காயல்பட்டினம் இஜ்திமா 2013 – ஒரு கண்ணோட்டம்

காயல்பட்டினம் இஜ்திமா 2013 – ஒரு கண்ணோட்டம்

By Sufi Manzil 0 Comment June 25, 2015

Print Friendly, PDF & Email

காயல்பட்டினத்தில் ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமா (மாநாடு) நடைபெற்று முடிந்துள்ளது. இதைப் பற்றி ஒரு நிருபர் எழுதிய செய்தி கண்ணோட்டத்தைப் பாருங்கள்:

மாநாட்டிற்காக சுமார் 5 மாதங்களுக்கு முன்பே தங்களதுபாணியில் ஆரம்பித்த பிரச்சார யுக்தியினாலும், வெளிநாடுகளிலும், அருகிலுள்ள மாநிலங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமும், ஈமெயில் மூலமும், கடிதங்கள் மூலமும் பிரச்சாரத்தினாலும்,

மேலும் ஒவ்வொரு பள்ளியின் நோட்டீஸ் போர்டுகளிலும், ஜும்ஆ பயான்களிலும் இதுபற்றி எடுத்துரைத்து விளம்பரம் செய்ததினாலும் முஸ்லிம் மக்கள் குறிப்பாக பாமரர்கள் 6ஆம் தேதி மாலையிலேயே மாநாட்டிற்கு குவியத் துவங்கிவிட்டனர்.

சாப்பாட்டிற்கு ரூபாய் 100 வீதமும், வெளியூரிலிருந்து வரும் ஆட்களிடம் பஸ்ஸிற்கு, வேனிற்கு என்று ஒரு தொகையும் பெற்று ஆட்களை அழைத்து வந்திருந்தனர். இதில் சில பண முதலைகள் சாப்பாட்டு டோக்கனை மொத்தமாக வாங்கி மற்றவர்களுக்க இலவசமாக கொடுத்தும் ஆட்களை சேர்த்துக் கொண்டார்கள்.

மாநாட்டுக்கு குவிந்த பெரும்பான்மை மக்களைப் விசாரித்தபோது, நாங்கள் ஒரு டூர் மாதிரிதான் வந்திருக்கிறோம். தப்லீக் ஜமாஅத்தின் கொள்கைபற்றி எங்களுக்குத் தெரியாது. அதுவும் சுன்னத் ஜமாஅத்தானே என்று அப்பாவித்தனமாக, பாமரத்தனமாக சொன்னார்கள்.

அவர்களிடம் தப்லீக் ஜமாஅத்தினர் பற்றி சுன்னத் ஜமாஅத்தினர் கூறிய குற்றச்சாட்டுக்களை பற்றி விசாரித்தபோது, அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. தப்லீக் ஜமாஅத்தும் ஒரு சுன்னத் ஜமாஅத்தானே என்று நம்மையே கேள்வி கேட்டார்கள்.

தப்லீக்கும் சுன்னத் ஜமாஅத் தான் என்று சொல்லுகிறீர்கள். சரி. அப்போ  சுன்னத் ஜமாஅத் என்று இருக்கும்போது தப்லீக் ஜமாஅத் என்று ஏன் தனியாக பெயர் வைத்திருக்கிறார்கள்? என்று கேட்டபோது, பதில் சொல்லத் தெரியாமல் பேந்த பேந்த விழித்தார்கள்.

இஜ்திமாவிற்கு அழைப்பு விடுக்கவென்று தெருக்கள் தோறும் ஆட்களை அதுவும் வெளியூர் ஆட்களை அனுப்பி, முஸ்லிம்களுக்கு கலிமா சொல்ல சொல்லி வற்புறுத்தியதும், அதற்கு நமது மக்கள் ‘நாங்கள் முஸ்லிம்கள்தான். இதை ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள் என்று கோபப்பட்டு பிரச்சனையானதும்,

மேலும் பல தெருக்களில் அவர்களை நுழையவிடாமல் விரட்டியடித்த சம்பவங்களும் இந்த இஜ்திமாவை ஒட்டி நடந்தவைகள்தான்.

