செய்யிது அஹ்மது கபீர் ரிஃபாயி ரலியல்லாஹு அன்ஹு

செய்யிது அஹ்மது கபீர் ரிஃபாயி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 1 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

பகுதாது நகருக்கு வெளியே, தஜ்லா நதிக் கரைக்கு அப்பால் பதாயிகு என்ற சிறு நகரில் வாழ்ந்து கொண்டிருந்த மகான்களில் ஒருவரான ஜாஹிது அஹ்மது அவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் தஹஜ்ஜத் தொழுகைக்குப் பிறகு மக்கள் நலம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தவண்ணம் அவர் கண்மூடி உட்கார்ந்திருந்தார். அப்போது ரூயா என்ற கனவு போன்ற ஒரு மெய்க்காட்சி உண்டாயிற்று.

விசாலமான ஒரு கடைவீதி. அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் அல்லாஹ்வின் ரஹ்மத் என்னும் பேரருட் பொருட்களே. அதை வாங்குவதற்காக அங்கே கூடியிருந்தவர்கள் அனைவர்களும் இறைநேசர்களே. அதில் ஜாஹிதும் இருந்தார்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது: ‘குற்றமற்ற எனது வலிமார்களே> இப்போது நீங்கள் என்னுடன் பேசலாம். உங்கள் தேவைகளை கேட்கலாம்.’

ஆயினும் எவரும் வாய் திறக்கவில்லை. ஜாஹித் அஹ்மத் அவர்கள் மற்றும் வாய் திறந்தார்கள். ‘எனது ரப்பே! இப்போது என் மனத்துள்ள ஓர் ஆசை துடிக்கிறது. இங்கே கூடியுள்ள பெரியோர்களில் உன்னிடம் உயர்வு பெற்றவர்கள் யார்? என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அவர் அப்படிக் கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அக்காலத்தில் மஹ்பூபுல் அஃலம் அலீ இபுனு ஹைத்தி, தாஜுல் ஆரிபீன் அபுல்வபா ரலியல்லாஹு அன்ஹுமா என்ற இரு பெரியார்களும் மிக மேலானவர்களாய்க் கருதப்பட்டு வந்தார்கள். எனவே அவ்விருவரில் பதவியில் உயர்ந்தவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள அவர் நாடினார்.

அசரீரி ஒலித்தது: எனது ஹபீபும், ஆஷிகுமான ஓர்ஆடவர் இக்கடை வீதி வழியே வரவிருக்கிறார். அவர் எனக்கு ஹபீபு. நான் அவருக்கு ஹபீபு. அவர் வரவுக்கு வழிவிட்டு ஒதுங்கி நில்லுங்கள். அவரை கண்ணியப்புடுத்துங்கள்.’

வானப்பாதை திறந்து கொண்டது. கும்பல் கும்பலாய் வானவாக்ள் இறங்கினார்கள். ‘வழிவிட்டு நில்லுங்கள். அல்லாஹ்வின் மஹ்பூபைக் கண்ணியப்படுத்துங்கள்’ எனக் கூறிக் கொண்டே பாதையை ஒழுங்குப் படுத்தினார்கள்.

ஒளிப்பல்லக்கு ஒன்று ஆகாயத்தினின்றும் இறங்கியது. அதனுள் பிரகாசவதனம் கொண்ட ஒரு வாலிபர். வானவர்கள் பல்லக்கைச் சட்டென சூழ்ந்து கொள்கிறார்கள். உள்ளே அமைதியாக அமர்ந்திருந்த இளைஞரை நோக்கி பெரியார்கள் அஸ்ஸலாமு அலைக்கும் மஹ்பூபுல்லாஹ்! என்றனர்.

வஅலைக்கு முஸ்ஸலாம் யா அவ்லியா அல்லாஹ்! என்று பதில் சொல்லிவிட்டு அவ்விளைஞர் சட்டென்று தலைகுனிந்து கொள்கிறார். பல்லக்கு விரைந்து வெகுதூரம் சென்று விட்டது.

ஜாஹிது அஹ்மது கேட்டார்: ‘சகல வல்லமையும் உள்ள எங்கள் நாயகனே! உனது மஹ்பூபும் மஃஷூக்கும் ஆன அந்த வாலிபரின் திருநாமம் என்ன?’

‘அவரது நாமம் அஹ்மது கபீர் என்பதாகும்.’

எனது ரஹ்மானே! அவர் எங்கே இருக்கிறார்? அவர் இருப்பிடத்தை எனக்குத் தெரிவிப்பாயா? அவரை தரிசிக்க நாடுகிறேன்’

‘இப்போது அவர் இருக்கும் ஸ்தானம் அவரது தந்தையின் முதுகுத் தண்டு ஆகும்.’

அவர் தந்தையின் பெயர், அடையாளம், இருப்பிடம் என்ன?’

அவர் பெயர் அபுல் ஹஸன் அலீ. வலீமார்களில் ஒருவர் மக்காவில் அரபாத் மலையில் என்னை வணங்கியவராக இப்போது இருந்து கொண்டிருக்கிறார்.

ரூயா காட்சியினின்று மீண்ட ஜாஹிது அஹ்மது அக்கணமே மக்காவை நோக்கி பயணப்படத் துவங்கினார்.

இது அஹ்மது கபீர் ஆண்டகை உலகில் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவிப்பாகும்.

