க்கும் தொட்டியில் அல்லது பைகளில் முக்கால் பங்கு மண்ணும், கால் பங்கு மூடாக்கும் போடலாம்.
இந்த மூடாக்கு என்ன செய்கிறது?

நாம் செடிக்கு ஊற்றும் தண்ணீர் நேரடியாக சுசூரிய ஒளி மண்ணில் படாததால் உடனடியாக ஆவியாவது தடைபடுகிறது.

மண்ணிற்கு மேல் மூடாக்கு எனும் குப்பைகளை போடுவதால் பைகளில் தேவையில்லாத மற்ற களைச் செடிகள் வளர்வது தடைபடுகிறது.

மூடாக்கு மண்புழுவிற்கும், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் நல்ல புகழிடமாக அமைகிறது.

இந்த மூடாக்கு நாளடைவில் மக்கி மண்ணிற்கு உரமாகவும் அமைகிறது.
இதுபோல் இன்னும் பல நன்மைகள் உள்ளன.

இயற்கை உரங்கள்
ஏன்
தேவை ?

இயற்கை உரங்கள்

மாடித் தோட்டத்தில் ஒரு சிறிய பைகளில் வளர்க்கப்படும் செடிகளில் நிறைய காய்கள் கிடைக்குமா? அளவிலும் பெரியதாக காய்க்குமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது.
நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த சில இயற்கை உரங்களை மாடித் தோட்டத்தில் மண்ணிற்கும், செடிகளுக்கும், அதில் பூக்கும் பூக்களுக்கும் தெளிப்பதால் நல்ல விளைச்சலுடன் அதிக சத்து மற்றும் அதிக சுவையும் கிடைக்கிறது.
உதாரணமாக நாம் இங்கு கொடுத்துள்ள அமுத கரைசலை 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதால் பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான நுண்ணுயிர்களை மண்ணிற்கு கொடுக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் நாம் மண்ணிற்கு மேல்போடும் மூடாக்கையும் நன்கு சிதைத்து மக்கவைத்து அதையும் மண்ணிற்கு உரமாக்குகிறது.

இனி இயற்கை உரங்களை எளிய முறையில் நாமே தயாரிக்கும் முறைகளைப் பார்ப்போம்.

அமுத கரைசல் தயாரிக்கும் முறை

இன்று அமுத கரைசல் பற்றி யாராவது தெரியாமல் இருந்தால் தழிழகத்தில் செய்தி ஊடகங்களை கவனிக்காதவராக இருப்பார்கள்.

அமுத கரைசல் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள்

  1. 10 லிட்டர் தண்ணீர் 2. ஒரு கிலோ சாணம் 3.ஒரு லிட்டர் பசுங்கோமியம் 4. 25 கிராம் நாட்டுச் சர்க்கரை

ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை அல்லது குவளையில் மேலே இட்டு கலக்குதல் வேண்டும். ஒரு குச்சியால் வலப்புறம் 50 சுற்று இடப்புறம் 50 சுற்று சுற்ற வேண்டும். காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை கலக்க வேண்டும். ஒரு பகல் ஒரு இரவு ஆக, ஒரு நாளுக்குள் ஊட்டம் (டானிக்) தயாராகி விடும்.

ஒரு லிட்டர் அமுத கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களில் பயிர் பச்சை கொடுத்து வளரத் துவங்கும்.
மீன் அமிலம் தயாரிக்கும் முறை
உழவர்களின் கண்டுபிடிப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த வளர்ச்சி ஊக்கி மீன் அமிலம். மலிவான மீன் கிடைத்தாலோ அல்லது மீன் கழிவு கிடைத்தாலோ அதுகொண்டு மீன் அமிலம் தயாரிக்கலாம். மீன் அல்லது மீன் கழிவை சம அளவில் வெல்லத்துடன் கலந்து பிசைந்து பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். 25 நாட்களில் மீன் அமிலம் தயாராகி விடும்.

25 நாட்கள் கடந்த பிறகு, 100 மி.லி. மீன் அமிலத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வறட்சியான செடிகள் மீறு தெளிக்கும் போது வறட்சியை தாங்கி பச்சை நிறம் பெற்று வளருகிறது.

பஞ்சகாவ்யா

இன்று இயற்கை உரங்களின் மகுடமான பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை, உபயோகப்படுத்தும் முறை மற்றும அதனுடைய பயன்கள் இவற்றை பற்றி பார்ப்போம்.

தேவைப்படும் பொருட்கள்.

