தல்கீன் ஓதுவது ஆகுமானதா?

தல்கீன் ஓதுவது ஆகுமானதா?

By Sufi Manzil 0 Comment January 24, 2016

Print Friendly, PDF & Email

தல்கீன் ஓதுவது ஆகுமானதா?

ஆக்கம்: மௌலவி S.L. அப்துர் ரஹ்மான் கௌஸி

நபியே! நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். ஏனென்றால் நல்லுபதேசம் நிச்சயமாக முஃமின்களுக்கு பயனளிக்கும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவன் கூறியுள்ளான்.

  1. ஒரு மனிதன் இறந்ததும் மண்ணறைக்குள் அடக்கம் செய்துவிட்டு திரும்புகின்ற மக்களின் பாதணியின் சப்தத்தை அந்த மைய்யித்துக் கேட்கின்றது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
  2. இறந்தவரின் உடலை கப்ரில் வைத்து நல்லடக்கம் செய்தபின் ஒருவர் அடக்கப்பட்டவரின் தலைமாட்டில் அமர்ந்து, இன்னார் மகனே! அல்லது இன்னார் மகளே! இறைவன் ஒருவன் என்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஈமான் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மறுஉலகாகிய மறுமைக்கு சென்றுள்ளாய். இப்போது உன்னிடம் இரு மலக்குகள் வந்து நாயன் யார்? உனது நபி யார்? உனது சகோதரர்கள் யார்? உனது கிப்லா எது? உனது இமாம் யார்? என்று கேட்பர். அதற்கு நீர் கொஞ்சமும் தயங்காது தைரியமாக எனது றப்பு அல்லாஹ், எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், எனது சகோதரர்கள் முஸ்லிம்கள், எனது கிப்லா கஃபா, எனது இமாம் குர்ஆன் என்று சொல்வீராக! என்று சொல்லியபின் அவரை விட்டும் விடை பெறுவது என்பதாகும். அதனை அவர் கேட்பார். (நூல்: தப்றானி)
  3. நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுள் ஒருவரான அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு வஸியத்து செய்துள்ளார்கள். அதாவது ஒரு ஒட்டகத்தை அறுத்து அதன் மாமிசத்தை பங்கு வைக்க எந்தளவு நேரம் தேவைப்படுமோ அந்த அளவு எனது கப்ருக்குப் பக்கத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், எனது இரட்சகனின் தூதர்கள் அதாவது மலக்குளிடம் நான் எதனை உரையாட வேண்டும் என்பதை உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் உங்களின் மூலம் நான் மருகுதல் பெறவும்’ என்றார்கள். நூல்: முஸ்லிம், மிஷ்காத் 149)
  4. ஸஹதிப்னு முஆத்ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்யப்பட்டபின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஸ்பீஹும், தக்பீரும் ஓதினார்கள். உடனே ஸஹாபாக்கள் அவைகளை அதிகமாக ஓதினார்கள். பின்பு ஸஹாபாக்கள் காரணத்தை வினவியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: ‘ஸாலிஹான இந்த நல்லடியாரை கப்ரு நெருக்கிக் கொண்டிருந்தது. அல்லாஹ்தஆலா கப்ருடைய நெருக்கத்தை அகற்றும் வரைக்கும் நான் தஸ்பீஹும், தக்பீரும் ஓதிக் கொண்டே இருந்தேன்’ என்றார்கள். (நூல்: அஹ்மது மிஷ்காத்)

 தல்கீன் பற்றி இமாம்களின் கருத்துக்கள்.

தல்கீன் ஓதுகின்றவன் மரணித்தவரின் தலைப்பக்கமாக நிற்பதும், மூன்று முறை ஓதுவதும் சுன்னத் ஆகும். வயது வராத சிறுவனுக்கு தல்கீன் ஓதுவதில் மாத்திரரம் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. சிறுவர்களுக்கு கப்று – மண்ணறையில் கேள்வி உண்டு என்று கூறுவோர் அவர்களுக்காக தல்கீன் ஓதுவது சுன்னத் என்றும், அவர்களுக்கு கேள்வி இல்லை என்போர் அது சுன்னத்தில்லை என்றும் கூறுகின்றனர்.