ஹழ்ரத் செய்யிதினா முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாரம்பரியத்தில் 19ஆவது தலைமுறையாக ஹழ்ரத் அபுல்ஹஸன் அலீ அவர்கள் வருகிறார்கள். அன்னாரின் வமிசவழி வருமாறு:

1. செய்யிதினா இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு 2. இமாம் ஹுஸைன் 3. இமாம் ஜெய்னுல் ஆபிதீன் 4. இமாம் முஹம்மது பாக்கர் 5. இமாம் ஜஃபர் சாதிக் 6. இமாம் மூஸல் காழிம் 7. இப்றாஹிம் முர்தளா 8. மூஸா தானீ 9. செய்யிது ஹுஸைன் 10. செய்யிது ஹஸன் 11. செய்யிது முஹம்மது அபுல் காசீம் 12. செய்யிது மஹ்தீ 13. செய்யிதினா அபுல் முகர்ரமில் ஹஸனில் மஃரூபி 14. செய்யிதினா அலீ 15. செய்யிதினா அஹ்மது 16. செய்யிதினா ஹாஜிம் 17. செய்யிதினா தாபித் 18. செய்யிதினா எஹ்யா 19. செய்யிதினா அபுல் ஹஸன் அலி 20. செய்யிதினா செய்யிது அஹ்மது கபீர் ரிபாஃயி

செய்யிதினா அபுல் ஹஸன் அலீ அவர்களின் முன்னோர்கள் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மக்காவில் வாழ்ந்திருந்ததாகவும் பின்னர் நடந்த ஒரு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுட அவர்கள் பல நாடுகளுக்கும் சிதறிப் போனார்கள் என்றும், எஹ்யா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரை மக்காவில் வாழ்ந்ததாகவும் பின்பு பதாயிகு நகரில் குடியேறியதாகவும் இரு கருத்துக்கள் உள்ளன.

அபுல் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதாயிகு நகரத்தில் அபூபக்கர் ரிஃபாயி அவர்கள் புதல்வி ஆயிஷாவை திருமணம் முடித்ததாக பல்வேறு கிரந்தங்களில் காணப்படுகிறது.

கருவிலேயே பேசிய காருண்யர்

நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த ஆயிஷா அம்மையார் அவர்க்ள தொழுகை முடிந்து கொழுகை பாயில் அமர்ந்திருக்கிறார்கள். தம்முடைய வயிற்றைப் பார்த்துக் கொண்டே அஸ்ஸலாமு அலைக்கும் என் மகனே. என்று விளிக்கிறார்கள். அதற்கு கருவிலிருந்து, வஅலைக்குமுஸ்ஸலாம் என்று பதிலும் வந்து உபதேசங்களும் செய்யப்பட்டது.

இதை அம்மையாரின் சகோதரர் கவனித்தார். இந்த சம்பவத்திற்கு நாற்பதாவது நாள் ஹிஜ்ரி 512ஆம் வருடம் ரஜப் மாதம் வியாழக்கிழமை பதாயிகு நகரில் ஹஸன் என்ற இடத்தில் செய்யிது அஹ்மது கபீர் நாயகம் ஜனனம் ஆனார்கள்.

காலங்கள் உருண்டோடின. நாயகத்திற்கு நாலரை வயது. செய்கு அலீ என்ற பெரியாரிடம் கல்வி கற்பதற்காக ஒப்படைக்கப்பட்டார். பத்து வயது அடையும் முன்போ அனைத்து விதக் கல்வியிலும் தேர்ந்து விட்டார்.

தமது 28ஆவது வயதிற்குள் ஆண்டகை அவர்கள் மிகப் பிரபலமாகி விட்டார்கள். வெகு காலம் வரை தனித்தே இருந்த ஆண்டகை அவாக்ள் மெய்ஞ்ஞானப் பெருவள்ளலாய் விளங்கிய ஷெய்கு அலியுல் வாஸ்தி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘இர்ஷாத்’ பெற்றுக் கொண்டதும் மக்களுக்கு உபதேசிக்கவும் அவர்களைக் கடைந்தேற்றவுமான காரிய்தில் ஈடுபடத் துவங்கினார்கள்.

தம்மிடம் முரீது வாங்க வருபவர்களிடம் பெயர், குலம், கோத்திரம், கல்வி, முகவரி பற்றி விசாரிப்பதில்லை. முதலில் ஒளு செய்துவிட்டு வரச் சொல்வார்கள். தம் எதிரே உட்காரச் செய்வார்கள். பின்னர் அவரைப் பார்த்து அல்லாஹ்வின் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்களையும் வரிசையார் ஒவ்வொன்றாய் நிறுத்தி நிறுத்தி சொல்வார்கள்.

அவ்விதம் சொல்கையில் ஏதாவது ஒருநாமம் வந்தவரை உணர்ச்சி கொள்ளச் செய்யும். அவரது அமைதியா நிலையிலும் மூச்சிலும் மாறுதல் உண்டாகும். உடனே அந்த மனிதனின் ஆண்ம குணத்தின் அடிப்படையை ஆண்டவர்கள் புரிந்து கொள்வார்கள். அதன்பின் அவரிடம் பைஅத் வாங்கிக் கொண்டு தகுந்த திக்ர் களை உபதேசித்து அதை பயிற்சி செய்யும்படி அனுப்புவார்கள்.

கஃபத்துல்லாஹ்வை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவர்கள் மனதில் உண்டானவுடன் திடீரென ஒருநாள் எவ்விதமான பிரயாண முன்னேற்பாடுகளும் இன்றி மாற்றுடை கூட இல்லாமல் திடீரென ஒருநாள் காலையில் புறப்பட்டு விட்டார்கள்.

ஊர் எல்லையை தாண்டி சில கஜ தூரமே சென்றிருப்பார்கள். சற்றுத் தொலைவில் கஃபாவின் ஹரம் பளீரென்று தோன்றியதும் திடுக்கிட்டு நின்றனர்.

அவர்களுடன் கூட சென்ற யாகூப் என்பவர் என்ன பிரமை பார்த்தீர்களா? என்றார்.

பிரமை அல்ல நிஜம் என்று ஆண்டகையின் முகம் விசனத்தால் சோபை இழந்தது. கண்களில் நீர் மணிகள் மின்னின. அந்த கஃபா தரிசனத்தை ‘சித்திக்காரன் வரைந்த கஃபா படத்தை வீட்டில் இருந்தவாறு பார்க்கிறதை கஃபா தரிசனம் என்று எனக்குள் கொள்ள முடியாது’ என்று உரத்த குரலிpல் சொன்ன ஆண்டகை அவர்கள் சட்டென்று ஊரை நோக்கி திரும்பினார்கள்.

இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிசவழியில் வந்துதித்த மன்சூர் அலி ரலியல்லாஹு அன்ஹு என்ற பெரியார் ரிபாஃயாக் கிளையாரில் தோன்றிய மாபெரும் மகான். தம் இளம் வயதிலேயே ஆயிரக்கணக்கான மரீதீன்களை பெற்றிருந்தார்கள். இறைநேசராகவும், மிகப் பெரிய ஞானியாகவும் கருதப்பட்ட அவர்கள் பிற உயிர்களிடம் பேசக் கூடிய ரகசிய ஞானம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். துஷ்ட மிருகங்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

தன் மாமனார் மன்சூர் அலி நாயகத்திடம் பைஅத் பெற்றுக் கொண்டு, அன்னாரிடம் கிலாபத்தும் பெற்றுக் கொண்டார்கள். ரிஃபாயிய்யா தரீகாவில் ஆண்டவர்கள் முரீதானதும் அந்த தரீகா விரைவில் பிரபலமாயிற்று.

அதன்பின் மரணத்திற்குப் பின் மரணித்தல் என்ற நிலையை பெற்றுக் கொண்டார்கள்.

ஷரீஅத்தை மீறுவது என்பது ரிபாயி ஆண்டகை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று. அந்தளவிற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது காதல் கொண்டிருந்தார்கள்.

ஹிஜ்ரி 555ல் தமது 48வது வயதில் கருத்த கம்பளி ஒன்றைப் போர்த்திக் கொண்டு தன்னந்தனியாக திருமதினா மாநகர் நோக்கிப் புறப்பட்டார்கள்.

மதீனா நகரின் தலைவாயிலை மிதித்ததுமே யாரஸூலல்லாஹ், யாரஸூலல்லாஹ் என்று பிதற்றிக் கொண்டே ரவ்லா ஷரீபுக்குள் நுழைந்தார்கள். தலை குனிந்தவாறு வெகுநேரம் மௌனமாய் நின்றிருந்தார்கள். அங்கே எதிர்பாராமல் ஒரு பெரிய கும்பல் கூடி இருந்தது.

ஏராளமான வலிமார்கள் அங்கே குழுமியிருந்தார்கள். கௌதுல் அஃலம் முஹ்யித்தீன், ஷெய்கு இத்தீ இப்னு மூசாஃபிக், ஷெய்கு அப்துர் ரஜ்ஜாக் ஹுசைனி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் உட்பட அங்கே 9900வலிமார்கள் இருந்தனர் என நூருல் அஹ்மதிய்யா என்ற நூலில் திட்டமாகக் கூறியிருப்பதாக ருமூஜுல் ஃபுகாரா என்ற உர்து நூலில் காணப்படுகிறது.

காதலனின் ஒருமித்த மனத்துடன் புறச் செயலை மனம் அறியாத பித்தனின் ஆசை வெறியுடன் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லாவையே பார்த்தவாறு நின்றிருந்த ஆண்டகை உரத்தக் குரலில்,

‘அஸ்ஸலாமு அலைக்கும் யாஜத்தீ –எனது பாட்டனாரே!’ என்றதும் ‘வ அலைக்குமுஸ்ஸலாம் யா வலதீ- எனது பேரனாரே’ எனப் பெருமானாரின் ரவ்லாஷரீஃபின் உள்ளிருந்து பதில் வந்ததை அனைவரும் கேட்டனர்.

அதன்பின் உணர்ச்சி வசப்பட்ட ஆண்டகையின் தூய கோரிக்கைகள் கவிதைத் துளிகளாய் வடிய ஆரம்பித்தன.

‘நான் தூரத்தே இருக்கும்போது

தங்கள் கபுரை முத்தமிடுவதற்காக

எனது உயிரை அனுப்பிக் கொண்டிருந்தேன்

அந்த உயிர் உடலோடு இப்போது

தங்கள் சமூகம் வந்திருக்கிறது.

தங்கள் வலது கரத்தை நீட்டுங்கள்,

என் உதடுகள் அதனை முத்தமிட்டுக் கொள்ளட்டும்’

இந்தக் கவிதை அமுதின் கடைசிச் சொல் அவர்களது நாவினின்று கழன்று விழுந்ததும் மின்னல் ஒன்று பளீரிட்டு நிலைத்தாற் போன்ற உணர்ச்சி> பெருமானாரின் கபுர் ஷரீ|ஃபினின்று அவர்களது புனிதக் கரம் வெளிப்பட்டதைக் கண்ட ஆண்டகை> ;யாரஸூலல்லாஹ்! எனக் கத்திக் கொண்டே ஓடினார்கள். வானமும் வையமும் அடைந்திராத அந்தப் பாக்கியத்தை நினைத்துப் பூரித்துக் கொண்டே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரத்தை ஆசைதீர முத்தமிட்டுக் கண்ணீர் சொரிந்தார்கள்.

மன்சூர் நாயகத்திடம் பைஅத் பெற்றவுடன் ஆண்டகை அவர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டது.நீ> நான்> அது> இது என்ற புறத் தோற்றங்கள் அவர்களுக்குப் புலப்படாமல் நழுவிப் போயின. பெயர்களையும்> குறிப்புகளையும் நினைவுப்படுத்திக் கொள்வது அவர்களுக்கு சிரமமாயிருந்தது. ஊண், உடை, உறக்கம் யாவும் சுருங்கின. சதா இறைத் தியானம். இறைத்தியானம்.

அல்லாஹ் அவர்களுக்கு கனவில் தோற்றமானான்.

இறைவனை நான் கனவில் கண்டேன் பூரணச் சந்திரனைப் போல’ என்பது நாயக வாக்கியம்.

இறைவனைப் பலதரம் தாம் கனவில் கண்டதாக ஆரிபு நாயகமும் சொல்லியிருக்கிறார்கள்.

அடர்ந்த காட்டினுள் தவத்திற்காக நுழைந்தார்கள். கௌதுல் அஃலம் தங்கியிருந்த அதே பாழடைந்த கட்டடத்திலும் தங்கியிருக்கிறார்கள்.

சுமார் 29ஆண்டுகள் காட்டிலே கடும் வணக்கத்திலே கழித்த அவர்கள் ஒரு சம்பூரண மனிதராய் – வலிமார்களே புரிந்து கொள்ள முடியாத ஒரு ரகசியமாய் கன்ஜுல் ஆரிஃபீன் ஆனார்கள்.

தமது லட்சியத் தவக் காலம் முடிந்ததும் காட்டினின்றும் புறப்பட்டார்கள். சொந்த ஊர் திரும்பாமல் நேராய் ஹிஜாஸ் நோக்கி நடந்தார்கள்.

