மஹ்மூது நபிகள் பிரானே…

Print Friendly, PDF & Email

மஹ்மூது நபிகள் பிரானே

மதினாவில் வாழும் கோனே

மதினாவில் ஆளும் கோனே!

இறைவன் தூதாக வந்தீர்

       இதமான போதம் தந்தீர்

குறைகள் எல்லாம் கலைந்தீர்

       குன்றாமல் சேவைச் செய்தீர்

மறைப் போற்றும் ஞானச் சுடரே

       மன்னர் ரசூலுல்லாஹ்வே! (2)

பொல்லாத மூக்கர் சேர்ந்து

       தொல்லைத் தந்தார்கள் தொடர்ந்து

அல்லாஹ்வின் கருணையாலே

       ஆபத்தெல்லாங் கடந்து

அடைந்தீர்கள் வாகை யாளும்

       அண்ணல் ரசூலுல்லாஹ்வே!

மக்காவில் வாழ்ந்த அன்று

       மகத்தானத் தொல்லைக் கண்டீர்

தக்கரோ பக்கரோடு

       தன்மை மதீனாச் சென்றீர்

முத்தான மாந்தர் நபியே

       முதன்மை ரசூலுல்லாஹ்வே! (2)

படுநாச உஹது போரில்

       பலமான எதிரி மோத

திடமாகப் போர்ப் புரிந்தீர்

திரளான நன்மைக் கண்டீர்

உயர்வான சுகந்த வடிவே

       உண்மை ரசூலுல்லாஹ்வே (2)

தீன் மார்க்கம் ஓங்க உழைத்தீர்

       வான் சேவையால் தழைத்தீர்

ஆண்டவன் அருளை ஏந்தி

       அறமான வாழ்வு வாழ்ந்தீர்

பொறுமை நிறைந்த நபியே

அருமை ரசூலுல்லாஹ்வே! (2)

கமலும் கஸ்தூரி வாசம்

       கனிவாய் தர்பாரில் வீசும்

அமுதமான ஜோதி மேவும்

       அருளாளன் முஸ்தஃபாவே

அன்பாய் ஸலாம் உரைத்தே

       அஹ்மத் ரசூலுல்லாஹ்வே! (2)

(மஹ்மூது…)

(நிறைவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *