உளு இன்றி குர்ஆனைத் தொடலாமா?

உளு இன்றி குர்ஆனைத் தொடலாமா?

By Sufi Manzil 0 Comment May 25, 2015

Print Friendly, PDF & Email

குர்ஆனைத் தொடுதல்:

குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும். அதாவது உளு இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர், மாதவிடாய் பெண்கள் மற்றும் பிள்ளைப் பேறு உதிரப் போக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம் குர்ஆனைத் தொடக்கூடாது.

பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டுமென்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் மூன்று:

  1. இறைமறை வேதம் அல்குர்ஆன்
  2. இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளான ஹதீது.
  3. நபித் தோழர்களின் ஏகோபித்த முடிவான இஜ்மாஃ

குர்ஆன்: இறைவன் கூறினான்:

لَا يَمَسُّهُ اِلَّا الْمُطَّهَّرُوْنَ (الواقعة 79

‘தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 56:79)

இச்செய்தியின் மூலம் இறைவன் குர்ஆனின் மாண்பை வெளிப்படுத்துகிறான். தூய்மையானவர்கள்தான் என்று கூறி ஒரு வரைமுறையை இறைவன் விதித்துவிட்டதால் மற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற அழுத்தமான அர்த்தம் இவ்வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.

(நூல்: ஃதகீரா 1-238 ஆசிரியர் -கர்ராஃபீ)

மனிதர்களில் தூய்மையானவர்கள் என்பதன் பொருள்:

  • ஷிர்க் எனும் இணைவைப்பு, குஃப்ர் எனும் இறைமறுப்பு இவ்விரண்டை விட்டும் நீங்கி உளத்தூய்மையுடன் இருப்போர்.
  • புலன்களுக்குத் தெரிகின்ற நஜீஸ் எனும் அசுத்தத்தை விட்டும் உடல் தூய்மையாக இருப்போர்.
  • ஹதஃத் எனும் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கை விட்டும் நீங்கியிருப்போர்.

மேற்கண்ட வசனத்திலுள்ள வாசகம் வெளித்தோற்றத்தில் அமைந்திருந்தாலும் கட்டளை வாக்கியமாகவே இங்கே கருதப்படும்.

(நூற்கள்: தஃப்ஸீர் பஙவி 5-301, தஃப்ஸீர் இப்னு கதீர் 4-299)

ஹதீது:

عَنْ حَكِيْمِ ابْنِ حِزَامِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: لَمَا بَعَثَنِيْ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم اِلٰى اليمن قال :لَاتَمْس القُرْآنَ اِلَّا وَاَنْتَ طَاهِرٌ

ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையானவர்களாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொட வேண்டும். (இல்லையென்றால் தொடக்கூடாது)’

நூற்கள்: ஹாகிம் எண்: 6066, தப்ரானி (கபீர்) எண்: 306, தார குத்னீ எண்: 366)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِي الله عنه قَالَ: قَالَ النَبِيُّ صلى الله عليه وسلم لَايَمَسَّ الْقُرْآنَ اِلَّاطَاهِرٌ

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்: ‘பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

நூற்கள்: தாரகுத்னீ 383, தப்ரானி (ஸஙீர்) 1160

عَنْ عُثْمَانِ بِنِ اَبِي العَاصِ قَالَ: وَفَدْنَا عَلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فوجدُوْنِيْ اَفْظَلَهُمْ اَخَذًا لِلْقُرْآنِ وَقَدْ فَظَلْتَهُمْ بِسُوْرَةَ البَقَرة قَالَ النَّبِيُ صلى الله عليه وسلم قَدْ اَمَّرْتُكَ عَلٰى اَصْحَابِكَ وَاَنْتَ اَصْغَرُهُمْ وَلَا يَمَسَّ الْقُرْآنَ اِلا وانت طاهر (رواه التبراني فى الكبير

உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘நாங்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்தோம். எங்களில் குர்ஆனை நன்கு ஓதக் கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்னிடம் சொன்னார்கள். ‘நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும்போது தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

(நூல்: தப்ரானி (கபீர்) 8255)

عن عبد الله بن ابي بكر ابن محمدبن عمرو بن حزم عن ابيه عن جدّه قال: كان فى كتاب النبي صلى الله عليه وسلم لعمروبن حزم: لا يمس القرآن الّا علٰى طهر(رواه مالك وابن حبان والدار مي والبيهقى والدار قطني

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது. ‘து|ய்மையானவரான நிலையில்;தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

நூற்கள்: முஅத்தா 466, தாரமி 2195, பைஹகி 376, தாரகுத்னி 385, இப்னு ஹிப்பான் 6703.

குர்ஆன் ஓதக்கூடாத நிலைகள்:

  • குளிப்பு கடமையானவர்கள் – ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குர்ஆனை ஓதக் கூடாது.
  • மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது.
  • பேறுகால உதிரப் போக்குள்ள பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது. உளு இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடாமல் ஓதுவது கூடும்.

சான்றுகள்:

عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقرأ الحائض ولا الجنب شيئا من القرآن (رواه الترمذي والبيهقي فى السنن الكبري والبن عساكر والدار قطني وابن ماجة

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஆனால் குளிப்பதற்கு கடமையான நிலையில் ஓதிக் காண்பிக்க மாட்டார்கள்’.

அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதீ எண்: 136

عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يقرونا القرآن علٰى كل حال مالم يكن جنبا (رواه الترمذي

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிவறை சென்று வந்த பின்னால் குர்ஆன் ஓதுவார்கள். மாமிசம் உண்பார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவதிலிருந்து தடுப்பது குளிப்பு கடமை என்ற நிலை மட்டுமே.

அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு நூல்: தப்ரானி 6873.

عن علي انه اتي بوضوء فتوضأ وضوءه للصّلاة قال: هٰكذا رايت رسول الله  توضأ ثمّ شيئا من القرآن ثم قال: هٰذا لمن ليس بجنب قاما الجنب فلا ولآيه     (رواه احمد

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உளு செய்யும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தொழுகைக்கு உளு செய்வது போல் உளு செய்து விட்டு கூறினார்கள், ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளு செய்யும்போது இவ்வாறே நான் பார்த்தேன். பிறகு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனில் சில வசனங்கள் ஓதிய பிறகு கூறினார்கள். குளிப்பு கடமையில்லாத நபருக்கு குர்ஆன் ஓதுவது கூடும். ஆனால் குளிப்பு கடமையானவரோ ஒரு வசனம் கூட ஓதக் கூடாது.

இஜ்மாஃ

இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது சகோதரியின் இல்லத்திற்கு வருகை தந்தபோது குர்ஆன் ஓதப்படும் ஓசையைக் கேட்டார்கள். பிறகு தனது சகோதரியிடம் கேட்டார்கள்.

فقال عمر: اعطوني الكتاب الذي عندكم اقراه

‘உங்களிடம் உள்ள குர்ஆனை என்னிடம் கொடுங்கள்.’

فقالت له اخته: انك رجس ولا يمسه الا المطهرون فقم واغتسل و توضَّأ

‘நீங்கள் அசுத்தத்தில் உள்ளீர்கள். இக்குர்ஆனை சுத்தமானவர்கள் தான் தொட வேண்டும். ஆகவே எழுந்து குளித்து விட்டு அல்லது உளு செய்து விட்டு வாருங்கள்.’

فقام عمر فتوضأ ثم اخذ الكتاب فقراطه (رواه الدارمي والبيهقي فى دلائل النبوة

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து சென்று உளு செய்து விட்டு குர்ஆனை எடுத்தார்கள். தாஹா எனும் அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: பைஹகி (தலாயிலுன்னுபுவ்வா) 546

ثم رجع فقلنا له : توضأ يا ابا عبدالله لعلنا ان نسألك عن آي من القرآن قال: فاسألوا فاني لا امسه انه لا يمسّه الا المطهرون قال فسالناه فقرأ علينا قبل ان يتوضّا (رواه ابن ابي شيبة والبيهقي فى السنن الكبرى)

அப்துர் ரஹ்மான் இப்னு யஜீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அவர்கள் கழிவறை சென்று வந்தார்கள். அவர்களிடம் நாங்கள் கூறினோம். நீங்கள் ஒளு செய்து கொள்ளுங்கள். நாங்கள் குர்ஆனில் சில வசனங்கள் பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறோம்.

ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களைப் பார்த்து சொன்னார்கள்: ‘என்னிடம் கேளுங்கள். நான் குர்ஆனை தொடப் போவதில்லையே. குர்ஆனைத் தொடுவதற்குத்தான் தூய்மை அவசியம். பிறகு அவர்களிடம் (சில கேள்விகள் கேட்டோம்) அவர்கள் உளு செய்வதற்கு முன்பாக சில வசனங்களை எங்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.

நூற்கள்: இப்னு அபீஷைபா எண் 1100, பைஹகீ 416

விவாதம்: 1

56-79 வசனத்தில் இறைவன் கூறிய வேதம் தற்போது மக்கள் கைகளில் தவழும் குர்ஆனல்ல. வானுலகிலுள்ள லவ்ஹுல் மஹ்ஃபூல் பலகையில் எழுதப்பட்ட வேதத்தையே குறிக்கிறது.

மேலும் இவ்வசனத்திலுள்ள தூய்மையானவர்கள் என்பது மலக்குகளையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஏனென்றால் அவர்கள் தான் பாவம் மற்றும் இணைவைப்பிலிருந்து தூய்மையானவர்கள்.

விளக்கம்:

لا يمسه الّا الطهرون

தூய்மையானவர்களைத் தவிர (வேறு எவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்(56-79)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள வேதம் குர்ஆனை குறிப்பதுபோல மக்கள் கைகளிலுள்ள குர்ஆனையும் குறிக்கும். காரணம் இவ்வசனத்திற்குப் பிறகு,

تنزيل من رب العالمين

அகிலங்களின் அதிபதியி(இறைவனி)டமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டது.’ (6-80)

என்று கூறப்பட்டுள்ளது. இறைவனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்ட குர்ஆன் என்பது மனிதர்களின் கரங்களிலுள்ள குர்ஆனைத்தான் குறிக்குமே தவிர லவ்ஹுல் மஹ்பூலிலுள்ள குர்ஆனை அல்ல. எனவே தூய்மையானவர்களே தொட வேண்டும் என்ற வசனத்திலுள்ள வேதம் விண்ணுலகிலுள்ள குர்ஆனையும், மண்ணுலகிலுள்ள குர்ஆனையும் அறிவிக்கும். ஏனெனில் எதார்த்தத்தில் இரண்டும் ஒன்றே.

இவ்வசனத்திலுள்ள தூய்மையானவர்கள் என்பது மலக்குகளை மற்றும் மனிதர்களை குறிக்கும். மலக்குகள் மட்டும் தான் குறிக்கும் என்ற சிலரது கருத்தை ஒருவாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட அதுவும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்குத்தான் வலு சேர்க்கிறது.

அதாவது விண்ணிலுள்ள குர்ஆனை அங்கிருக்கும் தூய்மையானவர்கள் தொடுகிறார்கள் என்றால், அதுபோன்று மண்ணுலகிலிருக்கும் குர்ஆனையும் இங்குள்ள தூய்மையானவர் தான் தொட வேண்டும் என்ற கருத்தை இவ்வசனம் நமக்கு பாடமாக போதிக்கிறது.

மேலும் மண்ணுலகிலுள்ள குர்ஆன் பரிசுத்தம் வாய்ந்ததென்று இறைவன் குர்அனில் தெளிவுபடுத்துகிறான்.

رَسُوْلٌ مِّنَ اللهِ يتْلُوا صُحَفًا مُّطَهَّرةَ(البينة :2

இறைவனிடமிருந்து வந்த தூதர் தூய்மையான ஏடுகளை ஓதுவார் (98:2)

فِيْ صُحْفٍ مُكَرَّمَةٍ مَّرْقُوْعَةٍ مُّطَهَّرَةِ ( عبس : 13-14

‘இது கண்ணியமிக்க உயர்வுள்ள தூய்மையான ஏடுகளில் உள்ளது. வேதங்கள் தூய்மையானவை என இறைவன் அடையாளம் காட்டி விட்டான். ஆகவே சுத்தமில்லாதவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது.

நூல்: ஷரஹுல் உம்தா (1:384)

விவாதம் 2:

இறைவன் கூறினான் هُدًا لِنَّاسِ(البقرة : 185இந்த வேதம் மக்களனைவருக்கும் நேர்வழி காட்டக் கூடியது.’