மக்காவைச் சமீபத்திருந்த அரஃபாத் மலை எனப்படுகிற ஜபலுர் ரஹ்மத்தை நெருங்கி அதன் முடியை நோக்கி ஏறினார்கள். மலைச் சிகரத்தைஅடைந்ததும் அவர்கள் உணர்ச்சிக் கொழுந்தானார்கள். வலக் காலைத் தூக்கிப் பாதத்தை மடங்கி, இடக் காலை கீழே உறுதியாய் ஊன்றி தௌஹீது நிலையில் அப்படியே நிலைத்துப் போனார்கள். சிறிது நேரத்தில் ஒரு ஜோதி ஸ்தம்பம் ஆனார்கள். பல நாட்கள் அங்கேயே இருந்தார்கள்.

தனது ஜலால் – ஜமால் என்ற ஒளிக்கதிர் ரதம் ஏறி சிரித்த குரலுடன் வல்ல நாயன் அவர்களுக்கு வெளிப்பட்டான். ‘சுல்தானுல் ஆரிஃபீன் சையிது அஹ்மது கபீரே!’ என அவர்கள் இயற்பெயரோடு சிறப்புப் பெயரைச் சேர்த்து விளித்தான்.

ஆண்டகை தம் இரட்சகனை தம் கண்குளிரக் கண்டார்கள். அதைக் கண்டு மெய்சிலிர்தது நிற்கையில், நாயகம் ஸல்லல்லாஹு அஅலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை நோக்கி வரக் கண்டார்கள். அவர்கள் வாழ்த்திய பிறகு ரிஜாலுல் கைப் என்ற மறைவான வாசிகளான பெரியார்கள் இருவர்> மூவராக ஆண்டகையை நோக்கி அணி அணியாக வந்தார்கள். அவர்களும் வாழ்த்திச் சென்றார்கள்.

மலையினின்று கீழே வந்த ஆண்டகை அவர்கள் விறுவிறு வென்று நடக்கத் துவங்கினார்கள். எங்கும் நில்லாமல் நடந்து பதாயிகு நகரத்தினுள் நுழைந்தார்கள். வழிநெடுகிலும் மலைகளும்> மரங்களும்> நதிகளும்> புற்களும்> விலங்குகளும் யா சுல்தானுல் ஆரிபீன் – யா சுல்தானுல் ஆரிஃபீன் என விளித்துச் சிலிர்த்தன.

ஒரு வெள்ளிக்கிழமை இரவு பிந்திய நேரம் தவமடத்தில் தனித்திருந்தவர்களாக யோகநித்திரையில் இருக்கும் போது வானவர் ஸம்ஸயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் வானப் பயணம் மேற்கொண்டார்கள்.

காய்ந்த ரொட்டியிலும், கம்பளி ஆடையிலும் வாழப் பழகிக் கொண்ட அவர்கள் தனக்கு வரும் அன்பளிப்புப் பொருட்களை அப்படி அப்படியே அன்றைக்கே ஏழைகளுக்கு தானம் செய்து விடுவார்கள்.

ஆண்டகை அவர்கள் இரண்டு தரம் மணம் புரிந்துள்ளார்கள். முதல் மனைவி பெயர் செய்யிதா கதீஜா. அபூபக்கர் அன்சாரியுல் புகாரியின் மகளான கதீஜா மூலம் ஆண்டகைக்கு ஃபாத்திமா, ஜெய்னம்பு என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன.

கதீஜா காலமானபின் அவரது தங்கை சையிதா ராபியாவை மணந்து கொண்டார்கள். அவர் மூலம் பிறந்த சையிது குத்புதீன் சாலிஹ் என்ற ஒரே மகன் பதினேழாவது வயதில் ஆண்டகை அவர்களை ஆறாத் துயரில் ஆழ்ந்திவிட்டு இறையடி சேர்ந்து விட்டார்.

ஆரிபு நாயகம் அவர்கள் மிஃராஜ் சென்று கௌது ஆக நியமனம் பெற்ற பின் அவர்களது சபையில் அக்தாபுகளும்> அப்தால்களும்> அவ்வாதுகளும், உப்பாதுகளும்> ஜுஹ்ஹாதுகளும்> நுகபாகளும் சதா வீற்றிருப்பார்கள்.

அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரியான இவர்களது சக்கரவர்த்தியான ஆரிஃபு நாயகத்தை காண நபி ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடிக்கடி வருவதுண்டு.

இடையறாத மக்கள் தொடர்பினின்று சிறிது காலத்திற்கு விலகியிருக்க நாடிய ஆண்டவர்கள் மீண்டும் வனவாசம் சென்றார்கள். இந்தத் தடவை 12ஆண்டுகளை காட்டிலேயே கழித்தார்கள். ஆக மொத்தம் 31வருடங்கள் காட்டிலேயே செலவழித்திருக்கிறார்கள்.

மிஃராஜில் 99திருநாமங்களை சூட்டப்பெற்ற ஆண்டகை அவர்கள் மேலும் 24திருநாமங்களால் இறைவனால் சூட்டப்பட்டார்கள்.

தம்முடைய வேலைகளான துணி துவைப்பது போன்ற வேலைகளைத் தாங்கே செய்து கொள்வார்கள். அடுத்தவர்கள் அதை செய்ய விடமாட்டார்கள்.

‘எனது மிஃராஜ் அனுபவத்தின் ரகசியத்தை, அதே அனுபவம் பெற்ற இன்னொருவரால் மட்டுமே உணர முடியும்’ என்ற ஆரிஃபு நாயகம் வேறொரு சமயம் இப்பச் சொன்னார்கள், ‘எனது சொந்த உடம்புடனும் உயிருடனும் விழிப்புடனும் அல்லாஹ் எனக்கு மிஃராஜ் அனுபவத்தை அருளினான்.’ என்றார்கள்.

அதேபோல் உடலும், உயிரும் வௌ;வேறு திசையில், தன்மையில் இருப்பவை அல்ல என்பதை ஆரிஃபு நாயகம் மிக நளினமாய் விளக்கியுள்ளார்கள். ‘கனவிலே அல்லாஹ்வை நான் முகக் கண்ணால் கண்டேன். விழித்திருக்கும்போது அவனை அகக் கண்ணால் பார்த்தேன்’ என்றார்கள்.

