நாகூர் ஷாஹுல் ஹமீது வலி ரலியல்லாஹு அன்ஹு

நாகூர் ஷாஹுல் ஹமீது வலி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 3 Comments February 20, 2015

Print Friendly, PDF & Email

நாகூர் ஷாஹுல் ஹமீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர்.

முஹம்மது நபியின் வழித்தோன்றல் சையிது ஹஸன் குத்தூஸ் என்பவருக்கும்,  நபியின் மருமகன் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித்தோன்றலான சையித் ஹமீதுத்தீன் மகளுமான அன்னை பாத்திமாவுக்கும் மகனாக சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவின் மாணிக்கப்பூர் நகரில் பிறந்தவர் தான் ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ்.

இறைத்தூதர் ஹிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷாஹுல் ஹமீதின் பிறப்பு குறித்து அன்னை பாத்திமாவுக்கு அறிவித்தார்கள். மூன்று மாத கருவாக இருந்தபோதே தனது அற்புதத்தை நிகழ்த்திவிட்டார்கள்.  ஷாஹுல் ஹமீது நாயகம். உடல்நலக் குறைவாக இருந்த தனது தந்தை நலம் பெறுவார் என்று தாயின் கருவறையில் குரல் எழுப்ப அவ்வாறே தந்தை குணமடைந்தார். ஆறுமாதக் கருவாக இருந்தபொழுது தனது தாயார் தொழுகைக்காக ஒழுச் செய்ய கிணற்றுள் விழுந்த பாத்திரத்தை தண்ணீரோடு தாயின் காலடியில் இருக்க வைத்தார். கருவறையில் இருந்தபடியே மேலும் இரண்டு அதிசயங்களை நிகழ்த்திய ஹாஹுல் ஹமீது , ஹிஜ்ரி 910ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வியாழன் மாலை வெள்ளிக்கிழமை இரவில் இப்புவியில் ஜனனம் செய்தார்.

நாயகம் பிறந்ததும் ஹிலுரு அலைஹிஸ்ஸலாம்மற்றும் இல்யாஸ் நபிகள் அந்த அறையில் தோன்றினார். ஹிலுரு அலைஹிஸ்ஸலாம்குழந்தையை கையில் எடுத்து பாங்கு சொன்னார்கள். இல்யாஸ் நபி ‘சையது அப்துல் காதிர்’ எனப் பெயர் சூட்டிவிட்டு தாய்க்கருகில் கிடத்திவிட்டு மறைந்தார்கள்.

நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த ஷாஹுல் ஹமீது நாயகம் சிறுவயதிலேயே நோன்பு நோற்பது, கேட்பவர் மெய் மறக்கும் நிலையில் திருமறையை இசையுடன் ஒதுவது, மார்க்க கடமைகளை முறையாக கடைப்பிடிப்பது என்று பக்தியில் திளைத்து வந்தார்கள்.

குர்ஆன், தப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹு ஆகிய மார்க்கக் கல்விகளையும் சரித்திரம், பூகோளம், கணிதம், தத்துவம், தர்க்கம், வானசாஸ்திரம் ஆகிய லௌகீகக் கல்விகளையும் பதினெட்டு வயது  நிரம்புவதற்குள் கற்று முடித்தார்கள். இடையிடையே ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சிறுவன் முன் தோன்றி வேதத்தை தெளிவாக்கி வைத்தாகள்.

வாலிப பருவம் அடைந்தது ஷாஹுல் ஹமீது அவர்கள் தங்களுக்கான ஞானகுருவைத் தேடி ஹிஜ்ரி 928ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் ஒரு திங்கட்கிழமை வழித்துணையின்றி, கைச்செலவுக்குப் பொருள் இன்றி, துறவுக்கோலத்துடன் குவாலியர் பட்டணத்துக்கு விரைந்தார்.

நடை பயணமாக காடுகளை கடந்து வந்து கொண்டிருந்த நாயகத்தை திருடர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நெருங்கினார்கள். அவரிடம் பொருள் இல்லாததால் நாயகத்தை கொலை செய்யக் கருதி ஆயுதங்களால் வெட்டியவர்கள் தங்கள் உடல்களே துண்டாகி விழுந்தனர்.  கொள்ளையர்களின் உறவினர்கள் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அவர்களின் உடலை ஒட்டி, உயிர் கொடுத்து அற்புதம் நிகழ்த்தினார்.