இறைநம்பிக்கையுள்ள தூய்மையானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டும் என சட்டமிருந்தால் இறைமறுப்பாளர்கள் எவ்வாறு குர்ஆனைத் தொட முடியும்? ஓத முடியும்? எவ்வாறு நேர்வழி பெற முடியும்? குர்ஆன் எல்லோருக்கும் நேர்வழி காட்டும் என இறைவன் கூறியது நடைமுறையில் சாத்தியமற்றதாகி விடுகிறது. இது குர்ஆன் மக்களை சென்றடைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சியாகும்.

விளக்கம்:

குர்ஆன் மொழி பெயர்ப்புகளை தமிழ்- ஆங்கிலம் மற்றும் பிற மொழி பெயர்ப்புகளை இறைமறுப்பாளர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் அதைப் படித்து புரிவதற்கும் இறைவனை அறிவதற்கும் மற்றும் இஸ்லாம் மார்க்கத்தை தெரிவதற்கும் வாய்ப்புண்டாகும்.

தர்ஜமாவில் குர்ஆன் வசனங்களிலிருந்தாலும் இறை மறுப்பாளர்கள் அதைத் தொடுவதற்கும் தடையில்லை. ஏனென்றால் தர்ஜமாவிற்கு குர்ஆன் என்று கூறப்படாது. குர்ஆனின் சட்டம் குர்ஆனுக்குத்தானே தவிர தர்ஜமாவிற்கு அல்ல.

அதேபோல குர்ஆனுக்கு அரபி மொழியில் விளக்கம் எழுதப்பட்ட தப்ஸீருக்கும் குர்ஆன் என்று சொல்லப்பட மாட்டாது. தப்ஸீர் என்பது குர்ஆனின் விரிவுரை நூலாகும். எனவே குர்ஆனுக்குரிய சட்டம் இதற்குக் கிடையாது.

இறை மறுப்பாளர்களால் படிக்கவும், புரியவும் முடியாத அரபி மொழியில் அமைந்த மூல குர்ஆன் பிரதியைக் கொடுக்காமல் படித்துப் புரியும் வகையிலுள்ள மொழி பெயர்ப்பு தர்ஜமாக்களை கொடுக்க வேண்டுமென்றுதான் சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் கூறுகின்றனர்.

وانزلنا اليك الذكر لتبين لناس مانزل اليهم (النحل : 44

நபியே! மக்களுக்கு தெளிவுபடுத்த  வேண்டுமென்பதற்காக உங்களுக்கு குர்ஆனை இறக்கி வைத்தோம்.’

لقد من الله على المؤمنين اط بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته يزكيهم ويعلمهم الكتاب والحكمة ( آل عمران : 164

‘இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்து இறைவன் உறுதியாக பேரருள் புரிந்துள்ளான். அவனுடைய வசனங்களை அவர்களுக்கு அவர் ஓதிக்காட்டுவார். அவர்களை தூய்மைப்படுத்துவார். வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்று கொடுப்பார்.’ (3-164)

குர்ஆன் அரபி மொழியிலிருப்பதால் அரபி பேசுபவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ள இயலுமென்றிருந்தால் இறைவன்  திருத்தூதரை அனுப்பி வைத்திருக்க மாட்டான். மக்களுக்கு விளக்கமளிக்க மற்றும் கற்று கொடுக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்க மாட்டான்.

அதிய்யி இப்னு ஹாதிம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘நோன்பு காலத்தில் கருப்பு கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள். (2-187) என்ற இறைவசனம் இறங்கிய போது கறுப்புக் கயிறொன்றையும், வெள்ளைக் கயிறொன்றையும் எடுத்து என் தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டேன். இரவு முழுவதும் கவனித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தெளிவாகவில்லை. காலையில் இறைத்தூதர் நபிகளாரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினேன். அவர்கள் கூறினார்கள்: ‘கருப்புக் கயிறு என்பது இரவின் இருளையும், வெள்ளைக் கயிறு என்பது வைகறை வெளிச்சத்தையும் குறிக்கும்.’

நூற்கள்: புகாரி எண்: 1783,  முஸ்லிம் எண் 1824

ولقد يسرنا القرآن للذكر فهل من مذّكر (القمر:17

 ‘ஓதி அறிவுரை பெற குர்ஆனை திண்ணமாக நாம் எளிதாக்கியுள்ளோம். அறிவுரை பெறுவோர் உண்டா?  (54-17)

ஓதுவதற்கும் விளக்கமளிக்கப்பட்டால் விளங்குவதற்கும் மேலும் அறிவுரை பெறுவதற்கும் குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது என்றே இவ்வசனத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் என்னதான் தெளிவுபடுத்தினாலும் எல்லோராலும் விளங்க முடியாத எத்தனையோ நூல்கள் இவ்வையகத்தில் உண்டு. இறைமறை வேதம் குர்ஆன் அவ்வாறல்ல என்பதுதான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

விவாதம் 3

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திஹ்யத்துல் கல்பி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தனது தூதராக ரோமபுரி மன்னர் ஹெர்கலிஸிடம் அனுப்பி வைத்தார்கள். இஸ்லாத்தில் இணைய அழைப்பு விடுத்து அவருக்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தனுப்பினார்கள். அக்கடிதத்தில் கீழ்காணும் இவ்வசனம் எழுதப்பட்டிருந்தது.

ياَ اَهْلَ الكِتَابِ تَعَالَوْ اِلٰى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ اَلَا نَعْبُدَ اِلَّا الله وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَخَذَ بَعَضُنَا بعضا اَرْبَابًا مِن دُوْنِ اللهِ فَاِنْ تَوَلَّوْا فَقولوا اشهدوا بِاَنَّا مسلمون (ال عمران: 64

‘வேதமுடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியிலுள்ள பொதுவான விசயத்தின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம். அல்லாஹ்வைத் தவிர நம்மில் யாரும் எவரையும் தெய்வங்களாக ஆக்கக் கூடாது. அவர்கள் புறக்கணித்தால் உறுதியாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறிவிடுங்கள்’ (3:64)

நூற்கள்: புகாரி எண் 6,  முஸ்லிம் எண் 3322

இறைவசனம் எழுதப்பட்ட அக்கடிதத்தை இறைமறுப்பாளரான ஹெர்குலிஸ் தொடுவார் என்று தெரிந்தேதான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்தனுப்பியுள்ளார்கள். தொடுவது கூடாது என்றிருந்தால் இறைவசனத்தை அக்கடிதத்தில் எழுதியிருக்க மாட்டார்கள்.