பகுதாது நகரில் காலை நேரம் முரீதின்களும், தரிசிக்க வந்தவர்களும் சூழ அமர்ந்திருந்த, தம் இல்லத்து வெளிப்பகுதியில் அமைதி தவழும் அழகு முகத்துடன் கௌது நாயகம் வீற்றிருக்கிறார்கள்.

பெரியார் ஷெய்கு ஹம்மாது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கே வருகிறார்கள்.கௌதுனாவிற்கு சலாம் சொல்லி விட்டுஅமர்கிறார்கள். ‘யாசெய்யிதீ பதாயிகு நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற அஹ்மது கபீரைப் பற்றி வெகுவாய்ப் பேசப்படுகிறதே, தங்கள் கருத்து என்னவோ?’

சிறிதுநேர மவுனத்திற்குப் பின் கௌதனா சொல்கிறார்கள்: ‘உண்மை. அல்லாஹ்விடம் அவர் மிகக் கீர்த்திப் பெற்றவர் என்பது நிஜமே.’

மீண்டும் மௌனம். திடீரென்று உரத்தக் குரலில் கூவுகிறார்கள்: ‘அல்லாஹ் மீது ஆணையாக அவர் மிக உயர்ந்தவர். எனக்குப் பின்னர் என் ஆட்சிப் பீடத்தில் அமரக் கூடியவர். கௌதுல் அஃலம், குத்புஸ்ஸமான் என்ற என் பட்டங்களைச் சுமக்கப் போகிறவரும் அவரே.’

இது சுல்தான் கபீர் ஆண்டவர்கள் மிஃராஜ் செல்வதற்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் எனக் கருதப்படுகிறது.

கௌதனாவிற்குப் பிறகு அவர்களது இடத்தை, பதினாறு ஆண்டு காலம் நிரப்பியவர்கள் சுல்தான் அஹ்மது கபீர் ஆண்டவர்களே என்பதில் பெரியோர்களிடையே எவ்வித அபிப்பிராய பேதமும் இல்லை.

ஒருசமயம் சுல்தான் கபீர் நாயகம் இரண்டாவது தடவை வனவாசம் சென்ற சமயம்.

கௌதனா அவாக்ளின் திருஞானச்சபை. ஆரிஃபு நாயகத்தைப் பற்றி சீடர்கள் சர்ச்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மௌனமாய் உட்கார்ந்திருந்த கௌதுனா தம் பணியாளர் ஒருவரை அழைக்கிறார்கள். பிரஸ்தாபக் காட்டைக் குறிப்பிட்டு, ‘ஒரு மரத்தடியில் சுல்தான் அஹ்மது கபீர் நாயகம் அமர்ந்திருக்கிறார்கள். அவரிடம் போய் அல்லாஹ்வின் இஷ்க் என்றால் என்ன என்று கேட்டுவிட்டு வா’ என அனுப்புகிறார்கள்.

அவர் காட்டுக்கு வருகிறார். ஆரிபு நாயகத்தைக் கண்டு, அல்லாஹ்வின் இஷ்க் என்றால் என்ன? எனக்கு தெரிவிக்க வேண்டும்?’ என்கிறார்.

ஆண்டகையின் அமைதிப் பேரானந்த நிலையில் சலனம் உண்டாகிறது. கண்கள் சிவக்கின்றன.

‘இஷ்க், இஷ்க் அல்லாஹ்வின் இஷ்க்’ எனப் பெருங்குரலில் அவர்கள் கத்த, சூழநின்ற மரங்களும் இதரப் புற்பூண்டுகளும் குபீரென்று தீப்பிடித்:து எரிகின்றன.

பணியாளர் பதறிக் கொண்டு வெகுதூரம் போய் நின்று கொண்டு கவனிக்கிறார்.

காட்டுத்தீ நடுவில் நின்றிருந்த ஆண்டவர்களது உருவம் மெல்ல மெல்ல கரைந்து மறைகிறது.

தீ அணைந்தபின் பணியாளர் ஓடி வருகிறார். நீறுபூத்த நெருப்புகளைக் குச்சியால் கிளறி விட்டுக் கவனிகக்pறார்.

ஆண்டகை இருந்த இருடத்திலல் ஒரு ரசமணி மட்டுமே இருக்கிறது. எஜமானனைக் காணவில்லை.

அலறிப் புடைத்துக் கொண்டு கௌதுனாவிடம் ஓடி வருகிறார். நடப்பை விவரிக்கிறார். ‘சுல்தான் அஹ்மது கபீர் ஆண்டவர்கள் தீயில் கருகிச் சாம்பலாகிவிட்டார்கள்’ என அரற்றுகிறார்.

கௌதனா சிரிக்கிறார்கள். ‘மரணம் தொடாதவர்கள் மரணிப்பதில்லை’ என்ற அவாக்ள் கொஞ்சம் அத்தரும் பன்னீரும் தருகிறார்கள். ‘இதைக் கொண்டுபோய் அந்த ரசமணிமேல் தெளி’ என்கிறார்கள்.

அவர் அதுபடி செய்கிறார். ரிபாயி நாயகம் தோன்றுகிறார்கள். ‘அல்லாஹ்வின் இஷ்கைப் பார்த்தாயா? அது இப்படித்தான் அல்லாஹ் அல்லாதவற்றை எரித்து சாம்பலாக்கி விடும். போ. போய் எங்கள் எஜமான் கௌதுனா அவர்களுக்கு என் சலாத்தை தெரிவி’ என்றார்கள்.

அதேபோல் கௌதனாவிடம் பெருமதிப்புக் கொண்டவர்கள் ஆரிஃபு நாயகம் அவர்கள்.

‘எங்கள் ஸையிதுனா ஜீலானி நாயகத்தின் சிறப்பை அறிந்தவர் யார்?’ எனப் பலதரம் கேட்டிருக்கிறார்கள்.

‘நட்சத்திரங்கள் பல உண்டு. ஆனால் சூரியன் ஒன்றே இருக்க முடியும்’ எனக் கௌதுனாவைச் சிலேடையாகச் சிறப்பித்துப் பலதடவை பேசியிருக்கிறார்கள்.