காயல்பட்டினத்தில் 1954 ஆம் ஆண்டு தப்லீக் இஜ்திமா நடந்தது பற்றியும்> அதில் மாபெரும் மார்க்க மேதை நஹ்வி ஆலிம் அவர்கள் கலந்து கொண்டது பற்றியும் கூறிக் கொண்டனர் என்ற ஒரு பழைய பிரசுரத்தை காயல்பட்டினத்தைச் சார்ந்த ஒருவர், நஹ்வி ஆலிம் தப்லீகை ஆதரித்தார்கள் என்று ஊர் முழுவதும் உலா வந்து சுன்னத் ஜமாஅத் மத்தியில் ஆட்களை சேர்க்க முயற்சித்தது பற்றி சுன்னத் ஜமாஅத் மக்களிடம் கேட்ட போது,

அவர்கள் சொன்ன பதில், ‘காயல்பட்டினத்தில் தப்லீக் ஜமாஅத் நுழைந்த போது அதன் தீயக் கொள்கைகள் பற்றி அறியாமல் மக்களும், உலமாக்களும் அதில் சேர்ந்து விட்டனர். ஏனெனில் அந்த இயக்கம் பற்றிய விபரங்களும், கொள்கைகளும் வடமொழியான உருதுவில் இருந்ததுதான் இதற்கு காரணம்.

உருது தெரிந்த ஆலிம்கள் இது விஷயம் பற்றி இந்த உலமாக்களுக்கும், மக்களுக்கும் தெரியபடுத்திய போது, அவர்கள் இந்த தப்லீக் இயக்கமானது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகக்கு முற்றிலும் முரணானது என தெரிந்து கொண்டு அதிலிருந்து விலகிவிட்டனர்.

அதன்பின் அவர்கள் அந்த இயக்கத்தில் எவ்வித தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. இதைத்தான் நஹ்வி ஆலிம் அவர்களும் செய்தார்கள். நஹ்வி ஆலிம் அவர்கள் அதன்பிறகு தொடர்ந்து தப்லீக் ஜமாஅத்தில் இருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை.

மாறாக அவர்கள் தப்லீக் ஜமாஅத்தினர் ஷிர்க், பித்அத் என்று சொல்லும் அமல்களில் ஒன்றான மௌலிது ஷரீஃப்களையும், பைத்துக்களையும் மர்தியாக்களையும் இயற்றி மாபெரும் சேவை செய்துள்ளனர்.

நஹ்வி ஆலிம் காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தப்லீக் பற்றிய நஹ்வி ஆலிம் அவர்களின் நிலையை அவர்களிடம் கேட்டுப் பார்த்தால், அவர்  சொல்வது வடிகட்டிய பொய் என்பது விளங்கும். அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் என்று சொன்னவர்களால் இப்படி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவது ஒன்று கடினமான காரியமல்லவே!

நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தம தோழர்களில் ஒருவரான, கலீஃபாவான ஹழ்ரத் உமர் இப்னு கத்;தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்திற்கு எதிரியாக இருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்து தியாக சீலராகிவிட்டார்கள்.

உமர் நாயகம் ஆரம்பத்தில் இருந்த நிலையைக் கொண்டு, இவர்கள் இன்னும் இஸ்லாத்திற்கு எதிரி என்றுதான் இவர் போன்றோர்கள் சொல்வார்கள் போலும்?  என்று சொன்னார்கள்.

அடுத்து, விவாதிக்க தயாரா?‘ என்று சுவரொட்டியும், சுன்னத் வல் ஜமாஅத்திற்கு எதிரான தப்லீக் ஜமாஅத்தின் நிலைப்பாடு‘ என்று பிரசுரமும் சுன்னத் ஜமாஅத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது.

மாநாட்டிற்கு வந்தவர்கள் அதை நின்று வாசித்து சென்றதும், அதற்குரிய கைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவதுமாக இருந்தார்கள். அதற்கு தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமாவில் பதில் வரும் என்றும், இஜ்திமாவை சுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படையில் நடத்துவார்கள் என்றும் எதிர்பார்த்தோம்.

ஆனால் அதற்கு பதில் சொல்லாமலேயே, அதில் சொல்லப்பட்டிருந்த நல்லமல்களை செய்யாமலேயே மாநாட்டை முடித்துக் கொண்டனர். இஜ்திமா நடக்கும்போது இப்படி சுவரொட்டி ஒட்டலாமா? என்று கேட்டபோது,

தெருவில் தப்லீக் இஜ்திமாவிற்கு எங்களை அழைக்க வந்தவர்களிடம் தப்லீக் பற்றிய குற்றச்சாட்டுகளை பற்றி கேட்டபோது, எங்கள் மர்கஸுக்கு வாருங்கள். பதில் சொல்கிறோம் என்று சொன்னார்கள்.

நாங்கள் மர்கஸுக்கு சென்று கேட்டோம். அங்கு அவர் இல்லை, இவர் இல்லை என்று பதில் சொல்லி எங்களை அனுப்பி விட்டார்கள். அதன்பிறகுதான் இந்த நோட்டீஸ், சுவரொட்டி எல்லாம் போட்டோம் என்று சொன்னார்கள்.