இறைமறுப்பாளர்களுக்கே தொடுவது கூடும் எனும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஏன் கூடாது?

விளக்கம்:

குர்ஆனுடைய வசனம் எழுதப்பட்ட கடிதத்தை சுத்தமில்லாமல் தொடலாம் என்பதற்குத் தான் இந்த ஹதீஃத் ஆதாரமே தவிர குர்ஆனையே தொடலாம் என்பதற்கல்ல. அது போன்ற கடிதத்திற்கு குர்ஆன் என்று கூறப்படாது. எனவே குர்ஆனுடைய சட்டம் இதற்கு பொருந்தாது.

அல்ஹாஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹெர்கலிஸ் மன்னனுக்கு எழுதிய கடிதத்தில் இறைவசனம் அல்லாமல் வேறு செய்திகளும் எழுதப்பட்டிருந்தன. இக்கடிதம் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தஃப்ஸீர் மற்றும் ஃபிக்ஹ் நூற்களைப் போன்றுள்ளதால் அவற்றிற்குரிய சட்டமே இக்கடிதத்திற்கும் பொருந்தும்.

விவாதம் 4

ஈமான் இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் தூய்மையானவனே! ஏனெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பினார்கள்.

اِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ (رواه البحاري و مسلم

‘உறுதியாக இறைநம்பிக்கையாளன் அசுத்தமாக மாட்டான்.’

நூல்: புகாரி 276,   முஸ்லிம் 556

எனவே உளு இல்லாமல் குர்ஆனைத் தொட எத்தடையுமில்லை.

விளக்கம்:

இஸ்லாமிய மார்க்கத்தில் சுத்தம் இருவகைப் படும்.

  1. உள்ள சுத்தம். 2. உடல் சுத்தம்.

ஈமான் – இறைநம்பிக்கை கொள்ளாமல் இணை வைப்போர் அனைவரும் உள்ளம் அசுத்தமானவர்கள். இவர்களைப் பற்றி இறைவன் அருள்மறையில் கூறினான்:

اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجِسُ (التوبة :28

‘இணை வைப்போரெல்லாம் உறுதியாக அசுத்தமானவர்களே’

இறை மறுப்பாளர்களின் உடலும், உடையும் தூய்மையாக இருந்தாலும் அவர்கள் அசுத்தமானவர்களே என்று இவ்வசனம் கூறுவதற்குரிய காரணி அவர்களின் உள்ளங்களை கருத்தில் கொண்டே தவிர அவர்களின் உடல்களை கவனித்தல்ல என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இணைவைப்பை விட்டுவிட்டு ஈமான் – இறைநம்பிக்கை கொள்கின்றபோது உள்ளம் தூய்மை பெறுகிறது. இதையே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பினார்கள்.

‘உறுதியாக இறை நம்பிக்கையாளன் அசுத்தமாக மாட்டான்’. நூல்: புகாரி 276.

இத்தகைய இறைநம்பிக்கையாளர்களுக்கு உடல் சுத்தம் அவசியமென இஸ்லாம் மார்க்கம் போதிக்கிறது. அதனால்தான் உளு, குளிப்பு மற்றும் நஜீஸ் அகற்றுதல் போன்ற சட்டங்கள் அவர்களுக்கு உண்டு என்பதையும் இஸ்லாம் சொல்லிக் காட்டுகிறது.

இறைநம்பிக்கையாளன் தூய்மையானவன். எனவே குர்ஆனைத் தொட உளு அவசியமில்லை என்ற வாதத்தை வஹ்ஹாபிகள் முன்வைத்தால் தொழுகைக்கும் ஒளு அவசியமில்லை என்ற அபாயகரமான அர்த்தமல்லவா வந்து விடும். தொழுகைக்கு உளு கட்டாயம் என்பதற்கு சான்றுகள் உள்ளன என்று வஹ்ஹாபிகள் கூறினால் அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ளலாம். குர்ஆனைத் தொடுவதற்கு உளு தேவை என்பதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

விவாதம் 5:

குர்ஆன் ஓதுவது திக்ரில் உள்ளடங்கிய வணக்கம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நேரங்களிலும் திக்ர் செய்துள்ளார்கள் என்று ஹதீதில் வந்துள்ளது.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:

عن عائشة قالت كان انبي صلى الله عليه وسلم على كل احيانه (رواه مسلم والترمذي واحمد

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  அல்லாஹ்வை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்யும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.’

நூல்: முஸ்லிம் 558, அஹ்மத் 23274, திர்மிதி 330

எல்லா நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திக்ர் செய்துள்ளார்கள் என்றால் குர்ஆன் ஓதுவது திக்ரில் கட்டுப்பட்டதுத என்ற அடிப்படையில் குளிப்பு கடமையான சமயத்திலும் குர்ஆன் ஓதியிருப்பார்கள் என யூகிக்க முடிகிறது.

விளக்கம்:

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றில் வஹ்ஹாபிகள் சுற்றி வளைத்து தங்களது யூகத்தை திணிக்கிறார்கள். குளிப்பு கடமையானவர்கள் குர்ஆன் ஓதலாம் என்பதற்கு எந்த சான்றும் அதிலில்லை.

ஏனென்றால் எல்லா நேரங்களிலும் குர்ஆன் ஓதுவார்கள் என்ற வாக்கியம் இடம் பெறவில்லை. திக்ர் செய்வார்கள் என்றுதான் உள்ளது. திக்ர் என்பது பல பொருளுள்ள ஒரு பொதுச் சொல். குர்ஆன், இறைப்புகழ் மற்றும் பிரார்த்தனை சம்பந்தப்பட்டவைகளை குறிக்கும் வார்த்தைதான் திக்ர்.

ஆகவே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாக குர்ஆன் அல்லாத மற்ற திக்ருகளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியுள்ளார்கள் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்:

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் குர்ஆனை எங்களுக்கு ஓதிக் காண்பிப்பார்கள். ஆனால் குளிப்பு கடமையான நிலையில் மட்டும் ஓத மாட்டார்கள்.’

நூல்: அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, இப்னு மாஜா, நஸாயீ.

மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியது நாவால் மொழியும் திக்ரைப் பற்றியதல்ல. உள்ளத்தால் நினைக்கும் திக்ரைப் பற்றியதுதான் என்பதையும் நம்மால் வெள்ளிடை மழையென அறிந்து கொள்ள முடியும்.

காரணம் எல்லா நேரமும் என்பது கழிவறையில் இருக்கும் காலத்தையும் உள்ளடக்கும். ஆனால் கழிவறையில் இருக்கும் போது நாவால் திக்ர் செய்தல் இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

‘ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عَنِ ابْنِ عُمَرَ اَنْ رَجُلٌا مَرَّ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يبُول فسلَّمَ قَلَمْ يردُّ عَلَيْهِ (رواه مسلم وابو داؤد والترمذي والنسائي وابن ماجة

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக சென்ற நபித் தோழர் ஒருவர் ஸலாம் சொன்னார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் ஸலாம் கூறவில்லை.’

நூல்: முஸ்லிம் 555, திர்மிதி 37

எனவே எல்லா நேரமும் திக்ர் செய்தல் என்பது கழிவறையில் இருந்தாலும் கூட உள்ளத்தால் செய்யும் திக்ரில் மட்டுமே சாத்தியமாகும். இதிலிருந்து ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் எல்லா நேரமும் திக்ர் என்ற கூற்று குர்ஆன் ஓதுவதற்கு அறவே பொருந்தாது என்று உறுதிபடக் கூற முடியும்.

விவாதம் 6

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் குர்ஆன் ஒன்று திரட்டப்படவில்லை. எனவே தூய்மையானவர்கள் குர்ஆனைத் தொடவேண்டும் என இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கட்டளையிட்டிருக்க வாய்ப்பில்லை.

விளக்கம்:

எல்லா வசனங்களும் ஒன்று திரட்டப்பட்ட தொகுப்புக்கு குர்ஆன் என்று சொல்லப்படுவது போன்றே குர்ஆனின் சில வசனங்கள் மட்டும் எழுதப்பட்டவைகளுக்கும் குர்ஆன் எனக் கூறலாம்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் மரப்பலகைகளிலும் எலும்புத் துண்டுகளிலும் மற்றும் கற்களிலும் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டன. இவைகளுக்கெல்லாம் குர்ஆன் எனும் வார்த்தையை இறைவனும் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பிரயோகித்துள்ளனர்.

குர்ஆனை தெளிவாக நிறுத்தி ஓதுவீராக! (முஜம்மில் 4) ورتل القرآن ترتيلا

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

عن ابي سعيدٍ الخُذْري قَال قَال رسول صلى الله عليه وسلم لا تكتبوا عني شيئًا الاَّ القرأن فمن كتب عني شيئًا غير القرأن فليمحه (رواه احمد وم

‘நான் கூறுபவற்றில் குர்ஆனைத் தவிர வேறெதையம் எழுதாதீர்கள். குர்ஆன் அல்லாததை யாராவது எழுதியிருந்தால் அவர் அதை அழித்து விடட்டும்.’

நூல்: அஹ்மத் எண்: 10731, முஸ்லிம் எண்: 5326

குர்ஆன் வசனங்கள் மட்டும் எழுதப்பட்டவைகளுக்கு அவை சில வசனங்களாக இருப்பினும் குர்ஆன் எனும்சொல் பொருந்துமென்பதை மேற்கண்ட இறைவசனமும் நபிமொழியும் அறிவிக்கின்றன.

குர்ஆனைத் தவிர வேறெதையும் எழுதக்கூடாது என்ற தடையை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னர் தளர்த்தி விட்டார்கள். அம்ர் இப்னு ஹஜ்ம் அவர்களுக்கு கூறினார்கள்:

عن عبد الله ابن عمرو قال قال  رسول الله صلى الله عليه وسلم اكتب فوالذي نفسى بيده ما خرج منِّي الا الحقُّ (رواه احمد وابو داود والدارمي

(அம்ரே  நான் கூறுவதை) எழுதுக! எனது ஆத்மா யார் கைவசமுள்ளதோ அ(ந்த இறை)வனின் மீது ஆணை(யிட்டுக் கூறுகிறேன்) என்னிடமிருந்து வெளிப்படுகின்ற (சொல்-செயல்) அனைத்தும் சத்தியமே. – நூல்: அஹ்மத் எண் 6221.

குர்ஆனோடு மற்றவை கலந்து விட வாய்ப்புள்ளது என்று அஞ்சிய சமயத்தில் குர்ஆனை மட்டும்தான் எழுத வேண்டுமென இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்த அச்சம் இனியில்லை என்ற நிலைவந்தபோது தனது மணிமொழிகளான ஹதீதுகளை எழுதுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.

விவாதம் 7:

தூய்மையில்லாமல் குர்ஆனைத் தொடக்கூடாதென்பதற்கு இஜ்மாஃ -ஒருமித்த கருத்து என்ற ஆதாரத்தை ஒப்புக் கொள்ள இயலாது. ஏனெனில் தாபியீன்களிலும் அதன்பின் வந்தவர்களிலும் ஒருசிலர் சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடலாம் என்ற மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளனர். அதனால் இஜ்மாஃ – ஒருமித்த கருத்து என்ற ஆதாரம் அடிபட்டுப் போய்விடுகிறது.

விளக்கம்:

இந்த வாதம் ஏற்புடையதல்ல. ஏனென்றால் சுத்தமானவர்கள் தான் குர்ஆனைத் தொடவேண்டும் என்பதில் சஹாபா பெருமக்கள் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் காலத்தில் இதற்கு மாற்று கருத்துத தெரிவித்த ஒரு நபித்தோழர் கூட கிடையாது.

இதன்மூலம் தூய்மையின்றி குர்ஆனைத் தொடுவது மார்க்கத்தில் விலக்கப்பட்ட செயல் -ஹராம் என்பதே நபித்தோழர்களின் இஜ்மாஃ ஆக இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

விவாதம் 9:

தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொட மாட்டார்கள். (56:79)

இந்த வசனத்தில் தூய்மையானவர்கள் தான் குர்ஆனைத் தொடுவார்கள் என்ற செய்தி கூறப்பட்டுள்ளதே தவிர தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. எனவே செய்தியாக கூறப்பட்டதை கட்டளை அர்த்தமாக மாற்றக்கூடாது.