ரிபாயி நாயகம் அவர்கள் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதன்மூலம் பலன் பெற்றவர்கள் ஏராளம். ஏராளம்.

ஒருநாள் ஆற்றங்கரையில் அமர்ந்து தம் முரீதுகளுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கையில் ஒருவர்; கேட்டார்: ‘எஜமானே! இறையண்மையில் நிலைத்திருக்கிறவர் – என்றால் என்ன?’

நாயகம் நவின்றார்கள் ‘படைப்புகள் மீது ஆட்சி செலுத்துகிற தத்துவம் உள்ளவரே முத்தகீன்’

அவரின் அடையாளம் என்ன?’

உண்டு முடித்த பொருட்களுக்கு அவரால் மீண்டும் உயிர் கொடுக்க முடியும்’

இந்தச் சமயத்தில் தண்ணீரில் திரிந்து கொண்டிருந்த மீன்கள் துள்ளி துள்ளிக் கரையில் விழுந்தன.

ஆண்டகை சொன்னார்கள்: ‘இவற்றை நாம் சாப்பிட வேண்டுமென்று இந்த மீன்கள் இறைவனிடம் மன்றாடியிருக்கின்றன. எனவே இவற்றைச் சமைக்க ஏற்பாடு செய்யுங்கள்’

சிறிது நேரத்தில் மீன்கள் சமைக்கப்பட்டன. எல்லோரும் அவற்றை சாப்பிட்டு முடித்தார்கள். எஞ்சிய நடு முள்களும், வால்பகுதியையும் ஆற்றோரத்தில் வைக்கும்படி ஆண்டகை அவர்கள் பணித்தார்கள்.

அவற்றபை; பார்த்து, ‘உயிரை இழந்து விட்ட ஜடங்களே, அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு கட்டளையிடுகிறேன். உயிர் பெற்று விரைந்தோடுங்கள்’ என்று சொல்ல அக்கணமே அந்தக் கழிவுகள் மீன்களாய்த் துள்ளித் தண்ணீரில் பாய்ந்தன.

கேள்விக் கேட்டவரைப் பார்த்து ஆண்டவர்கள் புன்னகைத்தார்கள். ‘முத்தகின்களின் பண்பு என்னவென்று இப்போது தெரிந்து கொண்டீரா?’

இதைக் கவனித் கொண்டிருந்த அப்துல் மாலிக் ஸர்ரோஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘உண்மைதான். சாகாத மனிதரின் கட்டளைகள் சாகப் போவதில்லைதான்’ என்றார்.

அடுத்து, இத்ரீஸ் என்பவர் ஆரிஃபு நாயகத்தின் முரீதுகளில் ஒருவர். தினம் தினம் காலை வேளைகளில் ஆண்டகைக்குப் பால் கொண்டுவந்து கொடுப்பது அவர் வழக்கம்.

சில நாட்களாக அவரது ஒரே மகன் அஹ்மதுக்கு உடல் நலமில்லை. அதுபற்றிய யோசனையுடன் ஆண்டகையின் சபைக்கு அன்று வெறுங்கையுடன் வந்து விட்டார். ஆண்டகை அவர்கள் பால் கொண்டு வரவில்லையா? என்று வினவ, தம் தவறை உணர்ந்து வருந்திய இத்ரீஸ் உடனே வீடு நோக்கி வேகமாய்ச் சென்றார்.

அவர் வீட்டில் அவரது ஒரேமகன் அஹமது இறந்து விட்டிருந்தான். அவனை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். ஆனாலும் ஆண்டகைக்கு பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஆண்டகை அவர்களின் சமூகத்திற்கு வந்தார்.

ஆனால் அவரின்முகத்தின் கவலையை பார்த்து ஆண்டகை அவர்கள் அதுபற்றி கேட்டார்கள். தம் மகன் இறந்துவிட்டது பற்றி அவர் சொன்னார்.

ஆண்டகை அவர்கள் தம் இறைவனிடம் இறைஞ்சினார்கள். அதை ஏற்றுக் கொண்ட அல்லாஹ், அதற்காக மலக்குல் மவ்த்தை அனுப்பி வைத்தான். அவர் வந்து ஆண்டகை அவர்களிடம் ‘இத்ரீஸ் மகன் அஹ்மது விசயமாக தீர்மானிக்கிற பொறுப்பை ஆண்டவன் உங்களிடம் தந்துவிட்டிருக்கிறான் என்றார்கள்.

பின் ஆண்டவர்கள் ‘அஹமதே எழுந்திரு’ எனப் பெருங்குரலில் கட்டளையிட்டார்கள். சிறிது நேரத்தில் க.ஃபன் இடப்பட்ட உடம்போடு இறந்து போன அஹ்மது ஆண்டகையின் சமூகத்தில் வந்து நிற்பதைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

இசையும் ஆரிஃபும்

தமது அந்திம காலத்தில் ஆண்டகைக்கு இசைமீது அதிக நாட்டம் இருந்து வந்திருக்கிறது.

ஒரு சமயம் தமது முரீதுகளுடன் அமர்ந்து ஆண்டவர்கள் இசை கேட்டுக் கொண்டிருக்கையில்> அஸர் தொழுகை வேளை தப்பி மஃரிபு வேளை நெருங்கிவிட்டது. பிரக்ஞையற்றிருந்த ஆண்டகையை ஒருவர் உசுப்பி நிலைமையை தெரிவிக்க, சாளரத்தின் வழியே ஆண்டவர்கள் மேற்கு வானத்தை உறுத்து விழித்தார்கள்.

அஸ்தமனமாகவிருந்த சூரியன் சட்டென்று மேலே ஏறி நடுவானத்திற்கு வந்து விட்டது.

முல்லாக்கள் கும்பலாய் திரண்டு வந்து ஆண்டகையிடம் ‘இசை கேட்பது தடுக்கப்பட்ட ஒன்றல்லவா? என்று கேட்டார்கள்.

ஆண்டவர்கள் பேசினார்கள்: ‘ சகோதரர்களே! உடலுக்கு பலம் தரக்கூடிய சுவையான பேரீத்தங்கனிகள் காமாலை நோயுள்ளவனுக்கு ஆகாது என்று வைத்தியர்கள் எச்சரிக்க நான் கேட்டிருக்கிறேன்.