பசுஞ்சானம் 1கி

பசுங் கோமியம் 600மிலி

பால் 400மிலி

தயிர் 400 மிலி

நெய் 100 கிராம்

கனிந்த வாழைப்பழம் 2

இளநீர் 600 மிலி

கரும்புச் சாறு 600 மிலி

சுண்ணாம்பு கலக்காத பதநீர் 600 மிலி

தண்ணீர் 1 லிட்டர்

சாணம், நெய் இரண்டையும் மூன்று நாட்கள் முன்னதாக பிசைந்து வைத்திருந்து பிறகு, மற்றவைகளோடு கலந்து தயாரிக்கலாம். இந்த பஞ்சகாவ்யாவை தயாரிக்க மண்பானை அல்லது பிளாஸ்டிக் குவளைகளில் மட்டும் பயன்படுத்தவும். (10 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களை பயன்படுத்தவும்)

பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை

மேலே சொன்னவைகளை பாத்திரத்தில் இட்டு சுத்தமான குச்சியை கொண்டு கலக்க வேண்டும். நன்றாக மருந்து கலப்பதற்கு கலவை கழிக்கும் அளவிற்கு வலப்புறமாக 50 முறையும், இடப்புறமாக 50 முறையும் சுற்றுதல் வேண்டும். இப்படி காலையும், மாலையும் சூரியன் உதிக்கும்போதும், சூரியன் மறையும் போதும் பதினைந்து நாட்கள் செய்ய வேண்டும்.
கலவையில் புழு வராமல் இருக்க எப்போதும் பாத்திரத்தை மூடியே வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் விதம்: 10 லிட்டர் தண்ணீரில் 300 மிலி பஞ்சகாவ்யாவை கலந்து செடிகளில் தெளிக்கவும்.

பயன்கள்: செடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்தாக இது அமைகிறது. இலைகள் நன்கு திரட்சியாக காணப்படுகிறது. அதிகமான பூக்கள் பூத்து, அதிகளவில் காய்கள் திரட்சியாக வளர்கிறது. பஞ்சகாவ்யா தெளித்துத வளரும் கீரை, காய், கனிகளின் சுவை மிகவும் அற்புதமாக இருக்கின்றது.

குறிப்பு: மாடியில் சிறிய அளவில் தோட்டம் போடுவதற்கு அமிர்தகரைசலே போதுமானது.

இயற்கை பூச்சி விரட்டிகள்

ஆரோக்கியமான உணவை உண்ணும் மனிதனுக்கு எப்படி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வியாதிகள் வருவதில்லையோ, அதுபோல் மாடித் தோட்டத்தில் நாம் ஏற்கனவே சொன்னபடி சரியான மூடாக்கு போட்டு இயற்கை உரங்கள் தெளித்து வளரும் செடிகள் நல்ல சத்து மிகுந்த ஆரோக்கியமான செடிகளாக வளரும்.
இப்படிப்பட்ட செடிகளில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் என்பது மிகவும் குறைவு.

அதையும் மீறி வரும் பூச்சிகளை பூச்சிக் கொல்லி என்ற விசத்தை தெளிக்காமல், இயற்கை முறையில் எப்படி சமாளிப்பது என்பதை பார்ப்போம்.

பூச்சிகளிலும் நன்மை தரும் பூச்சிகள், தீமைதரும் பூச்சிகள் என்று உண்டு. தேனீ, தட்டான் போன்றவை நன்மைதரும் பூச்சிகளாகும். இவைகள் தாவரங்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளை சாப்பிடுவதால் இவைகள் விவசாயிகளின் நண்பன்.

பூச்சிக் கொல்லி விஷத்தை தெளித்தால் அத்தனை பூச்சிகளும் அழிந்து விடும்.
மாடித் தோட்டத்தில் பொதுவாக எறும்பு, சிறிய வெள்ளைப் பூச்சிகள், சில புழுக்கள் இவற்றின் தாக்குதல்கள் வரலாம்

நம் முன்னோர்கள் பாரம்பரியமாக சாம்பலை செடிகளின் மேல் தூவியே பூச்சிகளை விரட்டியுள்ளனர். மேலும் சில இயற்கை பூச்சி விரட்டிகளைப் பார்ப்போம்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயத்தை பொடிசெய்து அதனுடன் சிறிது மஞ்சள்தூளை கலந்து தண்ணீரில் கலக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு மட்டும் (காதிசோப்பு கரைசல் கலவை இலைகளில் ஒட்டுவதற்காக) கலந்து செடிகளிலும், இலைகளின் மேற்பகுதிகளிலும் கீழ்பகுதிகளிலும் தெளித்து விடவும்.

சிறு குழந்தைகளுக்கு கைகளில் கட்டும் வசம்புவை பொடிசெய்து இதனுடனும் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் காதிசோப் கரைசலை கலந்து மேலே கூறியபடி செடிகளுக்கு தெளிக்கவும்.

இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவற்றை சம அளவில் எடுத்து, இதனை தட்டி சாறு எடுத்து, இதை தண்ணீரில் கலந்து காதிசோப் கரைசலையும் சிறிதளவு கலந்து மேலே சொன்னபடி செடிகளுக்குத் தெளிக்கவும்.

மேலே கூறியதுபோல் சுக்குவையும் பொடிசெய்து பயன்படுத்தலாம்.

என்ன செடிகளை வளர்ப்பது?

அரைக்கீரை, தண்டங்கீரைை, பொன்னாங்கண்ணி கீீரை, பருப்பு கீரை என இவற்றில் ஏதாவது மூன்று அல்லது நான்கு கீரைகளை வளர்க்கத் துவங்குவோம்.