குவாலியர் நகரை நெருங்குகையில் அங்கிருந்த சிற்றூரில் ஒரு சிறிய மசூதியில் நாயகம் தங்கி தனது ஞானகுருவை இறைவனே காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அப்போது தோன்ரிய அசரீரி ‘ஷாஹ் அல் ஹமீது’ என்ற கருணைப் பெயரை உமக்கு சூட்டியுள்ளோம். உமது ஞானகுரு முஹம்மது கௌது. அவரிடம் செல்’ என்றது.

அதன்படி முஹம்மது கௌதுவிடம் சென்று அவரது மெய்ஞ்ஞான பயிற்சிக் கூடத்தில் பயின்று மெய்ஞ்ஞானத் தீட்சை பெற்றுக் கொண்டார். பத்து ஆண்டுகள் மெய்ஞ்ஞானக் கல்வி பயின்றவர் பின்னர் அங்கிருந்து கிளம்பினார்கள். அவருடன் நானூற்று நாற்பது சீடர்கள் உடன் சென்றனர்.

அப்போது மலைவழியாக வரும்போது ஆதிபிதா ஆதம் (அலைஹிஸ்ஸலாம்), ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் நாயகத்துக்கு ரிக்வத் எனப்படும் திருவோடு போன்றதொரு பாத்திரத்தை வழங்கினார்கள். தேவைபடும் போது தேவைப்பட்ட உணவை இதனின்று பெற்றுக் கொள்ளலாம்.

ஊர்தோறும் மக்களுக்கு உபதேசித்தும், உண்மையைப் பேணச் செய்து இஸ்லாத்தை நிலை நாட்டிக் கொண்டே நாயகம் அவர்கள் மாணிக்கப்பூர் வந்தடைந்தனர். அங்கு கொஞ்ச காலம் இருந்தவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்வதை தடை செய்தவர்களாக சீடர்களுடன் லாகூர் சென்றார். அங்கு இறைவனின் ஆணைப்படி காழி நூருத்தீன் முஃப்தி என்பவரின் மனைவி ஜஹாரா பீபிக்கு தான் மென்ற வெற்றிலை தாம்பூலத்தை கொடுத்து அவரை கருவுறச் செய்தார்.

அவர் பெறப்போகும் முதல் குழந்தைக்கு ‘முஹம்மது யூசுஃப்’ என பெயரிட நூருத்தினிடம் தெரிவித்ததோடு குழந்தையின் தன்மை குறித்தும் தெரிவித்த நாயகம் தன் சீடர்களுடம் பயணத்தை தொடர்ந்தார்.

மேற்கு, தென்மேற்கு ஆசிய நாடு நகரங்களைச் சுற்றிக்கொண்டு துர்க்கி தேசத்தினுள் புகுந்த நாயகம், கர்ஸான என்ற பட்டணத்தை அடுத்துள்ள மலையில் நாற்பது நாட்கள் தனித்து சில்லா இருந்தார்கள். அன்று ஹிஜ்ரி 952 ம் ஆண்டு ரஜப் மாதம் 12&ம் நாள் லாகூரில் ஜஹாரா பீபிக்கு மகன் பிறந்தான். மனக்கண்ணால் தன் மகனை கண்டு உரையாடி முத்தமிட்டு மகிழ்ந்தார்கள்.

ஒருநாள் இரவு தொழுகையின் போது தனது தந்தை மரணிப்பதை அறிந்து தன் சீடர்களுடன் ஒரே இரவில் ஆசியா மைனரிலிருந்து இந்தியாவின் மாணிக்கப்பூரை நடந்தே அடைந்து அதிசயம் நிகழ்த்திய நாயகம் தந்தை மறைந்து 40 தினங்களுக்குப் பின் அரேபியாவுக்கு கிளம்பினார்கள்.

அங்கு மக்கா, மதீனாவில் ஹஜ்ஜு செய்தபடி இருந்தார் நாயகம். அப்போது நாயகம் நிகழ்த்திய அதிசயத்துக்கு பரிசாக இபுனு ரவூஃப் தனது கப்பலை நாயகத்துக்கு சொந்தமாக்கி பத்திரம் கொடுக்க, அதை தன்னிடம் வந்து யாசித்தவனுக்கு கொடுத்துவிட்டு கஃபாவை நோக்கி நடந்தார்கள்.

நாயகம் அவர்கள் தங்களின் 37 ம் வயதில் ஜித்தா துறைமுகத்திலிருந்து கப்பல் ஏறி கேரளாவின் பொன்னாணி எனும் ஊரில் கரையிறங்கினார்கள். அப்போது நாயகத்துடன் அவரது மகன் யூசுஃப் ஆண்டகையும் இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து லட்சத்தீவுகள், சிலோன் முதலிய வெளிநாடுகளுக்கும் காயல்பட்டணம், நத்தம், மேலப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் சென்று இறைப்பிரசங்கம் செய்தவர் தஞ்சாவூரை அடைந்தார். அதை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கன் உடல்நலம் குன்றியிருந்தார். நாயகத்தின் சிறப்புகள் தெரிந்து அவரைக் கண்டு நோய் நீங்கப்பட்ட மன்னன், அதற்கு வெகுமதியாக நிலங்களைக் கொடுத்தான். அந்த இடத்தின் பகுதியில் தான் தர்காவும், அதைச் சேர்ந்த குளம் முதலிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.