மேனியை சுத்தம் செய்யக்கூடிய குளிர்ந்த நீர் காய்ச்சல் காரனுக்குக் கூடாது எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால்,

உலகிலுள்ள அனைவரும் காமாலைக்காரர்களாக இல்லாதவரை ‘கூடாது’ என்பது பொதுவிதியாக இருக்க முடியாது.

எனவே எனக்கும் முஜ்தஹிது ஆன பெரியார்களுக்கும் இசை கேட்பது ஆகும்.

இசை எங்கிருந்து, எதனிடமிருந்து, யாரிடமிருந்து வந்தாலும் அதனைப் பருகுவது எங்களுக்குக் கூடும்.

புலன் இயக்கத்தை ஓய்த்ததும் பெருகி வருகிற ‘அந்த’ ஓசை இன்பத்தில் கரைந்து போகிற எவருக்கும் சங்கீதம் கேட்பது ஆகும்.

மனக் கரையைப்போக்குகிறவற்றுள் இசையும் ஒன்று.

இசை அலைகளில் மிதந்து அது பிறந்த இடத்திற்குச் செல்வது ஒரு வணக்கமே.

எங்களது இலட்சிய சமூகத்தினின்று பெருகி வருகிற சங்கீதம் எங்களுக்கு ஒரு சுருக்கு வழியே.

இசை கேட்பதன் ரகசியத்தை ஆரிஃபீன்களும்> முஹிப்பீன்களும் அன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.

ஆனால் இசை இன்பவம் எவருக்கு அல்லாஹ்வை உணர்த்தவில்லையோ அவருக்கு இசை கேட்பது ஹராம்.

எனினும் ஒரு ஹபீபுக்கும் மஹ்பூபுக்கும் இடையிலுள்ள ரகசியங்களுள் இசை கேட்பதும் ஒன்று என்பதை யாரும் மறுக்க வேண்டாம்’ என்றார்கள்.

ஆரிஃபீன்களின் கணிப்பிலேஆரிஃபு நாயகம்

அபூபக்கர் ஹம்தானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: ‘நபிமார்களின் நிலைமைப் பற்றிப் பேச விரும்பியவர்கள் பேசுங்கள். ஆனால் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி வாய் திறக்காதீர்.

வலிமாரின் அந்தஸ்து பற்றிப் பேச நினைகக்pறவர்கள் பேசுங்கள். ஆனால் சுல்தானுல் ஆரிஃபீன் சையிது அஹ்மது கபீரின் அந்தஸ்து பற்றி மூச்சு விடாதீர்.’

‘செய்யிது அஹ்மது கபீரை இன்ன வஸ்து என்றே எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. வல்லமையுள்ள இறைவன் மீது சத்தியமாக அவரைப் போன்ற ஒரு வலி உண்டாகவில்லையென்றே நான் கருதுகிறேன்’ என்பது ஷஹாபுத்தீன் சுஹ்ரவர்த்தியின் அபிப்பிராயம்.

அபூஹைருல் ஜன்ஜானி சொன்னார்கள்: ‘சுல்தான் அஹ்மது கபீர் அல்லாஹ்வின் ரகசியத்திலும் ரகசியமாயிருக்கிறார்.’

‘மஹ்பூபியத்திலே, மஉஷுக்கியத்திலே அஹ்மது கபீருக்கு நிகராவனர் யாருமில்லை’ என்பது ஹாரூனுல் ஹபஷு அவர்களின் கணிப்பு.

வலிமார்களுள் ஒவ்வொருவரும் ஒரு நபியின் இதயத்தைப் பெற்றிருக்கிறார்கள். நானோ எனது பாட்டனார் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இதயத்தை இருப்பிடமாய்க் கொண்டிருக்கிறேன் என்றார்கள்.

முரீதுகளும்> கலீஃபாக்களும்

‘நான் சந்தித்த சுல்தான் அஹ்மது கபீரின் ஒவ்வொரு முரீதும் ஒரு வலியாகவே இருந்தார்’ என்கிறார்கள் சுலைமான் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

ஷாமிலிருந்து ரோம் வரை அஹ்மது கபீரின் முரீதுகளைக் காண முடிந்தது. உண்மையில் அவர்களுக்கு ஒரு தெளிவான அடையாளம் இருக்கத்தான் செய்தது என்கிறார் ஸூபி அத்தார்.

ஆரிஃபு நாயகத்தின் முரீதுகள் இவ்வளவு பேர்தான் என்ற கணக்கு இல்லை என்பது ஒரு கணக்கு.

அவர்கள் முரீதின்களில் உலக வாழ்வைத் துறந்த ஜாஹிதீன்கள் மட்டும் இருபதாயிரம் பேர் அவர்களது காலத்திலேயே இருந்தார்களாம்.

ஆண்டகை நடத்தி வந்த அஹ்மதிய்யா, ரிஃபாயிய்யா தரீக்காக்களில் கிலாஃபத் பெற்ற கலீஃபாக்களின் எண்ணிக்கை 12000. இவர்களில் அப்தால்களும்> அவ்தாதுகளும்> நுகபா> நுஜபாக்களும் உண்டு.

ஆண்டகையின் பிரதான கலீபாக்கள் நால்வருள் சுல்தான் முஹம்மது> இஸ்மாயீல்> ஹாரூன் ரஷீது ஆகிய மூவரும் முறையே ரோம்> திமஷ்க்> பகுதாதுப் பகுதி அமீர்களாவர். இந்த தரீகாகக்கள் பரவ இவர்கள் மிகவும் பாடுபட்டிருக்கிறார்கள்.

நூல்கள்

ஆரிஃபு நாயகம் அவர்கள் தமது இரண்டாவது வனவாசத்திற்குப் பிறகு சுமார் 662என ருமூஜுல் ஃபுகரா என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. அவை அனைத்தும் ஆத்மீகம் சம்பந்தப்பட்டவை. அவற்றுள் சில.

மஆனி பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

தப்ஸீர் சூரத்துல் கத்ர்.

இல்முத் தப்ஸீரேன்.

ஹதீஸ்.

அத்தரீகு இலாஹி.

வ ஹாலத்து அஹ்லல் ஹகீகதி.