ஏனென்றால் கீரைகள் பொதுவாக விதைத்த 21 நாட்களிலே பறித்து சமையல் செய்யும் அளவிற்கு வளர்ந்து விடும். பராமரிப்பும் குறைவே.
அதன்பின் நமக்கு அன்றாடம் தேவைப்படும் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் செடிகள் வளர்த்தால் மொத்தத்தில் மூன்று மாதங்களில் நமக்கு நல்ல பல அனுபங்கள் கிடைத்து விடும். அதன்பின் பப்பாளி, செடிமுருங்கை, கொடிகளால் படரக் கூடிய புடலை, பீர்க்கண், சுரை, வெள்ளரி, பாகல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அனுபவம் கூட கூட கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலி பிளவர், மாதுளை சப்போட்டா சீதா, வாழை, எலுமிச்சை, கரும்பு என எதை வேண்டுமானாலும் வளர்க்கக் கூடிய பக்குவம் நமக்கு வந்து விடும்.

மூலிகைச் செடிகளும், மருத்துவ குணங்களும்.

மாடித் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள்

துளசி: இரத்தத்தை சுத்தப்படுத்தும், பசியைத் தூண்டும், இருமல், தடுமத்திற்கு சிறந்தது.

ஓமவல்லி: சளி, இருமல், இரத்தத்தை சுத்தம் செய்யும், வயிறு உப்பிசம் சரியாகும்.

சோற்று கற்றாழை: உஷ்ணத்தை தணிக்க வல்லது. மூலசூடு, பெண்களுக்கு வெள்ளை படுதல், தோல் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை போன்ற நோய்களை குணமாக்கும்.

தூதுவளை: ஆஸ்த்துமான, இளைப்பு, நரம்புத் தளர்ச்சி இன்னும் பல நோய்களை குணப்படுத்தும்.

அருகம்புல்: இரத்தத்தை சுத்தம் செய்யும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும். இவற்றோடு உடலில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து, காரத்தன்மையை கொடுக்க வல்லது.

கீழாநெல்லி: மஞ்சள் காமாலை

மணத்தக்காளி: அல்சர்

சிறியா நங்கை: விசக்காய்ச்சல், சர்க்கரை நோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்.

திருநீற்று பச்சிலை (துண்ணத்து பச்சிலை): தலைவலி, விஷக்கடி, உடலில் ஏற்படும் கட்டிகள். (உடலில்பூசுவது மூலம் குணமாகும்)

மஞ்சள் கரிசலாங்கன்னி: கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகள், முடிவளர்ச்சிக்கு நல்லது

செம்பருத்தி: இருதயத்தின் காவலன்

மாடித் தோட்டம் அமைப்பதால் அதிகாலை எழும் நல்ல பழக்கம், சுத்தமான காற்றை சுவாசிக்கும் அற்புத வாய்ப்பு, உடலுக்கு நல்ல பயிற்சியையும் அளிக்கிறது. மாடித் தோட்டம் பராமரிப்பதால் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பிள்ளைகளிடம் ஒரு நல்ல மனோபாவம் ஏற்படுகிறது. கண்களுக்கு மட்டும் குளுமை அல்ல வீட்டிற்கும் குளுமை ஏற்படுகிறது.

முக்கிய குறிப்புகள்:

வீட்டுச் செடிகளை காக்கும் முறை பொதுவாகக் குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும். வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். இதனைச் செய்யாமல் தண்ணீர் ஊற்றுவதால் ஒரு பயனும் இல்லை.

பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணெய் மாதம் ஒரு முறை அனைத்து வகைச் செடிகளிலும் தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தூளை ஒரு பிடிவீதம் செடியின் வேர் பகுதியி;ல் போட்டு நன்கு கொத்தி விட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஒருபிடி போட வேண்டும். இரண்டு வயது செடிகளுக்கு இரு மடங்கு தேவை.

செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்புத் தண்ணீராக இருக்க கூடாது.

தக்காளி, வெண்டை, பச்சை மிளகாய் போன்ற காய்கறிகளுக்கு முட்டை ஓடு, வெங்காயத் தோல், மக்கிய காய்கறி கழிவுகள், டீத்தூள் உரமாக போடலாம்.

அவரை கொடி பூக்காமல் இருப்பின் இலைகளை இடையிடையே உருவி எடுத்து விட்டால் பூக்கள் பூத்து காய்கள் காய்க்கத் தொடங்கும்.எலுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போட்டால் செழித்து வளரும்.

வீட்டிலிருந்து கிடைக்கும் கழிவுகளிலிருந்து உரம் பூச்சிக் கொல்லி தயாரிப்பது எப்படி?

ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணிரில் கலந்து தெளித்தால் கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக், அசைவப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு வாழை மற்றும் திராட்சை போன்ற பழங்களின் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி பதினைந்து நாட்கள் வைத்து விட வேண்டும். பிறகு அருமையான டானிக் கிடைக்கும். இதைச் செடிகளுக்குத் தெளித்தால் அருமையாக வளரும்.

Add Comment

Your email address will not be published.