விளக்கம்:

அரபி இலக்கணப்படி செய்தி வாசகம் சூழ்நிலைக்கேற்ப சிலகட்டங்களில் கட்டளை வாசகமாக பொருள் கொள்ளப்படும். உதாரணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்.

لا يعضد شجرها (رواه الخاري والمسلم

மக்காவிலுள்ள மரம் வெட்டப்படமாட்டாது. நூல் புகாரி 109, முஸ்லிம் 2415

மக்காவின் மரம் வெட்டப்படாது என்ற செய்தி வாசகமா கஉள்ள இந்த நபிமொழி மக்காவின் மரம் வெட்டப்படக் கூடாது என்ற கட்டளை வாசகத்தின் பொருளைத் தருகிறது.

இமாம் ஜஸ்ஸாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ‘பரிசுத்தமானவர்கள் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்ற வசனம் வெளித்தோற்றத்தில் செய்தி வாக்கியமாக இருப்பினும் அதன் அர்த்தம் கட்டளை வாக்கியத்திற்குரியதே. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பரிசுத்தமானவரே குர்ஆனைத் தொட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே இதற்கு காரணியாகும்.

விவாதம் 11

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவத்தில்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டது.

எழுத்து வடிவில் அருளப்படாததைத் தொடுகின்ற பேச்சுக்கே இடமில்லை. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் மட்டுமே தொடுதல் சம்பந்தப்பட்ட சட்டம் வரும்.

விளக்கம்:

பலகையில் பதியப்பட்டடோ அல்லது காகிதத்தில் எழுதப்பட்டோ குர்ஆன் அருளப்படவில்லை என்பதைத பாமர இஸ்லாமியனும் தெரிந்து வைத்துள்ளான்.

குர்ஆனுக்கு எழுத்துக்கள் உண்டு. குர்ஆன் ஓதுகின்றபோது எழுகின்ற ஒலிக்கும் எழுத்துக்கள் உண்டு. நபித்தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட குர்ஆனுக்கும் எழுத்துக்கள் உள்ளன. குர்ஆனில் எழுத்துக்கள் எழுதப்பட்டு கண்களுக்குத் தென்படும் வகையில் ஏதோ ஒரு பொருளாக குர்ஆன் அருளப்படவில்லை என்பது உண்மை. அதற்காக குர்ஆனுக்கு எழுத்து அமைப்பு இல்லை என்று கூறினால் அதைவிட வடிக்கட்டிய மதியீனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இறைவன் தனது அருள் மறையில் பல்வேறு இடங்களில் பிரயோகிக்கம் குர்ஆன் என்னும் சொல் நம்மிடம் உள்ள வேதத்தைக் குறிக்கிறது.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் குர்ஆனுடைய வசனங்கள் பலகைகளிலும், கற்களிலும், எலும்புகளிலும் எழுதி வைக்கப்பட்டன. இவைதான் குர்ஆன் என்றும் அன்று கருதப்பட்டது.

عن عبج الله ابن عمر قال نهي رسول الله صلى الله عليه وسلم يسافر بالقرآن الى ارض العدز (رواه البخاري والمسلم

‘அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘பகைவர் நாட்டிற்கு பயணம் செய்யும் போது குர்ஆன் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.’

நூல்: புகாரி 2768 முஸ்லிம் 3474

மேற்கண்ட ஹதீதில் கூறப்பட்ட குர்ஆன் என்னும் சொல் எழுத்து வடிவில் நம் கைகளில் உள்ள வேதத்தையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஒலி வடிவில் அமைந்த குர்ஆனை அல்ல.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நால்வர் குர்ஆனைத் தொகுத்தார்கள். அவர்கள் அனைவரும் அன்ஸாரி தோழர்கள்;.

உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு

முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு

அபூ ஜைத் ரலியல்லாஹு அன்ஹு

ஜைத் இப்னு ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு

-நூல்: புகாரி 3526

ஒலி வடிவில் அமைந்த குர்ஆனையா தொகுத்தார்கள். இந்த நான்கு தோழர்களும் இல்லையே!  எழுத்து அமைப்பிலுள்ள குர்ஆனைத் தானே!

انا انزلناه قرآنا عربيا  (سورة اليوسف : 2

‘உறுதியாக நாம் இதை அரபி மொழியில் அமைந்த குர்ஆனாக இறக்கி வைத்தோம்.’ (12:2)

மேலும் இறைவன் சொன்னான்:

بلسان عربي مبين (سورة الشعرآء : 195

தெளிவான அரபி மொழியில் குர்ஆனை ஜிப்ரயீல் இறக்கினார். (26:195)

மேற்கண்ட வசனங்கள் மூலமாக குர்ஆன் அரபி சொற்களால் அமைந்த வேதம் என்பதை இறைவன் அறிமுகம் செய்கிறான்.

உத்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (குர்ஆனை தொகுப்பதற்காக) ஜைத் இப்னு ஃதாபித் , அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், சயீத் இப்னு ஆஸ் மற்றும் அப்துர் ரஹ்மானிப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரை அழைத்து (அந்நால்வரில் குறைஷிக் குடும்பத்தைச் சார்ந்த மூவருக்கு சொன்னார்கள்.)

‘குர்ஆனை தொகுத்து எழுதும்போது உங்களுக்கும் ஜைத் இப்னு ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையில் ஏதாவதொன்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குறைஷி மொழியைக் கொண்டு குர்ஆனை எழுதுங்கள். ஏனென்றால் அவர்கள் மொழியில் தான் குர்ஆன் இறங்கியது.

யார் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒன்றுக்குப் பத்து என்ற அடிப்படையில் நன்மை கிடைக்கும். ‘அலிஃப் லாம் மீம்’ என்பது ஓர் எழுத்தென்று நான் சொல்லமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து லாம் ஓர் எழுத்து மீம் ஓர் எழுத்து.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி

மேற்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து குர்ஆன் எழுத்தமைப்பைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

குர்ஆனும், ஹதீது குத்ஸியும் இறைவனுடைய பேச்சுக்கள் என்றாலும் இரண்டுக்கும் மத்தியில் வேறுபாடு உண்டு.

குர்ஆன் – பொருளும் வார்த்தையும் இறைதரப்பிலிருந்து வந்தது.