  1. தல்கீன் ஓதுவது சுன்னத் என்று உம்தத்துஸ் ஸாலிக், பத்ஹுல் முஈன், மஹல்லி பேன்ற நூற்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  2. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தல்கீன் ஓதுவது பற்றி கேட்டதற்கு, ‘ஆம்! அது சுன்னத்தான காரியம்’ என்று சொன்னார்கள்.

எல்லாக் காலங்களிலும் அனைத்து நகரங்களிலும் எவ்வித மறுப்பும் இன்றி தல்கீன் ஓதிவரும் நடைமுறை ஒன்றே தல்கீன் ஓதுவதற்கு போதுமான சான்றாகும். (ஆதாரம்: றூஹ் பக்கம் 20)

  1. இமாம் இப்னு ஹஜர் மக்கி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: புத்தியுள்ள பருவமடைந்த மைய்யித்திற்கு தல்கீன் ஓதுவது சுன்னத்தாகும்.

(ஆதாரம்: துஹ்பா பாகம்3, பக்கம் 207)

  1. இமாம் ஷிஹாபுத்தீன் ரமலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தல்கீன் ஓதுவது சுன்னத்தா அல்லது மக்ரூஹா? தல்கீன் சொல்லிக் கொடுப்பது அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பா? அல்லது அடக்கம் செய்யப்பட்ட பின்பா? என்று கேட்டதற்கு சிறு குழந்தை தவிர்ந்தவர்களுக்கு மைய்யித் அடக்கம் செய்யப்பட்டபின் தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத் ஆகும்.

             (ஆதாரம்: பதாவா றமலி பாகம்2, பக்கம் 38)

  1. ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நபிமார்களுக்கும் சிறுவர்களுக்கும் கப்று விசாரணையோ கப்றின் வேதனையோ முன்கர் நகீரின் கேள்விகணக்கோ கிடையாது. அதனால், ஷாபி மத்ஹபின் அஸ்ஹாபுகள் சிறுவர்கள் (பருவம் எய்த முன்) அடக்கம் செய்ய்ப்பட்ட பின் அவர்களுக்கு தல்கீன் கூறப்படமாட்டாது என்றும் தல்கீன் சொல்லிக் கொடுப்பது பருவம் அடைந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும். இமாம் நவவி அவர்கள் ரௌலா என்ற நூலிலும் ஏனைய அவர்களின் நூற்களிலும் இவ்வாறுதான் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 152)
  2. வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தினரே மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதக் கூடாது என்று முதன்முதலில் வாதித்தனர். மரணித்தவர் கப்ரில் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவதையும், கப்ரில் விசாரணை செய்யப்படுவதையும் நிராகரித்தனர். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் மரணித்தவர்களுக்கு தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத்தாகும். (ஆதாரம்: ரத்துல் முக்தார் பாகம்1, பக்கம் 571)
  3. தல்கீன் ஓதாதவரும், ஓத மறுப்பவரும் முஃதஸிலா இயக்கத்தை சார்ந்தவராகும். இவர்கள் மய்யித்தை உணர்வற்ற சடமாகவும், மரணத்தின் பின் கப்ரில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதையும் நிராகரிக்கின்ற வழிகெட்ட அமைப்பை சார்ந்தவர்கள்.

எனவே தல்கீன் ஓதுதல் நல்ல காரியம் என்பதற்கு அது தொடர்பான நபி மொழிகளும், இமாம்களின் கூற்றுக்களும் அதிகம் உள்ளன. இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் மனக்கண் தெளிவான ஒருவனுக்கு போதுமானவையாகும். எனவே தல்கீன் ஓதுதல் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளிடமும் திட்டமான அறிவு ஞானமுள்ளவர்களிடமும் ஸுன்னத் ஆன விசயமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் கூட அது கூடாத விசயமென்று சொன்னது கிடையாது.

Add Comment

Your email address will not be published.