ஈமானைப் பற்றி கவலைப் படாமல், எங்கள் கௌரவம், எங்கள் சொந்த, பந்தங்கள், வியாபாரம்தான் முக்கியம் என்று எண்ணி மாநாட்டிற்காக இலட்சக்கணக்கில் பணபட்டுவாடா செய்த பணமுதலைகளையும், ஹாஜிமார்களையும், சுன்னத் வல் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்களையும் பார்த்துதான் பரிதாபப்பட வேண்டியுள்ளது.

இவர்களாவது சுன்னத் ஜமாஅத்தினர்களின் கேள்விகளுக்கு பதில் பெற்றுத் தருவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இஜ்திமாவில் கலந்து கொண்டவர்களைக் கண்டு கேட்டால், நாங்கள் சும்மாதான் வந்தோம். சிலர் பீச் பார்க்க வந்தோம். இதற்காக ரூபாய் 250 கொடுத்திருக்கிறோம் என்றும் சொல்வதைப் பார்க்கும்போது, இந்த இஜ்திமா நடத்தியது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. வேறு எங்கிருந்தோ வேறு எதையோ பெறுவதற்காக வேண்டி நடத்தப்பட்டதோ என்று தோன்றுகிறது.

அடுத்தநாள், இஜ்திமாவிற்கு வந்தவர்கள் அதிகாலை 3.50 மணிக்கே ஊரில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் திறக்கச் சொல்லி பள்ளியில் உள்ள முஅத்தின்களை வம்பு பண்ணியதும், பள்ளிவாசல்களின் கக்கூஸ் மற்றும் ஹவுளுகளை அசிங்கப்படுத்தியதும்தான் நமக்கு ஒவ்வாத செய்தித் துளிகள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஊரில் எந்த பள்ளிவாசல், மத்ரஸா தப்லீக் இஜ்திமாவை முன்னின்று நடத்தியதோ அந்தப் பள்ளிகளின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததுதான். அங்கு சென்ற மக்கள் ஏமாற்றம் அடைந்ததையும், இதுபற்றி சத்தம் போட்டதையும் பார்க்க முடிந்தது.

ஒளு செய்வதற்கு பெரிய தண்ணீர் தொட்டிகளை ஏற்பாடு செய்தவர்கள், குளிப்பதற்கும், கழிப்பிட வசதி போதிய அளவிற்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்தது.

மேலும் கடலில் குளித்ததும், கடற்கரைக்கு அருகில் உள்ள கிணற்றில் ஜட்டியுடன் குளித்ததும் தான் இஸ்லாத்தின் பாரம்பரியம் காக்க வந்தவர்கள் என்று சொல்லும் இவர்களின் செயல் மக்களை முகம் சுளிக்க வைத்தது.

ஊரின் பள்ளிகளில் ஒளு செய்ய வைத்திருக்கும் ஹவுஸில் நின்று குளித்ததும், தெரு ஓரங்கள், கடற்கரை பரப்புகளில் நாசம் செய்ததும்தான்  இந்த இஜ்திமாவினால் ஊருக்கு கிடைத்த பலன்களாகும்.

ஹவுஸில் குளிப்பது பற்றிய சாதாரண மார்க்க அறிவு கூட இல்லாத இவர்கள் தப்லீக் செய்து அமீர்களாக வலம் வருகிறார்களே என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

சுன்னத் ஜமாஅத்தினர் ஒட்டிய நோட்டீஸ்களில் உள்ள கைபேசி எண்களுக்கு வந்த அழைப்புகள் எல்லாம், நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எங்களுக்குப் புரியவில்லை என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்றும், தப்லீக் ஜமாஅத் சுன்னத் ஜமாஅத்தானே! என்றும் வந்தவண்ணம் இருந்தது. இந்த கேள்விகள் அப்பாவி, பாமர மக்களை இந்த தப்லீக் ஜமாஅத்தினர் சுன்னத் ஜமாஅத் பெயரைச் சொல்லி சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை விளக்குவதாக இருந்தது.

கூட்டு துஆ கூடாது என்று சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதிலும் குறிப்பாக அந்தப் பள்ளியின் முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் இதில் கூட்டு துஆ ஓதி கலந்து கொண்டதும்தான் இதில் ஹைலைட்.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இதைப் பற்றிக் கேட்டால், எங்கள் கொள்கையும், அவர்கள் கொள்கையும் ஒன்றுதான். சில வித்தியாசங்கள்தான் உள்ளன. அதில் பாரதூரம் இல்லை. இன்னும் கொஞ்சநாளில் அது போய்விடும். எனவே நாங்கள்  இதில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொன்னதுதான் மிக உயர்தரம்.