ஹதீது குத்ஸி – பொருள் இறைவனுடையது வார்த்தைகள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குரியது.

எனவேதான் குர்ஆனுடைய வசனத்திற்கு பதிலாக தொழுகையில் ஹதீது குத்ஸியை ஓதினால் தொழுகை கூடாது. அதேபோன்று ஹதீது குத்ஸியை படிக்கும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மை என்பதும் கிடைக்காது.

இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘சுத்தமில்லாதவன் குர்ஆனை சுமந்து செல்லக் கூடாது. குர்ஆனுள்ள பை மற்றும் உறைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும். தூய்மையில்லாதவன் குர்ஆனைத் தொட்டால் அது அழுக்காகி விடும் என்பதற்காக இச்சட்டமென்று யாரும் கருதிவிடக் கூடாது. சுத்தம் தேவை என்பதற்குண்டான காரணி குர்ஆனுக்குரிய கண்ணியத்தையும் மாண்பையும் அளிப்பதுவே.

நூல்: அல்ஜாமிஉ லி அஹ்காமில் குர்ஆன்.

ஆசிரியர்: இமாம் குர்துபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதில் அதிக அக்கறை செலுத்தியுள்ளார்கள். அதற்கு ஆதாரம்

‘பகைவர் உள்ள பகுதிக்கு பயணம் செ;யயும்போது குர்ஆனை எடுத்துச் செல்ல வேண்டாமென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம்.

குறிப்பு: 1

குளிப்பு கடமை நிலையில் உள்ளோரும் மாதவிடாய் பெண்களும் பிள்ளைப்பேறு உதிரப்போக்குள்ள பெண்களும் குர்ஆன் ஓதுதல் என்ற எண்ணமில்லாமல் திக்ர் அல்லது பிரார்த்தனை என்ற அடிப்படையில் குர்ஆனுடைய வசனத்தை ஓதுவது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள்:

عن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم الا عال بالنيات (رواه البخاري

‘உறுதியாக செயல்களனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததாகும்.’

அறிவிப்பாளர்: உமர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி.

இந்த நபிமொழியின் கருத்துப்படி திக்ருடைய நிய்யத்தில் குர்ஆன் வசனத்தைக் கூறுவது கூடும். ஏனென்றால் குர்ஆன் ஓதுவதற்கும் திக்ர் செய்வதற்கும் மத்தியில் நிறைய வேறுபாடுகளுண்டு. குர்ஆன் ஓதினால் ஒவ்வோர் எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்குமென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். – நூல்: திர்மிதி

குர்ஆன் ஓதுவதால் ஒவ்வோர் எழுத்திற்கும் கிடைக்கிற பத்து நன்மைகள்  திக்ர் – பிரார்த்தனை செய்யும்போது கிடைப்பதில்லை. திக்ர் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுகின்ற போது அதற்குரிய நன்மைகள் நமக்கு உறுதியாக கிடைக்கும். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் ஒரு எழுத்திற்குப் பத்து என்ற அடிப்படையில் ஓதுவதற்குரிய நன்மைகள் இவற்றிற்கில்லை.

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் புறப்படுவதற்காக ஒட்டகை மீது அமர்ந்து விட்டால் மும்முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுவார்கள். பிறகு (இதை எங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்த இறைவன் தூய்மை மிக்கவன். நாங்கள் இதை அடக்கிப் பயன்பெற இயலாதவர்களாக உள்ளோம். மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமேம திரும்பக் கூடியவர்களாக இருக்கிறோம்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர்  ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம், திர்மிதி, அபீதாவூத், அஹ்மத், தாரமீ.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஸுப்ஹான எனத் தொடங்கும் வாசகங்கள் அத்தியாயத்தின் 13 ஆம் வசனத்தின் ஒரு பகுதியாகவும் 14ஆம் வசனமாகவம் இடம் பெற்றுள்ளன. எனினும் பயணி குளிப்பு கடமையான நிலையிலிருந்தாலும் அப்பயணி  பெண்ணாக இருப்பின் மாதவிடாய் நிலையிலிருந்தாலும் இவற்றைக் கூறலாம். அதற்கு எத்தடையுமில்லை. காரணம் பயணப் பிரார்த்தனை என்பதுதான் இங்கு நோக்கமே தவிர குர்ஆன் ஓதுதல் என்பதல்ல.

அதே போன்று ஒரு செயலைத் தொடங்கும்போது  بسم الله الرحمٰن الرحيم என்று கூறுகிறோம். இது குர்ஆனிலுள்ள ஒரு வாசகம். ஒருசெயலைத் தொடக்கம் செய்பவர் குளிப்பு கடமை நிலையிலிருந்தாலும் பெண்களாக இருந்தால் மாதவிடாய் அல்லது பேறுகால உதிரப் போக்கு நிலையிலிருந்தாலும் இதைக் கூறுவது கூடும். ஏனென்றால் செயல் தொடக்கப் பிரார்த்தனை என்ற நோக்கில் தான் இதைக் கூறப்படுகிறது. குர்ஆன் ஓதுதல் என்ற எண்ணத்தில் இல்லை. ஆகவே இதைக் கூற எத்தடையம் மார்க்கத்தில் இல்லை.

குறிப்பு – 2:

சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சட்டம் குர்ஆன் எழுத்து வடிவில் உள்ளபோது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லையானால் அச்சட்டமும் இல்லை.

குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் குர்ஆன் பதிவு செய்யப்பட்ட ஒலி-ஒளிப் பேழைகள் மற்றும் குறுந்தகடுகளை உளு இல்லாமல் தொடுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. காரணம் அவற்றில் குர்ஆன் எழுத்து வடிவில் தென்படவில்லை.

குர்ஆன் ஓதினால் ஓர் எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்குமென்பது கூட எழுத்து வடிவில் மொழிந்தால் தான். குர்ஆன் வசனங்களை மனதால் நினைப்பவருக்கு அந்த நன்மையில்லை என்பது நாமறிந்ததே. வெளியில் தெரிகின்ற எழுத்தின் சட்டம் மனதில் அல்லது ஒளி நாடாவில் அல்லது குறுந்;தகடில் மறைந்துள்ள எழுத்திற்குக் கிடையாது. அறத்குச் சான்றாக ஒன்றைக் குறிப்பிடுவது இங்கே பொருத்தமாகும். கழிவறைக்குச் செல்பவன் இறை நாமம் பொறித்த மோதிரம் அணிந்திருந்தால் அதைக் கழற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

عن انس قال كان النبي اذادخل الخلاء وضع خاتمه (رواه ابو داؤد والترمذي والنسائي وابن ماجة

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; கழிவறை செல்லும்போது மோதிரத்தை கழற்றி வைத்து விடுவார்கள்.’

