ஏர்வாடி செய்யிது இப்றாஹிம் வலியுல்லாஹ்
By Sufi Manzil
சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர்கள். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு உற்றத் துணையாக இருந்தார்கள். தமது 25-ஆம் வயதில் ஸைனப் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையை இனிதே மேற்கொண்டார்கள்.
12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்.
கனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று இறைத்தூதரின் ஏவலின்படி தமது 42-ஆம் வயதில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார்கள். மார்க்கப் பணி சிறப்புடன் செய்ய தமது நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் ஆலோசனை நடத்தினார்கள். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் அவரது மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவீரர்கள் சையத் காதிறும், சையத் முகையிதீனும் ஆவர்கள். அவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப ‘றூம்’ நாட்டு அதிபதி மகமது பாதுஷாவின் உதவியை நாடினார்கள்.
‘றூம்’ நாட்டு மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார். தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும், பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும் சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாக அனுப்பினார்.
முதல் கட்டமாக கி.பி.1165-இல் ஈரான், ஈராக், பலுசிஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கடந்து சிந்து, முல்தான் பகுதிகளில் மூவாயிரம் தொண்டர்களுடன் வந்தடைந்து அமைதியான முறையில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்கள்.
பிறகு அடுத்த கட்டமாக கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள். நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி வியாக்கியானம் செய்து வந்தார்கள்.
அப்போது பாண்டி நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள், வாளேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான். ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான்.
நியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசேகர பாண்டியன் கெஞ்சலானான்.. ஆன்மீக செல்வரும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த போர் வீரர்களையும் குலசேகர பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள்..
அப்போரில் திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் நெல்லையை விட்டுச் சென்று முகவைப் பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.
இப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (கி.பி. 1195 முதல் கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.
போரில் விக்கிரம பாண்டியன் உயிர் இழக்கிறான்.அதன் பின் அந்த ஆன்மீக செல்வர் குலசேகர பாண்டியனுக்கு சேர வேண்டிய பகுதியை அவனிடம் ஒப்படைக்கிறார்கள்.
மீதமுள்ள பகுதியை குலசேகர பாண்டியன் அந்த ஆன்மீக செல்வரிடம் ஒப்படைத்து அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவன் விருப்பபடி அவனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு ஏனைய பகுதிகளுக்கு தாமே அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் செங்கோல் செலுத்தினார்கள்.
இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.
சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார்கள்.. அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார்கள். இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே!
தமிழ் மண்ணில் அமைதியான ஆட்சி ஏற்பட்ட பிறகு அப்பாஸ் தலைமையிலான படைகள் அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் படையெடுத்து வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை வெற்றி கொண்டான். முகவை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி என்ற இடத்தில் சுல்தான் சையது இப்ராஹீம் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். மதினா மாநகரின் ஒரு பகுதியான ‘யர்புத்’ என்ர இடத்திலிருந்து சுல்தான் சையது இப்ராஹீம் அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் ‘யர்புத்’ என்றே அழைக்கப்பட்டது.
இச்சொல் நாளடைவில் மருவி ‘ஏர்வாடி’ எனலாயிற்று. அவருடைய ‘தர்கா’ இன்றளவும் இந்து – முஸ்லிம் கலாச்சாரப் பண்பாட்டின் இணைப்பாகவும், மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்குவது பாராட்டுதற்குரியது.
அவர் ‘ஷஹீதான’ பிறகு அவரது தம்பி மகன் சையது இஸ்ஹாக், பாண்டிய மன்னரிடம் பெற்ற மானிய கிராமங்களை வைத்து பராமரித்து வந்தார்கள்.
3 Comments found
அப்துல் மஜீத்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மேலே குறிப்பிட்ட ஷெய்ஹுனா இப்றாஹிம் பாதுஷா நாயகம் வரலாற்றில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்ற இடத்தில் ஸல் என்று போட்டுள்ளது.
அப்துல் மஜீத்
ஷெய்ஹுனா இப்றாஹிம் பாதுஷா அவர்களை அவர் என்றும் குறிபிட்டுள்ளது. அவர்கள் என்று போட்டிருக்கலாமே.
Sufi Manzil
தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு மிக நன்றி. தவறுகள் திருத்தப்பட்டுவிட்டது.