போட்டோ எடுப்பது கூடாது, அது ஷிர்க் என்று சொல்லும் இந்த தப்லீக் ஜமாஅத்தினர், தங்கள் மாநாட்டை போட்டோ எடுக்கச் சொல்லி வெப்சைட்டுகளிலும், ஊடகங்களிலும் விளம்பரம் செய்யச் சொன்னதும்தான் இந்த மாநாட்டின் சிறப்பம்சம்.

மாநாடு என்று சொன்னால் அதில் தீர்மானம் என்று ஒன்று இருக்க வேண்டும். அதைத்தான் எதிர்பார்த்தோம். எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்யவும், முஸ்லிம்களுக்குரிய இடஒதுக்கீடு பெறவும், இலங்கை முஸ்லிம்கள் துன்பம் தீரவும் இன்னும் பல்வேறு முஸ்லிம்களின் நலன்காக்க தீர்மானம் இயற்றி அரசின் கவனத்தை ஈர்ப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதுபற்றியெல்லாம் மூச்சுகூட விடவில்லை மாநாட்டுக்குழுவினர்.

மாநாட்டு பேச்சாளர்கள் பேசிய பேச்சுக்கள் அமல்களைப் பற்றியதாகவே இருந்தது. ஈமானைப் பற்றிய பேச்சு துளி கூட இல்லை. காயல்பட்டினத்தில் மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு இறைநேசர்களின் நினைவுநாள் பயான், மார்க்க பயான், பெண்கள் பயான் போன்றவைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மக்களுக்கு உரியஅளவில் உபதேசங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஊரில் இலட்சக்கணக்கில் செலவழித்து இந்த பயானை பண்ணுவதற்கு இப்படி ஒரு இஜ்திமா தேவையா? என்றும், அதுவும் பாத்திஹா, திக்ரு, அவ்ராதுகள், ஸலவாத்து ஏதுமின்றி மாநாடு முடிவுக்கு வந்தது கண்டு மாநாட்டிற்கு சென்றவர்கள் சொல்வதைக் கேட்க முடிந்தது.

மீலாது விழாக்களில் அனாச்சாரம், கந்தூரியில் அனாச்சாரம் நடக்கிறது. ஆகவே அது கூடாது என்று மார்தட்டி சொன்னவர்கள், தாங்கள் செய்த மிகப் பெரிய அனாச்சாரத்திற்கு என்ன பதிலுரைக்கப்போகிறார்கள் என்று நடுநிலைவாதிகள் பேசிக் கொள்வதைப் பார்க்க முடிந்தது.

அடுத்து, கோடிக்கணக்கில் செலவழித்து இஜ்திமா நடத்தியதன் பலன் என்ன? உங்களுக்குத் தெரியுமா? இதனால் இஸ்லாம் கண்ட வளர்ச்சி என்ன? கொஞ்சம் சிந்தியுங்கள்.

சும்மா கூடி கலைவதற்காக இவ்வளவு பணங்கள் செலவழிக்கத்தான் வேண்டுமா? இந்த பணங்கள் அனைத்தும் வீண் விரயம் அல்லவா?. இதில் இவர்கள் மார்க்கத்தை பறைசாட்ட வந்துவிட்டார்கள் என்று மக்கள் அங்கலாய்த்தார்கள்.

மொத்தத்தில், இந்த மாநாடு பல இலட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து, தாங்கள் பயன் பெற அப்பாவி, பாமர முஸ்லிம்களை வரவழைத்து கூட்டி கலைக்கப்பட்ட வீணான ஒன்றே என்றும், இதனால் முஸ்லிம்களுக்கும், மார்க்கத்திற்கும் எவ்வித பயனும் இல்லை என்பதும் தெளிவாகிறது.

காயல்பட்டினத்தின் தம்மடை மற்றும் விசேஷமான தின்பண்டங்கள் விற்றுத் தீர்ந்ததும், கடல்பார்க்காதவர்கள் கடற்கரை காற்று வாங்கிச் சென்றதும்தான் இந்த இஜ்திமாவினால் கிடைத்த பலன்.

காயல்பட்டினத்தில் தப்லீக் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்டதையும், அதன் உண்மை முகத்தையும் பார்ப்பதற்கு http://kayaltablegh.blogspot.in/ என்ற இணையதளத்தைப் பாருங்கள் என்ற ஒரு க்ளுவையும் சுன்னத் ஜமாஅத்தினர் தந்தார்கள்.

10-4-2013                                                                                             –அபூ சம்சு

                                                                                                           காயல்பட்டினம்.

Add Comment

Your email address will not be published.