ஷாஹுல் ஹமீது நாயகம் அவர்கள் நாஹுரில் இருபத்தெட்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அற்புதங்கள் பல நிகழ்த்திய நாகூர் நாதர் ஹிஜ்ரி 978ம் வருஷம் ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவு புகழுடம்பு எய்தினார்கள்.

தர்கா வரலாறு:

ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவர்களது பெயரால் தஞ்சாவூர் நகரை காதர் நகர் என பெயரிட்டனர். நாகூர் பகுதியில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த பெருமை நாகூர் ஆண்டகை அவர்களைச் சாரும். இவர்களது அருட்கொடையைத் தொடர்ந்து பெறும் பொருட்டு தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர். இஸ்லாமியர் பெருகினர். இப்பகுதியில் இஸ்லாம் செழித்தோங்கியது.

நாகூர் நாயகம் மறைந்ததும் அவரது புதல்வர் தனது மனைவி, மக்களுடன் அங்கு குடித்தனம் நடத்தி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருந்ததோடு நாயகத்தின் கஃப்ரை சுற்றி பலகையால் பள்ளி போல் அடைத்தார்கள். அந்தப்பள்ளியே இன்று அழகிய ஐந்து மினாராக்களை( கோபுரம்) உடையதாய் விளங்குகிறது.

மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது. தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர்.

முதல் மினாராவை இப்ராஹீம் கான் என்பவர் ஹிஜ்ரி ஆயிரத்து ஐம்பத்தைந்தாம் வருடம் கட்டினார். இதற்கு சாகிபு மினாராவென்று பெயர். இரண்டாம் மினாராவை செய்யது மரைக்காயர் கட்டிக் கொடுத்தார். இம்மினாரா நாயகத்தின் தலைப் பக்கம் இருப்பதால் தலைமாட்டு மினாரா எனப்படுகிறது. இந்த மினாராவில் இந்து அன்பர் ஒருவர் சின்ன தங்கக் கலசத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.

மூன்றாம் மினாரா( முதுபக்கு மினாரா) மலாக்காவை சேர்ந்த பீர் நெய்னா என்பவராலும், நான்காம் மினாரா (ஓட்டு மினாரா) பரங்கிப்பேட்டை நீதிபதி தாவுக்கான் என்பவராலும், ஐந்தாம் மினாரா(பெரிய மினாரா) தஞ்சையை ஆண்டுவந்த பிரதாபசிங்கு மன்னனாலும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பெரிய மினாரா 131 அடி உயரம் கொண்டதாகும்.

நாகூர் தர்கா ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. சக்கரவர்த்தி சுல்தான் துல்கர்னைன் கட்டிய முதுபக்கு(1). இந்த ஸ்தலத்தில் தான் நாயகம் மரணித்தார்கள். இந்த ஸ்தலத்தில் உள்ள அற்புதக்கேணியின் தண்ணீரை புண்ணிய தீர்த்தம் என்று கருதி பக்தர்கள் எடுத்து செல்லுகின்றனர்.

நாயகத்தின் இறந்த உடலை குளிப்பாட்டி யாஹுசைன் பள்ளி. இது முதுபக்குக்கு வெளியில் தென்புறத்தில் இருக்கின்றது. நாயகத்தின் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் தேங்கி நின்ற சிறிய குட்டை தான் தர்கா குளம். குட்டை போலிருந்ததை அச்சை சுல்தான் பெருங்குளமாக வெட்டி தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தான்

தர்காவில் இருக்கும் பீர்மண்டபம். திருவிழாக்காலங்களில் பீர் சாயபு என அழைக்கப்படும் தபோதனர்கள் 3 நாள் உபவாசம் இருந்து நோன்பு திறந்துவிட்டு பீர்மண்டபத்தில் வந்து அமர்வர்.

நாயகம் திருமுடியிறக்கிய கடற்கறை ஓரம் தான் சில்லடி என்ற ஆலயம் இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவும் நடந்து வருகிறது.

நாயகம் அவர்கள் 40 நாள் இறைதியானம் இருந்த புன்னிய ஸ்தலம் வாஞ்சூர் பள்ளிவாசல். இது நாகூரிலிருந்து 21/2 மைல் தொலைவில் உள்ளது.

ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா ஆண்டவர்களின் சன்னதி 7 வாயில்கள் கொண்டது. இவை அனைத்தும் வெள்ளித் தகட்டால் வேயப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கான

குத்துவிளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்நிதிக்குள் எந்த மதத்தினரும் செல்லலாம்.

இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி கடைசி மூன்று வாசல்களை கடக்க மட்டும் பெண்களுக்கு அனுமதியில்லை. நாகூர் ஆண்டவர், அவரது மகன் முகம்மது யூசுஃப், மருமகள் செய்யிதா சுல்தான் பீவி அம்மாள் ஆகியோரின் சமாதிகள் உள்ளே அமைந்துள்ளது. நாகூர் ஆண்டவர் இடுப்பில் கட்டியிருந்த இரும்புச்சங்கிலி,  குமிழ்கள் இல்லாத காலணி, அதிசயம் நிகழ்த்திய கொம்புத் தேங்காய ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அரபி மாதம் ஜமாத்துலாகிறு பிறை 1 ல் தர்காவில் கொடியேற்றத் திருவிழா நடக்கும் பிறை 10ம் நாள் இரவு நாகையிலிருந்து அதி விமரிசையாக சந்தனக்கூடு புறப்பட்டு வந்து ஆண்டவர்கள் சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பிறை 11 ல் பீர் ஏகுதல் நடைபெற்று 14&ம் இரவு இறுதிக்கட்டம் அடையும். இந்த திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்கின்றனர். நாகூர் சமாதியில் போர்த்தப்படும் சால்வை, மலர்ப் போர்வை பழனியைச் சேர்ந்த ஒரு இந்துக்குடும்பத்தாரால் இன்றளவும் கொண்டுவரப்படுகிறது. நாகூர் தர்காவை நாயகத்தின் வாரிசுகளான சுமார் 640 குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர்.

நாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) நோயினைத் தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும் ‘கஞ்சுல் கராமத்து’ கூறுகிறது.

அனைத்து மதத்தினருக்கும் அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார் நாகூர் ஆண்டவர்.