மஃஅல்லா.

ஹிகம்.

அஹ்ராபுடபர்ஹானுல் மு அய்யிது.

ஆண்டகையின் மறைவுக்குப் பின்னர் அவர்களது கலீஃபாக்களும் வேறு சில மஷாயிகுமார்களும் அவர்களைப் பற்றி ஏராளக் கிரந்தங்கள் இயற்றியிருக்கிறார்கள். அவற்றுள் சில:

ரஃபிஉல் ஆஷிகீன்>திரியாகுல் முஹிப்பீன்> ரவ்லதுல் னாளிரீன்> துஹ்பத்து மக்கிய்யா.

ரிஃபாயிய்யா தரீகாவின்படி ஆண்டகையின் சில்சிலா::

ஹழ்ரத் செய்யிதினா அலாவுத்தீன் காதிரி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா அபுல் பள்லு முஹம்மது இப்னு காமிஹ் ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா அபூ அல்லாம் துர்கானி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா மம்லீ இபுனு சர்ஹன்கா அஜ்மயீன் ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா அபூபக்கர் இப்னு தல்ஹஸ்பலீ ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா ஜுனைது முஹம்மது பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா அபீ அப்துல்லாசிர்ரீ சித்கீ ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா சுலைமான் தாவூத் தாயீ ரலியல்லாஹு அன்ஹு.

ஹழரத் செய்யிதினா முஹம்மது ஹபீபுல் அஜமி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா இமாம் ஹஸன் பஸரீ ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா ஷாஹ் மர்தான் செய்யிதினா அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு

ஹழ்ரத் செய்யிதினா ஹபீபுர் ரசூல் செய்யிதினா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

ஆரம்ப நாட்களில் ஆரிஃபு நாயகம் ஷாஃபி மத்ஹபில் இருந்தார்கள்.

மறைவு.

78வயதுகளை கடந்துவிட்ட ஆண்டகை அவர்கள் நோய்ப்படுக்கையில் கிடக்கிறார்கள். தொடர் வயிற்றுப் போக்கால் அவர்களது கண்கள் பஞ்சடைத்து போய்விட்டன. மருந்தும், உணவும் சாப்பிட மறுத்துவிட்ட அவர்களது உணவு மேலும் மேலும் பலவீனமடைகிறது.

குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஆண்டவர்கள் சட்டென்று கண் மலர்த்துகிறார்கள். உடனே எழுந்து உளுச் செய்கிறார்கள்.இரண்டு ரக்அத் நபில் தொழுகிறார்கள். தம் மருகர் இப்றாஹிம் அக்ரபுவைப் பார்த்து ‘இன்று என்ன நாள்?’ என்கிறார்கள். ‘வியாழக்கிழமை’ எனப் பதில் வந்ததும் சட்டென்று முகம் மலர்கிறார்கள். எல்லோரையும் ஒரு தரம் திரும்பிப் பார்க்கிறார்கள். நான் உங்களுக்கு உபதேசித்தவற்றை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருங்கள். இனி என்னிடமிருந்து நீங்கள் உபதேசம் பெற முடியாது’ என்று சொல்லிவிட்டுச் சிறிது மௌனத்திற்குப் பின் அமைதியாகச் சொல்கிறார்கள்: ‘நேரம் நெருங்கி விட்டது. விடை தாருங்கள். என்னை என் ரப்பு அழைக்கிறான்’ என்றார்கள்.

ஹிஜ்ரி 508> ஜமாஅத்துல் அவ்வல் 28பிற்பகல் நேரம் ஆண்டவர்கள் கிப்லா பக்கம் திரும்பியவர்களாக இறுதியாகக் கண் மூடுகிறார்கள்.

திமிஷ்கிலிருந்து ஆண்டகையிடம் முரீது பெறும் நோக்கத்துடன் புறப்பட்டிருந்த சாலிஹீன்களான 120பேர்களும் ஆண்டகை புகழுடம்பு எய்தி இரண்டாவதுநாள்தான் பதாயிகு வந்தார்கள். செய்தி அறிந்ததும் அவர்களுக்குப் பேரதிர்ச்சியாயிருந்தது.

அழுது அரற்றி ஆண்டகை அவர்களின் கப்ர்ஷரீபுக்கு ஓடினார்கள். அச்சமயம் கப்ரு ஷரீபிலிருந்து, வருந்தாதீர்கள். இங்கே அருகே வாருங்கள் என்ற சப்தம் வெளிப்பட்டது.

திகைப்புடன் அவர்கள் விரைந்து சென்றார்கள்: ‘நிச்சயமான அல்லாஹ்வின் பாதையில் மடிந்தவர்களை இறந்தவர்களாய்க் கருதாதீர். அவர்கள் ஜீவனுடனே இருக்கிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உணவளிக்கப்படுகிறது என்ற இறை வசனத்துடன் ஒளிக்கரம் ஒன்று கப்ரிலிருந்து வெளிப்பட்டது. ஆவலுடன் அதனைப் பற்றி அவர்கள் பைஅத் செய்தார்கள்.

இச்செய்தி கேள்விப்பட்டதும் பலபாகங்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் வரத் துவங்கியது. முரீது கேட்டு மன்றாடியது.

அவர்களுக்கு கப்ரிலிருந்து எனது கலீ;ஃபாக்களிடம் முரீது பெற்றுக் கொள்ளுங்கள் என்ற சப்தம் மட்டும் வரும். இவ்விதம் ஏழு வருடக் காலம் நிகழ்ந்திருக்கிறது.

இறைவா! அன்னாரின் பொருட்டால் எங்களின் நாட்டதேட்டங்களையும் நிறைவேற்றி அருள்வாயாக! ஆமீன்.

1 Comment found

User

seyathu aashikkullasha refai

மாஷா அல்லாஹ் ஆரிபு நாயகத்தின் அருமையான வரலாறு, மிக அழகாக தொகுத்துள்ளீர்கள். நன்றி

இவன் தங்கள் உண்மை ஊழியன்
அமீர் ஹம்சா செய்யது ஆஷிக்குல்லாஷா கலீபத்துர் ரிபாஈ அஹ்மத்தியத்துல் காதிரி

Reply

Add Comment

Your email address will not be published.