நூல்: அபூதாவூத் 18, திர்மிதி 1668

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரோம் நாட்டிற்கு கடிதம் எழுத நாடியபோது ரோம் மக்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தை தான் படிப்பார்கள் என நபித்தோழர்கள் கூறினார்கள். ஆகவே வெள்ளியால் ஆன ஒரு மோதிரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தயார் செய்தார்கள். அதன் வெண்மையை நான் பார்த்தேன். அம்மோதிரத்தில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: புகாரி 6629, முஸ்லிம் 3902.

இறைவனுடைய திருநாமம் எழுத்து வடிவில் மோதிரத்தில் பதியப்பட்டிருந்தததால் கழிவறை செல்கின்ற போது கழற்றி வைத்துவிட வேண்டுமென மார்க்கம் பணிக்கிறது. கண்களுக்குத் தெரியும் வகையில் உள்ளதால் இச்சட்டம்.

குறுந்தகடுகளை கணிணியில் போட்டுப் பார்க்கின்றபோது குர்ஆன் எழுத்துக்கள் மட்டும் தெரிந்தால் குர்ஆனின் சட்டம் அந்தக் கணிணிக்குப் பொருந்தும். உளுவுடனேயே அக்கணிணியைத் தொட வேண்டும். ஆனால் குர்ஆன் எழுத்துக்களோடு மொழி பெயர்ப்பு அல்லது விரிவுரை ஆகியவை சேர்த்துத் தெரிந்தால் குர்ஆனுக்குரிய சட்டம் இதற்கில்லை. உளு இல்லாமலேயே இதைத் தொடலாம்.

குறிப்பு – 3

பரிசுத்தமானவர்களே தொட வேண்டுமென்பது குர்ஆனுக்கு மட்டுமே உரிய சட்டமாகும். எனவே

ஹதீது நூற்கள்

பிரார்த்தனைப் புத்தகங்கள்

ஃபிக்ஹ் கிரந்தங்கள்

குர்ஆன் மொழிபெயர்ப்பு தர்ஜமாக்கள்

குர்ஆன் விரிவுரை தஃப்ஸீர்கள்

அவ்ராத் தொகுப்புகள்

மற்றும் மௌலித் கிதாபுகள்

ஆகியவற்றைத் தொடுவதற்கு உளு கட்டாயம் அல்ல. அவற்றில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் உளு இன்றி தொடுவது கூடும். ஏனெனில் இவற்றிற்கு குர்ஆன் என்று கூறப்படாது.

ஆனாலும் மேற்கண்ட நூல்களைத் தொடுவதற்கு உளு செய்து கொள்வது மார்க்கத்தில் வரவேற்கத்தக்க மற்றும் புகழுக்குரிய செயலாகும்.

குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் பெண்கள் மற்றும் பேறுகால உதிரப் போக்குள்ள பெண்கள் ஓதக் கூடாதென்ற சட்டம் குர்ஆனுக்கு மட்டுமே. இச்சட்டம் மற்ற நூல்களுக்கு இல்லை. எனவே இத்தகையவர்கள் மேற்கண்ட கிதாபுகள் – கிரந்தங்கள் – தர்ஜமாக்கள்-தஃப்ஸீர்கள்-தொகுப்புகள் மற்றும் புத்தகங்களைத் தொடுவது ஆகும் என்பது போலவே ஓதுவது கூடும்.

குறிப்பு 4

உளு இன்றிக் குர்ஆனைத் தொடக் கூடாது. அதுபோன்று குர்ஆன் வைக்க மட்டும் பயன்படுத்துகின்ற பெட்டி ரேஹாலி பலகை போன்றவைகளையும் அவற்றில் குர்ஆன் இருக்கும் போது உளு இல்லாமல் தொடக் கூடாதென்பது ஷாஃபி, மத்ஹபின் சட்டம். அவற்றை குர்ஆன் இல்லாத நிலையில் தொடுவதற்குத் தடையில்லை.

இறைவேதம் குர்ஆன் புனிதமானது. அதுபோல குர்ஆன் உள்ள இடமும் புனிதமானது என்பது இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்து. ஏனென்றால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘தூர்ஸீனா’ மலைக்கு வேதத்தைப் பெறுவதற்காக வருகை தந்தபோது இறைவன் கூறினான்.

انى انا ربك فاخلع  نعليك انك بالوادي المقدس طوي (طه: 12

‘(மூஸாவே) உறுதியாக நானே உங்கள் இறைவன். ஆகவே, உங்கள் இரு காலணிகளையும் கழற்றுங்கள். திண்ணமாக நீங்கள் துஆ என்ற தூய்மையான பள்ளத்தாக்கில் உள்ளீர்கள். (20-12)

வேதம் மட்டும் அல்ல. வேதம் இறங்குகிற இடமும் தூய்மையானதுதான் என்பதை இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

குறிப்பு 5

குர்ஆனை மட்டும் ஓரு பெட்டியில் வைத்து தூக்கிச் செல்வதென்றால் உளுவுடனேயே அப்பெட்டியைத் தொட வேண்டும். அதேசமயம் மற்ற பொருட்களுடன் குர்ஆனுமுள்ள பெட்டியை உளு இன்றி சுமந்து செல்ல மார்க்கத்தில் அனுமதி உண்டு.

ஏனெனில் இவ்விரு நிலைகளுக்கும் வேறுபாடுள்ளது. ஒருவன் மற்ற பொருட்களுடன் குர்ஆனையும் எடுத்துச் செல்கின்றபோது அவனது எண்ணம் ஒட்டுமொத்த பொருட்கள் என்பதுதானே தவிர குர்ஆன் மட்டும் என்பதல்ல.

குர்ஆனை தனித்து எடுத்துச் சென்றால் அவனது நோக்கமே குர்ஆன்தான். எண்ணங்களைப் பொருத்தே நமது மார்க்கத்தில் சட்டங்கள் அமையும்.

முற்றும்.

Add Comment

Your email address will not be published.