நாகூர் நாயகத்தின் நல்லுபதேசங்கள்

  1. தேவையான பொருளொன்றை வாங்க கடைவீதிக்குச் சென்று ஒரு கடைக்குள் நுழைகிறோம். வேண்டிய பொருள் அங்கே இருக்கிறது. அது குறித்து நாம் யாரிடம் பேசுவோம்? கடைக்காரரிடம்தான் பேசுவோம். அந்தப் பொருளிடம் பேசமாட்டோம். அப்படியிருக்க, எல்லாவற்றையும் படைத்துப் பாதுகாத்து வருகின்ற அல்லாஹ்வை நெருங்க முடியாமல் அவனது அற்பப் படைப்புகளிடமே உதவி கோருவதும் ஆதரவு வைப்பதும், புகல் கேட்பதும் எப்படிச் சரியாகும்?
  2. நம்மை மிகவும் நெருங்கியிருக்கிற அல்லாஹ்வை முட்டாள்தனமான செயலாலும் எண்ணத்தாலும் நாம்தான் தூரமாக்கிக் கொள்கிறோம். ஞானத்தாலும் அன்பாலும் அவனை நெருங்கிச் செல்கிற புத்திசாலிகளை அணைத்துக்கொள்ள அவன் காத்திருக்கிறான்.
  3. பிரபஞ்சத்தின் அதிபதியே நம்மை ஆலிங்கனம் செய்து கொண்டுவிட்டபின், அவனது படைப்புகள் நமக்கு ஏன் தலைவணங்கி நிற்காது?
  4. இஸ்லாத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று அகம், மற்றது புறம். அகத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டு புறத்தை அழுக்கடையச் செய்தீர்களானால், நீங்கள் இஸ்லாத்தைப் பேணியவர்களாகமாட்டீர்கள். புறத்தை கவனித்துக்கொண்டு அகத்தை மறந்தாலும் அப்படியே.
  5. இரண்டு பக்கங்களைக் கொண்ட இஸ்லாம் என்ற உடலுக்கு தொழுகையே உயிர். எக்காரணம் கொண்டும் தொழுகையை அலட்சியம் செய்ய வேண்டாம்.
  6. அதிகமாக உறங்க வேண்டாம். மந்த நிலையை ஏற்படுமாறு அதிகமாக உண்ண வேண்டாம். தொடர்ந்து நோன்பு நோற்று வருவது தீய எண்ணங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
  7. அறிஞர்களையும் பெரியவர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  8. முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபடுகிறவனுக்கு மற்ற வஸ்துக்கள் வழிபட விரும்பும்.
  9. நஃப்ஸ் (கீழான இச்சைகள் / மனது ) கட்டுப்பட்டுவிட்டால் மற்ற யாவும் எளிதாகிவிடும்.
  10. நான் உங்கள் ஆன்மாவில் இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் என்னைக் கவனிப்பதில்லை என்றும் கூறுகிறான். உங்கள் அகத்தை தன் இருப்பிடமாக இறைவன் வைத்திருக்கிறான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் இது சத்தியமானதாகும். எனவேதான் யார் தன்னை அறிந்து கொண்டாரோ, அவர் தன் நாயனை அறிந்து கொண்டார் என்று நபிகள் நாயகமும் கூறினார்கள்.
  11. ஒரு மனிதன் தன் கண்களை மூடிக்கொண்டு, காதுகளை அடைத்துக் கொண்டு, ஆட்டம் அசைவின்றி படுத்திருந்தாலும்கூட தானிருப்பதை உணர்கிறான். இவ்வாறு எது உணரப்படுகிறதோ அதுவே மனிதனுடைய அகமாக இருக்கிறது. அகத்தில்தான் ‘ரூஹ்’ எனப்படும் ஆன்மா இருக்கிறது.
  12. ஒவ்வொரு விஷயத்திலும் சிலருக்கு இறைவன் நிபுணத்துவத்தைக் கொடுத்திருக்கின்றான். இறைவனைப் பற்றிய ஞானத்தை அடைய வேண்டுமானால் அவனுடைய பாதையில் ஏற்கனவே சென்றுள்ள மெய்யடியார்களைத் தேடியடைவதுதான் உங்களுக்குச் சரியான பாதையாகும்.
  13. பாதுஷாக்களும், மன்னர்களும் மதத்தின் பெயரால் மனித இரத்தத்தைச் சிந்தாதீர்கள். உங்களுடைய அதிகார ஆசைகளுக்கு ஆண்டவனின் பெயரைச் சூட்டாதீர்கள்.
  14. சமூகத்திலும் மார்க்கத்திலும் குழப்பத்தை உண்டாக்கும் கூட்டத்தினரோடு சேரவேண்டாம். மார்க்க சட்டதிட்டங்களும், ஆன்மிகப் பாதையும் ஒன்றோடொன்று முரண்பட்டதோ, வேறு வேறானதோ அல்ல.
  15. நல்லடியார்களின் சமாதிகளை தரிசனம் செய்வதால் உங்களின் சகல காரியங்களும் நேர் பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
  16. மனிதனுக்குள்ளே இருக்கும் ரகசியம்தான் இறைவன்.
  17. உங்களுடைய குருநாதரின் தோற்றத்தில்தான் உங்களுக்கு சத்தியம் வெளியாகும்.
  18. ஞானமானது உங்கள் நீண்ட அங்கியிலோ, ஜபமாலையிலோ இல்லை.
  19. மனிதன் தனக்கு நன்றி செலுத்துவதை இறைவன் எதிர்பார்க்கிறான். ஆனால் மனிதனால் இறைவனுக்கு எப்படி நன்றி செலுத்த முடியும்? தொடக்கத்தில் இறைவனின் ரகசியமாக மனிதன் இருந்தான். இன்றோ இறைவன் மனிதனின் ரகசியமாக உள்ளான். நம்மில் அவனை பகிரங்கப் படுத்துவதே நாம் அவனுக்குச் செய்யும் நன்றியாகும்.
  20. உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கும் பொருட்டு இறைவன் என்னை இந்தியாவில் தோன்றச் செய்துள்ளான்.

3 Comments found

User

Sufi Manzil

அல்லாஹ் தப்லீக் என்ற வஹ்ஹாபிய நச்சு இயக்கத்தை விட்டும் நம் அனைவரையும் காப்பானாக. உண்மையான தவ்ஹீத், கலிமாவின் படி செயல்படுபவர்களான சுன்னத்வல் ஜமாஅத்தில் என்றும் நிலைநிறுத்தி வைப்பானாக! ஆமீன்.

Reply
User

Syed Rahman

where can I get a copy(literature) of the history of Sahul Hameedu Badhusha?

Reply
    User

    Sufi Manzil

    நாங்கள் வெளியிட்டுள்ளது நாகூர் நாயகத்தின் சரித்திரச் சுருக்கத்தைத்தான். முழு சரித்திரமும் தெரிய வேண்டுமெனில், அவர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கவும்.

    Reply

Add Comment

Your email address will not be published.